முக்தி
திடுமென விழித்த நாளில்
ஆன்மாவைத் தேடும் தேடல்
வாய்த்தது எனக்கென்றெண்ணி
வீதியில் இறங்கிப் போனேன்.
எதிர்ப்படும் மனிதர் யாரும்
என்னுடல் போல வேறு
இவரிடம் ஆன்மா பற்றி
யாதொரு பதிலும் இல்லை
என்பதாய் வேறு ரூபம்
தேடியே போகும் வழியில்
வந்தவன் அந்தணச் சிறுவன்
காண்பதும் பொய்யே என்றான்
கல்பட்டு வலிகண்டு
நிமிர்ந்து பார்க்கக்
காணாமல் போய்விட்டான்
காவியுடன்.
தொடர்ந்து நான் மேலே போக
வழியிலோர் குளத்தைக் கண்டேன்.
கரைகளே சுவர்களான
அமிர்தமாய் நீருக்குள்ளே
தாமரை, பாசம் போக
மீதமும் மீன்கள் கூட்டம்.
மீனிடம் தெரிந்து கொள்ள
என்னுடன் பிறந்த ஈகோ
இடம் கொடாக் காரணத்தால்
கரையிலோர் மார்க்கம் தேட
மௌனம் நிழல் பரப்பும்
மரத்தைக் கண்டேன்.
பஞ்சு போல் தலைவிரித்து
மஞ்சமாய் பூ இறைத்து
ப்ரபஞ்சமாய் விரிந்திருந்த
கிளைகளின் கணுக்கள் தோறும்
வெள்ளைக் கலையுடுத்து
நாரைக் கூட்டம்.
சிரம் தாழ்த்தி நீர்மல்கி
அருகில் போக
சிறகடித்து சிதறிப்போய்
வானில் ஓட்டம்.
மனிதனாம் அரக்கன் வந்தான்
என்பதாய் இருக்கலாமோ?
பறவை வேறு மனிதன் ஈறாய்
ஆன்மாவில் பேதம் உண்டா?
விடையிலாக் கேள்வியாக
இன்னமும் இறுகிப் போக
உந்தின பந்தாய்த் திரும்பி
மீனையே தேடிப் போனேன்.
கடுகு போல் விழியுருட்டி
என்னையேத் தவிர்ப்பதாகத்
தலைகளைத் தண்ணீருக்குள்
வேகமாய் இழுத்துக் கொண்ட
மீன்களும் கூடிப் பேச
நான் ஒருவன் மட்டிலும் தனியனாய்
என் ஆன்மாவைச் சுமந்து கொண்டு
வழி நடக்க....
No comments:
Post a Comment