ஒரு அயோக்யனின் கதை
முதல் பாகம்
(1) சிட்லபாக்கத்தில் சீரழிந்த காதை
கடைசியில் "அவன் கமலாவையோ, விமலாவையோ திருமணஞ்செய்து கொண்டான்" என்று' ஞ்' போட்டு முடிப்பது என்று சபையில் முடிவாகியது. இந்தக் கதையை மகேஷ், ரொம்பவும் ஸ்டைலாக, கிட்டத்தட்ட சுஜாதா பாணியில் எழுதியிருந்தான். அவன் வெளியேறுகிற பட்சத்தில், சபை கலைந்து விடுகிற அபாயம் நேரிடும். சபை என்பது பொற்சபையோ சிற்சபையோ கிடையாது. நான், மகேஷ் மற்றும் சீனிவாசன் உள்ளடக்கிய மிகவும் சிறிய சபை. 'சிறிய பை' என்று கூட சொல்லலாம்.
இந்தக் கூட்டணி எவ்வாறு உதயமாகியது என்று யோசிக்க முடியவில்லை. நானும் மகேஷும் ஒரே ப்ராயத்தில் வேறு வேறு கல்லூரிகளில் படித்து வந்தோம். ஆனால், சீனி வயதில் மிகவும் பெரியவன். அவன் எவ்வாறு எங்கள் சபையில் இணைந்தான் என்று இன்று வரை புரியவில்லை.
அந்நாளில், சிட்லபாக்கம் ஒரு ப்ராந்தியமாக இருந்தது. வருடத்திற்கு ஒருமுறை வரும் 52D பஸ்ஸில் ப்ராட்வே செல்லும், அவ்வூரின் மண்ணின் மைந்தர்கள், மெட்றாஸ் சென்று வருகிறோம் என்று சொல்வதைக் கேட்க அழுகையாக வரும். அங்கொன்றும் இங்கொன்றுமாக காலனிகள் உருவாகத் தொடங்கியிருந்தன. ஆங்காங்கே வீடுகள். ஒவ்வொரு தெருவும் ஒரு தனிப்பட்ட நகராகக் கருதப்பட்டன. அந்நகர்களில், ஒவ்வொரு நகருக்கும் ஒரு கிரிக்கெட் கோஷ்டியும், அதற்கு ஒரு தலைவனும் உதயமாகியிருந்தார்கள். இவைகளில் சேரமுடியாதவர்கள், சேர்ந்தவுடன் விரட்டியடிக்கப் பட்டவர்கள் என்று ஒரு கூட்டம் உண்டு.
அவைகளில் கொஞ்சம் மிகையாகப் பேசிக்கொண்டு திரிகிற ஒருசிலர் மனநிலை பாதிக்கப் பட்டவர்களாகக் கருதப்பட்டு தெருக்களாகிய நகர்களில் ஒரு மார்க்கமாக திரிந்தனர். என் தெருவுக்கு நானும், சீனிவாச நகருக்கு மகேஷும், பழைய சிட்லபாக்க்கத்தில் சீனிவாசனும், இவ்வகையில் ஒதுக்கி வைக்கப்பட்டுத் திரிந்தவர்கள்.
சீனிவாசனுக்குக் கிரிக்கெட் தெரியாது. புராணகாலத்தில், ஸ்ரீராமனும், ஸ்ரீகிருஷ்ணனும், கிரிக்கெட் விளையாடாததால், அவ்வகை விளையாட்டுக்களைக் கண்ணால் காண்பதும் பாபம் என்பது அவன் கொள்கையாக இருந்தது. எனக்கு கிரிக்கெட் என்றால் உயிர்.
மகேஷ், தன்னை பெர்னார்ட் ஷாவாக பாவித்து, க்ரிக்கெட்டைக் கேவலமாகப் பேசிவிட்டு, சாயங்காலம், வழக்கம் போல, இலக்கியப் பேராய்வுக்காக அவன் வீட்டுக்குப் போனால், ஒரு சிவப்பு நிற லுங்கியை, தொடை தெரிய மடித்துக் கொண்டு, எதிர்த்தாற் போல, காலி க்ரௌண்டில், சாதுவாக விளையாடிக்கொண்டு இருக்கும், சிறுவர்களுக்கு மத்தியில் பாய்ந்து, எவனிடமிருந்தோ மட்டையைப் பிடுங்கிக் கொண்டு, களத்தில் நின்று கொண்டிருப்பான். பொதுவாக அங்கு விளையாடக் கூடியிருக்கும் கூட்டம் எங்களை விடவும் சிறியவர்களாகவும், அசைவம் அறியாதவர்களாகவும் இருப்பார்கள். பல நிறங்களில் வரிகளிடப்பட்டு, ரொம்பவும் பழையதாகிப் போன, ரப்பர் பந்தில், பலகீனமாக, பந்து எறிபவர்களாக இருப்பார்கள்.
மகேஷ் கொஞ்சம் உயரமாக இருப்பான். அவன் கையில் மட்டை மிகவும் சிறியதாக இருக்கும். அதைத் தரையில் தட்டி விளையாட அவன் சற்றே குனிய வேண்டியிருக்கும். மிகவும் கவனத்துடன் அவன் தயாரான தருணத்தில், அவனுக்கு என்று விசேஷமாக வ்யூகம் அமைக்கப் படும். அவனிடம் மட்டையைப் பறிகொடுத்தவன், அருகாமையில், மட்டை பட்டுவிடாத பத்திரத்தில், சில்லி பாயிண்ட்டில் நின்று கொள்வான்.
யார் எங்கே நின்றாலும், சந்துரு, என்கிற ஒரு குண்டுப் பையன், மைதானத்தில், நெருஞ்சி முட்கள் பாவிக்கிடக்கிற, ஈசான மூலையில் நின்று கொள்வான். அவ்விடத்திற்கு போட்டியிராது. அவனிடத்தில் அதற்கென்று விசேஷ காரணம் இருந்தது. விளையாட வரும்போது, கால் நிஜார் நிறைய, வறுத்த கடலையை நிரப்பி வருகிற வழக்கம். ஒவ்வொரு கடலையாக எடுத்து, ரகசியமாக,கன்னங்களை சொறிந்து கொள்வது போல், வாயில் செலுத்தி, ரசித்து சுவைப்பான்.
இப்போது, பந்தை எறிகிற பையன், தன்னை ஏதோ அந்நாளைய அப்துல் காதிராகப் பாவித்து, உடம்பை அஷ்ட கோணலாகத் திரித்து, மகேஷை நோக்கி எறிந்தான். நான் அறிந்தவரை, இவர்கள், அளவு குறைந்த பந்துகளை எறிவதில்லை. தோள்களுக்கு மேலாக எகிறுகிற பந்துகளை எறிய நல்ல போஷாக்கு தேவை. இம்முறையும், பந்து மட்டைக்கு நேராக, சற்றே சரியான அளவில் எறியப்பட்டது. மகேஷ், இதனை முன்னமே கணித்தவன் போல, பந்து தரையை முத்தமிடுவதற்கு ஒரு கணம் முன்னால், நல்ல வலுவில் அடித்தான். இடது காலை ஒரு அடி முன்னால் நகர்த்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது.
ஆனாலும், பந்தின் ப்ருஷ்ட பாகத்தில் சரியான அடி விழுந்தது. நன்றாகக் கெந்தப்பட்டு, பந்து, வட கிழக்கில், சந்திர மண்டலம் நோக்கி பறக்க ஆரம்பித்தது. அந்த நேரம் பார்த்து, கேரளத்தில், தென்மேற்குப் பருவ மழை உற்பத்தியாகி, பெருங்காற்று ஒன்று, பந்து ப்ரயாணிக்கிற திசைக்கு எதிர் திசையில் பாய்ந்து பந்தைத் தாக்கியது. உல்லாசமாக உயரே போய்க் கொண்டிருந்த பந்து, ஒரு கணம் திகைத்து, செய்வதறியாது, அரைக்கணம் தாமதித்து, அப்படியே, நேர்கீழாக, புவியீர்ப்பு விசைக்குப் பணிந்து, ஈசான மூலையில் இரண்டு கடலைகளுக்கு இடைப்பட்ட இடைவெளியில், சந்துருவின் தடித்த விரல்களுக்குள் அளவெடுத்தது போல் தஞ்சம் புகுந்தது.
இவையெல்லாம் ஒரு துரித கதியில் நடந்து முடிந்து விட்டிருந்தன. மகேஷின் விக்கெட்டிற்கு பெரும் ஆரவாரம் இல்லை. அன்றாடம் நிகழ்கிற நிகழ்வாகவே இது இருந்திருக்க வேண்டும். மகேஷ், ஒரு மெலிய புன்னகையில் சும்மா ஒரு டமாஸ்டா என்றவாறே எங்களை நெருங்கி, சடுதியில், தி.ஜா. விற்குத் தாவி விடுவான்.
மகேஷை உத்தேசித்து என் கிரிக்கெட்டின் வீச்சினை அளவிட முடியாது. என்னுடைய நாற்பது கால கிரிக்கெட் வரலாற்றில் நான் அதிக பட்சமாக பத்து முறை அவுட் ஆகியிருந்தால் அதிகம். ரன் எடுக்கும் உத்வேகம் இருப்பவர்கள் மட்டுமே பொதுவாக அவுட் ஆவார்கள்.
பொதுவாக எனக்கு ரன் எடுக்கும் இச்சை எழுந்ததில்லை. எனக்கு முன்னோடிகளான, அம்ஷுமான் கைக்வாட், யஷ்பால் ஷர்மா, சேத்தன் சௌஹான், ஜெஃப்ரி பாய்காட், க்ரிஸ் டாவ்ரே போன்றவர்கள் ரன் எடுப்பதில் அக்கறை கொள்ளாதவர்கள். அதிலும், க்ரிஸ் டாவ்ரே என்கிற ஆங்கிலேயன், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஓர் ஆட்டத்தில்,(மெல்பார்ன் என்று ஞாபகம்), ஆட்டத்தின் மூன்றாவது பந்திலேயே 'கூச்'அவுட்டாகிவிட, மைதானத்தில் நுழைந்தவன், 85 ஓவர்களுக்கு அப்புறமும், லில்லிகளையும், பாஸ்கோக்களையும் சமாளித்து, வெகு ஜாக்கிரதையாக விளையாடி, 35 ரன்கள் எடுத்து இருந்தான். இதில், ஒரு கணப்பிசகில், யார்ட்லி வீசிய பந்தில், விளிம்பில் பட்டு சிதறிய ஒரு நான்கும் அடக்கம். பொழுது சாயும் நேரத்தில், பார்வையாளர்கள் மத்தியில் ஒரு பரபரப்பு. ஒரு பெரும் கூட்டம் திரண்டு, அங்கிருந்த காவல்களை சுலபமாக மீறி, டாவ்ரேயை நெருங்கியது. அவன் சிறிதும் கலங்கவில்லை. ஒரு மாவீரனைப்போல களத்தில் நின்றான். அவனை நெருங்கிய அக்கூட்டம்,ஒரு சிவப்பு நிற நாற்காலியை அவனுக்கு அளித்து, நெடுநேரமாக வெறுமனே நிற்பதால், கால் வலிக்கும் என்பதால், உட்கார்ந்து ஆடுமாறு பணித்தது.
ஆனாலும், என்னை விடவும், டாவ்ரே அதிக அளவில், அவுட் ஆகியிருக்க வேண்டும். ஒரு பிப்ரவரி மாதத்து, 3வது டெஸ்டில், அவனை நீக்கி விட்டார்கள். என்னை யாரும் அவ்வாறு நீக்கியது இல்லை. ஏனென்றால், என்னை யாரும் சேர்த்துக் கொள்வது இல்லை. 10 அல்லது 15 ஓவர்கள் நிரம்பிய ஒரு பந்தயத்தில், பந்துகளை வீணடிப்பவர்களை யாரும் விரும்புவது இல்லை.
அதற்காக, நான் ஒன்றும் தாழ்ந்தவன் இல்லை. 70களின் மிகக் கடைசியில், களிச்சரணின், ஒரு சொத்தை அணிக்கு எதிராக, சுனில் காவஸ்கர், பம்பாயில் 205 எடுத்த, அதே தினத்தில், நான், 206 ரன்கள் எடுத்து சாதனை செய்திருந்தேன். காவஸ்கர் வடக்கத்தியன் என்பதால், அவனை அனைவரும் உயர்த்தி கொண்டாடினர். என்னுடைய சாதனை இருட்டடிப்பு செய்யப்பட்டதில் எனக்கு இன்று வரை வருத்தம் தான்.
காவஸ்கர் சாதனையெல்லாம் ஒரு சாதனையே அல்ல. அவனுடைய ஆடுகளம் மிகவும் பெரியது. பச்சைப்புல் படர்ந்த தரை கொண்டது. கீழே விழுந்தாலும் அவ்வளவாக அடி படாது.
உடம்பெல்லாம் கவசம் அணிந்து கொண்டு, பத்தடி ஓடினால் இரைப்பாய் இரைக்கிற வயதானவர்கள், சற்றே கனமான பந்தை, வெகு தூரத்தில் இருந்து எறிந்து, அதை எந்தப் பக்கம் வேண்டுமானாலும், அடிக்கும் வசதி பெற்றவர்கள்.
ஆனால், என்னுடைய ஆடுகளம், மிகவும் சிறியது. இரண்டு அங்கணங்கள் கொண்டது. ஒரு நூறு வருடங்களுக்கு முன்னால், சுத்தமான சிமென்டில், அமைக்கப்பட்ட தரை. நான்கு சகோதரர்கள் மத்தியில், பாகப்பிரிவினையில், முதல் இரண்டு, சகோதரர்களுக்கு ஒதுக்கப்பட்டதால், இரண்டு தாழ்வாரத்து அறைகள் கொண்ட அவ்வீட்டில், அவ்வறைகளை ஒட்டிய வெளிப்பகுதியை அனைவரும் திண்ணை என்று அழைப்பதை நாங்கள் வெறுத்தோம்.
அது எங்கள் வாழ்வாதாரம். எங்கள் சண்டைகள், சாமர்த்தியங்கள், நாடகங்கள், இதையல்லாம் மிகவும் மீறி, எங்களது கிரிக்கெட். இந்த 'எங்கள்' என்பது, நான், என் வயதொத்த ஆனால் என்னை விட ஒரு வகுப்பு சிறியவனான சுரேஷ் என்னும் மகாதேவன், எங்கள் வீட்டில் ரெண்டாம் கட்டில் குடியிருந்த மௌலி என்னும் சந்திரமௌலி, மற்றும், அடுத்த வீட்டில் குடியிருந்த, ரகுராம சாஸ்திரிகளின் ஜேஷ்ட குமாரன் ராமுடு. இதில் ராமுடு, அப்போது மூன்றாம் வகுப்பில் திணறிக் கொண்டு இருந்தான். மௌலி அவனைவிட ஒரு வகுப்பு சீனியர் என்பதால், ராமுடுவை மிகவும் மேக்கரிப்பான். எல்லோரையும் நான் மிகவும் மேக்கரிப்பேன்.
(கற்பனை வறட்சியின் காரணமாக கதை தற்காலிகமாக அடுத்த அத்யாயத்திற்கு செல்கிறது)
(2) பட்டாச்சாரியில் வீரவிளையாட்டு
இன்னும் இரண்டு ஓவர்கள் பாக்கியிருந்தன. ராஜு அற்புதமாக விளையாடிக் கொண்டிருந்தாலும், விக்கெட்டுகளைத் தொடர்ந்து இழந்து எங்கள் அணி தடுமாறிக் கொண்டிருந்தது. 14வது ஓவரை வீசுவதற்கு ஒரு புதுமுகம் தயாரானது. அவன், எதிர் அணியின் காப்டனின் தமையன் என்பது பிற்பாடு தெரிந்தது.
சுந்தரவரதன் சற்றே அசப்பில் ஆழ்வார்க்கடியான் போல இருந்தான். நெடுநாட்களாக திருத்தப் படாத தலை. அல்லது அதற்கு சாத்தியமில்லாததாகவும் இருக்கலாம். முகம் கொஞ்சம் அறுகோணமாக இருந்ததாக ஞாபகம். பற்கள் சிறிது இடம் மாறியிருந்தன. அவைகளை ஒழுங்காகத் தேய்த்து வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பாசி படர்ந்து, அதன் ஊடாக ஈறுகள் காவி நிறத்தில். கடைவாய் ஒழுகுகிற முகம். அகஸ்மாத்தாக, அவன் கொட்டாவி விடும்போது, அவன் அருகில் இருக்க நேர்கிறவனுடைய முகம், வரதனுடைய முகத்தைவிடவும் கோரமாக மாறக்கூடும்.
முதல் பந்தை ராஜு இடது பக்கத்தில் தூக்கி அடித்தான். பவுண்டரிக்கு 10 அடி தூரத்தில் முன்னால் விழுந்து நான்கு ரன்கள். அடுத்த பந்து அனேகமாக வைட். ஆனாலும், ராஜூ, அனாயசமாக தடவிக்கொடுத்து ஒரு ரன்னை எடுத்து விட்டான். 3வது பந்தை சம்பத் எதிர்கொண்டான். அவன் என்னை எப்பவும் மெக்கானிக் என்றுதான் அழைப்பான். அன்னாட்களில், நான், ஒரு மல்ட்டி மீட்டரை சம்பாதித்துக் கொண்டு, தெரிந்தவர்கள் வீட்டில், டிவி ரிப்பேர் பார்க்கிறேன் பேர்வழி என்று பல டிவிக்களை உருப்படாமல் செய்து இருக்கிறேன்.
சம்பத் இடது கை வீரன். இம்முறை பந்து சற்றே காலை நோக்கி எறியப்பட்டது. சம்பத் அதை வெறிகொண்டு தாக்கினான். ஆனால், பந்து பாட்டின் உள் விளிம்பில் பட்டு, நேரே லெக் ஸ்லிப் பக்கம் சென்றது. அதைக் கவனியாது, சம்பத், விழுந்தடித்துக் கொண்டு ஓட, ராஜூ அவனைத் திரும்ப அனுப்பி விட்டான். அதற்குள் காரியம் கை மிஞ்சி விட்டது. சம்பத் ரன் அவுட்டாகி விட்டான். எட்டாவது விக்கெட்டும் இப்போது விழுந்து விட்டது. மிச்சம், நானும், புகழேந்தியும் தான்.
இன்னும் 15ரன்கள் தேவை நாங்கள் வெற்றி பெறுவதற்கு. 9 பந்துகளே உள்ளன. 2 விக்கெட்டுகள். ராஜூ 43 ரன்களுடன் அற்புதமாக ஆடிக்கொண்டு இருக்கிறான். இப்போது, எங்கள் காப்டன் சங்கர் ஒரு முட்டாள் தனமான காரியம் செய்தான். புகழேந்தியை உள்ளே இறக்கினான். புகழேந்தியைப் பொருத்தவரை, எல்லா விளையாட்டுக்களும் ஒன்றுதான். கண்ணை இறுக மூடிக்கொண்டு, கையில் இருப்பதை ஆயுதமாகப் பாவித்து, எதிர் வருகிற பந்தை இரண்டாகப் பிளந்து விடுவது ஒன்றே அவன் குறிக்கோள்.
சுந்தரமில்லாத வரதன், பந்தை இடது கைக்கும் வலது கைக்கும் மாற்றிக் கொண்டு ஃபீல்ட் அமைத்துக் கொண்டிருந்தான். பின்னர், விக்கெட் கீப்பரைப் பார்த்து என்னவோ சைகை செய்தான். இதனைத் தவறாகப் புரிந்து கொண்ட புகழ், அவன் பந்து வீசிவிட்டான் என்று, பந்தை அடிக்க முன்னாலேயே கிளம்பி விட்டான். அழுகிற குழந்தையை வகுப்பாசிரியர் கோல் வைத்து மிரட்டுவது போல் இருந்தது அவன் செய்கை. சுந்தர வரதன் கையில் பந்து இருக்கும் போதே, இவன் பாதி தூரம் போய் விட்டான். உடனே, வரதன் சுதாரித்து, பந்தை புகழேந்தியின் தலைக்கு மேலே, நேராக விக்கெட் கீப்பர் பக்கம் எறிந்தான்.
புகழ் நல்ல உயரம். தன் தலைக்கு மேலே பறந்து போகும் பந்ைதப் பார்த்து விட்டான். அப்படியே, மட்டையை உயர்த்தி,அடிச்சேண்டா சிக்சர் என்று பொருள் படும்படியாக என்னத்தையோ சத்தமாகக் கூறிக்கொண்டு, அணில் பிடிக்கிறவன், அணில் அறியாத தருணத்தில், அதன் பின் பாகத்தில், அலக்கால் குத்துவது போல, மட்டையின் விளிம்பால், பந்தின் கீழே பலமாக ஒரு குத்து விட்டான்.
சரியான விகிதாசாரத்தில், நன்றாகத் தாக்கப் பட்ட பந்து, வீல் என்று கத்தாமல், ஒப்புக்கு நின்று கொண்டிருந்த ஸ்லிப் ஃபீல்டர்களை அனாயசமாகக் கடந்து, பட்டாச்சாரி மைதானத்தின் தென் கோடியில், சோழர் காலத்தில் இருந்து அந்தரங்க சுத்தி கழிக்கும் இடத்தில் தரையிறங்கி, ஒரு பெரிய அதிர்ச்சியில் திகைத்து, நான்கு முறை எகிறி, அருகாமையில், காலம் காலமாக கருப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் ஒரு ஜீவ நதியில் போய் விழுந்து மறைந்தது.
பந்து தொலைந்து போனதைவிடவும், நான்கு ரன்கள் பெற்ற மகிழ்ச்சியை எங்கள் அணி பெரிதாகக் கொண்டாடியது. புகழேந்திக்குத் தலைகால் புரியவில்லை. அவன் இதற்கு முன் நான்கு ரன்கள் எல்லாம் எடுத்ததே இல்லை. அதுவும் ஒரு கட்டைப் பந்தில் முதல் பந்திலேயே எடுத்து விட்டான். ஒரே ஒரு கணத்தில் அவன் மதிப்பு வானளவு உயர்ந்து விட்டது. என்னால் இதனை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. எவ்வளவு கேவலமான ஒரு ஆட்டம்?
கொடிக்கம்பால் துணி உலர்த்துவது போல ஒரு ஷாட். அதற்கு இத்தனை பெரிய அங்கீகாரம். என் கண்களில் பொறாமை தெரிவதாக சௌரி கூறினான். எனக்கும் அது சரிதான் என்று பட்டது.
இப்போது இரு அணிகளும் பந்தைத் தேடுவது என்று முடிவாகியது. ஆட்டம் ஒரு பரபரப்பான கட்டத்தை நெருங்கியதும் காரணமாக இருக்கலாம். எட்டு பந்துகளில் 11 ரன்கள். கிட்டத்தட்ட சாத்தியம். இன்னம் ஒரு ரன் எடுத்தால் 100 ரன்கள். எங்கள் அணி இது வரை 100க்கு கீழாக எடுத்ததே இல்லை.
வர்ணனைக்கு எட்டாத இன்னுமொரு மட்டை வீச்சில் புகழேந்தி இதனை சாதித்து விடுவான். அல்லது ராஜூ இருக்கவே இருக்கிறான். வெறும் ஏழு ரன்களில் அவனது முதல் அரை சதம் காத்துக் கொண்டு இருக்கிறது. எட்டு பந்துகளில் இரண்டு ஒன்றுக்கும் உதவாத சுந்தரவரதனுடையது. ஆனால் பந்து கிடைக்க வேண்டும்.
வர்ணனைக்கு எட்டாத இன்னுமொரு மட்டை வீச்சில் புகழேந்தி இதனை சாதித்து விடுவான். அல்லது ராஜூ இருக்கவே இருக்கிறான். வெறும் ஏழு ரன்களில் அவனது முதல் அரை சதம் காத்துக் கொண்டு இருக்கிறது. எட்டு பந்துகளில் இரண்டு ஒன்றுக்கும் உதவாத சுந்தரவரதனுடையது. ஆனால் பந்து கிடைக்க வேண்டும்.
இரண்டு அணிகளும் வெகு ஜாக்ரதையாக ஜீவநதியின் கரையை அடைந்தோம். சு.வரதன், அப்புண்ணிய நதியை வானில் இருந்து கொண்டு வந்தவன் போல ஒரு வேட்கையுடன் விரைந்து அடைந்து,ஒரு குச்சியால், வெகு ஜாக்ரதையாகக் கிளறி, வெகு லாவகமாக பந்தைக் கண்டு பிடித்து விட்டான். கொஞ்சமும் அருவருப்பின்றி கையை விட்டு பந்தை எடுத்து தரையில் தேய்த்தான். ஆனாலும் பந்து தற்போது சம்பாதித்து இருந்த ஒளியினை இழந்துவிடத் தயாராக இல்லை. பந்தை விடவும் அழுக்காக உருமாறியிருந்த சு.வரதனை யாரும் கண்டு கொள்ளவில்லை.
பரி அசுத்த ஆவியாகத் தென்பட்ட அவனை எந்த தேவதூதனாலும் சுலபமாக ஞானஸ்னானம் செய்துவிட ஏலாது. வேறு வழியில்லாமல் மைதானத்தின் இன்னொரு பக்கம் இருந்த வீடுகளொன்றில் தண்ணீர் பெற்று, குறைந்த பட்சம் பந்தையாவது சுத்தம் செய்து கொள்வது என்று தீர்மானம் செய்யப்பட்டது.
இம்முயற்சியையும் சு.வரதனே பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டான். அந்நாட்களில் தண்ணீர்ப்பஞ்சம் வெகு கடுமையாக நிலவியதால், தாகசாந்தி செய்து கொள்வது கூட துர்லபமாக இருந்தது. என்றாலும், பல வருடங்களுக்கு முன்னால், பச்சை பெயிண்ட் அடித்திருந்த அவ்வீட்டின் வெளி கேட்டை வெகு ஸ்வாதீனமாகத் திறந்து கொண்டு, சு.வரதன் உள்ளே ப்ரவேசித்தான்.
அவன் வெகுதூரம் முன்னேறுவதற்குள், ஒரு முதிர்வயது பெண்மணியால் தடுத்து நிறுத்தப்பட்டான். பாட்டி நெற்றியில் ஒரு கோடு இழுத்து இருந்தாள். அவ்வீட்டின் நுழைவாயிலில் பெருமாள் படம் மாட்டியிருந்தது. பாட்டி, சு.வரதனை ஒரு கை அசைவில் நிறுத்தி, "இருக்கறதே நாலு மரம். எத்தன தடவை புடுங்கறது? இப்பத்தான முந்தாநா வந்து புடுங்கிப் போட்ட" என்றாள். அவள், சு.வரதனை "தேங்காய் பிடுங்குகிறவன்" என்று தப்பிதமாக நினைத்து விட்டாள்.
சு.வரதன் இதற்கெல்லாம் வெட்கப் படுவதாக இல்லை. அவன், ஆள் அழுக்காக இருந்தாலும், அகலமான நெற்றியில் பளிச்சென்று, நாமம் அப்போதுதான், வரைந்தது போல இருப்பான். அது இம்முறை கை கொடுத்தது. தன்னுடைய அழகான முகத்தை பாட்டியிடம் காட்டி, தனக்குக் கொஞ்சமேனும் தண்ணீர் கொடுத்தால் தேவலை என்று கூறினான். பாட்டி கொஞ்சம் துணுக்குற்றாற் போலத்தான் இருந்தது. உள்ளே என்னமோ விஷமம் செய்து கொண்டிருந்த பேரனை விளித்து, கொஞ்சம் தேர்த்தம் கொடுக்கக் கட்டளையிட்டாள். ஒரு மாதிரி சைகை செய்ததாக எனக்குத் தோன்றியதை நான் ப்ரமை என்று எண்ணிக் கொண்டேன்.
அந்தச் சிறுவன், ஒருவித எரிச்சலில், புழைக்கடைப் பக்கம் சென்று, ஒரு காதறுந்த "மக்"கில் தண்ணீர் கொணர்ந்தான். அந்த "மக்" லேசாக வாய் பிளந்து இருந்தது. அதன் வடிவமும், பாசி படர்ந்த நிறமும், அதைக் கொணர்ந்த சிறுவனின் முகச் சுளிப்பும், அந்த "மக்" இதுகாறும், அவ்வீட்டில், பல தலைமுறைகளாக ஆயி வந்த இடத்தில் புழங்கியிருக்க வேண்டும் என்று சுலபமாகப் புரிந்தது (சொல்லில் பிழையிருந்தால் அது மன்னிக்கப் படலாம்).
சு.வரதன் ஒரு தேர்ந்த சென்னை வாசியாகத்தான் இருக்க வேண்டும். சென்னை வாசிகள் செவ்வாய் கிரகத்திலும் வாழத்தகுதி பெற்றவர்கள். உயிர்வாழத் தண்ணீர் ஒன்றும் அவ்வளவு அவசியமான பொருள் இல்லை என்பதை உணர்ந்தவர்கள்.
சு.வரதன் அந்த நாலு திவலைத் தண்ணிருக்குள் தன்னையும் கழுவி, பந்தையும் கழுவி விட்டான். ரொம்பவும் ஸ்டைலாக பந்தைத் தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டு, ஆடுகளம் நோக்கி விரைந்தான். அவன் பின்னால் புகழேந்தியும் "ஹோ" என்று கத்தியவாறு தொடர்ந்து சென்றான். ஆட்டம் மறுபடியும் தொடர்ந்தது.
இம்முறை புல்டாஸ். புகழேந்திக்கு அதனை என்ன செய்வது என்று தெரியாமல், முகத்திற்கு நேராக வந்ததை, துணி துவைப்பது போல் எக்ஸ்ட்ரா கவர் பக்கம் அடித்து விட்டு, மட்டையை கீழே நழுவ விட்டு, எதிர் பக்கம் விரைந்தான். ராஜூ அவனைத் தயவு தாட்சண்யம் இல்லாமல் திருப்பி விட, புகழேந்தி அவன் கட்டளையை மறுதலித்து, இருவரும் ஒரே பக்கம் நின்று கொண்டிருக்க, பந்து சுலபமாக விக்கெட் கீப்பரை அடைந்து, அவன் ஸ்டம்புகளைப் பெயர்த்து எறிந்தான். புகழேந்தி கடும் கோபத்துடன், ராஜூவைப் பார்த்து, அவனை அவுட்டாகி வெளியேறுமாறு பணித்தான். அம்பயராக நின்று கொண்டு இருந்த ஸ்ரீதர், சிரிப்பை அடக்க மாட்டாமல், புகழேந்தியின் கழுத்தைப் பிடித்து வெளியேற்ற, ஒரு சிறு முகூர்த்தம், ஒரே களேபரமாக மாறிவிட்டது.
இப்போது என்னுடைய தருணம் வந்துவிட்டது. இதற்குத்தான் இவ்வளவு காலம் நான் காத்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்குக் கூட கார்த்திக்கு சௌகரியப்படாததால்தான் எனக்குவாய்ப்புக் கிடைத்து இருக்கிறது. நான் தயாரானேன். சௌரி என்னுடைய இடது காலுக்கு மட்டும் "pad" கட்டி விட்டான். ராஜூ போன்ற முன்னணி வீரர்கள் மட்டுமே இரண்டு கால்களுக்கும் pad கட்ட அனுமதி பெற்றவர்கள். சற்றே கிழிசலாக இருந்தது என்றாலும், சௌரி அரணாக்கயிறு போல இருந்த ஒரு கயிற்றால் நன்றாக நழுவாமல் கட்டி விட்டான்.
எனக்குப் பெருமையாக இருந்தது. மட்டையை அனுமார் மாதிரி தோள்களில் சார்த்திக்கொண்டு களம் விரைந்தேன். கிளம்பும் போது, ரவி என்னிடம், 'பார்த்து' விளையாடுமாறு கூறினான். இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொள்ளுமாறு அவன் என்னிடம் கூறியிருக்க வேண்டியதில்லை. எனக்கு இருந்த பதட்டத்தில் எந்த தெய்வத்தை வணங்குவது என்று புரியவில்லை. எந்தத் தெய்வத்திற்கு கிரிக்கெட் தெரியும் என்று என் அக்காவைக் கேட்டுக் கொண்டு வந்திருக்கலாம்.
ஒருக்கணம் கண்ணை மூடிக்கொண்டு த்யானம் செய்தேன். தூக்கிவாரிப் போட்டது. எங்கள் தாத்தா காலத்தில் இருந்து எங்கள் வீட்டின் ப்ரதான தெய்வமாக இருக்கும் "ஆண்டி முருகன்" கண் முன் வந்து நின்றார். கடந்த சில வருடங்களாக அவரை நான் கும்பிடுவது இல்லை. 10ம் வகுப்பு தமிழ்ப் பரிட்சையில் இருந்து அவர் மீது எனக்கு சிறு பிணக்கு ஏற்பட்டு விட்டது.
அன்னாட்களில், எங்கள் பள்ளியில், என்னை தமிழில் மாகாணத்திலேயே முதல் மாணவனாக வரப்போகிறவன் என்று குறியிட்டு வந்திருந்தார்கள். எனக்கும், தமிழ்ப் பாடப் புத்தகத்தில் இந்தப் பக்கத்தில் இருந்து அந்தப் பக்கம் வரை தலைகீழ் பாடம். சிறு உபாதைகளுக்கு உத்தரவு கேட்கும் போது கூட, நன்னூல் சூத்திரங்களை மேற்கோள் காட்டுகிற அளவில் எனக்குப் பாண்டித்தியம்.
பொதுவாகவே எல்லா மாணவர்களும், விடைத்தாளில் முதல் பக்கத்தில் மனப்பாடச் செய்யுளை அழகான கையெழுத்தில் எழுதி ஆரம்பிப்பது வழக்கம். ஏனென்றால், முதல் பக்கத்திலேயே சுளையாக 10 மதிப்பெண் கிடைத்து, திருத்துபவருக்கு, மதிப்பெண் தொடர்ச்சியாக அளிக்க ஒரு உற்சாகம் கிடைக்கும். கேள்வித்தாள் கைக்கு வந்ததும், நான் வழக்கம் போல், ஓம் முருகா என்று 108 முறை மனதிற்குள் கூறிவிட்டு, பிரித்துப் பார்த்தேன். மனப்பாடப் பகுதியில், திருவிளையாடற்புராணத்தில் இருந்து "பொங்கரில் புகுந்து வாவி" என்று தொடங்கும் செய்யுள் கேட்டு இருந்தார்கள். இதில் சந்தோஷப்பட ஒன்றும் இல்லை என்று தோன்றியது. எனக்குத் தெரியாத பாடல்களே இல்லை. உண்மையில், திருவிளையாடற்புராணத்தில் இடம் பெறாத பாடல்கள் கூட எனக்குத் தெரியும்.
முருகப்பெருமானுக்கு நன்றியைத் தெரிவித்து விட்டு, எழுத ஆரம்பித்தால், "மல்லிகைப் பந்தர் தாவிக்கு" மேல் மறந்து விட்டது. என்ன காரணம் என்றே புரியவில்லை. கடைசிவரை முருகன் எனக்கு உதவவே இல்லை.
10 மார்க் சுளையாகப் போய் விட்டது. அன்றிலிருந்து, நான் முருகப்பெருமானோடு ஒருவித மனத்தாங்கலில் இருந்து வருகிறேன். இன்றைக்கு என்று இவர் ஏன், தானாகவே தரிசனம் தரவேண்டும்? இவரை மேக்கரிக்கும் வேறு ஏதேனும் ஒரு கடவுளைக் கும்பிட்டால் என்ன என்ற எண்ணத்தை உடனே மாற்றிக் கொண்டேன்.
எல்லாக் கடவுள்களும் ஏதோ ஒருவகையில் முருகனுக்கு உறவாகவே இருக்கிறார்கள். என் பொருட்டு, தங்கள் உறவுகளில் விரிசல் ஏற்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.
அதற்குள், நான் களத்திற்குள் மட்டை வீசும் இடத்திற்குள் வந்து விட்டேன். ராஜுவும், ஸ்ரீதரும் என்னைப் பார்த்து ஸ்னேகமாக விரல்களை உயர்த்திக்காண்பிக்கிறார்கள். நான் முதலில், வலது ஸ்டம்பிற்கு guard எடுக்கலாம் என்று நினைத்தவன், அதனை மாற்றிக் கொண்டு மிடில் ஸ்டம்பிற்கு எடுத்துக் கொண்டேன். பிற்பாடு அதனையும் மாற்றி, லெக் ஸ்டிக்கிற்குக் கேட்க, ஸ்ரீதர் பொறுமையிழந்து, எங்கயாவது நில்லுடா என்றான்.
லெக் ஸ்டிக் guard பொதுவாகவே பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். சுனில் காவஸ்கர் போன்றவர்கள், முதலில் லெக் ஸ்டிக்கில் நின்று கொண்டு, பௌலர் தன் ராஜபாட்டையைத் துவக்கியவுடன். மெதுவாக முன்னேறி, வலது புறம் போய், off sideல் அழகாக விளையாடுவார்கள். சில சமயங்களில், பந்து அளவு குறைந்து எகிறி வரும்போது, வலது காலை நன்றாக அகட்டி வைத்து, முழுப் பளுவையும் அதில் திணித்து, பந்தை அப்படியே அலாக்காக தூக்கி மிட்விக்கெட் பக்கம் அறைந்து, நான்கு அல்லது ஆறு கூடப் பெறுவார்கள்.
என்னுடைய முஸ்தீபுகள், எதிர் கூடாரத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியதாகக் தெரிந்தது. அல்லது, என்னுடைய 206 ரன் சாதனையை யாரேனும் தெரியப்படுத்தியிருக்கலாம். சு.வரதன் முகத்தில் ஒரு கலவரம் தெரிந்ததாகப் பட்டது. மிகவும் நன்றாக விளையாடத்தெரிந்த ஒருவனை வேண்டுமென்றேக் கடைசியாக அனுப்பியதை அவர்கள் ஒரு ராஜதந்திரமாக எண்ணியிருக்கலாம்.
பட்டாச்சாரி மைதானத்தில் வழக்கத்தை விடவும் அனல் பறக்கிறது என்று வி.கீப்பர் அருகாமையில் இருந்த ஸ்லிப் ஃபீல்டரிடம் கூற அவனும் ஆமோதித்தான். நானும் அசடு போல அதனை ஆமோதித்ததை அவர்கள் ரசித்ததாகத் தெரியவில்லை. நல்ல வேளையாக செருப்பு அணிந்து வந்திருக்கிறேன். புது செருப்புதான் அணிந்து வருவதாக இருந்தது. ஆனால், கிளம்பும் போது அம்மா பார்த்து விட்டாள். அவளுக்குப் பயந்து, பழைய செருப்பை அணிந்து வந்திருக்கிறேன். பலமுறை அறுந்து தைத்திருந்தாலும், உச்சி வெய்யிலுக்கு உகந்ததாகத்தான் இருக்கிறது. நல்ல வேளையாக, நான் புது pant அணிந்து இருந்தைத அம்மா கவனிக்கவில்லை. பழைய சட்டை அணிந்திருந்ததால், அம்மா அதனைக் கவனிக்கவில்லை என்று தோன்றியது. நல்ல கரும் பச்சையில், லேசான சரிகைகள், தங்க ரேக்குகள் போல மின்ன, போன மாதம், என்னுடைய இரண்டாவது அக்கா, கூத்தா நல்லூரில் இருந்து, சிங்கப்பூரில் இருந்து தருவிக்கப் பட்டதாக அனுப்பி இருந்தாள். இந்த சட்டையும் கூட அவள் அனுப்பி இருந்ததுதான். நல்ல பச்சையில், இலைகளின் ஊடாக நிறையப் பூக்கள் பல நிறங்களில். இவைகளை அணிந்து கொள்ள, என்னுடைய எதிர்ப்புகள் செல்லுபடியாகாது.
என் பெற்றோர்களைப் பொருத்தவரை, கல்லுப் போல் நெடு நாள் உழைக்கும் துணிகளை இந்தியர்கள் தயாரிப்பதில்லை. சாதாரணமாகவே சிங்கப்பூர் சரக்குகள் உயர்ந்தவை. நான் பொதுவாகவே, என்னுடைய கல்லூரி நாட்கள் பூராவும், விதம் விதமாகப் பூப்போட்ட சட்டைகளையே அணிந்து வந்திருக்கிறேன். இதன் பொருட்டு, என்னுடைய நண்பர்கள் எனக்கு, "ஜோல் கார்டனர்" என்றே பெயர் சூட்டியிருந்தனர்.
இது கூட பரவாயில்லை. சமயங்களில், உள்ளாடைகள் கூட சிங்கப்பூரில் இருந்து தருவிக்கப் படும். அவைகள் பொதுவாக ப்ளாஸ்டிக்கினால் தயாரிக்கப் பட்டிருக்க வேண்டும் என்று தோன்றும். கடுமையான எரிச்சலும், சொல்லொணாத் துயரமும் கொண்டுதான் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். திடுமென ஒரு நாள், உள்ளாடைகள் வரத்து நின்று போய் விட்டது. சிங்கப்பூர் அரசாங்கமே என்னுடைய ப்ரார்த்தனையை ஏற்று, அவைகளைத் தடை செய்திருக்க வேண்டும்.
நான் சற்றே நெஞ்சை நிமிர்த்தி, சுற்றுமுற்றும் பார்க்கிறேன். விக்கெட் கீப்பர் அனேகமாக ஸ்டம்புகள் மேலேயே நிற்கிறான். எனக்குத் தெரிந்து, சு.வரதனிடமிருந்து ஒரு வைட் பெற்று, நான் முன்னேறியிருக்கும் தருணம், என்னை ஸ்டம்பிங்க் செய்ய உத்தேசமாக இருக்கும் இடதுபுறம், எங்கோ தொலைதூரத்தில் நின்றவனை இழுத்து வந்து ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் நிறுத்தி இருக்கிறார்கள். நான் அவனைப் பார்த்த போது, அவன் வெறும் காலில், சூடு தாங்காமல், ஆடிக்கொண்டு இருந்தான். அதே சமயம், கண்களை ஒரு மாதிரி லயிப்பில் வைத்துக் கொண்டு, தன்னுடைய தீர்க்கமான நாசியில், இரண்டு விரல்களைப் பாய்ச்சி ஏதோ அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தான். என்ன ஆனாலும் இவனிடம் பந்தை அடிக்கக் கூடாது என்று தீர்மானித்துக் கொண்டேன்.
என்னால் என்ன மாதிரியான ஷாட்டையும் விளையாட முடியும் என்பதை என் அணியின் காப்டன் சங்கருக்கு புரிய வைக்க இது சரியான தருணம். சு.வரதன் பதட்டத்தில், பந்தை இடது கையில் இருந்து வலது கைக்கு ஏதோ தக்லியில் நூல் நூற்பது போல் விட்டுக் கொண்டு இருக்கிறான். முதல் முறையாக பந்து வீசுகிறவன். அதிர்ஷ்டவசமாக இரண்டு விக்கெட்டுகள்,ரன்னவுட்டாகி விழுந்திருக்கின்றன. இவனது முயற்சியில் ஒன்றும் நடக்கவில்லை. அவனது தமையனும் கூட ஒருவித பதட்டத்தில் இருப்பதாகப் பட்டது. இந்த சூழ்நிலையை நான் எனக்குக் சகாயமாக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்னம் 11 ரன்கள். 7 பந்துகள். 7 ரன்கள் இருந்தால் போதும் ராஜு அரைசதம் அடிக்க. நான் ஒரு நான்கு ரன்கள் பெற்றால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. ஆனால். புகழேந்தி மாதிரி அல்லாது, ஒரு தேர்ந்த வீரனாக இந்த நான்கை நான் சம்பாதிக்க வேண்டும்.
சு.வரதன் புதியவன். அதுவும், இடது கை பௌலர். அனுபவம் அற்றவன். கண்டிப்பாக என்னுடைய இடதுகாலைக் குறிவைத்தே பந்தை எறிவான். அல்லது, சற்றே விலகி இன்னும் இடதுபுறம் செல்லக்கூடும்.
எனக்கு நளினமாக விளையாடப் பிடிக்கும். அதுவும், மண்டியிட்டு நேர்த்தியாக விளையாடுவது மிகவும் பிடிக்கும். சமீப காலங்களில், மண்டியிட்டு, அசாருதீன் போல, பந்தை விக்கெட் கீப்பருக்குப் பின்னால் திருப்புவதில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறேன். எங்களது மைதானத்தில் இதற்கு வரவேற்பு கிடையாது. ஏனென்றால், பின்னால் திருப்பப்படும் போது, வி. கீப்பரால் பிடிக்கப் படாமல் போனால், பந்து ரோட்டைத் தாண்டி அப்பாசாமி வீட்டு கிணத்தடியில் சகதியில் போய் சொத்தென்று விழும். பந்தைத் திரும்பப் பெறுவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். அதனால் பின்னால் செலுத்தப்படும் பந்துகளுக்கு, ரன் அளிக்கப்பட மாட்டாது. என்றாலும், பின்னால் திருப்புகிற ஷாட் எதுவும் நளினமாகவே இருக்கும். அதுவும், சாயங்காலங்களில் நாங்கள் விளையாடும் தருணம் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு தன்னுடைய தோழியுடன் போகும் அந்த பெண்ணிற்காக எத்தனை தடவை வேண்டுமானாலும் கிணத்தடி சென்று வரலாம்.
இம்முறை முருகன் என்னைக் கைவிட மாட்டார் என்றே தோன்றியது. அவர், எங்கள் தாத்தாவுக்கு ப்ரத்யட்சம் என்று கூறுவார்கள். என் தாத்தாவின் பொருட்டாவது, அவர் என்னைப் பெருமை கொள்ள வைக்க வேண்டியிருக்கும்.
இதோ சு.வரதன் வருகிறான். முருகன் வாக்குத் தவறவில்லை. பந்து எதிர்பார்த்தபடி இடது பக்கம் வருகிறது. நல்ல வேளையாகக் கால்களைக் குறிபார்த்து எறியப்படவில்லை. என்றால், இடதுகாலை சற்றே ஒதுக்கி, பந்தின் தலையில் செல்லமாகத் தட்டி, வி.கீப்பருக்கும் ஃபார்வர்ட் ஷார்ட் லெக்குக்கும் இடையில் லெக் க்லான்ஸ் செய்ய வேண்டியிருக்கும். பந்து சரியாக, சு.வரதன் ஞானஸ்னானம் பெற்ற இடத்தில் நான்கு ரன்களை சுலபமாகப் பெற்றுத் தரும். அதுவும் நல்ல ஷாட்தான் என்றாலும், நான் பெரிதும் எதிர்பார்த்திருக்கும் ஸ்வீப் போல அவ்வளவு நளினமாக இராது.
பந்து இதோ எந்த நிபுணத்துவமும் அல்லது சுழற்சியும் இல்லாது,நேராக இடது காலை நோக்கி அல்லது சற்றே ஒருக்களித்து விழுகிற மாதிரி வருகிறது. ஆஹா என்று சொல்லிக் கொண்டேன். என்னுடைய அனிச்சை உணர்வுகள் உந்த, என்னுடைய வலது காலை மடித்துத் தரையில் இறக்கினேன். மட்டையை சரியான கோணத்தில் பந்தை நோக்கி செலுத்தினேன்.
இடது காலை என்னை நோக்கி இழுத்து தரையில் மண்டியிடுவதுதான் பாக்கி. கடவுளே! இடது கால் மடிய மறுக்கிறது. அரணாக்கயிற்றால் வலுவாகக் கட்டப் பட்டதால், முட்டிக்கால் இறுகி, பக்கவாதம் வந்த கிழவியின் கால் போல் மடங்க மறுக்கிறது. அதே சமயம், கைகள் தன்னுடைய பணியினை சரியாகச் செய்து விட்டதால், அவயவங்கள் ஊடே சரியான ஒத்துழைப்பு இல்லாமல், அவைகள் ஆங்காங்கே சிதறி, அப்படியே, நிலை தடுமாறி, தொபுக்கடீர் என்று, பள்ளிகொண்ட ரங்கனாதர் போல, பலகீனமாக பின்னால் நிறுத்தி வைத்திருந்த மூன்று ஸ்டம்புகளைப் பிளந்து கொண்டு விழுந்தேன். 'ஐய்யோ' என்று, சன்னமான சப்தம் என்னையும் மீறிக் கேட்டது.
அதே கணத்தில், பந்து நேராக, இடது கையில் மட்டும் எப்படியோ தங்கியிருக்கும் மட்டையின் தகாத பக்கத்தில், 'ப்ளக்' என்று மழைத்துளி போல் பட்டு, மெதுவாக எகிறி, நாசித்வாரங்களில் மும்முரமாக இருப்பவனின் கைகளில் நேராகத் தஞ்சம் அடைந்தது. இரு கண்களையும் மூடிக்கொண்டு இருந்து அல்லது இரண்டு கைகளையும் பின்னால் பிடிவாதமாகக் கட்டிக் கொண்டிருந்தால் ஒழிய அத்தகைய காட்சை எவனாலும் தவற விட்டிருக்க முடியாது.
நான் அப்படியே மல்லாக்கக் கிடக்கிறேன். கண்களின் நேர் மேலே ஆகாயம் விரிந்து கிடந்தது. பொட்டு மேகம் தென்படவில்லை. ஆயாசமாக இருந்தது. கண்களை மூடிக் கொள்கிறேன். இம்முறை முருகப்பெருமான் தென்படவில்லை. அவர் மீது குற்றமில்லை. அவர் என்ன செய்வார். அவரை விடவும் திருமால் சக்தி படைத்தவர். சு.வரதன் திருமால் அருள் பெற்றவன். சௌரி என்னும் இன்னொரு வைணவன், என் காலில் பாசக் கயிற்றினைக் கட்டி கவிழ்த்து விட்டான். என் எண்ண ஓட்டங்களையும் மீறி உடம்பெல்லாம் வலித்தது. பட்டாச்சாரி மைதானத்தின் அனல் பறக்கும் சூடு, என் காயங்களுக்கு இதமாக இருந்தது. பெரிய பழுவேட்டரையரைப் போலக் குறைந்த பட்சம் 64 காயங்கள் ஏற்பட்டிருக்கலாம்.
என்ன, எனக்கு, காயங்கள் மார்பில் இல்லாமல், பின்பக்கத்தில் நேரிட்டு விட்டன. இடுப்பை அசைக்க முடியவில்லை. ஏதோ, பெரிதாக ஒன்று, கல்லோ கண்ணாடியோ, அரை அங்குலமோ, அரைக் காதமோ, உள்ளே இறங்கியிருக்கிறது. Pant-ஐக் கிழிக்காமல் இது உள்ளே ஊடுருவீயிருக்க சாத்தியமில்லை. அம்மாவை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை. ஒரு பாதத்தில் மட்டும் செருப்பு தட்டுப் படுகிறது. இன்னொன்றைக் காணோம்.
ஒரு சிறிய, நியாயமான ஆசையின் நிமித்தம், இவ்வளவு இடிபாடுகள் நேரிட்டு இருக்க வேண்டாம். என்னை நோக்கி யாரோ ஓடி வருகிறார்கள். நல்லவர்கள். எதிரிகளாக இருந்தாலும், ஒத்தாசை நல்குபவர்கள் நல்லவர்களாகத்தான் இருக்க வேண்டும். நான் உதவியைப் பெற்றுக் கொள்ளத் தயாரானேன்.
என்ன அநியாயம்? அத்தனை பேரும் என்னைத் தாண்டி விரைகிறார்கள். நான் படுத்தவாறே, கண்களை உயர்த்தி பின்னால் பார்க்கிறேன். அங்கும் ஏதோ கலவரம் நிகழ்ந்திருக்கிறது. வி.கீப்பர் என்னைப் போலவே கீழே விழுந்து கிடக்கிறான். ஸ்டம்புகள் மேலாகவே நின்று கொண்டிருந்தவன், நான் நரசிங்கப் பெருமாள் மாதிரி, ஒன்றுக்கு மூன்றாக ஸ்டம்புகளைப் பிளந்து, வீழ்வதை ஊகித்து, தன்னுடைய மர்ம ஸ்தானங்களைக் காத்துக் கொள்ள பின்னால் தாவியவன், பின்னங்கால் வழுக்கி, தடால் என்று கீழே விழுந்திருக்கிறான். அவனது தலையைப் பரிசோதித்து ஒருவன், கபாலத்தில் லேசாக விரிசல் தென்படுவதாகக் கூறுவது, மற்றவர்கள் முகத்தில் கவலையை ஏற்படுத்துகிறது.
நான் கீழே விழும்போது, எனக்குள் சன்னமாகக் கேட்ட அந்த "ஐய்யோ" என்ற சப்தம், உண்மையில், வி.கீப்பருடையதாக இருக்க வேண்டும். அங்கங்கள் சிதறி, அலங்கோலமாக விழும்போது, ஒரு அபயக்குரல் கூட எழுப்பத் தெரியாத நான், நிஜமாகவே, என் அக்காக்கள் கூறுவது போல, ஒரு சரியான அசமஞ்சமாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது.
ஸ்ரீதரும் ராஜுவும் சேர்ந்து மைதானத்தை விட்டுத் தளர்வாக நகர்கிறார்கள். எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றவில்லை. ராஜு என்னைப் பார்த்து, விரல்களால் என்னமோ சைகை செய்கிறான். நான், பொதுவாகவே, பெண்கள் மத்தியில் வளர்ந்ததால், இந்தப் பையன்களின், நவீனமான அகராதிகளுக்கும், சைககளுக்கும் அர்த்தம் தெரியாமல் போய்விட்டது. ராஜுவின் இந்த சைகைக்கு நேர்மையான அர்த்தம் இருக்காது.
கிரிக்கெட்டின் ஒட்டுமொத்த சரித்திரத்தில், இதைவிடவும் கண்றாவியாக மொஹிந்தர் அமர்னாத் உட்பட, யாராலேயும் அவுட்டாகியிருக்க முடியாது என்று தோன்றியது. எவ்வளவு விபரீதங்கள் நடந்து விட்டன? இத்தனை வருடத்தில், எங்கள் அணி இரட்டை இலக்கத்தில் அவுட்டாகி விட்டது. ராஜுவின் அரைசதம் கனவு தகர்ந்து விட்டது. சுலபமான வெற்றி தோல்வியாக மாறி விட்டது. சு.வரதன்கள் இனி பயமின்றி பந்து வீசத் துவங்குவார்கள். பின்னாட்களில் காப்டன் கனவுகளில் இருந்த வி.கீப்பருக்கு கபாலம் கலங்கி விட்டது. புத்தம் புது Pant கிழிந்து விட்டது. செருப்பு அறுந்து போய் விட்டது. இது எல்லாவற்றையும் விட, கிரிக்கெட் விளையாட்டில் விசேஷ நிபுணத்துவம் பெற்றிருந்த என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை அனேகமாக முடிந்து விட்டது.
என்னுடைய இந்த வீழ்ச்சியில் ஒரே ஒரு நல்ல காரியம்தான் நடந்திருக்கிறது. அது, சு.வரதனுக்கு முதல் விக்கெட் கிடைத்து இருக்கிறது. அவனும், காட்ச் பிடித்தவனும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு சந்தோஷத்தில் துள்ளிக் கொண்டு இருந்ததைப் பார்க்க கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. என்னுடைய தகுதி தெரிந்து, என்னுடைய விக்கெட்டைக் கொண்டாடுகிறார்கள்.
நான் தட்டுத் தடுமாறி, என் உபகரணங்களைச் சேகரித்துக் கொண்டு, தத்தித் தத்தி என் நண்பர்களோடு சேர்ந்து கொண்டேன். அவர்கள் எனக்காக காத்துக் கொண்டிருந்ததைப் பார்க்க ஆறுதலாக இருந்தது. சௌரி என்னிடமிருந்து மட்டையை கிட்டத்தட்ட பிடுங்கிக் கொண்டான்.நான் ஏதோ பேச முற்பட்டேன்.
யாரும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ஸ்ரீதர் மட்டும் என்னிடம் எல்லாரும் கொலை வெறியில் இருப்பதால், எதுவும் பேசாமல் இருப்பதே உசிதம் என்றான். எல்லோரும் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு, அவரவர் சைக்கிளில் கிளம்பினர். நான் வரும்போது சௌரியுடன் வந்திருந்தேன். அங்கிருந்து, எங்கள் நகரம் கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர்கள். உச்சி வெய்யிலில் நடந்து லெசல்வதெல்லாம் சாத்தியமே இல்லை. நானும் சுவாதீனமாக சௌரியின் சைக்கிளில் அமர முயன்ற போது, அவன் என்னைக் கீழே தள்ளிவிட்டான். சைக்கிளைத் தொட்டால் கொலைவிழும் என்றான். எனக்கும் கோபம் வந்தது. இது நியாயமே இல்லை. என்னை மாதிரியே வேறு சிலரும் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து இருந்தார்கள். ஏன், சௌரியே கூட ரன் எடுக்கவில்லை. என் கோபம் எடுபடவில்லை. ஆளாளுக்கு, முருகப் பெருமான் தரிசனம் கொடுத்திருந்த என் பாட்டனார் வரையிலும் திட்டித் தீர்த்து விட்டு, என்னை கொதிக்கிற வெய்யிலில் தனியே புலம்ப விட்டு, சென்று விட்டனர். நான் உடம்பெல்லாம் புண்ணாகி, மனதிலும் பெரிய காயத்துடன், அறுந்த செருப்பையும் இழுத்துக் கொண்டு, விந்தி விந்தி வீடு சேர்ந்தேன்.
நான் எதிர்பார்த்த படி, என்னைத் தெரு கிரிக்கெட்டிலும், அதன் பிறகு சேர்த்துக் கொள்ளவில்லை. அது மட்டுமல்லாமல், நான் அவர்களைக் கடக்கும் போதெல்லாம், சப்தமாக, "தெருப் பெருக்கி" என்று அழைக்கத் துவங்கியிருந்தார்கள். ஒருமுறை, என் அக்கா இதனைக் கேட்டுவிட்டு, அம்மாவிடம், உன் பிள்ளையை எல்லாரும் "தெருப் பொறுக்கி" என்று கூப்பிடுவதாகக் கூறிவிட்டாள். அடுத்த முறை, இந்தக் கூட்டத்திலேயே சாதுவான ஜட்டுவைக் கூப்பிட்டு, அம்மா வெளு வெளு என்று வெளுத்து விட்டாள். அப்படியும், என் புனை பெயர் தொடர்ந்தது. நல்ல வேளையாக, சேட்டன் சர்மாவின் கடைசிப் பந்தில், மியாண்டட் சிக்ஸர் அடித்து, கவனம் திரும்பியதில், நான் தப்பித்துக் கொண்டேன்.
--------
No comments:
Post a Comment