Wednesday, April 12, 2023

பரண்

பரண்

கணேஷ்ராம்


"பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடையப் பாத்த மாதிரி மயங்கி மயங்கி நிக்கப் படாது. அனௌன்ஸ் பண்ணின உடனே டீசன்டா க்யூல போய் நிக்கணும்"

"உத்தரவு மகாராணி"

"இப்ப அப்படித்தான் சொல்வீங்க... நல்ல சமயத்துல எங்கயாவது தொலஞ்சு போயி கழுத்தறுப்பீங்க. தேடுதேடுன்னு தேடினா எதையாவது குருட்டு சிந்தனைல பராக்கு பாத்துண்டு இருப்பீங்க"

"அப்படியா"

"என்ன அப்படியா? ஆமா... மூஞ்சில ஏன் இவ்வளவு எண்ணை வடியுது? எண்ணைச்சட்டில தலைய உட்டீங்களா?
ஆயில் மில்லுல வேலை செய்யறவனுக்குக் கூட இவ்வளவு எண்ணை வழியாது"

எப்போதும் அசடுதான் வழிவதாகச் சொல்பவள் ஒரு மாறுதலுக்கு மாற்றிச் சொல்கிறாள். நல்ல முன்னேற்றம்.

"நாலு மணி ஃப்ளைட்டுக்கு பதினோரு மணிக்கே வந்து ராப்பூரா கொட்டக் கொட்ட தேவுடு காத்தா மூஞ்சில எண்ணை வழியாம வேறென்ன வழியும்?". கேட்கவில்லை.

ஏதேனும் சொன்னால் என் பூர்வோத்திரத்தைக் கிளறுவாள். எங்கள் அப்பாவின் ஒன்றுவிட்ட ரெண்டுங்கெட்டான் மாமா ஒருவர் அந்தக் காலத்தில் பிழைப்புக்காக ஆயில்மில் நடத்தியவர். கிட்டாங்கி கிருஷ்ணமூர்த்தி என்பதுதான் அவரது அடையாளம்.

அதற்குள் கேட்டில் ஆள்வந்தவுடன் பரபரப்பாகி விட்டது.

நான் துரிதமாக எழுந்து நின்று கைப்பெட்டிகளை எடுத்துக் கொண்டு அவசரமாகக் கூட ஆரம்பித்த க்யூவிற்கு விரைய எத்தனித்தேன்.

"அரை நிமிஷம் முன்னாடித்தான் சொன்னேன், அவங்களே ஜோன் நம்பர் வெச்சுக் கூப்புடுவாங்க..  டீசன்டா பிஹேவ் பண்ணனும்னு..

போன ட்ரிப்புல இப்படித்தான் டவர் ஆஃப் சைலன்ஸ்ல எங்கயோ பராக்கு பாத்துட்டு, படில  ஒரு கிழவியை ஓவர்டேக் பண்ணும்போது எதிர் சைடுல வந்த வெள்ளைக்காரன் அசிங்கமா ஒரு விரலை நீட்டி சைகைல ஒழுங்கா வான்னு சொன்னதை ஒட்டுமொத்த லண்டனும் பார்த்ததே, மறந்துட்டீங்களா?"

"நான் என்ன பண்றது? ஆத்தாளும் மகளுமா நான் பின்னாடி வரேனாங்கறதையே பாக்காம விர்ருனு போயிட்டீங்க... முன்னாடி ஒரு கிழவி, ரொம்பவே கிழவி, ஆடி அசைஞ்சுண்டு போச்சு... பார்க்கற மாதிரி மிடில் ஏஜ்டுன்னா ஓவர்டேக் பண்ணியிருப்பேனா?"

என் மனைவி என்னை "ஐய்யே" என்று பார்த்தாள். ஒன்றும் சொல்லவில்லை. நான் முகத்தைத் துடைத்துக் கொண்டேன்.

எங்கள் ஜோன் அறிவிப்பு வந்தவுடன் நான் விழுந்தடித்துக் கொண்டு ஓடினேன். என் மனைவியும் தலையில் அடித்துக் கொண்டு தொடர்ந்தாள்.

"ஏம்ப்பா?"

"சும்மாரு... உனக்கு ஒண்ணும் தெரியாது. இப்பவே ஆகக் கடைசில கூப்டுருக்கான்.. எல்லா லாஃப்ட்டும் நிரம்பி வழியும். கரெக்டா நம்ம சூட்கேஸ் வைக்க இடம் கிடைக்காது.. அல்லாடணும்"

அவள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனால், நான் விடாமல் முண்டியடித்து அநாகரீகமாக நுழைந்ததற்குப் பலன் இருந்தது. நான்காவது ஐந்தாவது நபர்களாக நாங்கள் நின்று கொண்டோம்.

எந்த ஒரு விமானப் பயணத்திலும் பரணில் பெட்டி வைக்கப் படாத பாடு பட வேண்டியிருக்கிறது.

இந்த முறை கலிஃபோர்னியா செல்ல வேண்டி, குறைந்த கால அவகாசத்தில் நிறைவேறுகிறது. அதிர்ஷ்ட வசமாக இரண்டு விமானப் பிரயாணங்களில் எங்கள் பயணம் முடிவடைகிறது. சிலசமயம் நான்கு இடங்களில் ஏறி இறங்க வேண்டி வரும். இந்த முறை லண்டனில் ஒரேயொரு ப்ரேக் தான். 

லண்டனில் மூன்று மணிநேர அவகாசம்.

அதனால் ஊருக்குள் செல்ல முயற்சிக்கவில்லை. என் மைத்துனன் அங்கு தான் வசிக்கிறான். போன முறை ப்ரத்யேகமாக லண்டனுக்கு மட்டும் வந்தபோதுதான் ஒரு வெள்ளைக்காரன் என்னை அநேகமாக காறித் துப்பியது.

39ம் நம்பர் சீட்டு என்றவுடனே சுதாரித்திருக்க வேண்டும். சரியாக நாங்கள் ரொம்ப நாகரீகம் பார்த்து நாசூக்காக நகர்ந்து சென்றதில் (அசமஞ்சம் என்று தெலுங்கில் சொல்வார்களாயிருக்கும்) எங்களுக்கு முன்பே ப்ரயாணிகள் நிரம்பி இருக்கைகளின் மேலே இருந்த பரண்களை நிரப்பியிருந்தார்கள்.

 சோதனையாக 39 தொடங்கி 45 வரை நடு வரிசையில்  (எங்களுடையது) பரண்கள் இல்லை. அதை மழைநீர் சேகரிப்பிற்காக நேர்ந்து விட்ட மாதிரி பொருள்படும்படி அந்த அவன் பெருமையடித்துக் கொண்டான்.  

நல்ல வேளையாக 37ம் நம்பர் பரண் காலியாக இருந்தது. நான் கார்ல் லீவிஸ் மாதிரி எட்டுக்கால் பாய்ச்சலில் தாவி, யார் காலையோ நடுவில் பதம் பார்த்து  (indecent fellow) மன்னிப்பு கோர அவகாசமில்லாமல் என் இரு பெட்டிகளையும் அந்தப் பரணில் வைத்து மீண்டேன். 

இந்தக் குறுகிய கால அவகாசத்தில் என் மனைவியின் வாயிலாக ரகுவம்சத்திற்கும்  முற்பட்ட என் பரம பாட்டனார்களின் கையாலாகாத்தனமெல்லாம் பக்கத்தில் தேமேனென்று இருந்த ஜப்பான்காரன்கள் செவிப்பறையெல்லாம் நுழைந்து மீண்டன.  ஜப்பான்காரன் என்பதெல்லாம் உத்தேசமாகச் சொல்வதுதான். உண்மையில் சீன, கொரிய,  ஜப்பான் காரன்களையெல்லாம் பகுத்தறிகிற புத்திசாலித்தனம் என்னிடத்தில் இருந்ததில்லை.  எந்த புத்திசாலித்தனமும் என்னிடத்தில் இருந்ததில்லை என்று புத்திசாலியான என் மனைவியின் கூற்றில் உண்மைகள் இல்லாமல் இல்லை.  

ஒரு சிறிய ஆசுவாசத்திற்குள் 37ம் நம்பர் மனைவியுடன் வந்து விட்டான். நடுவயது ஆனால் என்னைவிடவும் மிகவும் இளையவனாக இருந்தான். கஷ்கம் தெரிகிற மாதிரி T Shirt அணிந்திருந்தான். அதற்கு அவனது தினவெடுத்த புஷ்டியான புஜங்கள் காரணமாக இருந்திருக்க வேண்டும். 

 இந்த மாதிரி ஆட்கள் கூடைப்பந்து விளையாட அல்லது தேச சேவை உத்தேசித்து மிலிட்டரியில் சேர்ந்திருக்கலாம். ஒலிம்பிக்கில் தட்டெறியப் போயிருக்கலாம்.  இப்போது பெட்டி எறிகிற துரத்தில் நெருப்பைக் கக்குகிற விழிகளில் என்னை ஊடுருவி மீள்கிறது அவன் பார்வை.

அவனுக்குப் பட்டா போட்டுக் கொடுத்த இடத்தை அபகரித்த போக்கிரி யார் என்கிறது ஆங்கிலம். 

நான் போக்கிரியெல்லாம் இல்லை என்று சாதுவாக அறிக்கையிட முற்படுகிற என் கோழைத்தனத்தை அணைகட்டுகிறது என் மனைவியின் ஒரு சிறு கனைப்பு. 

நான் வழக்கம் போல அடங்கி தலையைத் தொங்கப் போட்டுக் கொள்கிறேன். அவன் கர்ஜனை தொடர்கிறது. அந்த அவனைக் கூப்பிட்டு கூப்பாடு போட அவன் அமைதியாக இவனது உடமைகளை எடுத்து வேறிடம் செல்கிறான். ஆனாலும் அவன் சமாதானம் அடையவில்லை. 

 பொதுவாக எங்கள் பக்கம் அவன் தாய் மொழியில் என்னமோ சொல்கிறான்.  என் பாட்டனார்களுக்கு யோக காலம் என்று தோன்றியது. திதி கொடுக்கும் நாட்களைத்தவிரவும் நிறைய நாட்கள் என் மனைவி மட்டுமின்றி நிறையப் பேர் அவர்களை நினைத்துக் கொள்கிறார்கள்.  

அவன் காது கூசாத வார்த்தைகளை உகுக்கிறான் என்பது அவன் மனைவி தன் காதுகளை நாசூக்காக மூடிக்கொண்டு அவனை அமைதிப்படுத்த முனைவதில் தெரிகிறது. 

நான் தமிழ் நாட்டில் பிறந்ததற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்தேன். வேறு மாநிலங்களில் பிறந்திருந்தால் மற்ற மொழிகளை கற்றுக் கொள்ள நேரிட்டு என் பாட்டனார்களுக்கு நேர்ந்த அவலத்தில் பங்கு கொள்ள வேண்டியிருந்திருக்கும்.

லண்டன் விமான நிலையத்தில் மூன்று  மணிநேரம் கிடைத்தது. அது பரிச்சயமான விமானநிலையமானதால் சங்கடங்கள்  இல்லை  என்று சொன்னதை என் மனைவி ரசிக்கவில்லை. 

உண்மையில்  ஒன்றுமே புரியவில்லை.  நல்ல வேளையாக மனைவி கூட இருந்ததில் பாதுகாப்பு சோதனை கடந்து கதவு நம்பர் தெரியாமல் அறிவிப்பு பலகை அருகே அமர்ந்து கொண்டோம். எங்கள்  அருகே கழிப்பறைகள் வேறு இருந்தன. திரளான ப்ரயாணிகள் வெவ்வேறு தேசங்களில் இருந்து வந்தாலும் ஒரே மாதிரி வேதனை ததும்பும் முகங்களில் நுழைந்து திருப்தியாக திரும்பிக் கொண்டு இருந்தனர்.

ஒரு வழியாக B35 செல்லுமாறு பணிக்கப் பட்டோம்.

நாங்கள் விழுந்தடித்துக் கொண்டு அரைமைல் நடந்து கதவை அடைந்து எங்கள் வரிசையில் நுழைந்து கொண்டோம். இன்னொரு தெலுங்குக்காரனிடம் அடிவாங்கும் திராணி இல்லை. 

எங்கள் துரதிர்ஷ்டம் ஒரு பழைய யுவதி வந்து அடிக்காத குறையாக  அடித்து விரட்டினாள். இருபது நிமிடம் முன்னால் வந்தால் போதும் என்று சொன்னதால் நானும் என் மனைவியும் பராக்கு பார்க்க அருகாமையில் இருந்த கடையில் நுழைந்தோம்.

அப்படியும் நேரம் போகவில்லை.  விரட்டினாலும் பரவாயில்லை என்று மறுபடியும் வரிசையின் வெளியே நின்று கொண்டு பரிதாபமாக எட்டிப் பார்த்தோம்.

உள்ளே இருந்து  ஒருவன் வந்து  எங்களிடம் என்ன என்று அதட்டினான். நான்  என் கையில் இருந்த போர்டிங் பாஸை அநிச்சயமாக அவனிடம் நீட்டினேன். அவன் அதைப் பார்த்து விட்டு "ஓ.. என் நல்ல கடவுளே" என்றான். 

இவ்வளவு நேரமாக கூப்பிடுகிறோம் எங்கே சென்றீர்கள்  என்று கடிந்து கொண்டான். நான் காரணம் கேட்ட போது  என் பாஸில் இருந்த ஒரு குறியீட்டை சுட்டிக் காட்டி நான்காம் நம்பர் வரிசையில் போய் நிற்கச் சொன்னான். 

நாங்கள் இருவரும் அவ்விடம் விரைந்தோம். அங்கே  ஏற்கனவே ஓரிருவர் நின்று கொண்டிருந்தனர். எங்களுக்கு மனம் பரபரப்பாக  இருந்தது.  ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது என்று உள் மனம் கூறியது.

 நாங்கள் நின்ற வரிசையில் upgrade  என்று எழுதியிருந்தது. என்றால் எங்களுக்கு முதல் வகுப்பு கிடைக்கப் போகிறது செலவில்லாமல். 

ஓவென்று கத்தலாம் போல இருந்தது.  என் பாஸை கைவிரல்களிடையே ஸ்டைலாக சுழற்றியபடி வெளியே நேரமாகாததால் காத்திருப்பவர்களை ரகசியமாக நோட்டம் விட்டேன். 

 எல்லோரும் எங்களையே பொறாமையாகப் பார்ப்பது பெருமையாக  இருந்தது.  அப்போது தான் என் மனைவியின் பாஸைப் பார்த்து கடவுளே என்று அலறினேன். அவள் பாஸில் அந்தக் குறியீடு இல்லை.  என்றால் எனக்கு மட்டும் தான் முதல் வகுப்பு கிடைக்கும்.  அவள் எகானமிதான். 

அவள் முகம் சுணங்கி விட்டது.  இது சரியா வராதுப்பா என்றாள். கிடைச்சா ரெண்டு பேருக்கும் கிடைக்கட்டும்.  இல்லேன்னா வேண்டாம்னு சொல்லிடுவோம் என்றாள். 

சரி என்றவாறு எங்களை அழைத்த பெண்ணிடம் சென்றோம். என் மனைவி அவளிடம் தானும் செல்லலாமா என்று கேட்க, அவள் முதலில் மறுத்து, பின்பு உடன் பட்டாள். மறக்காமல்  என் பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டாள்.

நாங்கள் ஒரு நீண்ட பாதையில் அழைத்துச் செல்லப் பட்டோம். போகுமுன் வெளியில் தவிப்போடு நின்றிருந்த சகபயணிகளைப் பார்த்து புன்னகைக்க மறக்கவில்லை நான்.

சிறிது நேர நடை ஒரு அறையில் முடிந்தது. அதன் வெளியே விமானத்தின் நுழைவு வாயில் திணிக்கப் பட்டிருந்தது.

அந்த அறையில் முன்னம் நுழைந்த மூவர் இருந்தனர். கடும் சிவப்பில் இருந்த ஒருவன் என்னைக் கூப்பிட்டான்.

 நான் பெட்டிகளை மனைவியிடம் கொடுத்து விட்டு செல்ல, அவன் மறுத்து அவைகளைக் கொண்டு வரச் சொல்லி வேறொருவனிடம் கொடுக்க அவன் ஒரு மரியாதை நிமித்தம் கூட என் அனுமதி பெறாமல் அவைகளைத் திறந்து  உள்ளாடைகள் முதற்கொண்டு எல்லாவற்றையும் வெளியே எறிந்தான். நான் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தேன்.

இப்போது அந்த சிவப்பு மனிதன்  என்னை ஒரு பெஞ்சில் கிடத்தி, நவராத்திரி கொலு முடிந்து நாச்சியார் கோயில் குத்துவிளக்கை அக்கக்காக கழற்றுகிற மாதிரி என்னைக் கழற்றினான். திரும்பவும் ஒழுங்காக சேர்த்து விடுவானா என்று சந்தேகமாக இருந்தது. 

என்னை நன்றாகத் துழாவி, ஜியாமெட்ரி பாக்சில் ரப்பர் தேடுவது போலத் தேடிவிட்டு, முடிந்தவரை என்னைப் பழையபடி கோர்த்து, வேறொரு மனிதனிடம் அனுப்பினான். 

அவன் முந்தாநாள் தான் திருப்பதி போய் வந்தவன் போல இருந்தான். கங்கைச் சொம்பு போல் பளபளவென்று இருந்த அவன், என்னை மறுபடியும் கிடத்தி,   வைத்தியர்கள் வயதானவர்களிடம் ஹெர்னியா பரிசோதிப்பது போல் என்னத்தையோ பரிசோதித்தான். 

நான் ரொம்ப முடியாமல் இதெல்லாம் என்ன என்று ஈனஸ்வரத்தில் கேட்டேன். மனைவியிடம் கூட எதிர்த்துப் பேச திராணி இல்லாத அப்பிராணி ஒருவன் மேல் நிகழும் வன்முறையை யாரும் எதிர்க்கவில்லை என்பதில் அவன் பேரில்  கோபம் கோபமாக வந்தது. அவன் தலையில் இடி விழ‌ என்று சாபமிட்டேன். அது கிட்டத்தட்ட பலித்து, போனவாரம் பார்த்த ஏதோவொரு ஜூராசிக் படத்தில் அவனை டைனோஸர் ஒன்று உயிருடன் விழுங்குவதைக் காட்டி இருந்தார்கள்.

ஒருவழியாக போய் வா என்றான்.  நான் பதட்டத்தில் வெளியே வந்தால் மற்ற பயணிகள் சாரிசாரியாக விமானத்தில் ஏறிக் கொண்டிருந்தனர். இப்போது அந்தப் பெண் ஓடிவந்து ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்து என் மனைவியிடம் அவளுக்கு சோதனை தேவையில்லை என்று கூறி விட்டாள்.

நான் தடுமாற்றத்துடன் மனைவியைப் பிடித்துக் கொண்டு நுழையும் போது வாசலில் நின்ற பெண் எங்கள் சூட்கேஸ்கள் சற்றே பெரிதாக இருப்பதால் வாசலிலேயே வைக்கச் சொன்னாள். 

எனக்கு இருந்த பதட்டத்தில் அவைகளை விமானத்திற்கு உள்ளே வைத்தேனா, வெளியிலே வைத்தேனா என்று புரியவில்லை.

"பொட்டியெல்லாம் பூட்டினீங்களாப்பா?"

"யாரு கண்டா? நான் பேண்ட்டுக்கே ஜிப்பு போட்டேனா இல்லையான்னு தெரியலை"

மிகுந்த ஆயாசத்துடன் இடித்து இடித்து நடந்து வந்து சரியான இருக்கையில் அமர்ந்தேன். இந்த முறை இருக்கையின் மேல் பரண் காலியாக  இருந்தது.

----+

No comments:

Post a Comment