Tuesday, May 4, 2021

பயணம்

இருபத்தி மூன்று மணிநேரம் விமானத்தில் பயணம்  என்பது கொடுமையான விஷயம்.  


நேரத்தை வீணடிக்க நிறைய பக்குவம் வேண்டும். நிறையத் தூங்கலாம் சற்று அசௌகரியத்துடன். இப்போது இளையவயதினர் போல் ஈ.புக் படிக்க முடிவதில்லை.  வயது மட்டும் காரணம் இல்லை.  என்னால் முடியவில்லை. 
நான் படம் பார்க்கலாம் என்று முடிவு செய்தேன்.
நீண்ட பயணம் என்றாலும் இரண்டே படங்கள். 

1. சண்டைக்கோழி2 . ரசனைகள் தேவைப்படாத முடிவும் காட்சிகளும் பார்ப்பவனாலேயே தீர்மானிக்கப்பட முடிகிற customized movie. கிட்டத்தட்ட அந்த மூன்று நாட்கள் லக்ஷ்மி நாவல்கள் மாதிரி.  சொல்வதற்கு ஒன்றுமில்லை. "இன்னா படம்பா.. விசாலு விசாலுதான் மச்சான்.. தூள் கிளப்பறான்டா மாமூ.. இன்னா ஃபைட்டுன்ற.. ஒன்டிக்கு ஒன்டி (ஒன்டிக்கு சின்ன 'ன' வா, பெரிய 'ண' வா... சமீபமாக spellingல் நிறைய சந்தேகங்கள் வரவாரம்பித்திருப்பது நல்ல ஆரோக்யத்தின் அறிகுறியன்று).
2. ஒரு கிடாயின் கருணை மனு...

விமானத்தின் தமிழ் அகராதியில் நான்கு படங்கள் தான் இருந்தன. ச.கோழி2, பாஸ்கர் என்னும் ராஸ்கல், கிடாய் மற்றும் பரியேறும் பெருமாள்.

நான் பாஸ்கரைத்தான் பார்ப்பதாக உத்தேசம். விலாவின் விளிம்புகளில் கிச்சுகிச்சு மூட்டுகிற படங்கள் நீண்ட பிரயாணங்களுக்கு உகந்தவை. ஆனால் இந்த பாஸ்கருக்கும் பழைய சந்தானம் பாஸ்கருக்கும் யாதொரு சம்பந்தமும் இருக்கிற மாதிரி தெரியாததாலும், படம் ஆரம்பித்து டைரக்டர் பெயர் போடுவதற்கு முன்பே மானிட்டரின் தொடு திரையில் என் கிரக சஞ்சாரம் காரணமாக கோளாறு ஏற்பட்டதை சகுனத்தடைமாகக் கொண்டு ச.கோழியை சாங்கோபாங்கமாகப் (இதற்கு என்ன அர்த்தம்? ) பார்த்து முடித்தேன். இதற்காக உள்மனதில் நம்மூராட்களுக்கு சேவை செய்ய வேண்டிய துர்ப்பாக்கியத்திற்காக வருத்தப்படுகிற அந்த மனிதன் கொஞ்சம் மெனக்கெடத்தான் வேண்டியிருந்தது.
ச.கோழியைத்தவிர்த்து என்னிடத்தில் வேறு சாத்தியங்கள் இருக்கவில்லை.  பரியேறும் பெருமாள் நல்ல விமரிசனங்கள் கொண்டிருந்தாலும் பிரயாணத்திற்கான படம் என்று தோன்றவில்லை.  கிடாயை நான் கேள்விபட்டதே இல்லை. 

வேறு வழியில்லாமல் ச.கோழிதான் பார்க்க வேண்டியிருந்தது என்று பேசும்போது சபை நடுவில் கூசாமல் பொய் சொல்லலாம்.  எழுத்து நாகரீகத்தில் பொய் சொல்வது கூச்சமாயிருக்கிறது. உள் மனதில் ச.கோழி பார்க்க ஆசைப்பட்டு சப்புக்கொட்டிக்கொண்டுதான் பார்த்தேன். சமீப காலங்களில் ரகளைகள் ரசனைகளை மீறுவது ஆபத்தானது என்றாலும் பேட்ட, விசுவாசம் எல்லாம் சப்தமில்லாமல் பார்த்தாகி விட்டது.

2. லண்டனை விட்டுக் கிளம்பும் போது கிட்டத்தட்ட பிரயாணம் இருபது மணிநேரங்களை விழுங்கியிருந்தது. இந்த இருபது மணிநேரம் என்பது பதினோரு மணிநேரப் பிரயாணம்,  இரண்டு இடங்களில் இலக்கற்ற காத்திருத்தல், அமர்ந்த நிலையில் அசதி உறக்கம்,  பொருத்தமற்ற உணவு, உடன்பாடற்ற தேநீர்,  உபாதைகள் மற்றும் மற்றும் மற்றும் சண்டைக்கோழி2.  சண்டைக்கோழி1 என்பது நல்ல படம் என்றாலும் , என்னையும் என் மனைவியையும் அது ஒரு குறியீடாக உணர்த்துவதில் அந்தக் கருத்து ஒரு மாற்று முதன்மைத்துவம் பெற்று விடுகிறது.
39ம் நம்பர் சீட்டு என்றவுடனே சுதாரித்திருக்க வேண்டும். சரியாக நாங்கள் ரொம்ப நாகரீகம் பார்த்து நாசூக்காக நகர்ந்து சென்றதில் (அசமஞ்சம் என்று தெலுங்கில் சொல்வார்களாயிருக்கும்) எங்களுக்கு முன்பே ப்ரயாணிகள் நிரம்பி இருக்கைகளின் மேலே இருந்த பரண்களை நிரப்பியிருந்தார்கள். சோதனையாக 39 தொடங்கி 45 வரை நடு வரிசையில்  (எங்களுடையது) பரண்கள் இல்லை. அதை மழைநீர் சேகரிப்பிற்காக நேர்ந்து விட்ட மாதிரி பொருள்படும்படி அந்த அவன் பெருமையடித்துக் கொண்டான்.  நல்ல வேளையாக 37ம் நம்பர் பரண் காலியாக இருந்தது. நான் கார்ல் லீவிஸ் மாதிரி எட்டுக்கால் பாய்ச்சலில் தாவி, யார் காலையோ நடுவில் பதம் பார்த்து  (indecent fellow) மன்னிப்பு கோர அவகாசமில்லாமல் என் இரு பெட்டிகளையும் அந்தப் பரணில் வைத்து மீண்டேன். இந்தக் குறுகிய கால அவகாசத்தில் என் மனைவியின் வாயிலாக ரகுவம்சத்திற்கும்  முற்பட்ட என் பரம பாட்டனார்களின் கையாலாகாத்தனமெல்லாம் பக்கத்தில் தேமேனென்று இருந்த ஜப்பான்காரன்கள் செவிப்பறையெல்லாம் நுழைந்து மீண்டன.  ஜப்பான்காரன் என்பதெல்லாம் உத்தேசமாகச் சொல்வதுதான். உண்மையில் சீன, கொரிய,  ஜப்பான் காரன்களையெல்லாம் பகுத்தறிகிற புத்திசாலித்தனம் என்னிடத்தில் இருந்ததில்லை.  எந்த புத்திசாலித்தனமும் என்னிடத்தில் இருந்ததில்லை என்று புத்திசாலியான என் மனைவியின் கூற்றில் உண்மைகள் இல்லாமல் இல்லை.  தக்க தருணத்தில் அவளை ஏமாற்றிய தந்திரத்தை புத்திசாலித்தனம் என்று நினைத்து  தான் ஏமாந்து விட்டதாக அவள் அங்கலாய்ப்பு எனக்குள் அவ்வப்போது புன்னகையை ஏற்படுத்துவது உண்டு.

ஒரு சிறிய ஆசுவாசத்திற்குள் 37ம் நம்பர் மனைவியுடன் வந்து விட்டான். நடுவயது ஆனால் என்னைவிடவும் மிகவும் இளையவனாக இருந்தான். கஷ்கம் தெரிகிற மாதிரி T Shirt அணிந்திருந்தான். அதற்கு அவனது தினவெடுத்த புஷ்டியான புஜங்கள் காரணமாக இருந்திருக்க வேண்டும்.  இந்த மாதிரி ஆட்கள் கூடைப்பந்து விளையாட அல்லது தேச சேவை உத்தேசித்து மிலிட்டரியில் சேர்ந்திருக்கலாம். ஒலிம்பிக்கில் தட்டெறியப் போயிருக்கலாம்.  இப்போது பெட்டி எறிகிற துரத்தில் நெருப்பைக் கக்குகிற விழிகளில் என்னை ஊடுருவி மீள்கிறது அவன் பார்வை.

அவனுக்குப் பட்டா போட்டுக் கொடுத்த இடத்தை அபகரித்த போக்கிரி யார் என்கிறது ஆங்கிலம். நான் போக்கிரியெல்லாம் இல்லை என்று சாதுவாக அறிக்கையிட முற்படுகிற என் கோழைத்தனத்தை அணைகட்டுகிறது என் மனைவியின் ஒரு சிறு கனைப்பு. நான் வழக்கம் போல அடங்கி தலையைத் தொங்கப் போட்டுக் கொள்கிறேன். அவன் கர்ஜனை தொடர்கிறது. அந்த அவனைக் கூப்பிட்டு கூப்பாடு போட அவன் அமைதியாக இவனது உடமைகளை எடுத்து வேறிடம் செல்கிறான். ஆனாலும் அவன் சமாதானம் அடையவில்லை.  பொதுவாக எங்கள் பக்கம் அவன் தாய் மொழியில் என்னமோ சொல்கிறான்.  என் பாட்டனார்களுக்கு யோக காலம் என்று தோன்றியது. திதி கொடுக்கும் நாட்களைத்தவிரவும் நிறைய நாட்கள் என் மனைவி மட்டுமின்றி நிறையப் பேர் அவர்களை நினைத்துக் கொள்கிறார்கள்.  அவன் காது கூசாத வார்த்தைகளை உகுக்கிறான் என்பது அவன் மனைவி தன் காதுகளை நாசூக்காக மூடிக்கொண்டு அவனை அமைதிப்படுத்த முனைவதில் தெரிகிறது. நான் தமிழ் நாட்டில் பிறந்ததற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்தேன். வேறு மாநிலங்களில் பிறந்திருந்தால் மற்ற மொழிகளை கற்றுக் கொள்ள நேரிட்டு என் பாட்டனார்களுக்கு நேர்ந்த அவலத்தில் பங்கு கொள்ள வேண்டியிருந்திருக்கும்.

3. லண்டன் விமான நிலையத்தில் 3  மணிநேரம் கிடைத்தது. அது பரிச்சயமான விமானநிலையமானதால் சங்கடங்கள்  இல்லை  என்று சொன்னதை என் மனைவி ரசிக்கவில்லை. உண்மையில்  ஒன்றுமே புரியவில்லை.  நல்ல வேளையாக மனைவி கூட இருந்ததில் பாதுகாப்பு சோதனை கடந்து கதவு நம்பர் தெரியாமல் அறிவிப்பு பலகை அருகே அமர்ந்து கொண்டோம். எங்கள்  அருகே கழிப்பறைகள் வேறு இருந்தன. திரளான ப்ரயாணிகள் வெவ்வேறு தேசங்களில் இருந்து வந்தாலும் ஒரே மாதிரி வேதனை ததும்பும் முகங்களில் நுழைந்து திருப்தியாக திரும்புவது நன்றாக இருந்தது. " கருமம்" என்று என் மனைவி தலையில் அடித்துக் க கொண்டாள்.

ஒரு வழியாக B35 செல்லுமாறு பணிக்கப் பட்டோம்.

 நாங்கள் விழுந்தடித்துக் கொண்டு அரைமைல் நடந்து கதவை அடைந்து எங்கள் வரிசையில் நுழைந்து கொண்டோம். இன்னொரு தெலுங்குக்காரனிடம் அடிவாங்கும் திராணி இல்லை. எங்கள் துரதிர்ஷ்டம் ஒரு பழைய யுவதி வந்து அடிக்காத குறையாக  அடித்து விரட்டினாள். இருபது நிமிடம் முன்னால் வந்தால் போதும் என்று சொன்னதால் நானும் என் மனைவியும் ப்ராக்கு பார்க்க அருகாமையில் இருந்த கடையில் நுழைந்தோம்.
அப்படியும் நேரம் போகவில்லை.  விரட்டினாலும் பரவாயில்லை என்று மறுபடியும் வரிசையின் வெளியே நின்று கொண்டு பரிதாபமாக எட்டிப் பார்த்தோம்.

உள்ளே இருந்து  ஒருவன் வந்து  எங்களிடம் என்ன என்று அதட்டினான். நான்  என் கையில் இருந்த போர்டிங் பாஸை அநிச்சயமாக அவனிடம் நீட்டினேன். அவன் அதைப் பார்த்து விட்டு oh my God என்றான். இவ்வளவு நேரமாக கூப்பிடுகிறோம் எங்கே சென்றீர்கள்  என்று கடிந்து கொண்டான். நான் காரணம் கேட்ட போது  என் பாஸில் இருந்த ஒரு குறியீட்டை சுட்டிக் காட்டி நான்காம் நம்பர் வரிசையில் போய் நிற்கச் சொன்னான். நாங்கள் இருவரும் அவ்விடம் விரைந்தோம். அங்கே  ஏற்கனவே ஓரிருவர் நின்று கொண்டிருந்தனர். எங்களுக்கு மனம் பரபரப்பாக  இருந்தது.  ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது என்று உள் மனம் கூறியது. நாங்கள் நின்ற வரிசையில் upgrade  என்று எழுதியிருந்தது. என்றால் எங்களுக்கு முதல் வகுப்பு கிடைக்கப் போகிறது செலவில்லாமல். ஓவென்று கத்தலாம் போல இருந்தது.  என் பாஸை கைவிரல்களிடையே ஸ்டைலாக சுழற்றியபடி வெளியே நேரமாகாததால் காத்திருப்பவர்களை ரகசியமாக நோட்டம் விட்டேன்.  எல்லோரும் எங்களையே பொறாமையாகப் பார்ப்பது பெருமையாக  இருந்தது.  அப்போது தான் என் மனைவியின் பாஸைப் பார்த்து கடவுளே என்று அலறினேன். அவள் பாஸில் அந்தக் குறியீடு இல்லை.  என்றால் எனக்கு மட்டும் தான் முதல் வகுப்பு கிடைக்கும்.  அவள் எகானமிதான். அவள் முகம் சுணங்கி விட்டது.  இது சரியா வராதுப்பா என்றாள். கிடைச்சா ரெண்டு பேருக்கும் கிடைக்கட்டும்.  இல்லேன்னா வேண்டாம்னு சொல்லிடுவோம் என்றாள். சரி என்றவாறு எங்களை அழைத்த பெண்ணிடம் சென்றோம். என் மனைவி அவளிடம் தானும் செல்லலாமா என்று கேட்க, அவள் முதலில் மறுத்து, பின்பு உடன் பட்டாள். மறக்காமல்  என் பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டாள்.

நாங்கள் ஒரு நீண்ட பாதையில் அழைத்துச் செல்லப் பட்டோம். போகுமுன் வெளியில் தவிப்போடு நின்றிருந்த சகபயணிகளைப் பார்த்து புன்னகைக்க மறக்கவில்லை நான்.

சிறிது நேர நடை ஒரு அறையில் முடிந்தது. அதன் வெளியே விமானத்தின் நுழைவு வாயில் திணிக்கப் பட்டிருந்தது.

அந்த அறையில் முன்னம் நுழைந்த மூவர் இருந்தனர். கடும் சிவப்பில் இருந்த ஒருவன் என்னைக் கூப்பிட்டான். நான் பெட்டிகளை மனைவியிடம் கொடுத்து விட்டு செல்ல, அவன் மறுத்து அவைகளைக் கொண்டு வரச் சொல்லி வேறொருவனிடம் கொடுக்க அவன் ஒரு மரியாதை நிமித்தம் கூட என் அனுமதி பெறாமல் அவைகளைத் திறந்து  உள்ளாடைகள் முதற்கொண்டு எல்லாவற்றையும் வெளியே எறிந்தான். நான் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தேன்.

இப்போது அந்த சிவப்பு மனிதன்  என்னை ஒரு பெஞ்சில் கிடத்தி வைத்தியர்கள் வயதானவர்களிடம் ஹெர்னியா பரிசோதிப்பது போல் பரிசோதித்தான். அவனே இன்னொருத்தனிடம் என்னை ஒப்படைத்தான். அவன் என்னை நன்றாகக் கவிழ்த்து   ஜியாமெட்ரி பாக்சில் ரப்பர் தேடுவது போலத் தேடி, ஒருவழியாக போய் வா என்றான். நான் பதட்டத்தில் வெளியே வந்தால் மற்ற பயணிகள் சாரிசாரியாக விமானத்தில் ஏறிக் கொண்டிருந்தனர். இப்போது அந்தப் பெண் ஓடிவந்து ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்து என் மனைவியிடம் அவளுக்கு சோதனை தேவையில்லை என்று கூறி விட்டாள்.

நான் தடுமாற்றத்துடன் மனைவியைப் பிடித்துக் கொண்டு வந்து சரியான இருக்கையில் அமர்ந்தேன். இந்த முறை இருக்கையின் மேல் பரண் காலியாக இருந்தது.

பி.கு.
ஒரு கிடாயின் கருணைமனு தனியாகத் தொடரும்

*ஒரு பாபியின் டைரிக்குறிப்பு*

 


*ஒரு பாபியின் டைரிக்குறிப்பு*

மனைமிதி சாஸ்த்ர ப்ரகாரம் மூன்று அல்லது கூட்டுத்தொகை மூன்று என்று வருகிற எண்கள் நல்லவை. அதிர்ஷ்டத்தை அள்ளித் தெளிக்கா விட்டாலும் முகம் கோண வைக்காது. தொண்ணூற்று இரண்டில் வங்கியில் குமாஸ்தாவாக வேலை கிடைத்தது.

தொண்ணூற்று இரண்டின் கூட்டுத்தொகை உண்மையில் இரண்டானாலும் மூன்றுதான் சரி. தொண்ணூற்று இரண்டில் உள்ளுறையாக வாசம் செய்கிற பத்தொன்பது இரண்டுடன் ஒன்றைக் கூட்டி மூன்றாக்கி விடுகிறது. வருடம் ஆயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று இரண்டை தொண்ணூற்று இரண்டு என்று கூறுவதில் யாருக்கும் விசனமிருக்க வாய்ப்பிருக்காது. 

இதுவொரு மகாகாவியததிற்கான முஸ்தீபு இல்லை. மே 18 திங்கட்கிழமை முதல் ஜூன் 1 திங்கள் வரை நிகழ்ந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகளில் ஓரிரண்டை எல்லோருடனும் பகிர்வது பிற்கால சந்ததிகளுக்கு உபயோகமாக இருக்கும் என்று கருதியதே இம்முயற்சி.

உத்யோகத்திற்கு அழைப்பு வந்த ஓரிரு மாதங்களில் நேரடியாகக் கிளைக்கு அனுப்பாமல் விழுப்புரத்திற்கு  training அனுப்பி விட்டார்கள். கிட்டத்தட்ட ஐம்பது அறுபது பேர். என்னையும், கவிஸ்ரீயையும், நாலைந்து ex service men, ஓரிரு ex service women தவிர பாக்கியெல்லாம் ரொம்பவே  பொடிசுகள். அதில் ஒரு சிறு பெண்ணை, இன்னொரு பெண் (சிறு பெண்ணின் அத்தை) நிஜமாகவே நவராத்திரியில் குழந்தைக்கு தாவணி உடுத்தி கூட்டி வருவது போல்தான் கூட்டி வந்திருந்தாள். அதை உள்ளே விடாமல் கிருஷ்ண மூர்த்தி என்ற உபாத்தியாயர், "அம்மா, குழந்தே.. இது training centre.. உத்யோகம் பாக்கறவாளுக்கு மட்டும் தான் அனுமதி.. அண்ணா.. அக்காவோடல்லாம் தொத்திண்டு வரப்படாது.. கிளம்பு.. கிளம்பு.. " என்று அடிக்காத குறையாக விரட்ட, அந்த சிறுபெண்ணின் உறவுக்கார அத்தை, அவரிடம் அந்த சிறு பெண்ணும் தன்னைப் போலவே வேலை கிடைத்து வந்திருப்பதாகச் சொல்ல கி.மூ வுக்கு முகத்தில் ஈயாடவில்லை.

நான் கொஞ்சம் பதட்டமும் கொஞ்சம் திமிரும் கலந்து வகுப்பறையில் நுழைந்தேன். கொல்லென்று சந்தைக்கடையில் நுழைந்த மாதிரி இருந்தது.

அங்கங்கே அதற்குள் குழுக்கள் உருவாகியிருந்தன. ஆண்கள் கூட்டத்தில் ஸ்டைலாக இருந்த நாலைந்து பேர் ஒன்று கூடி ஆங்கிலத்தில் அளவளாவிக் கொண்டிருந்தனர். வழக்கம் போல முதலிரண்டு வரிசைகளைப் பெண்கள் ஆக்ரமித்து கடுமையான சப்தம் அங்கிருந்துதான். அயர்லாந்து முதல் ஸ்காட்லாந்து வரை புழக்கத்தில் இருந்த ஆங்கில வாக்கியங்கள் (மட்டும்) அங்கே புழங்கின. சென்னை நகரில் உலாவருகிற நாகரீக யுவதிகளின் தேசீய பாஷை ஆங்கிலம் என்பது ஆதிசங்கரர் காலத்தில் இருந்தே இருப்பது தானே.

நான் ஒரு சிறு நோட்டுப் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு, எங்கு அமரலாம் என்று வழக்கம் போல விழித்துக் கொண்டு இருப்பதற்குள் எல்லா இருக்கைகளும் (சாய்மானம் இல்லாத பெஞ்சுகள் தான்) நிரம்பவாரம்பித்தன. கடைசி இரண்டு வரிசைகள். கடைசிக்கு முந்தைய வரிசையில் ஏற்கெனவே ஒருத்தன் கடுமையான ஒல்லியாக இருந்தான். ஆளைப் பார்த்தால் சாதுவாகவும் சற்றே மிரண்டும் இருந்த அவன் எனக்கு தோதானவனாகத் தென்பட்டான்.

நான் அவன் பக்கத்தில் பெஞ்சை லேசாக இழுத்து, நோட்டுப் புத்தகத்தால் இல்லாத தூசியைத் தட்டிவிட்டு அமர்ந்தேன். பக்கத்து இருக்கைக் காரனை ஏற இறங்கப் பார்த்து புன்னகைத்தேன். அவன் புன்னகைக்கவில்லை. என் தோற்றம் அவனை அதிர்ச்சிக்கு  உள்ளாக்கியிருந்தது அவன் கண்களின் மிரட்சி கூடியதில் தெரிந்தது.

நான் சென்னையில் என் நண்பன் வரதுக்குட்டி இழுத்துப் போய் அறிமுகப்படுத்திய பெயர்ப்பலகை இல்லாத டெய்லரிடம் சமீபத்தில் தைத்திருந்த கருநீல baggy pantம் ஜிகுஜிகுவென்று டாலடிக்கும் வெளிர் நீல முழுக்கை சட்டையும் அணிந்திருந்தேன். அந்த டெய்லர் பதினைந்து நாட்கள் முன்னாடி தான் பதவி உயர்வு பெற்று pant சட்டை தைக்கத் துவங்கி இருந்தான். அதற்குமுன் காலங்காலமாக பெண்கள் உள்பாவாடை தைக்கும் கம்பெனியில் உத்யோகத்தில் இருந்தான் என்பதை நான் தெரிந்து கொள்ளும் முன் என்னுடைய அந்த சர்ச்சைக்குரிய கால்சராய் நைந்து வீணாகியே விட்டிருந்தது.

நான் வித்தியாசமான கால்சராய் அணிந்திருந்தாலும் தலை நிறைய வாசனைத் திரவியம் தடவி அழுந்த வாரியிருந்தேன். நான் உபயோகித்தது சிவப்பு நிற சீப்பு என்பது, அது என் வன்முறையைத்  தாளாது என் தலைமயிரின் ஊடே தன்னுடைய சிவந்த பற்களை அட்சதை மாதிரி ஆங்காங்கே சிதறவிட்டிருந்ததில் இருந்து கண்டுபிடித்திருக்கலாம். விபூதியைக் கோணல்மாணலாக, அறிவுஜீவியின் வடிவம் தோன்ற வேண்டுமே என்று மெனக்கெட்டு அரைகுறையாக பூசி வந்திருந்தேன். ஏற்கெனவே எண்ணெய் ஊற்றெடுக்கும் முகத்தில், மேலும் அரை லிட்டர் எண்ணெயைத் தலையில் ஊற்றியதில், அறையில் இருந்து வகுப்பிற்கு வருவதற்குள் குட்டிக்கூரா குட்டிச்சூராவாகிவிட்டிருந்தது. இப்போது நினைத்துப் பார்த்தால் ரவி மிரண்டதிலும் நியாயமுண்டு.

என் நீட்டிய கையை மதிக்காது ரவி என்னிடம் என்னவோ ஆங்கிலத்தில் வினவினான். என் பெயரைத் தான் கேட்கிறான் போலிருக்கிறது என்று ஊகித்து என் பெயரைச் சொன்னேன். அவன் நக்கலாக இதுமாதிரி ஒரு ஊர்பெயரைக் கேட்டதே இல்லையே என்றதும் எனக்கு வெட்கமாகப் போய்விட்டது. மழுப்பலாக, சரியாகக் காதில் விழவில்லை என்று சமாளித்தேன். என் முதல் தோல்வியில் தடுமாறினாலும், மெதுவாக அவனை மேக்கரிக்கும் சமயம் என் தோளை வலுவாக உடைத்து விடுவது போல் அமுக்கி யாரோ ஒருவர் பக்கத்தில் அமர்ந்தார். நானும் ரவியும் ஒருசேரப் பார்த்தோம். வந்தவன் படு ஸ்டைலாக இருந்தான். கண்ணாடி அணிந்து கொண்டு, மிக உயர்ந்த ரக சட்டை, அது என்ன ப்ராண்ட் என்று அன்று சாயங்காலம் எங்களிடத்தில் விலையோடு சொன்னது மறந்து விட்டது.  பச்சையும் ஆரஞ்சும் கருநீலமும் குழம்பி நிறமேறி இறங்குகிற, கட்டம் போட்ட சட்டை, அதைவிட உயர்வான காப்பிப்பொடி  நிறத்தில் பான்ட். உயர்தர கான்வாஸ் ஜோடுகள் அணிந்திருந்தான். நானும் ரவியும் சாதா காலணிகள் தான். அதிலும் என்னுடையது இரண்டு மாதங்கள் முன்பு அறுந்து மாம்பலம் ஸ்டேஷன் வாசலில் ஒருவன் விசேஷ ச்ரத்தையில் தைத்திருந்தது, தற்போது பல்லிளித்து ஓரிரு நூலிழைகள் வெளியே தெரியவாரம்பித்திருந்தன. நானும் ரவியும் சரேலென்று எங்கள் கால்களை மறைத்துக் கொண்டோம்.

இப்போது வந்தவன் பேசவாரம்பித்தான். அவன் இருப்பிடம், தங்கியிருக்கும் ஹோட்டல் (மற்ற நாங்கள் எல்லோரும் வங்கியின் கூட்டு முயற்சியில் சகாயவிலைக்கு அறைகள் எடுத்திருந்தோம்), படிப்பு, படித்துக் கொண்டிருப்பது, அடுத்த சில நாட்களில் நடக்க இருக்கும் பரீட்சையில் ஜெயித்து இதே வங்கியில் ஆஃபீஸராகிவிடுவது என்று. ரவி என்கிற வலது பக்கத்துப் புதியவனும் விஷ்ராம் என்கிற இடதுபக்கத்துப் புதியவனும் என்னிரு காதுகள் வழியாக மிக அதிக அளவில் சம்பாஷணை நடத்தினார்கள். என்ன காரணமோ, நான் விலகி அவ்விருவரையும் அருகருகே உட்கார வைக்க முயற்சிக்கவில்லை.

அவர்கள் சம்பாஷணை நடந்து கொண்டிருக்கும் போது நான், வேறொரு உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அது குப்புசாமி என்கிற குப்பு தன் சகோதரியுடன் வேலைக்கு வந்திருந்தான். அவர்கள்   "அம்மா பலாத்தா" மாதிரி என்னமோ வேற்று கிரகத்து மொழியில் பேசிக் கொண்டு இருந்தனர். 92 கூட்டம் வித்தியாசமானது. வேலைக்கு வரும்போதே சிலர் குடும்பமாக வந்தனர். சிலர் வந்த பிற்பாடு குடும்பமாக ஆகிய அதிசயமும் நடந்தது.

இப்போது, விஷ்ராம் என்னை உலுக்கினான்.

"நீங்க எங்க படிச்சீங்க?" என்று கேட்டான்.

"நான் எங்க படிச்சேன்? படிச்சிருந்தா ஏன் இங்கே வந்துருக்கப் போறேன்" என்றேன்.

"அப்ப உங்களுக்கு இதெல்லாம் வராது, இல்லே?"

நான், ரவியையும் சேர்த்து சொல்வதாகப் பாவித்து அவனைத் திரும்பிப் பார்த்தேன். அவன், உடனே பதைபதைத்து, இப்பதான் இதைப் பேசி முடிச்சோம். நீங்க பராக்கு பாத்துண்டு இருந்தீங்க. அதனால, உங்களைன்னு சொன்னது ப்ளூரல் இல்லை.. சிங்குலர்தான்" என்று என்னை விஷ்ராம் பக்கம் திருப்பி விட்டான்.

நான் விஷ்ராமிடம் "எனக்கு என்ன வராது?" என்று கேட்டேன்.

IAS?

அப்படின்னா?..

சரியாகப் போச்சு.. சிவில் சர்வீஸ்.. தெரியாதா?

ஓ.. அதுவா.. உங்களுக்கு வருமா அது?

"எஸ்.. நான் லாஸ்ட் இயர் ப்ரிலிம் முடிச்சு இன்டர்வியூ போயிருக்கேன்"

"நான் கூடத்தான்" என்றேன்.

அவன் இதை எதிர்பார்க்கவில்லை.

"உக்கும்.. எந்த ஊர்ல இன்டர்வியூ நடந்தது?

"திருவண்ணாமலை" என்றேன்.

"சான்ஸே இல்லே.. திருவண்ணாமலைலல்லாம் வைக்கவே மாட்டாங்க"

"யார் சொன்னது? நான் அங்கதான் அட்டென்ட் பண்ணேன்" - நான்.

"யாரு வந்தா பானல்லே"

"உங்களுக்கு யாரு வந்தது சொல்லுங்க?" என்றேன்.

"எனக்கு ராமமூர்த்தி வந்தார். க்ரிக்கெட் கமென்ட்ரி சொல்வாரே, அவர்"

"ஓஹோ.. எனக்கு ரங்காச்சாரி வந்தார். அவர் கமென்ட்ரி மட்டும் இல்லே.. கிரிக்கெட்டும் விளையாடுவார்"

"வாட்? ரங்காச்சாரியா? இது டூ மச்.. ராமமூர்த்தி வந்தார்னா அவர் ஐஏஎஸ் ஆஃபீசர்"

"ரங்காச்சாரி வந்தது ஏன்னா அவர் ஐஏஎஸ் ஆஃபீசர் இல்லை" என்றேன் விடாப்பிடியாக.

"மை காட்.. இப்போது ரவியிடம் திரும்பி ராமமூர்த்திக்கு BP போல.. கைநிறைய மாத்திரைகளை வச்சுண்டு அதுல ஒன்னைக் கீழ போட்டுட்டு, என்னை உக்கார வெச்சுட்டு குழந்தை மாதிரி டேபிள் கீழ தேடிண்டுருந்தார்.."

நான் உடனே, "ரங்காச்சாரி மாத்திரையை கீழே போடலை.. ஏன்னா அவருக்கு வியாதியேயில்லை" என்றேன்.

எனக்கு இந்த சம்பாஷணைத் தொடருவது  அபத்தமாகப் பட்டது.

ஆனால், அவன் விடுவதாக இல்லை.

உங்க ரோல் நம்பர் சொல்லுங்க பார்ப்போம் என்றான்

நான்,"ஏபி முப்பத்தேழு நாப்பத்தஞ்சு நானூத்திப்பதினாலு சி" என்றேன். நல்ல வேளையாக அவன் அதை திருப்பிச் சொல்லச் சொல்லவில்லை. கேட்டிருந்தாலும் சமாளித்திருப்பேன். என் குருநாதர் மகேஷானந்தா எனக்கு நிறைய வித்தைகளை உபதேசித்திருந்தார்.

"சிச்சீ.. இந்த மாதிரி நம்பர் லாம் இருக்கவே இருக்காது" என்றான்.

நல்லவேளையாக அதற்குள் வகுப்பு துவங்கி விட்டது.

வங்கிப் பணியின் பாலபாடம் முதல் வேதபாடம் வரை எல்லா சர்க்கம், கனம் என்று எல்லாவற்றையும் அரைநாழிகைக்குள் சொல்லிக் கொடுத்தே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் மாதிரி மூன்று உபாத்தியாயர்கள் எங்களைப் பிழிந்து எடுத்தார்கள். ஆனாலும், வெச்சு செய்யவில்லை. ஏனென்றால், இந்த அழகான தமிழ் வார்த்தை 92ல் கண்டு பிடிக்கப்படவில்லை. இதே பாணியைத்தான்  இப்போதும் கைக்கொண்டு வாத்தியார்களும் வாத்தியாரம்மாக்களும் புதிதாக வேலைக்கு வருபவர்களை மிரட்டி விரட்டி விடுகிறார்கள் என்று பரவலாக வதந்தி உலவுகிறது.

மூன்று வாத்தியார்களும் மிதிமிதி என்று மிதித்தாலும், கவிஸ்ரீ போன்ற ஓரிரு ஆத்துமாக்களும், அநேகமாக எல்லா பெண் பிள்ளைகளும் சப்புக் கொட்டிக் கொண்டே ரசித்து கவனித்தார்கள்.

வகுப்பு ஆரம்பித்து அரைமணி கழித்து விஷ்ராமுக்குப் போட்டியாக டிப்டாப்பாக உடையணிந்து ஒருவன் தாமதமாக நுழைந்தான். அறை நிரம்பி இருந்ததால், கொஞ்சம் சிரமப்பட்டு துழாவி, ஒரு தூணுக்குப் பின் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான். உபாத்தியாயர் அவனைத் தேடி, why are you hiding yourself? I want to see your face என்றார். வந்தவன் அவருக்குக் கேட்காமல் அவனுக்கு முன்வரிசையில் இருந்த பெண் பிள்ளைகளுக்கு மட்டும் கேட்கிற மாதிரி yes sir. I also want to see your face என்று இருக்கையை லேசாக நகர்த்திக் கொண்டான். அதற்கப்புறம் அவன் மிகவும் பிரபலமாகி மருதக்காரன் என்று சவடால் விட்டு இன்றுவரை 'அலைந்து' கொண்டே இருக்கிறான்.

மதிய இடைவேளை வந்ததும் நாங்கள் மூன்று புது நண்பர்களும் தெறித்து வெளியே ஓடினோம். பார்த்தால் எங்களுக்கு முன்பே சிலர் ஓடிக்கொண்டு இருந்தனர். அதில் கொஞ்சம் பூசினமாதிரி இருந்த ஒருவன் ஓட முடியாமல் ஓடின மாதிரி இருந்தது. அவனைத் தாண்டும்போதுதான் கவனித்தேன். எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. அவனுக்கும்.

குண்டுமணீ என்று உற்சாகமாகக் கூவினேன். அவன் என் கையைப் பிடித்துக் கொண்டு "நீயா? உனக்கு எப்படியும் கிடைச்சுடும்னு எனக்கு அன்னிக்கே தெரியும்" என்றான். இதைச் சொல்லி முடிக்க மிகவும் சிரமப் பட்டான். இரைப்பாய்  இரைத்தது அவனுக்கு.

அவனும் என்னோடு தான் கும்பகோணத்தில் இன்டர்வியூவில் கலந்து கொண்டான். நாங்கள் எல்லோரும் மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டு இருக்கும், அந்த அலுவலகத்தின் மாட்டுக் கொட்டடியில், பதிவிற்காக அமர வைக்கப் பட்டிருந்தோம். குண்டு மணி ஏக தடபுடலாக வந்தான். கையில் தடிமனான புத்தகம். கூடவே அவனது தகப்பனார். அவரை அந்த அலுவலகத்தின் அத்தனை பேருக்கும் தெரிந்திருந்தது. ஒவ்வொரு நபரிடமும் விஸ்தாரமாகப் பேசி, குண்டுமணியை அறிமுகப்படுத்தி விட்டுச் சென்றார்.

நான் வழக்கம் போல அசமஞ்சமாக எங்களுக்கு போட்டிருந்த ப்ரத்யேகமான பெஞ்சில் இடுங்கிக் கொண்டு அமர்ந்திருந்தேன். என்னை ஒட்டி சீனிவாசன் என்கிற தெலுங்குப் பையன் அமர்ந்து என்னத்தையோ படித்துக் கொண்டு இருந்தான். எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. நான் தகுதியின் அடிப்படையில் வயதிலும் கூட காலம் கடந்து வந்திருந்தேன். கிடைக்கா விட்டாலும் ஒன்றுமில்லை. அவமானப்படாமல் இருந்தால் போதும் என்றுதான் தோன்றியது. ஒன்றும் பிரமாதமாகத் தயார் செய்யவில்லை.

என் தந்தையும் இதே நிறுவனத்தில் வேலை செய்தவர் என்பதில் ஒரு சிறிய ஆசை. அவ்வளவுதான். அவரது அலுவலகத்தில் வேலை செய்த தற்காலிக ஊழியர் ஒருவர் தினமும் சஃபாரி உடையில் வருவார் என்பதில் வங்கிப்பணியின் மேல் எனக்கு ஒரு பீதியைக் கிளப்பி இருந்தது என்னவோ உண்மை. மிகவும் திறமையானவர்கள் உத்யோகம் பார்க்கிற இடத்தில் என்னை யார் தேர்வு செய்யப் போகிறார்கள் என்கிற அசிரத்தை என்னுள் ஒரு அசாத்திய தைரியத்தை ஏற்படுத்தி இருந்தது.

அதற்குள் குண்டுமணி என்கிற வரிப்புலி மான்கூட்டத்தை ஊடுருவியிருந்தது.

பளிச்சென்று இருக்கிற நாலு பேரிடம் செல்கிறான். என்னருகில் இருந்த சீனிவாசன் அவனிடம் விரைகிறான். குண்டுமணி கைகளை ஆட்டி ஆட்டி என்னமோ சொல்கிறான். தன் கையில் இருக்கும் தடிமனான புத்தகத்தைத் திறந்து காண்பிக்க, மற்றவர் வாய்பிளந்து கேட்கின்றார்கள். எல்லோர் முகங்களும் அதீத பீதியில் வாடுகிறது.

என் பக்கம் வருகிறவன் என்னை ஒருக்கணம் நோக்கிவிட்டு ஆர்வம் காட்டாமல் என்னைத் தாண்டி நோட்டம் விடுகிறான். நானும் அசுவாரசியமாக அவன் கையில் இருந்த புத்தகத்தைப் பார்க்க முனைகிறேன்.

குண்டுமணி இதழில் ஒரு இளக்காரம் வழிகிறது. புத்தகத்தை என்னிடம் நீட்டி "படிக்கணுமா" என்கிறான்.

நான் அவனிடம்,"இதென்ன புஸ்தகம்? பொன்னியின் செல்வனா" என்று கேட்டேன்.

அவன் முகம் மாறுகிறது.

"சிச்சீ.. டானன்" என்கிறான். எம்.எல். டானன்.

"ஓ" - இது நான்.

"கேள்விப் பட்டிருக்கியோ?"

"கேட்ட மாதிரி தான் இருக்கு.. எப்பவாவது யூவெஸ் ஓப்பன்" ஜெயிச்சானோ?" என்றேன்.

அவன் குழம்பி, சான்ஸே இல்லே.. இவர் ஒரு ரைட்டர்.. Banking Law and Practice..

என்று சொல்லி மத்த சென்டர்லல்லாம் இதுலேர்ந்துதான் கேள்வி கேக்கறாங்களாம்..  எங்கப்பா கேட்டு சொன்னார்.

என்றவாறே, ஒரு பக்கத்தை அகஸ்மாத்தாகப் பிரித்து என்னிடம் காண்பிக்கிறான். அதில் என்னவோ ஆடுபுலி ஆட்டம் மாதிரி கட்டம் கட்டமாகப் போட்டிருந்தது. நான் உன்னிப்பாக கவனிப்பதைப் பார்த்து "என்ன பாக்கறே" என்றான்.

"இல்லை.. மயில் குட்டி போட்டுருக்கு" என்று அதிலிருந்த இரண்டு மயிலிறகுகளைக் காண்பித்தேன். "அரிசி போட்ருந்தியோ" என்று கேட்டேன்.

அவன் என்னிடம் "என்ன.. இவ்வளவு தெனாவெட்டா இருக்க? பாங்கிங்ல எல்லாம் தெரியுமா உனக்கு?"

"ஓ..தெரியுமே" என்றேன்.

"என்ன தெரியும்?"

"பாஸ்புக்.."

"என்னது?"

"ஆமாம்.. எங்கப்பாவும் இதுல ஆஃபீசரா இருந்து ரிட்டையர் ஆனவர். அவர் பாஸ்புக் என்ட்ரி போட என்னைத்தான்  அனுப்புவார்.. நான் போயி எங்கப்பா ஃப்ரெண்ட் சேதுராமலிங்கம் மாமா கிட்ட கொடுத்தா, அவர் திட்டிண்டே என்ட்ரி போட்டுக் கொடுப்பார். எனக்கு அவ்வளவு தான் தெரியும்" என்றேன்.

"இன்டர்வியூல கேட்டா?"

"தெரியாதுன்னு சொல்லிடுவேன்.. எனக்குத் தெரிஞ்சதைத் தானே நான் சொல்ல முடியும்? அவங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் நான் எப்படி சொல்ல முடியும்?

எனக்குத் தெரிஞ்சதை நான் சொல்வேன். அவங்களுக்குத் தெரிஞ்சதை அவங்க சொல்லட்டும். ரொம்ப பேசினாங்கன்னா..மொதல்லே வேலை குடுங்க.. அப்பறம் தெரிஞ்சுக்குறேன்னு சொல்லுவேன்" என்றேன்.

அன்றைய காலைப்பொழுது நேர்காணலில் நானும் குண்டுமணியும் மட்டுமே ஜெயித்திருந்தோம் என்று பிற்பாடு தெரிந்தது. நான் என் முறை முடிந்து வெளியே வரும்போது மத்தியான வேளைக்குத் தயாராக சுவரோரமாக மிரட்சியுடன்  நின்றிருந்த பெண் கனிமொழியாக இருக்கலாம் என்று இருபத்து ஒன்பது வருடங்களுக்குப்பின் இப்போது  தோன்றுகிறது.

முதல் நாள் மதிய உணவு அருகாமையில் இருந்த ஹோட்டலில் சாப்பிட்டோம். நிறைய வாயு பதார்த்தங்கள் உபயோகித்திருந்தார்கள் போலும். வகுப்பறையில் அது நிஜமாகவே எதிரொலித்தது. இது சரியா வராது என்றான் ரவி. எங்கியாவது மடி சமையல் கிடைத்தால் பரவாயில்லை என்றான். அதற்குள், விஷ்ராம் ஒரு செய்தியைக் கொணர்ந்தான். வகுப்பிலிருந்து ஐந்து பத்து நடைக்குள் அவனுக்குத் தெரிந்த தெலுங்கு மாமி சமைத்துப் போடத் தயாராக இருக்கிறார்.  அந்த மாமி, சென்னையில் விஷ்ராம் வீட்டின் பின்வீட்டில் இருப்பவருடைய தூரத்து  சொந்தக்காரர், மதுராந்தகத்தில் இருப்பவர், அவரது முன்வீட்டில் ஜாகை இருப்பவருடைய தூரத்து சொந்தம். ரொம்ப தூரம் பிரயாணப்பட்டு அந்தத் தகவல் கொண்டு வந்திருந்தான் அவன். ஆனால் அவர்கள் சாதாரணப்பட்ட மனிதர்கள். நாலு பேருக்கு சாப்பாடு போடத்தான் இடமும் உபகரணங்களும் உண்டு என்பதால் விஷயத்தைப் படுரகசியமாக நான், விஷ்ராம், ரவி மற்றும் குண்டுமணி வைத்திருந்தோம். மதிய இடைவேளை விட்ட அடுத்த ஏழாவது நிமிடம் நாங்கள் அவர்கள் வீட்டில் இருப்போம். ரவி ஆசாரமானவன் என்பதால் வீட்டிற்குள் நுழைந்த அடுத்த கணம் அவர்கள் மூன்று பெண்கள், இருவர் கைம்பெண்கள், மிகவும் சிரமப்பட்டு தருவித்திருக்கும் ஒரு பக்கெட் தண்ணீரிலும் கைகால் அலம்பிக் கொள்வான். அந்த மாமி விஷ்ராமிடம் வருத்தப்பட, விஷ்ராம் எங்களை அவர்கள் வீட்டு புழக்கடையில் கிணற்றிற்கு அழைத்து சென்று காண்பித்தான். அது எவ்வளவோ ஆழம். தண்ணீர் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. ஒரு வாளியை விட்டு நீர் இழுத்து முடிக்க அரைமணி ஆகும்போல் இருந்தது. நல்ல நாளிலேயே விழுப்புரம் தண்ணீருக்குப் பிரசித்தம். கடும் கோடை. நானும் குண்டு மணியும் புரிந்து கொண்டாற்போல் அந்த மாமியைப் பார்த்து வருத்தமாகப் புன்னகைத்தோம். ரவி மட்டும் அவரைப் பார்த்து, " மாமி.. ஒரு சந்தேகம்.. நீங்க தண்ணி இழுத்துண்டே இருக்கும் போது கயிறு அறுந்து பக்கெட் கிணத்துக்குள்ள விழுந்துட்டா என்ன பண்ணுவீங்க" என்றான். எங்களுக்கு தர்ம சங்கடமாகி விட்டது. நான் சுதாரித்து, பக்கெட்டைத் திரும்ப எடுக்க மாட்டார்கள். திரும்ப எடுப்பதற்கான செலவு பக்கெட் செலவை விட அதிகமாக ஆகும் என்பதால் வேறு பக்கெட் வாங்கிக் கொள்வார்கள்" என்றேன்.

அவன் விடவில்லை.

"பக்கெட்னா ஓக்கே.. யாராவது ஆளு, ஃபார் எக்ஸாம்ப்பிள், இந்த மாமியே விழுந்துட்டாங்கன்னா" என்று கிடுக்கிப்பிடி போட்டான்.

விஷ்ராம் தலையில் அடித்துக் கொண்டான்.

நானும் விடாமல், "அது விழற ஆளைப் பொருத்தது.. பொதுவா கஷ்டப்பட்டு தூக்கிடுவாங்க.. உன்னை மாதிரி யாராவது விழுந்தா அப்படியே உட்ருவாங்க" என்றேன்..

"காதை வெச்சு கேளு.. யாரோ முனகற சத்தம் கூட கேக்கறது பாரு" என்றான் குண்டுமணி.

ஐயையோ என்று பொய் பயத்துடன் உள்ளே வந்தான் ரவி.

எங்கள் நால்வருக்கும் எப்போதும் வாழையிலைச் சருகில்தான் உணவு பரிமாறப்படும். ரவி முதலில் ஆட்சேபித்தாலும் மற்ற மூவரும் ஒப்புக் கொண்டதால் அடங்கிப் போனான். அன்று, கத்தரிக்காய் பொரியல் செய்திருந்தார் மாமி. நான், ரவி, விஷ்ராம் மூவரும் கத்தரிக்காய் சாப்பிட மாட்டோம். மாமிக்கு மனம் தாளவில்லை. கத்தரிக்காய் ஏன் சாப்பிடுவதில்லை என்று என்னிடம் கேட்டார். நான் "கத்தரிக்காய் சாம்பாரில் மீன் மாதிரியும் கறியில் அட்டைப்பூச்சி மாதிரி இருப்பதால்" சாப்பிடுவதில்லை என்றேன்.

பொரியலை இரண்டு கை அள்ளி மென்று கொண்டு இருந்த குண்டு மணிக்கு குமட்டிக் கொண்டு வந்து விட்டது. உங்களுக்குப் பிடிக்கலேன்னா வாயமூடிண்டு இருக்க வேண்டியது தானே..சாப்டறவனையும் சாப்பிடவிடாம.. கண்றாவி" என்று அன்றோடு கத்தரிக்காயை விட்டு விட்டான்.

ரவி தன் பங்குக்கு வாழைக்காய், உருளைக் கிழங்கு பொடிமாஸ் மாதிரி விதம் விதமாக செய்யச் சொல்ல, மாமி பெருந்தன்மையாக சரி என்று ஒப்புக் கொண்டார். நானும் விஷ்ராமும் மனம் கேட்காமல் ரவி கை அலம்பும் சமயம் மாமியிடம் வேண்டாமென்று சொல்லிவிட்டு வந்தோம். குண்டு மணி ரவியை சமாளிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.

அதற்கடுத்த நாள் மாமியும் அவரது தங்கையும் நாங்கள் சாப்பிட்டு வெளிவரும்போது வாசல் வரை வந்தனர். எங்களிடம் எதிர் வீட்டைக் காண்பித்து, அதுதான் மஹாபெரியவர் அவதரித்த  வீடு என்று கூற நாங்கள் ஓ வென்று அதிசயமாகக் கேட்டுக் கொண்டோம். தங்கை மாமி தன் பங்குக்கு, அதுக்கு அடுத்த வீட்ல தான் உங்களோட training வந்துருக்கற நாலஞ்சு பொண்ணுங்க தங்கியிருக்கா" என்றதும் நாங்கள் நால்வரும் சரேலென்று திரும்பி மகாபெரியவர் வீட்டை மட்டும்  கூர்ந்து கவனித்து கன்னத்தில் போட்டுக் கொண்டோம்.

நான் மாமியிடம் நாலஞ்சு பேர்ல சின்னதா ஒரு குட்டிப் பொண்ணு கூட இருக்குமே என்று கேட்டேன். அதற்கு அவர், "ஆமாம்.. ரொம்ப சின்ன வயசுலயே இப்பல்லாம் வேலைக்கு வந்துடறா" என்று கூறினார். அவங்க எல்லாரும் கூட இங்கதான் ஒருவேளை சாப்பிடறா" என்றதும் நாங்கள் துரிதமாக அவ்விடத்தை விட்டு அகன்றோம்.

அடுத்த நாள் காலை. வகுப்பு ஆரம்பிக்க சற்று நேரத்திற்கு முன், அந்த சின்னப் பெண்ணை தினமும் அழைத்து வரும் பெரிய பெண் எங்களை நோக்கி வந்தார். எங்கள் முன் வரிசையில் யாரோடோ வம்படித்துக் கொண்டு இருந்த குமுதனிடம் (இவன்தான் முதல் நாள் தாமதமாக வந்து தூணைப்பிளந்து வெளியே வந்தவன்) எங்களைக் காட்டி ஏதோ கேட்டாள். அவன் திரும்பி என்னைக் குறிப்பாகக் காட்டிவிட்டான். அந்த மாதுசிரோமணி என்னைக் குறி வைத்து அருகில் வர, எனக்கு சப்த நாடியும் அடங்கி விட்டது. நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டு நகர மறுக்க, மூக்கு துவாரங்களில் அனலாக மூச்சுக்காற்று வெளிவர ஆரம்பித்தது. ஏதோ ரசாபாசம் ஆகப் போகிறது என்று ரவியை இறுகப் பிடித்துக் கொண்டேன்.

அந்தப் பெண் நேராக என்னிடம் வந்து "நீ தான் கணேசனா" என்றாள். நான் இல்லை என்று சொல்வதற்குள் விஷ்ராம் அவசர அவசரமாக முந்திக் கொண்டு, இவனே தான்.. இவனே தான் என்றான்.

இப்போது அவள் நேராக என்னிடம், "என்ன திமிரா உனக்கு" என்று கேட்டாள்.

அதற்கு ரவி, "என்னங்க இப்படி கேக்கறீங்க.. இவனப் போயி திமிரான்னு கேக்கறீங்க? கையெல்லாம் எப்படி தடதடன்னு ஆடுது.. இவனப் போயி இப்படி கேட்டுட்டீங்களே?"

நான் "அதானே" என்றேன் ஈனஸ்வரத்தில்.

"என்ன அதானே.. நேத்திக்கு சாப்பாட்டு மாமிக்கிட்டே போயி சின்னப் பொண்ணுன்னு சொன்னியாமே"

"ஐயையோ.. நான் அவங்களை சொல்லலீங்க"

"அவங்களை வேற சொல்லுவியா"

குரல் தாட்டியாக உயர்ந்தது.

எல்லோரும் என்னையே பார்ப்பது போல் ஒரு பிரமை.

"நான் உங்களையும் சொல்லீங்க மேடம்.. உங்க கூட வந்த பொண்ணு தான் ரொம்ப குட்டிப் பொண்ணு மாதிரி இருக்குன்னேன்"

"அவ யாரா இருந்தா உனக்கென்ன?"

"நானா சொல்லீங்க.. இவன்தான் கேட்டான்" என்று ரவியைக் காட்ட, அவன் என்னை ஒரே உதறலாக உதறி "பல்லை உடைப்பேன்" என்றான். நான் சுதாரித்து இவன்னா இவனில்லை.. எங்களோட இருந்தானே இன்னொருத்தன்.. அவன்தான் மேடம் காரணம்" என்றேன். நல்ல வேளையாக அவன் அதுவரைக்கும் கண்ணில் தென்படவில்லை.

அந்த அம்மணி என்னிடம் சுட்டு விரலைக் காட்டி, "போனாப்போறதுன்னு விடறேன்.. இன்னொரு தடவை இப்பிடி ஏதாவது பேசினியோ.. மாயா யாருன்னு காட்ட வேண்டியிருக்கும்" என்றாள்

நான் பலகீனமாக "மாயா யாரு மேடம்" என்றேன்.

"நான்தான்" என்றாள்

அதற்குள், விஷ்ராம் அவளிடம் "நீங்க முத்துலட்சுமி இல்லையோ" என்றான்

எனக்கு மாயான்னு இன்னொரு பேரு இருக்கு.. நான் வினிதாவோட அத்தை" என்றாள்

"ஓ"

விஷ்ராம் அவளிடம் "உங்க எல்லோருக்குமே ரெண்டு ரெண்டு பேரு இருக்கா"

"அவசியம் தெரிஞ்சுக்கணுமா"

"இல்ல.. வெறும் ஜெனரல் நாலட்ஜூக்காகத்தான்.. ஆமாம்.. வெறுமனே பேசிட்டு போறீங்க.. வந்த வேகத்துக்கு கை மிஞ்சுவீங்களோன்னு எதிர்பார்த்தோம்" என்றான் ஏமாற்றத்துடன்..

"அது ஒருநாளைக்கு நடக்கத்தான் போறது" என்று அகன்றார் அந்த மாதரசி..

பதிமூன்றாம் நாள் என்பது பொதுவாக அபரகாரியங்களின் கடைசி தினம். சடங்கு. 92 ட்ரைனிங்கின் கடைசி தினம் உண்மையில் பதிமூன்றாம் நாள். சனிக்கிழமை. அன்றைய தினத்தை valedictory தினமாகக் கொண்டாடுவது என்று குறிப்பிட்ட சில கனவான்கள்/கனவானிகள் தீர்மானம் செய்தனர். சுந்தரி விழாவை ஏற்று நடத்த ஒப்புக் கொண்டார். சுந்தரி என்பவர் ஆழமான நோக்கம் கொண்டவர். விளம்பரப்படுத்திக் கொள்ள விரும்பாத ஆனால் கட்டுக்கோப்பான செயலாக்கம் நிறைந்த செயல்பாட்டினை அவ்விழாவில் நாங்கள் கண்டறிந்தோம்.

அந்த வியாழன் அன்று கவிஸ்ரீயானவன் ஒரு நாடகம் போடலாம் என்று முன்மொழிந்தான்.

அதற்காக அவன் எடுத்துக் கொண்ட சிரத்தை அபரிமிதமானது. அந்த சிறிய வசனங்கள் இல்லாத ஸ்லாப்ஸ்டிக் காமடி நாடகத்தில் கேனத்தனமான பாத்திரங்கள் மாத்திரமே உண்டு. அந்த பாத்திரங்களுக்கு ஏற்ற முகவெட்டு கொண்ட நபர்களை இனம் காண அவன் மிகவும் ப்ரயத்தனப் பட்டான். அவன் அதிகமாக சிரமப்படாமல் கண்டு பிடித்தது என் ஒருவனை மட்டும் தான். நான் அவனது எந்தவொரு கதாபாத்திரத்திற்கும் ஒத்துப் போகிற முகவெட்டு கொண்டிருப்பதாக அவன் என்னிடமே சொன்னான். முதல் ரவுண்டில் ஓரிருவரைக் கண்டு பிடித்து, ஓரிடத்தில் அமர்த்தி மிக அழகாக அந்த நாடகத்தின் கதையை வர்ணித்தான். முழுவதும் கேட்டு முடிப்பதற்குள்ளேயே, நான் அது ஏழு வருடங்களுக்கு முன் இந்தியாவின் ஒரே தொலைக்காட்சியில் முதல்முறையாக, வருடாந்திர ஸ்டார்நைட் நிகழ்ச்சியில், பிரபு, ஒரு விரல் கிருஷ்ணா ராவ் பங்கு கொண்ட திருடன் போலீஸ் நாடகமல்லவா இது என்று சொன்னேன். அவனும் ஒப்புக் கொண்டு இதைத்தான் போடப் போகிறோம் என்று சொன்னான்.

எனக்கு அதில் சில தயக்கங்கள் இருந்தன. முக்கால் வாசிப்பேர் சென்னையிலிருந்து வந்திருப்பவர்கள். அநேகமாக அனைவருமே அந்த நாடகத்தைப் பார்த்திருப்பர். நாம் ரிப்பீட் செய்கிறோம் என்று கிண்டல் செய்வார்கள் என்று கூறி மறுதலித்து விட்டேன். ஆச்சரியமாக நாடகம் அமோகமாகப் போனது. என் ஜட்ஜ்மென்ட் பொய்த்ததில் பெரிய அதிர்ச்சி. பின்புதான் உண்மை புரிபட்டது. நாடகம் டீவியில் வந்த போது பெரும்பாலான 92க்கள் பச்சிளம் குழந்தைகள். நாடகத்தைப் பார்த்திருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பது.

இந்த நாடகத்தில் திருடனாக நடித்த பாகவதர் கிராப்பு வைத்திருந்த சின்னப்பா அப்புறம் வேறு நல்ல வேலைக்குப் போய் விட்டான். பின்னாட்களில் ஒருவன் தன் பெயரைக் கொண்ட ஒருவன் பாகவதர் கிராப்புடன் அலைவான் என்பதை உத்தேசித்து தான் நாற்பத்தொன்பது வயதில் பி.யூ. சின்னப்பா இறந்து போனது.

இதே நாடகத்தில் அதே திருடனாக இரண்டு வருடங்கள் கழித்து நான் பாண்டியில் நடைபெற்ற ஒரு கலைவிழாவிலும், அதற்கப்புறம் வருடாவருடம் நடைபெறும் Founding Day ல் தவறாமல் இடம் பெற்ற இதே நாடகத்தில் துணை நடிகர் அந்தஸ்து பெற்றிருந்த நான் ஏதோவொரு நண்பனாகவும் இடம்பெற்றது சரித்திரக் குழப்பங்களில் சில.

இதற்கிடையே வேறொரு அநியாயம் நடந்து விட்டது.  புதன்கிழமை எங்களுக்கெல்லாம் Postings தந்து விட்டார்கள். எனக்கு பெரிய ஆச்சரியம் இல்லை. என் தந்தையிடம் பணியாற்றிய ஒரு விசுவாசி திருச்சி மண்டல அலுவலகத்தில் இருந்தார். வியாபகஸ்தர். அப்பா அவரிடம் சொல்லி சென்னைக்கு அருகாமையில் திண்டிவனம் மாதிரி ஒரு இடத்தில் போட்டால் நல்லது என்று சொல்ல, எனக்கு திண்டிவனமே போட்டு விட்டார் அவர். தகவலை வீட்டிற்கு வெளிப்படுத்த தொலைபேசி வைத்துக் கொள்கிற அளவுக்கு வசதியில்லாத நாங்கள் சிலபேர் தந்தி அலுவலகம் சென்றோம். நான், விஷ்ராம், ரவி, குண்டுமணி இன்னும் ஓரிருவர். குண்டுமணி என்னிடம் பரவாயில்லையே.. திண்டிவனமே வாங்கிட்டியே என்றான். எனக்குப் பெருமை பிடிபடவில்லை. எனக்குக் கொடுக்கலைன்னா யாருக்குக் கொடுப்பாங்க என்று சவடால் விட்டுக் கொண்டே வந்தேன். மனசு நிறைய சந்தோஷம். என்னமோ சென்னையிலேயே கிடைத்துவிட்ட மாதிரி.

மறுநாள் காலை நன்றாகத்தான் விடிந்தது.

பன்னிரண்டு மணியளவில் கி.மூ. என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். உள்ளூர நடுக்கத்துடன் போனால் அவர் படு சீரியஸாக யாருடனோ தொலைபேசிக் கொண்டு இருந்தார். கிட்டத்தட்ட இருபது நிமிடம். பிறகு, என்னை நிமிர்ந்து பார்த்து என்ன விஷயம் என்றார். நான் இன்னார் என்று சொல்லி அவர்தான் என்னைக் கூப்பிட்டது என்று கூற, அதற்குள் அவருக்கு மறந்து விட்டது. நெற்றியை தட்டிதட்டிப் பார்த்தும் நினைவு வராததால் திருப்பி அனுப்பி விட்டார். எனக்கு என்னவோ விபரீதமாக நடக்கப் போகிறது என்று குறக்களி கத்தியது. அரைமணி கழித்து மறுபடியும் அழைப்பு.

ஏம்பா, நீதான கணேசன்?

ஆமாம் சார்.

பத்து நிமிஷம் முன்னாடி வந்தப்போ சொல்ல வேண்டியது தானே?

சொன்னேன் சார்.

"என்னத்தை சொன்ன? சொன்னா மட்டும்? நீ என்ன P C அலெக்சாண்டரா.. பேரை சொன்னா தெரிஞ்சுக்கறதுக்கு?"

இவர் ஏன் என்னை வீணாக அழைத்து வாய்க்கு வந்த படி பேசுகிறார் என்று தெரியவில்லையே என்று பரிதாபமாக அவரைப் பார்த்தேன்.

"பேந்த..பேந்த.. முழி.. நீயெல்லாம் எப்படித்தான் பாங்க் எக்ஸாம்லாம் பாஸ் பண்ணினியோ?

ப்ராஞ்சுக்குப் போனா என்ன பண்ணுவ? இப்படித்தான் திருக்குபுறுக்குன்னு முழிச்சிண்டு இருப்பியா? முழி இருக்கற லட்சணத்துக்கு மூளை இல்லை"

எனக்கு தொண்டை அடைத்தது. இதென்ன நம்மை மட்டும் கூப்பிட்டு லாடம் கட்டுகிறாரே என்று தோன்றியது.

"ஆமாம்.. உனக்கு போஸ்டிங் எங்க போட்ருக்கு?"

"திண்டிவனம் சார்"

"அது என்னாச்சு.. சென்ட்ரல் ஆஃபீஸ்ல தப்பா அடிச்சுட்டாங்களாம்.. அதுனால அதை cancel பண்ணிட்டாங்க..

அதுக்காக உன்னை ரொம்ப தூரம் போடலை.. அங்கேருந்து கொஞ்ச தூரத்துல பேட்டைன்னு ஒரு ஊரு.. வெள்ளி மேடு பேட்டை.. எங்க சொல்லு"

நான் திருப்பி சொன்னேன்.

"வெரிகுட்.. பாக்கறதுக்கு ரெண்டும் கெட்டான் மாதிரி இருந்தாலும் டக்குனு புடிச்சுக்கற.. வெரிகுட்..

பேட்டை ரூரல் ப்ராஞ்சு.. உன்னைப் பார்த்தா ரூரல் ஃபோக் மாதிரி தான் இருக்கு.. அதுனாலத்தான் மாத்திட்டாங்க..

மெட்ராஸ்ல நல்ல ஸ்கூல்ல படிச்ச பொண்ணுப்பா.. நீயே பாத்துருப்பியே.. வினிதான்னு குட்டியா ஒரு பொண்ணு.. அதைக் கொண்டு ரூரல்ல போட்டா அது என்ன பண்ணும்? நேத்திக்கே நாங்கள்லாம் டிஸ்கஸ் பண்ணோம்.. இன்னிக்கு போட்டுட்டாங்க..

ஒண்ணும் கவலைப்படாத.. நாங்கள்லாம் இருக்கோம்.. என்ன டௌட்டு இருந்தாலும் டக்குனு ஒரு ஃபோனை அடிச்சேன்னா போச்சு..

இப்ப என்ன பண்றே.. நேரா போயி.. க்ளாஸை டிஸ்டர்ப் பண்ணாம அந்த வினிதாவை அனுப்பு பார்க்கலாம்"

நான் கலங்கிய கண்களுடன் வெளியே வந்து, வினிதாவிடம் நேராகப் பேசப் பிடிக்காமல் பக்கத்தில் இருந்த பெண்ணிடம் விஷயத்தை சொல்லி அனுப்பினேன்.

என் காற்றுப் போன முகம் சொல்லாத கதைகளை விசிறி விட்டது. என் அத்யந்த நண்பர்கள் மூவரும், நேத்திக்கு சாயங்காலம் அப்பிடி அல்ட்டினே.. இப்ப பேட்டைல போட்டாங்க" என்று தொடர்ந்து கிண்டல் செய்த வண்ணம் இருந்தார்கள்.

நான் என் தந்தையை எப்படியோ ஃபோனில் பிடித்து விஷயத்தை சொல்ல சுப்புராஜ் இப்படி அநியாயம் பண்ணிட்டானே என்று வருத்தப்பட்டார். உண்மையில், சுப்புராஜ் என்பவர் விஜய் பாஷையில் சொன்னால் அரிவாளுக்கு சாணை பிடிப்பவர். அவர்களுக்குத் தெரிந்தவரோ அரிவாளே செய்கிறவர்.

இது நடக்கும் போதே, நான் கவிஸ்ரீயிடம் நாடகத்திற்கு மறுதலித்ததை எங்கிருந்தோ குண்டுமணி பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறான். அவன் சாதுரியமாக சுந்தரியிடம் சென்று, கணேசன் மேடையில் ப்ரமாதமாக  நகைச்சுவையாகப் பேசுவான், அவனுக்கு ஒரு ஸ்லாட் ஒதுக்க வேண்டும் என்று கூறிவிட்டு வந்து விட்டான். இது எனக்கு  சொல்லப்படவேயில்லை. நல்ல வேளையாக வெள்ளிக்கிழமை வழக்கத்திற்கு மாறாக அரட்டை அடித்து விட்டுத் திரும்பும் போது CAIIB application குழப்ப அமளியில் எதேச்சையாக சுந்தரி என்னைப் பார்த்து மறுநாள் பேச்சுக்குத் தயாரா என்று கேட்டாள்.  யாரோடு என்று கேட்டேன். மறுபடியும் அத்தை மேடம் கூட வலுச்சண்டை போட ஆகிருதி போதாது. சுந்தரி என்னிடம், உன் நையாண்டியை நாளைக்கு மேடையில் வைத்துக் கொள் என்றாள். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. நானாவது பேசுவதாவது.. அதுவும் மேடையில்.

நான் சுந்தரியிடம், எனக்கு மூன்று வயதுவரை பேச்சு வராமல், ஏதேதோ கோயிலுக்கெல்லாம் மணிகட்டித்தான் பேச்சே வந்தது. என்னைப் போய் பேசச் சொன்னால் நான் என்ன செய்ய என்று புலம்பினேன். சுந்தரி அதெல்லாம் தெரியாது, உன் நண்பன் குண்டு மணியின் கடுமையான சிபாரிசால்தான் உன் பெயரைப் போட்டது. வேறு யார் யாரோ பேசத் தயாராக இருந்தார்கள். அவர்களையெல்லாம் ஆட்டத்தில் சேர்க்காமல் விட்டதில் கோபமாக இருக்கிறார்கள். இனிமேல் நான் யாரையும் புதிதாக சேர்க்க முடியாது. நீ தான் பேசணும். பேசுகிறாய் என்று கறாராய்க் கூறிவிட்டு போய்விட்டாள்.

எனக்கு ராத்தூக்கம் போய்விட்டது. சாதாரணமாக உளறுவது வேறு. அர்த்தமாக பேசுவது வேறு. அது என் அகராதியிலேயே கிடையாது. அயோக்கியன் குண்டுமணி கும்பகோண விரோதத்தை நேர்செய்து கொண்டு விட்டான்.

ராப்பூராத் தூக்கமில்லாததால் கண்கள் இரண்டும் பொங்கி சிவந்து இருந்தன. என்னை அறியாமல் பற்கள் கிட்டின. பற்களை இறுகக் கடித்துக் கொண்டால், உடம்பு தடதடவென்று ஆடியது. ஒன்றன் பின் ஒன்றாக பேரிடிகள் விழுந்து கொண்டே இருக்கின்றன. காலை சிற்றுண்டி செல்லவில்லை. குமட்டியது. பயம் உள் தொண்டையில் பாறையாக தண்டு இறங்கி இருந்தது. கீழத் திருவடிக்கோ மேலத் திருவடிக்கோ போட்டிருந்த குப்புசாமி என்கிற குப்புவிற்கும் போஸ்டிங் மாற்றி விட்டார்கள். ஆனால் அவனை நகரத்தில் இருந்து குருக்ஷேத்திரத்திற்கு மாற்றவில்லை. ஒரு குருக்ஷேத்திரத்திலிருந்து இன்னொன்று. என்ன, அவனுக்கு போட்டிருந்த இடத்தில் வனப்பான ஒரு பெண் வேலை செய்து கொண்டிருந்தது. இப்போது எட்டுக்குப் பத்து இருக்கிற ஜோசப்போடு காலந்தள்ளணும்.

நான் வகுப்பறை சென்றபோது தோரணங்கள் அலங்கரிக்க களை கட்டியிருந்தது. ஏற்கெனவே தொளதொளவென்ற என் பான்ட் மாவுமிஷின் ஓடுவது மாதிரி குலுங்கிக் கொண்டிருந்தது. என்ன ப்ரயத்தனம் பண்ணியும் நடுக்கத்தை நிறுத்த முடியவில்லை.

விழாவின் ஆரம்ப அறிகுறிகளாக சுந்தரி மேடையில் தோன்றினார். இந்த நெடுங்கதையின் வில்லியான வினிதாவும், இன்னொரு ஆங்கில முனைவரான ஸ்வர்ணலதாவும் பளீரென்று மேடையில் தோன்றி "ஹிப்..ஹிப்.. ஹூர்ரே.. ஹூர்ரே" என்று காட்டுக் கத்தலாக கத்தினர். முதலில் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றே புரியவில்லை. ஆனால் வகுப்பு முச்சூடும் பதிலுக்கு அலறியது. நானும் என் பங்குக்கு வாயைத் திறந்து திறந்து மூடினேன். மூன்று உபாத்யாயர்களும் ஒரு குமாஸ்தாவும் மிகவும் நெகிழ்ச்சியாகப் பேசினர். வழக்கம் போல நிறைய நேரம் பேசியிருக்கலாம். நல்ல வேளையாக நிகழ்ச்சி நிரலில் கடைசியாக என் பேச்சு இருந்தது. நான் வழக்கமாக நண்பர்களிடம் பேசும் கேனத்தனமான பேச்சுக்கள் கூட வரவில்லை. நான் முற்றிலும் வாயடைத்து இருந்தது எனக்கே அதிசயமாக இருந்தது. யாரோ இரு யுவதிகள் எல்லோருக்கும் தின்பதற்கு ஒரு சமோசாவும் வட்டமாக ஏதோவொன்று கலர்கலராக கேக் மாதிரி ஒன்றையும் கொடுத்தனர். நான் அதை என் வாழ்நாளில் முதல் தடவையாக பார்க்கிறேன். வெட்கத்தை விட்டு அது என்ன என்று ரவியிடம் கேட்டேன். அவன் நான் அவனை வழக்கம் போல கிண்டல் செய்வதாக நினைத்து, நான் இது கஸாட்டான்னு சொன்னாலும் ஏதாவது சொல்லுவ.. ஐஸ்கிரீம்னு சொன்னாலும் ஏதாவது சொல்லுவ.. செம‌ஃபார்ம்ல இருக்க போல" என்றான்.

எனக்கு நிம்மதியாக இருந்தது. பெருத்த சேதாரம் இல்லாமல் அதன் பெயரைத் தெரிந்து கொண்டு விட்டேன்.

ஆனால் ஐஸ்கிரீம் என்றது தான் உதைத்தது. எனகக்குத் தெரிந்து நான் சாப்பிட்டதெல்லாம் குச்சி ஐஸ், சேமியா ஐஸ், பால் ஐஸ், ரொம்ப அபூர்வமாக சிறு டப்பாவில் மரஸ்பூன் போட்டு நக்கித் தின்னும் கப்பைஸ்கிரீம்.

நான் அந்த கஸாட்டாவை கையில் எடுத்துப் பார்த்தேன். கருங்கல் மாதிரி இருந்தது. விஷ்ராம் என்னிடம் "அதைக் கையில் எடுக்காதப்பா.. ப்ளேட்டுல வெச்சு ஸ்பூன் இருக்கு பாரு.. அதால கட்பண்ணி கட்பண்ணி சாப்பிடு" என்றான். அவன் ரவியைப் போலல்லாது என் பவுசை பத்து நாட்களில் ஓரளவுக்கு எடை போட்டிருந்தான்.

அது ஸ்பூனுக்கெல்லாம் மசியாது போலிருந்தது. விழுப்புரத்திற்கு கஸாட்டா ரொம்ப ஓவர் என்று யாரோ சொன்னார்கள். எப்பவோ ஏதோ கல்யாணத்திற்கு ஆர்டருக்கு வந்ததை ஃப்ரீஸரில் ஏழெட்டு மாசம் வைத்திருந்தால், அது செங்கல் மாதிரி இறுகியிருந்தது.

ரவி அதன் மீது தன் வலிமையனைத்தையும் காட்டி தோற்றிருந்தான். முந்தின நாள்தான் நாங்கள் நால்வரும் சிங்காரவேலன் பார்க்கப் போனபோது ஆனந்தாவில் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு எழுந்திருக்கும் போது ரவி தனக்கு தயிர் வடை சாப்பிட்டே தீரவேண்டும் என்று அடம்பிடிக்க, தொலைகிறதே என்று ஆர்டர் செய்தோம். சப்ளையர் கொஞ்சம் சந்தேகமாகவே கொணர்ந்தார். ரவி வெகு உற்சாகமாக இரு கைகளிலும் ஸ்பூன்களை இறுக்கிப் பிடித்து பலம் கொண்ட மட்டும் சாதுவான வடையின் மேல் செருகிவிட்டு, தடாலென்று எழுந்து என்னால சாப்பிட முடியாது அவ்வளவுதான் என்று கூறியவாறே ஹோட்டலை விட்டு வெளியேறி விட்டான். அனாவசியமாக பணத்தை செலுத்தி விட்டு வழிநெடுக விஷ்ராம் அவனிடம் சண்டையிட்டுக் கொண்டே வந்தான். நல்ல வேளையாக டிக்கெட் கிடைத்தது. ஒவ்வொருவராக உட்கார்ந்து கொண்டே வந்தோம். இருக்கை படு கேவலமாக இருந்தது. குண்டுமணி அசால்ட்டாக அமர்ந்தவன் ஐயோ என்று அலறினான். பார்த்தால் ஆளைக் காணும். இருக்கையில் உட்காருமிடம் கழண்டு பொதேல் என்று உள்ளே விழுந்தவனை மீட்டு எடுப்பதற்குள் படம் பாதி முடிந்து விட்டது. தியேட்டரை விட படம் கேவலமாக இருந்தது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது‌‌.

நேற்று தயிர்வடையிடம் தோற்ற ரவி இப்போது கஸாட்டாவிடம் மன்றாடிக் கொண்டு இருக்கிறான். அதற்குள் நான்கு ஸ்பூன்களை உடைத்து விட்டான். அநேகமாக எல்லோருமே சீதாப்பிராட்டி சுயம்வரத்தில் வில்லை ஒடித்தது மாதிரி ஸ்பூன்களை உடைத்து விட்டு உருகட்டுமே என்று பொறுத்துப் பார்க்க தீர்மானித்தனர்.

எனக்கு பொறுமையில்லை. பசி வேறு. நான் கஸாட்டாவை இரு கைகளாலும் பிடித்து பெருச்சாளி தேங்காய் மூடியைத் துருவுவது போலத் துருவினேன். கஸாட்டாவின் பிடி கொஞ்சம் தளர்ந்தது. முதலில் என்னைப் பார்த்து முகம் சுளித்த நவநாகரீக நங்கையர் கூட இப்போது துருவ ஆரம்பித்தனர்.

விழா அடுத்த கட்டத்தை எட்டியது. சண்முகம் என்பவன் பாய்ந்து மைக்கில் ஒரு கவிதை வாசித்தான். கணீரென்ற குரல். அதோடு நிறுத்தாமல் விவேகானந்தர் பற்றி ஒரு சொற்பொழிவு ஆற்றினான். அதில் முத்தாய்ப்பாக நோய் முற்றிய ராமகிருஷ்ணர் காறித்துப்பியதை விவேகானந்தர் கையில் வாங்கி அமிர்தம் என்று உண்டதாகச் சொன்னவுடன் நிறைய பேருக்கு கொறித்துக் கொண்டிருந்த கஸாட்டா திரும்ப வந்து விட்டது. அப்புறம் ஒரு பெண்மணி மன்னாதி மன்னன் படத்தின் "கண்கள் இரண்டும்" பாடலை உருக்கமாகப் பாடினார். மறுபடியும் ஒரு கவிதை. கடல்மன்னன் இம்முறை கவிதை வாசிக்கிறேன் என்று சொன்னவுடன் எல்லோரும் அவசரமாக மிச்சம் மீதியை விழுங்கி திரும்ப முடியாத மாதிரி தண்ணீர் குடித்தனர். அது முடிந்து, நரசிம்மராவ் ஸ்டைலாக மைக் பிடித்து சுற்று முற்றும் பார்த்தான்.

எல்லோருக்கும் அடிவயிற்றில் கிலி.

அற்புதமாக இரு குரல்களில் பாடினான். ஒன்று குழந்தைக் குரல். ஒரிஜினல் பாடலில் தொண்டு கிழவி கிழக்குரலில் குழந்தையாக பாவித்து அலறியதைவிட நன்றாகவே பாடினான்.

எல்லாம் விறுவிறு என்று நடக்க எனக்கு மறுபடியும் கால்கள் நடுங்கவாரம்பித்தன. ஒன்று என்னத்தையாவது கூறிவிட்டு தப்பித்து விடுவது, இல்லை அப்போதுதான் சுடச்சுட சென்னையில் பார்த்த அக்ரஹாரத்தில் கழுதை படத்தை க்ரிட்டிகலாக யாருக்கும் புரியாத படி விமரிசனம் செய்து விடுவது என்று தீர்மானம் செய்தேன்.

அதற்குள் ஒரு சிறு சலசலப்பு. இரண்டு இளைஞர்கள் மேடையை நோக்கி விரைந்தனர். அதில் ஒருவன் தம்பியண்ணன். இன்னொருத்தன் வெற்றிவேல். வெற்றிவேல், பழைய சினிமாக் கொட்டகைகளில் பன், பிஸ்கெட் விற்பவன் தோளில் தூளி கட்டி விற்பது போல ஒரு ஸ்டூலையும் எங்கிருந்தோ பீறாய்ந்து கொண்டு போனான்.

இவர்கள் ஏதோ வித்தை காட்டுவார்கள்.. தம்பியண்ணன் கயிற்றில் நடக்கப் போகிறான் என்று எதிர்பார்த்தால் ஒன்றும் நடக்கவில்லை.

ஸ்டூலை நடுவில் வைத்து வெற்றிவேல் டமக்கு டமக்கு என்று தாளம் போட அதற்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் தம்பியண்ணன் உச்சஸ்தாயியில் "சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே" என்று ஆரம்பித்தான். அப்போதுதான் பாதுகாப்பு இல்லாமல் நெருஞ்சில் காட்டுக்கெல்லாம் போகக்கூடாது என்று அவனுக்குத் தோன்றியிருக்கணும்.

தொண்டையில் நெருஞ்சி முள் குத்திவிட்டது. ஒரு நிலைக்கப்புறம் காற்றுதான் வந்தது. அடுத்த நிமிடம், மௌரியப் பேரரசில் ஒருவனான சந்திரகுப்தன் பாய்ந்து மேடைக்குச் சென்றான். அவன் மைக்கில் தான் கோளாறு என்று தவறுதலாக எண்ணி விட்டான். வகுப்பறையில் புரொஜக்டர், பல்பு, மைக் எது தகறாரு பண்ணினாலும் துரித கதியில் அவன் அங்கே தோன்றி அவைகளை சரி செய்வதை ஒரு தேச சேவையாக செய்து வந்தான். இந்த முறை அவன் முயற்சி தோல்வி அடைந்து விட்டது. கிட்டே போனதும் தான் கோளாறு மைக்கில் இல்லை என்று தெரிந்தது‌.

அதற்குள் மாயா அத்தை தம்பியண்ணனுக்குத் தண்ணீர் புகட்ட,  போன தமிழ் திரும்பி விட்டது.

இது முடிந்ததும் தான் திருடன் போலீஸ். மிக அதிக அளவில் விரும்பிப் பார்க்கப் பட்டது.

எல்லோரும் சிரித்து ஓயும்போது சுந்தரி என்னைப் பார்த்து அடுத்தது நீ என்றாள். எனக்கு உயிரே போய் விட்டது. நான் கடைசியில் என்று கை காட்டினேன். அதற்குள் விஷ்ராம் எழுந்து மேடைக்கு விரைந்தான். அங்கு சென்று தான் சில ஜோக்குகள் கூறப் போவதாகக் கூறி கையில் மடித்து வைத்திருந்தது வெடவெடவென்று ஆட கூடிய வரை ஏற்ற இறக்கத்தோடு படித்து விட்டான். அதற்குள் அவனுக்கு வேர்த்து தொப்பலாக நனைந்து, இறங்குவதற்குள் ஸ்வர்ணலதா மேடையேறி கையில் தயாராக வைத்திருந்த "சில்வர் ப்ரின்ஸ்" ப்ளேடை அவன் தலையில் வைத்து "விஷ்ராம் ஈஸ் அவர் சில்வர் ப்ரின்ஸ்" என்று ராகம் போட்டு பாடினாள்.

இந்த சந்தர்ப்பத்தில் நம்முடைய இரணியகசிபு, மதுரைக் குமுதன் களமிறங்கினான். அவன் மதுரைத் தமிழில் வேகமாகப் பேசியது முதலில் புரியவில்லை. கிட்டே போய்க் கேட்கலாம் என்று நண்பர்கள் அழைத்ததை நான் சுந்தரியிடம் இருந்த பயத்தால் புறக்கணித்தேன். ரவி என்னைக் கேவலமாகப் பார்த்துவிட்டு, விடுவிடென்று முன்னால் சென்று அங்கு படு சீரியஸாக கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீதேவிக்குப் பக்கத்தில் போய் நின்று கொண்டான். இந்த ஸ்ரீதேவி விஷ்ராம் என்பவனின் க்ளாஸ்மேட் என்பது உபரி தகவல்.

குமுதன் அதிவேகமாக கதையளந்து கொண்டிருந்தான். அவன் கதையில் வட்டமான ஒருவருக்கும் சதுரமான ஒருவருக்கும் சண்டை நடக்கிறது. அவர்கள் போடும் மல்யுத்தத்தை குமுதன் நிசமாகவே கழைக்கூத்தாடி போல நிகழ்த்திக் காட்டினான். உடம்பை வளைத்து, திருகி, விரல்களை நீட்டி, நெளித்து.. பிறவிக் கலைஞன் அவன்.

முடிவு ஞாபகம் இருக்கிறது. சதுரம் வெற்றி பெற்று விடும். அது வட்டத்தைப் பார்த்து, நான்தான் புத்திசாலி.. ஏன்னா எனக்கு நாலு மூலை இருக்கு... உனக்கு ஒரு மூலைகூட இல்லியே" என்று கூறி முடிக்க கரகோஷம் விண்ணைப் பிளந்தது. ஒரே விசில்.

இந்த களேபரத்தில் ஸ்ரீதேவியை யாரும் கவனிக்கவில்லை.

அவள் சிரிப்பை அடக்க மாட்டாமல், கேவிக்கேவி சிரித்து, பக்கத்தில் தேமேனென்று நின்றிருந்த ரவி சட்டையெங்கும் ஒரே சாரல் மழை.

அவன் தொப்பலாக நனைந்து விட்ட பின்பு தான் கவனித்திருக்கிறான். அவன் ஒரு ஆசார சீலன். பிஸ்கெட் கூட விண்டுதான் சாப்பிடுவான். அவனுக்குத் தன்னுடைய நிலையைப் பார்த்து உயிரே போய்விட்டது. ஐயையோ என்று அலறினான்.

ஸ்ரீ தேவியைப் பார்த்து, "ஏ லூசு..வாயை மூடிண்டு சிரிக்கிறதுல்ல.. இப்படி சட்டை பூரா எச்சல் துப்பி வச்சிருக்கியே.. இதோட நான் பஸ்ல எப்படி ஊருக்குப் போறது" என்று அலறினான்.

நிஜமாகவே அவன் நிலைமை பரிதாபமாக இருந்தது. விஷ்ராம் ஜாக்கிரதையாக அவனைத் தொட்டு விடாமல், "ரூமுக்குப் போயி குளிச்சிட்டு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணின்டு வா" என்றான்.

அதற்கு ரவி, "அதுக்கு சான்ஸே இல்லே.. ரூமைக் காலி பண்ணிட்டு லக்கேஜ்லாம் எடுத்துண்டு வந்தாச்சு"

நான் மெதுவாக, இதுக்கு தண்ணீல குளிச்சா பத்தாது.. அக்னிப்ரவேசம் பண்ண வேண்டியிருக்கும் என்றேன்.

ரவி என்மீது பாய்வதற்குள், வகுப்பிலேயே வயதான கபாலீஸ்வரன் என்கிற கபாலி சுயமாக எழுதிய பாட்டு ஒன்றைப்பாடவாரம்பித்தார்.

நல்ல பாடல். அவர் வயதுக்கு நன்றாகவே பாடினார். அவரது பாட்டு முடிந்து விட்டால் என் பேச்சு தான். அவர் பாட்டு முடிந்து மறுபடியும் கரகோஷம். நான் புத்திசாலித்தனமாக ஒன்ஸ்மோர் கேட்டேன். அவர் உடனே "எவன்டா ஒன்ஸ்மோர் கேட்டது.. என்று பாடகன் ஒருவன் சரியாகப் பாடும் வரை ஒன்ஸ்மோர் கேட்ட கதையை நீண்ட புராணமாகச் சொல்ல, நான் அந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் நழுவி விட்டேன். வகுப்பறையின் வாசலை அடைந்திருப்பேன்.

"காம்ரேட்" என்று குரல் கேட்டது.

என்னுடைய அவசரம் புரியாமல் அசர்ந்தர்ப்பமாக வழியில் நின்றவனை கொன்று விடலாம் போல ஆத்திரம் பொங்கியது.

ஆனால், அவன் வசீகரமாக இருந்தான். அறிவுஜீவிக்களை அவனிடம் தென்பட்டது. பார்த்த மாத்திரத்தில் அவனை மிகவும் பிடித்து விட்டது. மிகவும் மரியாதையாக என்னிடம் "காம்ரேட்.. ஒரு ஃப்யூ மினிட்ஸ் உங்ககிட்ட பேச அனுமதி கிடைக்குமா?"

அவனுடைய அணுகுமுறையும் அவன் முகத்தின் காந்தியும் பிற்காலத்தில் அவன் பெரிய 'உதார புருஷனாக' வருவான் என்று தோன்றியது. நான் அவனை விடப் பணிவாக, அவன் வேண்டுகோளை நிராகரிப்பதற்கு மன்னிப்பு கோரினேன். அவன் தன்னை ரமேஷ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, என் பெயரைக் கேட்டான். நான் திரும்பிப் பார்த்தேன். பெரியவர் பெரிய சிரிப்புகளின் ஊடே மேடையை விட்டு இறங்கிக் கொண்டிருந்தார். யாரோ என்னைத் தேடுகிறார்கள் என்பது புரிந்தது. நான் துரித கதியில் இயங்கி, உதார புருஷன் கையை உதறி, எனக்கு வெகு அவசரமாக செல்ல வேண்டியிருக்கிறது என்று நகர்ந்தவனை நிறுத்தி, "காம்ரேட். அவசரத்திற்குப் போகும் இடம் இந்தப் பக்கம் இருக்கிறது.. நானும் கூடவே வருகிறேன் வாருங்கள்" என்றான்.

எனக்கு வந்த கோபத்தில் அவனை அடித்திருப்பேன். சந்தர்ப்பம் சரியில்லை. அவனை அப்படியே உதறி கீழே தள்ளி விட்டு, " புண்ணாக்கு.. அர்ஜன்ட்டா போறேங்கறேன்.. போக உடாம, வழிய வேற மறிச்சிண்டு, கூடவும் வர்றேங்கற? மென்டலாயா நீ" என்று அவனுக்கு அளித்திருந்த உதாரபுருஷன் பட்டத்தில் புருஷனைக் கான்சல் செய்து விட்டு படிகளில் தடதடவென்று இறங்கினேன். அதற்குள் ரமேஷ் "பல்லவன்.. பல்லவன்" என்று இன்னொருத்தரைக் கூப்பிட்டான். அந்த பல்லவன் உண்மையில் பல்லவர். காமா பயில்வான் மாதிரி இருந்தவர் மீசையை முறுக்கி விட்டிருந்தார்.  இவரிடம் மாட்டினால் நாம் அதோகதிதான் என்று தப்பி ஓடினேன்.

ஒரு சிறு கணம் தான் பிசகியது. நான் ஓடுவதை சுந்தரி பார்த்து விட்டாள். கணேசா கணேசா என்று கத்துவது காதில் கேட்காத மாதிரி சந்தடியான தெருவில் சடுதியில் மறைந்தேன். எனக்கு நேரிட்ட அவமானத்திற்கு ரமேஷ் தான் காரணம் என்பதை நான் மறக்கவில்லை. அன்று மதியம் உணவு உண்டுவிட்டு பஸ் ஸ்டாண்டு போகும் வழியில் இருக்கும் ஏதோவொரு கோவிலில் எட்டணா செலுத்தி ரமேஷ் என்கிற அயோக்யனுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அவன் பல்லவனிடம் சொன்னது நெஞ்சில் முள்ளாய் உறுத்தியது.

என்ன சொன்னான் அவன்?

"டேய் பல்லவா.. இது எல்லாமே அராத்து கோஷ்டியா இருக்கும் போலருக்கு.. காது கொடுத்தே கேக்க மாட்டேங்கறாங்க".

எங்கள் காவேரி தீரத்தின் பரிபாஷை அராத்து என்பது. சண்டித்தனம் பண்ணுகிற கழிசடைகளை அராத்து என்பார்கள்.

அவனைக் கடவுள் பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டேன்.

கடவுள் அவனை உடனே தண்டிக்கவில்லை. நான்கு மாதங்கள் கழித்து, நாங்கள் நாலைந்து பேர் சங்கரையர் மெஸ்ஸிலிருந்து வந்த போது பெரிய துரை என்கிற தாட்டியான ஆஃபீஸரிடம் மாட்டிக் கொண்டோம். அவர் அப்போது தான் அரைமணி முன்னால் தாகசாந்தி பண்ணிவிட்டு மெஸ்ஸுக்குப் போனவரை மெனக்கெட்டு நிறுத்தி, ரமேஷ் அவரிடம் சாப்பிட்டாச்சா என்று அவசியமில்லாமல் கேட்க, அவர் அவனது கைகளை வலுவாகப் பிடித்துக் கொண்டு, குடும்பம் ஒரு கதம்பம் விசு போல மாற்றி மாற்றி ஒரே கேள்வியைக் கேட்க, அப்போதுதான் அவர் தீர்த்த வாரியில் இருந்து திரும்பி இருக்கிறார் என்று புரிந்ததும். உடனே நாங்கள் எல்லோரும் அவரைப் பார்த்து இளித்துவிட்டு ரமேஷை அவருக்குத் துணையாக நடுரோட்டில் நிறுத்தி விட்டு தலைதெறிக்க ஓடிவிட்டோம்.

மறுநாள் ரமேஷ் மெஸ்ஸுக்கு சாப்பிட வரவில்லை. பெரிய துரை ஒன்றுமே நடக்காத மாதிரி வந்தார். மெஸ் வைத்து நடத்தும் மாமி எங்களிடம் "இந்த பைத்தியம் நேத்திக்கு தண்ணி அடிச்சுட்டு நம்ம ரமேஷைப் போட்டு அடிஅடின்னு அடிச்சிடுத்து தெரியுமோ" என்றாள்.

நேற்று இரவு முள்ளுமுறுக்கு மூட்டையாக நொறுங்கும் சப்தம் கேட்டதன் அர்த்தம் புரிந்தது. தெரிந்திருந்தால் எட்டணாக்குப் பதில் ஒரு ரூபாயாகப் போட்டிருக்கலாம் என்று தோன்றியது.

வகுப்பறையில் இருந்து தலை தெறிக்க ஓடிய நான் வெகுதூரம் ஓடவில்லை. கல்லால் துரத்தப்பட்ட நாய் சற்று தொலைவு சென்று இரைக்க இரைக்க நின்று பார்ப்பது போல் சற்று நேரம் நின்றேன். பின் மெதுவாக அடிமேல் அடிவைத்து கட்டிடத்திற்குள் எட்டிப் பார்த்தேன். அங்கு, கீழ்தளத்தில் ஃபோட்டோ ஷூட் தயாராகி எல்லோரும் அணிவகுத்து நின்றனர். நான் ஒன்றுமே நடக்காத மாதிரி, பின்வரிசையில் ரவிக்கும் விஷ்ராமுக்கும் நடுவில் நின்று கொண்டேன். நான் சப்தமில்லாமல் நிற்பதை சிவராம் ரெட்டி பார்த்து விட்டான். நான் கணேசனுடன் தான் நிற்பேன் என்று அலப்பறை செய்து எனக்கும் விஷ்ராமுக்கும் நடுவில் நின்று கொண்டான். அப்போது, எட்டுக்கு பத்து ஜோசப் எல்லோரையும் மறைக்கிறாற்போல நின்றவனை ஆளாளாளுக்கு விரட்ட, அவன் கடைசி வரிசையில் காலரியிலேயே நிற்கிறேன் என்று நூறு கிலோ எடையுள்ள வலதுகாலை நூறு மைல் வேகத்தில் கடைசிப் படியில் செலுத்தி ஏற, வண்டி குடை சாய்ந்து விட்டது. நரம்பு மாதிரி இருந்தாலும் ரவி எதையோ பிடித்து தபாலிக்கவில்லை. நான் ரவியைப்பிடித்திருந்ததால் என் இடது கால் ஊன்றப்பட்டு தப்பி விட்டேன். விஷ்ராம் விபரீதத்தை ஊகித்து தாண்டிக் குதித்து விட, எனக்காக மேலே ஏறி வந்த ரெட்டிகாருவைக் காணோம். அவன் கீழே புழு போல நெளிந்து கொண்டிருந்தான். நல்ல ஊமைக் காயம் அவனுக்கு.

முதல் நாள் பேட்டை போகும் பஸ். செஞ்சி பஸ் ஸ்டாண்டில் ஏறுகிறேன். சப்தகிரி பஸ்ஸில் சகாயவிலை. காட்டு கும்பல். படியில் அரைகுறையாக நடுவில் நிற்கிறேன். அரை மைல் ப்ரயாணத்தில் ஆறுமுறை நிறுத்தி இறக்கி ஏற்றுகிறான் பஸ்காரன். முந்தின நிறுத்தத்தில் அநேகமாக என் பான்ட்டை உருவிக் கொண்டு போய்விட்டான் ஒருவன். இன்னும் எவ்வளவு தூரம் தெரியவில்லை. பெரப்பேரி பெரப்பேரி என்று பெரிதாகக் கத்துகிறான் உள்ளே ஒருவன். வண்டி சடன் ப்ரேக் போட்டு நிற்கிறது. பெரப்பேரிக்கெல்லாம் ஏன்யா ஏறுறீங்க என்று என்னை மாதிரியே பாதிக்கப் பட்டவன் டிரைவரிடம் சீறுகிறான். நானா ஏத்தினேன்.. பின்னால விசிலடிக்கிறவனைக் கேளு என்கிறார் அவர். எனக்குப் பாதி உயிர் போய் விட்டது. ஒரே புகையிலை, வேர்வை நாற்றம். நட்டநடு பஸ்ஸில் இருந்து சாவதானமாக இறங்குகிறது ஒரு தம்பதி. கிழவி முதலில் புகையிலைச் சாறில் பாதியை என் சட்டையில் உமிழ்ந்து விட்டாள். பின்னால் வந்த கிழவன், தன்னுடைய ஏரோப்ளேன் டயரால் செய்திருந்த செருப்புக் காலால் பலங்கொட்ட மட்டும் என் வலது சுண்டு விரலில் ஏறி இறங்குகிறான். வலியை வைத்துப் பார்த்தால் சுண்டுவிரல் அவன் செருப்போடு போயிருக்க வேண்டும். குனிந்து பார்க்க இயலவில்லை. பெரப்பேரி என்ற பெயரை மனப்பாடம் செய்து கொள்கிறேன். உண்மையிலேயே சுண்டு விரல் விழுந்திருந்தால், யாரையாவது கூட்டிக் கொண்டு வந்து, கிழவனைக் கண்டு பிடித்து விரலை மீட்டு விட முடியும். என்னை அறியாமல் கண்கள் நீரைச் சொறிகின்றன. இதற்கெல்லாம் யார் காரணம் என்று நினைத்துப் பார்க்கிறேன். அந்த சிறு பெண். அந்தப் பெண்ணை நினைத்ததும் என்முகம் நம்பியார் முகம் போல் மாறுகிறது. உடம்பின் ரத்த நாளங்கள் எல்லாம் அந்தப் பெண்ணை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று கட்டளையிடுகின்றன.

அடுத்த மூன்று வருடங்களுக்குள் அந்தப் பெண்ணை என்னால் பழிவாங்க முடிந்தது.  அந்த பெண்ணையே கல்யாணம்  செய்து கொண்டு விட்டேன்.

Monday, May 3, 2021

பொய்த்தேர்வு

 

வீர்பாரத் என்று படு அடாஸான சொஸைட்டி. பூனாவின் அசல் பழைய ப்ரதேசம். ஜூனா மோட்டார் என்றுதான் பெயரே. ஜூனா என்றால் தமிழில் பழைமை. சிந்திகளும் சர்தார்ஜிகளும் மராட்டியர்களை விடவும் அதிகமாக வசித்த ப்ரதேசம். ரயில்கள் விடப்படாத காலகட்டத்தில் கட்டப்பட்ட குதிரைலாயத்தின் வெகு அருகில் வீர்பாரத்.  

நானும் சுப்புவும் பூனா போய் இறங்கியவுடன் கொஞ்சம் அசிரத்தையாக இருந்திருக்கக்  கூடாது.

சுப்புவின் அண்ணன் விஷ்ராந்த்வாடி என்கிற தமிழர்கள் கணிசமாக வாழ்கிற இடத்தில் அழகான வீடுவாங்கி குடியேறியிருந்தார். அதனால் சுப்பு அவர்களுடன் போய் ஒட்டிக் கொண்டான். 

தமிழர்கள் வாழ்கிற என்பது வெறுமனே ஒப்புக்குத் தான். சுப்பு பிறப்பால் மராட்டி. 

நான் நானாபேத் கிளையில் சுப்புவுடன் சென்று சும்மாவாச்சுக்கும் பார்த்து வரப் போனபோது, "சென்டர் சீட்டில்" இருந்தவர் குணசேகரன். சென்டர் சீட் என்பது பழைய பேச்சு வழக்கில் அக்கவுண்டன்ட். நவீனத்தில் உதவி கிளை மேலாளர்.‌ குணசேகரன் தமிழ்க்காரர். பெங்களூர் வாசி.

நான் போனதும்,"வாங்க.. நல்லா இருக்கீங்களா" என்றார். ஹெட் ஆஃபீஸில் இருந்து ஆள் பிடிச்சு பூனா வாங்கிட்டீங்க.. பரவாயில்லை.. மராட்டி தெரியுமா" என்றார்.

"தெரியும் சார்" என்றேன்.

"அட.. எப்படி சார்"

நான் சுப்புவைக் காட்டி, "இவன் மராட்டி சார்.. இவனைத் தெரியும்னு சொன்னேன்" என்பதைக் கேட்டு இடிஇடி என்று சிரிப்பார் என்று நினைத்து, அவர் தலையில் அடித்துக் கொண்டவுடன் ஏமாற்றமாகி விட்டது. 

சுப்பு என்காலை ஆழமாக நசுக்கி, "அடக்கி வாசி" என்றான்.

நான் ஏதோ கெத்தாக சுப்புவை மராட்டி என்று சொல்லி விட்டேனே தவிர, அவன் மராட்டியாக இருக்க வாய்ப்பில்லை என்று பலமுறை நிரூபித்து இருக்கிறான்.

ஒருமுறை லக்ஷ்மி ரோட்டில் ஒரு ஜவுளிக்கடையில் பூனா காட்டன் புடவையை முந்நூற்றைம்பது ரூபாய்க்கு பேரம் பேசியதில் அது வெளிப்பட்டு விட்டது. அதன் அகவிலை முந்நூற்றி இருபத்தைந்து என்று கொட்டை எழுத்தில் மராட்டியில் போட்டிருந்தது. இந்த சம்பாஷணையில் அந்த அழகான சேல்ஸ் கேர்ள், களுக்கென்று பற்கள் தெரிய, நிஜமாகவே வெள்ளரிக்காய் பிளந்தது போல சிரித்தது.

சுப்பு தன் அறியாமையை சுலபமாக புறந்தள்ளி என்னிடம், "அந்தப் பொண்ணு மூஞ்சியப் பாத்தியா" என்று கேட்டான்.

"இல்லை.. நான் புடவை வாங்கறதுலத்தான் சீரியஸா" இருந்தேன்.

"புளுகாத.." என்றான். "அப்பப்ப.. உன் வாயைப் பாத்தேனே.. திறந்தே இருந்தது" என்றான்.

"அடப்போடா"

"அவ புடவை யாருக்குன்னு கேட்டா பாத்தியா"

"ஆமாம்.. நான் எங்கம்மாவுக்குன்னு சொன்னேன்.."

"நானும் அம்மாவுக்குன்னுதான் மராட்டியில் சொன்னேன்.."

"ரொம்ப நீளமா பேசினியே"

"ஆமாம்.. உனக்கு வேணுமானு கேட்டேன்"

"அடப்படுபாவி"

"அவ வெக்கத்தை பாக்கணுமே.."

 "அடப் பாவமே.. நான் தான் தெரியாம உளறிட்டேனா"

"ஆமாண்டா நாயே.. உனக்குக் கல்யாணம் ஆயிடுத்துன்னு சொன்னதோட நிறுத்திக்க வேண்டியதுதானடா.. எனக்கும் ஆயிடுத்துன்னு மெனக்கெட்டு அந்தப் பொண்ணு கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் என்ன?"

"ஒரு பாதுகாப்புக்குத் தான்"

"யாருக்கு?"

"அந்தப் பொண்ணுக்குத் தான்"

அவன் கோபத்திலும் புன்னகைத்தான்.

"அங்கதான் நீ ஒரு தப்பு பண்ணிட்டே"

"என்ன"

"நீ சொன்னவுடனே அவ முகம் அப்படியே மாறிப்போச்சு.. கண்ணுல தண்ணியே வந்துட்டது"

நான் அவனை வெறிக்கப் பார்த்தேன். இவனை திருத்தவாவது தேவதூதன் மறுபடியும் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

குணசேகரன் அப்புறம் என்னுடன் சுமுகமான நல்ல நட்பைத் தொடர்ந்தார்.

நான் பூனாவிற்கு செல்லும் போது குடும்பத்தை அழைத்துச் செல்லவில்லை. ஒரு உறவினர் வீட்டில் தற்காலிகமாகத் தங்கி, வீடு பார்த்துக் கொண்டிருந்தேன். நான் போன சமயம் பார்த்து, ஒட்டுமொத்த நானாபேத் கிளையுமே விருப்ப ஓய்வில் சென்று விட, பதினேழு பேர் இருந்த இடத்தில் ஆறே பேர். அதிலும் இருவர் எக்ஸ்டென்ஷன் கிளைகளுக்கு செல்ல வேண்டியதாகி விட்டது. காலை எட்டரை மணிக்குச் சென்றால் இரவு பதினொன்று பன்னிரண்டு மணியாகிவிடும். சிலநாட்கள் கிளையிலேயே தங்கிவிடுவதும் நடந்ததுண்டு.

இதில் வாடகைக்கு வீடு எங்கிருந்து பிடிப்பது. சாயங்காலங்களில் டீ குடிப்பது போல் எங்கள் தலைவரை டபாய்த்துவிட்டு, புரோக்கர் காண்பிக்கும் அநேக வீடுகளை நானும் குணசேகரும் போய்ப் பார்த்தோம்.

ஒவ்வொரு முறையும் குணசேகர் ஏதாவது சொல்வார்.

ஒருவீட்டைப் பார்த்து விட்டு "பூத்பங்களா" என்றால், இன்னொன்றைப் பார்த்துவிட்டு, "யோவ்.. இத்த மட்டும் நீ ஃபிக்ஸ் பண்ணிட்டு பொண்டாட்டிய இட்டாந்து உடு.. அரைமணில டைவர்ஸ் ஆயிடும்" என்பார்.

நாட்கள் கழிந்து விட்டன.‌ எங்களுக்குக் கிடைக்கும் சொல்ப வாடகைப் பணத்தில் வீடு தேடுவது இயலாது என்றே தோன்றியது. அடுத்த நாள் நான் சென்னைக்குக் கிளம்ப வேண்டும். படாதபாடு பட்டு எட்டு நாட்கள் லீவு வாங்கியிருந்தேன். 

அப்போது எதேச்சையாக நான் படும் பாட்டைக் கண்ட ஒரு வாடிக்கையாளர் காட்டியதுதான் வீர்பாரத்.

அதை வீடு என்று சொல்ல முடியாது. மூன்று பெட்ரூம் அபார்ட்மெண்ட் என்றாலும், அதை அவர்கள், பெரிய அளவில், புத்தக வியாபாரம் செய்பவர்கள், விற்காத நாட்பட்ட புத்தகங்களை எறிந்து போடும் குடோனாகத்தான் வைத்திருந்தார்கள். நான் ஒப்புக் கொண்டவுடன், நான்கைந்து ஆட்களை விட்டு, ஆங்காங்கே சிதறிக் கிடந்த புத்தகங்களை, அள்ளி, அந்த வீட்டின் ப்ரம்மாண்டமான ஹாலில் திணித்து பூட்டி விட்டார்கள்.
ஹாலை எப்படி பூட்ட முடியும் என்று கேட்டால் அது அப்படித்தான். என் கற்பனையைக் கடந்த சாத்தியம் அது. நாங்கள் ஹால் பூட்டப்பட்ட வித்தியாசமான அந்த வீட்டில் தான் வசித்தோம். இத்தனைக்கும், வாடகை என் சக்திக்கு மிகவும் மீறியது.

இதற்கப்புறம், மாற்றல் கிடைக்காமல் அல்லல்பட்ட‌ என் மனைவி, அவள் கோபம், வீட்டின் கேவலமான நிலை கண்டு வெகுண்ட என் பெற்றோர் என்று மெதுவாக மெதுவாக என்மீது வன்முறை வெடித்தது. அதை வேறொரு புத்தகமாக எழுதலாம்.

இந்த சந்தர்ப்பத்தில் என்னுடைய சென்னை நண்பர் ஒருவர், ஆந்திரா வங்கியில் அதிகாரி, பூனாவில் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்து அவரைப் போய்ப் பார்த்தேன். அவர் மிகவும் சந்தோஷப்பட்டு, என் வீட்டிற்கு வந்தவர், என்னையும் மனைவியையும் அவர் வீட்டிற்கு அழைத்தார்.
நான் என் மணிக்கட்டு அளவே இருந்த  ஸ்கூட்டியில் மனைவியையும் மகளையும் இருத்தி அவர்கள் வீட்டிற்கு சென்றோம்.

அவர்கள் அபார்ட்மெண்ட் பூனாவின் புகழ்பெற்ற NIBMக்கு வெகு அருகில் இருந்தது. அதன் சுற்றுச் சூழலின் அழகு சொல்லி மாளாது. என் மனைவியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. இந்த மாதிரி இடங்களையெல்லாம் பார்க்காமல், அரதப் பழசாக, ஒரு குதிரை லாயத்தில் அவர்களை அடைத்து வைத்த கொடுமையை அவள் மன்னிப்பதாக இல்லை. வேறு வழியில்லாமல் கோண்ட்வா, சாளுங்கி விஹார், மார்க்கெட் யார்ட், லுல்லா நகர் (பிரபல தமிழ் நடிகை L விஜயலட்சுமி இந்தப் பகுதியை சார்ந்தவர்), ஃபாத்திமா நகர் என்று அலசி கடைசியில் ஃபாத்திமா நகருக்கும் சாளுங்கி விகாருக்கும் இடைப்பட்ட வானோரியில் கட்டிமுடிக்கப்பட்டு, விற்காமல் இருந்த ஒரு அபார்ட்மெண்ட் கிடைத்தது. அதைக்கொண்டு காட்டியவன், நாங்கள் வீடு வாடகைக்குத் தேடுகிறோம் என்று அறியாமல், வாங்கப் போகிறோம் என்று தவறுதலாக நினைத்திருந்தான்.

அப்போது தான் எங்களுக்கும் அந்த எண்ணம் உதித்தது. நான் மாதவாடகையாக செலுத்திக் கொண்டு இருக்கும் பணத்தை விட வெறும் ஆயிரம் ரூபாய் அதிகம் செலுத்தினால், என் வீட்டுக் கடனின் தவணைக்கு ஆகும் போல இருந்ததில், மிகத் துரிதமாக செயல்பட்டு அந்த வீட்டை வாங்கி, அடுத்த பத்து நாட்களில் குடிபுகுந்தோம்.

(முதல் பாகம் முற்றும்)

(2)

வானோரி வீட்டில் எங்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. எங்கள் தளத்தில் ஆறு அபார்ட்மெண்ட்டுகள். அதில், எங்களது இடதுகைப் பக்கத்தில் இருந்து நான்காவது. வலது கைப் பக்கத்தில் இருந்து மூன்றாவது. அதில் இரண்டாவது வீடு, ராம்ஜி உடையது. தமிழ்க்க்க்க்க்காரரரரர். முதல் வீடு மலையாளம். சுப்பு போன்றவர்கள் எதிர்பார்க்கும் மலையாள சங்கதிகள் இல்லாத வயதான தம்பதியர் வசித்த வீடு.

நாங்கள் நான்காவது மாடி. ஐந்தாவது மாடியில் ஒரு தமிழ்க் குடும்பமும், ஆறாவது மாடியில் இன்னொரு தமிழ்/பாலக்காட்டுக் குடும்பமும். நாங்கள் D block. C ல் ஒரு தமிழ்க் குடும்பமும், Aல் இன்னொரு தமிழ்க் குடும்பமும் இருந்தன. மொத்தத்தில் ஆறு குடும்பங்கள், நூற்றி நான்கு அபார்ட்மெண்ட்களில். பெரும்பாலும் பஞ்சாப், மீரட் ஆசாமிகளும், மலையாளிகளும், ஓரிரு கன்னடக் குடும்பங்களும். ஆச்சரியமாக மராட்டியர்கள் குறைவு.

சொசைட்டி ஃபார்மேஷன் என்பது பணக்கார வீட்டுக் கல்யாணம் போல ஆகவேண்டியது, பில்டரின் சாதுரியத்தினால் காதும் காதும் வைத்தது போல் நடந்து விட்டது. அதற்கான காரணமாக மூன்றாவது மாடி ப்ரிட்டோவை ராம்ஜியும், ராம்ஜியை எங்கள் பக்கத்து வீட்டு மங்களாவும் குறை கூறினர். ப்ரிட்டோ யாரையும் குறை கூறவில்லை. அவர் கோவாவில் பிறந்த ஆங்கிலோ இந்தியர். நடை உடைகளில், மிக அழகான ஆங்கிலத்தில், ஆங்கிலேயனாகவே நடந்து கொண்டவர். அவர் ராம்ஜிக்கு அவசியமில்லாமல் முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை. ஆனால், ராம்ஜி அதை ஊகித்தவராக தாமாகவே களத்தில் இறங்கி கலவரத்திற்கு காரணகர்த்தாவானார்.

கடுமையான வாக்குவாதங்கள், வாதப்ரதிவாதங்கள்.. கைகலப்பு ஆகவில்லை. தனிமையில் ஆகியிருக்கலாம். வெளியில் தெரியவில்லை. சிவப்பு நிற ப்ளாஸ்டிக் நாற்காலிகள், டெரஸ் கார்டன் என்று பில்டர் பொதுவான  ப்ரதேசத்தைக் கபளீகரம் செய்து பார்க்கிங் அமைத்து, காசு பார்த்து, அதன் கூரையில் நாலைந்து பட்டன் ரோஸ், வாடாமல்லி பயிரிட்டு, திப்பிதிப்பியாக மணல்பரப்பி, புல்நட்டு, மூன்றாவது நாளே காய்ந்து போய் விட்டது.

ஈரானி என்கிற குத்துச்சண்டை வீரனைப்போல் புஜங்களும், அவைகளில் குழந்தைகள் பயப்படுவது போல் சீன ட்ராகன் உருவங்களைப் பச்சை குத்திக் கொண்டு அலைகிறவன், உண்மையில் கன்டோன்மென்ட்டில் ஐஸ்கிரீம் கடை வைத்திருந்தான்.‌ பார்ஸி. ஈரானியும் அவன் சகாக்கள் இரண்டு பேரும் நிறைய எகிறினார்கள். ஆனாலும், ப்ரிட்டோ அவர்களை M G ரோடு அழைத்துப்போய் மாட்டு வறுவலும் உறிஞ்ச திராவகமும் வாங்கிக் கொடுத்து சரிக்கட்டி விட்டதாக ராம்ஜி புகாரினார். 

அந்த முக்கியமான நிகழ்வுக்கு ராம்ஜியும் போனார் என்று மங்களாவின் கஜின், B blockல் இருக்கும் இன்னொரு மங்களா ரகசியமாக என்னிடம் கூறினார். ராம்ஜியை தமிழன் என்ற வகையில் நான் அறிவேன் என்பது அவருக்கும் தெரியும். மாட்டு வறுவலுக்குப் பதிலாக ராம்ஜி கூடுதல் பணம் கேட்டது அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

நூற்று சொச்சம் பேரும் கலந்து கொள்ளவில்லை. ஐம்பது பேர் வந்திருந்தால் அதிகம். இத்தனை சண்டையிலும் ஒருத்தர் கர்மசிரத்தையாகப் பெயர் எழுதிய நோட்டுப் புத்தகம் கொணர்ந்து அச்சுபிசகாமல் கையெழுத்து வாங்கி சென்றார்.

வந்திருந்த ஐம்பதில் கிட்டத்தட்ட பத்து பேர் வீட்டு உரிமையாளர்கள் இல்லை என்பது ஒரு வயசான தாத்தா சும்மா இல்லாமல் எடக்கு மடக்காகக் கேள்வி கேட்டு மாட்டிக் கொண்டு, அது வேறு ஒரு திக்கில் களேபரம். முடிவாக ஒன்றும் ஆகவில்லை.

ராம்ஜி மட்டும் எங்கள் வீட்டில் சுவாதீனமாக நுழைந்து, என்னை என் மனைவி முன், நான் வாயைத் திறக்காமல் தொடைநடுங்கியாக நின்று கொண்டு இருந்ததை நக்கலாக சொல்லிவிட்டுப் போனார். 

அவர் போனதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு, நான் மெதுவாக இவர் பெரிய புடுங்கி மாதிரி பேசி ஆளாளுக்குத் திட்டினாங்க என்று கூறி முடிப்பதற்குள் திரும்பி வந்து, நான் சொன்னதை கேட்காத மாதிரி நடித்ததை நான் கண்டுபிடித்து விட்டேன். 

அடுத்த அரைமணி எங்களை டிவி கூட பார்க்க விடாமல், ஒரு காப்பியையும் வாங்கி, நொட்டை சொல்லிக் கொண்டே, மடக்கு மடக்கு என்று குடித்துவிட்டு, அடுத்த கூட்டத்திற்குள் என்னை வீரசிவாஜி ஆக்குவதாக சபதம் செய்து விட்டுப் போனார். 

நாங்கள் பெருமூச்சு விட்டு முடிப்பதற்குள் மங்களா உள்ளே நுழைந்து அரைமணி. காப்பி.  மடக்கு மடக்கு. சாராம்சம் ப்ருட்டோ திருடன். ராம்ஜி கொள்ளைக்காரன்.

கூடிய விரைவில் நாங்கள் வெகுவாகக் களைத்து விட்டோம். நாங்கள் ப்ரத்யேகமாக சென்னையில் இருந்து தருவித்த காப்பிப்பொடி அதற்குள் தீர்ந்து விட்டது வேறு கவலையைத் தந்தது.

நல்ல வேளையாக ஓரிரு பெரிய மனிதர்கள் கூடி, தேர்தல் வைத்து விடலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

தன் அழகான பேச்சு வன்மையால் ப்ருட்டோ ஜெயித்து விட்டார். ஈரானி இம்முறை அவருக்குத் தோள் கொடுத்தான். 

ராம்ஜி தன்னை "தொல்லை தரும் மதராசி" என்று மெட்ராஸ் காரங்களே கவிழ்த்து விட்டதாக நெடுநாள் புலம்பிக் கொண்டு இருந்தார். அவர் என்னைத்தான் சந்தேகப் படுகிறாரோ என்று கூட எண்ணினேன். இந்த புலம்பலை அவர் மற்ற நான்கு வீடுகளில் நிகழ்த்துவதில்லை. ஒவ்வொரு புலம்பலும் நீண்டு, சுஜா காப்பி டம்ளரை நீட்டியதும் அடங்கி விடும். ஒரு பரிசோதனை முயற்சியாக, அவர் ஒருநாள், புலம்புவதற்காக எங்கள் வீட்டிற்குள் வந்தவுடனேயே காப்பியைக் கொடுத்தவுடன், அவர் அதை அவசரமாக வாங்கிக் குடித்து விட்டு புலம்பாமலேயே சென்று விட்டார்.

ஒருமுறை நான் மங்களாவிடம், அவர் ஏன் தேர்தலில் நின்று ப்ரிட்டோவை ஜெயிக்கக் கூடாது என்று உசுப்பி விட்டேன். நீ எனக்கு துணையாக நிற்கிறாயா என்றதும் நான் உணர்ச்சி உந்துதலில் "உம்" என்றுதான் சொல்லியிருப்பேன். என் "உம்" சுஜாவின்‌ "ஊம்" என்ற கர்ஜனைக்குப் பின் தங்கி, நான் மங்களாவிடம் இறைஞ்சுதலாக அவருக்கே என் வாக்கை செலுத்துவதான வாக்குறுதியில் முடிந்தது. அந்த வருடப் போட்டியில் நல்லெண்ண அடிப்படையில் மங்களா ஜெயித்து விட்டார்.

அடுத்த இரண்டாவது வருடத்துத் தேர்தலில் ப்ரிட்டோ ஈரானியனுடன் மறுபடியும் கூட்டு சேர்ந்து நான்கு ஓட்டுக்களில் கெலித்து விட்டார். ஆனால், அவர்களால் தொடரமுடியவில்லை. ஒரு ஊழல் குற்றச்சாட்டு பூதாகாரமாகி, ப்ருட்டோ பதவியிழந்து, மங்களா மறுபடியும் வெற்றி பெற்றார். 

அடுத்த தேர்தல் வந்து விட்டது. மங்களா நன்றாகவே வேலை செய்தார். வெற்றிக்கான சகல நற்சகுனங்களும் தோன்றின. அந்த சமயம் மங்களாவின் தாயார் மரணமடைந்துவிட‌ அவரால் தேர்தல் வேலைகளைக் கவனிக்க முடியவில்லை. 

மீரட்டில் இருக்கும் அவரது பிதுரார்ஜித சொத்தில் அவருக்கும் அவரது B block கஜினுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு விட்டது. கிட்டத்தட்ட ஒரே சொத்துக்கு எட்டு சகோதரர்கள் பங்கு கேட்டு அடித்துக் கொண்டனர். 

இந்த சமயத்தில், கஜின் மங்களா தன் B block வீட்டை ராம்ஜியின் அலுவலக நண்பருக்கு விற்றுவிட்டு மீரட் போய்விட்டார். ராம்ஜிக்கு நல்ல கமிஷன் கிடைத்ததில் அவர் உற்சாகமானார். மேலும் ஒன்றிரண்டு வீடுகளை முடித்துக் கொடுத்து நல்ல சில்லறை புழக்கம். 

அடிக்கடி மீரட் போய்வரும் மங்களாவிடம் ராம்ஜி அனுசரணையாக இழையவாரம்பித்தார். அவர் வெளியூரில் பிஸியாக இருக்கும் போது, தேர்தல் வேலைகளைத் தான் முன்னின்று நடத்துவதாகக் கூறினார். அது மட்டுமல்லாது தொடர்ந்து மூன்று தேர்தல்களில் தோல்விகண்ட அனுபவம் அவரிடத்தில் இருந்தது. ஆனால் அதை வெளியில் சொல்லாமல் அவருக்கு எந்நாளும் ஓட்டளிக்கத் தயாராக இருக்கும், தற்போது எட்டாக உயர்ந்திருக்கும் தமிழ்க்குடும்பங்களின் ஓட்டு வேறு கிடைக்கும் என்று ஆசை காட்டினார். இம்முறை ப்ரிட்டோவுடன் மறுபடியும் கூட்டு சேர்ந்துள்ள ஈரானிக்கு நான்கு ஓட்டுக்கள் மட்டுமே உள்ளன என்பதையும், ப்ரிட்டோவின் மீதான ஊழல் பின்புலம் தமக்கு சாதகமாகிவிடும் என்ற அவரது கணக்கு கணக்கிற்கு நன்றாகத்தான் இருந்தது. 

மங்களாவின் தற்போதைய இக்கட்டான சூழ்நிலை அவரை ராம்ஜியின் தூபத்திற்கு இணங்க வைத்தது. துரதிர்ஷ்டவசமாக, ராம்ஜி மீதான வெறுப்பு பூதாகாரமாகி, எழுபது பேர் ப்ரிட்டோவிற்கு ஓட்டளித்து விட்டனர்.

மங்களா மனமொடிந்து விட்டார். தனியாக நின்றிருந்தால் நல்லெண்ண ஓட்டுக்களால் ஜெயித்திருக்கலாம் என்று காலங்கடந்து அவருக்குத் தோன்றியது. 

மீரட்டிலும் அவருக்குப் பின்னடைவு தான். அதனால், தன்னுடைய வீட்டை விலைகூறவாரம்பித்தார். அதே சமயம், ஈரானிக்கும் கொரானாவினால் வியாபாரம் நொடித்து விட்டது. தில்லிக்குப் போய்விடலாம் என்று முடிவெடுத்து விட்டார். அவரது இரண்டு வீடுகளையும் சகாயவிலைக்கு விற்றுவிட்டுக் கடன்களை அடைத்துவிட்டு, புலம் பெயர்ந்து விட்டார்.

மங்களாவின் வீடு விற்கவில்லை. ராம்ஜி விற்க விடவில்லை. 

இதே சமயத்தில் நானும் என்வீட்டை, (சென்னையில்) தெரிந்த ஒருவர் மூலம், அவரது உறவினருக்கு விற்று விட்டேன். அவர் ஒருமுறை என்னிடம் பேசும் போது, இன்னமும் வீட்டிற்குக் குடி போகவில்லை என்றும், interiors வேலை நடப்பதாகவும், ராம்ஜி மாமா, கடுமையான ஒத்தாசை நல்குவதாகவும் கூறினார். ஆஹா.. என்று நினைத்துக் கொண்டேன். 

மங்களா பற்றிக் கேட்டபோது, மங்களா வீடும் தகைந்து விட்டது என்றும், ராம்ஜி மாமா ஹடப்சரில் இருந்து ஒரு தமிழ்க்காரரைப் பிரயத்தினப்பட்டுக் கூட்டிவந்து முடித்து விட்டார் என்று கூறினார். 

"அப்படிப்போடு" என்று மனதில் நினைத்ததை உரக்கக் கூறிவிட்டேன் போலிருக்கிறது.

"என்ன அங்கிள் அப்படி சொல்லிட்டீங்க.. ராம்ஜி மாமாதான் இப்ப சொசைட்டில பாப்புலர்.. ப்ரிட்டோ ஒண்ணுமே பண்றதுல்ல.. 

அவருக்கும் ஸ்ட்ரோக் மாதிரி வந்துடுத்து.. 

போறாததுக்கு, அவர் பையன் க்ளாஸ்மேட்ஸ்லாம் வந்து சொசைட்டில பொண்ணுங்களையெல்லாம் ரொம்ப டீஸ் பண்றாங்க... 

இவரும் யார்யாருக்கோ அன்யூஸ்ட் பார்க்கிங்லாம் ஓனர்ஸ்க்கே தெரியாம டெம்பரரியா அலாட் பண்ணினார்னு ஒரே அலிகேஷன்.. அநேகமாக மறுபடியும் அவரை இம்பீச் பண்ணிடுவாங்க போல..

திஸ் டைம் மங்களா வேற இல்லை.. அதுனால, ராம்ஜி மாமா தான் டெஃப்னட்டா செகரட்டரியாகப் போறார்.. நமக்கும் அதான அங்கிள் வேணும்" என்றார்.

எனக்கு சிரிப்பாக வந்தது. கல்லெடுத்து மாங்காய் அடித்துப் பார்த்திருக்கிறேன். கொத்து கொத்தாய்க் காய்த்துத் தொங்கும் கிளையை கல்லால் அடித்து ஒடித்துப் பார்த்தது இல்லை என்று நினைத்துக் கொண்டேன்.

தோல்வி என்பது தோல்வியும் அல்ல. வெற்றி என்பது வெற்றியும் அல்ல என்பது புரிந்தது.

(முற்றும்)