95ன் மிக ஆரம்பம். வண்ணதாசன் LHOல் இருப்பதாக என் நண்பன் கூறினான்.
எங்களுக்கென்று ஒரு அழகான ஞாபக அலமாரியை உருவாக்கத் துவங்கிய நேரம்.
80களின் மத்தியில் பழமையான நெடி கொண்ட காகிதங்களில் வண்ணதாசன் அறிமுகம்
கிடைத்து பிரமிக்க ஆரம்பித்திருந்தது.
அரிய பொக்கிஷங்களாக பழைய கணையாழிகளும், தீபம் இதழ்களும் சேகரித்து
இருந்தோம். பிரத்யேகமான ஒரு தீபம் இதழில் ஆதவனின் "இரவுக்கு முன்பு
வருவது மாலை"யும் , வண்ணதாசனின் "சபலம்" (கிட்டத்தட்ட குறுநாவல்) கதையும்
படித்து, அதனை ஒரு பொக்கிஷத்திற்கு இணையாக பத்திரப்படுத்தி இருந்தோம்.
இப்போது வண்ணதாசனை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்து இருக்கிறது.
எப்போதும் நெரிசலாகத் தென்படுகிற LHOல், அன்று மனிதர்கள் தென்பட்டார்கள்.
அழகான மனிதர்கள்.மிகப் பழைய அந்த கட்டிடத்தின் சற்றேப் பெயர்ந்த தரைகளில்
அன்பு இறைந்து கிடந்தது. வண்ணதாசனை விசாரிக்கையில் "கண்ணதாசனா" என்று
கிடைத்த பதிலில் உற்சாகமுற்று (வண்ணதாசனை தெரிந்த வகையில் நான் இவர்களில்
உயர்ந்த ரசனை உடையவன் என்ற ஹோதா), கடைசியில் கல்யாணசுந்தரத்தைக் கண்டு
பிடித்தேன். அந்தப் பகுதியில் அப்போது வேலை பார்த்து வந்த மற்றொரு
பிரபலஸ்தர் (பிரபல நாடக நடிகர்), அவரைத் தாண்டி, அவரைக் கண்டுகொள்ளாமல்
இன்னொருவரைத் தேடி ஒருவன் வரக்கூடும் என்பதை எதிர் பாராதது போல்
இருந்தார்.
வண்ணதாசன் எனக்கு பெரிய இன்ப அதிர்ச்சியைத் தந்து விடவில்லை. நான்
எதிர்பார்த்த அதே அமைதி, அன்பு வழிகிற கண்களுடன் என்னை எதிர் கொண்டார்.
பக்குவம் இல்லாத ஒரு சிறுவன், மிகவும் புத்திசாலித்தனமாக எழுதுகிற
ஒருவரின் இலக்கியத்தை, அவர் முன்னமே வர்ணிப்பதை எவ்வாறு ஏற்றுக் கொண்டார்
என்பதை, இத்தனை வருடம் கழித்தும் புரிந்து கொள்ள முடியவில்லை. அதன்
பிறகு, ஏறக்குறைய 6 வருடம் தொடர்ந்த சந்திப்புகள், அவர் என்னை
ஏற்றுக்கொண்டார் என்றுதான் நினைக்க தோன்றுகிறது.
வியர்வையில் வீடு திரும்புகிற பெருங்கூட்டத்திற்கு மத்தியில் நான் அவரது
போய்க்கொண்டிருப்பவள் கதையின் வரிகளை ரசித்து ஒப்புவித்தது
மட்டுமல்லாமல், எனக்கு மிகவும் பிடித்த வரிகளான " வாரப் பத்திரிக்கைகளில்
படிந்து கிடக்கிற நூலாம்படைகளில் என்னுடைய தேர்ந்த வாசகச் சிறகுகள்
சிக்கிக் கொண்டுவிடக் கூடாதே என்பதற்காக விலகி, லைப்ரரியின் அச்சாணித்
தட்டுகளின் தூசியில் மூச்சு முட்டித் திரிகிற என் போன்றவர்களுக்கு இது
போன்று நிகழ்ந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை" என்பதை மந்திரித்து
விட்டவன் போல ஒரு உச்சகட்ட லாகிரியில் சிலாகித்ததை, அவர் ஒரு
புன்முறுவலால் ஏற்றுக்கொண்டார். எப்போதும் மௌனம் வழிகிற அந்தக் கண்கள்
நெகிழ்ந்திருந்தன. அடுத்த சில தினங்களில், என்னைத் தேடி ஒரு "Greeting
Card" அனுப்பியிருந்தார். விலை மதிக்க முடியாத ஒரு கவிதைஅதன் பின்
பக்கம். வாசம் வீசுகிற மலரையும், அதனைத் தாங்குகிற ஒரு காம்பையும் பற்றிய
கவிதை அது.
அதன் பிற்பாடு நிறைய சந்திப்புகள். எட்டாக மடித்த என்னுடைய சில
படைப்புகள் (அதையெல்லாம் நானே பிற்பாடு குப்பையில் எறிந்து விட்டேன்),
விருட்சம் பத்திரிகையில் வந்த என்னுடைய கவிதைகள்(?), அந்நாளைய "பாக்யா"
பத்திரிகையில் வந்த ஒரு கதை என்று, நான் அவரை நிர்பந்தித்து இருந்தாலும்,
தமிழில் என்றைக்கேனும் "ஞானபீடம்" வாங்குகிற தகுதி படைத்த ஒரு மகா
எழுத்தாளனோடு நான் சகஜமாக உரையாட முடிகிறது என்பதே என்னைத் தரை மேலே 1/2
அடி உயரத்தில் உலாவச் செய்தது.
விருட்சம் ஆசிரியர் என்னிடம், ஞானக்கூத்தன் அவர்களின் வரவிருந்த, இன்னம்
அச்சில் ஏற்றப்படாத கவிதைத் தொகுப்பைப் காட்டி, என் ஞாபகத்தில்
இருந்து ஏதேனும் விடுபட்ட கவிதை உள்ளதா என்று கேட்டு இருந்தார். நான்
உடனே கணையாழில் வந்த, அத்தொகுப்பில் விடுபட்ட சில அற்புதமான கவிதைகளைக்
(சமயங்களில் மாமா என்று அழைக்கவே துவங்கி விட்ட சிறுவர்கள் தொலைவில்
சென்று ஆடினர் என்னைக் கண்டால்... உள்ளிட்ட சில கவிதைகள்) கூறினேன்.
இச்சம்பவத்தை, நான் வண்ணதாசனிடம் பெருமையாகக் கூறும்போது, அவரைப்
பார்க்க, கவிஞர் விக்ரமாதித்தன் வந்திருந்தார். அப்போது, நான்
வண்ணதாசனிடம், ஞானக்கூத்தன் எழுதியதாக ஒரு கவிதையைக் கூறி, இதுவே அவரின்
சிறப்பான முதல் ஐந்து கவிதைகளில் ஒன்று என்று கூறினேன். இருவரும்
புன்னகைத்தனர். அந்தக் கவிதை - " இறக்கை சிலுப்பும் காக்கையை , எச்சில்
இலையைத் தின்றபடி யோசனை செய்யும் பசுமாட்டை, நனைந்த குரலில் பூ விற்று
நடந்து போகும் சிறு பெண்ணை ..... " என்று கஷ்க்கத்துக் குடை போல கிழிந்து
போன ஒரு சிறுவனின் வாழ்க்கை பற்றியது. 80ல் "ழ" ல் வந்திருந்தது.
இது ஞா.கூ. விடம் தெரியப்படுத்தப் பட்டதா என்று கேட்டார். நான், ஆமென்று
கூறி, ஆனால், ஞா.கூ, இதை மறுதலித்து, கவிதை அற்புதமாக இருந்தாலும், அதைத்
தான் எழுதவில்லை என்று கூறி விட்டதாகக் கூறினேன்.
மறுபடியும் புன்னகையில் அன்பு வழிந்தது.
இம்முறை, விக்ரமாதித்தன், இந்தக் கவிதை "கல்யாண்ஜி" எழுதியது என்றார்.
எனக்கு அது அதிர்ச்சி அளித்தாலும் இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது. ஆனாலும்
நான் விடாமல், கல்யாண்ஜியின் (கணையாழியில் வந்தது) கவிதை ஒன்று
(.....இன்னொரு திரை உயர்கையில் நான் உங்களுக்கு மத்தியிலோ அல்லது
அருகாமையிலோ அமர்வதை மறுப்பதிற்கில்லை. வந்து விடுவேன் தாமதமாகவேனும்
ஆனால் நிச்சயமாக) வேகமான நடையில் கூறினேன். ஆனால், கல்யாண்ஜி, இதைத் தான்
எழுதியதாக ஞாபகமில்லை என்று கூறியது மறுபடியும் அதிர்ச்சியாக இருந்தது.
பிரமிள் உடனான என்னுடைய சந்திப்புகளை ஒருமுறை கூறிய போது, அவர்
கையெழுத்திட்ட அவரது கவிதைத் தொகுப்பு ஒன்றை வாங்கியதாகக் கூறினேன்.
பிரமிள் என்கிற தருமு சிவராமுவைப் பற்றி மிகவும் சிலாகித்த வண்ணதாசன்,
அத்தொகுப்பைத் தான் பார்க்க முடியுமா என்று கேட்டார். ஒரு சிறு
குழந்தையின் பரவசத்தில் மறுநாளே அப்புத்தகத்தைக் கொண்டு கொடுத்தேன்.
அப்போது நாங்கள் அண்ணா நகரில் குடியேறி இருந்தோம். ரயில் பயண
சந்திப்புகள் தடைப்பட்டன. ஒரு காலைப் போதில், எனக்கு தொலை பேசி வந்தது.
வண்ணதாசன். அன்று, தான் மாற்றலாகி திருநெல்வேலி செல்லப் போவதைத்
தெரிவித்தார். என்னுடைய புத்தகத்தைத் திரும்ப வாங்கிப் போக முடியுமா
என்று கேட்டது என் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது. மதியம் அவரைப்
பார்க்க விரைந்தேன். எவ்வித மாற்றமுமின்றி அதே புன்னகை. என்னுடைய
புத்தகத்தை (அழகான அட்டையிட்டு இருந்தேன் - அதே மடிப்புக் கலையாமல்)
என்னிடம் திருப்பிக் கொடுத்தார். நான் அதனை என் அன்பளிப்பாக ஏற்றுக்
கொள்ளுமாறு கூறினேன். இம்முறை புன்னகையில் மறுப்பு இருந்தது. "தர்மு
சிவராமு" மிகப் பெரிய கவிஞர். அவரே அவர் கைப்பட எழுதிக்
கொடுத்திருக்கிறார். அவர் இப்போது இல்லாவிட்டாலும் (அவ்வருடம் பிரமிள்
காலமாகி விட்டிருந்தார்), அவர் ஞாபகம் இப்புத்தகத்தில் எப்போதும்
இருக்கும். ஆதலால் இதனை நீங்கள் வைத்திருப்பதுதான் சரி என்று திருப்பிக்
கொடுத்து விட்டார். ஒரு பெரும் உணர்ச்சியில் சிக்கியிருந்த என்னைப்
பார்த்து, உலகம் மிகவும் சின்னது கணேஷ்ராம். நாம் மறுபடியும் சந்திக்க
நேரும் என்றார். ஆனால் இன்றுவரை உலகம் பெரியதாகவே இருக்கிறது.
என்னால் பதில் கூற இயலவில்லை. விக்ரமாதியன் கவிதை ஒன்று "எனக்கது
சூரியன், சூரியனுக்கு நான் யார்" என்று வரும். அது போல், எனக்கு
வண்ணதாசன் ஒரு பெரிய பொக்கிஷம். ஆனால் அவருக்கு, என்னைப் போல் லட்சக்
கணக்கில் ரசிகர்கள், இன்னமும், மேல்தட்டு ரசனையில் வரக்கூடும் என்று
தோன்றியது.
அடுத்த சில மாதங்களில் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அவருடைய விலாசம்,
இம்முறை, எனக்கு, அந்த பிரபல நாடக நடிகரிடமிருந்து கிடைத்து விட்டது.
உடனே எனக்கு அவரிடம் இருந்து பதில் வந்து விட்டது.
(அதன் scanned copy யை இதனுடன் இணைத்துள்ளேன்)
ஒரு குழந்தையின் உற்சாகத்தில், பால்யத்தில் அபூர்வமாகக் கிடைக்கிற
மயிலிறகைப் பத்திரப் படுத்தும் நேர்த்தியில், இக்கடிதத்தைப்
பத்திரப்படுத்தி இருக்கிறேன். 14 வருடங்கள். ஒரு வனவாசம். அவர்,
தன்னுடைய வீட்டைப் பற்றிக் கூறியிருந்தது.
அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்ட என்னுடைய வீட்டையும், அதே கனமான மனத்தில்
போன மாதம், நான் விற்று விட்டேன். என்ன ஆச்சர்யம், வண்ணதாசனும் அவருடைய
பசுமை நிறைந்த அவ்வீட்டை விற்று விட்டார்.
வீடுகளை சுலபமாக விற்று விட முடிகிறது. ஆனால் ஞாபகங்களை மட்டும் விற்க
முடிவதில்லை. உள்ளங்கைக்குள் குளிர்ச்சியூட்டுகிற அந்த அறைச்சாவி (பெயர்
தெரியாமல் ஒரு பறவை - நான் தானோ அது?) தருகிற சுகம் இதிலும் தொடரத்தான்
செய்கிறது.