Monday, February 22, 2021

 த்ருஷ்யம்2 


(1)


கீழப்பாலத்தில் வேகம் குறைக்காமல் சர்ரென்று திருப்புவதில் பஸ் ட்ரைவர்களுக்கு அலாதி த்ருப்தி. இத்தனைக்கும் அங்கு பஸ் ஸ்டாப் உண்டு. சில பஸ்கள் நிற்காது. அப்படி நிற்காத பஸ்களில் பயணம் செய்கிறவர்கள் பஸ் நிறுத்தங்களில் எதிர்பார்ப்புகளோடு நிற்கிறவர்கள் முக வெறுப்புகளை கணப்போதில் சம்பாதித்துக் கொண்டு, என்னமோ சந்திர மண்டலத்திற்கு செல்வதற்கு பாஸ் கிடைத்துப் போவது போல் ஒரு பாவனையோடு ப்ரயாணிப்பர். நாம் உள்பட.

கீழப்பாலம் என்பது மேலப்பாலம் என்ற ஒன்று கட்டப்பட்டதால் வந்த பெயர். காவிரியின் பலநூறு உப உப உப கிளைகளில் ஒன்றான பாமணி நதியின் மேல் எப்பவோ ப்ரிட்டிஷ் காரன் கட்டியது. 

கீழப்பாலம் ஒரு அடையாளம். அது ஒரு சந்திப்பும் கூட. மத்தியதர மக்களுக்கான ப்ரத்யேக கடைகள் உணவு விடுதிகள் நிரம்பி வழிகிற இடம்.  என் கபாலத்தில் மீதமிருப்பவற்றை எப்பாடு பட்டாவது வெளி உலகுக்கு காட்டியே தீருவது என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஒரு நபர் அங்குதான் எழில் முடித்திருத்தும் நிலையம் வைத்திருந்தார். அவர் கடையில் நீளமாக தொங்குகிற சவரக்கத்தி தீட்டப் பயன்படும் ரப்பர் பட்டையை விட என் தலை அதிக அளவில் தீட்டப்பட்டிருக்கிறது. முதல் மற்றும் மூன்றாவது புதன்கிழமை அவருக்கு நான்தான் போணி. என் சிரசு மிகவும் ராசியானது என்று அவருடைய குலதெய்வம் அவரது கனவில் சொல்லியிருக்க வேண்டும். என்னை நிசமாகவே பட்டை தீட்டியவர் அவர்.

மீனாட்சி, ஜெயந்தியெல்லாம் என்னை ஒரு பொருட்டாகவே கருதாததற்கு என் இயற்கை எழிலை சீரழித்த கடை முதலாளியும் என் பூப்போட்ட சட்டைகளும்தான் காரணம் என்று இன்றுவரை நான் திடமாக நம்புகிறேன்.


கட்டுரை கீழப்பாலம் பற்றியது அல்ல. அதன் மீதான வெறுப்பு பற்றியதும் அல்ல. உண்மையில் கீழப்பாலம் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். வீட்டிலிருந்து ஐந்தே நிமிட நடை. இல்லை, ஏதேனும் வாங்க, ஒரு மைல் தள்ளி பந்தலடி போகவேண்டியிருக்கும். என் வழக்கமான தலையிழந்த ஒரு புதன் கிழமை ஏற்படுத்திய சொல்லொணாத் துயரம் மறைகிற அளவில் ஒருநாள் ஒரு கடையில் தேங்காய் கீற்றுகளைப் பார்த்து விட்டு வீட்டில் வந்து சொன்னேன். அதற்குமுன் தேங்காயை கூறுபோட்டு விற்றதையெல்லாம் பார்த்ததே கிடையாது. அம்மா நம்பவில்லை. அவளே நேரில் பார்த்து அசந்து விட்டாள். அதற்கு தேங்காய் பத்தை என்ற பெயர் இருப்பது நாங்கள் புலம் பெயர்ந்து வேலூர் வந்த பிற்பாடுதான் தெரிந்தது.

இன்னொருமுறை பெட்டிக்கடை வைத்திருக்கிற  செவிடன் என்கிற நாராயணன், தர்பூஷ் பழங்களை இறக்குமதி செய்திருந்தான். அதை ஒருவர் வாயெல்லாம் சிவக்க சட்டையெல்லாம் நனைய கவ்விக் கவ்வித் குதறியதை பார்த்து அது மாமிசம் என்று நானும் குமுட்டி என்கிற குண்டு குமாரும் நெடுநாள் நம்பிக் கொண்டிருந்தோம்.

இந்த குழந்தைத் தனமான சுவாரஸ்யங்கள் தாண்டி, சர்ரென்று திரும்பும் பஸ்கள் தவிர்த்து, கீழப்பாலம் எங்களுக்கு பிடிக்கக் காரணம் மெயின் ரோட்டு முக்கிற்கும், நாகநாதசார் வீட்டிற்கும் இடைப்பட்ட சுவர். அதில்தான் எங்கள் ஊரின் பல நூற்றாண்டுகளாக புழக்கத்தில் இருக்கிற நான்கே நான்கு தியேட்டர்களில் வெளியாகும் படங்களின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கும்.

அதை மற்றவர் போல் நின்று ரசிக்க முடியாது. காரணம் நாகநாத சார். நரம்பு மாதிரி இருப்பார். ஆனால் பசங்களை செமர்த்தியாக வார் பிடிப்பார். மெலிதான மூங்கில் கழிகளை ப்ரத்யேகமாக கணுவில் நறுக்கி கணு பக்கத்தால் தேர்ந்த தவில் கலைஞன் மாதிரி வாசிப்பார். அடிவாங்குபவனின் ஐயோ ஐயோ என்று அலறல் அவரது வாசிப்பின் சுருதியோடு இணைந்து வருகிற வரை விடமாட்டார். தெய்வாதீனமாக நான் அவரிடம் அடிவாங்கிய தில்லை. காரணம் எந்தவொரு காலகட்டத்திலும் அவருடைய வகுப்புகளில் நான் இடம் பெற்றதில்லை.  அவருக்கு என்னைத் தெரியாது. ஆனால், என் அப்பாவை நன்றாகத் தெரியும். அதைவிட எங்களுக்கு அவரின் சங்கீத லாவண்யத்தை நன்றாகத் தெரியும் என்பதால் ஓரிரு நொடிகளுக்குள் அவ்வளவு போஸ்டர்களையும் கிரகித்துக் கொண்டு விரைவோம். ஒருமுறை, வாழையடி வாழை என்ற படத்தில் ஏவி.எம்.ராஜன் கால் ஊனத்தினால், இரு கைகளிலும் தாங்கு கட்டைகள் தாங்க நின்றதில் ஈர்க்கப்பட்டு, நானும் குமுட்டியும் சற்றே அருகில் சென்று உன்னிப்பாக பார்க்கும் போது, வேலை மெனக்கெட்டு புகையிலை துப்ப வெளியில் வந்த நாகநாதன் சார் கண்ணில் பட்டு விட்டோம். வேட்டியை தொடையிடுக்கில் அதக்கிக் கொண்டு, மிகவும் வழக்கத்திலிருந்த சோழநாட்டின் ப்ரபலமான கெட்ட வார்த்தையைக் கூறிக் கொண்டே ஒரே எட்டில் தாவி முதலில் வாகாக நின்ற குமுட்டியை லாவிப் பிடித்து விட்டார். அப்போது எங்களோடு பராக்கு பார்த்துக் கொண்டிருந்த ஓரிரு சிறுவர்கள், எங்களுக்கு அவ்வளவாக பரிச்சயமில்லாதவர்கள் "ஐயையோ.. ஓடுங்கடா" என்று அலறியவாறு ஓட, நானும் துரித கதியில் இயங்கி குமுட்டியை அங்கேயே துறந்து விட்டு  கீழப்பாலம் பக்கம் சிட்டாய்ப் பறந்தேன். அங்கே முக்கில் இருந்த நாராயணன் கடையில் அவனிடம் காட்டிக் கொடுக்க வேண்டாம் என்று இறைஞ்சி, ஒளிந்தவாறு நடப்பதைக் கண்காணித்தேன்.  குமுட்டியின் பின்பாகம் தான் தெரிந்தது. அவன் காதை பலம் கொண்ட மட்டும் நாகநாதன் சார் திருகி, இன்னொரு கையால் பளார் பளார் என்று அறைந்து கொண்டிருந்தார்.  குமுட்டியின் அகலமான முதுகு வெடவெடவென்று ஆடுவதை வைத்து அவன் விக்கி விக்கி அழுகிறான் என்று புரிந்தது. நாகநாத சாருக்கு கைவலித்ததோ, இல்லை வீட்டிலிருந்து அழைப்பு வந்ததோ, அவர் குமுட்டியைத் தள்ளமுடியாமல் கீழே உருட்டி விட்டு, உள்ளே விருட்டென்று சென்று மறைந்தார். நான் ஒரு விநாடி கூடத் தாமதிக்காமல் பாய்ந்து,  அங்கே தடுமாறிக் கொண்டிருந்த குமுட்டிக்கு கைலாகு கொடுக்க முனைந்தேன். அவன் அதை மறுதலித்து என்னை நிமிர்ந்து பார்த்தான். அவன் வலது காது கடுமையாக சிவந்திருந்தது. நிஜமாகவே குமுட்டியிலிருந்து புகை வந்தது. அதற்கப்புறம் நாங்கள் நண்பர்களாகத் தொடரவில்லை. இத்தனைக்குப் பிறகும், அந்த இடத்தை விட்டு அகலும் போது போஸ்டரைப் பார்க்க நாங்களிருவருமே மறக்கவில்லை. அதிலும் ஏவியெம்ராஜன் குமுட்டி மாதிரி கண்ணீரும் கம்பலையுமாயிருந்தார்.


இது நடந்து நாற்பது  நாற்பத்தைந்து வருடங்களக்கப்புறம், போனவருடம் டிவியில் வாழையடி வாழை போட்டதை விசேஷ ஆவலோடு பார்த்தேன். அதில் ஏவியெம்ராஜன் நடிக்கவில்லை. அது நடிகர் ஷண்முகசுந்தரம். டெக்னாலஜி மலிந்த இந்நாளில் குமுட்டி என்கிற குண்டு குமாரைக் கூப்பிட்டு சொல்ல எவ்வளவு நேரமாகும்? அவனும் திருமணமாகி, மனைவியையும், ஒருவருடம் கூடப் பூர்த்தி ஆகாத ஒரு பெண்குழந்தையையும் விட்டு விட்டு, ஒரு சிவராத்திரியன்று  கடுமையான மாரடைப்பால் இறந்து போய் பதினைந்து வருடங்களாகியிருந்தன.


(2)

அப்போதெல்லாம் எங்களுக்குத் தெரிந்து நாலைந்து விளையாட்டுகள் தான் உண்டு. அநேகமாக என்னுடைய சகாக்கள் எல்லோருமே எல்லாவற்றிலும் பாண்டித்யம் உடையவர்கள். கில்லி, கிட்டிப்புள் (இரண்டும் ஒரேமாதிரி என்றாலும் வேறு வேறு என்று போதிக்கப்பட்டிருக்கும்), பம்பரம், கோலிக்குண்டு, செவன் ஸ்டோன், கபடி, அப்புறம் கிரிக்கெட்.

இதில், கோலி நான் விளையாடியதே இல்லை. கிரிக்கெட்டில் என்னை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அப்பா சின்னவயதில் சேகரித்து வைத்திருந்த நிறைய பம்பரங்களை எடுத்துக் கொண்டு போய் அநேகமாக எல்லாமே ஆக்கர் வாங்கி செதில் செதிலாகப் பெயர்ந்து விட்டன. எனக்கு பம்பரத்தை ஙொய்ங் என்று பலம் கொண்ட மட்டும் எறிவதற்கு வராது. தரையில் இழுப்பு தான் விடத்தெரியும். இது கிட்டத்தட்ட சைக்கிளில் குரங்குப் பெடல் போடுவது போல அநாகரிகமானது. செவன் ஸ்டோனை சாக்கு வைத்து என்னை நிறையப் பேர் வெளுத்திருக்கிறார்கள்.

கோலி வராது. கிரிக்கெட்டில் சேர்க்க மாட்டார்கள். பம்பரமெல்லாம் நொறுங்கி விட்டன. முதுகு அடிவாங்கி வாங்கி பழுத்து விட்டது. ஒரேயொரு அதிர்ஷ்டம், அவ்வளவு பேரிலும் என்னை மாதிரி ஓரிரண்டு தத்திகள் இருந்தது. அதிலொன்றுதான் குமுட்டியின் தம்பி உருளி எனப்படும் மகாதேவன்.

என் வயது ஆனால் ஒரு வகுப்பு குறைவாகப் படித்தான். அவனுக்கு என்னை மாதிரி மனமுதிர்ச்சி கிடையாது. முதுகு பழுக்கிற மாதிரி பந்தால் அடிவிழுந்தால் என்னால் ஒன்றுமே நடக்காத மாதிரி வலிக்காத மாதிரி இயல்பாக இருக்க முடியும். அவனால் முடியாது. ஓவென்று வாய்விட்டு அநாகரிகமாக  அலறுவான். எங்கள் இயலாமை மற்றவர்கள் வளர்ச்சிக்கு பெரிய தடையாக இருந்ததால் நாங்கள் இருவரும் மேற்சொன்ன வீரவிளையாட்டுக்களில் இருந்து நீக்கப்பட்டோம். இதனால் நாங்கள் இருவரும் வயதில் மிகக் குறைந்த, அநேகமாக குழந்தைகளான மௌலி, ராமுடுவோடு விளையாடும் நிலைக்குத் தள்ளப் பட்டோம்.

அதுவும் வெறுத்து விட்டது. எவ்வளவு நாளைக்கு தான் பஸ்ஸில் டிக்கெட் விற்பது. போஸ்ட் கார்டில் கண்டம் விட்டு கண்டம் ரயில் ஓட்டுவது.

இப்படித்தான் நாங்கள் உடல் உழைப்பு இல்லாமல் திண்ணையில் இருந்தபடியே விளையாடும் வழிகளைக் கற்றுக் கொண்டோம்.

அதிலொன்றுதான் அந்தாக்ஷரி மாதிரி சினிமாப்படப் பெயர்களைக் கண்டு பிடிப்பது.

இந்த விளையாட்டு நாங்கள் துவக்கிய சில காலத்திலேயே சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. வீரவிளையாட்டுக்களில் சண்டை வந்து விளையாட்டைத் தொடர முடியாதவர்கள் இதில் சேரவாரம்பித்தனர். ஒருசில வாரங்களில் தான் இதிலிருக்கும் சிக்கல் புலப்படவாரம்பித்தது. அதாவது, சீக்கிரமே சரக்கு தீர்ந்து விட்டது. இதனால், அவ்வளவு பெரிய ஊரில் எங்கெல்லாம் போஸ்டர் ஒட்டுவார்கள் என்று கண்டறிய ஒற்றர் படையொன்றை நிறுவினோம். காலப்போக்கில் ஒற்றர்களும் போட்டியாளர்களாகி நாங்கள் மறுபடியும் ஓரம்கட்டப்பட நேரலாம் என்கிற நிலை வந்தபோதுதான், நாங்களே வீதிவீதியாக அலைந்து குட்டிச் சுவர்களில் ஒதுங்கியது.

நிறையப் படங்களின் பெயர்களை மனப்பாடம் செய்து கொள்ளவும், சினிமா, நடிகர்கள் பற்றிய உபயோகமான தகவல்கள் சேகரிக்கவும் இது பேருதவியாக இருந்தது.

பறக்கும் மனிதனும் பயங்கரப் பேய்களும், ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, பெற்ற மகனை விற்ற அன்னை, யானை வளர்த்த வானம்பாடி மகன் என்று பெரிய பெரிய பெயர்களைத் துருப்புச்சீட்டு போல் ரிலீஸ் செய்து சபையை திக்குமுக்காடச் செய்வதில் நான் நிபுணன் ஆனேன்.


(3)

சமீப காலமாக எனக்கு ஞானம் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தெரியவாரம்பித்திருக்கின்றன. 

என்ன காரணமோ, இத்தனை போஸ்டர்களைப் பார்த்திருந்தாலும், அபூர்வமாகத்தான் சினிமாப் படங்களை பார்க்க நேர்ந்தது. என்ன காரணமோ, மேற்படி படங்களை, குறிப்பாக ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி யெல்லாம் பார்க்கத் தோன்றியதே இல்லை. கிட்டத்தட்ட இதே பெயரில், சிகாமணியை நுழைத்து, எஸ்‌வி சேகரின் படு அபத்தமான விரசமான ஒரு நாடகத்தை சப்புக் கொட்டிக் கொண்டு பார்த்ததும் ஒரு காரணம்.

போன வருடம் இந்தப் படத்தை டீவியில் பார்த்தேன். தூக்கிவாரிப்போட்டது. நான் நினைத்தது போல ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி இல்லை. அது ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி. அதைப்போல் நடித்ததும் டி.ஆர். ராஜகுமாரி இல்லை. வி.என்.ஜானகி.

என் பூர்வ ஜென்ம பலன் எனக்கு உண்மை தெரிந்து விட்டது. இல்லாவிட்டால் என்ன ஆகியிருக்கும். நினைக்கவே நடுக்கமாக இருக்கிறது.


இரண்டாம் முறையும் எனக்கு ஞானம் சித்தித்தது. ப்ளஸ் டூ படிக்கும் போது பார்த்த குடும்பம் ஒரு கதம்பம் படம். வேலூரில் என் சகா மனோகர், மறுநாள் வகுப்பறையில் சத்தமாக நாங்கள் இருவரும் கு.ஒ.க. பார்த்ததை அறிக்கை இட்டான். "அதுல ஒரு கியவன் இன்னா சோக்கா கலாய்க்கறான் தெரிமா" என்று மற்ற பசங்களையும் உசுப்பி விட்டான். நான் சும்மா இல்லாமல், என் சினிமா ஞானத்தை நிரூபிக்கும் வகையில், அது கிழவன் இல்லடா, அவன்தான் விசு (சூ என்று விஸ்தாரமாகக்கூடிய சு). அவன்தான் டா படத்துக்கே கதை எழுதினவன் என்று விசுவைப் பற்றி என் பெரியம்மா பையன் போன சம்மர் லீவில் சென்னையில் சொன்னதை ஏற்ற இறக்கங்களுடன் சொல்ல, திடுமென்று புலம் பெயர்ந்த அந்த ஊரில் என் மவுசு கூடிவிட்டது. அப்போதென்று தாமஸ் "நானும் பாத்துட்டேன் டா.. படம் ஃபுல்லா பேசிக்கினா கீறானுங்கடா.. ஆனா அதில ஒத்தன் பனுமாதிக்கு கால் போடுவான் பாரு.. செம டமாஸ்டா" என்று விவரிக்க, கவனம் அவன் பக்கம் போய் விட்டது. நான் என் பங்குக்கு அவனும் ட்ராமா ஆர்டிஸ்ட் தான்டா.. சூரியகோஸ் ரங்கான்னு பேரு" என்றேன்.. அன்று காலைதான் பொம்மை இதழில் படித்ததை பெரிய மனிதத் தோரணையில் கூற கூட்டம் மறுபடியும் என் பக்கம் வந்து விட்டது. கடந்த முப்பத்தெட்டு வருடங்களாக என் நண்பர்கள் சூரியகோஸ் ரங்கா என்றுதான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்னைத் தவிர. போன வருடம் அகஸ்மாத்தாக குடும்பம் ஒரு கதம்பம் டைட்டில் பார்த்த போது, அந்த நடிகர் பெயர் "குரியகோஸ் ரங்கா" என்று போட்டிருந்தது. உடனே யாருக்கும் தெரியாமல், மணல் கயிறு போட்டுப் பார்த்தால் அதிலும் குரியகோஸ் என்று தான் போட்டிருந்தது. இதை இதுவரை நான் யாரிடமும் தெரிவிக்கவில்லை. இந்த ரகசியம் என் கடைசி மூச்சு இருக்கும் வரை என்னுடனே இருந்து மறையட்டும்.


(4)

எப்படிப் பார்த்தாலும் மலையாளப் படங்கள் தான் உயர்ந்த படங்களாக இருக்கின்றன. இத்தனைக்கும் மலையாள டைரக்டர்கள் போட்டி போட்டுக் கொண்டு அவளோடே ராவுகள், வாடகைக்கு ஒரு ஹ்ருதயம் மாதிரி உன்னதமான காவியங்களைத் திரைக்குக் கொண்டு வருவதற்குப் பலகாலம் முன்பே தமிழில் அந்த நாள், பொம்மை, ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி, ஆரவல்லி, மர்மயோகி, தூக்கு தூக்கி, திகம்பர சாமியார், நடு இரவில் என்று வெவ்வேறு காலகட்டங்களில் மர்மம், துப்பு துலக்குதல், திகில் என்று படங்களை எடுத்து வெற்றி கண்டிருக்கிறோம். இதில் சில படங்களை நான் தொடர்ச்சியாகப் பார்க்க இயலாமல் வாராந்திர சீரியல் மாதிரி பார்த்து முடித்திருக்கிறேன்.  அதிலும், ஆயிரம் தலை வாங்கி பார்த்து முடிப்பதற்குள் தாவு தீர்ந்து விட்டது. கடுமையான மர்ம முடிச்சுகள் கொண்ட படம். திகம்பர சாமியார் மட்டுமே மூன்று முறை விட்டு விட்டு பார்த்து இருக்கிறேன். இன்னும் இரண்டு முறை முயற்சித்தால் எப்படியும் புரிந்து கொண்டு விடலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

மொத்தத்தில், மர்மப் படங்கள் நமக்கொன்றும் புதிதல்ல.


த்ருஷ்யம்.

ஒன்று, இரண்டு.


தாயத்தில் ஒன்று விழுந்தால் திரும்பவும் தாயம் உருட்டலாம். இரண்டு விழுந்தால் முடியாது. முடிந்து விடும். ஜீத்து அவர் பங்குக்கு தாயம் விளையாடியிருக்கிறார். இரண்டு போட்டு முடித்திருக்கிறார்.

எண்பதுகளில் சுஜாதா "சிவந்த கைகள்" என்று ஒரு மாத நாவல் எழுதினார். எனக்குத் தெரிந்து மணியன் மாத இதழ். அதில் கதாநாயகன் கடைசியில் ஃப்ராடு என்று நிரூபணமாகி, அதைக் கண்டு பிடித்த ஒரு மாமாவை அவன் கொன்று விடுவான். கதை முடிந்து விடும். சுஜாதாவின் கதை என்பதால் அவரது உயிர் ரசிகர்கள் அவனை மன்னித்து நாவல் நல்ல விற்பனை. சில மாதங்கள் கழித்து, அவருக்கே மனம் தாளாது, கலைந்த பொய்கள் என்று எழுதினார். அதில், திடுமென ஒருவன் முளைத்து, கொலைகாரக் கதாநாயகனைக் கண்டுபிடிக்க, கதாநாயகன் வேறுவழியில்லாமல் நிஜமாகவே வில்லனாக மாறி, நம்மிடம் மதிப்பிழந்து, மாட்டிக் கொள்வானோ.. இறந்து போவானோ..

இன்றைக்கும் ஞாபகமிருக்கிற அந்தக் கதையில் எனக்கு தவறு செய்த நாயகனைத்தான் பிடித்திருந்தது. 


த்ருஷ்யமும் கிட்டத்தட்ட இதே மாதிரி தான் என்று தோன்றும் படியாக, ஆனால் அது இல்லை. ஒரு தேர்ந்த, வெற்றி பெறும் வழியைக் கண்டுகொண்டு விட்ட, துணிச்சலான, புத்திசாலியான ஒரு டைரக்டர் ஜீத்து வின் வேறு ஒரு முயற்சி.


த்ருஷ்யம் 1 இல்லாமல் 2 சாத்தியமில்லை. இது புத்திசாலித்தனம் ஒன்று. 


த்ருஷ்யம் 1 ல் இருந்த தானாக நடந்த, எதிர் பாராத, யூகங்களற்ற காட்சிகள் த்ருஷ்யம் 2 ல் முயற்சிக்கப் படவில்லை.

சம்பவம் நடந்த பின், முதல் பட நாயகன், போலிஸை ஏமாற்ற முனையும் உத்திகள் புத்திசாலித்தனமாகவும், நம்பமுடியாவிட்டாலும் ஏற்றுக் கொள்ள மனம் ஆசைப்படுகிற விதமாகவும் அமைந்தன. லாஜிக் பிழைகள் முதல் படத்தில் இல்லை. மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட காட்சிக் கோர்வை அது.

முதல் படத்திலும் ஒரு ஆன்டகனிஸ்ட் தப்பிவிட வேண்டும் என்று அனைவரும் விரும்பி, அது புத்திசாலித்தனமாக நடந்தேறியதில் மிகவும் திருப்தியடைந்தோம். அதிலும், கடைசியில் போலிஸ் ஸ்டேஷனில் அவன் உடலை மறைக்கும் இடம் ஒண்ணாங் கிளாஸ். படம் பார்த்த முழு திருப்தியும் அந்தவொரு காட்சியில் கிடைத்து விட்டது.


த்ருஷ்யம் 1 ஆரம்பிக்கும் போது எந்த எதிர்பார்ப்பும் இல்லை. டைரக்டர் பற்றிய அதீதமான எதிர்பார்ப்புகளோடு படம் முடிந்து விட்டது.


த்ருஷ்யம் 2, ஆரம்பிக்கும் போதே இவன் எப்படியும் மாட்டிக் கொள்வான், அதில் தப்பிப்பானா மாட்டுவானா என்ற எதிர்பார்ப்புடன் தான் ஆரம்பிக்கிறது.


1. வீட்டில் காமரா/மைக் வைத்து கண்காணிக்கிறார்கள். குலோத்துங்கன் காலத்து உத்தி. வழுவழுவென்று மொட்டை அடித்துக் கொண்டு, அசோகன் என்கிற காமெடியும் இல்லாமல் வில்லனுமில்லாத ஒரு நடிகர் கேவாக்கலரில் மேக்கப் போட்டுக் கொண்டு பலநூறு படங்களில், வில்லத்தனமாக இருக்க வேண்டுமே என்று டப்பென்று கண்சிமிட்டிக் கொண்டே பலபேர் பேசிகளை ஒட்டுக் கேட்டிருக்கிறார். ஆமாம், ஒட்டுக் கேட்கும் உபகரணங்களை அவர்கள் வீட்டுக் கழிப்பறை வரை எப்படி செருகினார்கள் என்று கேட்டால் காவலைக் கேலிசெய்கிறதாக தேசத்துரோகக் குற்றம் சாட்டப்படலாம். ஒன்று ஜீத்து இடைப்பட்ட ஆறு வருடங்களில் நிறைய ராஜேஷ்குமார் நாவல்கள் படித்திருக்கணும். இல்லையென்றால் கேரள காவல்துறை திடுமென புத்திசாலித்தனம் அடைந்திருக்கணும். போலிஸார் யார் வீட்டை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இவ்வகையில் கண்காணிக்க முடியுமென்றால், அதையேன் போன படத்திலேயே செய்யவில்லை? செய்திருந்தால் ஜார்ஜ் குட்டி ஜோலியை முதல் படத்திலேயே முடித்திருக்கலாம். த்ருஷ்யம் 2 சாத்தியமில்லை.

2. பக்கத்து வீட்டு அனுசரணையான பெண் போலிஸ்காரியாம். அவள் கணவன் போலிஸ்காரனாம். வேலை மெனக்கெட்டு, பல லட்சங்கள் செலவு செய்து, பக்கத்து மனையை வாங்கி, வீடு கட்டி, குடித்து கும்மாளம் அடித்து, உறவாடி, உளவாடி .. ஆறு வருடங்கள். அடேங்கப்பா.

எனக்குத் தெரிந்து ஒரு மாமாங்கமாய் அரசு ஊழியர்களுக்கு மாதாந்திர சம்பளமே கொடுக்க முடியாத ஒரு அரசு, வேலையை விட்டுப் போய்விட்ட ஒரு போலிஸ் உயரதிகாரியின் மகன் கொலையைத் துப்பு துலக்க பல லட்சங்கள், நாட்கள், வருடங்கள் செலவு செய்கிறது. பின் யுகங்களில் செவ்வாய் கிரகத்திற்குக் குடிபோனபின் தான் இது நடக்கும். அவ்வளவு வெட்டியாக வா இருக்கிறார்கள் அங்கு?

3. நான் என்ற ரவிச்சந்திரன் படம். உண்மை வாரிசைக் கண்டு பிடிக்க நிறையப் பேர் முயல்வர். அனைவரும் தீர்மானமாக ரவிச்சந்திரன் தான் போலிஸ் சி.ஐ.டி. இதோ இன்னும் அரை மணியில் அரையிலிருந்து துப்பாக்கி எடுக்கப் போகிறார் என்று ஆவலுடன் காத்திருந்தால், பெண் வேடமணிந்த நோஞ்சான் நாகேஷ் தலைப்பாகையைக் கழற்ற, மற்ற போலிஸ் காரர்கள் அதிர்ச்சி அடைந்து, அதிலொருவர் நங்கென்று காலைத் தரையில் உதைத்து, அட்டென்ஷனில் சல்யூட் அடித்து, "ஹா.. இன்ஸ்பெக்டர் சுந்தரம்.. குட்மார்னிங் சார்" என்பார். குறைந்த பட்சம் இந்தக் காட்சி இத்தனை வருடம் காமடியாகவாவது நீடிக்கிறது.

4. ஐஜிக்கள் தீவிர ஆலோசனையில் இருக்கும் கான்ஃபிடன்ஷியல் அறையில் அசால்ட்டாக நுழையத் தகுதி பெற்ற பெரிய எழுத்தாளர் நாட்டு நடப்புகள் தெரியாமல் இருக்கிறார். ஊரெல்லாம் பேசப்பட்ட நாலு வருடம் முன்னால் நடந்த விஷயம் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆளை லேசாக எங்கோ பார்த்த ஞாபகம் இருப்பவருக்கு பாத்ரூம்களில் கூட புழங்கின கதை புலப்படவில்லை. 

5. காப்பிரைட் போட்டு புத்தகம் வெளியிட்டு யாரிடமும் விற்கவில்லை. அது கோர்ட்டில் ரிலீசாகிறது. பலே.

6. விட்டலாச்சார்யா படத்தில் வருகிற குள்ள பேய் மாதிரி திடுமென ஒருத்தன், சொல்லி வைத்தாற் போல, மைத்துனனைக் கொன்று விட்டு, தப்பிக்க போலிஸ் ஸ்டேஷன் பக்கம் ஓடி வருகிறான். அங்கே ஒளியும் போது ஜார்ஜ் குட்டி மண்வெட்டியுடன் வருவதைப் பார்த்து, கூட்டிக் கழித்துப் பார்த்து சரியாக விடை சொல்லி ஐந்து லட்சம் அடித்துக் கொண்டு போகிறான். நாம் கூடத்தான் லட்சக்கணக்கில் ஜார்ஜ் குட்டி புதைத்ததைப் பார்த்தோம். நாம் கூட சொல்லி ஐந்து லட்சம் தள்ளிக் கொண்டு போயிருக்கலாம். இதெல்லாம், தமிழ்வாணன் என்ற பெரிய எழுத்தாளர் எழுதிய யாருமே துப்பறியாத நாவல்களில் தான் இம்மாதிரி அகஸ்மாத்தான, ஸ்வாரஸ்யமற்ற, கற்பனை வறட்சியுள்ள திருப்பங்கள் நேரும். 

இதெல்லாம் நம்ப முடியாத விஷயம் என்று சொல்லவில்லை. முகம் சுளிக்க வைக்கிற மூன்றாம்தரக் கற்பனை.

7. பிணம் சம்பாதிப்பது, அவன் இறந்து போவது, பிணவறை காப்பாளனை நீராலடித்து வீழ்த்துவது எல்லாம் எந்த விதத்தில் புதிது? புதிதாகவே இருந்தாலும் அதிலென்ன சுவாரஸ்யம்?

8. மோகன்லால் மேலிருக்கும் நம்பிக்கையும், ஜீத்துவின் முதல்படம் ஏற்படுத்திய சுவாரஸ்யமும், மலையாளப் படமென்றாலே தமிழை விட நன்றாகத்தான் இருக்கும் என்ற மௌடீகமும், இசையும், காமெராவும் முதல்தடவைப் பார்க்கும் போது பல இடங்களில் சீட்டின் நுனிக்கு வரவழைப்பது உண்மை. த்ருஷ்யம் 1, இத்தனைக்கப்புறம், அக்கு வேறு ஆணிவேராக எல்லோரும் அதனை அலசின பிற்பாடும், மிகமுக்கியமான சஸ்பென்ஸ் வெளியான பின்னும், ஏழாவது தடவையும் அலுப்பில்லாமல் பார்க்க முடிகிறது. த்ருஷ்யம் 2 அதற்குத் தகுதி இல்லாதது.


கடைசி வரியில் குற்றவாளியின் தண்டனையாக அவன் அனுபவித்துக் கொண்டிருப்பதை சொல்வது ஒரு பெரிய கவிதை. இதற்கு முந்தைய படத்தின் கடைசிக் காட்சியை மிஞ்சும் பதிவு இது.


நம் வீட்டில் மாமரம் வளர்க்கிறோம். சுவையாகப் பழுக்கிறது. நான்கு பேர் கொண்ட குடும்பம் சுவைத்து மகிழ்கிறது. வரும் வருடங்களில் காய்த்துத் தள்ளுகிறது. பக்கத்தில் பழக்கடையில் விலை பேசி எடுத்துப் போகிறான். போன வருடம் வரை இருந்த மாம்பழத்தின் மீதான ருசி இப்போது அது தருகிற பணத்தின் மீதான ருசியாக உருமாறுகிறது. தனக்கும், மனைவிக்கும், குழந்தைகளுக்கும் கூட வைத்துக் கொள்ளத் தூண்டும் ருசி இது.

ஜீத்து ஜோசப் என்கிற குடும்பத் தலைவன் பணத்திற்காக ருசியான பழத்தை விற்று விட்டான். 


குழிப் பிள்ளையைத் தோண்டி என்னமோ கொண்டாடியது இதுதான் போலும்.


பிகு.

இந்த சாதாரண விஷயத்திற்கு சம்பந்தமில்லாத விஷயங்கள் கொண்ட நீண்ட பதிவு ஏன் என்று தோன்றலாம். இது ஒன்றும் ஜீத்து வின் ஏகபோக உரிமை இல்லை.