Sunday, June 7, 2015

ஒரு அயோக்யனின் கதை

ஒரு அயோக்யனின் கதை

முதல் பாகம்

(1) சிட்லபாக்கத்தில் சீரழிந்த காதை



கடைசியில் "அவன் கமலாவையோ, விமலாவையோ திருமணஞ்செய்து கொண்டான்" என்று' ஞ்' போட்டு முடிப்பது என்று சபையில் முடிவாகியது. இந்தக் கதையை மகேஷ், ரொம்பவும் ஸ்டைலாக, கிட்டத்தட்ட சுஜாதா பாணியில் எழுதியிருந்தான். அவன் வெளியேறுகிற பட்சத்தில், சபை கலைந்து விடுகிற அபாயம் நேரிடும். சபை என்பது பொற்சபையோ சிற்சபையோ கிடையாது. நான், மகேஷ் மற்றும் சீனிவாசன் உள்ளடக்கிய மிகவும் சிறிய சபை. 'சிறிய பை' என்று கூட சொல்லலாம்.

இந்தக் கூட்டணி எவ்வாறு உதயமாகியது என்று யோசிக்க முடியவில்லை. நானும் மகேஷும் ஒரே ப்ராயத்தில் வேறு வேறு கல்லூரிகளில் படித்து வந்தோம். ஆனால், சீனி வயதில் மிகவும் பெரியவன். அவன் எவ்வாறு எங்கள் சபையில் இணைந்தான் என்று இன்று வரை புரியவில்லை.

அந்நாளில், சிட்லபாக்கம் ஒரு ப்ராந்தியமாக இருந்தது. வருடத்திற்கு ஒருமுறை வரும் 52D பஸ்ஸில் ப்ராட்வே செல்லும், அவ்வூரின் மண்ணின் மைந்தர்கள், மெட்றாஸ் சென்று வருகிறோம் என்று சொல்வதைக் கேட்க அழுகையாக வரும். அங்கொன்றும் இங்கொன்றுமாக காலனிகள் உருவாகத் தொடங்கியிருந்தன. ஆங்காங்கே வீடுகள். ஒவ்வொரு தெருவும் ஒரு தனிப்பட்ட நகராகக் கருதப்பட்டன. அந்நகர்களில், ஒவ்வொரு நகருக்கும் ஒரு கிரிக்கெட் கோஷ்டியும், அதற்கு ஒரு தலைவனும் உதயமாகியிருந்தார்கள். இவைகளில் சேரமுடியாதவர்கள், சேர்ந்தவுடன் விரட்டியடிக்கப் பட்டவர்கள் என்று ஒரு கூட்டம் உண்டு.

அவைகளில் கொஞ்சம் மிகையாகப் பேசிக்கொண்டு திரிகிற ஒருசிலர் மனநிலை பாதிக்கப் பட்டவர்களாகக் கருதப்பட்டு தெருக்களாகிய நகர்களில் ஒரு மார்க்கமாக திரிந்தனர். என் தெருவுக்கு நானும், சீனிவாச நகருக்கு மகேஷும், பழைய சிட்லபாக்க்கத்தில் சீனிவாசனும், இவ்வகையில் ஒதுக்கி வைக்கப்பட்டுத் திரிந்தவர்கள்.

சீனிவாசனுக்குக் கிரிக்கெட் தெரியாது. புராணகாலத்தில், ஸ்ரீராமனும், ஸ்ரீகிருஷ்ணனும், கிரிக்கெட் விளையாடாததால், அவ்வகை விளையாட்டுக்களைக் கண்ணால் காண்பதும் பாபம் என்பது அவன் கொள்கையாக இருந்தது. எனக்கு கிரிக்கெட் என்றால் உயிர்.

மகேஷ், தன்னை பெர்னார்ட் ஷாவாக பாவித்து, க்ரிக்கெட்டைக் கேவலமாகப் பேசிவிட்டு, சாயங்காலம், வழக்கம் போல, இலக்கியப் பேராய்வுக்காக அவன் வீட்டுக்குப் போனால், ஒரு சிவப்பு நிற லுங்கியை, தொடை தெரிய மடித்துக் கொண்டு, எதிர்த்தாற் போல, காலி க்ரௌண்டில், சாதுவாக விளையாடிக்கொண்டு இருக்கும், சிறுவர்களுக்கு மத்தியில் பாய்ந்து, எவனிடமிருந்தோ மட்டையைப் பிடுங்கிக் கொண்டு, களத்தில் நின்று கொண்டிருப்பான். பொதுவாக அங்கு விளையாடக் கூடியிருக்கும் கூட்டம் எங்களை விடவும் சிறியவர்களாகவும், அசைவம் அறியாதவர்களாகவும் இருப்பார்கள். பல நிறங்களில் வரிகளிடப்பட்டு, ரொம்பவும் பழையதாகிப் போன, ரப்பர் பந்தில், பலகீனமாக, பந்து எறிபவர்களாக இருப்பார்கள்.

மகேஷ் கொஞ்சம் உயரமாக இருப்பான். அவன் கையில் மட்டை மிகவும் சிறியதாக இருக்கும். அதைத் தரையில் தட்டி விளையாட அவன் சற்றே குனிய வேண்டியிருக்கும். மிகவும் கவனத்துடன் அவன் தயாரான தருணத்தில், அவனுக்கு என்று விசேஷமாக வ்யூகம் அமைக்கப் படும். அவனிடம் மட்டையைப் பறிகொடுத்தவன், அருகாமையில், மட்டை பட்டுவிடாத பத்திரத்தில், சில்லி பாயிண்ட்டில் நின்று கொள்வான்.

யார் எங்கே நின்றாலும், சந்துரு, என்கிற ஒரு குண்டுப் பையன், மைதானத்தில், நெருஞ்சி முட்கள் பாவிக்கிடக்கிற, ஈசான மூலையில் நின்று கொள்வான். அவ்விடத்திற்கு போட்டியிராது. அவனிடத்தில் அதற்கென்று விசேஷ காரணம் இருந்தது. விளையாட வரும்போது, கால் நிஜார் நிறைய, வறுத்த கடலையை நிரப்பி வருகிற வழக்கம். ஒவ்வொரு கடலையாக எடுத்து, ரகசியமாக,கன்னங்களை சொறிந்து கொள்வது போல், வாயில் செலுத்தி, ரசித்து சுவைப்பான்.

இப்போது, பந்தை எறிகிற பையன், தன்னை ஏதோ அந்நாளைய அப்துல் காதிராகப் பாவித்து, உடம்பை அஷ்ட கோணலாகத் திரித்து, மகேஷை நோக்கி எறிந்தான். நான் அறிந்தவரை, இவர்கள், அளவு குறைந்த பந்துகளை எறிவதில்லை. தோள்களுக்கு மேலாக எகிறுகிற பந்துகளை எறிய நல்ல போஷாக்கு தேவை. இம்முறையும், பந்து மட்டைக்கு நேராக, சற்றே சரியான அளவில் எறியப்பட்டது.  மகேஷ், இதனை முன்னமே கணித்தவன் போல, பந்து தரையை முத்தமிடுவதற்கு ஒரு கணம் முன்னால், நல்ல வலுவில் அடித்தான். இடது காலை ஒரு அடி முன்னால் நகர்த்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது.

ஆனாலும், பந்தின் ப்ருஷ்ட பாகத்தில் சரியான அடி விழுந்தது. நன்றாகக் கெந்தப்பட்டு, பந்து, வட கிழக்கில், சந்திர மண்டலம் நோக்கி பறக்க ஆரம்பித்தது. அந்த நேரம் பார்த்து, கேரளத்தில், தென்மேற்குப் பருவ மழை உற்பத்தியாகி, பெருங்காற்று ஒன்று, பந்து ப்ரயாணிக்கிற திசைக்கு எதிர் திசையில் பாய்ந்து பந்தைத் தாக்கியது. உல்லாசமாக உயரே போய்க் கொண்டிருந்த பந்து, ஒரு கணம் திகைத்து, செய்வதறியாது, அரைக்கணம் தாமதித்து, அப்படியே, நேர்கீழாக, புவியீர்ப்பு விசைக்குப் பணிந்து, ஈசான மூலையில் இரண்டு கடலைகளுக்கு இடைப்பட்ட இடைவெளியில், சந்துருவின் தடித்த விரல்களுக்குள் அளவெடுத்தது போல் தஞ்சம் புகுந்தது.

இவையெல்லாம் ஒரு துரித கதியில் நடந்து முடிந்து விட்டிருந்தன. மகேஷின் விக்கெட்டிற்கு பெரும் ஆரவாரம் இல்லை. அன்றாடம் நிகழ்கிற நிகழ்வாகவே இது இருந்திருக்க வேண்டும். மகேஷ், ஒரு மெலிய புன்னகையில் சும்மா ஒரு டமாஸ்டா என்றவாறே எங்களை நெருங்கி, சடுதியில், தி.ஜா. விற்குத் தாவி விடுவான்.

மகேஷை உத்தேசித்து என் கிரிக்கெட்டின் வீச்சினை அளவிட முடியாது. என்னுடைய நாற்பது கால கிரிக்கெட் வரலாற்றில் நான் அதிக பட்சமாக பத்து முறை அவுட் ஆகியிருந்தால் அதிகம். ரன் எடுக்கும் உத்வேகம் இருப்பவர்கள் மட்டுமே பொதுவாக அவுட் ஆவார்கள்.

பொதுவாக எனக்கு ரன் எடுக்கும் இச்சை எழுந்ததில்லை. எனக்கு முன்னோடிகளான, அம்ஷுமான் கைக்வாட், யஷ்பால் ஷர்மா, சேத்தன் சௌஹான், ஜெஃப்ரி பாய்காட், க்ரிஸ் டாவ்ரே போன்றவர்கள் ரன் எடுப்பதில் அக்கறை கொள்ளாதவர்கள். அதிலும், க்ரிஸ் டாவ்ரே என்கிற ஆங்கிலேயன், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஓர் ஆட்டத்தில்,(மெல்பார்ன் என்று ஞாபகம்), ஆட்டத்தின் மூன்றாவது பந்திலேயே 'கூச்'அவுட்டாகிவிட, மைதானத்தில் நுழைந்தவன், 85 ஓவர்களுக்கு அப்புறமும், லில்லிகளையும், பாஸ்கோக்களையும் சமாளித்து, வெகு ஜாக்கிரதையாக விளையாடி, 35 ரன்கள் எடுத்து இருந்தான். இதில், ஒரு கணப்பிசகில், யார்ட்லி வீசிய பந்தில், விளிம்பில் பட்டு சிதறிய ஒரு நான்கும் அடக்கம். பொழுது சாயும் நேரத்தில், பார்வையாளர்கள் மத்தியில் ஒரு பரபரப்பு. ஒரு பெரும் கூட்டம் திரண்டு, அங்கிருந்த காவல்களை சுலபமாக மீறி, டாவ்ரேயை நெருங்கியது. அவன் சிறிதும் கலங்கவில்லை. ஒரு மாவீரனைப்போல களத்தில் நின்றான். அவனை நெருங்கிய அக்கூட்டம்,ஒரு சிவப்பு நிற நாற்காலியை அவனுக்கு அளித்து, நெடுநேரமாக வெறுமனே நிற்பதால், கால் வலிக்கும் என்பதால், உட்கார்ந்து ஆடுமாறு பணித்தது.

ஆனாலும், என்னை விடவும், டாவ்ரே அதிக அளவில், அவுட் ஆகியிருக்க வேண்டும். ஒரு பிப்ரவரி மாதத்து, 3வது டெஸ்டில், அவனை நீக்கி விட்டார்கள். என்னை யாரும் அவ்வாறு நீக்கியது இல்லை. ஏனென்றால், என்னை யாரும் சேர்த்துக் கொள்வது இல்லை. 10 அல்லது 15 ஓவர்கள் நிரம்பிய ஒரு பந்தயத்தில், பந்துகளை வீணடிப்பவர்களை யாரும் விரும்புவது இல்லை. 

அதற்காக, நான் ஒன்றும் தாழ்ந்தவன் இல்லை. 70களின் மிகக் கடைசியில், களிச்சரணின், ஒரு சொத்தை அணிக்கு எதிராக, சுனில் காவஸ்கர், பம்பாயில் 205 எடுத்த, அதே தினத்தில், நான், 206 ரன்கள் எடுத்து சாதனை செய்திருந்தேன். காவஸ்கர் வடக்கத்தியன் என்பதால், அவனை அனைவரும் உயர்த்தி கொண்டாடினர். என்னுடைய சாதனை இருட்டடிப்பு செய்யப்பட்டதில் எனக்கு இன்று வரை வருத்தம் தான்.

காவஸ்கர் சாதனையெல்லாம் ஒரு சாதனையே அல்ல. அவனுடைய ஆடுகளம் மிகவும் பெரியது. பச்சைப்புல் படர்ந்த தரை கொண்டது. கீழே விழுந்தாலும் அவ்வளவாக அடி படாது.

உடம்பெல்லாம் கவசம் அணிந்து கொண்டு, பத்தடி ஓடினால் இரைப்பாய் இரைக்கிற வயதானவர்கள், சற்றே கனமான பந்தை, வெகு தூரத்தில் இருந்து எறிந்து, அதை எந்தப் பக்கம் வேண்டுமானாலும், அடிக்கும் வசதி பெற்றவர்கள்.

ஆனால், என்னுடைய ஆடுகளம், மிகவும் சிறியது. இரண்டு அங்கணங்கள் கொண்டது. ஒரு நூறு வருடங்களுக்கு முன்னால், சுத்தமான சிமென்டில், அமைக்கப்பட்ட தரை. நான்கு சகோதரர்கள் மத்தியில், பாகப்பிரிவினையில், முதல் இரண்டு, சகோதரர்களுக்கு ஒதுக்கப்பட்டதால், இரண்டு தாழ்வாரத்து அறைகள் கொண்ட அவ்வீட்டில், அவ்வறைகளை ஒட்டிய வெளிப்பகுதியை அனைவரும் திண்ணை என்று அழைப்பதை நாங்கள் வெறுத்தோம்.

அது எங்கள் வாழ்வாதாரம். எங்கள் சண்டைகள், சாமர்த்தியங்கள், நாடகங்கள், இதையல்லாம் மிகவும் மீறி, எங்களது கிரிக்கெட். இந்த 'எங்கள்' என்பது, நான், என் வயதொத்த ஆனால் என்னை விட ஒரு வகுப்பு சிறியவனான சுரேஷ் என்னும் மகாதேவன், எங்கள் வீட்டில் ரெண்டாம் கட்டில் குடியிருந்த மௌலி என்னும் சந்திரமௌலி, மற்றும், அடுத்த வீட்டில் குடியிருந்த, ரகுராம சாஸ்திரிகளின் ஜேஷ்ட குமாரன் ராமுடு. இதில் ராமுடு, அப்போது மூன்றாம் வகுப்பில் திணறிக் கொண்டு இருந்தான். மௌலி அவனைவிட ஒரு வகுப்பு சீனியர் என்பதால், ராமுடுவை மிகவும் மேக்கரிப்பான். எல்லோரையும் நான் மிகவும் மேக்கரிப்பேன்.





(கற்பனை வறட்சியின் காரணமாக கதை தற்காலிகமாக அடுத்த அத்யாயத்திற்கு செல்கிறது)






(2) பட்டாச்சாரியில் வீரவிளையாட்டு



இன்னும் இரண்டு ஓவர்கள் பாக்கியிருந்தன. ராஜு அற்புதமாக விளையாடிக் கொண்டிருந்தாலும், விக்கெட்டுகளைத் தொடர்ந்து இழந்து எங்கள் அணி தடுமாறிக் கொண்டிருந்தது. 14வது ஓவரை வீசுவதற்கு ஒரு புதுமுகம் தயாரானது. அவன், எதிர் அணியின் காப்டனின் தமையன் என்பது பிற்பாடு தெரிந்தது.

சுந்தரவரதன் சற்றே அசப்பில் ஆழ்வார்க்கடியான் போல இருந்தான். நெடுநாட்களாக திருத்தப் படாத தலை. அல்லது அதற்கு சாத்தியமில்லாததாகவும் இருக்கலாம். முகம் கொஞ்சம் அறுகோணமாக இருந்ததாக ஞாபகம். பற்கள் சிறிது இடம் மாறியிருந்தன. அவைகளை ஒழுங்காகத் தேய்த்து வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பாசி படர்ந்து, அதன் ஊடாக ஈறுகள் காவி நிறத்தில். கடைவாய் ஒழுகுகிற முகம். அகஸ்மாத்தாக, அவன் கொட்டாவி விடும்போது, அவன் அருகில் இருக்க நேர்கிறவனுடைய முகம், வரதனுடைய முகத்தைவிடவும் கோரமாக மாறக்கூடும்.

முதல் பந்தை ராஜு இடது பக்கத்தில் தூக்கி அடித்தான். பவுண்டரிக்கு 10 அடி தூரத்தில் முன்னால் விழுந்து நான்கு ரன்கள். அடுத்த பந்து அனேகமாக வைட். ஆனாலும், ராஜூ, அனாயசமாக தடவிக்கொடுத்து ஒரு ரன்னை எடுத்து விட்டான். 3வது பந்தை சம்பத் எதிர்கொண்டான். அவன் என்னை எப்பவும் மெக்கானிக் என்றுதான் அழைப்பான். அன்னாட்களில், நான், ஒரு மல்ட்டி மீட்டரை சம்பாதித்துக் கொண்டு, தெரிந்தவர்கள் வீட்டில், டிவி ரிப்பேர் பார்க்கிறேன் பேர்வழி என்று பல டிவிக்களை உருப்படாமல் செய்து இருக்கிறேன்.

சம்பத் இடது கை வீரன். இம்முறை பந்து சற்றே காலை நோக்கி எறியப்பட்டது. சம்பத் அதை வெறிகொண்டு தாக்கினான். ஆனால், பந்து பாட்டின் உள் விளிம்பில் பட்டு, நேரே லெக் ஸ்லிப் பக்கம் சென்றது. அதைக் கவனியாது, சம்பத், விழுந்தடித்துக் கொண்டு ஓட, ராஜூ அவனைத் திரும்ப அனுப்பி விட்டான். அதற்குள் காரியம் கை மிஞ்சி விட்டது. சம்பத் ரன் அவுட்டாகி விட்டான். எட்டாவது விக்கெட்டும் இப்போது விழுந்து விட்டது. மிச்சம், நானும், புகழேந்தியும் தான்.

இன்னும் 15ரன்கள் தேவை நாங்கள் வெற்றி பெறுவதற்கு. 9 பந்துகளே உள்ளன. 2 விக்கெட்டுகள். ராஜூ 43 ரன்களுடன் அற்புதமாக ஆடிக்கொண்டு இருக்கிறான். இப்போது, எங்கள் காப்டன் சங்கர் ஒரு முட்டாள் தனமான காரியம் செய்தான். புகழேந்தியை உள்ளே இறக்கினான். புகழேந்தியைப் பொருத்தவரை, எல்லா விளையாட்டுக்களும் ஒன்றுதான். கண்ணை இறுக மூடிக்கொண்டு, கையில் இருப்பதை ஆயுதமாகப் பாவித்து, எதிர் வருகிற பந்தை இரண்டாகப் பிளந்து விடுவது ஒன்றே அவன் குறிக்கோள்.

சுந்தரமில்லாத வரதன், பந்தை இடது கைக்கும் வலது கைக்கும் மாற்றிக் கொண்டு ஃபீல்ட் அமைத்துக் கொண்டிருந்தான். பின்னர், விக்கெட் கீப்பரைப் பார்த்து என்னவோ சைகை செய்தான். இதனைத் தவறாகப் புரிந்து கொண்ட புகழ், அவன் பந்து வீசிவிட்டான் என்று, பந்தை அடிக்க முன்னாலேயே கிளம்பி விட்டான். அழுகிற குழந்தையை வகுப்பாசிரியர் கோல் வைத்து மிரட்டுவது போல் இருந்தது அவன் செய்கை. சுந்தர வரதன் கையில் பந்து இருக்கும் போதே, இவன் பாதி தூரம் போய் விட்டான். உடனே, வரதன் சுதாரித்து, பந்தை புகழேந்தியின் தலைக்கு மேலே, நேராக விக்கெட் கீப்பர் பக்கம் எறிந்தான்.

புகழ் நல்ல உயரம். தன் தலைக்கு மேலே பறந்து போகும் பந்ைதப் பார்த்து விட்டான். அப்படியே, மட்டையை உயர்த்தி,அடிச்சேண்டா சிக்சர் என்று பொருள் படும்படியாக என்னத்தையோ சத்தமாகக் கூறிக்கொண்டு, அணில் பிடிக்கிறவன், அணில் அறியாத தருணத்தில், அதன் பின் பாகத்தில், அலக்கால் குத்துவது போல, மட்டையின் விளிம்பால், பந்தின் கீழே பலமாக ஒரு குத்து விட்டான்.

சரியான விகிதாசாரத்தில், நன்றாகத் தாக்கப் பட்ட பந்து, வீல் என்று கத்தாமல், ஒப்புக்கு நின்று கொண்டிருந்த ஸ்லிப் ஃபீல்டர்களை அனாயசமாகக் கடந்து, பட்டாச்சாரி மைதானத்தின் தென் கோடியில், சோழர் காலத்தில் இருந்து அந்தரங்க சுத்தி கழிக்கும் இடத்தில் தரையிறங்கி, ஒரு பெரிய அதிர்ச்சியில் திகைத்து, நான்கு முறை எகிறி, அருகாமையில், காலம் காலமாக கருப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் ஒரு ஜீவ நதியில் போய் விழுந்து மறைந்தது.

பந்து தொலைந்து போனதைவிடவும், நான்கு ரன்கள் பெற்ற மகிழ்ச்சியை எங்கள் அணி பெரிதாகக் கொண்டாடியது. புகழேந்திக்குத் தலைகால் புரியவில்லை. அவன் இதற்கு முன் நான்கு ரன்கள் எல்லாம் எடுத்ததே இல்லை. அதுவும் ஒரு கட்டைப் பந்தில் முதல் பந்திலேயே எடுத்து விட்டான். ஒரே ஒரு கணத்தில் அவன் மதிப்பு வானளவு உயர்ந்து விட்டது. என்னால் இதனை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. எவ்வளவு கேவலமான ஒரு ஆட்டம்?

கொடிக்கம்பால் துணி உலர்த்துவது போல ஒரு ஷாட். அதற்கு இத்தனை பெரிய அங்கீகாரம். என் கண்களில் பொறாமை தெரிவதாக சௌரி கூறினான். எனக்கும் அது சரிதான் என்று பட்டது.

இப்போது இரு அணிகளும் பந்தைத் தேடுவது என்று முடிவாகியது. ஆட்டம் ஒரு பரபரப்பான கட்டத்தை நெருங்கியதும் காரணமாக இருக்கலாம். எட்டு பந்துகளில் 11 ரன்கள். கிட்டத்தட்ட சாத்தியம். இன்னம் ஒரு ரன் எடுத்தால் 100 ரன்கள். எங்கள் அணி இது வரை 100க்கு கீழாக எடுத்ததே இல்லை.

வர்ணனைக்கு எட்டாத இன்னுமொரு மட்டை வீச்சில் புகழேந்தி இதனை சாதித்து விடுவான். அல்லது ராஜூ இருக்கவே இருக்கிறான். வெறும் ஏழு ரன்களில் அவனது முதல் அரை சதம் காத்துக் கொண்டு இருக்கிறது. எட்டு பந்துகளில் இரண்டு ஒன்றுக்கும் உதவாத சுந்தரவரதனுடையது. ஆனால் பந்து கிடைக்க வேண்டும்.

இரண்டு அணிகளும் வெகு ஜாக்ரதையாக ஜீவநதியின் கரையை அடைந்தோம். சு.வரதன், அப்புண்ணிய நதியை வானில் இருந்து கொண்டு வந்தவன் போல ஒரு வேட்கையுடன் விரைந்து அடைந்து,ஒரு குச்சியால், வெகு ஜாக்ரதையாகக் கிளறி, வெகு லாவகமாக பந்தைக் கண்டு பிடித்து விட்டான். கொஞ்சமும் அருவருப்பின்றி கையை விட்டு பந்தை எடுத்து தரையில் தேய்த்தான். ஆனாலும் பந்து தற்போது சம்பாதித்து இருந்த ஒளியினை இழந்துவிடத் தயாராக இல்லை. பந்தை விடவும் அழுக்காக உருமாறியிருந்த சு.வரதனை யாரும் கண்டு கொள்ளவில்லை.

பரி அசுத்த ஆவியாகத் தென்பட்ட அவனை எந்த தேவதூதனாலும் சுலபமாக ஞானஸ்னானம் செய்துவிட ஏலாது. வேறு வழியில்லாமல் மைதானத்தின் இன்னொரு பக்கம் இருந்த வீடுகளொன்றில் தண்ணீர் பெற்று, குறைந்த பட்சம் பந்தையாவது சுத்தம் செய்து கொள்வது என்று தீர்மானம் செய்யப்பட்டது.


இம்முயற்சியையும் சு.வரதனே பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டான். அந்நாட்களில் தண்ணீர்ப்பஞ்சம் வெகு கடுமையாக நிலவியதால், தாகசாந்தி செய்து கொள்வது கூட துர்லபமாக இருந்தது. என்றாலும், பல வருடங்களுக்கு முன்னால், பச்சை பெயிண்ட் அடித்திருந்த அவ்வீட்டின் வெளி கேட்டை வெகு ஸ்வாதீனமாகத் திறந்து கொண்டு, சு.வரதன் உள்ளே ப்ரவேசித்தான்.

அவன் வெகுதூரம் முன்னேறுவதற்குள், ஒரு முதிர்வயது பெண்மணியால் தடுத்து நிறுத்தப்பட்டான். பாட்டி நெற்றியில் ஒரு கோடு இழுத்து இருந்தாள். அவ்வீட்டின் நுழைவாயிலில் பெருமாள் படம் மாட்டியிருந்தது. பாட்டி, சு.வரதனை ஒரு கை அசைவில் நிறுத்தி, "இருக்கறதே நாலு மரம். எத்தன தடவை புடுங்கறது? இப்பத்தான முந்தாநா வந்து புடுங்கிப் போட்ட" என்றாள். அவள், சு.வரதனை "தேங்காய் பிடுங்குகிறவன்" என்று தப்பிதமாக நினைத்து விட்டாள். 

சு.வரதன் இதற்கெல்லாம் வெட்கப் படுவதாக இல்லை. அவன், ஆள் அழுக்காக இருந்தாலும், அகலமான நெற்றியில் பளிச்சென்று, நாமம் அப்போதுதான், வரைந்தது போல இருப்பான். அது இம்முறை கை கொடுத்தது. தன்னுடைய அழகான முகத்தை பாட்டியிடம் காட்டி, தனக்குக் கொஞ்சமேனும் தண்ணீர் கொடுத்தால் தேவலை என்று கூறினான். பாட்டி கொஞ்சம் துணுக்குற்றாற் போலத்தான் இருந்தது. உள்ளே என்னமோ விஷமம் செய்து கொண்டிருந்த பேரனை விளித்து, கொஞ்சம் தேர்த்தம் கொடுக்கக் கட்டளையிட்டாள். ஒரு மாதிரி சைகை செய்ததாக எனக்குத் தோன்றியதை நான் ப்ரமை என்று எண்ணிக் கொண்டேன்.

அந்தச் சிறுவன், ஒருவித எரிச்சலில், புழைக்கடைப் பக்கம் சென்று, ஒரு காதறுந்த "மக்"கில் தண்ணீர் கொணர்ந்தான். அந்த "மக்" லேசாக வாய் பிளந்து இருந்தது. அதன் வடிவமும், பாசி படர்ந்த நிறமும், அதைக் கொணர்ந்த சிறுவனின் முகச் சுளிப்பும், அந்த "மக்" இதுகாறும், அவ்வீட்டில், பல தலைமுறைகளாக ஆயி வந்த இடத்தில் புழங்கியிருக்க வேண்டும் என்று சுலபமாகப் புரிந்தது (சொல்லில் பிழையிருந்தால் அது மன்னிக்கப் படலாம்).

சு.வரதன் ஒரு தேர்ந்த சென்னை வாசியாகத்தான் இருக்க வேண்டும். சென்னை வாசிகள் செவ்வாய் கிரகத்திலும் வாழத்தகுதி பெற்றவர்கள். உயிர்வாழத் தண்ணீர் ஒன்றும் அவ்வளவு அவசியமான பொருள் இல்லை என்பதை உணர்ந்தவர்கள்.

சு.வரதன் அந்த நாலு திவலைத் தண்ணிருக்குள் தன்னையும் கழுவி, பந்தையும் கழுவி விட்டான். ரொம்பவும் ஸ்டைலாக பந்தைத் தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டு, ஆடுகளம் நோக்கி விரைந்தான். அவன் பின்னால் புகழேந்தியும் "ஹோ" என்று கத்தியவாறு தொடர்ந்து சென்றான். ஆட்டம் மறுபடியும் தொடர்ந்தது.

இம்முறை புல்டாஸ். புகழேந்திக்கு அதனை என்ன செய்வது என்று தெரியாமல், முகத்திற்கு நேராக வந்ததை, துணி துவைப்பது போல் எக்ஸ்ட்ரா கவர் பக்கம் அடித்து விட்டு, மட்டையை கீழே நழுவ விட்டு, எதிர் பக்கம் விரைந்தான். ராஜூ அவனைத் தயவு தாட்சண்யம் இல்லாமல் திருப்பி விட, புகழேந்தி அவன் கட்டளையை மறுதலித்து, இருவரும் ஒரே பக்கம் நின்று கொண்டிருக்க, பந்து சுலபமாக விக்கெட் கீப்பரை அடைந்து, அவன் ஸ்டம்புகளைப் பெயர்த்து எறிந்தான். புகழேந்தி கடும் கோபத்துடன், ராஜூவைப் பார்த்து, அவனை அவுட்டாகி வெளியேறுமாறு பணித்தான். அம்பயராக நின்று கொண்டு இருந்த ஸ்ரீதர், சிரிப்பை அடக்க மாட்டாமல், புகழேந்தியின் கழுத்தைப் பிடித்து வெளியேற்ற, ஒரு சிறு முகூர்த்தம், ஒரே களேபரமாக மாறிவிட்டது.

இப்போது என்னுடைய தருணம் வந்துவிட்டது. இதற்குத்தான் இவ்வளவு காலம் நான் காத்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்குக் கூட கார்த்திக்கு சௌகரியப்படாததால்தான் எனக்குவாய்ப்புக் கிடைத்து இருக்கிறது. நான் தயாரானேன். சௌரி என்னுடைய இடது காலுக்கு மட்டும் "pad" கட்டி விட்டான். ராஜூ போன்ற முன்னணி வீரர்கள் மட்டுமே இரண்டு கால்களுக்கும் pad கட்ட அனுமதி பெற்றவர்கள். சற்றே கிழிசலாக இருந்தது என்றாலும், சௌரி அரணாக்கயிறு போல இருந்த ஒரு கயிற்றால் நன்றாக நழுவாமல் கட்டி விட்டான்.

எனக்குப் பெருமையாக இருந்தது. மட்டையை அனுமார் மாதிரி தோள்களில் சார்த்திக்கொண்டு களம் விரைந்தேன். கிளம்பும் போது, ரவி என்னிடம், 'பார்த்து' விளையாடுமாறு கூறினான். இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொள்ளுமாறு அவன் என்னிடம் கூறியிருக்க வேண்டியதில்லை. எனக்கு இருந்த பதட்டத்தில் எந்த தெய்வத்தை வணங்குவது என்று புரியவில்லை. எந்தத் தெய்வத்திற்கு கிரிக்கெட் தெரியும் என்று என் அக்காவைக் கேட்டுக் கொண்டு வந்திருக்கலாம்.

ஒருக்கணம் கண்ணை மூடிக்கொண்டு த்யானம் செய்தேன். தூக்கிவாரிப் போட்டது. எங்கள் தாத்தா காலத்தில் இருந்து எங்கள் வீட்டின் ப்ரதான தெய்வமாக இருக்கும் "ஆண்டி முருகன்" கண் முன் வந்து நின்றார். கடந்த சில வருடங்களாக அவரை நான் கும்பிடுவது இல்லை.  10ம் வகுப்பு தமிழ்ப் பரிட்சையில் இருந்து அவர் மீது எனக்கு சிறு பிணக்கு ஏற்பட்டு விட்டது.

அன்னாட்களில், எங்கள் பள்ளியில், என்னை தமிழில் மாகாணத்திலேயே முதல் மாணவனாக வரப்போகிறவன் என்று குறியிட்டு வந்திருந்தார்கள். எனக்கும், தமிழ்ப் பாடப் புத்தகத்தில் இந்தப் பக்கத்தில் இருந்து அந்தப் பக்கம் வரை தலைகீழ் பாடம். சிறு உபாதைகளுக்கு உத்தரவு கேட்கும் போது கூட, நன்னூல் சூத்திரங்களை மேற்கோள் காட்டுகிற அளவில் எனக்குப் பாண்டித்தியம். 

பொதுவாகவே எல்லா மாணவர்களும், விடைத்தாளில் முதல் பக்கத்தில் மனப்பாடச் செய்யுளை அழகான கையெழுத்தில் எழுதி ஆரம்பிப்பது வழக்கம். ஏனென்றால், முதல்  பக்கத்திலேயே சுளையாக 10 மதிப்பெண் கிடைத்து, திருத்துபவருக்கு, மதிப்பெண் தொடர்ச்சியாக அளிக்க ஒரு உற்சாகம் கிடைக்கும். கேள்வித்தாள் கைக்கு வந்ததும், நான் வழக்கம் போல், ஓம் முருகா என்று 108 முறை மனதிற்குள் கூறிவிட்டு, பிரித்துப் பார்த்தேன். மனப்பாடப் பகுதியில், திருவிளையாடற்புராணத்தில் இருந்து "பொங்கரில் புகுந்து வாவி" என்று தொடங்கும் செய்யுள் கேட்டு இருந்தார்கள். இதில் சந்தோஷப்பட ஒன்றும் இல்லை என்று தோன்றியது. எனக்குத் தெரியாத பாடல்களே இல்லை. உண்மையில், திருவிளையாடற்புராணத்தில் இடம் பெறாத பாடல்கள் கூட எனக்குத் தெரியும்.

முருகப்பெருமானுக்கு நன்றியைத் தெரிவித்து விட்டு, எழுத ஆரம்பித்தால்,  "மல்லிகைப் பந்தர் தாவிக்கு" மேல் மறந்து விட்டது. என்ன காரணம் என்றே புரியவில்லை. கடைசிவரை முருகன் எனக்கு உதவவே இல்லை.

10 மார்க் சுளையாகப் போய் விட்டது. அன்றிலிருந்து, நான் முருகப்பெருமானோடு ஒருவித மனத்தாங்கலில் இருந்து வருகிறேன். இன்றைக்கு என்று இவர் ஏன், தானாகவே தரிசனம் தரவேண்டும்? இவரை மேக்கரிக்கும் வேறு ஏதேனும் ஒரு கடவுளைக் கும்பிட்டால் என்ன என்ற எண்ணத்தை உடனே மாற்றிக் கொண்டேன்.

எல்லாக் கடவுள்களும் ஏதோ ஒருவகையில் முருகனுக்கு உறவாகவே இருக்கிறார்கள். என் பொருட்டு, தங்கள் உறவுகளில் விரிசல் ஏற்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.

அதற்குள், நான் களத்திற்குள் மட்டை வீசும் இடத்திற்குள் வந்து விட்டேன்.  ராஜுவும், ஸ்ரீதரும் என்னைப் பார்த்து ஸ்னேகமாக விரல்களை உயர்த்திக்காண்பிக்கிறார்கள். நான் முதலில், வலது ஸ்டம்பிற்கு guard எடுக்கலாம் என்று நினைத்தவன், அதனை மாற்றிக் கொண்டு மிடில் ஸ்டம்பிற்கு எடுத்துக் கொண்டேன். பிற்பாடு அதனையும் மாற்றி, லெக் ஸ்டிக்கிற்குக் கேட்க, ஸ்ரீதர் பொறுமையிழந்து, எங்கயாவது நில்லுடா என்றான்.

லெக் ஸ்டிக் guard பொதுவாகவே பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். சுனில் காவஸ்கர் போன்றவர்கள், முதலில் லெக் ஸ்டிக்கில் நின்று கொண்டு, பௌலர் தன் ராஜபாட்டையைத் துவக்கியவுடன். மெதுவாக முன்னேறி, வலது புறம் போய், off sideல் அழகாக விளையாடுவார்கள். சில சமயங்களில், பந்து அளவு குறைந்து எகிறி வரும்போது, வலது காலை நன்றாக அகட்டி வைத்து, முழுப் பளுவையும் அதில் திணித்து, பந்தை அப்படியே அலாக்காக தூக்கி மிட்விக்கெட் பக்கம் அறைந்து, நான்கு அல்லது ஆறு கூடப் பெறுவார்கள்.

என்னுடைய முஸ்தீபுகள், எதிர் கூடாரத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியதாகக் தெரிந்தது. அல்லது, என்னுடைய 206 ரன் சாதனையை யாரேனும் தெரியப்படுத்தியிருக்கலாம். சு.வரதன் முகத்தில் ஒரு கலவரம் தெரிந்ததாகப் பட்டது. மிகவும் நன்றாக விளையாடத்தெரிந்த ஒருவனை வேண்டுமென்றேக் கடைசியாக அனுப்பியதை அவர்கள் ஒரு ராஜதந்திரமாக எண்ணியிருக்கலாம். 

பட்டாச்சாரி மைதானத்தில் வழக்கத்தை விடவும் அனல் பறக்கிறது என்று வி.கீப்பர் அருகாமையில் இருந்த ஸ்லிப் ஃபீல்டரிடம் கூற அவனும் ஆமோதித்தான். நானும் அசடு போல அதனை ஆமோதித்ததை அவர்கள் ரசித்ததாகத் தெரியவில்லை. நல்ல வேளையாக செருப்பு அணிந்து வந்திருக்கிறேன். புது செருப்புதான் அணிந்து வருவதாக இருந்தது. ஆனால், கிளம்பும் போது அம்மா பார்த்து விட்டாள். அவளுக்குப் பயந்து, பழைய செருப்பை அணிந்து வந்திருக்கிறேன். பலமுறை அறுந்து தைத்திருந்தாலும், உச்சி வெய்யிலுக்கு உகந்ததாகத்தான் இருக்கிறது. நல்ல வேளையாக, நான் புது pant அணிந்து இருந்தைத அம்மா கவனிக்கவில்லை. பழைய சட்டை அணிந்திருந்ததால், அம்மா அதனைக் கவனிக்கவில்லை என்று தோன்றியது. நல்ல கரும் பச்சையில், லேசான சரிகைகள், தங்க ரேக்குகள் போல மின்ன, போன மாதம், என்னுடைய இரண்டாவது அக்கா, கூத்தா நல்லூரில் இருந்து, சிங்கப்பூரில் இருந்து தருவிக்கப் பட்டதாக அனுப்பி இருந்தாள். இந்த சட்டையும் கூட அவள் அனுப்பி இருந்ததுதான். நல்ல பச்சையில், இலைகளின் ஊடாக நிறையப் பூக்கள் பல நிறங்களில். இவைகளை அணிந்து கொள்ள, என்னுடைய எதிர்ப்புகள் செல்லுபடியாகாது.

என் பெற்றோர்களைப் பொருத்தவரை, கல்லுப் போல் நெடு நாள் உழைக்கும் துணிகளை இந்தியர்கள் தயாரிப்பதில்லை. சாதாரணமாகவே சிங்கப்பூர் சரக்குகள் உயர்ந்தவை. நான் பொதுவாகவே, என்னுடைய கல்லூரி நாட்கள் பூராவும், விதம் விதமாகப் பூப்போட்ட சட்டைகளையே அணிந்து வந்திருக்கிறேன். இதன் பொருட்டு, என்னுடைய நண்பர்கள் எனக்கு, "ஜோல் கார்டனர்" என்றே பெயர் சூட்டியிருந்தனர்.

இது கூட பரவாயில்லை. சமயங்களில், உள்ளாடைகள் கூட சிங்கப்பூரில் இருந்து தருவிக்கப் படும். அவைகள் பொதுவாக ப்ளாஸ்டிக்கினால் தயாரிக்கப் பட்டிருக்க வேண்டும் என்று தோன்றும். கடுமையான எரிச்சலும், சொல்லொணாத் துயரமும் கொண்டுதான் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். திடுமென ஒரு நாள், உள்ளாடைகள் வரத்து நின்று போய் விட்டது. சிங்கப்பூர் அரசாங்கமே என்னுடைய ப்ரார்த்தனையை ஏற்று, அவைகளைத் தடை செய்திருக்க வேண்டும்.

நான் சற்றே நெஞ்சை நிமிர்த்தி, சுற்றுமுற்றும் பார்க்கிறேன். விக்கெட் கீப்பர் அனேகமாக ஸ்டம்புகள் மேலேயே நிற்கிறான். எனக்குத் தெரிந்து, சு.வரதனிடமிருந்து ஒரு வைட் பெற்று, நான் முன்னேறியிருக்கும் தருணம், என்னை ஸ்டம்பிங்க் செய்ய உத்தேசமாக இருக்கும் இடதுபுறம், எங்கோ தொலைதூரத்தில் நின்றவனை இழுத்து வந்து ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் நிறுத்தி இருக்கிறார்கள். நான் அவனைப் பார்த்த போது, அவன் வெறும் காலில், சூடு தாங்காமல், ஆடிக்கொண்டு இருந்தான். அதே சமயம், கண்களை ஒரு மாதிரி லயிப்பில் வைத்துக் கொண்டு, தன்னுடைய தீர்க்கமான நாசியில், இரண்டு விரல்களைப் பாய்ச்சி ஏதோ அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தான். என்ன ஆனாலும் இவனிடம் பந்தை அடிக்கக் கூடாது என்று தீர்மானித்துக் கொண்டேன். 

என்னால் என்ன மாதிரியான ஷாட்டையும் விளையாட முடியும் என்பதை என் அணியின் காப்டன் சங்கருக்கு புரிய வைக்க இது சரியான தருணம். சு.வரதன் பதட்டத்தில், பந்தை இடது கையில் இருந்து வலது கைக்கு ஏதோ தக்லியில் நூல் நூற்பது போல் விட்டுக் கொண்டு இருக்கிறான். முதல் முறையாக பந்து வீசுகிறவன். அதிர்ஷ்டவசமாக இரண்டு விக்கெட்டுகள்,ரன்னவுட்டாகி விழுந்திருக்கின்றன. இவனது முயற்சியில் ஒன்றும் நடக்கவில்லை. அவனது தமையனும் கூட ஒருவித பதட்டத்தில் இருப்பதாகப் பட்டது. இந்த சூழ்நிலையை நான் எனக்குக் சகாயமாக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்னம் 11 ரன்கள். 7 பந்துகள். 7 ரன்கள் இருந்தால் போதும் ராஜு அரைசதம் அடிக்க. நான் ஒரு நான்கு ரன்கள் பெற்றால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. ஆனால். புகழேந்தி மாதிரி அல்லாது, ஒரு தேர்ந்த வீரனாக இந்த நான்கை நான் சம்பாதிக்க வேண்டும்.

சு.வரதன் புதியவன். அதுவும், இடது கை பௌலர். அனுபவம் அற்றவன். கண்டிப்பாக என்னுடைய இடதுகாலைக் குறிவைத்தே பந்தை எறிவான். அல்லது, சற்றே விலகி இன்னும் இடதுபுறம் செல்லக்கூடும்.

எனக்கு நளினமாக விளையாடப் பிடிக்கும். அதுவும், மண்டியிட்டு நேர்த்தியாக விளையாடுவது மிகவும் பிடிக்கும். சமீப காலங்களில், மண்டியிட்டு, அசாருதீன் போல, பந்தை விக்கெட் கீப்பருக்குப் பின்னால் திருப்புவதில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறேன். எங்களது மைதானத்தில் இதற்கு வரவேற்பு கிடையாது. ஏனென்றால், பின்னால் திருப்பப்படும் போது, வி. கீப்பரால் பிடிக்கப் படாமல் போனால், பந்து ரோட்டைத் தாண்டி அப்பாசாமி வீட்டு கிணத்தடியில் சகதியில் போய் சொத்தென்று விழும். பந்தைத் திரும்பப் பெறுவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். அதனால் பின்னால் செலுத்தப்படும் பந்துகளுக்கு, ரன் அளிக்கப்பட மாட்டாது. என்றாலும், பின்னால் திருப்புகிற ஷாட் எதுவும் நளினமாகவே இருக்கும். அதுவும், சாயங்காலங்களில் நாங்கள் விளையாடும் தருணம் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு தன்னுடைய தோழியுடன் போகும் அந்த பெண்ணிற்காக எத்தனை தடவை வேண்டுமானாலும் கிணத்தடி சென்று வரலாம்.

இம்முறை முருகன் என்னைக் கைவிட மாட்டார் என்றே தோன்றியது. அவர், எங்கள் தாத்தாவுக்கு ப்ரத்யட்சம் என்று கூறுவார்கள். என் தாத்தாவின் பொருட்டாவது, அவர் என்னைப் பெருமை கொள்ள வைக்க வேண்டியிருக்கும்.

இதோ சு.வரதன் வருகிறான். முருகன் வாக்குத் தவறவில்லை. பந்து எதிர்பார்த்தபடி இடது பக்கம் வருகிறது. நல்ல வேளையாகக் கால்களைக் குறிபார்த்து எறியப்படவில்லை. என்றால், இடதுகாலை சற்றே ஒதுக்கி, பந்தின் தலையில் செல்லமாகத் தட்டி, வி.கீப்பருக்கும் ஃபார்வர்ட் ஷார்ட் லெக்குக்கும் இடையில் லெக் க்லான்ஸ் செய்ய வேண்டியிருக்கும். பந்து சரியாக, சு.வரதன் ஞானஸ்னானம் பெற்ற இடத்தில் நான்கு ரன்களை சுலபமாகப் பெற்றுத் தரும். அதுவும் நல்ல ஷாட்தான் என்றாலும், நான் பெரிதும் எதிர்பார்த்திருக்கும் ஸ்வீப் போல அவ்வளவு நளினமாக இராது.

பந்து இதோ எந்த நிபுணத்துவமும் அல்லது சுழற்சியும் இல்லாது,நேராக இடது காலை நோக்கி அல்லது சற்றே ஒருக்களித்து விழுகிற மாதிரி வருகிறது. ஆஹா என்று சொல்லிக் கொண்டேன். என்னுடைய அனிச்சை உணர்வுகள் உந்த, என்னுடைய வலது காலை மடித்துத் தரையில் இறக்கினேன். மட்டையை சரியான கோணத்தில் பந்தை நோக்கி செலுத்தினேன்.

இடது காலை என்னை நோக்கி இழுத்து தரையில் மண்டியிடுவதுதான் பாக்கி. கடவுளே! இடது கால் மடிய மறுக்கிறது. அரணாக்கயிற்றால் வலுவாகக் கட்டப் பட்டதால், முட்டிக்கால் இறுகி, பக்கவாதம் வந்த கிழவியின் கால் போல் மடங்க மறுக்கிறது. அதே சமயம், கைகள் தன்னுடைய பணியினை சரியாகச் செய்து விட்டதால், அவயவங்கள் ஊடே சரியான ஒத்துழைப்பு இல்லாமல், அவைகள் ஆங்காங்கே சிதறி, அப்படியே, நிலை தடுமாறி, தொபுக்கடீர் என்று, பள்ளிகொண்ட ரங்கனாதர் போல, பலகீனமாக பின்னால் நிறுத்தி வைத்திருந்த மூன்று ஸ்டம்புகளைப் பிளந்து கொண்டு விழுந்தேன். 'ஐய்யோ' என்று, சன்னமான சப்தம் என்னையும் மீறிக் கேட்டது.

அதே கணத்தில், பந்து நேராக, இடது கையில் மட்டும் எப்படியோ தங்கியிருக்கும் மட்டையின் தகாத பக்கத்தில், 'ப்ளக்' என்று மழைத்துளி போல் பட்டு, மெதுவாக எகிறி, நாசித்வாரங்களில் மும்முரமாக இருப்பவனின் கைகளில் நேராகத் தஞ்சம் அடைந்தது. இரு கண்களையும் மூடிக்கொண்டு இருந்து அல்லது இரண்டு கைகளையும் பின்னால் பிடிவாதமாகக் கட்டிக் கொண்டிருந்தால் ஒழிய அத்தகைய காட்சை எவனாலும் தவற விட்டிருக்க முடியாது.

நான் அப்படியே மல்லாக்கக் கிடக்கிறேன். கண்களின் நேர் மேலே ஆகாயம் விரிந்து கிடந்தது. பொட்டு மேகம் தென்படவில்லை. ஆயாசமாக இருந்தது. கண்களை மூடிக் கொள்கிறேன். இம்முறை முருகப்பெருமான் தென்படவில்லை. அவர் மீது குற்றமில்லை. அவர் என்ன செய்வார். அவரை விடவும் திருமால் சக்தி படைத்தவர். சு.வரதன் திருமால் அருள் பெற்றவன். சௌரி என்னும் இன்னொரு வைணவன், என் காலில் பாசக் கயிற்றினைக் கட்டி கவிழ்த்து விட்டான். என் எண்ண ஓட்டங்களையும் மீறி உடம்பெல்லாம் வலித்தது. பட்டாச்சாரி மைதானத்தின் அனல் பறக்கும் சூடு, என் காயங்களுக்கு இதமாக இருந்தது. பெரிய பழுவேட்டரையரைப் போலக் குறைந்த பட்சம் 64 காயங்கள் ஏற்பட்டிருக்கலாம்.

என்ன, எனக்கு, காயங்கள் மார்பில் இல்லாமல், பின்பக்கத்தில் நேரிட்டு விட்டன. இடுப்பை அசைக்க முடியவில்லை. ஏதோ, பெரிதாக ஒன்று, கல்லோ கண்ணாடியோ, அரை அங்குலமோ, அரைக் காதமோ, உள்ளே இறங்கியிருக்கிறது. Pant-ஐக் கிழிக்காமல் இது உள்ளே ஊடுருவீயிருக்க சாத்தியமில்லை. அம்மாவை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை. ஒரு பாதத்தில் மட்டும் செருப்பு தட்டுப் படுகிறது. இன்னொன்றைக் காணோம்.

ஒரு சிறிய, நியாயமான ஆசையின் நிமித்தம், இவ்வளவு இடிபாடுகள் நேரிட்டு இருக்க வேண்டாம். என்னை நோக்கி யாரோ ஓடி வருகிறார்கள். நல்லவர்கள். எதிரிகளாக இருந்தாலும், ஒத்தாசை நல்குபவர்கள் நல்லவர்களாகத்தான் இருக்க வேண்டும். நான் உதவியைப் பெற்றுக் கொள்ளத் தயாரானேன்.

என்ன அநியாயம்? அத்தனை பேரும் என்னைத் தாண்டி விரைகிறார்கள். நான் படுத்தவாறே, கண்களை உயர்த்தி பின்னால் பார்க்கிறேன். அங்கும் ஏதோ கலவரம் நிகழ்ந்திருக்கிறது. வி.கீப்பர் என்னைப் போலவே கீழே விழுந்து கிடக்கிறான். ஸ்டம்புகள் மேலாகவே நின்று கொண்டிருந்தவன், நான் நரசிங்கப் பெருமாள் மாதிரி, ஒன்றுக்கு மூன்றாக ஸ்டம்புகளைப் பிளந்து, வீழ்வதை ஊகித்து, தன்னுடைய மர்ம ஸ்தானங்களைக் காத்துக் கொள்ள பின்னால் தாவியவன், பின்னங்கால் வழுக்கி, தடால் என்று கீழே விழுந்திருக்கிறான். அவனது தலையைப் பரிசோதித்து ஒருவன், கபாலத்தில் லேசாக விரிசல் தென்படுவதாகக் கூறுவது, மற்றவர்கள் முகத்தில் கவலையை ஏற்படுத்துகிறது.

நான் கீழே விழும்போது, எனக்குள் சன்னமாகக் கேட்ட அந்த "ஐய்யோ" என்ற சப்தம், உண்மையில், வி.கீப்பருடையதாக இருக்க வேண்டும். அங்கங்கள் சிதறி, அலங்கோலமாக விழும்போது, ஒரு அபயக்குரல் கூட எழுப்பத் தெரியாத நான், நிஜமாகவே, என் அக்காக்கள் கூறுவது போல, ஒரு சரியான அசமஞ்சமாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது.

ஸ்ரீதரும் ராஜுவும் சேர்ந்து மைதானத்தை விட்டுத் தளர்வாக நகர்கிறார்கள். எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றவில்லை. ராஜு என்னைப் பார்த்து, விரல்களால் என்னமோ சைகை செய்கிறான். நான், பொதுவாகவே, பெண்கள் மத்தியில் வளர்ந்ததால், இந்தப் பையன்களின், நவீனமான அகராதிகளுக்கும், சைககளுக்கும் அர்த்தம் தெரியாமல் போய்விட்டது. ராஜுவின் இந்த சைகைக்கு நேர்மையான அர்த்தம் இருக்காது.

கிரிக்கெட்டின் ஒட்டுமொத்த சரித்திரத்தில், இதைவிடவும் கண்றாவியாக மொஹிந்தர் அமர்னாத் உட்பட, யாராலேயும் அவுட்டாகியிருக்க முடியாது என்று தோன்றியது. எவ்வளவு விபரீதங்கள் நடந்து விட்டன? இத்தனை வருடத்தில், எங்கள் அணி இரட்டை இலக்கத்தில் அவுட்டாகி விட்டது. ராஜுவின் அரைசதம் கனவு தகர்ந்து விட்டது. சுலபமான வெற்றி தோல்வியாக மாறி விட்டது. சு.வரதன்கள் இனி பயமின்றி பந்து வீசத் துவங்குவார்கள். பின்னாட்களில் காப்டன் கனவுகளில் இருந்த வி.கீப்பருக்கு கபாலம் கலங்கி விட்டது. புத்தம் புது Pant கிழிந்து விட்டது. செருப்பு அறுந்து போய் விட்டது. இது எல்லாவற்றையும் விட, கிரிக்கெட் விளையாட்டில் விசேஷ நிபுணத்துவம் பெற்றிருந்த என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை அனேகமாக முடிந்து விட்டது. 

என்னுடைய இந்த வீழ்ச்சியில் ஒரே ஒரு நல்ல காரியம்தான் நடந்திருக்கிறது. அது, சு.வரதனுக்கு முதல் விக்கெட் கிடைத்து இருக்கிறது. அவனும், காட்ச் பிடித்தவனும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு சந்தோஷத்தில் துள்ளிக் கொண்டு இருந்ததைப் பார்க்க கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. என்னுடைய தகுதி தெரிந்து, என்னுடைய விக்கெட்டைக் கொண்டாடுகிறார்கள்.

நான் தட்டுத் தடுமாறி, என் உபகரணங்களைச் சேகரித்துக் கொண்டு, தத்தித் தத்தி என் நண்பர்களோடு சேர்ந்து கொண்டேன். அவர்கள் எனக்காக காத்துக் கொண்டிருந்ததைப் பார்க்க ஆறுதலாக இருந்தது. சௌரி என்னிடமிருந்து மட்டையை கிட்டத்தட்ட பிடுங்கிக் கொண்டான்.நான் ஏதோ பேச முற்பட்டேன்.

யாரும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ஸ்ரீதர் மட்டும் என்னிடம் எல்லாரும் கொலை வெறியில் இருப்பதால், எதுவும் பேசாமல் இருப்பதே உசிதம் என்றான். எல்லோரும் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு, அவரவர் சைக்கிளில் கிளம்பினர். நான் வரும்போது சௌரியுடன் வந்திருந்தேன். அங்கிருந்து, எங்கள் நகரம் கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர்கள்.  உச்சி வெய்யிலில் நடந்து லெசல்வதெல்லாம் சாத்தியமே இல்லை. நானும் சுவாதீனமாக சௌரியின் சைக்கிளில் அமர முயன்ற போது, அவன் என்னைக் கீழே தள்ளிவிட்டான். சைக்கிளைத் தொட்டால் கொலைவிழும் என்றான். எனக்கும் கோபம் வந்தது. இது நியாயமே இல்லை. என்னை மாதிரியே வேறு சிலரும் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து இருந்தார்கள். ஏன், சௌரியே கூட ரன் எடுக்கவில்லை. என் கோபம் எடுபடவில்லை. ஆளாளுக்கு, முருகப் பெருமான் தரிசனம் கொடுத்திருந்த என் பாட்டனார் வரையிலும் திட்டித் தீர்த்து விட்டு, என்னை கொதிக்கிற வெய்யிலில் தனியே புலம்ப விட்டு, சென்று விட்டனர். நான் உடம்பெல்லாம் புண்ணாகி, மனதிலும் பெரிய காயத்துடன், அறுந்த செருப்பையும் இழுத்துக் கொண்டு, விந்தி விந்தி வீடு சேர்ந்தேன்.

நான் எதிர்பார்த்த படி, என்னைத் தெரு கிரிக்கெட்டிலும், அதன் பிறகு சேர்த்துக் கொள்ளவில்லை. அது மட்டுமல்லாமல், நான் அவர்களைக் கடக்கும் போதெல்லாம், சப்தமாக, "தெருப் பெருக்கி" என்று அழைக்கத் துவங்கியிருந்தார்கள். ஒருமுறை, என் அக்கா இதனைக் கேட்டுவிட்டு, அம்மாவிடம், உன் பிள்ளையை எல்லாரும் "தெருப் பொறுக்கி" என்று கூப்பிடுவதாகக் கூறிவிட்டாள். அடுத்த முறை, இந்தக் கூட்டத்திலேயே சாதுவான ஜட்டுவைக் கூப்பிட்டு, அம்மா வெளு வெளு என்று வெளுத்து விட்டாள். அப்படியும், என் புனை பெயர் தொடர்ந்தது. நல்ல வேளையாக, சேட்டன் சர்மாவின் கடைசிப் பந்தில், மியாண்டட் சிக்ஸர் அடித்து, கவனம் திரும்பியதில், நான் தப்பித்துக் கொண்டேன்.


--------

அலுவல் முடிந்து திரும்பும் வழியில் சென்று பார்த்த சினிமா ஆட்டம்

அலுவல் முடிந்து திரும்பும் வழியில் சென்று பார்த்த சினிமா ஆட்டம்
(அசோகமித்ரன் மன்னிப்பாராக!)



திங்கட் கிழமைகளில் பொதுவாக "ஸெல்லுலாயிட்" என் கவனத்தை ஈர்த்ததில்லை. அதிகாலையில் அவசர அவசரமாக எழுந்து, சென்னையில் பஸ் பிடித்து, வெகுதூரம் ப்ரயாணித்து, நேராக அலுவலகம் அடைய வேண்டியிருக்கும். பயணம் ஒன்றும் சுவாரஸ்யமாக இராது. டார்ச் லைட் போல தாடை நீண்டிருக்கும் பெண்கள். புழுதியில் விரையும் சைக்கிள்கள். மண்டை பிளக்கும் வெயில். 9.30 மணிக்கே வந்து, திரளான மக்கள், நமக்கு முன்னமே அங்கு கூடியிருப்பார்கள். சாப்பிடக்கூட நேரமின்றி, அம்மா அதிகாலையில் தயார் செய்து கொடுத்த அன்பு கலந்த இட்டலி, அவல் போல ஆறிப்போயிருக்கும். மனம் முழுக்க வீடு நிறைந்திருக்கும். கவனம் சிதறும்.

வழக்கம் போல், 4.30 மணிக்குக் கிளம்ப முடியாது. என்ன ஆனாலும், நானும் வேலனும் 4.45க்குக் கிளம்பி விடுவோம். வேலன் என்னுடைய அலுவலக சகா. என்னை விட மிகவும் வயதில் இளையவர். ஆனால் பணியில் ஒரு வருடம் மூத்தவர். 4.45 மணிக்கு டாண் என்று, 'திருமகள்' வெள்ளைக்காரன் போல வந்துவிடுவான். என்றாலும், 4.30 மணி பாரதமாதா போல் இருக்காது. அதிவேகமாக போவான் என்பது மட்டுமல்ல. அந்த நேரத்திற்கு, பஸ்ஸில் நிரம்பி வழிகிற, பக்கத்து ஊர் 'பெண்கள் கல்லூரி'யின் மாணவிகளும் கூட ஒரு காரணம்.

அரை மணிப் பிரயாணம் தான். என்றாலும், யுகங்களாக நீளாதா என்று ஆசையாக இருக்கும். அதில், ஒரு பெண், ஏதோ ஒரு கலாகூட, கண் ஒருமாதிரி இருக்கும் மற்றொரு பெண்ணோடு தனியாகத் தெரியும். பெயர் தெரியாமல் ஆனால் வசீகரமாக இருந்த அந்தப் பெண்ணிற்கு, அதன் தேக புஷ்டியை உத்தேசித்து, "பல்கி" என்று பெயரிட்டிருந்தேன். கூட இருக்கும் பெண்ணிற்கு, காக்காய் என்று வேலன் பெயர் வைத்திருந்தார். அந்த காக்காய் பெண்ணின் தகப்பனார், எங்கள் கிளையில்தான் கணக்கு வைத்திருந்தார். கீதா என்ற பெண் கூட ஏதோ ஒரு சாயலில் அழகாகத்தான் இருக்கும். தடிமனான கண்ணாடி ஒரு குறையாக இருக்காது.



வேறொரு BT படித்த பெண் ஒன்றும் வரும். கன்னத்தில் பெரிதாக மரு ஒன்று இருக்கும். நல்ல நிறமாக இருக்கும் அப்பெண்ணிற்கு, மச்சக்கன்னி என்று பெயர் வைத்திருந்தோம்.

மச்சக்கன்னியைக் கவர்வதற்கு, வேலன் என்னமோ முயற்சித்ததே இல்லை. நான் சற்றே மந்திரித்து விட்டவன் போல், ஒரு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு வந்து, எங்களோடு எப்படியோ ஒட்டிக் கொண்டு வந்துவிடும் எங்கள் அதிகாரியுடன், தப்பும் தவறுமாக ஆங்கிலத்தில் விவாதித்துக் கொண்டு வருவோம்.

மச்சக்கன்னியிடம் மையல் முடிவாவதற்குள், பல்கியின் தரிசனம் கிடைத்து விட்டது. நானும் வேலனும் குட்டிக்கரணம் அடித்துப் பார்த்தும், கண்களில் தெரியும் அசட்டுத்தனமா அல்லது ஆகிருதி இன்மையா, எங்களால் ஒரு அங்குலம் கூட நெருங்க முடியவில்லை. பேசுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் போதும். ஜன்மம் சாபல்யம் அடைந்து விடும். ஒரு நாள் தளர்ச்சியுடன், நானும் வேலனும், மாமி மெஸ் போய் திரும்பும் போது, ஒரு திருப்பத்தில், பல்கியையும், காக்காயையும் கண்டோம். யாரோடோ ஸ்வாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். மனசு பதற, உடல் உதற, கிட்டே போய்ப் பார்க்க, மனசு தடாலென்று விழுந்து விட்டது.

என்னுடைய batch சகாவான, சுப்பு நின்று கொண்டு, அவர்களோடு சிரிக்க சிரிக்கப் பேசிக்கொண்டிருந்தான். இத்தனைக்கும், சுப்பு, உயரத்தில் நாலடிக்கு, நான்கு அங்குலம் கம்மிMSc படித்த ஹோதா அவனுக்கு உதவியிருக்கிறது. 10, 15 பிள்ளைகளைச் சேகரித்துக் கொண்டு, வங்கிப் பரிட்சைக்குத் தயார் செய்வதாக என்னமோ சதி செய்திருக்கிறான்.

என்மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. நிமிர்ந்து வேலனைப் பார்த்தேன். அவர் கண்கள், குளமாகிக் கொண்டு வருவதை அவ்விருட்டிலும் உணர முடிந்தது. அவர் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. நான் அவர் கைகளைப் பற்றிக் கொண்டேன். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. எனக்குத் தான் எத்தனை போட்டிகள்? எனக்கு, வேலன் மேல், சட்டென்று எரிச்சல் வந்தது. மெதுவாக, அவரிடம், என்ன வேலன், நீங்களும், பல்கி மேல இஷ்டமா என்று வேண்டா வெறுப்பாகக் கேட்டேன். அவர் திடுக்கிட்டு, "ச்சி ச்சி", எனக்கு காக்காய் மேலத்தான் ஒரு கண் என்றார். காக்காய்-க்கே ஒரு கண் தானே என்று நினைத்தை வெளியில் சொல்லாமல், ஒரு ஆறுதல் பெருமூச்சொன்றை வெளிப்படுத்தினேன். என்ன ஆனால்தான் என்ன, சுப்பு எல்லார் மனதிலும், அமிலத்தை ஊற்றிவிட்டான். சுப்புவை உடனடியாகப் பழிவாங்க மனம் துடிதுடித்தது. அமுதனைத்தான் தூண்டிவிடவேண்டும்.


இத்தனைக்கும் அமுதன் கூட MSc தான். அவன் தானாக போய் பேசாத பெண்கள் கிடையாது. என்றாலும், அவனாலும், பல்கியிடம் நெருங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும், தன்னை, வீரமான மதுரைக்காரனாக சவடால் விடும், அமுதன், விஷயத்தைக் கேட்டு, வீச்சரிவாள் கொண்டு, சுப்புவை, மாறுகால் மாறுகை வாங்குவதாக சபதம் மேற்கொண்டது, மனதிற்கு ஆறுதலாக இருந்தது. ஆனால் ஒன்றும் உருப்படியாக நிகழவில்லை. வேலன் மட்டும் சிரித்துக் கொண்டே ஒரு விஷயம் சொன்னார். அமுதன், சுப்புவின் காலில் விழுந்து அவன் உதவியை நாடியிருக்கலாம் என்பது அவர் கருத்து. இது, ராவ் ஒரு நாள் தெரிவித்த கருத்தோடு ஒத்துப் போனது. அமுதன், சுப்புவைக் கண்டால், அதீத பணிவுடன், மடித்துக் கட்டிய வேட்டியை கீழே இறக்கிக் கொள்கிறான் என்பது.

எனக்கு, வேலனின் அனுமானம் மிகவும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. எவ்வாறு, இவரால் இப்படி யோசிக்க முடிந்தது. எங்களை விடவும், வங்கிப்பணியில் இருந்த ஒரு வருட உபரி அனுபவம் அவருக்கு இவ்வறிவை ஊட்டியிருக்கலாம்.

எங்கள் கூட்டத்தில், எங்கள் வயதொத்த, ஆனால் 2,3 வருடம் அதிக அனுபவம் வாய்ந்த "சுரேஷ்" என்னும் ஒரு சிறுவன் இருந்தான். அவன், நாங்கள் அனைவரும், பல்கியிடம் கற்றதும், பெற்றதும், கெட்டதும் கண்டு எள்ளி நகையாடி, ஆங்கில இலக்கியத்தில் இருந்து பெரிய பெரிய வார்த்தைகளால் எங்கள் அவஸ்தைகளைக் கிண்டல் செய்து கொண்டிருந்தான். என்றாலும், என்ன காரணத்தாலோ, சவரம் செய்து கொள்வதை விட்டொழித்து, சென்னைக்கு மாற்றல் வாங்கிச் சென்று, எங்கள் வங்கியில் இருந்து விலகுவது வரை, "தாடி" வளர்த்து, "தாடி சுரேஷ்" மற்றும் "உதார் சுரேஷ்" என்று பெரும்புகழோடு வளைய வந்தான்.

திருமகள் ஆடி அசைந்து கொண்டு, ஒரு வழியாக நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்து சேர்ந்தது. வேலன் இறங்கவில்லை. அவர் ஒரு வரவேற்பு நிகழ்ச்சிக்கு பாண்டிச்சேரி வரை போக வேண்டியிருந்தது. நான் மட்டும் தளர்ச்சியாக எங்கள் அறைக்குத் திரும்பினேன்.


அதை அறை என்று அறுதியிட்டுக் கூற முடியாது. முந்தின பிறவியில் அது, ஒரு செங்கல் சூளையாக இருந்திருக்க வேண்டியது. ஆறுக்குப் பத்து என்ற அளவில், கிட்டத்தட்ட ஒரு சவப்பெட்டி போலஇரண்டு கட்டில்கள் போடப்பட்டு, நானும் வேலனும் பகிர்ந்து கொண்டு இருந்தோம். அனல், வெளியில் இருப்பதைவிட குறைந்த பட்சம், 3 டிகிரியாவது கூடத்தான் இருக்கும்.

மிகவும் அயர்ச்சியாக இருந்தது. ப்ரயாணக் களைப்பு. சுப்புவின் தொடர்ந்த துரோகம். வேலைப் பளு. சட்டையை மட்டும் கழட்டி, ஹாங்கரில் மாட்டிவிட்டு, கட்டிலில் சாய்ந்து கொண்டேன். முகம் கூடக் கழுவத் தோன்றவில்லை. கதவைக் கூடத் தாழ் போடாமல், இரண்டு கைகளையும், தலைக்குப் பின்னால் முட்டுக் கொடுத்து, கண்களை மூடிக் கொண்டேன். அனல் அதிகமாகி, அதன் பாதிப்பு, கண்களின் இமைகளிலும் கண்டது.

ஒரு வாய் தண்ணீர் பருகினால் தேவலை. கீழே குனிந்து எடுக்க சோம்பலாக இருந்தது. யாரும் வந்து தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டேன். நாம் வேண்டும் போதெல்லாம் கடவுள் உதவி செய்வார் என்று எப்படி எதிர்பார்க்கலாம்?

உடனே பலன் கிடைத்தது. கதவு தட்டப் படாமல், ஒரு கருத்த உருவம் உள் நுழைந்தது.

கலைந்த தலைமுடி. யாராலும் நேர்ப்படுத்த இயலாத தலை. உடலை விடவும், கருத்த உதடுகள். விகாரமான சிரிப்பு. அவனது பெயர் முனுசாமி () முத்துப் பாண்டியாக இருக்கலாம். ஆனாலும், அவன் தன்னை சந்தோஷ் என்று பிறரிடம் அறிமுகப் படுத்திக் கொள்ளவே விழைகிறான்.

கடந்த 10 வருடங்களாக இந்த Bachelor Mansionல் உலா வரும் அவனை, வேண்டுமென்றே, அவனது இயற்பெயரையோ அல்லது புனைபெயரையோ வைத்துக் கூப்பிடாமல், "ரூம்பாய்" என்றே கூப்பிடப் பழகியிருந்தனர்.


என்ன காரணத்தாலோ ரூம்பாயை யாருக்கும் பிடிப்பதில்லை. அவனது பழக்க வழக்கங்களா () கண்ட மேனிக்குப் பிறர் மனதை இங்கிதமின்றி காயப்படுத்துவதா () அவன் உல்லாசமாகத் தன்னைக் காட்டிக் கொள்ள உயயோகிக்கும் வாசனைத் திரவியமா, சரியாக அனுமானிக்க இயலவில்லை. ஓரிருமுறை, நான் அவனிடம், "இந்த scent போட்டுக் கொண்டு வருவதற்குப் பதில், நீ எல்லாரையும் ஒருமுறை செருப்பால் அடித்து விடலாம்" என்று கூறினேன்.

இன்னொரு முறை, நான் ஒரு சமயம், சில பல சிறுவர்களிடம், என்னுடைய செஸ் ஆட்டத் திறமையை நிரூபித்துக் கொண்டு இருக்கும் போது, இந்த ரூம்பாய், குறுக்கே புகுந்து, தான் விளையாடுவதாகக் கூறி, களத்தில் இறங்கி, 3 நிமிடங்களுக்குள்ளாக, என்னுடைய மகாராஜாவை கையகப் படுத்தி விட்டான். எனக்கு, மிகவும் மானக்கேடாகப் போய் விட்டது. அது கூடப் பரவாயில்லை. வேடிக்கைப் பார்க்கக் கூடியவர்கள் மத்தியில், என்னிடம், "தோ பாருப்பா! செஸ் கூட ஒயுங்கா வெள்ளாடத் தெரீல! பாங்குல ஜோலி கிடைச்சுடுச்சு. அல்லாம், தலைல எயுதின கலீஜ்பா. ஒன் நேரம், நீ காசு எண்ணினு கீற. என் நேரம், நா கக்கூஸ் கயுவிக்கினு கீரேன்". இதைப் போல எவ்வளவோ சொல்லலாம். அதனால், சமயம் கிடைக்கும் போதெல்லாம், எல்லோரும் அவனை கூடிய மட்டும் மட்டம் தட்டுவது வழக்கம்.


அதே ரூம்பாயாகப் பட்டவன், இப்போது நான் கண் அமட்டும் நேரம், என் நேரெதிரே, என்ன கேடுகாலத்திற்கோ, தோன்றி இருக்கிறான்.

"ஐய்ய! இன்னா நைனா, சோம்பேறி கணக்கா நாண்டுக்கினு கீற?" என்றவன், என்னை வழக்கம் போல் பேச விடாமல், "ஜல்தியா சொக்கா மாட்டிக்கினு கிளம்பு" என்றான்.

அடப்போய்யா என்றேன் அலுப்புடன்.

"இன்னாய்யா இப்டி அல்த்துக்குற? MKS- ஸூப்பர் படம் போட்டுக்குறான். இன்னா ஜெனம் தெர்யுமா? இப்பமே போனாக்கோ, நோவாம டிக்கிட் எடுத்துறலாம்"

நிறைய மக்கள் வருகிற படங்கள் நல்ல படங்களாக இராது என்பது என் அபிப்ராயம்.

எப்பவுமே நல்ல ஃபிலாஸஃபிக்கள், பல் விழுகிறது போல விழுந்து விடும். சொத்தைகள் சோடை போகாத காலம் இது. இதெல்லாம் அவனுக்கு எங்கே புரியப் போகின்றது.

"ப்ஸ்" என்றேன் அசுவாரசியமாய். நான் வரல்ல. சோமு சாரைக் கூட்டிட்டுப் போ.

"ஐய்ய! கலீஜ் பார்ட்டிப்பா அது. எப்பப் பார்த்தாலும், எதுனாச்சும் பினாத்திக்கினே இருக்கும். நீதான் சரியான ஆளு"

எந்த விதத்தில் என்று கேட்டு, விவாதத்தை மேலும் வளர்த்த விரும்பவில்லை  நான்.

இப்போது வந்திருக்கும் படம் எத்தகையது என்றும், அதில் நடித்திருக்கும் கனவான், புது கெட்டப்பில் அசத்தியிருப்பதாகவும் சொன்னான். அவர் எப்பவுமே ரசிகர்களை ஏமாற்றுபவரல்ல. 5 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கினால், 10 ரூபாய்க்கு, பாய்ந்து பாய்ந்து சண்டை இடுபவர் அவர்.

"இப்ப கிளம்பறியா இன்னா?" என்று கேட்டவாறே, hangerல் மாட்டியிருக்கும் என்னுடைய புத்தம் புது சட்டை மேல் பாய்ந்தான். எங்காவது, அதனைத் தான் உடுத்துக் கொண்டு, என்னால் அதை ஜன்மத்திற்கும் உடுத்த விடாமல் செய்து விடப் போகிறானே என்ற பயத்தில், அவனிடத்தில் இருந்து பறித்து, நான் அணிந்து கொண்டேன்.

மணி பார்த்தேன். 5.30 ஆகியிருந்தது.

"ஜல்தி. இப்பமே போயி க்யூல நின்னாத்தான் டிக்கிட் கிடைக்கும்" என்று அறையும் குறையுமாக, ஆபாச உடையில் இருக்கும் நடிகையைப் போல இருந்த என்னைப் பலவந்தமாக அறையில் இருந்து வெளியில் 'இஸ்து' வந்தான். எங்காவது நான் தப்பிப் போகாமல் இருக்க வேண்டுமே என்று, என்னுடைய வலது கையை, அவனது சுகந்தமான அக்குளில் செருகிக் கொண்டு நடக்க வாரம்பித்தான்.

பொற்கைப் பாண்டியனைப் போல், இனிமேல் என்னால் எனது வலது கையை வாழ்நாளுக்கும் உபயோகிப்பது துர்லபம் என்றே தோன்றியது.

  
அவனுடைய அதிர்ஷ்டம் உடனே பஸ் வந்தது. ஒட்டடை போல மனிதர்கள் படிந்து கிடக்கிற பஸ். அசோகச் சக்கரவர்த்தி ஆறாம் வகுப்பு படித்த போது போடப்பட்ட ரோடு. அதில் ஊர்வலம் போக இதோ தேசிங்கு ராஜன் முதன் முதல் வெள்ளோட்டம் விட்ட பஸ். அதற்குப் பின் ஆறேழு முறை எட்டு நட்டும், ஒன்பது போல்ட்டும் மாற்றி இருக்கிறார்கள். பஸ் ஒருக்கணம் கூட தாமதியாது கிளம்பியது.

இவ்வகை வாகனங்களில் ப்ரயாணம் செய்ய, கடவுள் கொடுத்த ஆயுள் ரேகைகள் பற்றாது. கொழுவடிக்கிற பொன்னம்பல ஆசாரிகள், மீதமிருக்கிற பூவரசுக் கட்டைகளில், எங்கள் துன்புறுத்தல் சகியாமல், செதுக்கித் தருகிற தாயக்கட்டைகளில், ஆழப்பதிந்திருக்கிற பள்ளங்கள் போல அமைந்திருத்தல் அவசியம்.


உலகத்தின் அனைத்து சுகந்தங்களையும், இவ்வகைப் பயணங்களில் இலவசமாக அனுபவித்து விடலாம். எங்களுக்கு முன்னால் திணிக்கப் பட்டிருந்த எவனோ, மதிய உணவாக பெருச்சாளியை உட்கொண்டு, சரியாக ஜீரணமாகாமல் பஸ் ஏறியிருக்கிறான். இவர்கள் சுலபத்தில் எல்லா நாற்றங்களையும், நம்மேல் வீட்டிற்கு வெள்ளையடிப்பது போல் அடித்துவிட்டுப் போகிறார்கள்.

ப்ரயாணச் சீட்டு வாங்குவதற்கு, உண்மையில் சர்க்கஸ் பழகியிருக்க வேண்டும். மாயாவிகளைப் போல், தரையில் கால் பாவாது, படிக்கட்டில் தொங்கிக் கொண்டிருக்கும், நம் போன்ற சாமான்யர்கள் கீழே விழாமல் சமாளிக்கின்ற போது, டிக்கெட் வாங்குவது ஏது? நம்முடைய எண்ண ஓட்டங்களும், அசௌகரியங்களும் புரிந்து கொள்கிற கண்டக்டர்கள் கிட்டுவது என்ன எளிதா?

ஓருவழியாக சில்லறையப் பீறாய்ந்து எடுத்துக் கொடுத்தேன். நல்ல எண்ணம் கொண்ட ஒரு எலி வாங்கி, மற்றொரு தவளை கையில் திணித்து, அது மிகவும் சிரமப்பட்டு, கண்டக்டர் கையில் செலுத்த, அவர் அதனை வெகு லாவகமாகச் சரிபார்த்து, சரியான டிக்கெட்டைப் பிரித்தெடுக்க, தன்னுடைய ஆள்காட்டி விரலையும், நடுவிரலையும், குடல் வரையில் பாய்ச்சி, டிக்கெட்டை நன்றாக அலம்பி, என் கையில் எப்படியோ திணித்தார்.

வெள்ளையடிக்கப் படாத சுவர்கள் கொண்டு, MKS என்று பெரிதாக எழுதப்பட்டு, கண்ணீரும் கம்பலையுமாய் விஜயகுமாரி போல் நிற்கிற ஒரு கட்டிடத்தின் முன் பஸ் கிரீச்சிட்டு நின்றது. நான் கொஞ்சம் சுதாரித்து இருக்கலாம்தான். ஒரு பெரும் கூட்டம், என்னையும் Footboard  ஆகப் பாவித்து, என் மீதேறி, மதிலைக் கடந்து, தியேட்டருக்குள் ப்ரவேசித்தது. ஒரு மின்னல் கொடியைப் போல், நட்ட நடு ரோட்டில் வீழ்ந்து கிடக்கிற என்னைக் கைலாகு கொடுத்துத் தூக்கிய ரூம்பாய், என்னிடம் 'சரியான அசமஞ்சம்பா' என்று பொருள் படும்படியான ஒரு தென்னாற்காட்டுப் பாஷையைப் பிரயோகம் செய்தான். எனக்கு சரியான உள்காயம் இருக்கும் என்றுதான் தோன்றியது. என் உபாதையைப் பற்றி சிறிதும் கவலைப்படாத அவன், என்னை இறுகப் பற்றிக் கொண்டு, மறுபடியும் அக்குள் ப்ரயாணம் தொடர்ந்தது.

லேசாக இருட்டவாரம்பித்தது. ஏதேதோ சப்தங்கள் எழுந்தன. அன்றில் பறவைகளும், நாகணவாய்களும் இருப்பிடம் திரும்பி ஓய்வை அறிவுக்கும் முஸ்தீபுகளாயிருக்கும். நான், அதுகாறும், அன்றில் மட்டும் நாகணவாய் பறவைகளைப் பார்த்தது இல்லை என்றாலும், எப்பவோ சிறுவயதில் படித்ததை, சும்மாவேனும், என்னத்திற்கோ ஒப்பிட்டு நினைத்துப் பார்க்க நன்றாக இருந்தது.

டிக்கெட் எங்கு கிடைக்கும் என்று ரூம்பாயிடம் அவசியமில்லாமல் வினவினேன். கிடைக்காமல் இருந்தால் தேவலை என்று உள்மனசு ஆதங்கப்பட்டது. "அதா பாரு" என்று தொலைவில் குட்டைச் சுவர்களால் சூழப்பட்ட ஒரு கொட்டகையைக் காண்பித்து, அந்தத் திக்கில் என்னை நெட்டித் தள்ளிக் கொண்டு போனான்.


போகிற வழியில் வைத்திருந்த ஒரு தட்டியில், சினிமா போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. ரயில்வே ரிசர்வேஷன் சார்ட்டில், தன் பெயர் தேடுகின்ற ப்ரயாணி போல், மக்கள் அனைவரும், வாய்பிளந்து, பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஊரெல்லாம் புகழ்கிற அந்த நடிகன், தலையை மழுங்கச் சிரைத்துக் கொண்டு, நன்கு உப்பிய புஜங்களொடும், வெற்று உடம்போடும், தண்ணீரைப் பிளந்து கொண்டு நின்று கொண்டிருந்தான். ஓரத்தில், கதாநாயகி, நாங்கள் அனுதினமும், இரவு உட்கொள்ளும், சங்கரையர் மெஸ்ஸின், பழுப்பேறிய ஒரு சுவற்றில், மிகவும் நளினமாக அலங்கரிப்பவள், கையில்லாத ஒரு பனியனை மட்டும் அணிந்து கொண்டு, தன்னுடைய அழகான பற்களைக் காட்டி, சிரித்துக் கொண்டிருந்தாள்.

ரூம்பாயை பெரும்பாடுபட்டு அந்தக் கூட்டத்தினின்றும் விடுவித்து, விரைவாக டிக்கெட் கவுண்டரை அடைந்தோம். "இன்னம் 10 நிமிசத்துல டிக்கிட் கொடுப்பாங்க" என்ற அவனது கூற்றை நம்ப முடியவில்லை. ஒரு மனித முகம் தென்படவில்லை அங்கு. மாறாக, கரியேறிய அச் சுவர்கள், சுருட்டு ஊதுகிற வித்துவான்கள், அனுதினமும், அந்தரங்க சுத்தி செய்து கொள்கிற இடமாகத் தென்பட்டது.

"இந்த இடம்தானா" என்று சந்தேகமாகக் கேட்டேன்.

"அட, எத்தினி தபா இங்க வந்துக்கினு கீறேன். எனிக்குத் தெரியாதத பெரீசா கண்டுக்குனே" என்று, அவனுடைய அனுபவத்தைச் சந்தேகப்பட்டதை ஜீரணிக்க முடியாதவனாய் வெடித்தான்.

எங்கிருந்தோ ஒரு உற்சாகம் என்னைப் பீடித்துக் கொண்டது. கூடவே ஒரு பதற்றமும். எனக்குள்ளே ஆழமாகப் பரவியிருப்பதாக நான் நம்பிக் கொண்டிருக்கும் ரசனைகளை, லேசாக ஒதுக்கி விட்டு, இந்த மாதிரிப் படத்தையும் பார்த்து ரசிக்க என்னைத் தயார் செய்து கொண்டேன். மகேஷுக்குத் தெரிந்தால் வருத்தப் படுவான். சொல்ல முடியாது, அவனும் கூட, இதே படத்தை, சென்னையில் பார்க்கிறானோ என்னவோ? ரூம்பாயை இறுகப் பற்றிக் கொண்டு, யாருமில்லாத அந்த க்யூவில் முதலிரண்டு ஆட்களாக நின்று கொண்டோம்.

அடுத்த சில நிமிடங்களுக்கு, எங்களிடையே என்ன மாதிரியான சம்பாஷணை நிகழ்ந்தது என்று சரியாக ஞாபகம் இல்லை. பொதுவாக எனக்குப் புரியாத பாஷையிலேயே என்னத்தையோ பேசினான். சற்று மௌனம் கூட. சினிமாத் தட்டியைச் சுற்றி, எதையோ ஈக்கள் மொய்ப்பது போல கூட்டம் பெருகிக் கொண்டே இருந்தது.

"ஒரு நிமிசம் சார்" என்று, ஒற்றை விரலை, நிமிஷத்திற்காகவும் உயயோகித்த ரூம்பாய், என் அனுமதியின்றி சடுதியில் கரைந்து போனான்.

எனக்குள் பதற்றம் கூடிற்று. கடங்காரன் இன்னும் வரவில்லை. நிற்கிற இடம் சரியா என்றே தெரியவில்லை. ஒரு பயல் அருகில் வரவில்லை.

திடுமென டிக்கெட் கொடுப்பதற்கான மணியடித்தது. நான் மிதமிஞ்சியப் பதற்றத்துடன், ரூம்பாயை இங்குமங்கும் தேடிவிட்டு, ஜேபியில் கைவிட்டு, சரியான சில்லறையைத் தெரிந்தெடுத்து நிமிர்ந்தால், கவுண்டர் திறந்து விட்டான்.

ஒரே ஒருக் கணம்தான். கண்ணிமைக்கும் நேரத்தில், எங்கிருந்துதான் அவ்வளவு கூட்டம் வந்ததோ தெரியவில்லை. Q, R, S T- லாம் ஒன்றுமில்லை. கவுண்டரின், நிறமிழந்த கம்பிகளில், துளைகளில், ஆயிரம் கைகள், விரல்கள், ரூபாய் நோட்டுக்கள்.


கவுண்டரின் உள்ளே நிற்பவனைப் பார்க்க இயலவில்லை. அவனாலும், வெளியே என்ன நடக்கிறது என்பதைப் பார்த்திருக்க முடியாது.

அசுரனான, கார்த்த வீர்யாஜுனன், தன்னுடைய ஆயிரம் கைகளால், நர்மதை நதியைத் தேக்கியதைப் போல, ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைகள் அவனைத் தேக்கியிருந்தன.

தமிழில் சாத்தியமான அனைத்து கெட்ட வார்த்தைகளையும், சரளமாக புழங்கியவாறு, மிகுந்த லாவகத்துடன், அவன்முன் செலுத்தப்பட்ட சில்லறைகளுக்குத் தக்கவாறு, டிக்கெட்டுகளைப் பரிமாறினான். என்னுடைய கைகளிலும், இரண்டு டிக்கெட்டுகள் பரிமாறப்பட்டன. கைகளைத்தான் மீட்க முடியவில்லை. மிகுந்த பலத்தைப் ப்ரயோகித்து, கைகளை வெளியே இழுத்ததில், நிதானம் தவறி, தடாலென்று கீழே விழுந்தேன். என்னால் சுலபமாக எழ முடியவில்லை. ஒரு பெரிய மனிதச் சுழலில் சிக்கி, மீள வழி தெரியாமல், மீதமிருந்த கொஞ்ச நஞ்சம் பலத்தையும், தைரியத்தையும் சேகரித்துக் கொண்டு, "தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனைப்" போல, என்னைச் சுற்றிக் கவிந்திருந்த பன்னீராயிரம் வேளிரையும் புறங்கண்டு, வெளிப்பட்டு,  "ரூம்பாய், ரூம்பாய்" என்று மைக்கேல் மதன காமராஜனைப் போல, பிதற்றினேன்.

பார்த்தால், என்னைப்பற்றிப் புகழ்ப் பரணி பாட வேண்டிய, ரூம்பாய் என்ற அந்த மிருகம், ஸ்டைலாக சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டு, நக்கலாக என்னைப் பார்த்து, "இன்னா சார், செமித்தியா மாட்டிக்கினியா?" என்று கெக் கெக் என்று இளிக்கிறான்.

அவனது, கழுத்தில் ஏறி இறங்குகிற சங்கினை, என்னுடைய கூரில்லாத பற்களால் கவ்வித் திருப்பி, வலம்புரிச் சங்காக மாற்றி, அருகாமையில் இருக்கிற காவல் நிலையத்தில் சரணடைந்து விட்டால் என்ன என்ற என்னுடைய எண்ணத்தை, அவனது, நச நசவென்று ஈரம் கசிகிற கழுத்தினை உத்தேசித்து, மாற்றிக் கொண்டு, கசங்கிய உடையில், அவனைத் தொடர்ந்து, கொட்டகையில் ப்ரவேசித்தேன்.

அசட்டு மஞ்சளில் வெளிச்சம் என்ற பெயரில் இருட்டை நிரப்பிக் கொண்டிருந்த விளக்குகளின் ஊடே நீண்டு கிடந்தது கொட்டகை. ஈசான மூலையில், இழுத்துப் பிடித்து, ஒட்டுப் போட்டு இருந்தாலும், வெளுப்பாகித் தெரிந்த திரையைத் தவிர வேறொன்றும் பளிச்சென்று இல்லை.

கொட்டகைகளுக்கு எருமைகள் பரவாயில்லை என்று தோன்றியது. தண்ணீரைக் கண்டால் தன்னைத்தானே சுத்திகரித்துக் கொள்ளும் எருமைகள்.

ஒரே கையால் எழுதியதைப் போல நாற்றமும் இறைச்சலும் விரவிக் கிடந்தன. நாற்றமும் கடவுளைப் போலத்தான், எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதால்.

"இன்னா சார், இங்கனியே நின்னுக்குனு பராக்கு பார்த்துக்குனு கீறே? இதுக்கு மின்னே தியேட்டரையே பாத்ததுல்லயா நீயி" என்று என் மௌனத்தைக் கலைத்தான்.

அவனது கவலை ந்யாயமாகப் பட்டது எனக்கு. கண்சிமிட்டும் நேரத்தில் கொட்டகை நிரம்பிக் கொண்டே வந்தது. அருகாமையில் இருந்த அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டன. இனி, இரண்டு இருக்கைகளாகக் கிடைப்பது துர்லபம் தான்.


அவ்வளவு இருட்டிலும், எங்கயோ மூன்று நான்கு இருக்கைகளைப் பார்த்துவிட்டான் போலும். இலங்கையைக் கண்ட அனுமன் போல், காற்றில் எழும்பி, வழியில் இடைப்பட்ட கணிசமானவர்களின் கழுத்து எலும்புகளைப் பதம் பார்த்து இலக்கை அடைந்தான். அந்த இருக்கையில் ஒன்று கார்னர் இருக்கை. அவன் அதனை அடைந்து விடும் தருணம், அவனை விடவும் வேகமாக ஒரு உருவம் பாய்ந்து அடைந்து விட்டது. அந்த உருவத்திற்கு குறைந்தபட்சம் 70வது வயதாவது இருக்கும். 60வருட அனுபவம், இளைஞனான ரூம்பாயை வீழ்த்தி விட்டது. ரூம்பாய், மனம் நொந்தபடி, மற்ற இரு இருக்கைகளைப் பிடித்து, கூட்டத்தினுள் என்னைத் துழாவினான்.

நான் சுழலில் அகப்பட்ட சுந்தரச் சோழனைப் போல (சுனாவுக்கு சுனா) தட்டுத் தடுமாறி அவ்விடத்தை அடைந்து இருக்கையில் வீழ்ந்தேன்.

காற்றோடு, fanம் விழுந்துவிடாத பத்திரத்தில் இருந்த இருக்கை அது. வியர்வையும், சிகரெட்டும், பீடியும், கெட்டுப்போன திண்பண்டங்களும் கலந்த கலவையாக வீச்சம் அடித்து குமட்டிக் கொண்டு வந்தது. கர்ச்சீப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தேன். அதற்குள், ரூம்பாயும், முதியவரும் சினேகமாயிருக்க வேண்டும். ரூம்பாய் அவரிடம் எதனையோ கூற முற்பட்டு, வலுக்கட்டாயமாக என்னையும் இழுத்து, "இத்தக் கேளு" என்றான்.


நாங்கள் வந்திருந்த படத்தின் கதாநாயகனைப் பற்றித் தெரியுமா என்று கேட்டான். தெரியாது என்றோம். ஒரு புழுவைப் போல என்னைப் பார்த்துவிட்டு, தமிழ் நாட்டின் பிரபலமான ஒரு பத்திரிக்கையின் பிதாமகரைப் பற்றிக் கூறினான். அவரால்தான், இந்த நாட்டிற்கே எழுத்தறிவு கிட்டியது என்ற தகவலையும் தெரிவித்தான். நம்முடைய கதானாயகனுக்கு, அவர் எதோ ஒரு வகையில், சின்ன பெரியப்பாவோ () பெரிய சித்தப்பாவோவாம். இதனைக் கூறும் போதே, அவன் கைகள் உணர்ச்சிப் பெருக்கில் நடுங்கின. கேட்டுக் கொண்டிருந்த பெரியவரின் கண்களும் குளமாயின. இருவருக்கும் ஏக காலத்தில் மயிர்க்கூச்செறிந்திருக்க வேண்டும். இருவருடைய ரோமங்களும் ஒன்றுக்கொன்று பின்னிக் கொண்டன. அந்த நேரம் பார்த்து, திரையில் விளம்பரப் படங்கள் போட ஆரம்பித்தனர். சுய உணர்வு வரப்பெற்ற இருவரும், ரோமங்கள் முடிபோட்டிருந்ததால் '' வென்று வேதனையோடு பிரிந்தனர்.


விளம்பரங்களின் நடுவே தியேட்டருக்குள் புகை பிடிப்பதைத் தடை செய்யும் slide ஒன்றும் காண்பிக்கப்பட்டது. அது வரை, புகை பிடிப்பதை மறந்திருந்த ரூம்பாய், சட்டென்று ஞாபகம் வரப்பெற்றவனாய், உள்ளாடைக்குள் உல்லாசமாய் கை விட்டு, ஒரு பிய்ந்து போன சிகரெட்டை வெளியில் எடுத்தான். என்னுடைய அறிவுறை எதுவும் அவன் காதில் ஏறவில்லை. மிகவும் ஸ்டைலாக அதை வாயில் செருகி பற்றவும் வைத்தான்.

அப்படியே கண்கள் ஒரு லயிப்பில் செருக, கிட்டத்தட்ட அரை சிகரெட்டை ஒரே இழுப்பில் உள்ளே இழுத்து, மார்பின் விலா எலும்புகளில் கூட சேகரித்து, பின் வெகு அழகாக, தலையை ஒருக்களித்து, அருகில் அமர்ந்து தேமேனென்று slide பார்த்துக் கொண்டிருக்கும் முதியவர் முகத்தில் குப்பென்று ஊதினான்.

அத்துணைக் குறுகிய கால அவகாசங்களுக்குள், தன் முகத்தின் மிக எதிரே, நிகழ்ந்து விட்ட  அந்தத் தாக்குதலை எதிர்பார்த்திராத அந்த முதியவர், அவ்வளவு ஆரோக்கியமான காற்றையும், தன்னுடைய ஈரல் கொள்ளுமளவும் ஸ்வாசித்து, நல்ல காற்றிற்காகத் திணறிலொக்கு லொக்கு  என்று நாலு முறை இருமினார்.

பின்னர், தன் வயம் வரப் பெற்றவராய், ரூம்பாய் பக்கம் கடும் கோபத்துடன் திரும்பினார். பழுப்பேறிய அவரது மீசையின் கீழே அவரது தடித்த உதடுகள் அசைவது தெளிவாகத் தெரிந்தது. என் வாழ் நாளில் அவ்வளவு சரளமாக தமிழ் பேசிக் கேட்டதே இல்லை. ஓருசில நிமிடத் துணுக்குகளுக்குள்ளாகவே அவர் ரூம்பாயின் மூதாதையர்கள் () அதற்கும் முன்னர், கிட்டத் தட்ட ஆதாம் ஏவாள் வரை கூடச் சென்று, வரிசைக் கிரமமாக, பரம்பரையின் அனைத்து பெண்டிரின் கற்பு நிலைகளையும் சந்தேகப்படும் விதமாக வார்த்தைகளை எடுத்து வீசினார்.

எனக்கு ஒரு அட்சரம் புரியவில்லை. சொல்லகராதி, பொருளகராதி () சதுரகராதி உள்பட எந்த ஒரு அகராதியிலும் அடங்காத வார்த்தைப் பிரயோகம். பின்னாட்களில் கோனார் உரைகள் இதற்கென ப்ரத்யேகமாய் உருவாக்கப் படலாம்.

ரூம்பாய் இதற்கெல்லாம் கவலைப் பட்டதாகவோ, வெட்கப் பட்டதாகவோ தெரியவில்லை. அவன் பாட்டுக்கு, சிகரெட்டை விதம் விதமாக அனுபவித்து ஊதுவதில் ப்ரயத்தனம் செய்து கொண்டிருந்தான். காற்றில் வளையம் இடுவது முதல், RTO Officeல் போடுவது போல் எட்டெல்லாம் போட்டுக் காண்பித்தான்.

முதியவரின் சுருதி கொஞ்சம் இறங்கியது. லேசாக இறைக்கவாரம்பித்தது. ரூம்பாயை நன்றாக உலுக்கி, மேலும் சில நல்ல வார்த்தைகளைக் கூறியதோடு நிறுத்தி இருக்கலாம் அவர். மாறாக, "மூஞ்சில போயி ஊதறியே மூதேவி, அப்பால, அந்தக் கசுமாலம் மூஞ்சில ஊதறது தானே" என்று என் பக்கமாகக் கையைக் காட்டி, அறிவுரை வேறு பகர்ந்தார்.

தன்னுடைய முயற்சிகளுக்கு ஒரு வடிகால் கிடைத்து விட்ட திருப்தியில், ரூம்பாயின் கண்கள் ஒளிர்ந்தன. அவனது முகம், ஒரு oscillation fan-ஐப் போல என் பக்கம் திரும்பியது.

நான், என்னுடைய உடலின் அனிச்சை உணர்வுகள் அனைத்தும் உந்த, என்னுடைய கைக்குட்டையால், நாசித்வாரத்தை நன்றாக மூடிக்கொண்டு, சரேலென்று எழுந்து நின்றேன். அந்த நேரம் பார்த்து, திரையில், உரித்த கோழியைப் போல இருந்த ஒரு வடக்கத்தி நடிகனும், பெயர் நிஜமாகவே போன ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரனும், நல்ல தேகபுஷ்டியும், நிறமும், சிறிதளவே ஆடை அணிகலன்களும் அணிந்த ஒரு வடக்கத்தி நடிகையிடம், ஒரு புனித நீரால் தயாரிக்கப் பட்ட ஒரு சோப்பினால் குளிப்பது எப்படி என்று விளக்கிக் கொண்டிருந்தனர். அடுத்த காட்சி அனேகமாக அந்த மாது ஒரு நீரருவியில் குளிக்கும் காட்சியாகத்தான் இருக்கும். இத்தகைய நேரத்தில் என்னுடைய நிற்பு, பின் வரிசைகளில் அனேகம் ஆட்சேபணைகளைக் கிளப்பி இருக்க வேண்டும். ஒரு பேரிரைச்சலே கேட்டது. நான் என்னுடைய விதியை வெகுவாக நொந்தபடி, மறுபடியும், தளர்வாக என்னுடைய இருக்கையில் சரிந்தேன். உடல்லியும், சோர்வும் விசுவரூபம் எடுக்கத் துவங்கியிருந்தன.

இதனிடையே ரூம்பாய் வேறு, கொள்ளிவாய்ப் பிசாசு போல புகை விட்டுக் கொண்டு, கடைகளில் சாம்பிராணி போடுவன் போலத் தோற்றமளித்தான். போறாததற்கு, தான் சிகரெட் பிடிக்கக் கற்றுக் கொண்டதை, ஏதோ கனிஷ்கர் குஷாண சாம்ராஜ்யத்தை விஸ்தரித்த வரலாறு போலக் கூறவாரம்பித்தான்.

எனக்கு மயக்கமாக வந்தது. நல்ல பசி வேறு. இருக்கையில், இன்னம் தாழ்வாக என்னை இருத்திக் கொண்டு, திரையை வெறிக்க ஆரம்பித்தேன். என்னைச் சுற்றிக் கவிந்து இருந்த புகை மூட்டமே மேகமூட்டமாக மாறி, அதன் ஊடாகத் திரையில் "சூரியன்" உதித்தது.






---oooo---