Saturday, April 15, 2023

Through Proper Channel

Through Proper Channel

 

சரியாக தவறான இடத்தில் நின்று கொண்டு இருந்தார் நாகு.

 

கஷ்கத்தில் ஒரு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையை பீடி சுற்றுவது போல சுருட்டி, பலம் கொண்ட மட்டும் அழுத்தியிருந்தார். நேற்றைய பொழுது சுகந்தமாக விடிந்திருந்தது.

 

"கொஞ்சமாவது மூளை இருக்கா"

 

"என்கிட்ட இல்லே.. உன் கிட்ட இழுந்தா ஒழு காக்கிலோ கொழேன்"

 

"யார் மேலயாவது துப்பி வைக்கப் போறீங்க? இவனுங்க எல்லாம் ரொம்ப முரட்டு ஆசாமிங்க".

 

நாகு புச்சென்று பூமித்தாய் மீது லவலேசமும் ஈவு இரக்கம் காட்டாது நின்ற வாக்கில் துப்பிவிட்டு,

 

"நீ என்கிட்ட கதை விடாத.. இங்கே எல்லாப் பயலுவளும் வாய்ல என்னத்தையாவது மென்னுன்டே தான் இருக்கானுவோ"

 

அது உண்மைதான். கட்டா பஸ் என்று வேற்று மாநிலக்காரர்களால் ஒருவித அருவருப்பில் அழைக்கப்படும் வெளியூர் செல்லும் பேரூந்துகளில் ஏறும் கிராமத்துப் பயணிகள் நின்ற வாக்கில், அமர்ந்த வாக்கில் அப்படியே குனிந்து காலிடுக்கில் துப்பிக் கொள்வர்

 

"துப்பிக் கெட்ட பயலுக" என்று பணி நிமித்தம் அடிக்கடி வெளியூர் ப்ரயாணம் மேற்கொள்ளும் நான், என் மனைவியிடம் நொந்து போய் அங்கலாய்ப்பது உண்டு.

 

"நான் நேத்திக்கு படிச்சு படிச்சு எத்தனை தடவை சொன்னேன். ஸ்வர்கேட்ல நார்த்தன் என்ட்ரன்ஸ் வழியா வந்தா, ரெண்டாவது 'பே'(bay) தான் சதாரா பஸ் கிளம்பும். நான் எட்டரைக்கே வந்துடுவேன்.. வேற எங்கேயாவது போனா கண்டு பிடிக்க முடியாது.. பராக்கு பாக்காம ஒழுங்கா நில்லுங்க"ன்னு..

 

இப்ப என்னடான்னா நாலாவது 'பே' பேந்தப் பேந்த முழிச்சுண்டு நிக்கறீங்க.. நான் பைத்தியம் மாதிரி அங்க நின்னுட்டு இருக்கேன்.. அம்பது பஸ்ஸூ போயாச்சு.. ஒரு டீலக்ஸ் பஸ், டூ பை டூ, ஜஸ்ட் இப்பதான் போச்சு"

 

நாகு, "இங்கே கூடத்தான் நெறைய பஸ் போச்சு"

 

நான் கடுப்புடன், "இது ஷோலாப்பூர் போறது"

 

"போகட்டுமே.. அதுனால என்ன? ஷோலாப்பூர் போயிட்டு அப்படியே ரைட்லல திரும்பி வந்தா சதாரா வந்துட்டுப் போறது"

 

"ஆமாம்.. இது அமிஞ்சிக்கரைலேருந்து அண்ணாநகர் போற மாதிரின்னு நெனச்சீங்க போலருக்கு.. ஒவ்வொண்ணும் இருநூறு மைல் டிஸ்டன்ஸ்"

 

"அவ்வளவுதான? நான் பாக்காத டிஸ்டன்ஸா"

 

"கரெக்ட்.. நீங்க வெத்தலைல மை போட்டு பாத்துருப்பீங்க.. புரசைவாக்கமே தாண்டாத ஆளு... பேச்சைப் பாரு"

 

"எலேய்.. சின்னப் பயடா நீ.. என் அனுபவம் காணாது உன் வயசு".

 

நாகுவைப் பார்த்து ஆயாசமாக இருந்ததுஇந்த மனிதரை அடுத்த நாலைந்து நாட்கள் சமாளிக்க வேண்டும்.

 

"ஆமாம்.. கைல என்ன?"

 

"கஷ்கத்திலிருந்து எக்ஸ்பிரஸூக்கு விடுதலை கொடுத்து என்னிடம் நீட்டினார்.. கஷ்கத்தில் நெடுநேரம் இருந்ததால் எக்ஸ்பிரஸின் சென்டர் கோச்செல்லாம் நசநசவென்று ஈரம்"

 

எனக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. நான் அதீதமாக முகத்தைச் சுளித்துக் கொண்டு, "நான் என் ஜன்மத்துல இனுமே எக்ஸ்பிரஸ் படிக்கறதா இல்லை".

 

நாகு எங்கள் (மண்டல) அலுவலகத்திற்கு பதினைந்து நாட்கள் முன்பு தான் வந்தார்.

 

 சென்னையில் கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் யார் கண்ணிலும் படாமல் ஓட்டிவிட்டு, கடைசியாக இருந்த கிளையில் யாரோ ஒரு விஐபியை சிறுவயதில் இருந்தே தெரியும் என்கிற ஹோதாவில் எல்லோர் முன்பும் ஏகவசனத்தில் பேசி, ஐந்தே வருடங்கள் பாக்கி இருக்கும் அளவில், எங்கள் போதாத காலம், பூனாவுக்கு நாடு கடத்தி விட்டார்கள்.

 

நாகுவின் அலுவலகப் பிரவேசம் சரித்திரப் புகழ் பெற்றது.

 

பல வருடங்களாக தான் தோன்றித் தனமாக காடாக வளர்ந்து ஒழுங்கீனமாக ஒதுக்கப்படாத தாடி.    பழுப்பு, வெள்ளை, கருப்பு, வேறு சில கண்றாவி நிறங்களுடன் அது ஓங்கி வளர்ந்து இருந்தது. மீசை தாடி என்றெல்லாம் பாகுபாடு இல்லாத அமோக வளர்ச்சி. வாயென்ற ஒன்று தெரிய வேண்டுமே என்று வெற்றிலையுடன் புகையிலை கலந்த சாறு வழிவதில் தெரிந்து கொள்ளலாம். மத்திய தர ஐம்பத்தி ஐந்து வயது மனிதர்கள் யாரும் அவ்வளவு முடி வளர்க்க மாட்டார்கள் ஏதேனும் வேண்டுதல் இல்லாத வரை

 

காதுகளை மறைத்து பல நிறங்களில் முடி. புஸ்ஸென்று வீங்கிய வயிறு. அதில் நிற்காது நழுவும் கால்சராய், நல்ல அரக்கு நிறத்தில். வெளுத்துப் போன பச்சை நிறத்தில் சட்டை சற்றும் பொருந்தாமல். மேல் பொத்தானை சுதந்திரமாக விட்டிருந்தார். காலில் ஏரோப்ளேன் டயரில் ஆர்டர் கொடுத்து ப்ரத்யேகமாக தைத்த பெரிசுகள் பொதுவாக அணியும் செருப்பு. லாடம் அடித்த குதிரை மாதிரி நடக்கும் போது சத்தம்.‌அதைத் தவிர்க்க தரையைத் தேய்த்து தேய்த்து ஒரு விகாரமான நடை. நான் இந்த மாதிரி எப்போதாவது நடந்திருந்தால் என் அம்மா கரண்டியை அடுப்பில் இட்டு சூடு இழுத்திருப்பாள்.

 

பொதுவாகவே பூனாவில் ரிக்ஷா ஓட்டுபவர் கூட செருப்பு அணிய மாட்டார்கள். பூட்ஸ் அணியாத மனிதரை பார்ப்பது அரிது

 

அதுவும் எங்கள் மண்டலத் தலைவர், ஒரு அதி நாசூக்கான‌ பெங்காலி, வந்ததில் இருந்து அனைவரும் பூட்ஸ், சட்டையை 'இன்' செய்து வருதல் என்று ஏகப்பட்ட கெடுபடி

 

அவரே வெள்ளைக் காரன் மாதிரி தான் இருப்பார். பளீரைத் தாண்டிய பட்டு வெள்ளைச் சிவப்பு. மெலிந்த தேகம். கோட்டு சூட்டு இல்லாமல் பார்த்ததே இல்லை. ஹிப்பி முடி‌, ஒரு குடை போல, மிகமிக அழகாக அவர் தலைக்காகவே படைக்கப்பட்டது போல கவிழ்ந்து வழியும்

 

இந்திரா காந்தியின் முன்தலை நரை மாதிரி, மிக நேர்த்தியாக ஓரிரு இழைகள் வெள்ளி இழை நீரோட்டமாக அவர் தலையை ஊடுருவி மறையும்

 

எங்கள் எல்லோருக்குமே அவரது தலைமயிரைக் கோதிவிட வேண்டும் என்று ஒரு முறையாவது தோன்றாமல் இருந்தது இல்லை. அவரது ஜோடுகளில் முகம் பார்க்கலாம். இது எதையும் தாண்டி அவரது ஆங்கிலம் மற்றும் நகைச்சுவை உணர்வு.

 

நாங்கள் எல்லோருமே அவரது பணியாளர்கள் என்பதை விட அவரது அத்யந்த விசிறிகள்.

 

சின்னா என்னும் பாலு, நான் ஆகிய இருவரும் அவரது நீலக்கண் நபர்கள். பாலுகடன் வழங்கும் பிரிவிலும், நான் கம்ப்யூட்டரைசேஷன் நிர்வாகியாகவும் இருந்தோம். எங்கள் தலைவருக்கு கம்ப்யூட்டர் என்றால் பிடிக்காது. ஆனால் என்னை மிகவும் பிடிக்கும். அதனால், எனக்கு முழு சுதந்திரம். மும்பை நீங்கலாக ஒட்டுமொத்த மராட்டியத்தையும் தன்னந்தனியாக சமாளிக்கிறேன் என்பதில் என் மீது அலாதி பிரியம் அவருக்கு.

 

எங்கள் இருவரையும் அவர் திட்டமாட்டார். மற்றவர்களை காச்சு மூச்சு என்று விளாசுவார். அவரது ஆங்கில சொற்கட்டுப் பிரயோகமும், முகத்தில் கல்மிஷமாக வழியும் பொய்க்கோபமும், நடுநடுவே கண்சிமிட்டி வெட்கப்படும் படியாக உதாரணங்களும், நகைச்சுவையும், நாங்கள் அனைவருமே ஏதோவொரு வகையில் வேண்டும் என்றே தவறுகள் செய்து, அவரிடம் திட்டு வாங்க முயற்சி செய்வோம்.

 

அவரது ப்ரத்யேகமான அறையின் வாசலில் EDP அறையைத் தாண்டி வாசல். அதன் வலது புறம், ஒன்றன் பின் ஒன்றாக இருக்கைகள்.

 

நான் அவர் அறைக்கு நேராக அமர்ந்து இருப்பேன்.‌ எனக்குப் பின்னால் வர்த்தகம் பார்க்கும் சர்மா. அவரிடம் எதுவும் கேட்க முடியாது. பதில் சொல்ல மாட்டார். அதற்கேற்றார் போல், வாசல் கதவு அவரை ஒட்டிய மரத்தாலான குட்டைத் தடுப்பில் அணைந்து அவரை வெகுவாக மறைத்து இருக்கும். அதனால், யார் உள்ளே நுழைந்தாலும் என்னைத்தான் அணுகுவர்.

 

அன்றைக்கும் அப்படித்தான் நாகு நுழைந்தார். நேராக என்னிடம் வந்து, நெடுநாள் பழகியவரைப் போல பின்புறமாக என் தோளைத் தட்டினார்.

 

நான் நிமிர்ந்து "எஸ்".

 

"'ம் நாகராஜன் ஃப்ரம் மெட்ராஸ். வான்ட்டு ஷீ மிஷ்டர் பாஷூ".

 

பேசியவரை நிமிர்ந்து பார்த்தேன். ரொம்ப நேரமாக வாயில் வெற்றிலையை ஊறப்போட்டு இருக்கிறார். எந்நேரமும் அது வெடித்து சிதறலாம்.

 

நான் அவரை ஏற இறங்க பார்த்து விட்டு, "தமிழா" என்றேன்.

 

"எஷ்.. வாட் அபௌட் யூ"

 

"மீ டூ"

 

"ஏண்டாப்பா.. நீ ஆஃபீஷரா"

 

எடுத்த எடுப்பிலேயே அடாபுடா என்கிறாரே என்று யோசித்து "ஆமாம்" என்றேன்.

 

"'ம் போஷ்டட் ஹியர்.. ஏஷ் கர்ட்டஷி வான்ட்டு டு மீட் பாஷூ... ஆஃப்டர் ஆல் ஹீ ஈஷ் அவர் பாஷ் நோ". 

 

அவர் எங்கயாவது சிரித்து விடப் போகிறாரே என்று பயமாக இருந்தது. ஆளே மேற்சொன்னபடி பைராகி மாதிரி தான் இருந்தார்.

 

"பேர்லாம் சொல்லாதீங்க சார்.. ஹீ ஈஸ் அவர் சர்க்கிள் ஹெட்"

 

"டஷ்ன்ட் மேட்டர்.. உன் பேரென்னடா குழந்தே"

 

சொன்னேன்.

 

"உன்னைப் பாத்துருக்கேனோ முன்னாடி?"

 

"எனக்கு எப்படி தெரியும்.. ஆனா, உங்களை நான் பாத்தது இல்லை".

 

அவரை மாதிரியே கூத்தாநல்லூரில் குறி சொல்லும் ஒரு மாந்திரீகர் இருப்பார் என்று முதல் சந்திப்பிலேயே கூறத் தயக்கமாக இருந்தது.

 

"நான் உள்ளே போகலாமா?"

 

அப்போது தான் சின்னபாலு எங்களைப் பார்த்துக் கொண்டே, ஒரு ஹோம்லோன் ப்ரபோசல் எடுத்து உள்ளே கையெழுத்து வாங்கச் சென்று இருந்தார்.

 

"கொஞ்சம் இருங்க சார்.. உள்ள ஆள் இருக்கு"

 

"அது என்ன கக்கூஷா.. உள்ள ஆள் இருந்தா போகப்படாதுங்கறதுக்கு".

 

அவர் எப்படியும் சிரிப்பார் என்று ஊகித்து, நான் என் உபகரணங்களை மேசையின் மறுபுறம் நகர்த்தினேன். ஆனாலும், போதிய அவகாசமின்மையில் சிறிது சேதாரம் ஏற்பட்டு விட்டது.

 

அவர் அதற்கெல்லாம் கவலைப்படவில்லை.

 

"ஏண்டா... அம்பி.. இங்கே வாஷ்பேஷின் எங்க இருக்கு?"

 

முதலிலேயே கேட்டிருந்தால் சேதாரத்திலிருந்து தப்பித்து இருக்கலாம்.

 

போனவர், முழுவதும் துப்ப மனமில்லாமல், திடப் பதார்த்தங்களை கன்னத்தில் ஒரு ஓரமாக அதக்கிக் கொண்டு வருவதற்கும், சின்னா உள்ளே இருந்து வருவதற்கும் சரியாக இருந்தது.

 

நான் துரிதமாக வளைந்து ஓடி, சின்னாவை இடைமறித்து, நாகராஜனைக் காண்பித்து

 

"சார்.. நாகராஜன்னு மெட்ராஸ்லேருந்து ஒரு ஸ்கேல் டூ ஆஃபீசர் வந்திருக்கார்.. இங்கே ஜாயின் பண்றாராம்..தலைவரைப் பார்க்கணுமாம்".

 

சின்னா நாகராஜனை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்து விட்டு, "இதுவா..‌ ஐயய்யோ.. பாத்தா சாம்பிராணி போட வந்த ஆள் மாதிரி இருக்கு.. "

 

"அதுக்கென்ன பண்றது.. நீங்க தான் இவரை உள்ளே விட்டுட்டு வரணும்"

 

"ஆமாம்.. இதான் வேலை எனக்கு.. என்னமோ புதுசா கல்யாணம் பண்ண பொண்ணை சோபன அறைல விட்டுட்டு வர மாதிரி சொல்ற.. என்னால முடியாது.. என்னைக் கொலையே பண்ணிடுவார் அவர்".

 

ஆனாலும், வேறு வழியில்லாமல் உள்ளே சென்று இன்னார் வந்திருக்கார் என்று கூற, ".. குட்.. சென்ட் ஹிம்" என்று உத்தரவாகியது.

 

நாகராஜனை உள்ளே அனுப்பி விட்டு, வாசலிலேயே சின்னா நின்று கொண்டார்.

 

"ஏன் சார்.. அங்கயே நிக்கறீங்க?"

 

"எப்படியும் ஒரு அலறல் சத்தம் கேக்கும்.. அங்கேந்து ஓடி வரணும்.. அதுக்கு இங்கயே நின்னுக்கறேன்" என்று சொல்லி வாயை மூடுவதற்குள் "சின்னா" என்று நீளமாக அலறல் கேட்டது.

 

சின்னா தலையில் அடித்துக் கொண்டு உள்ளே சென்றார்.

 

அங்கே நாகராஜன் அசட்டு சிரிப்புடன் நாற்காலியைப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டு இருந்தார்

 

உள்ளே சென்ற சின்னாவிடம் தலைவர்,"சின்னா.. இந்த மனிதர் நம் அலுவலகத்தில் இன்று சேர்வதற்காக வந்திருக்கிறார். அவரது ஆவணங்களையும் நமது தஸ்தாவேஜூகளையும் சரிபார்த்து விட்டாயா.. இந்த மனிதரிடம் உனக்கு முன்பே அறிமுகம் உண்டா?"

 

சின்னபாலு உடனே பதறி, "ஐயையோ.. எனக்கு ஒண்ணும் தெரியாது.. உங்கள் சிஷ்யப்பிள்ளை தான் அனுப்பினான்" என்று என்னை மாட்டி விட்டார்.

 

தலைவர் நாகராஜனிடம், "பெரியவரே.. காலில் இடித்துக் கொள்ளாமல் ஜாக்கிரதையாக வெளியில் சென்று, சோஃபாவில் அமர்ந்து சிரமபரிகாரம் செய்து கொள்ளுங்கள்.. நான் மறுபடியும் கூப்பிடுகிறேன்.. எங்களுக்குள் ஒரு சிறு பஞ்சாயத்து பாக்கி இருக்கிறது".

 

அவர் வெளியேறியவுடன் பாலுவிடம், "என்ன தைரியம் இருந்தால் என் அறைக்குள் இந்த மாதிரி அமேசான் காட்டில் இருந்து தப்பிய அகதியை அனுப்புவாய்"

 

"சார்.. நான் சற்று முன் சொன்னதை நீங்கள் கவனிக்கவில்லை.. உங்கள் சிஷ்யப்பிள்ளையின் சதி இது.. அவனிடம்தான் இந்த மனிதர் நெடுநேரம் உல்லாசமாகப் பேசிக் கொண்டு இருந்தார்.."

 

"உடனடியாக அவனை இழுத்து வா"

 

சின்னா கதவைத்திறக்கும் போது அவர் சத்தமாக, "இன்று அந்த சிறுவனின் உடுப்புகளைக் கழட்டாமல் விடுவதில்லை" என்று இறைவது எல்லோருக்கும் கேட்டது.

 

சின்னா என்னை சத்தமாக அழைத்தவுடன் எல்லோருக்கும் ஒரு பெரிய புன்னகை ஒரே நேரத்தில் தோன்றி மறைந்தது.

 

நான் எழுந்து வழக்கம் போல ஒரு நோட்டுப் புத்தகம் எடுத்துக் கொண்டேன். என் போதாத காலம், என் பதட்டத்தில்  பேனா கீழே விழுந்து விட்டது. பக்கத்து இருக்கையில் இருந்த இளங்கோவன் கையில் இருந்த பேனாவைப் பிடுங்கிக் கொண்டு உள்ளே விரைந்தேன்.

 

நுழையும் தருணம் கையில் இருந்த பேனாவைப் பார்த்து தூக்கி வாரிப் போட்டது. அதுவொரு மரக்கட்டைப் பேனா. அதை இளங்கோவன் எழுதுவதற்குப் பதிலாக பாக்கி அனைத்து விஷயங்களுக்கும் உபயோகப்படுத்துவார் போலிருக்கிறது.

 

இப்போதுகூட அவரிடம் வலுக்கட்டாயமாகப் பிடுங்கும் போது, அதால் தன் தலைமுடியைக் கோதிக் கொண்டுதான் இருந்தார். இளங்கோவன் எப்போதும் ஏதோவொரு ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதாகவே தென்படுவார்.

அவ்வமயங்களில் அவர் கையில் இருப்பவற்றைக் கடிப்பது வழக்கம் என்பது அவரது விரல்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். பேனாவையும் கடிப்பார் என்பது அதன் குதறப்பட்ட தலையைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மாடர்ன் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் வடித்த சிலையின் தலை போல் இருந்தது அது. சிரச்சேதம் என்பது இதுதான் போலும்.

 

மாற்று பேனாவை இரவல் வாங்க நேரமில்லை. தலைவர் உச்சஸ்தாயியில் இறைவது சார்த்திய கதவிற்குப் பின்னாலும் கேட்டது. நான் கதவைத் தட்டி நாசூக்காக உள்ளே நுழைந்தேன்.

 

சின்னா நமுட்டுச் சிரிப்பில் என்னிடம் "வா.. வா.. இன்னிக்கு உன் பேன்ட்டைக் கெழட்டறேன்னு சொல்லியிருக்கார் சார்"

 

தலைவர் கோபமாக,"சின்னா.. வார்ன் யூ.. யூ ஷூட்ன்ட் ஹேவ் அலர்ட்டட் திஸ் ஸ்டுபிட் ஃபெல்லோ இன் டமில்"

 

சின்னா அவரிடம்‌ "நீங்கள் அவனைப் பற்றிக் கூறியதைத்தான் நான் அவனிடம் கூறினேன்" என்றார்.

 

இப்போது அவர் என் கையில் இருக்கும் பேனாவைப் பார்த்து விட்டார்.

 

"தேர் ஈஸ் அன் எவிடன்ஸ்... தேர் ஈஸ் அன் எவிடன்ஸ்.. ஸீ ஹிஸ் ஹான்ட்ஸ்.. டர்ட்டி ஃபெல்லோ"

 

பாலுவும் என் பேனாவைப் பார்த்து விட்டு,"ஏண்டா.. உனக்கு வேற பேனாவே கெடைக்கலியாடா" என்றார்.

 

எங்கள் தலைவரின் அறைகூட ஜேம்ஸ் பாண்ட் படத்தில் "எம்"மின் அறை போல இருக்கும். அவருக்குப் பேனா சேகரிப்பதில் அலாதி பிரியம். மிகமிக அழகான விலை உயர்ந்த ஒரு பீங்கான் கோப்பையில் விதம்விதமாகப் பேனாக்களை அலட்சியமாக வைத்திருப்பார்.  

 

நான் பார்ப்பதை உணர்ந்த அவர் என்னிடம் "இதில் இருப்பவை பெரும்பாலும் வெளிநாட்டு இறக்குமதி பேனாக்கள்.. அதோ கருநீலத்தில் இருப்பதை தொடாமல் பார்.. அதுதான் இருப்பதிலேயே விலை குறைந்தது. ஆயிரத்து ஐநூறு ரூபாய்.. நான்கு வருடங்கள் முன் சிங்கப்பூரில் வாங்கியது".

 

அதே மாதிரி ஒரு பேனாவை ரஜாக் என்று என் அப்பாவின் நண்பர் ஒருவர், அலர்ஜியில் ஜூரம் வருகிற‌ அளவுக்கு வாசனைத் திரவியத்தில் குளித்து விட்டு வருபவர், பர்மா பஜாரில் வாங்கியதாகக் கொடுத்து விட்டுப் போனார். அவர் வசதிக்கு அவரால் ஐந்து ரூபாய் பொறுமான பொருள்தான் கொடுத்திருக்க முடியும். இதை நான் சபையில் கூற முடியாது. கூறினால் என்னை தேசப்ரஷ்டம் செய்து அனுதினம் புலிகள் கதவைத் தட்டும் பொம்பூர்ணா என்ற குருக்ஷேத்திரத்திற்கு அனுப்பி விடுவார்.

 

 

அவர் மேலும் சின்ன பாலுவிடம், " இவன் என் அறையின் புனிதத் தன்மையைக் கெடுத்து விட்டான்.. இவனை முதலில் என் கண் முன் இந்த பேனாவை சன்னல் வழியாக வெளியே எறியச் சொல்.. கணவன் மனைவி இருவரும் வேலை செய்கிறார்கள்.. அறுபது காசுக்கு ஒரு மரப்பேனாவை உபயோகிக்கிறான்.. இவனை நம்பி ஒட்டுமொத்த மஹாராஷ்டிராவை ஒப்படைத்து இருக்கிறேன்.. வெட்கம்" என்றார்.

 

சின்னா என்னிடம்,"மொதல்ல அதை வெளியில் எறி.. கருமம்"

 

நான் பலகீனமாக,"சார்.. இதை நான் எறிய முடியாது"

 

"ஏன்?"

 

"இதை அவசரத்திற்கு நான் இளங்கோவனிடம் இரவல் வாங்கி வந்தேன்"

 

".. மை காட்" என்றார் தலைவர்.

 

"போயும் போயும் அந்த கேடுகெட்டவனிடம் பேனா, அதுவும் கட்டைப்பேனா இரவல் வாங்கி வந்திருக்கிறாய்.. கேவலம்.. படுகேவலம்.. முதலில் அதை என் கண் முன்னால் அப்புறப்படுத்து"

 

"இது அடுத்தவர் பொருள்.. இரவல்.. நான் எப்படி எறிவது.. அவர் கேட்டால்?"

 

"கடுக்கி ஸ்டேஷன் வாசலில் விரல்கள் இல்லாத நிறையப்பேர் முதுகு சொறிய இதை வைத்து இருப்பார்கள்.. அங்கு போய் தானமிட்டு வாங்கி உன் நண்பனுக்குக் கொடு"

 

நான் "அதெல்லாம் முடியாது.. இதை இளங்கோவனிடம் கொடுத்து விட்டு வந்து விடுகிறேன்" என்று சாக்கு வைத்து கிளம்புவதற்குள், தலைவர் சின்னாவிடம்,"அவன் தப்பிக்க முயல்கிறான்.. பிடி அவனை" என்றார்.

 

நான் வேறுவழியில்லாமல் பேனாவை வெளியே எறிந்தேன்.

 

தலைவர் சின்னாவிடம், "சின்னா.. உங்கள் ஊரிலிருந்து ஒரு தகுந்த புரோகிதரை வரவழைத்து இந்த அறையை பழையபடி புனிதமாக்கும் ஏதேனும் வழிபாடு செய்" என்றார்.

 

சின்னபாலு சிரித்துக் கொண்டே "ஆகட்டும்" என்றார்.

 

என்னிடம், "வெளியே ஒரு நபர் சோஃபாவில் அமர்ந்து இருக்கிறாரா?".

 

"ஆம்.. நாகராஜன்.. நம் அலுவலகத்திற்கு ட்ரான்ஸ்ஃபரில் மெட்ராஸில் இருந்து வந்திருக்கிறார்"

 

"எதிர்பார்த்ததுதான்..

 

உனக்கு அவரை எத்தனை வருடங்களாகத் தெரியும்?"

 

"வருடங்களா? கடந்த பதினோரு நிமிடங்களாகத்தான் தெரியும்"

 

"முழுப் பொய்.. அவரை உனக்கு நன்றாகத் தெரியும்.. சின்னாநீ அவரோடு அளவளாவிக் கொண்டு இருந்ததை பார்த்து இருக்கிறான்"

 

நான் சின்னாவை எரித்து விடுவது போல் பார்த்தேன்.

 

"வாய்ப்பே இல்லை.. அந்த நபரை எனக்குத் தெரியவே தெரியாது.. சின்னா மேல் சத்தியம்"

 

சின்னா பதறி,"ஏண்டா.. நான்தான் கிடைச்சேனா உனக்கு"

 

"சமீப காலமாகவே உன் சங்காத்தங்கள் சரியாக இல்லை.. அந்த வீணாய்ப்போன இளங்கோவிடம் அதிகம் இழைகிறாய்.. இப்போது இந்த நபர்"

 

"இளங்கோவனுடன் உணவு உண்பது உண்மை. இந்த நபரை எனக்குத் தெரியாது.. எனக்குத் தெரியாது.. எனக்குத் தெரியாது. நீங்கள் என்மீது செலுத்தும் அன்பினைக் குலைக்க சின்னா செய்யும் சதி"

 

"பல்லை உடைப்பேன்" என்றார் சின்னா.

 

தலைவர் கொஞ்சம் சமாதானமாகி சின்னாவிடம்,

"சின்னா உன்னிடம் ஒரு பெரும் பொறுப்பை ஒப்படைக்கிறேன்"

 

"சொல்லுங்கள் சார்"

 

"நீ அந்த நபரை அழைத்துச் சென்று நன்றாக சுத்திகரித்து மனிதராக மாற்று... அதற்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.. என்னிடம் பணம் கிடையாது.. நீ பணக்காரன்.. உன் மார்க்கெட் யார்டு வீட்டை விற்றாலும் பரவாயில்லை.. இந்த மனிதரை நான்கு நாட்கள் செலவழித்து, தாடியை மழித்து, தலையைத் திருத்தி, வெற்றிலையை அபகரித்து, புதுச் சொக்காய் அணிவித்து, ஜோடுகளில் அவரை நுழைத்து, ஒரு குறைந்தபட்ச மனிதராக செப்பனிட்டு அழைத்து வா.. ஒத்தாசைக்கு இந்த சிறுவனையும் வைத்துக் கொள்.."

 

"சரி"

 

"சின்னாவால் செலவழிக்க முடியாவிட்டால் நீயும் பொருளுதவி செய்யலாம்"

 

"என்னால் முடியாது... நானே பூனாவில் வீட்டை வாங்கிவிட்டுக் கடனை செலுத்த முடியாமல் திணறிக் கொண்டு இருக்கிறேன்"

 

"உன் நண்பன் விளையாட்டுக்குக் கூட பிடி கொடுக்க மாட்டேன் என்கிறான். ..அடேங்கப்பா.. மதறாசிகள் கஞ்சூஸ் என்பது தெரியும்.. அழுக்கானவர்கள் என்பதும் தெரியும்... ஆனால் மிஸ்டர் நாகராஜன் போல எங்கள் கல்கத்தாவில் ரயில்வே ப்ளாட்பாரத்தின் அடியில் குடியிருப்பவர்கள் கூட இருக்க மாட்டார்கள்"

 

சின்னாவும் நானும் பகீரதப் பிரயத்தினம் செய்து நாகராஜன் என்னும் நாகுவை ரிப்பேர் செய்தோம். என்ன முயன்றும் அவரது வெற்றிலை புகையிலையை நிறுத்த முடியவில்லை.

 

நாகுவே எங்களிடம், "ஏண்டா.. ரெண்டு பேரும் என்னைக் கொல்றீங்க? நான் பாட்டுல தேமேன்னு மெட்ராஸ்ல கெடந்தேன்.. போறாத காலம் உங்க ரெண்டு பேர் கிட்டயும் மாட்டிண்டு ப்ராணன் போறது"

 

சின்னா அவரிடம், " நாகு சார்.. உங்களை ஏன் சார் தள்ளாத வயசுல இவ்வளவு தூரம் நாடு கடத்தியிருங்காங்க? யார் மேலயாவது துப்பிட்டீங்களா?"

 

"ATMக்குள்ள துப்பிட்டீங்களா சார்"

 

"டேய்...‌என்னை யாருன்னு தெரியாம அனத்திண்டு இருக்க"

 

"சார்.. பெரிய ஆள் போலருக்கே" என்றார் சின்னா.

 

"எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், இவர் அமெரிக்கா போகவே முடியாது"

 

"ஏன்"

 

"இவர் அங்க போயி வொயிட் ஹவுஸ் மேலத் துப்பி வச்சார்னா, அது "ரெட் ஸ்கொயர்" ஆயிடும்.. மூன்றாவது உலக மகா யுத்தம் சம்பவிக்க அந்த ஒரு காரணம் போதும்" என்றேன்.

 

"போறும்.. வழியறது.. தொடைச்சுக்கோ" என்றார் நாகு, அது ஏதோ அவருடைய ஏகபோக உரிமை போல.

 

வந்த சில நாட்களிலேயே நாலைந்து வார்த்தைகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு, வருகிறவர் போகிறவர்களையெல்லாம் கலாய்த்து தன்னை கம்ப்யூட்டர் ஞானியாக ப்ரகடனம் செய்து கொண்டார்.. ஆனாலும் அவருக்கு கம்ப்யூட்டர் எல்லாம் தெரியாது என்று  தெரிந்து விட்டது.

 

ஒருமுறை எங்கள் கம்ப்யூட்டர் லாபை திருத்தி அமைக்க சிலரைக் கூப்பிட்டு இருந்தோம். எங்கள் மேலதிகாரி ஆனந்தன் உந்துதலில் எங்களோடு நாகுவும் இருந்தார். நாங்கள் எங்கள் நெட்வொர்க் வயர்களை ஓரிடத்தில் முடுக்கி ஒரே பேனலில் வைக்க விவாதம் நடத்திக் கொண்டிருந்த போது, நாகு அவனிடம், அதெல்லாம் சரி, நீங்கள் கேஸ்டர் உபயோகிப்பீர்களா என்று புகையிலைச் சாற்றில் முக்கிக் கேட்க, எங்களுக்குப் புரியவில்லை

 

வந்தவர் ஒருக்கணம் திகைத்து, வேண்டுமானால் தருவோம் என்றார்

 

நாகு வெற்றிப் புன்னகையில் எங்களைப் பார்த்து புகையிலை கமழ இதுகூடத் தெரியாதா என்று புன்னகைத்தார்.

வந்தவர் கிளம்ப, ஆனந்தன் "நல்லதாப் போச்சு.. விஷயம் தெரிஞ்சவர் ஒத்தர் நம்மளோட இருக்கறது எவ்வளவு நல்லதா இருக்கு?"

 

நாகு வாய் தளும்பி கொப்பளிக்க விரைந்த அந்தக் கணம் போதுமானதாக இருந்தது, எங்கள் ஈடீபி அங்கத்தினர் ரமணிக்கு. அவர் பூனாவில் பிறந்து வளர்ந்த தமிழ்க் காரர்.‌ அவர் வந்தவரை அழைத்து, நாகு என்ன கேட்டார் என்று மராட்டியில் கேட்டார்.

 

அவர் சிரித்து,"பெரிதாக ஒன்றுமில்லை.. நீங்கள் கொடுக்கும் பேனலில் கீழே கேஸ்டர் எனப்படும் உருளைகளைக் கொடுப்பீர்களா" என்று கேட்டார். ட்ராலி போல நகர்த்துவது சுலபம் அல்லவா?

 

"அட.. அபிஷ்டு" என்றார் ஆனந்தன்.

 

எங்கள் மண்டல மேலாளர் வெளியூர் பிரயாணங்களில் முறை வைத்துக் கூட்டிச் செல்வார்.‌ அந்த முறை நாகு.

 

எங்கள் தலைவர் விடிகாலை ஐந்து மணிக்கே எழுந்து, அரை ட்ராயர், டீ சர்ட், கரும்பழுப்பு நிற‌ கைத்தடி பித்தளை பூண்போட்டது சகிதம் பத்து கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொள்வார்.‌அவர் உடல் வாகிற்கு அசுர வேகத்தில் செல்வார். நாகு தெரியாமல் மாட்டிக் கொண்டார்.‌

 

அவர் போதுகிற நேரம் அவுரங்காபாத்தில் சீராம் என்ற தமிழ்க்காரன் சுடச்சுட வந்திருந்தான். ஒரு அசட்டு தைரியத்தில் இருவரும் தலைவருடன் கிளம்ப, நாகு புஸ் புஸ்ஸென்று பெரிதாக மூச்சு விட்டு, ஓரிடத்தில் அமர்ந்து, மற்ற இருவரையும் போகச்சொல்லி குறுக்கு வழியில் சேர்ந்து விடுவதாகக் கூறினார்.‌

 

அவர் பிறவியிலேயே முதன்முறையாக அவுரங்காபாத் வந்திருக்கிறார்.

 

கொஞ்ச நேரத்தில் சீராமுக்கும் முடியவில்லை.‌எங்கியாச்சும் ஒரு டீ குடிக்கலாம் என்று வெட்கத்தை விட்டுக் கேட்க, அவர் அதை மிகவும் ரசித்து, வா என்று அவனை அழைத்துச் சென்று இருவரும் ஒரு டீக்கடையில் டீ அருந்தும் போதுதான் நாகு வரவில்லை என்று உணர்ந்தனர்.

 

தலைவர் பரபரப்பாகி விட்டார்.‌ உடனே சீராமிடம் ஃபோன் செய்யச் சொன்னார். சீராம் இருமுறை முயன்று மூன்றாம் முறை நாகு கிட்டினார். ஆட்டோ ரிக்ஷா சப்தம் கேட்டது. நாகு தன் நடைப்பயணத்தை ஆட்டோவில் முடித்திருந்தார்.

 

நான் என்னுடைய ப்ரயாணங்களுக்கு யாரையும் கூட்டிப் போவது வழக்கம் இல்லை. காரணம் என்று பெரிதாக எதுவும் இல்லை. என் வேலைக்கென்று எனக்கான பாணி ஒன்றை நான் கண்டுபிடித்து வைத்திருந்தேன். என்  மனம், வேகம், கற்பனை, நேரம் என்று எனக்குள் ஒப்புமைப் படுத்தி வைத்து இருந்தேன். அதைத் தவிர, இரவு தங்கும் போது தனிமையில் இருக்கலாம். யாரையாவது நாகு மாதிரி கூட்டிப் போனால் வேலை கெடுவது மட்டுமல்லாமல், அறையையும் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும்.

 

அந்த முறை என்னுடையது சற்றே நீண்ட பயணம். சதாரா, சாங்கிலி, இச்சாலக்கரஞ்சி மற்றும் கோலாப்பூர் சென்று வரவேண்டும். கிட்டத்தட்ட பத்து நாட்கள். மூன்று இடங்களில் மானுவல் கிளைகளை கம்ப்யூட்டருக்கு மாற்றும் பணி. கோலாப்பூரில் மட்டும் சில மாறுதல்கள் செய்ய வேண்டும். அப்போது CBS அமலுக்கு வராத கோபால் மற்றும் தாஸ் மேடையில் இருந்த TBC என்ற‌ மென்பொருள். நாவல் நெட்வேர் செர்வரை தயாரித்து, பிற்பாடு மற்றவைகளை உட்புகுத்துதல் வேண்டும்.

 

முதல் நாள் நாகு பெரிதாக கூப்பாடு போட்டு, வேறு வழியில்லாமல் அவரையும் கூட்டிப் போகச் சொல்லி விட்டார் ஆனந்தன்.

 

என்ன இருந்தாலும் Through proper channel வழியாக வந்தாத்தான் காரியம் நடக்கிறது என்றார் நாகு.

 

அதன் பலன்தான் இதோ ஸ்வர்கேட் நிறுத்தத்தில் அனுபவிப்பது.

 

அடுத்த அரைமணியில் சதாரா வண்டி வந்தது. அவசரமாக ஏறி‌ இரண்டு இருக்கைகளாகப் பிடித்து அமர்ந்தோம். உடனே வண்டி கிளம்பி விட்டது.

 

அப்போது தான் கவனித்தேன், நாகுவின் லக்கேஜ் இல்லாததை.

 

"ஐயையோ... உங்க லக்கேஜ் எங்க சார்? கீழயே விட்டுட்டீங்களா?"

 

"(கொழகொழவென்று) எதுக்குடா ழக்கேஜ் எல்லாம்.. இங்கே இருக்கற ஷதாரா போயிட்டு வரப்போறோம்.. ழாத்திரி வந்துழ மாட்டமா?"

 

"என்னது ராத்திரியா? நான் நேத்திக்கி படிச்சு படிச்சு சொல்லலை? ஒரு வாரமாவது ஆகும். ட்ரெஸ்ஸல்லாம் எடுத்துக்கணும்னு?"

 

"ஷொன்னடா கண்ணா? ஆனா, நீ வெழுமன கம்பூட்ரைஷேஷனுக்குத் தான போழ? எவ்ளோ நேழம் ஆழப்போழது? இந்தக் கைல ஷீடி எடுத்து விட்டேன்னா அந்தக்கைல ஆயிடப் போழது. இங்கே ஒருதரம் தடதடன்னு தட்டணும்..‌அங்க ஒருதரம் படபடன்னு தட்டணும். முடிஞ்சு போச்சு.. இதுக்கு எதுக்கு ஒழு வாழம்?"

 

"இப்படித் தான் ஆனந்தன் சார்கிட்டே சொன்னீங்க போலருக்கு."

 

"எஷ்"

 

"நாம என்ன அப்பளம் இடவா போறோம்.. படபடன்னு இடறதுக்கு?"

 

"ஷின்னப் பயடா நீ.. நான் பாட்டுக்கறேன் வா"

 

"அப்ப நான் அடுத்த ஸ்டாப்பிங்க்ல எறங்கிக்கறேன். நீங்க எல்லா எடத்துலயும் போயி லெஃப்ட் ரைட்டு போட்டுட்டு பத்திரமா சீடியக் கொண்டு வந்துருங்கோ"

 

"அடேடே.. பொஷூக்குனு கோச்சுக்கறியே.."

 

"பின்ன? இது என்ன வேலைன்னு தெரியுமா? முன்னபின்ன பாத்திருக்கீங்களா? எப்ப பார்த்தாலும் கோக்கு மாக்கா பேசறமாதிரி உளறிண்டே இருந்தா ப்ராஞ்செல்லாம் கம்ப்யூட்டரைஸ் ஆயிடுமா? இவ்வளவு காலமா பண்ணிண்டு இருக்கற நாங்கள்லாம் கேனப்பயலுகளா"

 

"கோஷ்ஷூக்காதடா அம்பி.. என் அனுபவத்தை வெஷ்ஷூ ஷொல்றேன்"

 

"என்ன அனுபவம்.. எந்த ப்ராஞ்சு பண்ணினீங்க... அந்த ப்ராஞ்சை இப்பவே  கூப்பிடுங்க.. நீங்க என்ன பண்ணினீங்கன்னு தெரியணும்"

 

நாங்கள் இருவரும் புரியாத பாஷையில் சண்டையிடுவது பஸ்ஸில் மற்ற அனைவருக்கும் வேடிக்கை ஆக இருந்திருக்கும்.

 

சதாராவில் போய் இறங்கி ரூம் எடுத்து, கிளைக்கு சென்றது தான் தாமதம். அரசுக்கு எதிராக மகாராஷ்ட்ரா பந்த் அறிவித்து விட்டார்கள்.

 

ஒரு கடை இல்லை. கிளை மேலாளர் இரவுக்கு உப்புமா கொண்டு வந்து கொடுத்தார். நாகுவிடம் மாற்றுத் துணி இல்லை. என்னிடம் மாற்று வேட்டி இருக்கிறதா என்றார். நான் இல்லை என்று நிர்தாட்சண்யமாகச் சொல்லி விட்டேன். வேட்டி இருந்தால் மட்டும் ஆச்சா? உள்ளாடைக்கு என்ன செய்வது? பேசாமல் இன்டியன் எக்ஸ்பிரஸை மடிச்சு கட்டிக்குங்க".

 

 ஹோட்டல்காரன் துடைத்துக் கொள்ளக் கொடுத்த டர்க்கி டவலையே உடுத்திக் கொண்டு அந்த இரவைக் கடத்தினார்.  "இதுக்குத்தான்டா எதையும் through proper channel வழியா வரணும்கறது."

 

"நீங்க டர்க்கி டவல்ல மல்லாந்து கிடக்கறதுக்கும் through proper channelக்கும் என்ன சம்பந்தம்?"

 

"விஷயம் இல்லாமயா இருக்கு? நீ நாலட்ஜூ உள்ளவன். நான் தற்குறி.‌ உன் பேச்சைக் கேட்டு இருக்கணுமா வேண்டாமா. அதுக்காகத்தான் through proper channelனு அனுபவஸ்தன் உன் பேச்சைக் கேட்டுருக்கணும்னு சொல்றேன்"

 

"இதோட பதினேழு தடவை through proper channelனு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறியாச்சு.. எனக்கு ஒரு எழவும் புரியலை.. இன்னொரு தடவை இதையே சொன்னீங்கன்னா எனக்கு பைத்தியம் புடிச்சிடும்".

 

"சரி... சொல்லலை... சொன்னா உனக்குக் கோபம் வருதுன்னு சொன்னப்பறம் நான் மறுபடியும் சொல்வேனா? ஆனா, அனுபவஸ்தன் நான் சொல்றேன் கேட்டுக்கோ.. ஒரு நாள் இல்லேன்னா ஒருநாள், இதுக்கு அர்த்தத்தை நீயா கண்டுபுடிச்சுப்பே... அப்போ என்னை நெனச்சுக்கோ..‌‌‌‌‌‌‌‌Good night ".

 

இரவு உப்புமா அவருக்குக் கடை கொள்ளவில்லை. இரண்டு முறை மூன்று முறை எழுந்து வெற்றிலை போட்டுக் கொண்டார். விடியற்காலை பார்த்த போது வெறும் வெற்றிலையை மெல்ல ஆரம்பித்திருந்தார். பாவமாக இருந்தது. வேறு தின்பண்டம் எதுவும் வாங்கிச் செல்லவில்லை. 

 

மறுநாள் முழுக்க இடைவிடாது வேலை. அப்போது தான் நாகுவிற்கு முதுகு ஒடிய வேலை செய்து பழக்கம் இல்லை என்று தெரிந்தது. மதியம் மறுபடியும் யாரோ உப்புமா. நாகுவிற்கு உமட்டிக் கொண்டு வந்து விட்டது. 

 

இப்படியே இரண்டு நாட்கள் கழிந்து மூன்றாவது நாள் வந்து விட்டது. உள்ளாடை அறுக்க ஆரம்பித்து விட்டது.‌ அதே பான்ட். அதே சட்டை.‌ எல்லாம் அதே அதே. மூன்றாவது நாள் நாகராஜன் நாற'ராஜன் ஆகிவிட்டார்.

 

மதியம் மறுபடியும் உப்புமா. நாகு அதைத் தொடவில்லை.‌ அதற்குள் ஒட்டுமொத்த வெற்றிலையையும் வேறு மேய்ந்து விட்டார். ஓரிரு இலைகள் தான் பாக்கி. ஆச்சர்யகரமாக அவரே  அவைகளைக் குப்பையில் எறிவதை நானே பார்த்தேன். அதன்பின் அவர் வெற்றிலை போடுவதை நிறுத்தி விட்டார்.

 

(2)

 

பூனாவில் இருந்து நாசிக் செல்வது அற்புதமான அனுபவம். நிறைய குறுமலைகளைத் தாவித்தாவி பேரூந்தில் செல்வது சுவையாக இருக்கும். அதுவொரு அழகான மழைக்காலம். சங்கம்னேர் என்ற நம்மூர் பவானியின் கூட்டுத்துறை போன்ற இடத்தைத் தாண்டி அவிசாரி காட் என்ற அனர்த்தமான மலைப்பாதையும் அது அணைந்து போகும் ஆழமான பள்ளத்தாக்கும், அதைச் சுற்றி இருக்கும் மலைகளில் பெருக்கெடுத்து வழிந்தோடும் அருவிகளும் பேரானந்த அனுபவம். ஐரோப்பிய நாடுகளில் இவ்வகை அருவிகளை மறைத்து, கதவுகள் இட்டு, காசு வசூலிக்கிறார்கள். நாம் திறந்த வெளியில் விசுவரூப தரிசனம் தரும் அழகைக் கூடிய வரை மாசுபடுத்துகிறோம்.

 

நான் நாசிக்கில் காலடி வைத்த போது ஊரே வெள்ளக்காடாக இருந்தது. கோதாவரி யாரோ துரத்துவது போல அடித்துப் பிடித்து ஓடுகிறது. பஞ்சவடியின் ராம்குண்ட் என்னும் உயரமான ராமர் கோயில் நீரில் அநேகமாக மூழ்கி, தலையை உயர்த்தி சுவாசத்திற்குப் போராடிக் கொண்டு இருந்தது.

 

மறுகரையில் காலாராம் கோயில். பேரழகாய் ராமர் தன் பரிவாரங்களுடன். எதிர்த் தூணில் அனுமார். அவரது கண்கள் உயிரோடு இருப்பவரின் கண்கள் போலவே இருக்கும். எந்த நேரமும் நம்மைப் பார்த்து கண் சிமிட்டுவாராயிருக்கும்.

 

பாலத்தைக் கடந்து அக்கரைக்குப் போக சாத்தியம் இல்லை. காலாராம் கோயில் அனுமார் காலடிவரை தண்ணீர் நிரம்பி விட்டது. அனுமாரை யாராலும் மூழ்கடிக்க முடியாது. கோதாவரி என்ன கங்கைக்கே அந்த சக்தி கிடையாது என்று என்னுடன் வந்த வங்கி அதிகாரி கூறினார்.

 

 

நான் எப்போதும் தங்கும் ஹோட்டல் ஊர்ப்பயணம் தடைப்பட்டதால் தேங்கிய பயணிகளால் நிரம்பிக் கிடந்தது. நல்ல வேளையாக கோதாவரிக் கரையில் பஞ்சவடியில் யாத்ரி நிவாஸில் நாசிக் மெடிக்கல் காலேஜ் டீனாக இருந்து உத்யோகத்தைப் பாதியில் விட்டு விட்டு தோசைக்கடை வைத்திருந்த கனவான் கிருபையில் இடம் கிடைத்தது. அவரது ஹோட்டலில் நாற்பத்தி ஆறு வகையான தோசை கிடைக்கும். அதிலும் சீஸ் தோசை என்ற‌ ஒரு வகைக்கு மட்டுமே நாக்கைத் தொங்கப் போட்டபடி காத்துக் கிடக்கும் பெருங்கூட்டம். பெரும்படிப்பு படித்து விட்டு

அரசின் உயர் பதவியில் சம்பாதித்ததை விட‌‌ ஆறுபங்கு அதிகம் சம்பாதிப்பதாகக் கூறுவார் அவர்.

 

யாத்ரி நிவாஸ் ரோடுக்கு உள்ளடங்கி இருக்கும். ரோட்டுக்கும் ஹோட்டல் விடுதிக்கும் இடையே ஒரு சிறு கல்யாண மண்டபம் இருக்கும். அங்கு திருமணங்கள் நிகழ்வதில்லை. மண்டபம் தெற்கு நோக்கி இருப்பதற்கான‌ அசௌகரியம் அது. ஆனால், அங்கு எல்லா விதமான கண்காட்சிகளும் நடைபெறும்.

 

நான் அறையில் நுழைந்து சூடான வெந்நீரில் குளித்து அரைமைல் தள்ளி இருக்கும் கிளைக்குப் புறப்பட்டேன். ஹோட்டல் ரெஸ்டாரன்ட் மிகவும் ப்ரபலமானது. உடுப்பி.‌ இட்டலி அகலமாக பூப்போல இருக்கும். அதன் பிறப்பிடமான‌ சென்னையைப் போலல்லாது மகாராட்டிரத்தின் பெரு நகரங்களில் இட்டலி எப்போதும் கிடைக்கும்.

 

சாம்பாரில் ஏகப்பட்ட வெல்லம் போட்டு நம்மூர் ராகிமால்ட் மாதிரி இருக்கும். இந்த சுவை இடத்திற்கு இடம் மாறுபடும்.

 

ஆனந்தாஸ்ரமம் இருக்கும் வரோரா‌ என்கிற இடத்தில் இட்டலியை வெள்ளை சிமென்ட்டில் செய்வார்கள். தற்காலங்களில் கிரிக்கெட்டில் பயன்படும் வெள்ளை நிறப் பந்துகள் போல கீழே விழுந்தால் துள்ளும்.

 

வரோரா  சந்திரப்பூருக்கும் நாக்பூருக்கும் இடைப்பட்ட உச்சகட்ட விதர்பாவைச் சார்ந்தது. நான் பொதுவாக மராட்டியத்தில் பூனா தவிர்த்து வேறெங்கும் இட்டலி சாப்பிட மாட்டேன். அவர்களால் இட்டலியின் சாயலில் பண்டத்தைத் தயாரிக்க முடிந்ததே தவிர சுவையைக் கொண்டு வர முடியவில்லை.

 

ஆதலால் நான் எங்கு சென்றாலும் போஹா என்கிற அவல் உப்புமா தான். இதிலும் கடலைகள் போட்டு கரிவேப்பிலை பொரித்து ஓமப்பொடி தூவி நன்றாகவே இருக்கும். வயிற்றுக்கு ஒன்றும் செய்யாது.

 

வரோராவில் தங்கிய சமயம் நாகுவை அழைத்துச் சென்று இருந்தேன். அவருக்குப் பிரயாண களைப்பு. பஸ் மாறி பஸ் மாறி வரோரா வந்து சேர நாற்பத்தெட்டு மணி நேரங்கள் ஆகும்

 

நாகு போஹாவின் போஷாக்கைப் பார்த்து, எச்சில் ஊறி ரெண்டு ஸ்பூன் சாப்பிட்டு, என்னிடம் "என்னடா இது... நறுக்கு நறுக்குன்னு சக்கரையக் கொட்டி இருக்கான்?"

நான் அவரிடம்," இது ஒண்ணும்  புதுசு இல்லயே... நம்ம ஊர்ல ரவா உப்புமாவுக்கு சர்க்கரை தொட்டுக்கிட்டு சாப்பிடறது இல்லையா?"

 

"கரெக்டு... ஆனா அதுக்கு தனியா ஒரு ஸ்பூன் போட்டுப்போம்... இங்கே, அரைக்கிலோ சக்கரைய அஸாலட்டா போட்டு நிமித்தி இருக்கான்"

 

அதோடு மன்னித்து விழுங்கி இருக்கலாம். அவருடைய போதாத காலம், தண்ணீர் கொணர்ந்த பையனைக் கூப்பிட்டு "சைட் டிஷ்" ஏதேனும் உண்டா என்று கேட்டார். முதலில் புரியவில்லை. பிறகு நாகுவின் சேஷ்டைகளை நன்றாகக் கவனித்து, " ரஸ் ஹை" என்று கூறிவிட்டு, ஒரு நசுங்கிய‌ அலுமினிய பேசினைக் கொணர்ந்தான். அதில் புளிக் கரைசல் மாதிரி என்னமோ இருந்தது. நான் பண்டத்தை விட பாண்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, வேண்டாம் என்று கூறிவிட்டேன்.

 

நாகு போஹாவில் பாத்தி கட்டி "இதுல ஊத்து" என்று தமிழில் கூறினார். அவனே கொஞ்சம் பயத்துடன் "இவ்வளவு ஆகாது" என்று மராத்தியில் கூறினான்.

 

அவன் பயந்ததில் நியாயம் இருந்தது. அவன் கொணர்ந்த ரஸ் என்பது கிட்டத்தட்ட கழிப்பறை கழுவும் திராவகம் போல் இருந்தது. நானும் என் அபிப்பிராயத்தை நாகுவிடம் தெரிவித்து, திராவகத்தைத் தவிர்த்து போஹாவைப் பதவிசாக‌ விழுங்கி தொப்பையைத் தடவிக் கொண்டு வருமாறு சொன்னேன்.

 

அவருக்கே உரித்த வறட்டு வீம்பில் அவர் என்னை "சர்தான் போடா சின்னப் பயலே" என்று மறுதலித்தார்.

 

அவருக்கு பெரிய அளவில் பிடுங்கிக் கொண்டது. நாகுவைத் தகுந்த முறையில் செப்பனிடத் தகுதியான மருத்துவ வசதி வரோராவில் இல்லாததால், நாகுவை மரப்பாச்சி பொம்மை மாதிரி துணியால் சுற்றி, பூனாவிற்குக் கடத்திச் சென்று மருத்துவம் செய்ய வேண்டியதாகி விட்டது.

 

நாசிக்கில் இட்டலி சுமாராக நன்றாகவே இருக்கும். இதே ஹோட்டலில் சிறு மண்குடுவையில் அடைத்து தயிர் சாதம் இரவு உணவுக்குக் கிடைக்கும். கடுகு தாளித்து, திராட்சைகளும் சிலசமயம் மாதுளை முத்துக்களும் கலந்து நன்றாகக் குளிரூட்டப்பட்ட தட்பத்தில் கிடைக்கும்.

 

நான் காலை உணவை அருந்தி விட்டு வெளியே வந்தால் மண்டபத்தில் ஏகப்பட்ட பெட்டிகள் வந்து இறங்கின. ஏதோ கண்காட்சி போலும்.

 

நான் கிளையை அடைந்த போது, அதன் மேலாளர் ஜெயராம், முழங்கால் வரை கால்சராயை இழுத்து விட்டு, தன் சகாக்கள் உடன் கிளைக்குள் புகுந்து விட்ட நீரை வெளியேற்றிக் கொண்டு இருந்தார்.

 

"அடக்  கடவுளே... என்ன சார் இது?"

 

"வந்தாச்சா.. வெரி குட்... நீங்களும்‌ ஒரு துடைப்பத்தை எடுத்துக்குங்க... ஒரு கை கூடக் கெடச்சா அரைமணில க்ளீன் பண்ணிடலாம்"

"அடப்பாவமே... எப்படி சார் இவ்வளவு தண்ணி உள்ள போச்சு?"

 

"இதென்ன ப்ரமாதம்? நாலு நாள் மின்னாடி ஒரு சிறுத்தையே உள்ள வந்துடுச்சு... பேப்பர் பாக்கலியா நீங்க?"

 

"ஐயையோ.. அப்பறம்? "

 

"அப்பறம் என்ன? நாங்கள்லாம் தான் உயிரோட இருக்கோமே...‌‌அது மிரண்டு போய் இங்கே அங்கே தாவி வென்டிலேட்டர் வழியா எகிறிக் குதிச்சு ஓடிப்போச்சு"

 

தகாத நேரத்தில் நாசிக் வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டேன்.

 

இதன் நடுவில் ஒரு கடைநிலை ஊழியர் ஒரு மோட்டார் ஒன்றை எங்கிருந்தோ பீறாய்ந்து கொண்டு வந்தார்.

 

ஜெயராம் அவரிடம் இந்தியில், "இதை  விட சின்னதா கிடைக்கலியா? மூஞ்சூறு மாதிரி இருக்கு? இதை வெச்சு எவ்வளவு நாள்ல தண்ணிய‌ இறைக்கறது? இதைவிட நம்ம லோட்டாவே பெரிசா இருக்கும் போல இருக்கு"

 

அன்று மதியம் மூன்று மணிவரை துடைப்பமும் பக்கெட்டும் லோட்டாவுமாக முழுத் துப்புரவுத் தொழிலாளியாக உருமாறி கூடிய வரை தண்ணீரை வெளியேற்றினோம்.

 

உண்மையில் நான் அன்றே ALPM என்ற‌‌ உபகரணத்தில் இருந்து CBSக்கு முந்தைய மென்பொருள் தளத்திற்கு ஏற்றுமதி செய்துவிட்டு இரவே திரும்பி விடலாம் என்று இருந்தேன். சாயங்காலம் ஆரம்பித்து, காரியம் முடியவில்லை. இரவெல்லாம் உட்கார்ந்து செய்வது தான்.‌ ஆனால் என்னமோ அன்று முடியவில்லை.

 

கைகால்கள் எல்லாம் ரணமாக வலித்தது.

 

அங்கேயே பின்னால் இருக்கும் வைஷாலி என்கிற உடுப்பியில் ஊத்தப்பம் தின்று விட்டு என் அறைக்குத் திரும்பினேன்.

 

கண்காட்சி மூடியிருந்தது.

 

மறுநாள் காலை ஆறு ஆறரைக்கே ஜெயராமை உபத்திரவம் செய்து கிளைக்குச் சென்று வேலையைத் தொடர்ந்தேன்.

 

மதியம் மூன்று மணி வாக்கில் முடித்து விட்டு, அன்றைய தினத்திற்கான கணக்கு வழக்குகளை புது சர்வரில் ஏற்றிவிட்டு, ஓட்டிப் பார்க்க அது படுத்து விட்டது. அதற்கு மேலும் ஒருசிலமணி நேரம் செலவழித்து, வெற்றிகரமாக முடிக்கும் போது ஏழாகி இருந்தது. தங்கிவிட்டுக் காலையில் போகலாம் என்ற‌ ஜெயராமின் அன்பை மறுத்து, துரிதமாக உடமைகளை மீட்க அறைக்குத் திரும்பினேன்.

 

கண்காட்சி திறந்து இருந்தது.‌ ஒருத்தரும் இல்லை. யாராவது வருவார்களா என்று எதிர்பார்த்து வாசலில் நின்ற நபன் என்னைப் பார்த்து சிநேகமாக சிரித்தான். அது ஒரு அழைப்பாக என்னுள் நுழைந்து மீண்டதில் நான் அரங்கில் நுழைந்தேன்.

 

அது புடவைக் கண்காட்சி.

 

விதம் விதமாக தினுசு தினுசாகப் புடவைகள். கண்காட்சிக்கு வருகிறவைகள் பொதுவாக இரண்டாம் தரமாக அல்லது நைந்து போனவைகளாக, இழை நழுவினவைகளாக இருப்பது வழக்கம் என்று எனக்குள் ஒரு நினைப்பு.

 

சில புடவைகள் ஈரமாக உலர்த்தியும் இருந்தன. நான் சுவாரசியமில்லாமல் வெறுமனே பார்த்து விட்டுத் திரும்புகையில் அந்தப் புடவையைப் பார்த்தேன்.

 

வெளிர் நீல நிறம் லேசாக முன்னேறி கருநீலத்தில் கரைகிற, மேதாவித்தனமில்லாத ஆண்களுக்குப் பொதுவாகத் தோன்றும் நைலக்ஸ்.

 

பார்டர் என்று தனியாக இல்லை. அதன் மேலும் கீழும் கத்தரிப்பூ மட்டும் நாகப்பழ நிறங்களில் சிறிதும் பெரிதுமாகப் பூக்கள். உடுத்தினால் அழகாக இருக்கும்.

 

திருமணமான இத்தனை நாட்களில் மனைவிக்கு திருப்தி அளிக்கும் விதமாக எந்த ஒரு உடையையும் நான் வாங்கிச் சென்றது இல்லை. அல்லது நான் வாங்கிச் சென்ற எதையும் அவள் நன்றாக இருந்ததாக அங்கீகரித்தது இல்லை.‌ உடைகளைப் பற்றிய அவளது நுண்ணறிவு, அறிவே இல்லாதவன்‌ என்று எல்லோராலும் அறியப்பட்ட என் சிற்றறிவுக்கு எட்டாததாய் இருந்தது.

 

ஆனால் இந்த முறை இதை அவள் விரும்புவாள் என்று எங்கோ ஒரு குறக்களி கதறியது.

 

அதன் அழகான வடிவமைப்பிற்கு நிறைய விலை கொடுக்க வேண்டி இருக்குமோ என்று மனம் பயந்தாலும் பரவாயில்லை, சமாளித்து விடலாம் என்று என்னை நானே திடப் படுத்திக் கொண்டேன்.

 

"இஸ்கா தாம் கித்னா" என்று கண்றாவியான இந்தி உச்சரிப்பில் வினவினேன். போதாததற்கு சைகையில் வேறு புடவையைத் தொட்டு கைகளை மடக்கிக் கேட்டேன்.

 

நல்ல வேளையாக என் சைகையை அவன் புரிந்து கொண்டான்.

 

தெளிவான ஆங்கிலத்தில், "த்ரீ ஹன்ட்ரட் ருப்பீஸ்... பட்.. ஹன்ட்ரட் ருப்பீஸ் டிஸ்கௌன்ட்..    ஸோ .. ஒன்லி டூ ஹன்ட்ரட் ருப்பீஸ்"

 

"ஆஹா... அடிச்சது அதிர்ஷ்டம்" என்று மேற்படி பேரம் பேசாமல் இருநூறு ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்றேன்

ஹோட்டல் அறையைக்காலி செய்ய முனையும் போது ஜெயராம் என்னைத் தொடர்பு கொண்டு, பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டது... அதனால் அறையை அவசரப்பட்டு காலி செய்ய வேண்டாம் என்று சொன்னார்.

 

வேறு வழியில்லாமல் அங்கேயே தங்கி விட்டு, காலைச் சிற்றுண்டி முடித்து விட்டு எழுந்தால் பஸ் போக்குவரத்து ஒருமணிக்கு ஆரம்பமாகி விடும் என்று செய்தி வந்தது

 

நான் மேலும் தாமதிக்காமல் பன்னிரண்டு மணிக்கே அறையைக் காலி செய்து விட்டு, பஸ் பிடித்து ஐந்து மணிவாக்கில் பூனா வந்தடைந்தேன்

 

அதற்குள் மனைவி அலுவலகம் விட்டு வந்திருந்தாள். நான் வீட்டை அடைந்த போது வீட்டு வேலைக்காரி ஷில்பா தான் கதவைத் திறந்தாள்.

 

ஷில்பாவை வர்ணிப்பது ஆபத்தில் முடியும். மகாராஷ்டிராவில் வீட்டு வேலை செய்பவர்கள் கூட பேரழகாக இருக்கிறார்கள் என்று என் நண்பனுக்கு தொலைபேசியில் கூறியது ஷில்பாவை உத்தேசித்து தான்.‌ கொஞ்சம் ரகசியமாக சொல்லி இருக்கலாம்.

 

கொஞ்ச நாள் இட்டலி, போஹா‌ என்று அலைந்ததை வேறு சமயம் சொல்கிறேன். ஆனாலும் என் மனைவிக்கு ஷில்பாவிடம் அதீத நம்பிக்கை. அவளை வேலையை விட்டு நிறுத்தவில்லை.

 

அந்தப் பெண் எப்பவும் களுக்கென்று சிரிக்கும். கன்னம் குழியும். கண்களும் கூட அழகாக சிரிக்கும்.

 

நான் என் உடமைகளை ஹாலில்‌ வைத்து விட்டு, கைகால் கழுவி‌ வருவதற்குள் என் மனைவி என் உடமைகள் அனைத்தையும் கடைபரத்தி இருந்தாள். என் மகளுக்கான ஒரு ஜெர்கின், பாக்கர் வாடி என்று பிரித்தவள், புடவை வைத்திருந்த ப்ளாஸ்டிக் பையைத் தாவி எடுத்தாள்.

 

உள்ளே கையை விட்டு எடுத்து, "ஹை... கோலின் ப்ளூ... இதத்தான நாம ரொம்ப நாளா தேடிட்டு இருந்தோம்"

 

மிகவும் ரசித்து அதைத் தன்னோடு அணைத்துக் கொண்டாள்.

 

பின்னர் புடவையைத் தடவிப்பார்த்து "என்ன மெட்டீரியல் இது? "

 

அது என்ன மெட்டீரியல் என்று நான் கேட்கவில்லை. கேட்கத் தோன்றவில்லை.

 

நானாக "ஜார்ஜெட்" என்றேன்.

 

அவள் சந்தேகமாக தன் உள்ளங்கையை புடவையின் கீழாக செலுத்தி "ட்ரான்ஸ்பரன்ட்டா‌ இல்லை... ஆனா இது கண்டிப்பா ஜார்ஜெட் இல்லை"

எனக்கு இதிலெல்லாம் அனுபவம் இல்லாததால் வேறு எந்த பெயரும் சட்டென்று ஞாபகத்திற்கு வரவில்லை.. நல்ல வேளையாக சுங்குடி கிங்கிடி என்று சொல்லாதது நல்லது என்று நினைத்துக் கொண்டேன்.

"என்ன விலைப்பா இது?"

 

நான் கொஞ்சம் உயர்த்தி சொல்லலாம் என்று நினைப்பதற்குள் அவளை பையைத் துழாவி விலைச் சீட்டை எடுத்து விட்டாள்.

 

"இருநூறு ரூபாயா?"

 

"ஆமாம்.. ஆக்சுவலா நானூறு ரூபாய்... டிஸ்கவுன்ட் போக இருநூறு" என்று வழிந்தேன்.

 

"நான்சன்ஸ்...‌‌இருநூறு ரூபாய்க்கு நான் என்னிக்காவது புடவை கட்டி பார்த்து இருக்கீங்களா? இதெல்லாம் வேலைக்காரி புடவை... "என்று கடும் கோபத்தில் இறைந்தவள்

 

"ஷில்பா.... ஷில்பா. ".என்று பெரிதாக இறைந்தாள்.

 

பாத்திரம் தேய்த்துக் கொண்டு இருந்த அந்தப் பெண் கைகளைக் கழுவிப் புடவைத் தலைப்பில் துடைத்தவாறு ஓடிவந்தது.

 

என் மனைவி அந்தப் புடவையை அவளிடம் கோபமாக எறிந்தாள்

 

"பிடி.. இதை"

 

அது சுலபமாக நழுவாமல் பிடித்தது.

 

"இந்தப் புடவை எப்படி இருக்கு"

 

"நன்றாக இருக்கிறது மோஷி"

 

"அப்படியா... அப்படியானால் நீயே வைத்துக் கொள்.. உனக்குதான் அது"

 

ஷில்பா அதை நம்பாத மாதிரி புடவையைத் தடவிப் பார்த்தாள்.

 

"ஆமாம்... உனக்கே உனக்கு தான்" என்றவுடன் மார்போடு அணைத்துக் கொண்டு, அதன் புத்தம்புது வாசனையை முகர்ந்து பார்த்து ரசித்தாள்.

 

மிதமிஞ்சிய சந்தோஷத்தில் என் மனைவியிடம் "பஹூத் ஷூக்ரியா‌ மோஷி" என்றவளிடம் என் மனைவி "அதை இந்த பைத்யக்கார மனிதனிடம் சொல்" என்றாள்.

 

ஷில்பா என்னைப் பார்த்து பரவசமாக களுக்கென்று சிரித்தாள். கன்னங்கள் குழிந்தன. கண்கள் சிரித்தன குறும்பாக.

 

எனக்கு Through proper channel என்ற பதத்தின் அர்த்தம் விளங்கி விட்டது.

 

 

~~~~~~~~~~~

 

 

 

 

No comments:

Post a Comment