Sunday, April 16, 2023

பொட்டு

பொட்டு

துர்பாக்கியசாலிகள் தான் மனைவியுடன் இந்த மாதிரி ஸ்டிக்கர் பொட்டு, பாஷிமணி, ஊஷிமணி கடைகளுக்கு செல்வார்கள். தொடர்ச்சியாக ஆறுமுறை இவ்விதம் போகிறவர்கள், பழைய காலத்து விஜிபி கோல்டன் பீச்சின் வாசலில் மகாராஜா காஸ்ட்யூமில் நிற்கும் தகுதியைத் தானாகவே அடைந்து விடுவார்கள்.

பூனாவில் வசித்த போது, என் மனைவி துளசிபாக் என்கிற இடத்தில் என்னை நிறுத்தி விட்டு, அங்கு ஆயிரக்கணக்கில் இந்த மாதிரி கடைகள் சிதறிக் கிடக்கும் கடைத்தெருவில் நுழைந்தாள்.

நானும், எனக்குத் தெரியாமல் வாழ்க்கைப் பட்டுவிட்ட என் வண்டியும், டயர்கடுக்க நின்றது மட்டுமல்லாமல், காவலர்கள் தொல்லையால் கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளி அரைமைல் வந்து விட்டோம்.

ஆச்சரியகரமாக, என் மனைவி நான் தள்ளித் தள்ளி வந்து விட்ட சாலையின் எதிர்ப்புறம் ஏதோ கடையில் பேரம் பேசிக் கொண்டு இருந்தாள். அவளும் கடைகடையாக ஏறி இறங்கி இருக்கிறாள்.‌ ஆனாலும், வெறுமனே நின்று கொண்டு இருந்த என்னைப் போலக் களைத்துப் போகவில்லை.

நான் அவளைக் கைபேசியில் அழைக்க, மூன்றாவது முயற்சியில் அவள் அதை எடுத்து, வீரேந்திர ஷேவாக் மாதிரி முதல் பந்திலேயே ஒரு விளாசல். நான் பதவிசாக, எதிர் சாரியில் நிற்பதாகக் கூற, அவள் என்னை ஜனத்திரளில் துழாவி, கண்டு பிடித்து விட்டாள்.
உடனே, என்னிடம் கைபேசியில் அழைத்து, "எட்டணா சில்லறையா இருக்காப்பா?"
"எதுக்கு?"
"ம்ம்.. இங்கே ஒரு பில்டிங் விலைக்கு வருதாம்.. வாங்குறதுக்கு"
"நியாயமா நாந்தான் கோச்சுக்கணும்.. "
"வீட்டுக்குப் போய் சாவகாசமா சண்டை போடலாம்.. இப்ப எட்டணா குடுங்க.. லேட்டாகுது… ஸ்டிக்கர் பொட்டு எடுத்துட்டேன்.. சில்லறை இல்லை இவன்கிட்ட".

நான் பர்ஸைத் துழாவி, மிகவும் சிரமப்பட்டு சில்லறை எடுக்க, அதையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்த நாலைந்து பிச்சைக்காரர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். வேறு வழியின்றி அவர்களுக்கும் தர்மம் பண்ண வேண்டியதாகி விட்டது.‌

நான் பிச்சைக்காரர்களுக்குப் பட்டுவாடா செய்வதில் மும்முரமாக இருந்த போது, ஒரு முரட்டு போலிஸ்காரர் என்னைப் பின்னாலிருந்து அணுகி, என் வண்டியின் ஸ்டெப்னியில் பிரம்பால் பலமாகத் தட்டினார். நான் திரும்பினவுடன், கடுமையான முகத்துடன் என்னிடம், "இங்கு பிச்சை எல்லாம் எடுக்கக் கூடாது" என்று அதட்டினார்.

"வேறெங்கெல்லாம் எடுக்கலாம்" என்று கேட்டுத் தெரிந்து கொள்ளப் போதுமான மராத்தி கைவசம் இல்லாததால், அதைக் கடைசிவரைத் தெரிந்து கொள்ள முடியாமலே போய்விட்டது.

மேலும் தாமதிக்காமல்,
வண்டியை வாகாக சாக்பீஸால் குறி போட்டு இருந்த இடத்தில் நிறுத்தி விட்டு, சாலையைக் கடந்து எட்டணாவை தர்மபத்தினியிடம் சேர்ப்பித்து விட்டுத் திரும்பினால் வண்டியைக் காணோம்.

மாநகராட்சி வண்டி வந்து சுடச்சுடத் தூக்கிப் போய் விட்டான். குறி போட்டிருந்த இடத்தின் தென்கிழக்கே நிறுத்தக் கூடாதாம். பூனாவே எந்தத் திக்கில் இருக்கிறது என்று அப்போது புரியாமல் இருந்த நேரம்.

முந்நூறு ரூபாய் செலவு செய்து வண்டியை மீட்டோம்.

"ரெண்டு ரூபா பொட்டை, முந்நூத்தி ரெண்டு ரூபாய்க்கு வாங்கி இருக்கோம்".

"பொட்டு வச்சுக்கறதே ஹஸ்பண்டுக்காகத் தானே? நீங்க முந்நூறு ரூபாய் பொற மாட்டீங்களா?"

நான் பதில் சொல்லவில்லை.


Saturday, April 15, 2023

தலைமை


*தலைமை* 

பாதுஷாக்களும் ஜாங்கிரிகளும் (அக்பரும் தனக்கடுத்த ஷாஜஹானும் சிவப்பு நிறத்தில் கட்டிடங்கள் கட்டியதில், தான் மட்டும் மனைவிகளைத் தவிர யாரையும்  கட்டாததால் மனம் நொந்த ஜஹாங்கிர் பெயரில் உருவாக்கப்பட்ட சிவப்பு நிற இனிப்பு தான் காலப்போக்கில் மருவி ஜாங்கிரி ஆனது) வாழ்வாங்கு வாழ்ந்த தில்லியில் தான் கோரா என்கிற கோவிந்தராஜன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று ஒரு வருடம் ஆகிறது. சேத்தியாவுக்குதான் இந்தப் பதவி என்று ஊரே ஹேஷ்யம் சொன்னபோது இவரது பெயரும் லேசுபாசாக அடிபட்டது. திடீரென்று ஒரு நள்ளிரவில் சேத்தியா அதுவரைக்கும் தின்று தீர்த்த நெய்யும் பாலும் ஸ்வீட்டும் எங்கிருந்தோ பதுங்கிப் பாய, அவருக்கு பக்கவாதம் வந்து படுத்து விட்டதில் கோரா ஏகமனதாகத் தலைவராகி விட்டார்.

அவர் வழக்கம் போல கொண்டை வைத்த வண்டியில் ஏறும் போது மனைவி அவரிடம் யாரிடமும் எதுவும் அநாவசியமாகப் பேச வேண்டாம், வெறுமனே ராம் ராம் என்று சூயிங்கம் மெல்வது போல ரகசியமாக வாய்க்குள் சொல்லிக் கொள்ளுமாறு கூறினாள். அவளது அத்யந்த ஆன்மீக குரு ஒருவர், ஒரு பிரத்யேகத் தொலைக்காட்சியில் அன்றாடம் காலை நேரங்களில் ஆரூடம் தவிர்த்து ஊர்க்கதை எல்லாம் பேசுபவர்,  அன்றைய தினம் கோரா ராசிக்கு சந்திராஷ்டமம் என்று கூறியிருந்தது தான் காரணம்.

தில்லி.  
லுட்யான்ஸ் நிர்மாணித்த நகரம்.  
நிர்மாணிக்கப்பட்ட காலத்தில் அழகாக இருந்திருக்க வேண்டும்.

உள்ளே உச்சகட்டத்தில் ஏசி இயந்திரம் அலுப்பில்லாமல் இயங்குவதில் வெளியே பற்றி எரிவது தெரியவில்லை. கடும் நெரிசலில் விழிபிதுங்கும் சாலைகள். இருமருங்கிலும் அடர்த்தியாக மரங்கள். இருந்தாலும் ஒன்றிலும் பசுமையில்லை. செம்மண் தூசியில் முக்கி எடுத்தாற்போல் எல்லாத்  தாவரங்களும் பசுமை இழந்து சிவபிரான் சாம்பலை பூசிக்கொண்டு திரிவது போல் புழுதியைப் ஈஷிக் கொண்டு மூச்சுக்குத் திணறிக் கொண்டு இருந்தன.

யமுனை நதி கழிவுநீரால் எதுக்களித்துக் கொண்டு இருக்க, அதன் கரைகளில் அழுக்கான ஒட்டகங்களும் அவற்றைப் பராமரிப்பவர்கள் அதைவிட அழுக்காகவும் வாழ்ந்து (?) கொண்டு இருந்தனர்.

பத்தடிக்கு ஒரு மேம்பாலம் இருந்தும் எல்லா மேம்பாலங்களும் வாகனங்களால் நிரம்பி வழிந்தன.

ஒரு விதத்தில் கோரா கோடையை விரும்பினார். அவரால் குளிர்காலத்தை சமாளிக்க முடியவில்லை. பூம்பூம் மாட்டுக்காரன் மாடு போல ஏழெட்டு லேயர்களில் உடையணிந்து மூச்சுத் திணறித் தான் அலுவலகம் வரவேண்டி இருந்தது.

 திருச்சிராப்பள்ளியில் முழங்கால் வரை வேட்டியும் ஒரு மேல்துண்டும் அணிந்து அன்றாடம் கொல்லையில் துணி காயப் போடுவதில் இருந்து சாக்கடை அடைத்துக் கொண்டால் குத்தி விடுவது வரை ஒண்டி ஆளாக செய்து கொண்டு இருந்த அவரது வயது முதிர்ந்த தந்தை, ஆசையாக தில்லி வந்து,  மூன்றே நாட்களில் படுத்த படுக்கை ஆகி, அடுத்த விமானம் பிடித்து ஊர் போய்ச் சேர்ந்து விட்டார்.

சமையலறையின் எக்ஸாஸ்ட் விசிறிகளைக் கூட அடைத்தாகி விட்டது.‌ எங்கிருந்து குளிர் கசிகிறது என்றே கண்டு பிடிக்க முடியவில்லை. ஓய்வு நாட்களில் கூட கோராவும் அவர் வேலையாட்களும்  பேப்பர், கோந்து சகிதம் பள்ளி சிறுவர்கள்  போல எதையாவது ஒட்டிக் கொண்டு திரிந்தனர். கோவிந்தராஜன் கொஞ்ச காலம் கோந்து ராஜனாக உலா வந்த நேரம் அது.

சந்திராஷ்டமம். 

கோரா தனக்குள் சிரித்துக் கொண்டார். சமீபத்தில் அவருக்கு தினமும் சந்திராஷ்டமம் தான்.‌ மனோகர் உபாத்யாயா என்னும் ஒரு மகாபாவியை அவருக்குக் கீழே மேல் மேலிடம் நியமித்ததில் இருந்து.

முதல் ஆறுமாதங்கள் நன்றாகத் தான் கழிந்தன. தனக்குக் கிடைத்த பதவியையும் புகழையும் மதிப்பையும் அவர் நன்றாகவே அனுபவித்தார். 

தனது தென்னிந்தியத் தோற்றத்தில் சற்றே தாழ்வுணர்ச்சி கொண்டிருந்தார் அவர்.  அதற்குக் காரணம் இருந்தது.

முதலில் தோற்றம். என்னதான் செப்பனிட்டாலும், மாவு கொண்டு அடைத்தாலும்,  அடுத்த அரை மணியில் அவரது முகத்தின் ஊற்றுக்கண்கள் திறந்து, எப்பவுமே அவரது முகம் லேசாக நசுங்கிய எண்ணெய்த்தூக்கு போலவே தென்படுவதை அவரால் சரி செய்யவே முடியவில்லை.

இரண்டாவது உடை. 

தினமும் கோட்டு சூட்டு. சென்னையில் இருந்தவரை அவரது அறைக்குள் ஒரேயொரு அழுக்கான கோட்டை அதன் ஸ்டாண்டில் மாட்டி இருப்பார். எப்பவாவது வீடியோ கான்ஃபரென்ஸில் மேலிடம் கூப்பிடும் போது அதற்குள் நுழைந்து கொண்டு காட்சி தருவார். 

ஆனாலும் அது நாளுக்கு நாள் அழுக்காகிக் கொண்டே வருவதில் அவருக்கு லேசாக ஒரு சந்தேகம். 

மேசையையும் இன்ன பிற உபகரணங்களையும் சுத்தம் செய்கிற பெண் அதற்காகத் தன் கோட்டைத்தான் உபயோகிக்கிறதோ என்று.

தன் சந்தேகத்தைத் தன் உதவியாளரிடம் காட்டமாகத் தெரிவித்ததில், அவர் அந்தப் பெண்ணிடமே சங்கோஜமில்லாமல் கேட்டுவிட்டார். 

அதற்கு அந்தப் பெண் மூஞ்சியில் அடித்த மாதிரித் தலையில் அடித்துக் கொண்டு " போயும் போயும் அந்தக் கருமத்தைக் கையால் தொடுவாங்களா? கு'ரோகம் வந்துடாது" என்று கூறியதை கேள்விப்பட்டு அந்தப் பெண்ணை வேலையை விட்டே நிறுத்தி விட்டார்.

இங்கே தில்லி கலாச்சாரம் வேறுமாதிரியாக இருக்கிறது. தினம் ஒரு நிறத்தில் கோட்டு சூட்டு போட்டுப் போக வேண்டியதாக இருக்கிறது.

 அவர் ஆகிருதிக்கு அது நன்றாக இல்லை என்று அவருக்கே தெரிகிறது. அதன் பொருட்டே, தன்னை யாரும் மதிப்பதில்லையோ என்ற அனுமானத்தில் கீழே இருப்பவர்களை சகட்டு மேனிக்குத் திட்டி வேலை வாங்கினார். அவரது கெடுபிடிகளால் அவருக்கு மரியாதை கூடவில்லை. மாறாக முசுடு என்ற பெயர்தான் கிட்டியது.

இந்த நேரத்தில் தான் மனோகர் உபாத்யாயா லக்கிம்பூர் கேரியில் இருந்து மாற்றலாகி வந்தான். இவருக்கு இரண்டு படிகள் கீழே. இவருக்கு அடுத்து இருந்தவர் வயதாகி ஓய்வு பெற்று விட்டதில், அவர் இடம் நிரப்பப் படாமல் இவனைப் போட்டிருக்கிறார்கள். இதில் ஏதோ உள்குத்து இருக்க வேண்டும்.

அவன் வரும்போதே தடாலடியாக வந்தான். அலுவலகத்தில் முக்கால் வாசிப்பேர் அவனுக்கு வேண்டியவர்கள். மிச்சமிருந்தவர்களையும் தன் வலையில் வீழ்த்தி விட்டான்.

அவனுக்கு நாய்க்குணம் வந்து நாலைந்து வருடங்கள் ஆகியிருக்கும். இவரை விட பத்து வருடங்கள் சிறியவன். இவருக்கு நாய்க்குணம் போயிருந்தது மனோகரைப் பார்த்ததும் திரும்பி விட்டது.

அவன் வடக்குக்கே உரித்தான பட்டுச் சிவப்பில் ஆறடிக்கு ஆஜானுபாகுவாக இருக்கிறான். கோரா அளவிற்கு ஆங்கிலம் போதாது என்றாலும் தைரியமாக உளறுகிறான். அதைவிட எப்படியோ சம்பாஷணையை சுளுவாக இந்திக்கு மாற்றி விடுகிறான்.  அலுவலகத்தில் இருக்கும் ஒன்றிரண்டு தமிழர்கள் கூட என்னமோ வடக்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் போல இவரிடமே இந்தியில் தான் பேசுகின்றனர். கோராவுக்கு இந்தி தெரியும் என்றாலும் தெரியும் தான். இந்திக்கு இவரைத் தெரியாது.

இவரைப் போல இல்லாமல் மனோகருக்கு எந்த உடையும் எடுப்பாக இருக்கிறது. முந்தாநாள் வெல்வெட் போன்ற துணியில் கத்தரிப்பூ நிறத்தில் ப்ளேஸரும், கரும்பச்சையில் ஒரு பேண்ட்டும் போட்டு வந்தான். நம் ஊரில் சிவாஜி கணேசன் கூட இந்த மாதிரி கோட்டெல்லாம்  போட மாட்டார்.

ஆனால், அவனுக்கு அது அப்படி இருந்தது.‌ஆளாளுக்கு அவனை அநாவசியமாகப் புகழ்ந்து சாக்லேட் வாங்கித் தின்றனர்.

இவர் வந்தால் எழுந்து நின்றாலும் எங்கேயோ பார்க்கிற அந்தக் கடங்காரி மாதவி மேனன்,  வாயில் ஏலக்காய் அடக்கிக் கொண்டு அவன் கோட்டுப் பாக்கெட்டில் உரிமையுடன் ரோஜாப்பூ செருகி விடுகிறாள்.

இதெல்லாம் போனால் போகிறது. அவன் வந்த பிற்பாடு முதல் மரியாதை அவனுக்குப் போய் விட்டது தான் கோராவின் ஆத்திரம்.

வழக்கமாகப் பேசி அளவளாவும் மினிஸ்ட்ரி ஆசாமி, இப்போதெல்லாம் இவரைக் கூப்பிடுவதே இல்லை. இவராக பலவந்தமாக அவரைக் கூப்பிட்ட போது, அவர் "ஓ.. இது பழைய விஷயம் ஜி.. இதைப் பற்றி போனவாரமே மனோகர் தெரிவித்து விட்டானே" என்று பட்டென்று ஃபோனை வைத்து விட்டார்.

கொஞ்சம் கொஞ்சமாக தான் ஒதுக்கப் படுவதாக நினைக்கவாரம்பித்தார் கோரா.

மறுபடியும் தன் பேரை மாற்றலாமா என்று யோசித்தார்.

அவர் வீட்டில் ஒன்று விட்டு ஒன்று கோவிந்தராஜன். அதே போல் அவர் அப்பா, கொள்ளுத்தாத்தா எல்லோரும் வரதராஜன்.

ஆக இவர் பரம்பரையில் முதல் ஆண் ஒன்று வரதராஜன் கோவிந்தராஜன் அல்லது கோவிந்தராஜன் வரதராஜன்.
இவர் வரதராஜன் கோவிந்தராஜன். இவர் நண்பர்கள் ரமேஷ், மகேஷ், சுரேஷ்  என்று நவீனமான பெயர்களோடு திரிய, இவர் மட்டும் முழ நீளத்திற்குக் கேட்பவனுக்குக் கொட்டாவி வருவது மாதிரி பெயரோடு அலைகிறார்.

என்ன செய்வது, இது பரம்பரையாக ஆகி வந்த பெயர்.‌ முதல் பிரகஸ்பதி வரதராஜனா இல்லை கோவிந்தராஜனா தெரியவில்லை.

குத்துமதிப்பாக ஒரு மனக்கணக்கில் இவர் நாற்பத்தி ஏழாம் கோவிந்தராஜன்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார். முடியவில்லை. தன் பெயரை இவராகவே கோரா என்று சுருக்கிக் கொண்டு விட்டார்.

மனைவி கூட சொல்லிப் பார்த்தாள் "என்னங்க.. கோரான்னா கோரம் மாதிரி இருக்குங்க"

"சான்ஸே இல்லே... கோரான்னா கோரமாக இல்லாதவனேன்னு அர்த்தம்"

"அப்படீன்னா சரி"

அப்போது எல்லாம் நன்றாக மாறியது இப்போது இந்த மனோகரால் சரியில்லாமல் போய் விட்டது.

ஒரு வருடம் ஆகியும் மண்டி ஹவுஸில் இருக்கும் இவரது க்வார்டர்ஸ் தயாராகவில்லை.‌ அதன் கட்டுமானத்தில் பழுது பார்க்க அரசு அனுபதி கிட்டவில்லை. அவசரப்பட்டு முக்கியமான பாகங்களை இடித்து விட்டதில் திரும்பக் கட்ட முடியவில்லை. நம்மூர் மாதிரி சத்தம் போடாமல் கட்ட முடியாது. காலையில் வாசல் தெளிப்பதற்குள் வந்து பூட்டி சீல் வைத்து விடுவார்கள்.

வேறு வழியின்றி தொலைதூரத்தில் வசிக்க வேண்டி வந்து விட்டது. 

தினமும் ஒரு மணி நேரம் அலுப்பூட்டும் பிரயாணம்.

மெட்ரோவில் வருவது சிலாக்கியம். ஆனால், இந்த மாதிரி காரில் கெத்தாக வருவது கிட்டாது.

 சென்னையைப் போலல்லாமல் இந்த ஊரில் எல்லோருமே இந்த மாதிரி வாகனத்தில் தான் வருகின்றனர். அதனால் இவருக்கு என்று தனியாக ஒரு விசேஷ கவனம் கிட்டுவது இல்லை என்பதும் தெரிகிறது. ஆனால், யார் தொந்தரவும் இல்லாமல் மிதப்பாக வருவதும், நின்றதும் ஓட்டுனர் பரபரவென்று அப்பிரதட்சணம் செய்து கார் கதவைத் திறந்து விடுவதும் கோராவுக்கு புளகாங்கிதத்தை ஏற்படுத்தும் விஷயங்கள்.

மனோகர் இதையெல்லாம் எதிர்பார்ப்பதில்லை. சமயங்களில் ஓட்டுநருக்கு விடுப்பு கொடுத்து, தானே ஓட்டிக் கொண்டு வந்து விடுகிறான்.

இதை இப்படியே வளர விடக் கூடாது.  விட்டால் தன் பதவிக்கே ஆபத்து வந்துவிடும்.

எந்த மீட்டிங்கிலும் இவரைப் பேசவே விடாமல் அவனே பேசுகிறான். நிறுவனம் சார்பாக அவனே பேட்டி கொடுக்கிறான். இவரும் ஓரிரண்டு முறை அவனை லேசாக எச்சரித்துப் பார்த்தார்.

ஒன்று புன்னகைக்கிறான். இல்லை, உங்கள் இந்தியை நீங்கள் வளப்படுத்திக் கொள்ள வேண்டும் ஜி என்று கத்தையாக நாலைந்து இந்திக் கவிதை புத்தங்களைக் கையில் திணித்து விட்டுப் போகிறான்.‌கோராவிற்கு அந்தப் புத்தகங்களின் புதிய வாசனை மட்டும் தான் பிடிக்கிறது. மற்றபடி ஒரு அட்சரம் புரிவதில்லை.

இது கூட பரவாயில்லை. போன வாரம் நடந்தது தான் உச்சகட்டம்.

மலைமந்திரில் ஏதோவொரு பூஜை.  அலுவலகத்தில் ஏற்பாடு செய்து இருந்தார்கள். இவருக்கு அதன் ஸ்தாபகர்களில் ஒன்றிரண்டு பேரைத் தெரியும். அர்ச்சகர்களோடு பரிச்சயம் இல்லை.

ஞாயிற்றுக்கிழமை தானே, நம் கோவிலுக்குத் தானே போகிறோம் என்று வேட்டி சட்டையோடு பட்டை எல்லாம் அடித்து மனைவியோடு போனால், அவன் வழக்கம் போல கோட்டு, பளபளவென்று மனைவியோடு (மனைவியும் பளபளதான்) வந்தான்.

இவர் சுதாரிப்பதற்குள், அர்ச்சகர் ஆயியே ஆயியே என்று பலகாலம் பழகினவர் போல அவனிடம் தட்டை நீட்டி சங்கல்பம் பெற்றுக் கொண்டார். அவனும் ஒரு மரியாதைக்குக் கூடத் தான் அதற்கு உரித்தவனில்லை என்று கூறாமல் முதல் மரியாதையை பெற்றுக் கொண்டான்.

பூஜை முடியும் வரை கோரா முருகனை மனதார சபித்தார்.

ஒரு மணி நேரம் தாண்டி நீடித்த பிரயாணம் முடிந்து அலுவலகம் வந்து விட்டார்.

அன்றைக்கு என்று அருகாமையில் இருந்த ஒரு ஹோட்டலில் மூன்றாம் மாடியில் ஒரு முக்கியக் கூட்டம். நிகழ‌ இருக்கும் போர்டு மீட்டிங்கிற்காகத் தையாரி. 

அக்கம் பக்கம் இருந்த இவர்களது கிளைகளில் இருந்து அதன் தலைவர்களைத் தருவித்து இருந்தார். வீடியோவில் அழைத்து இருக்கலாம்.

மனோகர் தான் "இல்லை இல்லை.. நேரில் அழைத்துக் கலந்துரையாடினால் தான் நிறைய பாயிண்டுகள் கிடைக்கும்" என்று பிடிவாதமாக ஏற்பாடு செய்து இருந்தான்.

அங்கு மதியம் உணவு நன்றாக இருப்பதாலும், அவன் மற்றவர்களுக்கு அனுகூலம் செய்வதன் மூலமாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்வதற்காகவும் தான் இது என்று கோரா நினைத்துக் கொண்டார்.‌ ஆனாலும், அவரால் இதை மறுக்க முடியவில்லை.

சந்திராஷ்டமம் மனதில் நெருடியது.

ராம் ராம் என்று சொல்லிப் பார்த்தார். அவருக்கு இதெல்லாம் சரிப்படாது. பெரிய நம்பிக்கையும் கிடையாது.

மீட்டிங் ஹால்.  வெளியே இருந்த தற்காலிகத் தட்டியில் "வருகை தரும் கனவான்களுக்கு நன்றி" என்று மட்டும் இருந்தது. ஒரு மரியாதைக்குக் கூட இவர் புகைப்படமோ பெயரோ இடம் பெறவில்லை. 

நாளை முதல் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்தி தெரியாவிட்டால் என்ன? ஆங்கிலத்தில் திட்டக் கூடாதா என்ன? இவன்களை உண்டு இல்லை என்று ஆக்குகிறேன் பார் என்று சபதம் ஏற்றுக் கொண்டார்.

மீட்டிங் துவங்கியது.

கோரா சீரியஸாகப் பேசும் போது மனோகர் தன் முன் பரிமாறப்பட்ட முறுக்கு, வறுத்த முந்திரி போன்றவைகளை தடித்த விரல்களால் அள்ளி அள்ளி வாயில் இட்டு "கரக் கரக்" என்று ஒலியெழுப்பியவாறு தின்ன ஆரம்பித்தான்.

அவனைக் கண்களால் எரிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

சிம்பயாஸிஸில் எம்பிஏ படித்ததற்குப் பதில் மலையாளத்தில் மாந்திரீகம் பழகி இருக்கலாம்.

மனோகர் செய்கை தந்த சலுகையில் மற்றவர்களும் பதார்த்தங்களை சுவைக்கத் தலைப்பட்டனர்.

நாலைந்து சீனியர்கள் யாரையும் பொருட்படுத்தாமல் அள்ளி அள்ளித் தின்ன, ஓரிரு இளம் அதிகாரிகள் நாசூக்காக யாருக்கும் தெரியாதவாறு ஒவ்வொன்றாக எடுத்து ரகசியமாக இரு உதடுகளைத் துடைக்கிற மாதிரி செலுத்தி சுவைக்கத் தலைப்பட்டனர்.

சீனியர்களை ஒன்றும் சொல்ல முடியாமல் (யாருக்கு என்ன செல்வாக்கோ?) இளைஞர்களைப் பார்த்து, "முந்திரிப் பருப்பு நல்ல பதத்தில் வறுக்கப்பட்டிருக்கின்றன அல்லவா?" என்று கேட்டார்.

அவரது கேள்வியால் பகாசுர படலம் திடுக்கிடலுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, எல்லோரும் தத்தம் கிறுக்கல் நோட்டுகளில் கிறுக்கப்படாத பக்கங்களில் தீவிரமாக ஆழ்ந்தனர்.

மனோகர் மட்டும் கவலைப்படாமல், விரலை வாயுள் செலுத்தி அங்கு எசகுபிசகாக மாட்டியிருந்த எதையோ எடுப்பதில் மும்முரமாக இருந்தான்.

கோரா பார்வையை  அவனிடமிருந்து விடுவித்து தன் பேச்சைத் தொடர்ந்தார்.

அப்போது ஹோட்டல் சிப்பந்தி ஒருவன் மனோகரை அணுகி ஏதோ கூற அவன் அதை மறுத்து ஏதோ கூறினான். 

ஒரு ஹோட்டல் சிப்பந்தியின் கண்களுக்குக் கூட, தன்னை விட இரண்டு நிலைகள் கீழே இருப்பவன் தான் தலைவனாகத் தெரிகிறான் என்பதில் கோராவுக்குள் ஒரு எரிமலையே வெடித்தது.

பேச்சை நிறுத்தி விட்டு "ஏதேனும் அதிமுக்யமான விஷயமா" என்று மனோகரைக் கேட்டார்.

அவன் லேசாக முறுவலித்து, "அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை.. யாரோ சில பேர் நம்மைப் பார்க்க வேண்டும் என்று தலைவிரி கோலமாகக் காத்திருக்கிறார்களாம்"

நம்மை என்று பன்மையில் சொல்கிறான் பார் திருடன். 

"கையில் சிலம்பு வைத்திருக்கிறார்களாமா"என்று நக்கலாக சிரித்தார் கோரா.

அவன் சற்று குழம்பி, "பார்டன்?"

அவனுக்குக் கண்ணகியைப் பற்றி பாடம் நடத்தும் சமயம் இதல்ல என்று உணர்ந்து, "நீ என்ன சொன்னாய்?"

"முடியாது என்று அனுப்பி விடச் சொல்லி விட்டேன்.. நமக்கு எவ்வளவு முக்கியமான வேலை இருக்கிறது" என்றான்.

"என்ன ஒரு திமிர் இவனுக்கு?" என்று நினைத்துக் கொண்டார் கோரா. இவனுக்கு சரியான பின்புலம் இருக்கிறது என்பது உண்மையாகத் தான் இருக்க வேண்டும். தான் இவனிடம் ஜாக்ரதையாக இருப்பதை இவன் நம்முடைய கோழைத்தனம் என்று நினைத்து விட்டான் போலிருக்கிறது. தனக்கும் ஆள் இருக்கிறது என்று இவனை உணர வைக்க வேண்டும். ஆள் இல்லாமல் தன்னால் இந்த பதவிக்கு எப்படி வந்திருக்க முடியும் என்று இவனுக்குத் தெரிந்திருக்காதா என்ன? வேறு ஏதேனும் வலுவான பின்புலம் இருப்பதால் தான் தொடர்ந்து தன்னை மட்டம் தட்டுகிறான். இன்று மீட்டிங்கிற்காக நாற்காலிகள் அமைக்கப்பட்டதையே கூட நான்  கண்டித்திருக்க வேண்டும். அவைத் தலைவராகத் தான் இருக்க, தனக்கென்று உயர்ந்த ஆசனம் போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எல்லோரையும் போல சாதாரணமான நாற்காலி தான் போடப்பட்டு இருக்கிறது. இது எல்லாமே உள்நோக்கம் கொண்ட செயல்கள். இவற்றை நீடிக்க விடுவது பேராபத்தில் முடியும். முதலில் இவன் நம்மை  மேக்கரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

கோரா தன் கைககளை பலமாகத் தட்டி வெளியேறிக் கொண்டு இருந்த சிப்பந்தியை நிறுத்தினார்.

வந்திருக்கும் நபர்களை உள்ளே  அனுப்புமாறு கூறினார்.

அவன் சற்று குழம்பி, பின்னர் சரியென்று கூறியவாறு வெளியேறினான்.

சற்று நேரத்தில் நான்கு பேர் உள்ளே வந்தனர்.

முதலில் வந்தவன் தலை கலைந்து ராக்கெட் விஞ்ஞானி போலிருந்தான். கொஞ்ச காலம் முன் வரை இளைஞனாக இருந்திருக்கிறான். மிகவும் விலை உயர்ந்த நேரு ஜாக்கெட் அணிந்து இருந்தான்.

அடர்த்தியான கருநீலத்தில் லேசாக வரிகள் புடைத்து ஏதோ டிஸைன் போலும். அதன் பெரிய பெரிய பித்தான்கள் தங்க நிறத்தில் மின்னின. நிஜமாகவே தங்க முலாம் பூசியிருக்க வேண்டும். பஞ்சு மிட்டாய் கலரில் சட்டை அணிந்து இருந்தான்.  ரத்தச் சிவப்பில் தொட்டால் கன்னிப் போவது போல இருந்தது அவன் தோற்றப் பொலிவை அதிகரித்தது. அவன் கூட வந்த மூவரும் இளைஞர்கள். அவர்களும் கூட நல்ல விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து இருந்தனர்.

நால்வரும் நல்ல வளர்த்தியில் எடுப்பான புஜங்களோடு இருந்தனர்.

அவன் மூவரும் பின் தொடர‌ உள்ளே நுழைந்து, சற்றே குழம்பி, பொதுவாக "ஹாய்" என்றான்.

வட்டமாக அமர்ந்து இருந்தவர்களை அவசரமாக ஒரு நோட்டம் விட்டு, தலையை அசைத்தவாறு நேராக மனோகரை அணுகி "ஹாய்" என்று இன்னொருதரம் சொன்னான்.

மனோகர் அவனிடம் "ஹலோ... நீங்கள் யார்? என்ன வேண்டும்?" என்றான்.

அவன் பதிலுக்கு, "நீங்கள் தான் இந்த நிறுவனத்தின் தலைவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். உங்களால் எனக்கொரு காரியம் ஆகவேண்டி இருக்கிறது" என்றான்.

மனோகர் "சொல்லுங்கள்" என்று சொன்னதும் கோராவின் உள்ளம் வெடித்தே விட்டது. அவரது பொறுமையின் எல்லையை மனோகர் தகர்த்தே விட்டான்.

கோபம் தலைக்கேறி, தன்னையறியாமல் எழுந்து நின்றார்.

"எக்ஸ்க்யூஸ் மீ" என்று அதட்டும் குரலில் அந்த மனிதனை அழைத்தார்.

"மிஸ்டர்... இந்த நிறுவனத்தின் தலைவர் அவரில்லை... நான் தான்.. 
நான் மிஸ்டர் கோரா.. தங்களுக்கு ஏதாவது வேண்டும் என்றால் என்னிடம் தான் கேட்க வேண்டும்.. நீங்கள் அணுகிய அந்த நபன் என்னிடம் வேலை செய்பவன்" என்றார்.

மாநிறமான அவர் முகம் கோபத்தில் இறுகி சிவந்து விட்டது. அவர் கைகள் லேசாக நடுங்கியது. அதைக் கட்டுப்படுத்த முயன்றதில் உடல் நடுங்கியது.

இப்போது அந்த மனிதன் இரு கைகளையும் குவித்து "மன்னிக்க வேண்டும்... மன்னிக்க வேண்டும்" என்று பல முறை இறைஞ்சினான்.

கோராவை அணுகி அவர் அனுமதி இல்லாமல் அவர் கைகளை பற்றிக் கொண்டான். நல்ல வலுவான மனிதன்.

அவன் மறுபடியும் மன்னிப்பு கோரி, "எங்களுக்கு இந்த நிறுவனத்தின் தலைவரால் தான் வேலை ஆக வேண்டியிருக்கிறது... ஊழியர்களால் ஒன்றும் ஆவப்போவதில்லை.. 
எங்கள் தலைமை எங்களை உங்கள் மாதிரி பெரிய நிறுவனங்களின் தலைவரை மட்டுமே அணுகி சகாயம் கேட்க வலியுறுத்தி இருக்கிறது.. அதை மீறினால் கடுமையான தண்டனை கிடைத்திருக்கும்... காலையில் இருந்து அலைந்து திரிந்து இன்று காலை உணவு உண்ண இந்த விடுதிக்கு வந்த போது உங்கள் நிறுவனத்தின் தட்டியைப் பார்த்தோம்...

 விசாரித்த போது நிறுவனத்தின் தலைவர் வந்திருப்பதாகக் கூறினார்கள்..

 நம்முடைய தேடல் இப்படி சுலபமாக முடிந்தது என்று நினைத்து அவசரப் பட்டு விட்டேன். பெரிய தவறு நிகழ்ந்து இருக்கும்...
நல்ல வேளை..  பெரிய இக்கட்டில் இருந்து தாங்கள் எங்களைக் காப்பாற்றி விட்டீர்கள்" என்றான்.

அவன் பேச்சும் முகமனும் கோராவை சாந்தப் படுத்தின.  இந்த ஆறுமாதத்தில் முதல் முறையாக அவருக்கு உரிய மரியாதை கிட்டி இருக்கிறது.  அவரது இந்தத் தலையீடு இல்லையேல் இடம் மாறி இருக்கும். இனிமேல் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.

"அன்பரே... நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்" என்றார் அன்பும் கரிசனமும் வழிய.

அந்த மனிதன் யானைத் தந்தம் போலிருந்த தன் கையை  ஜாக்கெட் பையில் லாவகமாக நுழைத்து தட்டையாக செவ்வகமாக  இருந்த ஒரு சிறு பெட்டி போன்ற ஒன்றை எடுத்தான்.

 பழைய சினிமாக்களில் வில்லன்கள் இந்த மாதிரி தட்டையான சிறு பாட்டில்களைத் திறந்து சிறு அளவில் சீமைச்சாராயம் அருந்துவார்கள். அதற்கும் சிகரெட் லைட்டருக்கும் நடுவாந்தரமாக இருந்தது அது. அதில் பேட்டரி கடிகாரத்தின் முள்ளைத் திருகும் பித்தான் போல ஒன்று இருந்தது.

கோரா அதை மிகுந்த சுவாரஸ்யத்துடன் கவனித்தார். காஸினோக்களில் சீட்டு விளையாடுபவர்களுக்கு சீட்டு விநியோகம் செய்வது போல விசிட்டிங் கார்டு விநியோகம் செய்யும் கருவி போலும் என்று நினைத்தார். 

இது எங்கு கிடைக்கும் என்று வெட்கப்படாமல் கேட்டு வைத்துக் கொண்டு, தனக்கும் ஒன்று வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அந்த மனிதன் அந்தப் பித்தானை வெகு நாசூக்காக அழுத்த, கோரா விசிட்டிங் கார்டு பெற்றுக் கொள்ளும் நவீன நாகரீகமாக இரு கரங்களையும் இணைத்து அவன் முன் நீட்டினார்.

ஆனால் கார்டு வரவில்லை. மாறாக ஏதோ சிவப்பு விளக்கு ஒளிர்ந்தது.

சைனா மேக் என்று நினைத்து உள்ளூர நகைத்துக் கொண்டார். இதைப் போய் வாங்க வேண்டும் என்று நினைத்தோமே என்று அவரை அறியாமல் இளநகையொன்று அவரிடத்தில் வெளிப்பட்டது.

உங்கள் உபகரணம் பழுதாகி விட்டது போலிருக்கிறது என்றார்.

அவன், "யார் சொன்னது? இதோ சிவப்பு விளக்கு எரிகிறது பாருங்கள்"

"ஆனால் கார்டு விழவில்லையே"

"இது நீங்கள் நினைப்பது போன்ற கருவி இல்லை. இது ஒரு உயிர்க்கொல்லி.. நீங்கள் குனிந்து உங்கள் மார்பைக் கவனித்தால் அதில் இந்த சிவப்புப் புள்ளி குடிகொண்டு இருப்பதை பார்த்திருப்பீர்கள்" என்றான்.

கோராவிற்கு தூக்கி வாரிப் போட்டது. அதிர்ச்சியில் நாக்குழறி "இது இது என்ன நவீன‌ரக துப்பாக்கியா" என்றார்.

"இவ்வளவு பெரிய நிறுவனத்தின் தலைவர் நீங்கள்... உங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ளத் தவறி விட்டீர்களே... இது துப்பாக்கி அல்ல.. துப்பாக்கி என்றால் சுட வேண்டும்.. ரத்தம் வரும்... எனக்கு ரத்தம் என்றால் அலர்ஜி.. மயக்கம் வரும்... அது தவிர என் விலையுயர்ந்த உடை பாழாகும். அதற்காக பிரத்யேகமாக எனக்கென்று ஒரு லேசர் கருவியை வடிவமைத்துக் கொண்டேன்.. இந்த பட்டனை இன்னொரு முறை அழுத்தினால் போதும்...
நீங்கள் காந்திஜி போல மரணிக்கும் போது ராம் என்று கூறி உயிரை விட முடியாது... ரா என்று சொல்லி முடிப்பதற்குள் உங்கள் இதயம்,  நெடுநாள் தரை துடைக்கும் கந்தல் துணியை கொடியில் உணர்த்துவது போல, உங்கள் மார்புக் கூட்டின் எலும்புகளில் கிழிந்து தொங்கும் " என்றான்.

"ஐயையோ.. என்னை ஏண்டா மகாபாவி" என்றார். அவரை அறியாமல் அவருக்குக் குரல் உடைந்தது.

"நான் முன்னமே சொன்னது தான்... எங்கள் கொள்கைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் எதிராக எல்லோரும் சதி செய்கிறார்கள்... நாங்கள் யார் என்று நிரூபிக்கும் தருணம் வந்ததால் பல இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்த்துகிறோம்... சமீபத்தில் ஊரை உலுக்கிய நிகழ்வு நாங்கள் ஏற்பாடு செய்தது தான்... ஆனால், அதில் நாங்கள் எதிர்பார்த்த அளவு அழிவு நிகழவில்லை. மாறாக, எங்கள் சகாக்களில் ஐந்து பேர் மாட்டிக் கொண்டுவிட்டார்கள்.
 அவ்வளவு பெரிய விஷயத்தை நிகழ்த்திவிட்டு தப்பிப்பதற்கு, குறைந்த பட்ச அவகாசம் கூட அளிக்காமல் போலீசார் மனிதாபிமானமற்று எங்கள் ஆட்களை சூழ்ந்து பிடித்துக் கொண்டு விட்டனர்.

அவர்களை விடுவிப்பதற்கான உபாயத்திற்காக நாங்கள் தீவிரமாக நேற்று இதே நேரம் இதே ஹாலில் யோசித்தோம். 

 அதன்படிதான் ஒரு உயரதிகாரியைப் பிடித்துக்கொண்டு போய் பணயக்கைதியாக ஐந்து நாட்கள் வைத்திருந்து, எங்கள் சுதந்திரப் போராட்டத் தியாகிகளை விடுவிக்கா விட்டால், பணயக்கைதியை போட்டுத் தள்ளி விட்டு, அடுத்த உபாயத்தை அணுகலாம் என்று திட்டமிட்டது.

அந்த வகையில் சூட்டிகையாக இருந்த இந்தப் பையனை பிடித்துக் கொண்டு போய் எங்கள் திட்டம் தவிடு பொடியாக ஆகியிருக்கும். நல்ல வேளையாக உங்கள் பெருந்தன்மை எங்களைக் காப்பாற்றிவிட்டது. உங்களுக்கு எங்கள் குழுமத்தின் சார்பில் பலநூறு வந்தனங்கள்" என்று கூறியவாறு மற்றவர்களுக்கு  சமிக்ஞை செய்ய, மற்ற மூவரும் கோராவை பலவந்தமாக எழுப்பி வெளியே நெட்டித் தள்ளிக் கொண்டு போனார்கள்.
-------

ஏழை சோமேஸ்வரன்


*ஏழை சோமேஸ்வரன்* 

கணேசன் இதை ஒரு ஆன்மீக அனுபவமாகத் தான் எடுத்துக் கொண்டான். அகஸ்மாத்தாக நடந்து இருக்கலாம். ஆனால், அது எதிர்பாராத விதமாக நடந்ததில் ஆச்சரியம் நிறைந்த சம்பவமாகி விட்டது.

ஐந்து வருடங்கள் சடுதியில் கடந்து விட்டன.

கும்பகோணத்தில் போஸ்டிங் என்பது கோயில் சுற்றிகளுக்கு பிறவிப்பயன். உறக்கம் வராத பிறிதொரு நாளில் வேலை மெனக்கெட்டு கணக்குப் போட்டதில் கிட்டத்தட்ட நூறாறைம்பது கோயில்கள் போயிருக்கிறான் அவன் அந்தக் குறுகிய கால கட்டத்தில். அநேகமாக எல்லாமே பாடல் பெற்ற ஸ்தலங்கள்,  இல்லை திவ்ய தேசங்கள். ஒரு சில அபிமான ஸ்தலங்கள்.

அபிமான ஸ்தலங்கள் என்பவை பிரபலமான பாரம்பரியம் மிக்க வைணவத் தலங்கள். ஆனால், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்படாதவைகள் அல்லது நூற்றி எட்டு திருப்பதிகளில் என்ன காரணமோ விடுபட்டுப் போன தலங்கள்.

மன்னார்குடி, வடுவூர், ஏன் குருவாயூர் போன்ற அற்புதமான ஸ்தலங்கள் எல்லாம் அபிமான ஸ்தலங்கள்.

காவேரியின் அரசலாற்றுத் தலைப்பில் கேட்பாரற்று கேட்டவரம் தரும் ஆஞ்சநேயர் என்றொரு குறுங்கோயில் உண்டு. இது மேற்சொன்ன எந்த வகையிலும் சேராது. யாரோ ஒரு புண்ணியவான் ரசனையின் அடிப்படையில் கட்டியது. 

இந்த அனுமார் அளவில் சிறியவர்.  ஆனால் பெரிய அதிர்ஷ்டசாலி. இவரது உயர்த்திய வலது கையின் கீழே காவிரி அரசலாற்றை சுடச்சுட பிரசவித்து விட்டு, ஷட்டர்கள் வழியே தலைதெறிக்க விரைகிறது.
அரசலாறு கேட்கவே வேண்டாம். தாயை விட அதி வேகமாக திருவலஞ்சுழி வரை காவிரிக்கு இணையாக அல்லது இன்னமும் வேகமாக ஓடி, சடாரென்று தெற்காகத் திரும்பி மறுபடியும் தாராசுரத்தில் கிழக்கில் வளைந்து நேராக ஓடுகிறது.

உண்மையில் திருவலஞ்சுழி என்பது அரசலாறு வலப்பக்கம் சுழித்து ஓடுவது தான். இதன் தென்கரையில் கோயில் கொண்டுள்ள‌ கபர்தீஸ்வரர் கோயிலின் முகப்பில் தனிக் கோயிலாகக் குடிகொண்டு உள்ள சுவேத விநாயகர் என்னும் வெள்ளை விநாயகர் சுமார் ஓரடி உயரமே கொண்டு கடல் நுரையால் ஆனவர்.
இவர் வலம்புரி விநாயகர் இல்லை.  வலஞ்சூழி ஊரில் இருக்கும் சாதா இடம்புரி கணேசர் தான்.

இவரது கோயில் சிற்பக்கலைக்கு சாட்சியாக இன்றும் விளங்குவது.

இதன் கருங்கல் பலகணி, இன்றைக்கும் சிற்ப சாஸ்திரத்தில் உருவாக்க முடியாத ஆறு  அதிசயங்களில் ஒன்றாக  சிற்பிகளின் உறுதிமொழியில் இன்றும் கூறப்படுகின்றது.

ஆவுடையார் கோயில் கொடுங்கை, திருவலஞ்சுழி கருங்கல் பலகணி, திருவீழிமிழலை வௌவால் மண்டபம், தஞ்சைக் கோயில் விமானம், திருநனிபள்ளி கோடி விட்டம், கடாரம் கொண்டான் மதில் என்கிற‌ ஆறு அதிசயங்கள் மனிதர்களால் மறுபடியும் உருவாக்க முடியாதவை என்று நம்பப் படுகின்றன.

ஏதோ ஞாபகத்தில் அரசலாற்று அனுமாரில் ஆரம்பித்து பொடிநடையாக திருவலஞ்சுழி வந்தாகி விட்டது.

மறுபடியும் அரசலாற்றுத் தலைப்பு.

கல்லணையில் இருந்து திருவையாறு வழியாக பூம்புகார் வரை செல்லும் சாலை அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் அவரது அமைச்சர் கோவிந்த தீட்சிதர் போட்டது. இது காவிரியை ஒட்டியே அதன் வடகரையில் பிடிவாதமாகக் கூடவே வளைந்து வரும்.

இதில் திருவையாறு தாண்டி கூட்டுத்துறை ஜகத்ரட்சகப் பெருமாள் கோயிலும் தாண்டி, மகாபெரியவர் தாயார் பிறந்த ஊரான ஈச்சங்குடியைத் தாண்டி, கொஞ்ச தூரத்தில் வலது புறம் இருக்கும் குறுகிய தெரு,  மேட்டுத்தெரு எனப்படும்.

இந்த மேட்டுத் தெருவின் கடைசியில் தான் காவிரி அரசலாற்றுத் தலைப்பு.

கணேசன் கும்பகோணம் சேர்ந்த உடன்‌ இந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்று அவன் தந்தை விருப்பப்பட்டதால் அவர்கள் மூவரையும்‌ (கணேசன், மனைவி, தந்தை) அவர்கள் டிரைவர் தட்சிணாமூர்த்தி என்னும் மூர்த்தி அழைத்து வந்தார். 

நல்ல வெய்யில். பொட்டுத் தண்ணீர் இல்லை. பல காலமாகத் தண்ணீர் வராத சூடு மணலில். கரையில் தாவரங்கள் பெருவாரியாகக் கருகி இருந்தன. மீன்களின் சடலங்கள் எலும்புத் துணுக்குகளாக சிதறிக் கிடந்தன.

ஜன நடமாட்டமே இல்லை.

அனுமார் வரம் கேட்க ஆளில்லாத நிலையில் பரிதாபமாக நின்றிருந்தார்.

கணேசனின் மனைவி அவரிடம் ஒரே ஒரு வரம் தான் கேட்டாள்.

அடுத்த முறை வரும் போது காவிரியில் தண்ணீர் இருக்க வேண்டும் என்று.

அனுமார் நிஜமாகவே வரப்ரசாதிதான் போலும்.

அடுத்த பதினைந்து நாளில் குடகில் வானம் கிழிந்து போய், மேட்டூர் முழுகிவிடாமல் இருக்கத் திறந்த தண்ணீர் பெருகி,  முக்கொம்பை சொம்பை நசுக்குவது போல் நசுக்கி, கொள்ளிடத்தை உடைத்து,  வழி நெடுக நடந்தாள் வாழி காவேரி.

தண்ணீர் கும்பகோணத்தை அடைந்த ஐந்து நாட்களில் மறுபடியும் மேட்டுத் தெருவிற்குப் படையெடுத்தார்கள்.

இந்த முறை கணேசனும் அப்பாவும் தான். மனைவி  பெண்ணைப் பார்க்க‌ அயல்தேசம் போய் விட்டாள்.

கேட்டவரம் அருளும் ஆஞ்சநேயர் புளகாங்கிதத்தில் இருந்தார். அவர் சந்திதி வாசல் பெருக்கித் துடைக்கப்பட்டு, காரை பெயர்ந்த தரை முழுக்க கற்பூரம் ஏற்றிய சுவடுகள்.

"அடேங்கப்பா.. என்ன வேகம் பத்தியா?" என்றார் அப்பா.

 மதகுகளில் இருந்து பீறிட்டு வரும் தண்ணீர் பத்துப் பதினைந்தடி எகிறி, மீன்கள் ஆயிரக் கணக்கில் எம்பி எம்பி, வெளி உலகின் உற்சாகத்தைக் காண விழைவதாகத் துள்ளிக் குதித்து ஆற்றின் ஓட்டத்தில் கலந்து விரைந்தன.

"தட்டாங்கோவில் மாதிரி நாலு மடங்கு இம்பாக்ட் இருக்கும்" என்றார் அப்பா.

தட்டாங்கோவில் என்பது மன்னார்குடி தாண்டி, திருத்துறைப்பூண்டி போகும் வழியில் பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சிற்றூர். அதனருகில் இவர்கள் குலதெய்வம் குடிகொண்டு இருப்பதால் வருடத்திற்கொரு முறை போகும் வழக்கம்.

அங்கு கோரையாறு முள்ளியாறு சந்திக்கும். காவிரியின் உப கிளைகளில் கோரையாறு தான் அதிவேகமாகப் பாய்வது. ரஃபேல் நடால் ஆக்ரோஷமாக விளையாடுவது மாதிரி பெருத்த சத்தத்தோடு பாயும் அது.

"இதை விட வேகம் எகிறிச்சுன்னா கரையெல்லாம் உடைஞ்சிரும்" என்றார் மூர்த்தி.

கேட்டவரம் அனுமார் நீரும் நெருப்பும் எம்ஜிஆர் மாதிரி இரட்டை வேடத்தில் ஆறு காத்த ராமராகவும் துலங்கியதாகப் பட்டது.

இப்படி ஆரம்பித்த ஊர்சுற்றும் படலம், இயல்பாய் கோயில்கள் மேல் இருந்த பிரேமையால் (பக்தி அல்ல) விடுமுறை நாட்களில் முடிந்தவரை கோயில்களைப் பார்ப்பது என்று ஆகிவிட்டது.

கணேசன் குடியிருந்தது டவுன் ஹைஸ்கூலின் வடக்கு மதில் இருந்த தெருவில்.

அந்தக் குடியிருப்பின்‌ மூன்று தளங்களில்  இரண்டாவது தளத்தில் ஒரு அபார்ட்மெண்ட்டில் இருந்தனர்.

ஒரு நாள் அப்பா கணேசனிடம், நம் வீட்டு மாடியில் யாரோ சுவாமிகள் இருக்கிறார் என்று சொன்னார்.  பக்கத்து வீட்டு மாமாவைக் கேட்டபோது அவர் "அப்படித்தான் இருக்கும் போல இருக்கு" என்று அசுவாரஸ்யமாக சொன்னார்.

அவரும் அவர் மனைவியும் அங்கு குடியிருந்தனர். அவர் சம்பந்தமே இல்லாமல் கும்பகோணத்தில் குடியிருந்தார்.

அவர் தேவகோட்டை பகுதியைச் சார்ந்தவர். நல்ல உத்யோகத்தில் இருந்து ஓய்வு பெற்று சென்னையில் மாம்பலத்தில் வீடு வாங்கி செட்டில் ஆனவர், யாரோ நண்பர் ஒருவர் வீட்டுக் கல்யாணத்திற்காகக் கும்பகோணம் வந்தவருக்குக் கோயில்கள் எங்கு பார்த்தாலும் குழந்தைகள் சொப்புச் சாமான் போல இறைந்து கிடப்பதை பார்த்து நாவில் நீர் சொட்ட வாராவாரம் வந்தவர், அது சரிப்படாமல் ஒரு ஃப்ளாட்டை வாடகைக்கு எடுத்து வந்து விட்டார். இத்தனைக்கும் அவர் மகன்கள் இருவருக்கும் திருமணமாகி சென்னையிலேயே இருக்கிறார்கள்.

மூன்று மாதங்களில் திரும்பி விடலாம் என்று வந்தவர் ஆறு வருடங்களாக அங்கேயே இருக்கிறார்.
அவரும் அவர் மனைவியும் கோயில் பற்றிய ப்ரக்ஞையில் குழம்பிப் போய் இருந்தனர். போய்வந்த கோயில்களுக்கே சிலசமயம் திரும்பத் திரும்ப சென்றனர்.

 அவர்களுக்கென்று ஒரு ஆட்டோக்காரரை மாத வாடகையாகப் பேசி, அந்த ஆள் இப்போது இரண்டு வண்டிகள் வாங்கி வாடகைக்கு விட்டிருக்கிறார்.

பக்கத்து வீட்டுக் காரரே பழுத்த சுவாமிகளைப் போல இருக்கும் போது அவருக்கு மற்ற சுவாமிகளைப் பற்றிய சுவாரஸ்யங்கள் சுலபமாகக் கழன்று போயிருக்கலாம்.

இதற்கடுத்த இரண்டு தினங்களில் கணேசன் டிஃபன் வாங்க வெளியே வந்த போது, ஒரு கார் வந்து நின்றது.

அதில் வந்து இறங்கியவர் கணேசன் பணியாற்றும் வங்கியின் பழைய‌ ஓய்வு பெற்ற நிர்வாக இயக்குனர். அவருக்கு வண்டி ஓட்டி வந்தவர் முருகன் என்று அவர்கள் தலைமை அலுவலகத்தில் வேலை செய்பவர். கணேசனுக்கு இயக்குநரைத் தெரியாது என்றாலும் முருகனைத் தெரியும் என்பதால் ஆச்சரியப் பட்டு," என்ன முருகன்? இவ்வளவு தூரம்?" என்றான்.

அவரும் ஆச்சரியப் பட்டு, "சார் நீங்க இங்கியா இருக்கீங்க? நம்ம சாமிஜியும் இங்கதான் வந்திருக்காங்க.. சாரோட பொண்ணுக்கு சாமிஜிதான் வரன் ஏற்படுத்திக் கொடுத்தாரு.. அதுக்காக பாக்கணும்னு கிளம்பி வந்துருக்கோம்" என்றார்.

கணேசனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. என்னடா நாமளும் நாலு மாசமா இருக்கோம், நமக்கு அடுத்த ஃப்ளோர்ல ஒரு ஸ்வாமிஜி இருக்காரு.. நாம ஒரு முயற்சியும் எடுக்கலை.. யார் யாரோ பெரிய ஆசாமிகள் வெளியில் இருந்தெல்லாம் வருகிறார்களே என்று.

முருகன் அதைக் குறிப்பால் உணர்ந்து, நீங்க சாமிஜியைப் பாத்தது இல்லீங்களா என்றார்.

"இல்லியே"

"அடடா.. சாமிஜி அப்பப்ப தான் இங்க வருவாரு... சாமிஜியோட வைஃப் மட்டும் இங்க இருக்காங்க.. சாமிஜி இப்போ சேலையூர்ல பெரிசா கோயில் கட்டி, அங்கியே ஒரு ஜாகை கட்டிக்கிட்டுத் தனியா இருக்காங்க.. எப்பவாச்சும் தான் இங்க வர்றது" என்றார்.

அவர் வசிக்கும் வீட்டின் அருகில்தான் மேற்சொன்ன கோயில் இருப்பதாகவும், அதனால் சாமிஜியுடன் தனக்கு நல்ல பழக்கம் என்றும் சொன்னார்.

கணேசனுக்கு எப்படியாவது ஸ்வாமிகளைப் பார்க்கும் ஆவல் எழுந்தது.

உண்மையில் அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் காலை உணவு முடிந்து அருகாமையில் இருக்கும் சோமேஸ்வரன் கோயிலுக்கு அப்பாவோடு போய்விட்டு வரலாம் என்று நினைத்து இருந்தான். அதனால் மூர்த்தியையும் கூப்பிடவில்லை.

ஊரெங்கும் சுற்றித் திரிந்து அலைந்து கோயில் கோயிலாகப் போனாலும் நகருக்குள் இருக்கும் நிறைய கோயில்களைப் பார்க்க முயலவில்லை.

ஊருக்கு வந்த வாரமே அந்த ஊர் வழக்கப்படி கும்பேஸ்வரனையும் சாரங்கபாணியையும் பார்த்தாலும், சாரங்கபாணியை ஒட்டியே இருக்கும் சோமேஸ்வரன் கோயிலுக்கு என்ன காரணமோ போகவில்லை. ஏதோவொரு விதத்தில் அலுப்பு.‌ அசுவாரஸ்யம்.

சோமேஸ்வரனைக் கும்பகோணத்தில் "ஏழை சோமேஸ்வரன்" என்கிறார்கள்.

கட்டப்பட்ட காலத்தில் சோமேஸ்வரன் கோயில் பெரிதாக இருந்ததாகவும், வைணவர்கள் தலையெடுத்து அவர்கள் கை ஓங்கியதில், சாரங்கபாணி கோயில் கட்டும் போது, இடம் போதாமல் சோமேஸ்வரன் கோயிலில் இருந்து பாதியைப் பிடுங்கிக் கொண்டு விட்டதால், ஏற்கெனவே பாதியை மனைவியிடம் இழந்த சோமேச்சு, மிச்சத்தில் பாதியை மைத்துனரிடமும் இழந்ததில்‌ ஏழையாகி, ஏழை சோமேஸ்வரன் ஆகி விட்டார் என்று சொன்னார்கள்.

இந்த நான்கு மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளூர் கோயில்களுக்கும் நேரம் ஒதுக்கி நாகேசுவரன், மகாமகக் கரைக் கோயில்கள், காளத்தீஸ்வரர், ராமசாமி, சக்ரபாணி,  கொட்டையூர் வரை போய் கோடீஸ்வரர், ஏன் அப்படி இப்படி பொழுது போகாமல் ஒரு மைல் நடந்து பாணபுரீசுவரர் கூடப் போயாகி விட்டது.

 சோமேசுவரன் வழியாகவே நூறு தடவை போனாலும், ஓரிரு முறை அதன் வாசலிலேயே முராரியில் காப்பி குடித்து இருந்தாலும், வாசலில் இருந்தே சாரங்கபாணியின் நெடிதுயர்ந்த கோபுரத்திற்கு முன்னால் மூஞ்சூறு போல துக்கிணியூண்டு இருக்கும் சோம்ஸ் கோபுரத்தைப் பார்த்துப் பாவனையாக தாவாங்கட்டையில் நாசூக்காக விரல்களால் பக்தியைக் காண்பிக்கக் கற்றுக் கொண்டாகி விட்டது.

இன்றைக்கு தட்சிணாமூர்த்தி இல்லாததில் சோமேஸ்வரன் வரை நடக்கலாம் என்று சொன்னதும் அப்பாவும் சரியென்று சொல்லி விட்டார்.

கணேசன் டிஃபன் வாங்கும் ஆசையைத் தள்ளிப் போட்டான்.

 சோமேஸ்வரன் கோயிலுக்குப் போகும் வழியில் முராரியில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று துரிதமாக முடிவெடுத்து, முருகனையும் காப்பி சாப்பிட வாருங்கள் என்று வீட்டிற்குக் கூட்டிப் போனான்.

தன்னால் முடிந்த அளவு, காது அவ்வளவாகக் கேட்காத அப்பாவிடம் விஷயத்தை விளக்கி, அவரை மாடிக்குத் தயார் செய்து, முருகனுக்கும் ஒரு காப்பியைக் கலந்து கொடுத்தான்.


வினை தீர்க்க முடியாத முருகன் அதற்கப்புறம் காப்பி சாப்பிடுவதை விட்டொழித்ததாகக் கேள்வி.

அவர்கள் மூவரும் மாடிக்குப் படியேறி, கணேசன் வீட்டிற்கு நேர் மேலாக இருக்கும் ஸ்விமிஜியின் இருப்பிடத்தை அடைந்தார்கள்.

ஸ்வாமிஜி படாடோபமாக இல்லாமல் எளிமையாக இருந்தார். தலையைக் கோதி பின்னால் சிறிய முடிச்சிட்டிருந்தார். முகம் நிறைய கொஞ்சம் கருப்பும் நிறைய வெளுப்புமாகத் திருத்தப்படாத நீண்ட நாள் தாடி. இந்தத் தோற்றம் பொதுவாக அவரது குள்ளமான தாட்டியான‌ ஆகிருதிக்கு பைராகியைப் போலவோ பேய் ஓட்டுகிறவர் போலவோ தான் தோற்றத்தை அளித்திருக்க வேண்டும். ஆனால், ஒரு கனிவையும் நம்பிக்கையையும் அது அளித்ததாகத் தோன்றியது கணேசனுக்கு.

அவரது உதடுகளில் சிறு கீற்றாக ஆனால் நிரந்தரமாகக் குடிகொண்டு இருக்கும் புன்னகையினால் கூட இருக்கலாம்.

வெறும் வெள்ளை வேட்டியும், பழைய கதர் ஜிப்பாவும் அணிந்து இருந்தார். நெற்றி நிறைய விபூதிப்பட்டையும், நடுவில் பெரிய சந்தனப் பொட்டும் நாசூக்காக ஒரு பொட்டு குங்குமமும் வைத்து, ஒரு மர‌ ஈஸிசேரில் சாய்ந்து இருந்தார்.

அவருக்கு எதிரில் சற்று தள்ளி ஒரு நாற்காலியில் பவ்யமாக பழைய இயக்குநர் அமர்ந்து இருக்க, சுவாமிஜி அவரிடம் ஏதோ அளவளாவிக் கொண்டு இருக்கிறார்.

முருகன் உள்ளே சுவாதீனமாக, ஆனால் பவ்யமாக நுழைந்து, குனிந்து சுவாமிஜியின் கால் பக்கம் குனிந்து வணங்கிவிட்டு, வாசலில் நின்று கொண்டு இருந்த இவர்கள் இருவரையும் காட்டி ஏதோ சொல்ல, சுவாமிஜி ஒரு பெரிய மந்தஹாஸத்தில் இவர்களைப் பார்த்து, "வாங்கோ.. வாங்கோ" என்றார்.

"நீங்கள் எங்கள் நெய்பரா" என்றார்.

கணேசன் ஆமாம் என்று புன்னகைத்தான்.

அதற்குள் அவர் மனைவி வந்து அவரிடம் அப்பாவைக் காட்டி, "நான் மாமாவை அடிக்கடி பாப்பேனே" என்றார். அப்பாவும் ஆமோதித்தார்.

என்னிடம் நீங்களும் முருகன் வேலை பார்க்கும் வங்கியில் தான் வேலை பார்க்கிறீர்களா என்று கேட்டார்.

"ஆமாம்."


இயக்குநரைக் காட்டி இவரைத் தெரியுமில்லையா என்று கேட்டார்.

கணேசன் கொஞ்சம் பதவிசாக, "நன்றாகத் தெரியும்.. பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பாக நான் பூனாவில் இருந்த போது அங்கு ஒரு கிளையை சார்தான் திறந்து வைத்தார். அன்றைக்கு ஒரு மகளிர் குழுவுக்கான மீட்டிங்கில் சார் இந்தியில் படு சரளமாகப் பேசியதை இன்று வரை அங்கு பேசிக்கொண்டு இருக்கிறார்கள்" என்றான்.

அவர் லேசாக முறுவலித்தார்.

"இங்கே வந்து எவ்வளவு நாளாச்சு "

"நாலு மாசம் முடியப் போறது... ஸ்வாமிஜி இங்கே இருக்கறது‌ எனக்குத் தெரியாது " என்றான் மன்னிப்பு கோரும் பாவனையில்.

"அதனால என்ன? நான் கும்பகோணத்துல ஜாகைன்னுதான் பேரு.. இந்தப் பக்கம் வந்தே ஆறேழு மாசம் ஆச்சு..
ஸ்டேட்ஸ் போயிருந்தேன்.. அப்பறம் சேலையூர் கோயில்ல கொஞ்சம் மராமத்து பண்ண வேண்டி இருந்தது.. அப்படியே டைம் ஓடிப் போச்சு.. இங்கே நாளைக்கு சிவபுரம் கோயில்ல கும்பாபிஷேகம்... என் கிட்டே ஏற்கெனவே டைம் கேட்டுண்டுதான் ஆரம்பிச்சாங்க.. நான் தான் பண்ணி வைக்கணும்னு ஒரே பிடிவாதம் பிடிச்சாங்க.. அதுக்காக வரவேண்டியதாப் போச்சு " என்றார்.

அப்பா நேற்று சாயங்காலம் சொன்னது ஞாபகம் வந்தது.
"அந்த கோயில் கும்பாபிஷேகம் போஸ்டர்ல போட்ருந்த ஒத்தர் மாதிரி ஒருத்தரைக் கீழே பார்த்தேன்".

என்ன ஒரு கிரகிக்கும் தன்மை அந்தக் கால மனிதர்களுக்கு?

"சிவபுரம் போயிருக்கீங்களா?"

"போன மாசம் போனோம். கொஞ்சம் லேட்டானதுல நடை சாத்திட்டாங்க.. தேப்பெருமாநல்லூர் போயிட்டு அய்யாவாடி செம்பியவரம்பல்ல இருக்கற‌ ஸ்வர்ணாகர்ஷண‌ பைரவர் கோயிலைப் பாத்துட்டு வரத்துக்குள்ள கொஞ்சம் லேட்டாயிடுத்து.."

"அடடா.. சிவபுரம் கண்டிப்பா பாக்க வேண்டிய ஸ்தலம்.. நாளைக்கு முடிஞ்சா வாங்கோ.. அப்பா வேண்டாம்... கூட்டம் சமாளிக்க முடியாது.. அப்பாக்கு சதாபிஷேகம் ஆயாச்சா... "

"ஆகியே பத்து வருஷம் ஆயாச்சு"

"ஆஹா.. பரம பாக்கியம்.. நீங்க ஒண்ணு பண்ணுங்கோ... இன்னிக்கு வேற ப்ரோக்ராம் இல்லேன்னா,  இப்பவே கிளம்பி சிவபுரம் போயிட்டு வந்துடுங்கோ.. அந்தக் கோயில் விசேஷம் தெரியும் இல்லையா? 

பைரவஸ்தலம்..
கோயிலுக்கு வெளீல பைரவர்.. தனிக் கோயிலாவே இருக்கும்..
 சில கோயில்கள்ல இந்த விசேஷ அமைப்பு இருக்கும்..
திருவலஞ்சுழில பிள்ளையார் தனிக் கோயில்ல இருப்பார்.. ஆனாலும்,  உள்ளே இருக்கற அஷ்ட புஜங்க துர்க்கை மகா வரப்ரசாதி... ராஜராஜ சோழன் எந்தப் போருக்குப் போனாலும் அவள் பாதத்துல வாளை வெச்சுக் கும்புட்டுத்தான் போவானாம்... அந்தக் கோயிலுக்குள்ள இன்னொரு கோயிலாகத் தான் பிள்ளையாரோடது இருக்கு.

திருப்புறம்புயம் தேன் குடிச்ச பிள்ளையார்.. கோயிலுக்கு வெளீல குருபகவான் தனிக் கோயில்..

இது மாதிரி சிவபுரத்துல பைரவர் தனிக்கோயில் தெற்கைப் பாத்து.. ரொம்ப விசேஷம்" என்றார்.

பைரவர் என்றதும் மனம் விழுந்து விட்டது. பத்து வருடங்களாக பைரவர் கோயில்களைத் தேடித்தேடி போய்க் கொண்டு இருக்கிறான். காசி, தில்லி எல்லாம் எல்லாத் திக்குகளிலும் பார்த்தாகி விட்டது. பிலாயில் ஒருத்தருமே கேள்விப்படாத இடங்களில் தேடிப்போய் அவரைப் பார்த்து இருக்கிறான்.

 இங்கே கும்பகோணத்தில் திருவீசநல்லூர் சதுர்கால பைரவர், ஆவூர் பஞ்ச பைரவர், கோமுக்தீஸ்வரர் இரட்டை பைரவர், க்ஷேத்ரபாலபுரம் பைரவர் தனிக்கோயில், அம்மாசத்ரம் மூன்று பைரவர் என்று முக்குக்கு முக்கு பைரவரை விரட்டி விரட்டி, ஏன் தாடிக்கொம்பு போய் பெருமாள் கோயிலில் இருக்கும் பிரம்மாண்ட ஸ்வர்ண பைரவரைப் பார்த்தாகி விட்டது. இங்கு கூப்பிடு தூரத்தில் சிவபுரத்தில் அதுவும் நாளை கும்பாபிஷேகம் பார்க்காமல் எப்படி விடுவது.

சோமேஸ்வரன் லோக்கல். ஓடியா போய் விடுவார்? எப்பொழுது பார்த்தால் என்ன?

"கண்டிப்பா போயிட்டு வந்துடறோம்" என்றான். மனம் நிறைவாக இருந்தது.

அவர் கணேசனை அருகில் அழைத்தார். 

அவன் மண்டியிட்டு அவர்முன் அமர்ந்தான். அவர் அவன் தலைமேல் தன் உள்ளங்கையை பலமாக அடித்த மாதிரி அழுத்தி கைமூடி ஏதோ முணுமுணுத்தார்.

கணேசன் குனிந்தவாறு கண்களை மூடிக் கொண்டான்.

சற்று நேரம் கழித்து, அவர் கையை எடுத்து விட கணேசன் எழுந்து கொண்டான்.

அவர் அவன் கையை நீட்டச் சொன்னார். அவனும் நீட்டினான்.

"கையை விரிச்சு நீட்டுங்கோ" என்று தன் கையை விரித்துக் காட்ட விரித்து நீட்டினான்.

அவர் தன் கையைக் கவிழ்த்து அவன் உள்ளங்கைமேல் வைத்து, அவர் விரல்களால் அவன் விரல்களை மடித்து, தன் கையை எடுத்து "கையைப் பிரிச்சுப் பாருங்கோ" என்றார்.

கணேசன் பிரித்துப் பார்த்தான்.

அதில் ஒரு சிறிய முத்து இருந்தது.

"எடுத்து பாருங்கோ"

அதில் பிள்ளையார் உருவம் செதுக்கப் பட்டு இருந்தது.

உங்க பேருக்கும் நட்சத்திரத்துக்கும் ஏத்த மாதிரி வந்துருக்கு என்றார்.

இத்தனைக்கும் கணேசன் அவரிடம் எதையும் எதிர் பார்க்கவில்லை. தன் உத்யோகம் தவிர்த்து எதையும் சொல்லவில்லை. அவன் சொந்த நட்சத்திரம் எல்லாம் அவனுக்கே அவ்வப்போது தடுமாறும்.

இதே போல் அப்பாவுக்கும் சிவப்பு நிறத்தில் ஒரு கல் வரவழைத்துக் கொடுத்தார்.

வீட்டுக்குப் போனதும் முதல் காரியமாக இன்டர்நெட்டில் தன் நட்சத்திற்கான கல் எது என்று பார்த்தான். முத்து என்று இருந்தது.

இந்த மாதிரி ஆச்சர்ய‌ உணர்வுகளால் உந்தப்பட்டு சிவபுரம் செல்வது என்று தீர்மானித்து, அப்பாவிடம் கஷ்டப்பட்டு புரிய வைத்தான்.

சோமேஸ்வரன் போலாம்னு சொன்னியே?

சிவபுரம் இன்னும் விசேஷம். அதைத் தவிர நாளைக்கு கும்பாபிஷேகம்.

சோமேஸ்வரன் தானே? இன்னொரு நாள் பாத்துக்கலாம்..

சரியென்றார் அவர். அவரைப் பொருத்தவரை ஏதோ ஒரு கோயில் புதிதாக. பொழுது போகவில்லை. குழந்தை மாதிரி வெளியே செல்வதில் அவருக்கு எப்பவுமே ஒரு உற்சாகம்.

அப்போது தான் மூர்த்தியை வரவேண்டாம் என்று சொன்னது ஞாபகம் வந்தது.
வண்டியை வேறு உபயோகம் இல்லாமல் வைத்து இருக்கிறோம். வாரம் ஒருமுறை தான் வெளியே எடுப்பது. கும்பகோணம் வீதிகளில் சுயமாக வண்டி ஓட்டுவது அநாவசிய பிரச்சினை. அதனால் தான் மூர்த்தி.

இரண்டு மூன்று முறை மூர்த்தி ஃபோன் எடுக்கவில்லை. விடாமல் அடித்ததில்,
"பொறையார்ல இருக்கேன் சார்.. அக்கா பொண்ணுக்கு காதுகுத்து"

"ஆஹா.. அப்படியா.. ஒண்ணும் பிரச்சினை இல்லை.. நான் வேற ஆளைப் பாத்துக்கறேன்"

மறுபடியும் இவர்கள் அலுவலகத்தில் இவனுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்‌ டிரைவரைக் கூப்பிட்டான். அவரும் எடுக்கவில்லை. அதனால் அவரையே கூப்பிட, அவர் கணேசனிடம்,  "சாரி சார்.. உங்ககிட்ட சொல்லலை.. ரொம்ப எர்லி மார்னிங் கிளம்பி சீர்காழிக்கு போயிண்டுருக்கோம் சார்.. கிட்டத்தட்ட வந்தாச்சு.. ஏதாவது அர்ஜன்டா"

"பரலால்ல சார்.. உங்க டிரைவரை வரச்சொல்லலாம்னு நெனச்சேன்.. நான் வேற‌ ஏற்பாடு பண்ணிக்கறேன்"

அப்பா இதை ஓரளவு யூகித்து, ரொம்ப மெனக்கெடாதே.. போய் டிஃபன் வாங்கிண்டு வா.. அப்பறம் யோசிச்சுக்கலாம்"

அப்படி இப்படி பதினோரு மணி‌ ஆகிவிட, வெய்யில் தலைக்கேற விட்டு விட்டார்கள். எங்கும் போகவில்லை.

சாயங்காலம் ஆனதும் மனம் நமநமவென்று அரிக்க‌வாரம்பித்தது.

முதல் முறையாக ஒரு முழு ஞாயிற்றுக்கிழமை வீணாகி விட்டது.

அப்பாவிடம் கேட்டபோது "போயிட்டுப் போறுது போ.. தெருக்கோடி வரை வேணும்னா நடந்துட்டு வரலாம்"

இவர்கள் இருவரும் பக்கத்தில் இருக்கும் காந்தி பார்க் வரை போகலாம் என்று கிளம்பினர். அதற்கடுத்த தெருவில் தான் சாரங்கபாணி கோயில் முகப்பு. இந்த முனையில் இருந்தே கோபுரத்தைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்வது என்றுதான் பௌனது.

அப்பா தான் கேட்டார்.
"ரொம்ப நடக்க முடியாது.. இவ்வளவு தூரம் வந்துட்டோம்.. சாரங்கபாணி வேணா பாத்துட்டு வந்துடலாம்"

"சரி வா.. வரும்போது ஆட்டோல வந்துடலாம்"

அடுத்த ஐந்து நிமிடங்களில் சாரங்கபாணி கோயில் வாசல் நாலுகால் மண்டபம் வரை வந்தால், ஏதோ உற்சவம் போலிருக்கிறது. ஒரே கூட்டம்.

"அடக் கஷ்ட காலமே... சரி போறது போ... திரும்பிப் போயிடலாம்"

கணேசனுக்கு மனது கேட்கவில்லை. இவ்வளவு தூரம் வந்தாகி விட்டது. இதோ அருகில் இருக்கும் உச்சிப்பிள்ளையாரையாவது பார்த்து விட்டுப் போகலாம் என்று அப்பாவிடம் சொல்ல அவர் யோசித்தார்.

"என்னால படியேற முடியுமான்னு தெரியலையே"

"பரவால்லப்பா.. கீழேருந்தே பாத்துட்டு வரலாம் வா"

போனால் பூட்டி இருந்தது.
"அடச்சே" என்று கிரில் வழியாக அவர் முகத்தைப் பிரயத்தனப்பட்டுத் திரும்பும் போது நேரெதிராக சோமேஸ்வரன் கோயில் தென்பட்டது.

நூறடி தூரம் தான் இருக்கும். என்னவோ மனதில் அந்தக் கோயிலுக்கு ஒரு முக்கியத்துவம் கிடைக்கவில்லை. 

அவனருளாளே அவன் தாள் வணங்குவதை விட இவர்கள் தரிசனம் சோமேஸ்வரனுக்குக் கிட்டவில்லை என்பது தான் உண்மை. 

அலுப்பும் அசுவாரஸ்யமும் அவரோடு இவர்களை அல்லது கணேசனை ஒட்டவில்லை என்பது தான் காரணம்.

"இப்படி நேராப் போனா சோமேஸ்வரன். லெஃப்ட்ல போனா நாகேஸ்வரன். நாகேஸ்வரன் கொஞ்சம் பெரிய கோயில். பாடகச்சேரி ஸ்வாமிகள் திருப்பணி பண்ணினது"

பாடகச்சேரி ஸ்வாமிகள் என்றால் அப்பாவுக்குப் பிடிக்கும். கணேசன் அம்மா வழிப் பாட்டனார் வீட்டுக்கு பாடகச்சேரி ஸ்வாமிகளும் மௌனம் ஸ்வாமிகளும் அவ்வப்போது வருவது வழக்கம்.

அவன் அம்மாவின் சித்தப்பா பேசினார் என்றால் இன்றளவும் உட்கார்ந்து கேட்கலாம்.

அவர் மாமனார் பேரளத்தில் பெரிய மிராசு. அவர்கள் வீட்டில் ஒரு பெண்மணிக்கு சித்தப்ரமை. ஒரு சித்தர் அருள்வாக்குப்படி சாதுக்களுக்கு அன்னதானம் செய்தால் சித்தப்ரமை அகன்று விடும்.

பல வருடங்களாக அன்னதானம் செய்ய ஆரம்பித்தார். அதனால் நிறைய சாதுக்கள் அவர்கள் வீட்டில் எப்போதும்.

பாடகச்சேரி ஸ்வாமிகள் தனியாகவும் வருவார். சமயங்களில் மௌனம் ஸ்வாமிகள் கூடவும் வருவார். 

இன்ன நேரம் என்றில்லாமல் கால் போன போக்கில் வருவார். அவர் வந்தவுடன் சமையல் செய்து சுடச்சுட ஒரு பாத்திரத்தில் சாதம் போட்டு குழம்பு ஊற்றி, திண்ணையில் வைத்து விடுவார்கள்.

பாடகச்சேரி ஸ்வாமிகள் அதை நன்றாகப் பிசைந்து ஒரே அளவில் உருண்டைகளாக உருட்டுவார். தனக்கு ஒரு உருண்டை எடுத்துக் கொள்வார்.

மிச்சம் இருக்கும் ஒரே அளவான  உருண்டகளை வரிசையாக திண்ணைக் குறட்டில் வைப்பார்.
சிலநாள் பத்து உருண்டைகள். சிலநாள் இருபது. சிலநாள் நான்கு.

கடைசி உருண்டையை வைத்த உடன் சொல்லி வைத்தாற்போல எங்கிருந்தோ நிறையத் தெரு நாய்கள் வரும்.
எத்தனை உருண்டைகள் உண்டோ மிகச்சரியாக அத்தனை நாய்கள்.

பாடகச்சேரி ஸ்வாமிகள் உம்மென்று ஒரு ஓங்காரத்தில் குரலெழுப்ப, சொல்லி வைத்தாற் போல ஒவ்வொரு நாயும் ஒவ்வொரு உருண்டையைக் கவ்விக் கொண்டு போகும்.

இந்த நிகழ்வைக் காண பெருங்கூட்டம் கூடும்.

இதை அலுக்காமல் சித்தப்பா ஒவ்வொரு முறையும் கூறுவார். கணேசனே  நிறைய முறை மானசீகமாக அவர் வைத்த உருண்டைகளைப் பிரசாதமாகக் கவ்விக் கொண்டு போயிருக்கிறான்.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மற்றும் குடந்தை நாகேஸ்வரன் கோயில் இரண்டும் பாடகச்சேரி ஸ்வாமிகள் சம்பந்தப் பட்டவை.

கிண்டி ஸ்டேஷன் ஒட்டி அவரது சமாதி கோயில் உள்ளது. திருவொற்றியூர் பட்டினத்தார் சமாதிக்கு அருகில் அவர் சமாதி இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

அதனால் அப்பாவுக்குப் பாடகச்சேரி ஸ்வாமிகள் மீது அபார பக்தி.

அதனால் தான் நாகேஸ்வரன் போலாமா என்று கேட்டது.

"அதான் ஏற்கெனவே பாத்துருக்கமே... சோமேஸ்வரன் தான் ரொம்ப நாளா சொல்லிண்டு இருக்கோம்.. போலாம் வா"

அந்த நூறடிக்குள் முராரியில் நுழைந்து காப்பி குடித்து விட்டு கோயில் வாசலுக்கு வந்து விட்டனர்.

ஒரு கதவுதான் திறந்து இருந்தது.

ஈ காக்காய் இல்லை. பொதுவாக கோயில் வாசல்களில் தென்படும் பிச்சைக் காரர்கள் கூட இல்லை. வருமானம் இல்லாத இடத்தில் யார் கடை விரிப்பார்கள்.

கோபுரத்தை இருவரும் ஏக காலத்தில் நிமிர்ந்து பார்த்தனர். பழைய கோபுரம். சிதிலமடையவில்லை. கடைசியாக எப்போது புனரமைக்கப் பட்டதோ?

"நூறடி உயரம் இருக்குமா?" என்றார் அப்பா.

"இருக்காது"

வலது பக்கம் அநிச்சையாக சாரங்கபாணி கோயில் கோபுரம் மீது பார்வை திரும்பியது.

எப்பேற்பட்ட கோபுரம்?

பழைய வைணவக் கோயில் கோபுரங்களில் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரத்திற்கு அடுத்த பெரிய கோபுரம். நூற்றி எண்பத்திரண்டு அடி.

வில்லிப்புத்தூர் கோபுரம் மாதிரி மொழுக்கென்று இல்லாமல் சாரங்கபாணி கோபுரம் மதுரை கோபுரம் மாதிரி பூராவும் சிற்பங்கள்.

அந்த உயரத்தை வைத்துப் பார்த்தால் இது பாதிதான் இருக்கும்.

தொண்ணூறு இருக்கலாம் என்றான்.

வாசலில் செருப்பைக் கழட்டிப் போடத் தயக்கமாக இருந்தது. தன் சொத்தையே காப்பாற்றிக் கொள்ள முடியாதவர் செருப்பைக் காபந்து பண்ணுவார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

பாதிக்கு மேலாகப் பறி போனதில் கோயில் அகலம் குறுகி ஆனால் நீளமாக உள்ளே நடக்க வேண்டும்.

பேபார்ஸான கொடி மரத்தையும் நந்தி மண்டபத்தையும் தாண்டி ரொம்ப தூரம் நடந்தால் சந்நிதிக்கு வரலாம்.

இந்தக் கோவிலிலும் கோயிலுக்கு கோபுரத்திற்கு உள்ளே ஆனால் மெயின் சந்நிதிக்கு வெளியே வேறொரு கோயில்.மாலீஸ்வரர் என்று தாட்டியாக ஒரு சிவன், அவர் கன்சார்ட்டுக்கு அவரை ஒட்டிய இன்னொரு சந்நிதி.

கோயிலுக்குள் கோயில்.

ஆனால் மாலீஸ்வரர் படு அழகு.

உள்ளே சோமேஸ்வரன் மிக மிகப் பழமையானவர்.

லிங்கமே வசீகரம். அம்பிகை சூட்டிகையாக இருக்க, அர்ச்சகர் தீபாராதனை காட்ட முயலவே இல்லை.

கடவுள் ஆரம்பித்து பக்தன் வரை எல்லோரும் அலுப்புடன் இருப்பதாகப் பட்டது.

இவர்களைத் தவிர ஒரு வயதான மாமி உள்ளே இருந்தார். 

அங்கேயே விற்றுக் கொண்டிருந்த பால் வாங்கி அங்கிருந்த பாத்திரத்தில் ஊற்றினார்.

சுவாமி அபிஷேகத்திற்கு இப்படி ஒரு வழியில் சேகரிக்கிறார்கள் என்று தோன்றியது.

கோயில் சுத்தமாகவும் அதி புராதனமாகவும் இருந்தது.

வழக்கம் போல கோஷ்டத்தில் சந்நிதிகள் சிலைகள் தேய்மானம் கண்டு.

ஒரு சுற்று முடிந்து எங்கு நமஸ்காரம் என்று தேடியபோது கோபுரத்திலிருந்து வரும் வழியில் இருக்கும் நந்தி மண்டபத்தில் பண்ணலாம் என்று அப்பா சொன்னபோது தான் அந்த மனிதரைப் பார்த்தான்.

அம்பாள் சந்நிதிக்கு நேராக இருந்த தெற்கு வாசலில் கோயிலுக்கு உள் பக்கத்தில் அமர்ந்து இருந்தார்.

வயதானவர் என்று தெரிந்தது. காந்தி மகான் தரையில் கிராமஃபோன் தட்டு போல சுற்றும் இராட்டையில் நூல் நூற்பது போல சரிபாதியாக மடிந்து இருந்தார்.

ஒரு பழைய மூங்கில் தடி தரையில் கிடத்தி இருந்தது.

கையில் ஒரு பித்தளை தம்ளரும் எவர்சில்வர் தம்ளரும் வைத்து இருந்தார். 

சிறு துணிமூட்டை ஒன்று அவர் பக்கத்தில் இருந்தது.

அவருக்கு ஏதாவது அளித்தால் என்ன என்று தோன்றியதை அடக்கிக் கொண்டான்.

அப்போது திரும்ப எத்தனித்த இவர்களை அர்ச்சகர் நிறுத்தி அம்பாளுக்கு தீபாராதனை காட்டறேன்,  பார்த்துட்டுப் போங்கோ என்று சொல்லி தீபாராதனை  காட்டினார்.

கணேசனுக்கு தீபாராதனையில் மனம் லயிக்கவில்லை.

வாசலில் இருந்த செருப்பு களவு போகாமல் இருக்க வேண்டும். இந்த மனிதர் யாராக இருக்கும்? யாசகம் வாங்குபவரா?

இதற்குள் அப்பா  அர்ச்சகரிடம் அதன் பழைமை பற்றிக் கேட்க அவரும் சுவாரஸ்யமாக சொல்லவாரம்பித்தார்.

இந்த இடைப்பட்ட நேரத்தில் இவர்களோடு வழிபட்ட அந்த வயதான மாமி சென்று அவரிடம் ஏதோ குனிந்து பேசி, கையில் இருந்து சில்லறைக் காசை அவர் கையில் கொடுத்தார்.

கணேசனுக்கு மிகவும் துக்கமாகி விட்டது. எவ்வளவு வயதான மனிதராக இருக்கிறார். ஏற்கனவே ஏழையாக இருக்கிற வரும்படி இல்லாத கோயிலில் யாசகம் கேட்கிறார்.

அவர் கேட்கிறாரோ இல்லை இவர்களாகக் கொடுக்கிறார்களோ? வேறு கோயில்களில் உள்ளே வரை அனுமதிக்க மாட்டார்களா இருக்கும்.

அப்பா தலபுராணம் கேட்டுக் கொண்டிருக்கும் இடைவெளியில் கணேசன் அவரை அணுகி, பாக்கெட்டில் கைவிட்டு கிடைத்ததை எடுத்தான்.

ஏதோ ஒரு பெரிய ரூபாய் நோட்டு.

அவரைக் கூப்பிட்டு, அதை அவர் கையில் "இந்தாங்க" என்று கொடுத்தான்.

அவர், அதைப் பிரித்து இன்னொரு கையால் தடவி, குத்து மதிப்பாக கணேசனைப் பார்த்து, "இதுல எவ்வளவு இருக்கு" என்று கேட்டார்.

முழுப் பார்வையும் இல்லாதவர்.

வயிற்றை என்னவோ செய்தது.

எவ்வளவு என்று சொன்னான் கணேசன் கூச்சத்துடன்.

அவர் உடனே, "இவ்வளவு கொடுத்து இருக்கீங்களே.. நீங்க யாரு? ஜாகை எங்கே" என்று கேட்டார்.

தான் இந்த ஊருக்குப் புதிதாக மாற்றலாகி வந்திருப்பதைக் கூறினான்.

"அப்படியா.. ரொம்ப சந்தோஷம்.. எனக்கு சாயங்கால அனுஷ்டானம் இருக்கு.. பத்து நிமிஷம் ஆகும்.. நீங்க எனக்கு ஒரு உபகாரம் செய்யணும்..."

"சொல்லுங்க"

"ஒரு பத்து நிமிஷம் கழிச்சு வர முடியுமா.. உங்க கிட்ட பேசணும்"

சரி என்று சொல்லி விட்டு வந்தான்.

"யாரு அது " என்று கேட்டார் அப்பா.

சந்நிதிக்கு வெளியே வந்து அப்பாவிடம் எல்லாவற்றையும் சொன்னான்.

"பத்து நிமிஷம் கழிச்சு பாக்கப் போறியா"

"தெரியலைப்பா... வீட்டுக்குப்  போறதுன்னா போயிடலாம்"

"ஏதாவது பணம் கேப்பாரா இருக்கும்.. பாத்துக்கோ... ரொம்ப இழுத்து விட்டுக்காதே.. முடிஞ்ச வரை செய்யலாம்"

கணேசனுக்கும் அதுதான் சரியென்று பட்டது.

மாலீஸ்வரர் சந்நிதியை நேரம் கடத்துவதற்காக மறுபடியும் வலம் வந்தனர்.

மனம் அவர் எதைக் கேட்கப் போகிறார் என்பதிலேயே சுற்றி வந்தது.

கோயிலுக்குள் யாசகம் கேட்கும்‌ வயதானவர். இரண்டு கண்களிலும் பார்வை இழந்தவர். எப்படி சமாளிப்பது?

 எந்த அளவிற்கு தன்னால் உதவ முடியும் என்பதே இவனுக்குத் தெரியாது. இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் அவன் மனைவிதான் பார்த்துக் கொள்வாள். 

அவள் பூமியின் எதிர் பக்கத்தில் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருப்பாள். எழுப்பி இதையெல்லாம் கேட்க முடியாது.

அப்பாவை மாலீஸ்வரர் சந்நிதிக்கு முன்பாக உட்கார வைத்தான்.

அவரிடம் மறுபடியும் சென்றான். 

அவர் தனது கடமைகளை முடிக்கும் தருவாயில் இருந்தார். பொறுமையுடன் அவர் முன்னால் நின்றான்.

அவர் தனது கிழிந்த உத்தரீயத்தால் உதடுகளைத் துடைத்துக் கொண்டார்.

 அவரால் கொஞ்சம் கூட நிமிர முடியாத படி அப்படி ஒரு கூன் போட்டு இருந்தது. எவ்வளவு வருடங்களாக இப்படி இருக்கிறாரோ?

கணேசன் தொண்டையைக் கனைத்து "நமஸ்காரம்" என்றான்.

அவர், சொல்லுங்கோ என்றார்.

கணேசனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. 

"இல்லை, நீங்க தான் பத்து நிமிஷம் கழிச்சு வரச் சொன்னீங்க"

"ஓஹோ.. நான் சொன்னேனா.. எதுக்காக சொன்னேன்?"

கணேசனுக்கு தர்ம சங்கடமாகப் போய் விட்டது.

"நான் ஒரு ரூபாய் நோட்டு குடுத்தேன்.. நீங்க எவ்வளவுன்னு கேட்டீங்க.. நான் சொன்னேன்.. நீங்க பத்து நிமிஷம் கழிச்சு வரச் சொன்னீங்க"

"ஓ... ஆமாமாம்.. சட்டுன்னு மறந்து போயிடறது... நீங்க கொஞ்சம் தயவு சேஞ்சு என் முன்னாடி உட்கார முடியுமா? என்னால நிமிர முடியாது"

கணேசன் உட்கார்ந்து கொண்டு "உங்காந்துட்டேன்"

"சந்தோஷம்... இப்போ சொல்லுங்கோ... எனக்கு என்ன வயசு இருக்கும்?"

கணேசனுக்கு குழப்பமாக இருந்தது. என்ன விளையாட்டு இது. இன்னிக்கு என்ன ஆச்சு? எல்லாமே விசித்ரமா நடக்கிறது?

"எண்பத்தஞ்சு இருக்கும்னு நினைச்சேன்"

அவர் மந்தஹாசமாக சிரித்தார்.

மறுபடியும் துண்டால் உதட்டைத் துடைத்துக் கொண்டார்.

"எனக்கு தொண்ணூத்தெட்டு ஆறது"

"அடேங்கப்பா" என்று சொன்னவன் அப்படி சொல்லி இருக்கக் கூடாதோ என்று யோசித்தான். சொன்னபிறகு என்ன‌ செய்வது?

"நான் தொண்ணூறு வருஷமா இந்தக் கோவிலுக்கு வரேன்"

"மை காட்"

"ஆமாம்.. இந்த சோமேஸ்வரன் இருக்கானே... இவன் ஏழை சோமேஸ்வரன் கிடையாது... இவன் குருவோட அம்சம் இங்கே... அதனால, இவனுக்கு "வியாழ சோமேஸ்வரன்னு தான் பேரு.."

"ஓஹோ"

" இந்த முட்டாள் ஜனங்க, சாரங்கபாணி எல்லாத்தையும் புடுங்கிண்டுட்டான்.. சோமேஸ்வரன் போண்டி ஆயிட்டான்.. அதுனால அலன் ஏழை சோமேஸ்வரன்னு சொல்லி சொல்லி எல்லாரும் அதையே பிடிச்சிண்டு சொல்லிண்டு இருக்காங்க"

கணேசனுக்கு மறுபடியும் என்னவோ செய்தது.

"என்ன பேச்சையே காணும்?"

"இல்லை.. கேட்டுண்டு தான் இருக்கேன்". தான் வாயடைத்துப் போய் இருப்பதை அவரிடம் சொல்லக் கூச்சமாக இருந்தது.

"இப்போ நீங்க எனக்கு ஒரு உபகாரம் பண்ணனும்"

"கண்டிப்பா செய்யறேன்"

"பெரிசா ஒண்ணும் இல்லை..  கும்பகோணத்தில் இருக்கற வரைக்கும் அல்லது வரும்போதெல்லாம் முடிஞ்சவரைக்கும் இந்தக் கோயிலுக்கு வரணும்.

இவன் சாதாரணமானவன் இல்லை...  மஹாசக்தி உள்ளவன்..

அதுனால, இனிமே "அட.. சோமேஸ்வரன்தானேன்னு அலட்சியமா நினைக்கப்படாது.

இவன் சாதாரண சோமேஸ்வரன் இல்லை.. இவன் (இரண்டு கைகளை அத்தனைக் கூனிலும் அகல விரித்து) "சோசோசோமேமேமேஸ்..வரன்.. கும்பேஸ்வரனுக்கெல்லாம் பாட்டன்.. சரியா" என்றார்.

கணேசனிடத்தில் பேச்சு திரும்ப கொஞ்ச நேரம் ஆனது.


------------------

Fwd: Naigal



நாய்கள் ஜாக்கிரதை

ஓ...ஹ்ஹோஹ்ஹோ... என்று போலியாகச் சிரித்தார் பெரியசாமி. வாயை விரல்களால் நாசூக்காக மூடி, சப்தம் லேசாக நழுவுகிற மாதிரி ஒரு கெக்கலிப்பு. கண்களில் ஒரு ஏளனம். 

அவர் சிரிப்பதை நாயும் கவனித்தாற்போல் கழுத்தைத் திருப்பி அவரைப் பார்த்து சிநேகமாக உறுமியது.

"நாய் வளக்கறான் பாரு... நாயி... பிச்சக்காரப்பய" என்று கூறியவாறே தன்பிடியை இறுக்கி, என்னை இழுத்தவாறே விரைந்தார் தாத்தா. 

தெரியாமல் இந்த தெருப்பக்கம் வந்து விட்டோம். பக்கத்து தெரு வழியாகப் போயிருக்கலாம். குளத்தின் மேல்கரை வழியாக சுற்றிப் போக வேண்டும். இது குறுக்குப் பாதை. 

தாத்தாவுடன் நடப்பது பேரானந்தமான அனுபவம். நிறைய பழங்கதைகள் சொல்வார். 
"பாடகச்சேரி சாமி நம்ம வீட்டுக்கு வந்திருக்கு... குளம்பு சோறோ மோர் சோறோ அம்மாஞ்சோத்தையும் ஒரு குண்டான்ல கவுத்து கையால மைய்யப் பெசஞ்சு உள்ளங்கை உள்ளங்கையா உருட்டி உருட்டி திண்ணைக் குறட்டுல வைக்கும். நாங்கள்லாம் சின்னப்பயலுவோ. வேடிக்கை பாப்பம். அப்பால, சூச்சூன்னு ஒரு சத்தம் கொடுக்கும்.. எத்தினி உருண்டை இருக்குதோ அத்தினி நாயி, சொல்லி வச்சாப்ல எங்கிட்டு இருந்தோ வந்து ஆளுக்கொண்ணா கவ்விக்கிட்டு ஓடிப்போயிறும்..‌ என்னா மகிமை... என்னா மகிமை.."

நாய்களைப் பற்றி பேசிக் கொண்டு பெரியசாமி வீட்டைத் தாண்டும் போதுதான் உர்ரென்று ஒரு உறுமல் கேட்டது. அது உறுமல் இல்லை. கர்ஜனை. எங்கள் இருவருக்கும் சப்தநாடியும் அடங்கி விட்டது. கன்னங்கரேல் என்று ஒரு ராட்சஸ உருவம் இருகால்களையும் உயர்த்தி கேட்டில் வைத்து எந்நேரமும் தாவிவிடுகிற மாதிரி. 

"யப்பாடியோவ்.. எம்மாம் பெரிய நாயி... ஓடுறா தம்பி.. என்று தட்டுத் தடுமாறி நிலைகுலைந்த நிலையில் தான் எங்களைப் பார்த்து முத்துசாமி சிரித்தது.

"பெரிய ஐசீஎஸ்  புடுங்கின்னு நெனப்பு... காலிப்பய"

அதற்குள் பெரியசாமியின் மனைவி வீட்டில் இருந்து காம்பவுண்டு சுவருக்குள் இருந்து, வெளிவாசலுக்குப் பாயத் தயாராக இருந்த  பிராணியிடம் செல்லமாக "ஏய்.. பீட்டர்.. உள்ள வா" என்றாள்.

"பீட்டர் மேட்டர்னு ஒரு பேரு.. போக்கத்த பய..‌ சோமசுந்தரம்னு அவங்கப்பன் பேரையே வெக்க வேண்டியது தானே".

பெரியசாமி காதில் விழ வேண்டும் என்றே தாத்தா இரைந்து பேசுகிறார் என்று தோன்றுகிறது. ஆனாலும் அவரிடம் ஒரு பயம் தென்பட்டது உண்மை. பீட்டர் பாட்டுக்கு எகிறிக் குதித்து மேலே பாய்ந்து விட்டால் என்ற பயம்.

என்ன காரணமோ தாத்தாவுக்கு பெரியசாமியைப் பிடிக்காது. என் சித்தப்பாவும் பெரியசாமியும் ஒன்றாகப் படித்தவர்கள். சித்தப்பா படிப்பு வராமல் மளிகைக்கடை வைத்து சுமாராக ஓடுகிறது. அப்பாவும் பள்ளிக்கூட வாத்தியார். ஏதோ கொஞ்சம் நிலபுலன் இருப்பதால் தேர் நிலைதட்டாமல் ஓடுகிறது.

பெரியசாமி எப்படியோ படித்து, பட்டம் வாங்கி, தகிடுதத்தம் செய்து, வாகினியாக ஒரு உத்யோகத்தை சம்பாதித்துக் கொண்டு விட்டார். அதன் பின்னர் அவர் காட்டில் மழை.

நான் பீட்டரைத் திரும்பிப் பார்த்தேன். அடேங்கப்பா... என்ன உயரம். ஏதோ நல்ல ஜாதிநாயாகத்தான் இருக்கணும். கருஞ்சிறுத்தை மாதிரில்ல இருக்கு? யப்பாடி, கவ்விச்சு... கெண்டக்கால் முச்சூடும் காலியாயிறும் என்று நினைத்துக் கொண்டேன்.

இது பெரியசாமி வீட்டில் மூன்றாவதோ நான்காவதோ வளர்க்கப்படும் நாய்.

பெரியசாமி வீட்டுக் கதவில் முன்னெச்சரிக்கையாக "நாய்கள் ஜாக்கிரதை" என்று போர்டு தொங்கும். நான் கூட ஒருமுறை தாத்தாவிடம் "ஒரே ஒரு நாய்தான இருக்கு.. எதுக்கு  நாய்கள்னு போட்ருக்காங்க தாத்தா?"

"அது பெரியசாமியையும் சேத்து எழுதியிருக்காங்க".

பெரியசாமி வீட்டைக் கடப்பதற்குள் வேர்த்து விட்டுவிடும். கன்னங்கரேல் என்று வெல்வெட் கருப்பில் சரேலென்று உள்ளேயிருந்து பாய்ந்து வந்து உயரமான கேட்டின் மீது இரண்டு கால்களையும் தூக்கி வைத்து கொடூரமாகக் குலைக்கும் அல்லது நாக்கைத் தொங்கப் போட்டு நோட்டம் விடும். அது அசுவாரஸ்யமாகக் கடித்தாலே ஆறுகிலோ அசால்ட்டாக உடலில் குறைந்து விடும். எலும்பும் தோலுமாக இருக்கும் என் அண்ணனிடம் தாத்தா இறைவார், " பெரியசாமி ஊட்டு நாயி ஒன்னையே நோட்டம் விடுது.. பொதுவா நாய்ங்களுக்கே எலும்புன்னா ரொம்ப பிடிக்கும்"

இது பெரியசாமியின் சொந்த வீடு. செங்கல் செங்கல்லாக அனுபவித்துக் கட்டிய வீடு. எப்போதும்  நாலைந்து வருடங்கள் தான் தொடர்ச்சியாக இந்த ஊரில் சொந்த வீட்டில் இருப்பார். 

வெறுமனே சம்பளம் மட்டும் தான் வருமானம்னா காம்பவுண்டு வரைக்கும் தான் கட்ட முடியும் என்பார் தாத்தா.

அவன் எப்படியாச்சும் இருந்துட்டுப் போவட்டுமே ஒங்களுக்கு ஏன் தாங்க மாட்டேங்குது என்று அங்கலாய்ப்பாள் பாட்டி.

பெரியசாமிக்கு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ட்ரான்ஸ்பர் வருவதும் அடுத்த இரண்டே வருடங்களில் திரும்பவும் இங்கேயே மாற்றி வருவதும் தொடர்ந்து நிகழ்பவை. ஆனால் நாய் வளர்ப்பு மட்டும் மாறவே இல்லை. பல வருடங்கள் முன் தெருவில் அலைந்த நாய்க்குட்டியை பழைய சோறு போட்டு மடக்கி வளர்க்க ஆரம்பித்து அது பூச்சி வந்து செத்துப் போய் விட்டது. கொஞ்ச நாள் அவர்கள் வீட்டில் எல்லோரும் அழுது கொண்டு இருந்தார்கள். அப்புறம் சில மாதங்களில் வேறொரு நாய்க்குட்டி வாங்கி வந்து  சத்துணவு மாதிரி முட்டையெல்லாம் போட்டு வளர்த்து வந்தனர்.

 எவனோ ஒருவன் சும்மா இல்லாமல் டாபர்மேன் ரக நாயின் வீரம் அதன் வெட்டப்படும் வாலில் இருக்கிறது என்று சொன்னதில் பெரியசாமி கடைக்குப் போய் சில்வர் ப்ரின்ஸ் சவர ப்ளேடு வாங்கி வந்து நாய்க்குட்டியின் வாலை நறுக்கி விட, அது செப்டிக் ஆகி செத்துப் போய் விட்டது.

"கிராதகன்" என்பாள் பாட்டி. 
அவனைய ஏதாச்சும் கம்பளைன்ட் பண்ணி உள்ள தள்ளி இருக்கணும். காதுங்காதும் வெச்ச மாதிரி அநியாயமா ஒரு சீவனே சாச்சுப்புட்டான்.

அப்புறம் கொஞ்ச நாள் நாய் வளர்க்கவில்லை. அதற்குள் அவர் அந்தஸ்து உயர்ந்து, "ஒரு காரணமும்" இல்லாமல் யாரோ ஒரு ஜாதி நாயைப் பரிசளிக்க, பெரியசாமி குடும்பத்திற்கு மறுபடியும் பிடித்து விட்டது.

இதோட மூணு நாய் மாத்திட்டான். நாயை லஞ்சம் வாங்கி நான் கேட்டதில்லப்பா என்று புலம்பும் என் தாத்தாவிடம் வேறு எதெல்லாம் லஞ்சமாக வாங்கலாம் என்று கேட்கத் தோன்றியது.

நான்கு வருடங்கள். வழக்கம் போல அவரை சென்னைக்கு  அருகில் எங்கோ மாற்றிவிட பெரியசாமி வழக்கம் போல மூட்டை கட்டிக் கொண்டு லாரியில் ஏற்றி அனுப்பி விட்டார்.

இன்று இரவு ரயிலில் சென்னை கிளம்ப வேண்டும்.

கம்பன் எக்ஸ்பிரஸ் அதன் முந்தைய பிறவியில் இரு பிறவிகளாக வளைய வந்திருந்தது. 

காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறை வரை ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் ஓடும். அதன் பெயர் மனோரா எக்ஸ்பிரஸ். சேதுபாவா சத்திரம் அருகில் ராஜா சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட கலைநயம் மிகுந்த கோட்டை போன்ற கலங்கரை விளக்கம் ஞாபகத்தில் பெயரிடப்பட்டு இருந்தது. ஆங்கிலேயர்கள் நெப்போலியனை வாட்டர்லூவில் வீழ்த்தியதைக் கொண்டாடும் விதமாக அந்த மினார் அமைக்கப்பட்டிருந்தது.

அதே போல் நாகூரில் இருந்து மயிலாடுதுறைக்கு மற்றொரு ரயில், ஆண்டவர் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்படாமல் ஓடிக்கொண்டு இருந்தது.

இவ்விரு வண்டிகளும் இரவு பத்து மணியளவில் திருவாரூர் ரயில் நிலையத்தில் சந்திக்கும். இவ்விரு ரமில்களிலும் சென்னைக்கு ரிசர்வ் செய்யப்பட்ட பெட்டிகள், தனியாகப் பிரிக்கப்பட்டு ஒன்றாக இணைக்கப்படும். அதேபோல் மயிலாடுதுறை வரைக்குமே செல்லும்  பெட்டிகள் ஒன்றிணைக்கப்படும். இவ்விரு ரயில்களின் என்ஜின்கள் பிணைக்கப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக முதலில் ஆண்டவர் எக்ஸ்பிரஸூம் பின்னர் மனோரா எக்ஸ்பிரஸ் ரயிலும் மயிலாடுதுறை செல்லும். 

இத்தனைக்கும் திருவாரூரில் ஒரே ப்ளாட்ஃபார்ம் தான்.‌ அதன் இருபுறங்களிலும் ஒரே நேரத்தில் நான்கு வண்டிகள் நான்கு திசையிலும் பயணப்படும். காலை எட்டு மணி முதல் எட்டரை மணிக்குள் இந்த அபூர்வ நிகழ்வைப் பார்க்கலாம். மயிலாடுதுறை, காரைக்குடி, தஞ்சாவூர் மற்றும் நாகூர் செல்லும் நான்கு வண்டிகள் ஒரே நடைமேடையில் எதிரும் புதிருமாகப் புறப்படும்.

இரவு இரண்டு வண்டிகளாகச் செல்லும் இவ்விரண்டு ரயில்களில் ப்ரத்யேகமாக  சென்னை செல்லும் பெட்டிகள் கொண்ட  ஆண்டவர் எக்ஸ்பிரஸ் மயிலாடுதுறை அடைந்து, என்ஜினை அகற்றித் தயார் நிலையில் வைக்கப்படும். அதே நேரத்தில் மயிலாடுதுறை அடையும் போட்மெயில் எனப்படும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸின் ப்ருஷ்ட பாகத்தில் இப்பெட்டிகள் இணைக்கப்பட்டு எப்படியோ சென்னை வந்து சேரும்.

இந்த ஒரேயொரு வழிதான் திருத்துறைப்பூண்டிக்குத் தெற்கே கண்டனூர் புதுவயல் வரை இருக்கும் ஊர்களுக்கு சென்னை செல்வதற்கான மார்க்கம்.

நம் பெரியசாமி இரவு உணவை அவசரமாக உண்டு விட்டு, ஊர் சனங்களிடம் பிரியா விடை பெற்று (அப்பாடா... தொலஞ்சான்.. இன்னும் ரெண்டு வருஷத்துக்குக் கவலை இல்லை) ரயில் நிலையம் வந்தார். அவருக்கும் அவரது மனைவிக்கும் அவரது இரண்டு மகன்களுக்கும் ரிசர்வ் செய்து இருந்தார். அவர் ஆசையாக வளர்க்கும் பீட்டர் பெயரிலும் ஒரு டிக்கெட் ரிசர்வ் செய்து இருந்தார்.

 ரிசர்வேஷன் படிவங்களில் ஆணா பெண்ணா என்று மட்டுமே இருப்பதை சாதகமாக்கி ஆண் என்பதை டிக் செய்து டிக்கெட் வாங்கி விட்டார். 

அவர் மனைவிக்குக் கொஞ்சம் பயம் தான். ஆனால் பெரியசாமி பயப்படவில்லை. தான் பொய் கூறவில்லை என்பதில் தீர்மானமாக இருந்தார். அதைவிட, தன் வாய் சாதுரியத்தையும், எந்த ப்ரச்சனையையும் தன் வாய்த்துடுக்காலும் புஜபலத்தாலும் சாதித்து விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. 


ரயில் அன்று வழக்கத்தை விட முன்னதாக பதினைந்து நிமிடங்கள் மட்டுமே தாமதமாக வந்து சேர்ந்தது. 

பெரியசாமி தன் குடும்பத்தை ஏற்றிவிட்டுக் கடைசியாக, யாரும் ஆட்சேபிக்கக் கூடாது என்பதற்காகக் கொஞ்சம் தாமதித்து, வண்டி கிளம்பிய உடன் வாகனம் சகிதம் காலபைரவர் மாதிரி தாவி ஏறினார்.

சொற்ப நேரமே வண்டி நிற்குமாதலால் அவரவர் தங்கள் உடமைகளைப் பத்திரப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தனர்.

சில நிமிட தாமதத்தில் பெரியசாமியுடன் வந்த பீட்டரைப் பார்த்து ரகளை ஆரம்பித்தது. 

ஒருவர் கொஞ்சம் சுதாரித்து, "என்னங்க இது அநியாயம்? நாயெல்லாம் கொண்டு வந்திருக்கீங்க" என்று நடுக்கத்துடன் ஆரம்பித்தார். அவர் கடந்த மூன்று மாதங்களாக மருத்துவரின் அறிவுரைப்படி உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்தி எடைகுறைப்பில் ஈடுபட்டு இருப்பவர். ஆறுமாதம் தொடர்ந்து பயிற்சி செய்தால் குறையக்கூடிய சதையை அரை செகன்டில் குறைத்து விடும் உத்வேகத்தில் நின்ற பீட்டரைப் பார்த்துக் குலை நடுங்க பலகீனமாகத்தான் கேட்டார்.

அவர் எதிர்பார்த்ததைப் போல் பீட்டர் பாயவில்லை.‌ அதன் எஜமானர் தான் பாய்ந்தார்.

"என்ன தகிரியம் இருந்தா அதை நாய்னு சொல்வீங்க"

"இந்தாளை சொல்லி இருக்கணும் போலருக்குடா" என்று ஏதோவொரு இளவட்டம் முணுமுணுக்க கொல்லென்று சிரிப்பலை எழுந்தது. 

பெரியசாமி மேலும் உக்கிரமடைந்தார்.

 ஆஜானுபாகுவான அவரது உடல் கோபத்தில் கடுமையாக நடுங்கியது. அவர் வாயில் இருந்து புறப்பட்ட சரளமான வார்த்தைகளை எழுதுவது நாகரீகமாக  இருக்காது.

விஷயம் டிக்கெட் பரிசோதகரிடம் அடைந்தது. அவரும் மனிதர்கள் ப்ரயாணிக்கும் பெட்டியில் விலங்குகளை ஏற்றக் கூடாது என்று சொல்லிப் பார்த்தார். 
"அப்படின்னு எங்க இருக்கு? இப்பவே ரூல்ஸைக் காட்டு"

"ஏங்க? ரூல்ஸை நான் உள்ளங்கைலயா பச்சை குத்தி வச்சிருக்கேன், காட்டறதுக்கு? ஏத்தக் கூடாதுன்னா ஏத்தக் கூடாதுதாங்க.. அடுத்த ஸ்டேஷன்ல எறங்கி ஒழுங்கா லக்கேஜ் புக் பண்ணி லக்கேஜ் வேன்ல ஏத்துங்க... இல்லேன்னா பாசஞ்சர் சேஃப்டிக்குக் குந்தகம் வெளவிச்சீங்கன்னு அடுத்த ஸ்டேஷன்ல நாயோட சேத்து எறக்கி விட்ருவோம், தெரிஞ்சுக்குங்க"

"என் பீட்டரை நாயின்னு சொன்னே கெட்ட கோவம் வரும்"

"அவர் நாயின்னு சொன்னது பீட்டரை இல்லீங்க" என்று அதே இளவட்டம். அதே கொல்லென்ற சிரிப்பு. 

அதற்குள் அடுத்த ஸ்டேஷன் வந்து விட்டது. இதப் பாருங்க, மரியாதையா எறங்கி நான் சொன்னபடி செஞ்சீங்கன்னா பொளச்சுப் போனீங்க.. இல்லேன்னா ஆர்பீஎஃப்பைக் கூப்பிட்டு எறக்கி விட்ருவேன்.. இங்கிட்டு வண்டி ரெண்டே நிமிசந்தான் நிக்கிம்"

வேறு வழியில்லாமல் பெரியசாமி அந்த ஸ்டேஷனில் பீட்டரோடு இறங்கி ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்கு விரைந்தார்.

அங்கே விவரத்தை விவரிக்க, ஸ்டேஷன் மாஸ்டர் குமாஸ்தாவை அழைத்துச் சொல்ல, அவர் நேரமின்மையைக் காரணம் காட்டி மறுத்து விட்டார். பெரியசாமி அவரை மிரட்டலாம் என்று நினைத்தவர், கூடியிருந்த ஜனத்திரளையும் போலீஸையும் பார்த்து, பணிவாகத் தன் நிலையைக் கூறி இறைஞ்ச, ஸ்டேஷன் மாஸ்டரும் "போனால் போகிறது சங்கரு... சாரு கெஞ்சுறாரு... வண்டி பத்து நிமிசம் கமிசன்லதான் ஓடுது... திருவாரூர்ல ஸன்டிங்ல அட்ஜஸ்ட் பண்ணிக்குவாங்க"

பெரியசாமியிடம் விண்ணப்ப படிவம் திணிக்கப்பட, அவர் அவசர அவசரமாக அதை அரைகுறையாக நிரப்பினார்.

பீட்டர் அவரிடம் இருந்து பிரிக்கப்பட்டு, லக்கேஜ் சீட்டின் ஒரு பிரதி பெரியசாமி கையிலும், இன்னொன்று பீட்டரைப் பிணைத்த கயிற்றிலும் இணைக்கப்பட்டு, ப்ரேக் வேன் எனப்படும் பார்சல் பெட்டிக்கு இழுத்துச் செல்லப் பட்டது.

பீட்டர் முரண்டு பிடித்தது. அதுவொரு விசேஷ அல்சேஷன் வகை நாய். பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியது என்று அடிக்கடி சொல்வார் பெரியசாமி. அதாவது அதை அன்பளித்தவர் அதை பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார். முழு உடலும் மினுமினுக்கும் கருப்பு நிறம்.

அதை இழுப்பதற்குள் நாக்கு தள்ளி விட்டது சிப்பந்திகளுக்கு. பீட்டர் கொஞ்சம் மிரட்சியும் கொஞ்சம் கோபமும் கொஞ்சம் குழப்பமுமாக பெரியசாமியின் கட்டளைகளுக்கு விரும்பாமல் கீழ்ப்படிந்ததில் நேரமாகிக் கொண்டு இருக்க, என்ஜின் ட்ரைவர் பொறுமையிழந்து மூன்று நான்கு முறை என்ஜினை அலற விட்டார்.
ஸ்டேஷன் மாஸ்டருக்கும் கவலை வந்து விட்டது. எல்லா தாமதமும் தன் தலைமேல் விடிந்து விடப் போகிறதே என்று கிலியாகி விட்டது. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் தாமதங்கள் அதற்குக் காரணகர்த்தாக்கள் மீது சம்பளவெட்டாக விழும்.

ஆளாளுக்கு விரட்டி ஒருவழியாக பீட்டரைக் கஷ்டப்பட்டு பார்சல் பெட்டியில் ஏற்றித் திணித்து, கயிற்றைக் கட்ட இடமில்லாமல் ஒரு கனமான பார்சலின் கீழே நுழைத்துக் கதவை மூடினர்.
ஸ்டேஷன் மாஸ்டர் பெரியசாமியிடம் "கவலைப் படாதீங்க சார்.. இதுல இனிமே ரூம் இல்லை.. அதுனால இனுமே லோடிங் இருக்காது.. நீங்க எக்மோர்ல போயி சீட்டைக் காமிச்சு நாயை ஓட்டிக்கிட்டுப் போயிடுங்க... பாருங்க... வண்டி நவுருது... ஓடிப்போயி ஏறுங்க.."

பெரியசாமி ஓடிப்போய் ஏறிக் கொண்டார். மற்றவர்களின் ஏளனப் பார்வையை சந்திக்க அவமானமாக இருந்தது. துரிதமாகத் தன் படுக்கையில் ஏறிப் படுத்துக் கொண்டார்.

மடத்தனம் என்று மனைவியைச் சாடினார். "போனதடவைகள் மாதிரி லாரில ஏத்தி அனுப்பி இருக்கலாம்"

"நீங்கதான சொன்னீங்க.. ரயில்ல சேஃப்டியாக் கொண்டு போயிடலாம்னு.. இப்ப என்னயச் சொல்றீங்க"

பெரியசாமி பதில் சொல்லவில்லை. சரிசரி தூங்கு என்று அதட்டியவர் தான் தூங்கவில்லை. பீட்டரை நினைத்து உறக்கம் வரவில்லை. அதற்கு சரியாக உணவளிக்கவில்லை. ரயிலில் அளிக்கலாம் என்று அசிரத்தையாக இருந்தது தவறு. ஒன்றும் ஆகாது. அரைவயிற்றில் அது என்ன செத்தா போய்விடும். எழும்பூரில் இறங்கிய உடனே அதற்கு உணவளித்து விடலாம். என்ன எட்டு மணி நேரம் தானே?

வண்டி திருத்துறைப்பூண்டி நிலையத்தை அடைந்தது. 

பீட்டரை ஏற்றி இருந்த பெட்டி நடுவில் இருப்பது. வண்டியின் கடைசியில் ஒரு ப்ரேக் வேன் இருக்கும். அதில்தான் வண்டியின் கார்டு பயணம் செய்வார். அதையொட்டி ஒரு பார்சல் பெட்டி இருக்கும்.

பீட்டரை ஏற்றிவிட்டு ஸ்டேஷன் மாஸ்டர் தி.பூண்டி ஸ்.மாஸ்டரிடம் பார்சல் பெட்டியில் இடமில்லை என்று கூறியிருந்தார். அதை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு, கார்டு வேனுக்குப் பக்கத்தில் இருக்கும் பெட்டியில் இடமில்லை என்று நினைத்து பீட்டர் ஏற்றிய பெட்டிக்கு அருகில் ஓரிரு பார்சல்களைத் தண்டு இறக்கியிருந்தனர். 

என்ன‌ காரணமோ பொதுவாக அங்கு பார்சல் ஏற்றுவதில்லை. 

வேறுவழியில்லாமல் பார்சல்களைக் கடைசி நிமிடத்தில் இடமாற்றம் செய்வதற்கும் வண்டி தாமதத்துடன் நுழைவதற்கும் சரியாக இருந்தது.

பார்சல்களை ஏற்றும் பணியாள் கதவைத் திறந்து
"இங்கிட்டும் எடமில்லையே என்று முதலில் இருந்த பார்சலை நகர்த்தியது தான் தாமதம், பீட்டர் விருட்டென்று வெளியில் பாய்ந்தது.  

அவன் அலறியடித்துக் கொண்டு கீழே விழ, இன்னொரு சிப்பந்தி சுதாரித்துக் கொண்டு பீட்டரைப் பிடிக்க முயல, அது அவனை டபாய்த்து ஓடும்போது, அதன் கழுத்தில் இருந்த லக்கேஜ் சீட்டைப் பிடித்து விட்டான். 

ஒரு சிறு துவந்த யுத்தத்தில், அது கையோடு வந்து விட்டது. பீட்டர் அசுர வேகத்தில் ஒரே தாவாகத் தாவி ஸ்டேஷனை விட்டு வெளியேறி ஊருக்குள் சென்று விட்டது.

இதெல்லாம் கணப்போதில் நடந்து விட்டன. விஷயம் கேள்விப்பட்டு மற்ற சிப்பந்திகள் வந்து எப்படி இருக்கும் என்றே தெரியாத நாயைத் துரத்தும் பணியில் மனமில்லாமல் ஈடுபட்டு தோல்வியைத் தழுவினர். பீட்டர் போயே போய் விட்டது.

ஸ்டேஷன் சூப்பரின்டென்டென்ட் பதறிப் போய் விட்டார். என்ன செய்வீர்களோ தெரியாது, அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் நாயைப் பிடித்து வராவிட்டால் கதவை அஜாக்கிரதையாகத் திறந்த இரண்டு சிப்பந்திகளையும் பணிநீக்கம் செய்துவிடுவதாக மிரட்டி, கன்ட்ரோலரிடம் பேசச் சென்று விட்டார்.

சிப்பந்திகளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அதில் ஒருவன் சட்டென்று யோசித்து, அங்கே எச்சில் இலைத் தொட்டிக்கு வெளியே விழுந்திருந்த எச்சில் இலையை தேமேனென்று நக்கிக் கொண்டு இருந்த ஒரு சொறிபிடித்த நாய் ஒன்றில் மேல் வெறியுடன் பாய்ந்து, அதைத் திமிறத் திமிறக் கயிற்றால் பிணைத்து, பீட்டரிடம் அபகரித்து இருந்த கிழிந்த லக்கேஜ் சீட்டையும் பிணைத்து, பார்சல் பெட்டியில் அடைத்து, நன்றாகக் கட்டி, மூடி விட்டனர். அவர்கள் அதிர்ஷ்டம் அதுவும் கருப்பு நாய்தான்.

ஸ்டேஷன் அதிகாரியிடம் நாய் கிடைத்து விட்டதாகப் பொய் கூறிவிட்டனர். கடுமையான தாமதத்தில் கலங்கிப் போயிருந்த அவரும் அனாவசியமாக மேல் கேள்விகள் கேட்காது, வண்டியைப் புறப்பட அனுமதி கொடுத்தார்.

எழும்பூரில் முதல் காரியமாகப் பார்சல் பெட்டியைத் திறக்கும் முன்னரே பெரியசாமி அங்கு சென்று விட்டார். 

அங்கு நின்றிருந்த சிப்பந்தி பார்சல் வேன் முன் கூடியிருந்த பயணிகளை அடிக்காத குறையாக விரட்டி பார்சல் ஆஃபீஸூக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்.
கூட்டம் முண்டியடித்து பார்சல் ஆஃபீஸ் விரைந்தது. 

பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்து பொருட்களை நவீன யுகத்திலும் கூட இரும்பு உருளைகள் கொண்ட ஒரு இழுவண்டியில் வைத்து நாலைந்து போர்ட்டர்கள் அதிவேகமாக இழுத்து வந்தனர். பெரியசாமி எட்டி எட்டிப் பார்த்தார். அவரது நாய் தென்படவில்லை.

வந்த பொருட்கள் அடுக்கப்பட்டு, லக்கேஜாக ஏற்றப்பட்டவை பிரிக்கப்பட்டு துரிதமாக அனுப்பப் பட்டனர். பெரியசாமி பட்டுவாடா செய்து கொண்டு இருந்த குமாஸ்தாவை கூட்டத்தைப் பிளந்து அணுக முற்படும் தருணம், வேறொரு போர்ட்டர் கருப்பு நாயைத் தரதரவென்று இழுத்து வந்து பார்சல்  அலுவலகத்திற்குள் கட்டியதை கவனிக்கத் தவறிவிட்டார்.

லக்கேஜ் காரர்கள் எல்லாம் பட்டுவாடா முடிந்த உடன் கிளம்பி விட, பெரியசாமி அவரை அணுகி "என்னோட லக்கேஜ் என்னங்க ஆச்சு" என்பதற்கும், உள்ளே இருந்து வந்த போர்ட்டர் குமாஸ்தாவிடம், பெரியசாமி சீட்டைக் கொடுத்து,
"சார்.. பெரியசாமின்னு ஒரு நாயை உள்ள கட்டிப் போட்டு இருக்கேன் சார்... எவனாவது சீட்டோட வந்தா அம்பது ரூவாயாச்சும் கறந்துரு.... அத்தய் இஸ்துக்கினு வர்றதுக்குள்ள இன்னா பேஜாராயிடுச்சு தெரீமா.. கட்ச்சு கிட்ச்சு வச்சிருந்துச்சுன்னா எனிக்கு ஆரு ஜவாப்தாரி"

அதற்குள் பெரியசாமி முந்திக் கொண்டு "அது நம்ம பீட்டருங்க"

"பெர்சாமின்னு போட்டுக்கீது"

"அது எம் பேருங்க"

"அப்டியா....கோச்சுக்காத தலீவரே... நான் நாய்பேருதான் பெர்சாமின்னு நென்சுக்கினேன்..  கன்வர்ட்டடா? மறக்காம துட்டை வெட்டிட்டுப் போ... படா பேஜாராயிரிச்சு"

அதற்குள் குமாஸ்தா பெரியசாமி கையில் இருந்த சீட்டையும் நாயிடம் இருந்து அவிழ்க்கப்பட்ட சீட்டையும் ஒப்பிட்டு, பேனாவால் கோடிழுத்தார். லக்கேஜூக்கான பிரத்யேகமான புத்தகத்தில் பெரியசாமியின் கையெழுத்தைப் பெற்றுக் கொள்ளவும் மேற்சொன்ன போர்ட்டர் நாயை இழுத்து வரவும் சரியாக இருந்தது.

நாயைப் பார்த்த உடன் பெரியசாமி "ஐயய்யோ" என்று பெருங்குரலில் அலறினார்.

பதிலுக்கு நாயும் அலறியது.

"ஓனரும் நாயும் பேசிக்கறாங்க போல"

"யோவ்... இது என் பீட்டரே இல்லய்யா"

"யோவ்வா.. இன்னாப்பா ராங்கு காட்டுறே? அய்யா.. புய்யான்றே... பேத்துறுவேன்"

"நீதான்யா மரியாதை இல்லாம பேசறே"

அதற்குள் குமாஸ்தா குறுக்கிட்டு, "என்ன சார் ப்ரச்சனை?"

"இது என்னோட பீட்டர் இல்லீங்க?"

"அதெப்படி? இதுதான் வண்டிக்குள்ள இருந்துச்சு"

"அது எனக்குத் தெரியாது... ஆனா.. இது பீட்டர் இல்லே"

அதற்குள் போர்ட்டர், "பீட்டர் பீட்டர்" என்று கூப்பிட, அது திரும்பிப் பார்த்தது.

"இது பீட்டர்தான் பா.. கூப்டாக் கரீக்டா திரும்புது பாரு"

பெரியசாமிக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.
"இதை எப்படிக் கூப்ட்டாலும் திரும்பிப் பார்க்கும்ங்க"

"அப்போ உனிக்குத் தெர்ஞ்ச நாய்தான்.. நீயே நைசா இந்த நாயை ஏத்திட்டு, எங்க கிட்ட துட்டு வாங்கிக்கினு போய் நல்ல நாய் வாங்கலாம்னு பாக்றியா? படா ஆளுய்யா நீ.. "

"சும்மா இரப்பா நீ... சார்... என்னோட பீட்டர் உயர்ந்த ஜாதி  சார்"

"தோ பார்ரா.... அது இன்னா ஜாதி கண்ணு... ஜாதி ஒஸ்தின்ற... பேரு பீட்டருன்ற.. இன்னாமோ கோல்மால் பார்ட்டி மாதிரி கீதே"

அதற்குள் கூட்டம் களை கட்ட, வாக்குவாதம் பெரிதாகி, ரயில்வே போலிஸ் அதிகாரியும் ட்யூட்டி ஸ்டேஷன் அதிகாரியும் வருகின்றனர். பெரியசாமியின் மனைவியும் மகன்களும் சேர்ந்து கொள்ள ஒரே ரகளை.

போலிஸ் அதிகாரியை அவர் உடுப்பில் பார்த்ததும் கொஞ்சம் அமளி அடங்கியது. 

அவர் கூடியிருந்தவர்களைப் பார்த்து இங்கே இவ்வளவு பேருக்கு என்ன வேலை? சினிமாவா காட்றாங்க? மொதல்ல இடத்தைக் காலி பண்ணுங்க. 

ஒரு கான்ஸ்டபிளை அழைத்து, மணி, இங்கே நிக்கறவங்க கிட்ட ஸ்டேட்மெண்ட் எழுதி வாங்கு... நாளைக்கு விட்னெஸுக்குக் கூப்பிடலாம் என்றது தான் தாமதம், கூட்டம் சிட்டாய்ப் பறந்து விட்டது.

அவர் பெரியசாமியிடம்
"என்னங்க ப்ராப்ளம்?"

குமாஸ்தா இடைமறித்து, "சார் இவரு ராமேஸ்வரத்துல வந்தாரு.. ஒரு கருப்பு நாயை புக்பண்ணி பார்சல்ல ஏத்தி வந்திச்சு... நாங்க ஆஃப்லோடு பண்ணி ஹேன்ட் ஓவர் பண்ணா, இது என் நாயில்லைன்னு கலாட்டா பண்ணறாரு  சார்"

"இது ஒங்க நாய் இல்லையா"

"இது எங்க பீட்டர் இல்லை சார்"

"அதுக்கு என்ன ஆதாரம்?"

"எங்க ஊருக்கு வந்தா எல்லாரும் சொல்வாங்க சார்"

"ஆமாம்.. எங்களுக்கு இதான் வேலை.. ஊர் ஊரா போயி விசாரணை பண்ணுவோம்.. சும்மா சண்டித்தனம் பண்ணாம நாயை ஓட்டிக்கிட்டுப் போங்க சார்.. கொய்லான் அவுட்டர்ல வெயிட்டிங்கு... உள்ளே வாங்க முடியலை"

"இது என் பீட்டர் இல்லை சார்"

"அதையே எத்தினி தடவைங்க சொல்வீங்க? உங்க நாய் என்ன கலரு?

"கருப்புங்க"
"இது என்ன கலரு?"
"கருப்புதான்.. ஆனா இது பீட்டர் இல்லீங்க"

"யோவ்.. பீட்டர் பூட்டர்லாம் ஒங்கூட்டுல... எங்களுக்கு இது கருப்பு நாயி.. அவ்வளவுதான்"

"அதெப்படி சார்... எனனோட பீட்டர் உயர்ந்த ஜாதி சார்.. பத்தாயிரம் ரூபா வெலை... இது ஏதோ தெரு நாய்.."

"சர்தான்... ஏதாவது அங்க அடையாளம் இருக்குதா"

"தொப்புள் கிட்ட ஒரு மச்சம் இருக்குங்க" என்று சட்டையை உயர்த்தி உப்பியிருந்த தொப்பையைக் காட்டினார்.

"சட்டைய மூடுய்யா... நல்ல ஆளுய்யா நீ.. நாயப் பத்தி கேட்டா உன்னையப் பத்தி பேசுற?"

"பீட்டர் நல்ல வெல்வெட் கருப்பு சார்.."

"சரி"

"ஃபெரோஷியஸா இருப்பான் சார்"

"சரி"

"அப்பறம் எல்லா நாய் மாதிரி தான்.. வாலு காலு, காது, நாக்கு ..."

"ஏதாச்சும் சொல்டப் போறேன்"

"அது காஸ்ட்லி ஸ்பீசிஸ் சார்... அல்சேஷன் டைப்பு... இல்லன்னா அதை இவ்வளவு செலவழிச்சு வண்டீல கூட்டிட்டு வருவேனா"
"அதெல்லாம் செல்லாது... நீங்க சொன்னதை அப்ளிகேஷன்ல எழுதி இருக்கீங்களா"

அப்போது தான் பெரியசாமிக்கு அவசரத்தில் வெறும் கருப்பு நாய் என்று எழுதியது தவறென்று புரிந்தது. 

பரிதாபமாக "இல்லை சார்... அவசரத்துல..." என்று இழுத்தார்.

"சார்... நீங்க சொல்றது உண்மையாவே இருக்கலாம்.. ஆனா, பூட்டி இருந்த பார்சல் வேன்ல இந்த நாய்தான் இருந்திச்சு... அது கழுத்துல இருந்த இன்வாய்ஸூம் ஒங்க சீட்டும் ஒத்துப் போகுது... ரெண்டுலயும் கருப்பு நாய்னுதான் போட்டுருக்கு..நீங்களும் ஒங்க கைப்பட எழுதின அப்ளிகேஷன்ல கருப்பு நாய்னுதான் எழுதி இருக்கறதா சொல்றீங்க... இங்கே டெலிவரி ரெஜிஸ்டர்ல கையெழுத்தும் போட்டுட்டீங்க...நீங்க சுப்ரீம் கோர்ட்டுக்கே போனாலும் யாரும் ஒத்துக்கிட மாட்டாங்க..
 மரியாதையா உங்க ப்ராப்பர்ட்டியை ஓட்டிக்கினு ஊடு போயி சேருங்க... இல்லேன்னா உங்க மேல பொது இடத்துல குழப்பம் விளைவிச்சதா  சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.." என்று எச்சரித்து விட்டுக் கிளம்பினர்.

சிப்பந்திகளும் பின்னால் நுழைய இருக்கும் வண்டிக்கு ஆயத்தனமாயினர்.

பெரியசாமி குடும்பத்துடன் தனித்து விடப்பட்டார். அவர் கையில், நோயா சேறா சாக்கடையா என்று அனுமானிக்க முடியாது படைபடையாக செதில் செதிலாக துர்நாற்றம் வீசிக்கொண்டு இருக்கும் ஒரு ஜீவன், தன் புது எஜமானர் தன்னைப் பார்ப்பதை உணர்ந்து, சிநேகமாக வாலாட்டி, லேசாக உறுமியது.

பெரியசாமி தன் விரல்களால் வாயை மூடிக்கொண்டு ஓஓஓஓ என்று அழுதார்.

------------

Fwd: Source





சோர்ஸ்

இருபது வருடங்களுக்கு முன் எங்கள் நாக்பூர் கிளையில் ஒரு சீஃப் மேனேஜர் இருந்தார். நாக்பூர் வாழ் தமிழர். அதே கிளையில் பல வருடங்களாக வேலை பார்க்கும் அதிசய பாக்கியம் கிட்டியவர்.

குமாஸ்தாவாக அங்கேயே பணியாற்றி, பதவி உயர்வில் வேறிடம் சென்றாலும், அத்தாமன்னியின் நாத்தனார் பெண்ணுக்கு சீமந்தத்தில் சிக்கல் என்கிற மாதிரி சட்டென்று கண்கள் குளமாகிற மாதிரி காரணங்கள் கூறி அதே கிளைக்கு திரும்ப வந்தவர், ஒவ்வொரு பதவி உயர்விலும் வெளியே சென்று குறுகிய கால அவகாசங்களில், சீமந்தங்களும் வளைகாப்புகளும் சித்தி பெண் முதல் சின்ன மாமியார் வரை நீண்டு, விடாப்பிடியாக அதே கிளையிலேயே எப்படியோ தொடர்ந்து கொண்டு இருந்தார்.

அந்தக் கிளையின் பால்யம் அகன்ற உள்ளூர் கிளார்க்குகளும் சில கஸ்டமர்களும் தங்களுக்குள் களுக்கென்று நகைத்து, "இவர் பிறந்ததே இந்த பிராஞ்சுல 
தான் தெரியுமோ? இவர் அம்மா பாஸ் புத்தகம் நிரப்ப வந்தவாளுக்கு வலிகண்டு, அவகாசம் இல்லாமல், பிராஞ்சுலயே பொசுக்குனு அவதாரம் நிகழ்ந்துடுச்சு" என்கிற மாதிரி மராத்தியில் அலுப்பில்லாமல் தினம் நக்கலடிப்பது வாடிக்கையாகியே பலகாலம் ஆகிவிட்டது.

கிட்டத்தட்ட இருபத்தெட்டு வருடங்கள் ஒரே கிளை.

அதனால் அவருக்கு அதன் சுவர்களில் அடித்திருக்கும் ஆணிகள் கூட அத்துப்படி.

இன்று ஊரெல்லாம் தின்று தீர்க்கும் ஹல்திராம் கம்பெனியின் நேர் பின்னால் ஒரு சதுக்கத்தின் மாடிக்கு குன்றக்குடி கோவில் மாதிரி செங்குத்தாக அரை நாழிகை ஏறினால் கிளையை அடைய முடியும்.‌ ஆனால், அதற்கு வழி(படி)யெங்கும் அழிச்சாட்டியமாக அமர்ந்து இருக்கும் பூக்காரிகளையும் வளையல் காரிகளையும் சாமர்த்தியமாக நெகோஷியேட் பண்ணி மேலே ஏறிப் போக வேண்டும்.

உள்ளே நுழைந்தவுடன் இடது பக்கம் பிருஷ்ட பாகத்தைக் காண்பித்துக் கொண்டு இவர் அமர்ந்து இருக்கும் கேபின்.

இப்படி ஒரு அமைப்பை நான் எங்குமே பார்த்தது இல்லை. உள்ளே நுழைந்தால் கிளை மேலாளரை நேருக்கு நேர் முகத்தைப் பார்ப்பது தானே வழக்கம்?

அவர் திரேதா யுகத்தில் இருந்து அங்கு நீடிப்பதால், தம் கிளைக்கு, அதுவும் முகமறியாத தென்னிந்திய வங்கியின் கிளைக்கு, வியாபாரம் ஒன்றும் சுவாரஸ்யமாக நடக்காது என்பதை அறிந்து தான் இருந்தார். அதனால், அலுப்புத் தட்டாமல் இருக்க வாஸ்துவை உத்தேசித்து அவ்வப்போது இடமாற்றப் பிழைகளை செய்து பார்ப்பது வழக்கம். இப்போது பிருஷ்ட தர்சனம் நமக்கு சித்தித்து இருக்கிறது என்று தோன்றியது.

நாள்பட்ட மியூசியம் போல் இருந்த அந்தக் கிளையை முடிந்த வரை செப்பனிட்டு, CBS செய்யும் பணிக்காக பூனாவில் இருந்து வந்திருந்தேன் நான்.‌ அடுத்த ஐந்தாறு நாட்கள் இந்தக் குப்பையில் மூச்சு முட்டிக் கிடக்க வேண்டும் என்று கவலையாக இருந்தது.

அவரிடம் பேசிக்கொண்டே பேங்கிங் ஹாலுக்குள் நுழைய முயன்ற போது யாரோ மராத்தியில் அலறியதை உதாசீனப்படுத்தியது தவறாகி விட்டது.  அது பாங்கிங் ஹால் இல்லை.‌ பாங்கிங் தொட்டி.

சரேலென்று ஆறடி கீழே முற்றம் போல இருந்த பெரிய இடத்தில் வரவு செலவுக் கணக்கு நடைபெறும் இடத்தைத் தவறாகக் கணித்ததில் பொத்தென்று கால்தடுக்கி உள்ளே விழுந்தேன்.

நுழையும் போதே நல்ல சகுனம். 

நல்ல வேளையாக, நான் விழுந்த இடத்தில், ஒரு பெஞ்சு போட்டு நாள்பட்ட குப்பைகளை அடுக்கி இருந்தார்கள். நான் அதில் மெத்தென்று விழுந்து, வழுக்கிக்  கீழே ஒரு பலகையில் இருந்த முதுமக்கள் தாழி போலிருந்த ஒரு மண்பாண்டத்தின் மேல் விழுந்து அதை உருட்டி விட்டேன்.  

அதனுள் இருந்த தண்ணீரோடு வேறு ஏதோ ஒரு உருவமும் விருட்டென்று  வெளியே  ஓடினமாதிரி தான் இருந்தது.

நான் மண்பாண்டத்தில் விழுந்த அடுத்த அரை நொடியில் ஏழெட்டு பேர் "ஐயையோ" என்று மராத்தியில் அலறியவாறு ஓடிவந்து, ஹால் நெடுக உருண்டு கொண்டு இருக்கும் அந்தப் பானையைப் பிடித்து, அதன் ஜனஸ்தானத்தில் கொண்டு போய்  மறுபடியும் பிரதிஷ்டை செய்தனர்.

என்னை ஒருவரும் கண்டு கொள்ளப் போவதில்லை என்று துல்லியமாகப் புரிந்து போனதில், நானே தட்டுத் தடுமாறி எழுந்து கொண்டேன்.

எங்கள் அலுவலகம் பூனாவில் இருந்தது. அந்த நாளில் இந்த மாதிரி அமைப்புக்கு சர்க்கிள் ஆஃபீஸ் என்று பெயர்.‌ எங்கள் சர்க்கிள் ஹெட் ஒரு மராத்திக் காரர்.

அவருக்கு முன்னால் இருந்த பெங்காலி ஒருவர் மிகவும் சிநேகமாக எல்லோரிடமும் வாத்ஸல்யமாகவும் இருந்தவர். அவர் வங்கி மேனேஜர்களை ரிவ்யூ செய்வதே அவ்வளவு அழகாக இருக்கும். அவரது நகைச்சுவை உணர்வுக்காகவே அவ்வகை மீட்டிங்குகளுக்கு அவர்கள் ஏங்குவார்கள். எங்கள் அலுவலகத்திலும் கூட அதில் பங்கேற்க நான் நீ என்று போட்டி நிலவும்.

நான் கம்ப்யூட்டர் செக்ஷனின் ஏகபோக உரிமையாளன் என்பதில் இந்த மாதிரி மீட்டிங்குகளில் நான் கட்டாயம் உண்டு. 

அதன் பேரில் மகாராட்டிரத்தில் பம்பாய் நீங்கலாக‌ ஒட்டுமொத்த மாநிலத்திலும் நீண்டு பரவி இருக்கும் சகல அதிகாரிகளுக்கும், ஏன், கிளார்க்குகளுக்கும் கூட, என் மேல் தனிப் பிரீதி.

காரணம், கம்ப்யூட்டர் அல்லாத எவ்வளவோ விஷயங்களுக்கு நான் அவர்களுக்கு அனுகூலமாக‌ இருப்பதால்.

எங்கள் பெங்கால் தலைவர் நான்கரை வருடங்கள் அரசாண்டு, பிற்பாடு சந்திகருக்கு மாற்றலாகிச் சென்று விட்டார்.

அவரது பிரிவு உபசார‌ நாளில் ஆளாளுக்குக் கண்ணீரும் கம்பலையுமாக வழியனுப்பினர்.

அந்தப் பிரிவு உபசார விழாவில் பேசிய எங்கள் புதிய தலைவர், "தனக்கு இந்த மாதிரி அன்பு காட்டுவதில் நம்பிக்கை கிடையாது என்றும், வேலை நடக்க வேண்டும் என்றால் எல்லோருக்கும் குறைந்த பட்சம் தொந்தரவு இருந்தால்தான் நடக்கும் என்னும் கோட்பாட்டைத் தீவிரமாக நம்புபவன்" என்றும் தெரிவித்தார்.

நான் உள்பட நாலைந்து பேர் விமான நிலையம் சென்ற போது, எங்கள் பெங்காலி தலைவர் "வந்திருப்பவர் பெரிய கொடுங்கோலர். கோபம் வந்தால் பிஸிக்கலாகவே கடிக்கும் வழக்கம் உள்ளவர்.. கோபம் வந்தால் தானே என்று திருப்தி அடைய வேண்டாம்.. அடிக்கடி கோபம் வரும்" என்று எச்சரிக்கை செய்து விட்டுப் போனார்.

அது உண்மையென்று உடனே புரிந்தது. மனித எத்தனத்தில் அவ்வளவு டெசிபல் சத்தத்தில் கூப்பாடு போடுபவர்களை அங்கே யாருமே அதற்கு முன் பார்த்தது இல்லை.

பத்து நிமிஷத்துக்கு ஒருமுறை எங்கள் கட்டிடம் குலுங்கிக் குலுங்கி ஆடி அடங்க ஆரம்பித்தது.

யாரேனும் ஒருவர் உள்ளே சென்று குதறப்பட்டு, குற்றுயிரும் குலையுயிருமாக வெளிப்படுவது வாடிக்கையாகி விட்டது.

எந்த பாகத்தில் கடி விழுந்தது என்று யாரும் யாரிடமும் தெரிவித்துக் கொள்வது இல்லையென்பதால், வெளியில் திரும்பி வருபவருக்கு உள்ளே என்ன நிகழ்ந்திருக்கும் என்ற ஊகத்தில் பந்தயம் வைக்கிற அளவுக்கு காலம் வெகுவாக முன்னேறி இருந்தது.

வாராந்திர ராணி மாதிரி மாதாந்திர ரெவ்யூ மீட்டிங்குகளில், எல்லா மேனேஜர்களுக்கும், சர்க்கிள் அலுவலக சகாக்களுக்கும் இலவச பிரசவ‌ முகாம் நடைபெறும். கர்ப்பம் தரிக்காதவர்களுக்கும் இந்த பிரசவம் நடப்பதும் அவர்கள் விந்தி விந்தி ஆயிரம் மைல் தாண்டி இருக்கிற கிளைகளுக்குப் போய் சேர்வதையும் மராட்டியம் அடுத்த மூன்று வருடங்களுக்குக் கண்டு களித்தது.

நானும் மல்லிக் என்கிற விஜிலென்ஸ் ஆஃபீஸர் இருவர் மட்டுமே இதில் விலக்கு பெற்றவர்கள்.

 மல்லிக் அதி புத்திசாலி என்பதாலும், கம்ப்யூட்டர் விஷயத்தில் நான் மோனோபொலி என்பதாலும் எங்கள் இருவருக்கும் இந்த சலுகை.

ஓரிரு முறை என்னிடம் சத்தமாக, "நீ என் கண் முன்னால் உலாத்துவதை நிறுத்திக் கொள்.. ஏதேனும் விபரீதமாக நடந்தால் நான் பொறுப்பில்லை.. என் வாழ்நாளில் நான் ஒரேயொரு மதராஸியையாவது  கழுத்தைத் திருகி, கொன்று போட வேண்டும் என்று பிரதிக்ஞை செய்து இருக்கிறேன்" என்று இடிஇடியென்று சிரிப்பார்.

அவரால் ஏஜிஎம்முக்கு மேலாகப் பயணிக்க முடியாமல் போனதற்கு, மைய‌ அலுவலகத்தில், நெடுங்காலமாக நீடித்துக் கொண்டு இருக்கும் மதராஸிகளே காரணம் என்று தீர்மானமாக நம்பினார்.

அவர் கோபம் செல்லாத இடமே இல்லை. ரிவ்யூ மீட்டிங்குகளில் அவர் நரம்பு வெடிக்கக் கத்துவதும், கெட்ட கெட்ட வார்த்தைகளால் பேசுவதும் (இவ்வளவு உதவாக்கரையாக இருக்கிறாய், உன்னால் குழந்தை பெற்றுக் கொண்டு குடும்பம் எப்படி நடத்த முடிகிறது?), நம்மூர் ஆட்கள் போல சங்கோஜப் படாமல், அந்த ஊர் மேனேஜர்கள், நடு ஹாலிலேயே விக்கி விக்கி அழுவதும் மிகவும் புதிய அனுபவமாக இருந்தது.

இத்தனை பேரிலும் நம் நாக்பூர் தமிழர் மட்டுமே எதற்கும் கலங்காமல் மீட்டிங்குகளுக்கு வருவார்.

அவ்வளவு வசவுகளுக்கும், காறித்துப்பல்களுக்கும், அவர் லவலேசமும் கலங்கியதோ கண்ணீர் உகுத்தோ பார்த்ததே இல்லை.

எல்லோருக்கும் இது மிகவும் ஆச்சரியம்.

ஒரு சந்தர்ப்பத்தில் நான் அவரிடம் கேட்டே விட்டேன்.

"இன்று உங்களைத் திட்டியதைப் பார்த்து எனக்கே மதியம் உணவு இறங்கவில்லை.. நீங்கள் எப்படி சார், பிறவி ஞானி மாதிரி, எதுவுமே நடக்காத மாதிரி படு காஷூவலாக இருக்கிறீர்கள்?"

அவர் உதடு பிரியாமல் கன்னம் மட்டும் லேசாகக் குழிய புன்னகை மாதிரி என்னத்தையோ உகுத்தார்.

என் தோள்களை அணைத்துக் கொண்டு "இதில் ஒரு தொழில் ரகசியம் இருக்கிறது" என்றார்.

நான் மிகுந்த ஆவலுடன் அவர் மேலே பேசட்டும் என்று அவரை உற்று நோக்கினேன்.

" மீட்டிங்னு சொன்ன உடனேயே நான் என்னைத் தயார் படுத்திக்க ஆரம்பிச்சுடுவேன்.. எப்படியும் ஃபிகர்ஸ்லாம் கேவலமாத் தான் இருக்கு.. இன்னிக்கு நேத்திக்கு இல்லயே..‌அம்பது வருஷமா கேவலமாத்தான் இருக்கு.. நம்மளால மாத்த முடியாதுன்னு நான் கிளார்க்கா இருந்த காலத்தில இருந்தே தெரிஞ்சு தான் இருக்கு.. யாராலயும் ஒண்ணும் பண்ண முடியாது..

அதுனால, நானே கண்ணாடி முன்னாடி நின்னுண்டு என்னையேக் கண்டபடி திட்டிப்பேன்.. காறித் துப்பற மாதிரி பாவலா பண்ணிப்பேன்.. எங்கங்கல்லாம் என்‌ பெர்ஃபாமன்ஸ் கேவலமா இருக்கோ, அதையெல்லாம் எனக்கு நானே  சொல்லி சொல்லிக் கெட்ட கெட்ட வார்த்தையால திட்டிப்பேன்..

 இன்ஃபாக்ட் எனக்கு அவ்வளவு கெட்ட வார்த்தையெல்லாம் தெரியாது தெரியுமோ? அதனால, கெட்ட வார்த்தைகளுக்காகவே, என் டிரைவர் கிட்டே, ஸ்பெஷலா ட்ரெயினிங் எடுத்துண்டேன்.. அவன் என்னை லூசுன்னு நினைச்சுண்டு இருந்துருப்பான்... போனாப் போயிட்டுப்போறது.. ஆரம்பத்துல என் வைஃப், என் குழந்தைகள்லாம் கூட ரொம்ப பயந்து போயிட்டாங்க..‌அப்பறம் என் சைக்காலஜி புரிஞ்சுண்டு ரொம்ப கோவாபாபரேட் பண்ண ஆரம்பிச்சாட்டங்க..

இப்பல்லாம், நான் என்னைத் திட்டிக்க ஆரம்பிச்ச உடனே என் வைஃப் டிவில சீரியலைக் கூட நிறுத்திடறா... என்னோட சுய வசவு, டீவி சீரியலை விட இன்ட்ரஸ்டிங்கா இருக்குன்னு ஒரு அபிப்ராயம் அவளுக்கு...

என் பையன் கூட "அப்பா முடிச்சுடாத.. இந்த தோசையை ஃபினிஷ் பண்ணிட்டு வந்துடறேன்னு" சொல்லிட்டு, கையக் கூட அலம்பாம, எச்சக் கையோட வந்து, அவங்க காலேஜ்ல லேட்டஸ்டா புழங்கற‌ கெட்ட வார்த்தையால நாலு திட்டு திட்டிட்டுப் போறான்..

இதுனால என்ன‌ ஆறது, சர்க்கிள் ஹெட் திட்டறது எனக்குக் காமடியா தெரியறது.. ஆக்சுவலா அவர் எக்ஸ்டெம்போராத் திட்டறதுனால, திரும்பத் திரும்ப அதே வார்த்தைகளையே யூஸ் பண்றார்.. அவர் திட்டெல்லாம் கொஞ்சம் அப்ஸலீட் ஆயிடுத்து தெரியுமோ.. இப்பல்லாம் டீவிலே ஒரே காமடியை டெய்லி பாக்கறா மாதிரி போர் அடிக்கறது.. யாராவது அவர் கிட்டே சொன்னாப் பரவால்லை.. நீதான் அவர் கிட்டே குளோஸாமே.. நல்ல மூடுல இருக்கும் போது நைஸா காதுல போட்டு வை.. டிரைவர், காலேஜ் பசங்கள்லாம் நல்ல சோர்ஸ்" என்றார்.

எனக்கு முகத்தில் ஈயாடவில்லை