Saturday, April 15, 2023

தெப்பம்

 

தெப்பம்

 

(1) பழிக்குப் பழி

 

கணேசனுக்குத் திடுமென்று தலைக்கனம் ஏறிவிட்டது.  அவன் அப்பா சிபாரிசில் அவனுக்கு மந்திரி பதவி கிடைத்து விட்டது.‌ அவனுக்குத் தலைகால் புரியவில்லை.

 

அருகில் நின்று கொண்டு இருக்கும் சுந்தாவைப் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருந்தது.

 

அவன் கணேசனின் ஜன்மவைரி. என்ன காரணமோ இருவருக்கும் அவசியமே இல்லாமல் கடும் போட்டி. இவன் ஒருமுறை ஜெயித்தால் அவன் ஒரு முறை எப்படியாவது ஜெயித்து விடுகிறான்.

 

இந்தமுறை கணேசன் அவனைக் கடுமையாக வீழ்த்தி விட்டான். அவன் முன்னால் போய் நின்று அவனைப் பார்த்து புன்னகைக்க வேண்டும் போல் இருந்தது. தான் ஒரு அமைச்சர் என்று உணர்ந்து தன்னை அடக்கிக் கொண்டான்.

 

கூட்டமாக வேறு இருக்கிறது. சிறிய இடம். சுந்தா வெற்று உடம்பில் கூட்டத்தில் தன்னை மறைத்துக் கொள்ள முனைகிறான்.

 

அவன் இத்தனை வருடங்கள் ஊரை ஏமாற்றி, பாலில் தண்ணீர் கலந்து விற்றது எல்லாம் வெளிப்பட்டு விட்டது.

 

அடுத்த அரைமணியில் தண்டனை பெறப்போகும் இன்னும் நிறைய  பாவிகளோடு ஒதுங்கி நிற்கிறான்.

 

ஆறுமாதம் அட்டைக் குழியிலும் அடுத்த ஆறுமாதம் அரணைக்குழியிலும் தள்ளி சித்திரவதை செய்யுமாறு எமதர்மராஜன் கட்டளை இடப் போகிறான்.

 

சுந்தா அரணாக்கயிற்றில் வலுவாக சுருட்டப்பட்ட தொளதொளவென்ற அரைட்ராயர், ஒரு முறுக்குக்கயிறு, கஷ்கத்தில் ஒரு பால்குவளை என்று தொப்பையைத் தள்ளிக்கொண்டு எமதர்மராஜன் சபைக்குள் நடுங்கிக் கொண்டே நுழைய வேண்டும். 

 

ஒரேநிமிடத்தில் அவனுடைய பாவங்கள் படிக்கப்பட்டு, தண்டனை அளிக்கப்படும். தண்டனை பெற்ற உடன் முன்னைவிட அதிகமாக நடுங்கிக்கொண்டே வெளியேற வேண்டும்.

 

அவன் உடுப்பைப் பற்றி யோசிக்கும்போது தன் உடுப்பைக் குனிந்து பார்த்தான். குனியும்போது கனமான தலைப்பா கொஞ்சம் ஆடியது. வெகு ஜாக்கிரதையாகக் குனிந்தான்.  

 

வழுவழுவென்று மஞ்சள்நிறத்தில் ஸாட்டின் துணியில் ஆடை. விதவிதமான மணிகளை கழுத்தில் அணிவித்து இருந்தனர். காதுகளில் பெரிதாகக் குண்டலங்கள். துளை தூர்ந்து விட்டிருந்ததால் ஒரு மெல்லிய நூலால் காதைச்சுற்றிப் பிணைக்கப்பட்டு இருந்தது. தலையைச் சுற்றி புடவையால் தலைப்பாகை சுற்றப்பட்டு இருந்ததால் காதை இறுக்கி இருக்கும் குண்டலம் தெரிய வாய்ப்பில்லை.

 

கணேசன் ஆசையாகக் கழுத்தில் இருந்த மணிமாலையைத் தடவிக் கொடுத்தான்.

 

பட்டென்று யாரோ முதுகில் அடித்தனர்.

 

கணேசன் நடுங்கிப் போய் திரும்பிப் பார்த்தான்.

 

குமுட்டி!

 

குமுட்டி கணேசனுக்கு இரண்டு வயதும் ஒரு வகுப்பும் மூத்தவன். ரவியின் தம்பி. கணேசனுக்கு ஒரு வயது இளையவனும் உற்ற நண்பனுமான உருளியின் அண்ணன். 

 

சுப்ரமணியன் சுப்புணி ஆகாமல் எப்படி உருளி ஆனான் என்பது பற்றி ஆனைமங்கலச் செப்பேட்டில் இருக்கிறதா தெரியவில்லை. 

 

குருமூர்த்தி தாட்டியான உடம்பினால் குண்டுகுருவாகி, பின்னர் குமுட்டியானதில், சுப்பிரமணியன் சுருளியாகி, காலப்போக்கில் உருளியாகிவிட்டான் என்பது புரிந்தாலே போதுமானது.

 

இவர்கள் கணேசனின் வீட்டிற்கு மேலண்டைப் பக்கம் இரண்டாவது வீடு. 

 

டாக்டர் வீடு என்று சொன்னால் தெரியும். குமுட்டியின் தாத்தா ஒரு ஆயுர்வேத வைத்தியர். 

 

அவர், சதாபிஷேகம் செய்தால் கண்திருஷ்டிப்படுமே என்று ரொம்ப காலம் வயசாகாமல் எமுபத்தொன்பது வயசிலேயே நீடித்து, ஒருநாள் அல்பாயுசில் பொசுக்கென்று போய்விட்டார் என்று குமுட்டியின் பாட்டி நினைத்தாற்போல்  திண்ணையில் அமர்ந்துகொண்டு அழுவார்.

 

குமுட்டி கணேசனைப் பொதுவாக சீந்தமாட்டான். அவனுக்கு இவன் ஒரு பொருட்டே இல்லை.

 

ஆனாலும், அவனுக்கு இவன் மேலே ஒரு காழ்ப்புணர்ச்சி வந்துவிட்டிருந்தது.

 

அதற்கு ஓரிரு காரணங்கள் ஏற்கெனவே உண்டு. காரணங்கள் ஒவ்வொரு முறையும் ஏறிக்கொண்டே தான் இருக்கும்.

 

முதுகில் அடி விழுந்தவுடன் கணேசன் திரும்பி குமுட்டியை முறைத்தான்.

 

"ஏண்டா அடிச்சே"

 

"கைய வச்சுண்டு சும்மா இருக்க மாட்டியா? மணிமாலை அறுந்து போச்சுன்னா யாரு பதில் சொல்றது"

 

என்னமோ இவன் தான் நாடகத்தை ஏற்று நடத்துவது போல் பேசுகிறான். நாடகம் பள்ளியின் தாளாளர் நாற்பது வருடங்களாக நடத்தி வருவது. இந்த ஊரின் மிகப்பெரும் நிகழ்வு இது.

 

அதனால்தான் அப்பாவின் சிபாரிசு வேண்டியிருந்தது.

 

குமுட்டிக்கு அந்த உபாதைகள் கிடையாது. அவன் தாளாளரின் உறவினன். அவரது எடுபிடியும் கூட. அவனது தோற்றம் அவனுக்குப் பெரிய சாதகத்தை அளித்தது. அதனாலேயே அவன் கொடி ஓங்கிப் பறந்து கொண்டிருப்பதாகக் கணேசன் நினைத்தான்.

 

குமுட்டிக்கு இது நான்காவது வருடம், நாடகத்தில் நடிப்பது.

 

இந்தமுறை குமுட்டிக்கு முனிவர் வேடம்.

 

ஜடாமுடி, மீசை தரித்து, "சத்தியவந்தா, நில், பொறு, பதறாதே.. நீ வீராதி வீரனென்று எவ்வுலகும் அறியும்" என்று முழங்குவான்.

 

ஆகிருதியும், ஆணவ நடையும், அடித்து வீழ்த்துகிற குரலும் அவன் ஒருபடி மேல் தான்.

 

ஆனால், தொடர்ச்சியாக மூன்றாவது வருடம் அவன் முகத்தை முழுவதும் காட்ட முடியாதபடி வேஷம்.

 

போனவருடம் பிள்ளையார். அதற்கு முந்தின வருடம் நந்திகேசுவரர். முதன்முதலாக வாயில்காப்போனாக வந்தவன், படிப்படியாக முன்னேறியிருக்கிறான்.

 

தான் அப்படியல்ல என்பதில் கணேசனுக்குப் பெருமையாக இருந்தது. எடுத்த எடுப்பிலேயே மந்திரி.

 

தலைப்பாகைதான் படுத்துகிறது.

 

கணேசனைப் போல வேறு இருவரும் சிபாரிசில் வந்தவர்கள். தாளாளர் அவ்விரண்டு பேருக்கும் கூட மந்திரி பதவி தான் கொடுத்து கௌரவித்து இருந்தார்.

 

ஒருத்தன் அதே பள்ளியில் மூன்றாம் வகுப்பு டீச்சர் வடிவாம்பாள் மகனான  கலைச்செல்வன். இன்னொன்று பள்ளியின் எதிர்வீட்டு சிவா.

 

இந்த மூன்று பேரில் கணேசனைத்தான் தாளாளருக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரே எழுதி இயக்கும் நாடகம்.

 

அதில் கணீரென்று பேசுபவர்களை அவருக்கு மிகவும் பிடிக்கும். கணேசன் பார்க்க கெச்சலாக இருந்தாலும், நன்றாக ஸ்பஷ்டமாக குரல் உயர்த்திப் பேசுவான்.

 

மற்ற இருவரும் பேசவே சிரமப்பட்டார்கள்.

 

மூன்று பேருக்குமே ஒரேயொரு பக்கம்தான் வசனம். ஆனாலும், கணேசன் நைச்சியமாக மற்ற இருவரது வசனங்களை வாங்கி, வார்த்தை வார்த்தையாகக் கூட்டிப் பார்த்தான்.

 

அவனுக்கு மற்ற இருவரையும் விட ஏழெட்டு வார்த்தைகள் அதிகமிருந்தன.

 

குமுட்டியிடம் அடி வாங்கிய கணேசன் சற்றே ஒதுக்குப்புறமாக மேடையில் நின்று கொண்டான். அடுத்த சில நிமிடங்களில் மணியடிக்கப் போகிறது. நடிப்பவர்கள் எல்லாம் கூட்டமாக மேடையில் தோன்றி "ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்" பாடிவிட்டுத் திரும்ப வேண்டும்.

 

அதற்கடுத்த  பத்து நிமிடங்களில் நாடகம்‌ தொடங்கும். 

 

கணேசனுக்கு தன் அலங்காரத்தைக் கண்ணாடியில் பார்த்தால் நல்லது என்று ஆசையாக இருந்தது. முக்கியமாக தலைப்பா. முடிந்தவரை தன் கையை உயர்த்தி உச்சியைத் தொட முயன்றான். அது எட்டவில்லை.‌அவ்வளவு தூரம் அதைச் சுற்றி இருக்கிறார்கள். சற்றே கனமாக இருக்கிறது. கழுத்து வலிக்கிற மாதிரி ஒரு உணர்வு தோன்றியது.

 

நல்லபடியாக முடிய வேண்டும் கடவுளே..

 

ஒப்பனை செய்கிறவர்கள் தலைப்பா கொண்டு வந்திருந்தார்கள். மற்ற இருவருக்கும் பொருந்திவிட்டது. சொல்லிவைத்தாற்போல கணேசனுக்குப் பொருந்தவில்லை. இருப்பதிலேயே சிறியது கூட, கணேசன் தலையில் வைத்தால் மரக்காலால் மூடிய மாதிரி முகவாய்க்கட்டை வரை வந்து விடுகிறது.

 

அதனால் ஒப்பனை செய்பவர் கணேசனை வீட்டுக்கு விரட்டி ஒரு புடவை வாங்கி வரச்சொன்னார். கணேசன் தெருவே பார்க்கும்படி தாறுமாறாக ஓடினான்.

 

அன்று காலை அனைவரையும் ஷாம்பு போட்டு குளித்து வரவேண்டும் என்று உத்தரவு இட்டிருந்தார்கள்.

 

கணேசன் வீட்டில் ஷாம்புவெல்லாம்‌ எப்பவோ ஒருமுறைதான். அழகான மஞ்சள் டப்பாக்களில் டியாரா அப்போதுதான் வரத் துவங்கி இருந்தது.

 

ஆனாலும், கணேசன் வீடு அதற்குப் பழகிக்கொள்ளவில்லை.

 

இவன் ஒருவேளைக் குளியலுக்காக ஷாம்புவெல்லாம் வாங்க முடியாது என்று கடிந்து கொண்டு, அவனது இரண்டாவது சகோதரி, அரப்புடன் வெளிர்நீல நிறம் கொண்ட சவுக்காரத்தூள் ‌ சேர்த்து குளிப்பாட்டி விட்டாள்.

 

அவன் படிப்பதை விட்டுவிட்டு நாடகத்தில் நடிப்பதில் அவன் வீட்டில் அப்பாவைத் தவிர யாருக்குமே உடன்பாடு இல்லை.

 

இப்போது மூச்சு வாங்க கணேசன் வீட்டிற்குப்போய் புடவை கேட்டவுடன் அம்மா எரிந்து விழுந்தாள்.

 

"அது கெடக்கு.. பொடவையக் கொண்டா... பாவாடையக் கொண்டான்னு.. நாடகமும் வேண்டாம்.. ஒரு மண்ணும் வேண்டாம்.. வீட்டோட கெட"

 

கணேசன் அழுதுபுரண்டு ரகளை செய்ததும் வேறுவழியில்லாமல் அம்மாவுக்கு கல்யாண சீராக வந்த ரோஸ்வுட் பீரோவைத் திறந்து பத்துநிமிஷம் தேடி, ஒரு பழைய‌ நைலக்ஸ் புடவையைத் தந்தாள்.

 

அது வீட்டுவேலை செய்யும் அங்கம்மாவுக்காக போன தீபாவளிக்குக் கொடுக்கலாம் என்று ஏழெட்டு மாதம் யோசனை செய்து முடிவெடுத்தது எப்படியோ அங்கம்மாவுக்கு முன்கூட்டியே தெரியவந்து, அவள் வேலையை விட்டே நின்று விட்டாள்.

 

நைலக்ஸ் புடவையைப் பார்த்ததும் ஒப்பனை ஆசாமி கெக்கெக்கென்று சிரித்தார்.

 

"எலே.. இதே எப்படிடா மண்டைல சுத்தறது? போயி வாயில்புடவை வாங்கிட்டு வா" என்று மறுபடி துரத்தி விட்டார்.

 

கணேசன் மறுபடியும் படையெடுப்பு நிகழ்த்தி, அம்மாவும் அக்காக்களும் நீண்ட நேரம் யோசித்து, "தொலையறது போ" என்று ஆயிரம்தடவை ஜாக்கிரதை சொல்லி ஒரு‌ புடவையைக் கொடுத்தனர்.

 

"ஜம்முனு இருக்கே" என்று ஒப்பனைக்காரர் சொன்னதும்தான் கணேசனுக்கு மூச்சே வந்தது.

 

அது சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை.

 

அதைப் பிரித்துப்பார்த்த அவர், "இதென்ன ஒம்போது கஜமா? இதை வெச்சு என்ன செய்யறது?"

 

கணேசன் அவரை அழாக்குறையாகப் பார்த்தான்.

 

"எங்க வீட்ல வேறபுடவை தரமாட்டாங்க சார்" என்றான். அவரை எப்படி அழைப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை.

 

இப்போது ஒப்பனையாளர் அவரது சீனியரை அழைத்து விஷயத்தைக் கூறினார்.

 

"ஏன், ரொம்ப பெரிசா இருக்கோ?"

 

"ஆமாண்ணே... இந்தப் பய‌ மண்டைய நீங்களே பாருங்கண்ணே.....பலாமுசு மாதிரி இத்துனூண்டு இருக்குது.. இதுல எப்படி சுத்துறது?"

 

அவர் கணேசனின் சிறிய தலையை ஆட்டுக்கல் குழவி போல நாலாபக்கமும் திருப்பிப் பார்த்தார்.

 

பிறகு உதட்டைப் பிதுக்கியவாறு, "ஒண்ணுஞ்செய்ய முடியாது... முடிஞ்சவரைக்கும் பம்பரத்துல கயிறு சுத்துற மாதிரி சுத்து.. மிச்சத்தை நல்லா இழுத்து கொசுவத்தைப் பய கைலயே மேலாக்கு மாதிரி குடுத்துறு.."

 

பின் கணேசனிடம், "எலே.. தலப்பாவ பத்தரமா புடிச்சுக்கணும் தெரிஞ்சுதா? எத்தனாவது சீனு உனக்கு?"

 

"ஃபர்ஸ்ட்டு"

 

"நல்லவேளை... (உதவியாளரிடம்) பயலை நீயே தூக்கிட்டு போயி சேர்ல உக்கார வெச்சிட்டு வந்துறு.. (கணேசனிடம்) தம்பி..‌எளுந்து கிளுந்து நிக்கக்கூடாது.. தலப்பா உளுந்துறும்"

 

கணேசன் பயந்து போய் "ஊஹூம்" என்றான். "நான் எழுந்து நின்னுதான் டயலாக் பேசணும்.. "

 

"அட ஆண்டவனே" என்று சொல்லி விட்டு, மணிமாலைகளோடு பட்டுநூல்களை இணைத்து, கூடியவரை புடவையை தலைமேல் பருப்புத்தேங்காய் கூடு போல் குவித்து, நன்றாகக் கட்டிவிட்டார்கள்.

 

நாடகத்தின் துவக்க ஸீன். அரச சபை. நாகநாதன் சார் மூத்த பெண்தான் ராஜா. சத்யவானின் தகப்பனார்.

 

 இரண்டு சேடிப்பெண்கள் கவரி வீசுவர். அவர்களுக்கு கொஞ்சம் உயர்த்தி ஆசனம்.

 

மூன்று மந்திரிகளும் சற்று கீழே. கலை அரசரை நெருங்கிய ஆசனத்தில்,  அவனை ஒட்டி கணேசன், மேடையில் ஆடியன்ஸைப் பார்த்தவாறு.

 

எதிர் பக்கம் சிவா. அரசரை ஒட்டி. அவன் அருகில் கணேசனுக்கு எதிராக ஒரு காலி ஆசனம். அதில் தான், குமுட்டி முனிவர் வேடத்தில் வந்து அமர்ந்து சத்யவானுக்கு சாவித்திரியை மணமுடிக்கச் சொல்வான்.

 

முதலில் அரசர் பேசுவார். அவரைப் புகழ்ந்து கலை பேசுவான். முனிவர் வருவார். அவரை உட்கார வைத்து வரவேற்று சிவா பேசுவான். முனிவர் தன் வசனம் பேசியவுடன், அரசர் சத்யவானுக்குப் பிராயம் வரவில்லை என்று இழுப்பார். கணேசன் அரசரை சமாதானப்படுத்தி முனிவரை ஆதரித்துப் பேசுவான். வேறுவழியில்லை.

 

இதற்கு நடுவில், முனிவர் வருவதற்கு முன் சபையில் நாட்டியம் நடக்கும்.

 

"யாராடினார் இனி எவர் ஆடுவார்?

அம்பலவாணன் 

சீ...தம்பர நாடனைப் போல்

யாராடினார் இனி எவர் ஆடுவாவா....வார்..."

 

இந்தப் பாடலின் போது மூவரும் தலை அசைத்து ரசிக்க வேண்டும்.

 

பாவம், முனிவருக்கு நாட்டியத்தைக் காண முடியாது. அது முடிந்த உடன் தான் அவர் ப்ரவேசம்.

 

கணேசன் பேசி, அரசர் ஒப்புக்கொண்ட உடன் சபை கலைந்து, மூன்று மணி நேரம், முப்பத்தாறு சீன்களுக்கப்புறம் மறுபடியும் சபை கூடும். இதில் சாவித்திரியும்  சத்யவானும் இருப்பர்.  மூன்று மந்திரிகளும் இடுக்கிக் கொண்டு ஜனங்களைப் பார்த்து "வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்" என்று பாடிக் கொண்டே இருக்கும் போது திரை பொதேல் என்று விழும். மண்டையில் விழாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று முன்கூட்டியே சொல்லி விட்டார்கள். 

 

ஒரே கொடுமை, கிட்டத்தட்ட நான்குமணி நேரம் மேக்கப் கலைக்காமல், நாடகத்தையும் பார்க்க முடியாமல், நடுவில் அவசர-அவசரமாக தயிர்சாதம் வேறு சாப்பிட வேண்டும்.

 

மணி அடித்ததும் கைத் தாங்கலாகக் கொண்டு சபையில் அமரவைத்தார்கள். இரண்டாவது பெல்லில் இசையும், மூன்றாவது பெல்லில் விளக்குகள் ஒளி பெற நாடகம் துவங்கும்.

 

கணேசன் அரங்கை  நோட்டமிட்டான். நிரம்பி வழிந்தது. முன் வரிசையில் சப்பணக்காலிட்டு உட்கார்ந்தவர்களைப் பார்த்து அவனுக்கு தூக்கி வாரிப் போட்டது. 

 

ரைட்டர் கிச்சாவின் மகன் கோபு. அந்த வருடம் ஒன்பதாம் வகுப்பில் நுழைந்து இருந்தான், அவனோடு புதுத்தெரு பாலு, குன்னியூர் பங்களா வீட்டின் எதிர் வீட்டு நீலமணிகண்டன், நந்து.. இன்னும் நாலைந்து பேர்.

 

என்னதான் மேடையில் விளக்கு இல்லாவிட்டாலும் அரங்கத்தின் வெளிச்சம்  மேடை மேல் விழுந்து முன்வரிசைகளில் இருப்பவர்களுக்கு, நடிகர்கள்  லேசாக புலப்படவே செய்தார்கள்.

 

கோபு கணேசனோடு ராஷ்ட்ரபாஷா படித்தவன். 

 

கணேசனுக்கு கோபுவைப் பார்த்ததும், வெட்கம் தாளவில்லை. அதை அடக்க முடியாமல், தோள்களைக் குறுக்கிக் கொண்டு,  ஈ என்று இளித்தான். அவனுக்கு ஒருக்கணம் தூக்கி வாரிப் போட்டது.

 

அவன் பக்கத்தில் இருந்த பாலுவிடம், "டேய்.. மேடைல ஒண்ணு என்னைப் பாத்து சிரிச்சுதுடா" என்றான்.

 

கணேசன் வேறெங்கோ பார்ப்பது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

 

நந்து கோபுவிடம் "யாரடா சொல்ற?"

 

"அதான்டா.. மண்டை பெரிசா ஒரு லூசு  ஒண்ணு உக்காந்துருக்கே.. அதுதான் என்ன பாத்து இளிச்சுது"

 

"உனக்கு‌ முன்னமே தெரியுமோ அதை"

 

"நான் பாத்ததே இல்லடா.. யாருன்னே தெரியலை"

 

நல்ல வேளையாக மூன்றாவது மணி அடித்து, விளக்கொளிர நாடகம் துவங்கியது. 

 

யாராடினாரில் அந்த சிறுமி சுழன்று சுழன்று சூறாவளியைப் போல் ஆட, கணேசன் ஓரக்கண்ணால் கலையையும் சிவாவையும் பார்க்க அவர்கள் இருவரும் எந்தத் திக்கையும் பார்க்காமல் தலையை மேலும் கீழும் அசைத்துக் கொண்டு இருந்தனர். 

 

ஒரு அருமையான நாட்டியத்தை எப்படி ரசிக்க வேண்டும் என்று கூடத் தெரியாதவர்கள் என்று மனதில் சிரித்துக் கொண்டு, கணேசன் அந்த நாட்டியத்தாரகை சுழன்ற இடமெல்லாம் திரும்பித் திரும்பி தலையை பலங்கொண்ட மட்டும் ஆட்டி ரசித்தான். 

 

பாடல் முடிந்து,  முத்துமாலை பரிசாகப் பெற்ற அந்தப் பெண், அரசரை மட்டும் பார்த்து விட்டு, அவ்வளவு தீவிரமாக ரசித்த கணேசனை ஒரு பொருட்டாகக் கருதாமல் போய்விட்டது. 

 

கணேசனுக்கு பதட்டத்தில் வசனம் மறந்து விட்டது.

 

எப்படியோ தட்டுத்தடுமாறி பதுமை போல எழுந்தே நின்று அனேகமாக ஒப்பித்து அமர்வதற்குள் தொப்பலாக நனைந்து விட்டான்.

 

ஒரு வழியாக நாடகம் இனிதே முடிந்தது. கடைசியில் மறுபடியும் நடிப்பவர்கள் அனைவரும் மேடையில் தோன்றி நன்றி சொல்ல வேண்டும்.

 

கணேசனும் மேடையை நோக்கி விரைந்தான். போகும் வழியில் குமுட்டி அவன் காலைத் தடுக்கிவிட, பொத்தென்று விழுந்தான். 

 

எழுந்து நிற்க முயலும்போது தலைப்பாகை நழுவிவிட்டது. சுதாரிப்பதற்குமுன் திபுதிபுவென்று நடிகர்கள் அதன் மீதே மிதித்துக்கொண்டு போக, அதை மீட்கும் கணேசனின் முயற்சிகள் அனைத்தும் தோற்றன. கடைசியில் ஜாக்கிரதை என்று பலமுறை சொல்லினுப்பப்பட்ட புடவை, பல இடங்களில் தாறுமாறாகக் கிழிந்து விட்டிருந்தது.

 

கணேசனுக்கு உயிரே போய்விட்டது. துக்கம் தொண்டையை அடைக்க, தளும்பும் விழிகளால் குமுட்டியை ஏறிட்டுப் பார்த்தான். குமுட்டியிடம் ஒரு வெற்றிப் பெருமிதம் தென்பட்டது. 

 

பழைய விரோதத்தை அவன் சமன்‌ செய்துகொண்டு விட்டான் என்று மட்டும் புரிந்தது.

 


 

(2) முன் விரோதம்

 

கீழப்பாலம் என்பது மேலப்பாலம் என்ற ஒன்று கட்டப்பட்டதால் வந்த பெயர் அல்ல.

மேலப்பாலம் தான் புதிதாக கட்டப்பட்டது. காவிரியின் பலநூறு உபஉபஉப கிளைகளில் ஒன்றான ஒரு நதியின் மேல் எப்பவோ ப்ரிட்டிஷ்காரன் கட்டியதுதான் கீழப்பாலம்.

அதுவொரு அடையாளம். அதுவொரு சந்திப்பும் கூட. மத்தியதர மக்களுக்கான ப்ரத்யேகமான கடைகள் உணவு விடுதிகள் நிரம்பி வழிகிற இடம்.  

கணேசனின் கபாலத்தில் மீதமிருப்பவற்றை எப்பாடுபட்டாவது வெளி உலகுக்கு காட்டியே தீருவது என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஒரு நபர், அங்குதான் முடித்திருத்தும் நிலையம் வைத்திருந்தார்.

அவர் கடையில் நீளமாகக் தொங்குகிற சவரக்கத்தி தீட்டப் பயன்படும் ரப்பர் பட்டையை விட கணேசனின் தலை அதிக அளவில் தீட்டப்பட்டிருக்கிறது. முதல் மற்றும் மூன்றாவது புதன்கிழமை அவருக்கு கணேசன்தான் போணி. 

கணேசன் சிரசு மிகவும் ராசியானது என்று அவருடைய குலதெய்வம் அவரது கனவில் சொல்லியிருக்க வேண்டும்.

வருடத்தின் பெரும்பாலான மாதங்களில் அளவில் சிறியதான கணேசனின் தலை, பளபளவென்று அப்போதுதான் துலங்கிய பாத்திரம் போல மின்னுவதற்கு அவர்தான் காரணம். கணேசனுடைய சின்னஞ்சிறிய பாரமில்லாத, தலையை சாணைபிடிக்கும் கல்லாகவே அவர் எண்ணியிருந்திருக்க வேண்டும்.

ஆனாலும் கீழப்பாலம் மீது வெறுப்பொன்றும் கிடையாது.  உண்மையில் கீழப்பாலம் சிறுவர்களுக்கு  மிகவும் பிடிக்கும்.

வீட்டிலிருந்து ஐந்தே நிமிட நடை. இல்லை, ஏதேனும் வாங்க, ஒரு மைல் தள்ளி பந்தலடி போகவேண்டியிருக்கும். காரணம் மெயின்ரோட்டு முக்கிற்கும், நாகநாதசார் வீட்டிற்கும் இடைப்பட்ட சுவர்.

அதில்தான் அந்த ஊரின் பல நூற்றாண்டுகளாக புழக்கத்தில் இருக்கிற நான்கேநான்கு தியேட்டர்களில் வெளியாகும் படங்களின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கும்.

அதை மற்றவர் போல் நின்று ரசிக்க முடியாது. 

காரணம் நாகநாதசார். நரம்பு மாதிரி இருப்பார். ஆனால் பசங்களை செமர்த்தியாக வார் பிடிப்பார்.

மெலிதான மூங்கில்கழிகளை ப்ரத்யேகமாக கணுவில் நறுக்கி, கணுபக்கத்தால், தேர்ந்த தவில் கலைஞன் மாதிரி வாசிப்பார்.

அடிவாங்குபவனின் ஐயோ-ஐயோ என்ற அலறல் அவரது வாசிப்பின் சுருதியோடு இசைந்து வருகிறவரை விடமாட்டார்.

தெய்வாதீனமாக கணேசன் அவரிடம் அடிவாங்கியதில்லை. எந்தவொரு காலகட்டத்திலும் அவருடைய வகுப்புகளில் இடம் பெற்றதில்லை. 

அவருக்கு கணேசனைத் தெரியாது. ஆனால்,  அதைவிட எல்லோருக்கும் அவரின் சங்கீத லாவண்யத்தை நன்றாகத் தெரியும் என்பதால் ஓரிரு நொடிகளுக்குள் அவ்வளவு போஸ்டர்களையும் கிரகித்துக் கொண்டு விரைந்து விடுவார்கள்.

ஒருமுறை, ஏதோவொரு போஸ்டரால்  ஈர்க்கப்பட்டு, கணேசனும் குமுட்டியும் (அப்போது சற்றே சுமுகமான உறவு நிலவியது) அருகில் சென்று உன்னிப்பாக பார்க்கும்போது, வேலைமெனக்கெட்டு புகையிலை துப்ப வெளியில் வந்தவர்  கண்ணில் பட்டுவிட்டனர்.

வேட்டியை தொடையிடுக்கில் அதக்கிக்கொண்டு, மிகவும் வழக்கத்திலிருந்த சோழநாட்டின் ப்ரபலமான கெட்டவார்த்தையைக் கூறிக்கொண்டே ஒரே எட்டில் தாவி முதலில் வாகாக நின்ற குமுட்டியை லாவிப் பிடித்துவிட்டார். அப்போது பராக்கு பார்த்துக் கொண்டிருந்த ஓரிரு சிறுவர்கள், அவ்வளவாக பரிச்சயமில்லாதவர்கள், "ஐயையோ.. ஓடுங்கடா" என்று அலறியவாறு ஓட, கணேசனும் துரிதகதியில் இயங்கி, குமுட்டியை அங்கேயே துறந்து விட்டு,  கீழப்பாலம் பக்கம் சிட்டாய்ப் பறந்தான். 


 

அங்கே முக்கில் இருந்த நாராயணன் கடையில், அவனிடம் காட்டிக்கொடுக்க வேண்டாம் என்று இறைஞ்சி, ஒளிந்தவாறு நடப்பதைக் கண்காணித்தான்.  குமுட்டியின் பின்பாகம்தான் தெரிந்தது. அவன் காதை பலம்கொண்ட மட்டும் நாகநாதன்சார் திருகி, இன்னொரு கையால்  பளார்-பளார் என்று அறைந்து கொண்டிருந்தார்.  

குமுட்டியின் அகலமான முதுகு வெடவெடவென்று ஆடுவதை வைத்து அவன் விக்கிவிக்கி  அழுகிறான் என்று புரிந்தது.

நாகநாதசாருக்கு கைவலித்ததோ, இல்லை வீட்டிலிருந்து அழைப்பு வந்ததோ, அவர் குமுட்டியைத் தள்ளமுடியாமல், கீழே உருட்டிவிட்டு, உள்ளே விருட்டென்று சென்று மறைந்தார்.

கணேசன் ஒரு விநாடி கூடத் தாமதிக்காமல் பாய்ந்து, அங்கே தடுமாறிக் கொண்டிருந்த குமுட்டிக்கு  கைலாகு கொடுக்க முனைந்தான்.

அவன் அதை மறுதலித்து கணேசனை  நிமிர்ந்து விரோதமாகப் பார்த்தான். அவன் வலது காது கடுமையாக சிவந்திருந்தது.

நிஜமாகவே குமுட்டியிலிருந்து புகை வந்தது.

அதற்கப்புறம் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகத் தொடரவில்லை.


(3)

ஆனைக்கும்  அடி வலிக்கும்

நவராத்திரி கொலு ஒரு வைபவமாகவே எல்லாத்  தெருக்களிலும்  நடைபெறும்.

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு தினுசில் கொலு வைக்கப்படும். சில பொம்மைகள் எல்லா வீடுகளிலும் இடம்பெறும் என்றாலும், ஏதோவொரு விதத்தில் அவைகள் வேறுபடும். மாக்கல், மரச்சொப்பு, பீங்கான், ரோஸ்வுட் என்று விதம்விதமான சொப்புகள் கணேசன் வீட்டில் இடம்பெறும். ராகவையங்கார் வீட்டின் பெரியகூடம் அவர்களது பொம்மைகளுக்குக் காணாது என்றால் லலிதாம்பா மாமி வீட்டின் கொலு சிறியதாக இருந்தாலும், காரமான சுண்டல் பெருங்கூட்டத்தை ர்க்கும்.

நவராத்திரியின் கொலுவைக் காட்டிலும் சுண்டலுக்குத் தான் மகிமை அதிகம். 

கணேசன் ஒருமுறை (ஊருக்கு வந்த வருடம்) பக்கத்து வீட்டில் குடியிருந்த ராவ்ஜி குடும்பத்து சாமு, அவன் தம்பி சங்கர், அவன் தங்கை ரேணு சகிதம் கொலுபார்க்க போனான்.

முதல் வீட்டில் நுழையும் போது சாமு, கணேசனுடைய வெறுங்கையைப் பார்த்து, பை கொண்டு வரலையா என்று கேட்டான். 

"எதுக்கு"

"சுண்டல் வாங்க"

கணேசனுக்கு வெட்கமாகப் போய் விட்டது  தான் நிஜமாவே கொலு பார்க்கத்தான்  வந்தது  என்று சொன்னதை அவர்கள் நம்பவில்லை.

அவர்கள் மூவரும் ஆளுக்கொரு ஒரு பாலித்தீன்பை கொண்டு வந்திருந்தார்கள்.

எல்லார் வீடுகளிலும் சுண்டல் கிட்டவில்லை. பெரும்பாலான‌ வீடுகளில் வாசலிலேயே அடிக்காத குறையாய் விரட்டி விட்டார்கள்.

சில வீடுகளில் சுண்டல் கிட்டியது.

கணேசன் அதை  தன் சிறிய உள்ளங்கையில் வாங்கி அவ்வப்போது தின்று விட்டான்.

ராவ்சாகிப் குடும்பம் பைகளில் சேகரித்துக் கொண்டனர்.

சில வீடுகளில் நால்வரும் ஒரே குடும்பம் என்று கூறி சாமுவின் பையில் மட்டும் ஒரு பிடி இட்டனர். சாமு கணேசனிடம்  வீட்டுக்கு சென்றதும் அவன் பங்கைத் தந்துவிடுவதாகக் கூறினான்.

விதம்விதமான சுண்டல்கள். பட்டாணி, கருப்பு கொண்டக்கடலை, வெந்தது வேகாதது,பெரும்பாலும் கடலைப்பருப்பு (நெஞ்சை அடைத்தது), தித்திப்பு காராமணி, உப்புக்காராமணி... சில வீடுகளில் எள்ளுப்பொடி, வெல்லக்கட்டி, பொட்டுக்கடலைப் பொடி...

கணேசன் கிடைக்கக்கிடைக்க முடியாமல் தின்பதும், ராவ்சாகிப் குடும்பம் பையில் சேகரிப்பதும் முதல்தெரு முதல் மூன்றாம் தெருவரை ஆனதும் இருட்டி விட்டது.

வேறுவழியில்லாமல் கணேசன் பிடிவாதத்தின் பேரில் திரும்பவேண்டியதாகி விட்டதில் அவர்களுக்கு வருத்தம்.

எதிர்பார்த்தது போலவே அம்மாவும் அப்பாவும் தெருவில் நின்று கணேசனைத் தேடமுற்படுகையில் கணேசன் சென்று விட்டான்.

பளிச்சென்று பின்முதுகில் வைத்தாள் அம்மா. கணேசன் ஒன்றும் சொல்லாமல் உள்ளே ஓடினான்.

சகல சுண்டல்களும் வயிற்றினுள் ஒரு உலகப்போரையேத் துவங்கியிருந்தன. காலை எழுந்தவுடன் தீர்த்தயாத்திரை துவங்கியிருந்தது. அதற்குப்பிறகு வீடுவீடாக சென்று கொலு பார்க்க அனுமதியில்லை.

ஆனால், அனுமதி எதிர்பாராத எவ்வளவோ பேர் இருந்தனர். அவ்வளவு பேரில், மேலப்பாலம் பக்கத்தில் இருந்து தெரிந்தவர்கள் தெரியாத சிறுவர்கள் என்று பெருங்கூட்டமாகக் கிளம்பி வருபவர்களை சமாளித்து அனுப்புவது பெரும்பாடு.

குமுட்டியின் பெரிய உருவம் இந்த முயற்சியில் நல்ல ஒத்தாசையாக இருந்தது. அவனுக்குப் பயந்தே நிறைய பேர் இவர்கள் வீடுகளை அணுகமாட்டார்கள். 

அப்படியும் ஒருநாள் ஒரு சிறுவர் கூட்டம் வீடுவீடாக ஏறி, வரும் வழியில் கணேசன் வீட்டிலும் நுழைய, அவன் அம்மா சமயோசிதமாக வெல்லக்கட்டியை உடைத்து 'சிராங்கா' பொட்டுக்கடலையோடு கலந்து, சிறுசிறு பொட்டலங்கள் போட்டுக் கொடுத்து விட்டாள்.

குமுட்டி தொளதொளவென்று அரைக்கால் சட்டையும் கையில்லாத பனியனும் அணிந்து, அவர்கள் வீட்டின் கட்டைத்திண்ணையில் கடோத்கஜன் மாதிரி மல்லாந்து கிடப்பான்.  அவனது சித்தப்பா கூட ஒருநாள் பார்த்துவிட்டு 

"ஏண்டா.. படுத்துக்கறது தான் படுத்துக்கற.. கடல்மாதிரி இருக்கற பெரிய திண்ணையில படுத்துக்கப் படாதோ? இப்படி போறும் போறாம கட்டைத் திண்ணையில பிதுங்கிண்டு இருக்கியே".

அவன் அழிச்சாட்டியமாக அதற்கெல்லாம் மசிய மாட்டான்.

அவனுக்கு யாருமே லட்சியம்  இல்லை. 

கணேசன் அப்பாவிற்கு அந்த வருடம் தில்லி மாற்றலானதில், அவர் மட்டும் தனியே செல்ல வேண்டிய நிர்ப்பந்தம்.  அதற்கடுத்த வருடம் குடும்பத்தை அழைத்துச் செல்லும் முடிவு.

அதற்காக இவர்களுக்கு ஹிந்தி கற்றுத்தர, அவரது அத்யந்த சிநேகிதரான ஹிந்தி பண்டிட் ஒருவரை ஏற்பாடு செய்திருந்தார். 

அவர் கணேசனுக்கும், அவன்அக்காக்களுக்கும் வீட்டிற்கே வந்து திண்ணையில் வைத்து சொல்லிக் கொடுப்பார். அவருக்கே ஹிந்தி குத்துமதிப்பாகத்தான் தெரியும்.

வாழ்க்கையின் மிக மோசமான காலகட்டம் அது. இவனொத்த சிநேகிதர்கள் தெருவில் விளையாடும்போது, கணேசன் மட்டும் சுட்டுப் போட்டாலும் வராத பாஷையில் உழன்று கொண்டிருப்பான்.


 

தெருவில் விளையாடுவதை விட, கணேசன் சிரமப்படுவதைப் பார்ப்பதில்தான் குமுட்டிக்கு அதீத இன்பம். வேண்டுமென்றே ஹிந்தி படிக்கும் சமயம் வந்து, ஏதாவது தொந்தரவு செய்வான். இரண்டு திண்ணைகளின் நடுவே ஊஞ்சலாடுவான்.

உலகத்திலேயே பரமசாதுவான ஹிந்தி வாத்யார் அவனிடம்,

 "குழந்தே.. ஏன் இப்படி ஆடறே.. விழுந்துடப்போறே"

"அதெல்லாம் விழ மாட்டேன்"

"விழாம இருந்தாத்தான் நல்லது"

"விழுந்தா என்ன ஆகும்?"

அவர் கொஞ்சம் பொறுமை இழந்துதான் விட்டார்.

"ஒண்ணும் ஆகாது.. நீ இருக்கற சைஸூக்கு பொத்த-பூசனிக்கா மாதிரி உடைஞ்சு போயிடுவே.. உன்னை அள்றதுக்கு நாங்கதான் ரொம்ப ச்ரமப்படணும்".

அவன் உருவத்தைக் கிண்டல் செய்தது பலித்தது. அப்புறம் வரவில்லை அவன். தன் வீட்டுத் திண்ணையிலேயே உருள ஆரம்பித்து விட்டான்.

அன்றைக்கும் அவன் ஒருக்களித்து சாய்ந்து அசந்திருந்த தருணம், மேற்படி சிறுவர் கூட்டம் உள்ளே நுழைந்தனர். அங்கு ஒன்றும் பெயராது என்று கணநேரத்தில் கண்டுகொண்ட ஒரு சிறுவன், மேலும் தாமதிக்காமல் ரேழியைக் கடந்து வெளியேறும் அளவில் குமுட்டியிடம் மாட்டிக் கொண்டான். 

குமுட்டி அவனை வெற்றிலை போல் மடித்து, செல்லமாக பின் மண்டையில் தட்டினான்.

அதற்கே அவனுக்கு பொறிகலங்கி இருக்கும்.

அவன் திமிறி, நகங்களால் குமுட்டியைப் பிறாண்டி விடுவித்துக் கொண்டு ஓடினவனை கடுங்கோபத்தில் எக்கிப்பிடிக்கும் போது தவறுதலாக கட்டைத் திண்ணையின் ஒற்றைத்தூணின் இடுக்கில் தலையை நுழைத்துவிட்டான். 

சுலபமாக விடுபட முடியவில்லை. தலை மாட்டிக் கொண்டு விட்டது. 

குமுட்டியின் இக்கட்டை நொடிப்பொழுதில் யூகித்துக் கொண்ட அச்சிறுவன், தைரியமாக குமுட்டியின் பின்பாகத்தில் நங்குநங்கென்று நாலு குத்து விட்டான். அதே நேரம் உள்ளிருந்து, தோல்வியில் திரும்பிய கூட்டமும் சேர்ந்துகொண்டு, ஆளாளுக்கு பலங்கொண்டமட்டில் குமுட்டியை நையப்புடைத்தனர். பூர்வஜென்மத்துப் பகையெல்லாம் சுலபமாகத் தீர்ந்துவிட்டிருந்தது.

குமுட்டி வலியும் அவமானமும் தாங்காது ஓவென்று அலறினான். அது தெருவெங்கும் எதிரொலித்தது.தெருவே குமுட்டி குலுங்கிக்குலுங்கி அழுவதைக் காண கூடிவிட்டது.

அதற்குள் அடித்த பையன்கள் எல்லாம் சிட்டாய் பறந்து விட்டனர். குமுட்டிக்குக் காய்ச்சல் வந்து, நான்கு நாட்கள் வெளியே தென்படவில்லை.

 

 


 

(4) தெப்பம் என்னும்  சமாதானப்  புறா

 

இந்த நான்குநாட்கள் வேறு யாரும் கூட வெளியே தலைகாட்டவில்லை. நவராத்திரி என்பதாலும் சிறுவர்கள் என்பதாலும் நிறைய வேலைகள் எல்லார் தலைகளிலும்  விழுந்திருந்தன.

கிரிக்கெட் விளையாட முடியாதபடி தெருக்கள் ஜனசந்தடியிலும் திண்ணைகள் வெளியே விரட்டப்பட்ட ஆண்களாலும் ஆக்ரமிக்கப்பட்டிருந்தன. 

நான்குநாட்களில் குமுட்டி தேறியிருந்தாலும், வெளியே தலைகாட்டத் துணியாது வீட்டிற்குள் அடைபட்டுக் கிடந்தான்.  அனைவருக்குமே அது பெரிய துயரம் கொடுத்தது.

ஆயிரம் இருந்தாலும் அவன் யாவருக்கும் பெரிய பலமாக இருந்தான் என்பது உண்மை. அவனுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று அவன் வகுப்புத்தோழன் ரங்கா சொன்னான்.

இந்த சம்பாஷணை கணேசன் வீட்டுத் திண்ணையில் நடந்தது. கணேசன், முரளி, நாணா, ரங்கா, சாமு எல்லோரும் பங்கு பெற்றனர்.

நாணா கணேசன் வீட்டில் பின்கட்டில் குடியிருந்தான். அவன் பொம்மைகள் செய்வான் என்று அவன் அம்மா கூறுவாள். பிள்ளையார் சதுர்த்திக்கு எங்கிருந்தோ சேறு கொண்டு வந்து பிள்ளையாரே வந்து கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் நம்ப முடியாதபடி பிள்ளையாரை வடிப்பான்.

எல்லோரும் அவனைப் பார்க்க, அவன் பெரிய மனிதத் தோரணையில் யோசித்து,

"டயம் இல்லயே" என்றான். உண்மையில் அன்றைய தினத்தின் மூன்றாவது நாள் ஆயுதபூஜை.

"பரவாயில்லைடா.. ரண்டு நாள் இருக்கே நடுவுல"

"அதுக்குள்ளன்னா... (யோசித்து)

ஒண்ணு பண்ணலாம்.. தெப்பம் பண்ணலாமா" என்றான் கணேசன்.

ஆஹா..ஒப்புக்கொண்டார்கள்

தெப்பம் அவர்கள் ஊரின் அடையாளம். பெரிய கோயிலுக்கு இரண்டு ப்ரதான தெப்பக்குளங்கள். அதில் ஒன்று, உலகத்திலேயே பெரிய தெப்பக்குளம் என்று பெயர் வாங்கியிருந்தது. இன்னொன்று கோவில் மதிலை ஒட்டிய சற்றே சிறிய தெப்பக்குளம்.

எந்த மறுப்பும் இல்லாமல் அனைவரும் ஒப்புக்கொண்டு, இதைத் திறம்பட நடத்தும் பொறுப்பை குமுட்டியிடம் கொடுத்து அவனை சமாதானப்படுத்துவது என்று தீர்மானித்து, அவர்கள் வீட்டிற்கு சென்றனர்.

அவர்கள் வீட்டில் சுவாதீனமாக நுழைந்தால், முற்றத்தை ஒட்டிய‌ தாழ்வாரத்தில், முற்றிலும் மரத்தாலான சாய்வுநாற்காலியில் அமர்ந்து, ரவி, "சிந்தனை செய் மனமே" என்று ஆலாபனை செய்து கொண்டிருந்தான்.

இவர்களைப் பார்த்தும் நிறுத்தாமல், ஜாடையாக என்னவென்று கேட்க, கணேசன் ரகசியமாக "குரு" என்றான். அவனைக் குமுட்டி என்று யாரும் நேரடியாக அழைக்க முடியாது.

அவன் பாட்டை நிறுத்திவிட்டு, காம்பரா உள்ள உக்காந்துருக்கான் பாரு என்றான்.

அவர்கள் வீட்டின் பெரிய முற்றத்தைப் போல அப்புறம் வேறெங்கும் பார்த்தது இல்லை. எடை தாங்கவேண்டி, மெல்லிய கம்பிகளால் வேயப்பட்ட முற்றம். வடமேற்கில், நாலைந்து அடிகள் முன்னால் கிணறு இருக்கும்.

குமுட்டியின் அப்பா அதில்தான் தண்ணீர் சேந்தி அற்புதமாகக் குளிப்பார். உடம்பின் ஒவ்வொரு கணுவையும் தேய்த்து, கமகமவென்று உயர்ரக சந்தனசோப்பு தேய்த்து, அவர் குளிக்கும் அழகில் யாருக்கும் களைப்பு போய்விடும்.

கிணற்றுக்கும் தாழ்வாரக் குறட்டிற்கும் நடுவில் ஒரு உபயோகத்தில் இல்லாத தொட்டி கட்டப்பட்டிருக்கும்.


 

கணேசன் மட்டுமே அவர்கள் வீட்டில் சுவாதீனமாக நுழையக் கடமைப்பட்டவன். இதேவீட்டின் இன்னொரு பாகமாகப் பிரித்துக்கட்டப்பட்ட வீட்டில், டாக்டரின் கடைசித்தம்பியின் மகள் குடியிருந்தாள். அவர்கள் கொஞ்சம் வசதி போறாதவர்கள் என்பதால் அவ்வீட்டின் இருபையன்களும் கணேசனளவு சுவாதீனமாக நுழைய முடிந்ததில்லை.

காம்பரா-உள் என்னும் காமரா-உள்ளில் குமுட்டி கட்டிலில் மல்லாந்து வியாசர் விருந்து படித்துக் கொண்டிருந்தான்.

நண்பர்களைப் பார்த்து அவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. வெட்கமாக இருந்திருக்கணும்.

கணேசன் அவனிடம் மெதுவாக நவராத்திரியின் கடைசிநாளன்று தெப்பம் விடப்போகிறோம் என்றும் அதற்கு அவன்தான் தலைமை தாங்க வேண்டும் என்றும் கூறினான்.

"இந்த ஐடியா யார் கொடுத்தது"

"நாணா"

"அவன் ஒரு போக்கத்தவன்.. இதைத் தூக்கிண்டு எங்கிட்ட வந்தீங்களாக்கும்.. தெப்பத்துக்கு எங்க போறது? குளத்துக்கு எங்க போறது?"

கணேசன் உடனே, "தெப்பம்னா நெஜ தெப்பம் இல்லடா.. நாமளே பண்றோம்..."

"நாமளே பண்றோமா.. தொப்பத்தை முன்னபின்ன பாத்துருக்கீங்களாடா"

"ஏன் பாக்காம... நம்மூர்லதான் வருஷத்துக்கு ரெண்டு தெப்பமாச்சே"

"அதுனால?"

"தொப்பம் தேர்மாதிரிதான இருக்கும்.. தேர் மாதிரி செஞ்சு தண்ணிக்குள்ள எறக்கிட்டாபோச்சு"

"தொப்பம் நடந்தா போகும்... முழுகிப் போயிடும். எவனோ கேனத்தனமா யோஜனை சொன்னா தூக்கிண்டு வந்துட்டாங்க"

எல்லோருக்கும் ஏமாற்றமாகப் போய்விட்டது.

கணேசன் முயற்சியை விடாமல், அவனிடம் புதிதாகத் தருவித்துக்கொண்ட அன்னியோன்யத்தில், கொடிச்சப்பரம் மாதிரி ஒண்ணு பண்ணலாம்டா.. அதை எப்படியாவது மிதக்க விட்டுட்டோம்னா ஆச்சு"

"பேச்செல்லாம் நல்லாத்தான் இருக்கு.. சப்பரம் எப்படி பண்றது.."

"எனக்கு தெரியும்.. எங்க கிராமத்துல நுணாக்காவை ஈர்க்குச்சில கோர்த்து சப்பரம் பண்ணுவோம்.. அதே மாதிரி ஈர்க்குச்சிக்கு பதிலா மூங்கில் ப்ளாச்சை அளவா வெட்டி, செருப்பு ஆணியால அடிச்சு, சப்பரம் பண்ணிடலாம்.. நாணா சூப்பரா அலங்காரம் பண்ணுவான்.."

"அதுசரி.. அது எப்படி மிதக்கும்"

இதுவரை பேசாமல் இருந்த ரங்கா குமுட்டிக்குப் பிடிக்காது என்று தெரிந்தும், ஜாம்பவான் மாதிரி ஒரு யோசனை சொன்னான்.

"எப்படியாவது சப்பரத்தை பண்ணிடுவோம்.. உனக்கு புக்-பைண்டிங் தெரியும்..ன்கிட்ட உபகரணங்கள் எல்லாம் இருக்கும்.. மூங்கில் குச்சி எங்க வீட்லருந்து கொண்டு வரேன்.. நாணா அலங்காரம் பண்ணட்டும்.. அதை மிதக்க விடுவது இவன் பொறுப்பு" என்று கணேசனைக் காட்டினான்.

அதற்குக் காரணம் இருந்தது. அதே காரணம்தான் குமுட்டிக்கு கணேசனை ஜென்மத்திற்கும் பிடிக்காமல் போனதும்.

 

 


 

(5) விஞ்ஞானி

 

கிராமத்தில் இருந்து இந்த ஊருக்குப் புலம் பெயர்ந்த ஓரிரு வருடங்களிலேயே, கணேசன் வருங்காலத்தில் எடிசன் போல பெரிய விஞ்ஞானியாக வருவான் என்று அறியப்பட்டான்.‌

அதற்கு வலுவான காரணங்கள் இருந்தன.

அவன் அப்பா தில்லியில் இருந்து வாங்கி வந்திருந்த எலக்ட்ரிக் பொம்மைகளை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து, மோட்டார்கார் மோட்டாரைப் பிரித்தெடுத்து, அதில் காற்றாடி மாட்டிவிட்டு, மின்விசிறி ஆக்குவது, அப்பா ஆசைஆசையாக பொத்திப் பொத்தி வைத்திருந்த ட்ரான்ஸிஸ்டர் ரேடியோவைப் பிரித்து, அதன் உடல்கூறுகளை குத்துமதிப்பாக பேப்பரில் வரைவது (கணேசனுக்கு  பிரிக்க மட்டுமே வரும், திரும்ப சேர்க்க வராது) என்பதெல்லாம் அவனுக்கொரு  அந்தஸ்தை ஏற்படுத்தி விட்டிருந்தது.

அதுவரை, டார்ச்லைட் எரியாவிட்டால் ஒக்கப்பண்ணித் தருவது, ஃப்யூஸ் போன பல்பை மாற்றுவது மாதிரியான தொழில்நுட்பம் அற்ற காரியங்களைச் செய்து வந்த குமுட்டியின் ப்ராபல்யத்தில் மண்ணை அள்ளிப்போட போதுமானதாயிருந்தது.

உருளி பிறந்த போதுகூட சவலை தட்டாத குமுட்டி, கணேசனின் திடும் பிரவேசத்தில் நிறையவே சோபை இழந்து விட்டிருந்தான். அவன் உள் மனதில் இனம் புரியாத வன்மம் கணேசனின் பேரில் திரண்டது.

கணேசனின் விஞ்ஞானப் பார்வை திடுமென ரசாயனத்தின் பேரில் திரும்பியது.

அதற்குக் காரணம்,  பள்ளியில் பழைய சாமான்களை ஒழிக்கும் போது வீரியமிழந்த காப்பர் சல்பேட் கிறிஸ்டல்களைத் தெருவில் எறிந்து இருந்ததை, கணேசன் பொறுக்கி எடுத்து வீட்டிற்கு கொண்டு வந்திருந்தான்.

அதை ரகசியமாக கால்சட்டை பையில் வைத்திருந்தது, கோலிக்குண்டுகள் போல் ஒன்றுக்கொன்று உரசி,  சப்தமேற்படுத்தியதில், அம்மாவிடம் வசமாக மாட்டிக் கொண்டான்.

 

அம்மா அதைக் கையில் எடுத்து பார்த்து, "இதென்ன சக்கரை மிட்டாயா? பூஞ்சக்காளான் பூத்திருக்கு? இதெல்லாம் வீட்டுக்கு கொண்டுவரப்படாது என்று முற்றத்தில் எறிந்தாள்.

அதைக் கையில் எடுத்த அவன் அக்கா, "ஐயையோ.. இது காப்பர் சல்பேட்னா" என்று அலறினாள்.

"அப்படீன்னா என்னடி" என்று கேட்க, அவள், "இது கடுமையான விஷம்.. யாரையாவது சாகடிக்கணும்னா ரசத்துல போட்டுக் கொடுத்தா போறும்" என்றாள்.

அதை எதற்காக ரசத்தில் கலந்து கொடுக்கணும், காப்பில கலந்து கொடுக்கக் கூடாதா என்ற அவனது நியாயமான சந்தேகத்திற்கு யாரும் விடையளிக்கவில்லை.

அதற்குப் பதிலாக அம்மா, பட்டென்று ரெண்டு அடி போட்டு, பாக்கெட்டில் கையை விட்டு, எல்லா கிறிஸ்டல்களையும் அள்ளி, முற்றத்தில் விழுந்தவைகளையும் பொறுக்கி, வாசலில் எறிந்து விட்டு, அவன் கைகளை நன்றாக அலம்பி விட்டாள்.

அதன் பிறகு வேறு வழியில்லாமல் கணேசன் எலக்ட்ரானிக்ஸ் பக்கம் திரும்பி விட்டான்.

இந்தக் காலகட்டத்தில், அறிமுகமானவன்தான் பொன்னுசாமி.

கணேசனை மாதிரியே அவனுக்கும் ட்ரான்ஸிஸ்டர் செய்ய வேண்டும் என்று ஆசை. அவன் கணேசனுடைய அப்பாவிற்கு நெருங்கிய பொற்கொல்லர் நாகரத்தினத்தின் மகனும் கூட.

கணேசனும்  அவனும் பெருமுயற்சி செய்து ட்ரான்ஸிஸ்டர் ரேடியோவிற்கு வேண்டிய உபகரணங்களைச் சேகரித்தனர்..

வீட்டில் எல்லோருக்கும் ஒரே பெருமை. கடைசியில் அந்த நாளும் வந்தது.


 

பொன்னுசாமி அற்புதமான வேலைக்காரன். சிறிய மரப்பலகையை எடுத்து சரசரவென்று சர்க்யூட் வரைந்து, சிறுசிறு ஆணிகள் அடித்து அதன் வழியே, தாமிரக் கம்பிகளைப் பிணைத்து, சர்க்யூட் பிரகாரம் அந்தந்த இடத்தில் பிஎன்பி, டயோடு, ரெஸிஸ்டர், கன்டென்சர் என்று பிணைத்து, இதற்கென வாங்கியிருந்த ஸ்பீக்கரையும் இணைத்தாயிற்று.

முன்கட்டில் குடியிருந்த வாஞ்சி என்கிற சட்டநாதபுரம் வாஞ்சிநாதன்,

இது என்னடா இத்துனூண்டு இருக்கு?

"ஸ்பீக்கர் மாமா"

"என்னடா பண்ணும் இது"

"பாடும் மாமா"

"பேஷ்..பேஷ்"

இதற்குள் அசெம்பிளியை முடித்து  இருந்தார்கள். சப்ளை கொடுப்பதுதான் பாக்கி.

கணேசன் வீடு பூராவும் தேடி, அப்பா அலமாரியில் இருந்து பழைய ரேடியோவின் எலிமினேட்டரைக் கொணர்ந்தான்.

அதைப்பார்த்து பொன்னுசாமி கொஞ்சம் தயங்கினான். 

"இது ரெம்ப பளசா இருக்கே.. வேலை செய்யுமா"

"சூப்பரா வேலை செய்யும்"

அதைப்பிணைத்து, சாமி அலமாரியில் இருந்து, குங்குமம் கொண்டு வந்து, தங்கள் ரேடியோவிற்கு இட்டு ஒரு சிறு பூஜை நிகழ்த்தினார்கள்.

பொன்னுசாமி கணேசனை சுவிட்சைப் போட சொன்னான்.  கணேசன் வீட்டார், குடியிருந்தவர்கள் எல்லோரும் குனிந்து அதைப் பார்க்க, கணேசன் பட்டென்று நடுங்கும் விரல்களால் சுவிட்சைப் போட்டான்.

ஒன்றும் ஆகவில்லை. 

பொன்னுசாமி வால்யூம் கன்ட்ரோலை ஆனமட்டும் திருகினான். புஸ்ஸென்று சப்தம் கூட வரவில்லை. அப்போது அதில் ஏதோ கன்டென்சர் சூடேறி லேசாக புகை வந்தது.

வாஞ்சி மாமா, "ஏண்டா.. என்னமோ பாட்டு வரும்ன? பொகை வருது?"

"அதான" என்றாள் அக்கா.

அதற்குள், பொன்னுசாமி, அங்கங்கு ஆணிகளை அமுக்க, புகை வருவது நின்றது.

ஏதேனும் சப்தம் வருகிறதா என்று பார்க்க, பொன்னுசாமி அதை எடுத்து தன் காதிடம் கொண்டு போய் உற்றுக் கவனித்தான்.

அந்த நேரம் பார்த்து, "டப்"பென்று சப்தமிட்டு ஏதோவொரு பாகம், டயோடு என்று ஞாபகம், வெடித்து விட்டது.

"ஐயையோ" என்று அலறினான் அவன். சின்னஞ்சிறு டயோடு வெடித்ததை அவன் தன் மண்டையோடு வெடித்த மாதிரி அலறினான்.

"சவுண்டு வந்துடுத்து" என்றார் வாஞ்சி.

"அது ரேடியோலேருந்து வரலைங்காணும்.. இந்தப் பய கிட்டேருந்து வருது"

 காதில் லேசாகத் துளை விழுந்து பொன்னுசாமி,  "பின்ன"சாமி ஆகிவிட்டான். 

கணேசன் சுவிட்சை அணைத்து விட்டான். அதற்குள் அம்மா, "யாராவது ஏதாவது ஆயின்ட்மென்ட் கொண்டு வாங்கோ" என்று அலற, கடைசி அக்கா பாய்ந்து சென்று "டைகர்பாம்" எடுத்து வந்தாள். அதை வழித்து அவன் காதில் அப்பி விட, அவன் மேலும் அலறினான்.

அப்பா அவனிடம் "எந்த தெருப்பா நீ" என்று கேட்டார்.

"கம்மாளத் தெருப்பா.. நாகரத்தினம் பத்தர் ரெண்டாவது பையன்பா நானு" என்றான்.

"ஐயையோ" என்றார் அப்பா நிஜமான கவலையில். அதற்கு இரண்டு நாள் முன்னாடிதான் இரண்டாவது அக்காவுக்காக ஒரு ஜோடி தோடு செய்யச் சொல்லி பணம் கொடுத்து வந்திருந்தார்.

கண்ணுக்குக் கண், காதுக்குக் காது என்று தோடு போய்விடப் போகிறதே என்று கவலையாகி விட்டது அவருக்கு.

கணேசனுடைய அம்மா அதற்குள் அவனுக்கு ஒரு டம்ளரில் காப்பி கலந்து கொடுக்க, அவன் அதை அழுகையோடு அழுகையாக சப்புக் கொட்டிக் குடித்துவிட்டு, ஒரு கையால் காதை மூடியவாறு வெளியேறினான். அதற்கப்புறம் அவன் தென்படவில்லை.

(6) குளம் என்னும் களம்

 

இந்த நிகழ்வுகளால் கணேசன் புகழ் மங்கவில்லை. மாறாக அதிகரித்து விட்டது. அந்த தைரியத்தில் தான் தெப்பத்தை மிதக்க வைக்கும் பெரும் பொறுப்பு அவன் தலையில் விழுந்தது.

கணேசனும்  அதை பெரும் சவாலாக ஏற்றுக் கொண்டான். முதலில், தெப்பம் தயாரித்து, ஒரு பெரிய கங்காளத்தில் விடுவது என்று தீர்மானித்து இருந்தனர். அதற்கு வாகாக கணேசன் வீட்டில் ஒரு பித்தளை கங்காளம் ஒன்று இருந்தது. அன்றைக்கும் அடுத்த நாள் காலையும் தெப்பம் தயாரிப்பில் மூழ்கி ஒரு மாதிரி செய்து முடித்து விட்டனர்..

அதற்குள் கணேசனுக்கும் ஒரு யோசனை தோன்றியிருந்தது.

அவர்கள்  வீட்டில் சமீபத்தில் தான் புது குட்டிக்குரா பவுடர் டப்பா வாங்கியிருந்தனர். அந்த காலி டப்பாவை எறியாமல் மூலையில் கிடந்தது. அங்கங்கு தேடியதில் மேலும் இரண்டு காலி டப்பா கிடைத்தது. 

கணேசன் தெப்பம் கோஷ்டியிடம், யோசனை கிடைத்து விட்டது என்று சொன்னான்.

காலி பவுடர் டப்பாக்களில் பெரிய சைஸ் டப்பாக்கள் ஐந்தாறு டப்பாக்களைக் கட்டி, அதன் மீது தெப்பத்தை நழுவாது கட்டினால் மூழ்காமல் மிதக்கும் என்ற அவன்  யோசனை ஏற்கப்பட்டது.

"இதுக்குத் தாண்டா ஒரு விஞ்ஞானி நம்மகூடவே இருக்கணும்கறது"

ஆனால், குமுட்டி ஒப்புக் கொள்ளவில்லை. நிரூபித்துக் காட்டச் சொன்னான்.

கணேசன் வீட்டுக்கு ஓடிப்போய் இரண்டு டப்பாக்களைக் கொணர்ந்து, சணலால் கட்டி, ஒரு பக்கெட்டில் போட்டவுடன் கொஞ்சம் மிதந்தது.

நண்பர்கள், குமுட்டி நீங்கலாக, ஓவென்று கத்தினர். சந்தோஷம் நெடுநேரம் நீடிக்கவில்லை. பவுடர் டப்பாவின் துளை வழியாக, நீர் சிறிது சிறிதாக உள்ளே புகுந்து, டப்பாக்கள் மூழ்கி விட்டன.

குமுட்டி இப்போது ஓவென்று கத்தினான்.

விஞ்ஞானி என்ன ஆனார் இப்போ என்று கெக்கலித்தான்.

கணேசனுக்கு  நிஜமாகவே கவலையாகி விட்டது. இது அவன் அறிவுக்கு இடப்பட்ட சவாலாகவே கருதினான்.

தீவிரமாக யோசித்து, அந்த ஓட்டையை ஈயப்பத்து வைத்து அடைத்து விட்டால், டப்பாக்கள் மூழ்காது என்று தோன்றியது.

அதற்காக கணேசனும்  ரங்காவும் தெருத்தெருவாக அலைந்து ஈயப்பத்து வைக்கிற‌ ஆளை பெரியகோயிலுக்குப் பின்புறம் ஒரு தெருவில் பிடித்தனர்..

"எதை அடைக்கணும்? ஈயக் கச்சிட்டியா?"

"இல்லண்ணே.. பவுடர் டப்பா"

"என்னது பவுடர் டப்பாவா?"

"ஆமாங்க"

அவர் ஒரு மாதிரி பார்த்தார். 

"ஏம்பா.. எனக்குத் தெரிஞ்சு பவுடர் டப்பால ஓட்டைதான் போடுவாங்க.. நீங்க ஓட்டைய அடைக்கணும்கறீங்க"

"இல்லீங்க.. ஒரு விசேசத்துக்காக"

"அதென்னய்யா பளைய பவுடர் டப்பாவை வெச்சு விசேசம்?"

கணேசனும்  ரங்காவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"சொல்ல வேணாம்னா வேண்டாம். எத்தினி டப்பா?"

"ஆறு"

"ப்பூ.. ஆறா? சரி போனா போவுது.. டப்பாக்கு பத்து ரூவா மேனிக்கு அறுவது ரூவா.. பத்துரூவா கொறச்சிக்கிட்டு அம்பது ரூவா ஆகும்"

இருவருக்கும் தூக்கி வாரிப்போட்டது.

கணேசன் ரங்காவிடம் "உன் கிட்ட காசு இருக்காடா"

அவன் கால்சராயில் கைவிட்டுத் துழாவி, நாலணா இருக்கு என்றான்.

கணேசனிடமும் ஒரேயொரு நாலணாதான் இருந்தது.

ஏதோ தெரியாமல் ஆர்வக் கோளாறினால் அவ்வளவு தூரம் வந்து விட்டார்களே தவிர திரும்பும் போதுதான் அதன் கடுமை தெரிய வந்தது.

டபுள்ஸ் வேறு. ரங்கா கொஞ்ச தூரம். கணேசன் கொஞ்ச தூரம்.

கணேசனே  சமீப காலங்களில் தான் டபுள்ஸ் கற்றுக் கொண்டது. அதன் முன்னால் சைக்கிளில் நிறுத்தின வாக்கில் கிளப்பத் தெரியாது. கொஞ்ச தூரம் பெடலில் இடது காலும், வலது காலால் தரையில் விந்தி விந்தி சற்று தூரம் போய் சைக்கிளுக்குத் தானாக ஒரு உந்து சக்தி கிடைத்தவுடன் முன் வழியாக காலை எடுத்துப் போட்டு தான் ஏறிப் பழக்கம். எதிர்த்தாற்போல் ஏதாவது வாகனம் வந்தால் எந்த துணிவும் காட்டாது இறங்கி விடுவான்.

வரும் வழியில் அங்காளம்மன் கோயில் பக்கம் கணபதியைப் பார்த்தனர்.

கணபதி என்பவர் சாணைபிடிப்பவர். சைக்கிள் மாதிரியான காலால் மிதிக்கும் மிஷினைத் தோளில் சுமந்து தெருத்தெருவாக அலைந்து, கத்தரிகளுக்கும், அரிவாள் மனைகளுக்கும்,கத்திகளுக்கும், மண்வெட்டி மற்றும்  களைக்கொட்டுகளுக்கும், அரிவாள்களுக்கும்  சாணை பிடித்துக் கொடுக்கும் நபர்.

இரண்டு கடைவாய்ப் பற்களையும் இழந்து, கன்னம் ஒட்டிப்போய், தலையின் முன் பாகம் இருபுறங்களிலும் முன் வழுக்கை விழுந்து, எழுபதைத் தாண்டி தோற்றம் தருவார்.

வேட்டியும், மேல் பித்தானும் காலத்தின் வன்முறையைத் தாங்க முடியாமல், பிய்ந்து விழுந்து, மற்றதிலும் பேபார்ஸாய் இருக்கும் பித்தான்களைப் பிணைத்தும் பிணைக்காமலும் இருக்கும், ஏதோ ஒரு சமயம் வெளுப்பாகத் தோற்றமளித்திருக்கக் கூடும்.

முழுத் தலையில் ஒற்றைக் கரும் ரோமம் காணமுடியாமல் முகத்தில் எந்நேரமும் துலங்கும் சிநேகமும் புன்னகையும் தான் கணபதி.

அவரிடத்தில் சிறுவர்களுக்கு எந்நேரமும் ஒரு உல்லாசம். அன்போடும் குறும்போடும்

அவர் வீட்டிற்கு முன் நிறுத்தி வேகுவேகு என்று மிதித்து சர்ரென்று பொறிவர சாணை பிடிக்கும் அழகு.

சுட்டுடட்டுமா சுட்டுடட்டுமா என்று சாணைபிடித்த கத்தியைக் குழந்தைகளின் கன்னத்தருகே கொண்டு போய், அவர்கள் படபடக்கும் கண்ணிமைகளோடு சுடப்படத் தயாராகும் குதூகலம்.

கணபதி மாதம் ஒருமுறைதான் வருவார். சக்கரம் இருந்தாலும் அந்த உபகரணத்தைத் தோளில் தூக்கித்தான் ஊரெங்கும் அலையவேண்டி இருக்கிறது.

கணபதியைப் பார்த்த போது, கோவிலின் வெளியே தள்ளு வண்டியில் விற்பனையாகும் தேநீர் அரைக்கப் தம்ளரை ஆட்டி ஆட்டி, ரசித்து ருசித்துக் குடித்துக்கொண்டு இருந்தார்.

அவர் அமர்ந்து இருந்த முக்காலிக்கு இரண்டே கால்கள் தான் இருந்தன. ஊரெல்லாம் சுமை தூக்கி நடந்தே போகிற மனிதருக்கு அந்த பழுதடைந்த இருக்கையும், சிறு பொழுது அமரும் வாய்ப்புமே ஆனந்தமாக இருந்திருக்க வேண்டும்.

ரங்கா அவரிடம், "என்ன கணபதி? ஆளையே காணம்? நல்லா இருக்கியா?" என்று ஒருமையில் ரொம்பவும் உரிமையில் பேசினான்.

அவர் வழக்கம் போல பொக்கை வாய் திறந்து, "நல்லா இருக்கேன் தம்பி.. நீங்க நல்லா இருக்கீயளா"

"நமக்கென்ன.. நல்லாத்தான் போயிட்டிருக்கு.."

"டீ சாப்டறீயளா தம்பி?"

"டீயா.. இப்பவா? மத்யானம் சாப்பிட்டு ஒருமணிக்குள்ள டீ எப்படி சாப்டறது? அதைத் தவிர, நாங்க இங்க டீயெல்லாம் சாப்ட மாட்டோம். வீட்ல காப்பி தான்"

"அது சரி.. அது சரி.. நமக்கு அதெல்லாம் தோதுப்படாதுங்க.. கிடைச்ச எடத்துல அண்டவேண்டியது தானங்க.. என்ன தம்பி நாஞ்சொல்றது?"என்று கணேசனைப் பார்த்தும் புன்னகைத்தார்.

கணேசன் பதிலுக்கு மகிழ்வாகப் புன்னகைத்தான்.

சர்வ நிச்சயமாகத் தெரிந்தது அவருக்கு அடையாளம் தெரியவில்லை என்பது.

ஆயிரக் கணக்கான சிறுவர்களையும் குழந்தைகளையும் வெகுகாலம் பார்த்துக் கொண்டே இருக்கிற பள்ளி ஆசிரியர் போலத்தான் அவரும்.

எப்பவுமே வழிந்தோடுகிற அன்பு, இப்பவும் பெருக்கெடுக்கிறது. அதற்கு அடையாளம் தெரிந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை.

அவர் கையில் டீயில் பாக்கி கொஞ்சம் இருந்தது. இந்த சம்பாஷணைக்கே அது ஆறியிருக்கும். 

மதிய சாப்பாட்டையும், காப்பி மட்டுமே குடிப்பதையும், இவ்விடங்களில் சாப்பிடுவதில்லை என்கிற ரங்காவின் அலட்சிய வார்த்தைகளில் கணேசன் மிகவும் கூசிப்போனான்.

எத்தனையோ நாட்கள் வந்து போன கணபதியிடம் யாருமே ஒருவாய் தண்ணீர் குடிக்கிறீரா என்று கேட்டதில்லை. அவரும் வாய்விட்டு கேட்டதில்லை.

இதோ இந்த அறுபது எழுபது வயதுப் பெரியவரை ஒருமையில் விளித்தும், திரும்ப அவர் மரியாதை தருகிறார். டீ சாப்பிடுகிறாயா என்று பெரிய மனித விருந்தோம்பல்.

அவருக்கே முழு கப் டீ குடிக்கும் வசதி இல்லாமல் தான் பத்து பைசா குறைவான விகிதத்தில் அரைக்கப் குடிக்கிறார். இதுவே முழுகிக் கொண்டு இருக்கிற கடனாயிருக்கும். 

பழுதடைந்த முக்காலியில் அமர்வும், அந்த அரைக்கப் டீயை நிதானமாக ரசித்துக் குடிப்பதிலும் ஒரு செய்தி தெரிந்தது.

அந்த டீ அளவில் மெதுவாகக் குறைவதில், இன்னமும் நிறைய பாக்கி இருக்கிறது என்கிற நினைப்பு அவருக்குக் கூடுதல் தெம்பு அளிக்குமாயிருக்கும்.

மதியம் சாப்பிட்டு இருக்க மாட்டார். அதனால் தான் கண்ட நேரத்திற்குத் தேநீர் அருந்துகிறார். காலையில் மட்டும் என்ன சாப்பிட்டு இருக்க வாய்ப்பு? எவ்வளவு நாள் தேநீரில் காலம் தள்ளுகிறாரோ பாவம்?

இவரது ஜாகை எப்படி இருக்கும்? இவரது மனைவி குழந்தைகள் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்பவர்களாக இருப்பார்கள்? என்ன வருமானம் வரும்?

பசி என்பது வெறும் உணர்வு தானோ? கொஞ்ச நேரத்தில் தானாக சரியாகி விடுமோ என்னமோ? இந்த வயதிற்கு மேல் கணபதியின் வாழ்வு மாறப் போவதில்லை.

அவர் அதைப் பெருந்தன்மையுடன்  ஏற்றுக் கொண்டு விட்டார். அவரிடம் அது நிறையவே இருக்கிறது போலும்.

புன்னகையாகவும், விருந்தோம்பலாகவும், அன்பாகவும் அது நிறைய விரையமானாலும், அவர் காலம் தீருமளவும் இருக்கும் போலும். 

"என்ன தம்பிகளா இம்புட்டு தூரம்"

ரங்கா எல்லாவற்றையும் கூறினான். 

"அம்பது ரூவாயா? அம்மாடியோவ்.. கொள்ளகட்டியா இருப்பாம் போல..அவனுங்க பக்கந்தான் காத்து அடிக்கு.. என்னத்த சொல்ல..

*நகர்ந்து கொஞ்ச தூரம் போனபின் கால்சட்டையைத் தொட்டுப்பார்த்தான்.. நாலணாக் காசு உறுத்தியது. கணபதிக்கு ஒரு பன்னும் வடையும்  வாங்கிக் கொடுத்து இருக்கலாம். இல்லாதுபட்ட கணபதிக்கு அந்த நாகரீகம் போதிக்கப்பட்டு இருந்திருக்கிறது.

கணேசனும்  ரங்காவும் மாறி மாறி பெடல் மிதித்து வீடு வந்து சேர்ந்தனர்.

ஐம்பது ரூபாய் என்றதும் தெப்பகோஷ்டி லத்திசார்ஜ் பண்ணாமலேயே கலைந்து விட்டது.

குமுட்டி புத்திசாலித்தனமாக, மிதக்கும் படலம் கணேசனுடையது  என்று கூறிவிட்டான்.

ரங்காவும் அதுதான்டா நியாயம் என்று கூறி விட்டான். குமுட்டி வீட்டு ரெண்டாங்கட்டில் அரைகுறையாக உருப்பெற்றிருந்த தெப்பம் கணேசனைப் பார்த்து சிரித்தது. 

கணேசன் அம்மா கைவேலையாக இல்லாதபோது, விகடன் படித்துக் கொண்டிருந்தாள். கணேசன் மெதுவாக அவள் புடவைத் தலைப்பைப் பிடித்துத் திருகினான்

"திங்கறதுக்கு ஏதாவது வேணுமா" என்றாள் அம்மா. 

நொறுக்குத் தீனி இருக்கும் இடங்களெல்லாம் கணேசனுக்கு  அத்துப்படி என்பது அவளுக்குமே தெரியும். கணேசன் என்னமோ பெரிதாக அடிபோடுகிறேன் என்று அவளுக்கும் புரிந்துதான் இருந்தது.

கணேசன் தயங்கித் தயங்கி அம்மாவை விரல்களால் நிமிண்டி, " எனக்கு அம்பது ரூவா வேணும்மா" என்றான்.

"என்னது" என்று அதிர்ச்சியோடு வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள் அம்மா.

"எதுக்குடா அவ்வளோ ரூவா"

"பவுடர் டப்பாவ ஒட்டணும்"

"யார் மேல ஒட்டணும்"

"யார் மேலயும் இல்லே.. குட்டிக்குரா பவுடர் டப்பால்லாம் ஓட்டையா இருக்குல்ல.. அந்த ஓட்டையை எல்லாம் அடைக்கணும்"

"அதுக்கு எதுக்கு அம்பது ரூவா.. ஈர்க்குச்சி வச்சு அடைச்சா போறது"

"அதெல்லாம் பண்ணிப் பாத்தாச்சு.. தண்ணி உள்ள போயிடறது"

அம்மாவுக்கு திகிலாகி இருக்க வேண்டும்.

உடனே, கடைசி அக்காவைக் கூப்பிட்டு, "இது மறுபடியும் என்னத்தையோ பண்ணிருக்கு..  பவுடர் டப்பா.. புத்தம் புதுசு.. அதைத் தண்ணீல ஊற வெச்சிருக்கான்னு நினைக்கிறேன்.. உடனே பாரு" என்றவுடன் கணேசனுக்கு  சற்றே மூத்த அவளும் பாய்ந்து, அலமாரியைத் திறந்து, பவுடர் டப்பா சேதாரமில்லாமல் சிரிப்பது கண்டு, ஆயாசப் பெருமூச்சு விட்டாள்.

"இல்லம்மா.. இதுவரைக்கும் போடலை.. இன்னுமேத்தான் போடுவானா இருக்கும்"

கணேசன் ஆதியோடந்தமாக கதையை விளக்கினான். கடைசியாக ஈயப்பத்து வைக்கிறவன் பெரிய மனது செய்து ஐம்பது ரூபாய்க்கு ஒப்புக் கொண்டதையும் கூறினான்.

"அம்பது ரூபாய்னா என்னன்னு தெரியுமா.. புதுசா பத்து பவுடர் டப்பாவே வாங்கலாம்"

கணேசனுக்கு பளிச்சென்று ஒரு யோசனை உதயமாகியது. புது டப்பாவென்றால் ஓட்டை இருக்காது. வேலை சுலபமாகி விடும்.

மெதுவாக அம்மாவிடம், "நீ பத்து வேண்டாம்.. ஆறே ஆறு பெரிய சைஸ் குட்டிக்குரா பவுடர் வாங்கிக் கொடு.. நான் அதை ஓட்டை போடாம, தெப்பத்துல கட்டி, ரெண்டு நாள் கழிச்சு திருப்பிக் கொடுத்துடறேன்.. ப்ராமிஸ்.." என்றான்.

அம்மா ஒரு மாதிரியாகப் பார்த்தாள். நீ தொப்பமும் உட வேண்டாம்.. கப்பலும் உட வேண்டாம்.. பாட புஸ்தகத்தை எடுத்து வச்சுண்டு படி" 

"நீ மட்டும் விகடன் படிக்கறியே"

"பிச்சுப் புடுவேன் பிச்சு.. இன்னோரு தடவை தொப்பம் கிப்பம்னு மூச்சு விட்டியோ.. தோலை உரிச்சுப்புடுவேன்" என்றவளைப் பார்த்து அழகு காட்டிவிட்டு குமுட்டி வீட்டுக்கு ஓடினான்.

அங்கு மற்ற நண்பர்கள் மறுபடியும் கூடி ஏதோ சதியாலோசனை செய்து கொண்டு இருந்தவர்கள் கணேசனைப் பார்த்ததும் நிறுத்தி விட்டார்கள்.

"என்ன.. சயன்டிஸ்ட்.. அடி கெடைச்சதா"

"இன்னுமேதான்"

ஆனால், கணேசனுக்குள் ஏதோ ஒரு உள்ளுணர்வு இது நடக்கும் என்று அறிவித்தது.

"வேற ஏதாவது ப்ரச்சனையா"

"ஆமாம்.."

"ஐயையோ.. என்ன"

"உங்க வீட்டு கங்காளத்தை வைத்தா வீட்டுக் கல்யாணத்துக்கு கொண்டு போனாங்களாமே"

"ஆமாம்"

"வைத்தா வந்துட்டு இப்பதான் போறான்.. அவஞ்சொல்றான்.. நம்ம தொப்பம், கங்காளத்தை விட பெரிசுன்னு"

கணேசனுக்கும் அந்த சந்தேகம் ஆரம்பத்தில் இருந்தது.. மறுபடியும் சாதுவாக நிற்கிற தெப்பத்தை பார்த்தான்.. வைத்தா சொல்வது உண்மைதான்.. தெப்பம் பெரிசு தான்"

அப்படியானால், கங்காளத்தைத்தான் தெப்பத்தில் விடவேண்டி இருக்கும்..

"இப்ப என்னடா பண்றது?"

"இப்ப வந்து கேளு.. வேற வழியில்லை.. வேற ஏதாவது தெப்பக்குளம் தேட வேண்டியதுதான்"

கணேசன் யோசித்து, பேசாம கிணத்துல விட்டுறலாமா?

"யார் வீட்டுக் கெணத்துல? உங்க வீட்லயே விட்ரலாமா?"

"ஐயையோ.. எங்கம்மா தொலச்சுப்புடுவா"

கணேசன் மறுபடியும் யோசித்தான். பேசாம இந்த வீட்டுக் கிணத்துலயே விட்றலாம். கிணறும் மித்தத்துலயே இருக்கு.. கொலுவுக்குப் பக்கத்துலயே வேற இருக்கும்"

அதுவரை பேசாமல் இருந்த குமுட்டி வாயைத் திறந்தான், "அதெல்லாம் சரிப்படாது.. எங்கப்பா தொப்பத்தாலேயே மொண்டு மொண்டு குளிச்சுடுவார்"

இதென்ன.. எந்த வேளையில் ஆரம்பித்தோம்.. இப்படி.. சோதனை மேல் சோதனையாக வருகிறதே, என்று வருத்தமாக இருந்தது.

அப்போது பளிச்சென்று கணேசனுக்கு  ஒரு யோசனை தோன்றியது.

"டேய்.. பேசாம இங்கே கிணத்துக்கு பக்கத்தில் இருக்கற தொட்டில தண்ணி ரொப்பி தொப்பம் விடலாம்.. கொலுவுக்கு நேர் எதிராவும் இருக்கும்.. "


 

எல்லோரும் ஆமோதிக்க, இத்தனை சம்பாஷணையையும் கேட்டுக் கொண்டிருந்த ரவி, வந்து மெதுவாக, "அந்த தொட்டியை க்ளீன் பண்ண முனிசிபாலிடிலேருந்து ஆள் வரணும்.. அவ்வளவு குப்பை.. விக்டோரியா ராணி காலத்துலேருந்து குப்பை போட்டுண்டு இருக்கோம்" என்றான்.

அதுவொரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஐந்தாறு சிறுவர்கள் நினைத்தால் என்னதான் முடியாது? அதில் ஒரு சிக்கல். அவர்கள் வீட்டில் காகிதக் குப்பைகளை வெளியில் எறிய மாட்டார்கள். கிணறு தூர்வார மாட்டார்கள். 

சகோதர விரிசல் மட்டுமல்ல..  அந்த வீட்டில் கிணற்றைச் சுற்றியோ, கீழேயோ புதையல் இருப்பதாக ஒரு வதந்தி. 

அதைப்பற்றிய‌ ஆவணங்களோ செய்திகளோ, ஏதேனும் காகிதத்தில் புதைந்திருக்கக் கூடும் என்ற நம்பிக்கையில் காகிதக் குப்பைகளை எறிவது இல்லை.

 கிணற்றில் தூர்வாரப் போய், தூர்வாருகிறவன் புதையலைக் கொண்டு போய்விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் தூர்வாருவதும் இல்லை.

ஒருமுறை, குமுட்டியின் பாட்டி, தண்ணீர் சேந்தும் போது, கால் வழுக்கி உள்ளே விழுந்து விட்டாள்.

பாட்டி படு கிண்டு. எதையோ பிடித்துக்கொண்டு தண்ணீருக்குள் மூழ்காமல் தலை மட்டும் தெரிய கத்திக் கொண்டு இருந்தாள்.

 வழக்கம் போல திண்ணையில் எல்லோரும் விளையாடிக் கொண்டு இருந்தனர்.. எல்லோரும் அலறியடித்து உள்ளே ஓடி, சந்தடி சாக்கில் கணேசனும்  எட்டிப் பார்க்க, பாட்டியின் தலைமட்டும் நீர் மட்டத்தின் மேல் தெரிந்தது.

அதற்குள் சமையல் வேலை செய்யும் செங்கம்மா மாமி ஓடிவந்து, விஷயமே புரியாமல், யாராவது பாதாளக் கொலுசு கொண்டு வாங்கோ என்று அலறி, கூட்டத்தில் எப்படியோ கணேசனைப் பார்த்து, "இவங்க வீட்ல இருக்கு.. டேய் சீக்ரமா எடுத்துண்டு வாடா" என்று விரட்டி விட்டாள்.

கணேசன், சிட்டாய்ப் பறந்து, அம்மாவிடம், இரைக்க இரைக்க, "அம்மா.. டாக்டர்  வீட்ல பாதாளக்கொலுசு கேக்கறாங்க" என்றான்.

அம்மா கடுப்புடன், "நம்ம வீட்ல இருக்குன்னு வேலை மெனக்கெட்டு சொன்னியாக்கும்" என்று இரைந்தாள்.

"நான் சொல்லல.. செங்கம்மா மாமி சொன்னா"

"அவளை இன்னுமே வீட்டுக்குள்ளே விட்டேனா பாரு.. எப்ப வந்தாலும் எதையாவது நோட்டம் விடறதே வேலை"

அதற்குள், கடைசி  அக்கா கேட்டாள், "வாளி விழுந்துடுத்தாடா"

"இல்லடி. பாட்டி உழுந்துட்டா"

"என்னது பாட்டியா? என்னடா உளர்றே.."

"நான் உளறலே.. பாட்டி தான் பக்கெட் எடுக்கும் போது வழுக்கி உள்ள உழுந்துட்டா"

"ஐயையோ.. அப்றம் என்னாச்சு"

"தெரீல.. ஆனா.. தலை கெடச்சுடுத்து" என்றான்.

"சீச்சீ. உளறாதே."

"நான் ஒண்ணும் உளறலே. பாட்டியோட தலை மட்டும் மிதக்கறத நானே பாத்தேன்."

எதோ விபரீதம் என்பது மட்டும் புரிந்தது.

அதை விட, கிணற்றில் யாரோ ஆள் விழுந்ததைப் பார்க்கும் ஆவலால்  உந்தப்பட்டு, அனைவரும் டாக்டர் வீட்டுக்கு விரைந்தனர்.

கணேசன் அம்மாவை இழுத்து, "அம்மா.. பாதாளக் கொலுசு?" என்று ஞாபகப் படுத்த, அம்மா "ச்சீ..பைத்தியம்" என்று நறுக்கென்று போகிற போக்கில் குட்டு வைத்தாள்.

பெருங்கூட்டமாக அங்கே கூடவும், தீயணைப்புப் படை வருவதற்கும் சரியாக இருந்தது. அவர்கள் பாட்டியை பத்திரமாக மீட்டனர். குமுட்டியின் அப்பா அவர்களுக்கு பணம் கொடுக்க முயன்றபோது அவர்கள் பெருந்தன்மையாக அதை மறுதலித்து விட்டு சென்றனர்.


 

பாட்டி கிரகணம் மாதிரி முழுக்க மூழ்குவதைப் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் வந்தவர்கள் கலைந்து சென்றனர்.

எல்லோரும் போன பிற்பாடு, அவர்கள் குடும்பமாக சூழ்ந்திருந்த தருணத்தில், கணேசன் இருப்பதை உணராமல், குமுட்டியின் அப்பா பாட்டியிடம், ஏதாவது புதையல் பானை தட்டுப்பட்டதா என்று கேட்டார்.

பாட்டி பதிலுக்கு விகண்டையாக "இல்லை.. உங்கப்பா வாவான்னு கூப்ட்டது தான் கேட்டது" என்றாள்.

"போயிருக்க வேண்டியதுதானே" என்று அவர் முணுமுணுத்ததை யாரும் கேட்கவில்லை. கணேசனைத் தவிர.


(7) தொட்டி

 

நவராத்திரியை முன்னிட்டு புதிய களமான அந்தத் தொட்டி ஒரு தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டு இருந்தது. நான்கு பேர் அதை உருவ முயன்று முடியவில்லை. அப்புறம் ஏழெட்டுப் பேர் மூச்சுப்பிடித்து அப்புறப்படுத்தினர்.

அந்த வீட்டில் ஒரு சௌகரியம். குமுட்டியின் அம்மா பரம சாது. யார் எது செய்தாலும் ஏனென்று கேட்க மாட்டார். அப்பா ஹைஸ்கூல் தலைமை ஆசிரியர். மிகமிகக் கெடுபிடி. ஆனால் பசங்க விஷயத்தில் போகட்டும் என்று விட்டுவிடுவார்.

கணேசன், உருளி, சந்துரு எல்லாம் பெரும்பாலும் அவர்கள் காமரா உள் கட்டில் மேல் ஏறி, பரணுக்குப் போய் ஏதாவது விளையாடுவார்கள். இல்லையேல், அதன் வழியாக இரண்டு தாழ்வாரத்து அறைகளுக்கும் பொதுவான மச்சிலுக்குள் நழுவி, அநேகமாக எல்லா பாத்திரங்களையும் உருட்டி விடுவார்கள். அவ்வப்போது, குமுட்டியின் அம்மா, டேய் பசங்களா என்று ஈனஸ்வரத்தில் கூப்பிடுவார்.

அவ்வப்போது குமுட்டி வந்து, பெரிய மனிதத் தோரணையில் விரட்டி விடுவான். அதனால், தொட்டியை செப்பனிட்டு, நடுக்கூடத்தில்  என்னமோ ஊழல்காரியம் செய்யப் போகிறார்கள் என்று ஏதோ உணர்த்தினாலும் பெரிய எதிர்ப்பு இல்லை.

போதாததற்கு, குமுட்டி வேறு ஈடுபட்டு இருக்கிறான். 

அந்தத் தொட்டியைக் கிளறி, நூற்றாண்டுக்கால குப்பையை, அவர்கள் வீட்டின் மூன்றாம் கட்டில் சமையலறையை ஒட்டிய அறையில் சோமாத்துவது என்பது  நினைத்த அளவிற்கு சுலபமாயில்லை.

கணேசனுக்கு வேறு மிதவையை தயார் செய்தாக வேண்டும் என்று உதைப்பு. மனதிற்குள் ஓரிரண்டு யோசனைகள் உருப்பெற்று இருந்ததில் கலவரம் லேசாகக் குறைந்திருந்தது.

சாயங்காலம் நான்கு மணியளவில் தொட்டி, தொட்டியாக உரு  மாறியது. களைப்பாக இருந்தாலும் உற்சாகமாக இருந்தது.

அப்போதுதான், வெளியே போயிருந்த ரவி, தொட்டியை எட்டிப் பார்த்துவிட்டு, அடப்பாவிகளா என்று ஆச்சரியப் பட்டான்.

வழக்கம் போலவே மெதுவான குரலில், "அதெல்லாம் சரி... இதுக்கு தண்ணி எங்கேருந்து சப்ளை பண்ணப் போறீங்க" என்றான்.

"கிணத்துலேருந்து தான்"

"கிழிஞ்சுது போ.. ஏண்டா.. இது என்ன.. சிவபெருமான் தலையிலேருந்து கங்கை தானா பீச்சியடிக்கற மாதிரி அடிக்குமா? கிணத்துலேருந்து இரைக்கணும்டா" என்றான்.

"நாங்கதான் அஞ்சாறு பேர் இருக்கமே" என்றான் ரங்கா.

அதற்குள், நாணா, "டேய்.. எனக்கு எத்தனை வேலை கொடுப்பே.. நான் தெப்பத்தை ரெடி பண்ணனும்" என்றதால், அவனுக்கு விலக்கு கொடுக்கப்பட்டது..

சாமு இங்குமங்கும் வயிற்றைத் தடவிக் கொண்டு நடந்தவன், "நேத்திக்கு சாப்ட்ட சுண்டல் ஜெரிக்கலை.. போயிட்டு அரைமணில வர்றேன்" என்று காணாமல் போனான்.

இருந்தாலும் மனந்தளராமல், மீதமிருப்பவர்கள் தண்ணீர் இறைக்க ஆரம்பித்தனர். தண்ணீர் கிட்டே இருக்கிற மாதிரி இருந்தாலும், மூன்றாவது பக்கெட்டிலேயே நாக்கு தள்ளியது.

கணேசன் கிணற்றில் தண்ணீர் இறைக்கவெல்லாம் அனுமதிக்கப் பட்டவனே இல்லை. ஒருமுறை, அவர்கள் வீட்டுக் கிணற்றடியில், அம்மா துவைத்துக் கொண்டிருக்க, கணேசன் பொழுது போகாமல், கிணற்றை எட்டிப்பார்க்கும் போது காலில் கயிறு மாட்டிக் கொண்டு விட்டது. ஒரு சிறு கணம்தான். கணேசன் கயிற்றில், கிணற்றுக் கட்டையின் வெளியில்தான், நிலைகொள்ளாமல் ஊசலாட, அம்மா அப்படியே பறந்து வந்து கணேசனை இறுக்கிக் கொண்டாள்.

அடுத்த இரண்டு நாட்கள் அம்மா ஒரே அழுகை. மூன்றாவது நாள், ப்ளெஷர் கார் ஏற்பாடு செய்து, குடும்பத்தோடு குலதெய்வம் கோயில் போய் அபிஷேகம் செய்து விட்டு வந்தார்கள்..

அப்படி ஒவ்வொரு கணமும் கண்காணிக்கப்பட்ட கணேசன்,  வீட்டிற்குத் தெரியாமல், யார் வீட்டிலோ சம்பந்தம் இல்லாமல், மூச்சு முட்ட தண்ணீர் இறைக்கிறான்.

பத்துப் பதினைந்து வாளி இறைத்திருப்பார்கள்..

தொட்டியில் ஈரப்பசையே காணவில்லை. தொட்டி ஒழுகுகிறதோ என்று சந்தேகப்பட்டு அதன் இரண்டு பக்கங்களையும் நன்றாகத் தடவிப் பார்த்தனர். மற்ற இரண்டு பக்கங்களும் கூடத்தை ஒட்டிய தாழ்வாரம் அடைத்து இருந்தது. 

இதன் அமைப்பை விவரிப்பதை விட, புரிந்து கொள்வது கடினமானது. புரிந்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. அதைவிடப் பெரிய கவலை நெஞ்சுவலி வருகிற அளவிற்கு இறைத்து ஊற்றிய நீர் என்னவாயிற்று என்பதுதான்.

ஒருவேளை தொட்டி பலநாள் உபயோகத்தில் இல்லாமல் தண்ணீர் கண்டதும் குடித்து விடுகிறதோ?

சுற்றி சுற்றி தண்ணீரைத் தேடுவதைக் கண்டு, ரவி என்னவென்று விசாரித்தான்-

"எவ்வளவு பக்கெட் ஊத்தினீங்க?"

"பத்தோ பன்னண்டோ"

"சரியாப் போச்சு.. அது காலளம்பவே காணாது.. இது என்ன பெரிய சைஸ் பக்கெட்டா சட்டுனு ரொம்பறதுக்கு? ஒரு கல்யாணம் பண்ணலாம்.. இருநூறு முந்நூறு பக்கெட் ஈஸியா கொள்ளும்"

முந்நூறா என்று வாயைப் பிளந்தனர்.

"வேற புதுக் கயிறு போடணும் ராட்னத்துக்கு.. இது தாங்காது"

தெப்பம் விடுவதற்குள் அவர்கள் வீட்டை, நம்மை வைத்தே முழுவதுமாக மராமத்து செய்து விடப் பார்க்கிறார்கள் என்றான் ரங்கா.

ஆறுமணிவரை இழுஇழு என்று இழுத்து நிரப்பினாலும் கால்தொட்டிதான் நிரம்பி இருந்தது.


 

(8) மிதவை

 

கணேசன் பவுடர் டப்பாக்களை சேகரிக்கத் தொடங்கினான். குமுட்டி  வீட்டுத் தொட்டியை சுத்தம் செய்தபோது ஒரு துருப்பிடித்த டப்பா கிடைத்தது. நல்ல வேளையாக வேறெங்கும் துளைகள் இல்லை. கணேசனிடம்  மூன்று தேறியது.

 

இருட்டிய பின், கொலு பார்க்கப் போகும் சாக்கில், பழைய குப்பைகளை பொறுக்குபவனைப் போல வீடு வீடாக ஏறி இன்னும் மூன்று சேகரித்து விட்டான்.

 

எல்லா பவுடர் டப்பாக்களிலும் கருணையில்லாமல் வாய்ப்பாகத்தில் ஒரு துளையாவது இட்டிருந்தார்கள். காசு செலவில்லாமல் அவைகளை அடைக்க வேண்டும்.

 

மதியம் தோன்றிய யோசனைகள் பலனற்று விட்டன. இரவு சரியாக தூக்கம் பிடிக்கவில்லை. காலை சீக்கிரம் எழுந்து விட்டான். காரணமிருந்தது. ஒரு அருமையான யோசனை கிட்டி இருந்தது. அதை செயல்படுத்த வேண்டும்.

 

கணேசனும்  நாணாவும் துரிதமாக இயங்கி டப்பாக்களை அழகாக மூங்கில் ப்ளாச்சுகளில் பிணைத்தனர். அது அழகாக தெப்பத்தின் அடிப்பாகத்தில் வெளியே தெரியாதவாறு பொருந்தியது. நாணா " ஓட்டைக்கு என்னடா பண்ணப் போற" என்று கேட்டான். கணேசன் முறுவலித்தான்.

 

கணேசனும்  பொன்னுசாமியும் ரேடியோ தயாரிப்பில் இருந்த போது தாமிரக் கம்பிகள் சரியாகப் பொருந்திக் கொள்ள, பிச்சுக்கட்டி என்ற தார்மாதிரி இருக்கிற ஒன்றைப் பயன் படுத்துவார்கள். அது உபகரணங்களோடுதான் இருக்க வேண்டும். வழக்கம் போல் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அம்மா எங்கேயோ எறிந்து விட்டாள் போலிருக்கிறது.

 

விஷயம் அப்பாவிடம் சென்றது. அப்பா பொறுமையாகக் கேட்டார். "அதுக்குப் பேரு என்ன? பிச்சக்குட்டியா"

 

"பிச்சுக்கட்டி"

 

"ஏதோ ஒண்ணு.. கீழப்பாலத்துல வெங்கடேஸ்வரா ஏஜன்ஸீஸ் போயி கேட்டுப் பாரு...  இருக்கும்.. இல்லேன்னா பந்தலடிதான் போகணும்.. பாரத் ட்ரேடர்ஸ்ல இல்லாம இருக்காது.. ஆனா அங்க தனியா போகப்படாது.. நான் ஆஃபீஸ் போகும்போது வா.. வாங்கித் தரேன்.. உடனே திரும்பி வந்துடணும்".

 

அவனை அலைக்கழித்த சமாச்சாரம் சுமுகமாக முடிந்ததில் மிகவும் சந்தோஷமாக இருந்தது.

 

அப்பா ஐந்து ரூபாய் கொடுத்தார். மூணு ரூபாய்க்கு வாங்கினாப் போறும்.

 

"சரிப்பா".. குதித்துக் கொண்டு கீழப்பாலம் ஓடினான்.

 

போகிற வழியில் குமுட்டி எதிர்த்தாற் போல் வந்தான். 

 

"எங்கடா ஓடற?"

 

"பிச்சுக்கட்டி வாங்க"

 

"உண்டக்கட்டி தான் கேள்விப் பட்டுருக்கேன்.. இது என்ன குழம்பு சாதமா" என்று இடிஇடியென்று சிரித்தான். கணேசனுக்கு  ரசிக்கவில்லை. கணேசன் நேராக கீழப்பாலத்தில் அப்பா சொன்ன கடைக்கு போனான்.

 

கணேசனின் போதாத காலம் பிச்சுக்கட்டி கிடைக்க வில்லை. தளர்வாகத் திரும்பி நடந்தான். வீட்டுக்குள் நுழையும் முன்பே நண்பர்களால் பிடிபட்டான். மறுபடியும் கிணறு, வாளி. 

 

இந்த முறை குமுட்டியின் சித்தப்பாவும் பாதியில் சேர்ந்து கொண்டார். அதற்காக அவர் தண்ணீரெல்லாம் சேந்தவில்லை. வெறும் மேற்பார்வை. 

 

அரைத் தொட்டி ரொம்பியிருக்கும். தண்ணீர் திப்பி திப்பியாக சகதியாக வர ஆரம்பித்து விட்டது. இனிமேல் கிணற்றில் தண்ணீர் ஊறினால்தான் உண்டு. 

 

கிணற்றை எட்டிப் பார்த்து விட்டு, தண்ணி இருக்கு.. தூர் வாரவே இல்லையா..  சேறும் சகதியுமா இருக்கு.. யாராவது உள்ளே இறங்கி, நாலஞ்சு பக்கெட் எடுத்தாலே போறும்.. மறுபடி சடசடன்னு ஊறிடும்" என்றவாறே கணேசனை ஒரு தினுசாகப் பார்த்து,

 

 "இந்தப் பய பொடிசாதானே இருக்கான்.. இங்க வாடா" என்று இழுத்து, "நீ இந்த பக்கெட்ல உக்காந்துக்கோ.. நாங்க பத்ரமா இறக்கி விட்டுர்றோம்.. நீ கீழேந்து அள்ளி அள்ளி பக்கெட்டுல போட்டேன்னா, ரொப்பினப்பறம் நாங்க இழுத்துக்கறோம்".

 

கணேசனுக்குக் குலை நடுங்கி விட்டது. கிணற்றுக்கு வெளியில் விழுந்ததற்கே குலதெய்வம் கோயிலுக்கு கார் வைத்துக் கொண்டு போன குடும்பம் அவர்களது. இப்போது கிணற்றுக்குள்ளேயே தள்ளப் பார்க்கிறான் இந்த ஆள்.

 

சித்தப்பனின் முழியைப் பார்த்தால் அவன் தூர் வாருவதற்காக கணேசனை இறக்க முற்படவில்லை என்று தோன்றியது. புதையலைக் கண்டுபிடிக்க மந்திரவாதிகள் மாதிரி கணேசனை நரபலி கொடுக்க முயற்சிக்கிறான் போலும். 

 

அவனுடைய அனுமதி இன்றியே கணேசனை தாம்புக்கயிற்றால் பிணைக்கவாரம்பித்தார் அவர்.

 

கணேசனுக்கு  வழக்கம் போல நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. நல்ல வேளையாக அவர்கள்  குலதெய்வம் கோதாவில் இறங்கி, சந்துருவை அனுப்பியது.

 

நேராக கணேசனிடம்  வந்து, "நீ கீழப்பாலம் போறேன்னு கிளம்பி தொலஞ்சு போயிட்டேன்னு உன்னை எல்லாரும் வலை போட்டு தேடிண்டு இருக்காங்க" என்று கூறினான். கணேசன் ஒருக்கணம் கூட தாமதிக்காமல் வெளியே ஓடினான்.

 

 ஓடினவனைத் தடுத்து குமுட்டி, "என்ன விஞ்ஞானி? சோப்புக்கட்டி கிடைச்சுதா?"

 

"இல்லை.. பந்தலடிலதான் கிடைக்கும்"

 

"தோ பாரு.. உனக்கு மத்யானம் மூணு மணிவரைதான் டயமு.. அதுக்குள்ள வந்தா உண்டு! இல்லைன்னா, நான் என்வழில மிதக்க விட்ருவேன்.. அப்றம் வருத்தப்படப் படாது... நீ மட்டுந்தான் விஞ்ஞானின்னு நெனச்சுக்கப் படாது.. இங்கே உன்னை விட பெரிய ஆளுங்கள்லாம் இருக்கோம்"


 

(9) பசித்த மானுடம்

 

வீட்டிற்கு வந்தவுடன் அம்மா திட்டிக் கொண்டே சாப்பாடு போட்டாள். மனம் சாப்பாட்டில் லயிக்கவில்லை. ஒரே சமயத்தில் கிணறு, தொட்டி, தண்ணீர், தெப்பம், தெப்பம்-தெப்பம் என்று திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருந்தது.

 

சாப்பிட்டுக் கை கழுவிக் கிளம்பிய‌ கணேசனை, பளிச்சென்று ஒன்று போட்டாள் அம்மா.

 

"வெளீல தீதீதீன்னு போனேன்னா காலை ஒடிச்சிடுவேன். இது என்ன பழக்கம், எப்பப் பாத்தாலும் குமுட்டி வீட்ல சாக்கடை அள்றதுன்னு? புஸ்தகத்தை வச்சுண்டு படி."

 

"அம்மா.. கால்பரீட்சை லீவும்மா"

 

"அதுனால.. அத்ரத்தையா படிப்பு முடிஞ்சுடுத்தா? படிச்சதையே திரும்பப் படி.." என்று திட்டியவுடன், கணேசன் கோபித்துக் கொண்டு, பேருக்கு ஏதோ கணக்கு புத்தகத்தை வைத்துக் கொண்டு, முற்றம் குறட்டில் உட்கார்ந்து, படிக்கிற மாதிரி பாவலா செய்தான்.

 

"வாய்விட்டு சத்தமா படி"

 

"இது கணக்கு.. பொட்டை நெட்டுரு போட முடியாது"

 

"ஏதாவது சாக்கு சொல்லு"

 

கணேசன் மெதுவாக புத்தகத்தை மேய்ந்து கொண்டே தன்னை அறியாமல் உறங்கி விட்டான்.

 


 

கணேசனை சுற்றி என்னென்னவோ குழப்பமான சப்தங்கள்.

 

தெப்பம் தானாக தரையில் ஓடுகிறது. திடுமென்று வந்து, இது தேர்னு நினைச்சு ஏமாந்துட்டியா.. இது பல்லக்கு என்று தோளில் தூக்கிக் கொண்டு போகிறார்கள். செங்கம்மா மாமி, இந்தப் பையன்தான்.. இந்தப் பையன்தான்.. இவன்தான் குமுட்டியைக் கிணத்துல போட்டவன் என்கிறாள். பாதாளக் கரண்டியை பாதாளக் கொலுசுன்னு ஏன் சொல்றீங்க என்று யாரோ கேட்கிறார்கள். பாட்டி கிணத்திற்குள் குதித்து உடைந்த பக்கெட்டை வெளியில் கொண்டு வருகிறாள். புதையல் கிடைச்சாச்சு என்று ரங்கா  காதில் கூவுகிறான்.

 

கணேசனுக்கு  விழிப்பு வந்து விட்டது. பார்த்தால் ஒருமணி ஆகியிருந்தது.

 

அம்மா வெள்ளிக்கிழமை என்பதால் சுண்டலுக்குப் பதிலாக புட்டுக்கு மாவு இடித்துக் கொண்டு இருந்தாள். கணேசன் சத்தம் போடாமல் நழுவி வெளியே வரும்போது கடைசி அக்கா திண்ணையில் படித்துக் கொண்டிருந்தாள். 

"எங்கடா போற"

 

"போகும்போது ஏண்டி எங்க போறன்னு கேக்கற? உருப்பட்டாப்லதான்"

 

"நீ எப்போ உருப்படற‌ காரியம் பண்ணியிருக்க?"

 

"ச்சீ.. பே"

 

கடையை அடைந்த போது கடை திறந்து இருந்தது. கணேசனைப் பார்த்தவுடன்தான் அவர் பிச்சுக்கட்டியைத் தேடவாரம்பித்தார். சாம்பிராணி கட்டிகள் மாதிரி ஓரிரு கட்டிகளே இருந்தன. 

 

"எவ்வளவுக்கு தம்பி வேணும்"

 

கணேசன் தன்னை  அறியாமல் அஞ்சு ரூபாய் என்றான். 

 

அவர் இருப்பதிலேயே சிறிய கட்டியை எடுத்து, ஒரு பேப்பரில் மடித்துக் கொடுத்தார்.

 

வீடு திரும்பும் வழியில், குமுட்டி வீடு பக்கம் அநிச்சையாகத் திரும்பிய கால்களை வலுக்கட்டாயமாகத் திருப்பி வீட்டில் நுழையும் போது இரண்டரை மணி ஆகியிருந்தது.

 

தானாகவே அம்மாவிடம் சென்று பசிக்கிறது என்று சொன்னதைக் கேட்டு, "இதென்னடி புதுக்கூத்தா இருக்கு" என்று ஆச்சரியப் பட்டாள்.

 

 தயிர்சாதத்தைப் பிசைந்து கையில் உருட்டி உருட்டி ஒவ்வொரு உருண்டைக்கும் வற்றல் குழம்பு ஊற்றிக் கொடுத்தாள். கணேசன் மேலெல்லாம் குழம்பு வழிய, அதை தேவார்மிதமாக உறிஞ்சி சாப்பிட்டான்.

 

"ஊட்டி விடறது தானே"

 

"உனக்கேண்டி.. அது பிறக்காதான்னு பிறந்த குழந்தை..அதுக்கு வேணும்னா ஊட்டி கூட விடுவேன்".

 

கணேசன் வாயைக்கூட அலம்பாமல் "டுர்ர்"ரென்று சப்தமிட்டு, குமுட்டி வீடு விரைந்தான்.

 


 

(10) வெள்ளோட்டம்

 

குமுட்டி வீட்டில் வரவேற்பு வேறாக இருந்தது.

 

"வாங்க  சயன்டிஸ்டு.. எங்க? காரியம்ன உடனே ஊரைவிட்டு ஓடிப்போயிட்டே"

 

"பாதி தொட்டிய நான்தானடா ரொப்பினேன்"

 

"கிழிச்சே"

 

கூடத்தில் கொலுவுக்கும் தொட்டிக்கும் இடைப்பட்ட தாழ்வாரத்தில் ஒரு பலகையில் கோலம் போட்டு தெப்பத்தை நிறுத்தி இருந்தார்கள்.

 

கணேசன் குமுட்டியிடம் கையில் இருந்த பிச்சுக்கட்டியைக் காட்டி, ஒரு சிம்னி விளக்கு வேண்டும் என்று கேட்டான்.

 

"இது என்ன சாக்லேட்டா?"

 

"ச்சீ.. இதுதான் பிச்சுக்கட்டி"

 

"அந்தத் கருமம் இதானா?"

 

"ஆமாம்.. சிம்னி விளக்குல சூடுபண்ணினா அரக்கு மாதிரி உருகும்.. அதை சூடு ஆறரதுக்குள்ள பவுடர் டப்பாவை அடைச்சுடலாம். அதுக்கு மேல ஒரு அத்துக்கு இந்த டேப்பை போட்டு ஒட்டிட்டோம்னா நாலஞ்சு மணிநேரமாவது தாங்கும்.. அதுக்குத்தான்"

 

"நீ ஒண்ணும் கிழிக்க வேண்டாம்.. நாங்க எல்லாம் பண்ணியாச்சு" என்றான் குமுட்டி.

 

அனைவரும் சிரித்தனர்.

 

"நீ என்ன பண்ணினன்னு தெரிஞ்சுக்கலாமா?"

 

"நாளைக்கு மத்யானம் தெப்பத்தை எடுக்கும்போது பார்த்துக்கோ"

 

"இப்ப தெரிஞ்சுண்டாத்தான் என்ன?"

 

"சஸ்பென்ஸ்.. நீ மட்டும் சொன்னியா என்ன பண்ணப் போறேன்னு.. அது மாதிரிதான்"

 

கணேசனுக்கு  அழுகையாக வந்தது. இந்த தெப்பம் ஐடியா கொடுத்தவனே கணேசன்தான். குமுட்டி செமத்தியாக உதை வாங்கி, குப்புறக் கிடந்த போது, அவனை திரும்ப மீட்டுக் கொண்டு வர முயன்றவனும் அவன்தான்.

 

தன் ஐடியாதான் என்றாலும், முதல் முறையாக, அந்த தெப்பத்தை வெறுத்தான்.

 

அது ஒன்றும் அவ்வளவு சிறப்பாக இல்லை. சில இடங்களில் மூங்கில் தெரிந்தது. பழைய ரவிக்கை பிட்டுகளால் அதை போர்த்தியிருந்தது போதவில்லை. கலசம் மாதிரி ஒரு சிறு பித்தளை சொம்பைக் கவிழ்த்து இருந்தான் நாணா. தன்னிடம் சொல்லி இருந்தால் நல்லதாகக் கொண்டு வந்திருக்கலாம்.

 

இது படு பழசாக, தேய்க்கப்படாமல், மடிப்புகளில் பச்சை தெரிய இருந்தது மட்டுமல்லாமல் லேசாக நசுங்கியும் இருந்தது. சினிமாக்களில் அந்தரங்க சுத்தி செய்துகொள்ளப் போகிறவர்கள் உபயோகிக்கிற மாதிரி.

 

சீரியல் லைட்டில் பாதியை நறுக்கி எறிந்து விட்டு, டார்ச் லைட் பாட்டரியில், ஊக்கைப்பிளந்து திணித்து எரிய விட்டிருந்தான் பாஸ்கர்.

 

மாங்கு மாங்கென்று தண்ணீர் இறைத்து, நிரப்பி, வடிவமைப்பதில் இருந்து யோசனை சொன்ன கணேசனைத் திட்டமிட்டே புறக்கணிக்கிறார்கள்.

 

இவர்கள் எல்லோருக்குமே அவன் பேரில் ஏதோவொரு பொச்சரிப்பு இருக்கிறது. அவன் யாரையும் புண்படுத்துவது இல்லை. நல்லவனாக இருக்கிறான். சாதுவாக இருக்கிறான். எதிர்த்துப் பேசுவதில்லை. ஆனாலும் கணேசனைப் பிடிப்பதில்லை. இந்த பேபார்சான உருவத்துக்கு இவ்வளவா என்கிற அசூயை.

 

எவ்வளவு வன்மம் இவன் பேரில்?

 

இவனுக்கு என்ன கிடைத்து விட்டது என்று இவன் பேரில் இவ்வளவு ஆத்திரம்?

 

சுந்தாவுக்கு இருக்கும் எரிச்சல் நியாயமானது. அவன் திறமைசாலி. நாலாவது படிப்பதில் இருந்து, சுயமாக நாடகங்கள் எழுதி, பையன்களைத் திரட்டி, ஒரு திண்ணை விடாமல் நாடகம் போடுகிறான்.  கணேசன் கூட ஓரிரண்டு நாடகங்களில் நடித்து இருக்கிறான். கொஞ்சம் சுமாரான பாத்திரங்கள். ஆனால், அவனுக்கு ஒரு அட்சரம் வசனம் இல்லாமல் வெற்று உடம்பில் வெறுமனே வருகிற பாத்திரம் கிடைக்கிறது. கணேசன் மந்திரியாக உடம்பெல்லாம் நகைகளுடன் பட்டு பீதாம்பரம் சகிதம் ஒரு பக்கம் வசனம் பேசுகிறான்.

 

ஆனால், குமுட்டிக்கு எல்லாம் கணேசனை விட அதிகமாகவே கிடைக்கிறது. அவனுக்கு ஏன் இவன் பேரில் காழ்ப்புணர்ச்சி?

 

ஆகிருதி, குரல், வலிமை, அவனைப்பார்த்து எல்லோரும் பயம் கொள்கிறார்கள். அவனை எல்லோருக்கும் தெரிகிறது. கணேசனை யாருக்குத் தெரியும். அவன் அநாமதேயமாக இருக்கப் பழகிக் கொண்டு விட்டான்.

 

அதைவிட, எல்லோரும் நினைத்துக் கொண்டு இருக்கும்படி எதுவும் அவனுக்கு நடந்து விடுவதில்லை.

 

நாடகத்தில் மந்திரி. புடவை கிழிந்து விட்டது.

 

தெருவிலேயே அவன் வயதிற்கு அவனுக்குத்தான் சைக்கிள் வாங்கிக் கொடுக்கப்பட்டது. வாங்கின‌ அன்றே, அவன் சைக்கிளிலிருந்து காரியரைக் கழற்றி, அது  கொம்பை வழித்தெடுத்த மொட்டை மாடு மாதிரி இருக்கிறது. ஒவ்வொரு முறையும் அதன் மீதேறி உல்லாசமாகப் போகவேண்டியவன், பெரும் கூச்சத்துடன்தான் போக வேண்டியிருக்கிறது.

 

தீபாவளிக்கு நல்ல நல்ல உடுப்புகள் கிடைக்கும். ஆனால், முதல் நாள் கீழப்பாலத்தில் கதறக்கதற சம்மர் கட் அடித்து அழைத்து வரப்படுவான்.

 

எதுதான் ரசித்து சிலாகிக்கிற அளவுக்கு நடந்திருக்கிறது?

 

அவன் தானாகவே உவந்து செய்கிற எதுவும் கூட ஏறுமாறாகத்தான் முடிகிறது.

 

இதோ தெப்பத்தை வெள்ளோட்டம் விட எவ்வளவு சிரமப்பட்டான். இதற்கான சிறிய அங்கீகாரம் கூடக் கிட்டவில்லை.  போதாதற்கு அவன்மீது காழ்ப்புணர்வு எல்லோருக்கும்.

 

கணேசனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. எங்கேயாவது தனிமையில் போய் உரக்க அழலாம் போல இருந்தது.

 

நல்ல நேரம் இன்னும் அரை மணியில் வரும் என்பதால் அப்போது வெள்ளோட்டம் இடலாம் என்று குமுட்டியின் அம்மா கூறினாள்.

 

அவள் முகம் இனம் புரியாத பெருமையில் ஒளிர்ந்தது. எல்லாவற்றையும் விட குமுட்டி பழைய படி தன் பழைய நிலைக்கு திரும்பி விட்டான். அவன் மிடுக்குடன் இருப்பது தான் எவ்வளவு நன்றாக இருக்கிறது அவர்கள் எல்லோருக்கும்?

 

தன்னால்  குமுட்டி மாதிரி மிடுக்காக எந்த நாளும் ஆகவே முடியாது. அதற்கான‌ ஆகிருதி தன்னிடம் இல்லை. பூனை மாதிரி இருந்து கொண்டு புலி மாதிரி உறுமுவது எப்படி?

 

மிகுந்த மனவேதனையோடு கணேசன் வீட்டிற்கே திரும்பி விடலாம் என்று திரும்பும் போது தான், குமுட்டியின் அம்மா, தெப்பத்தின் உள்ளே எதுவும் இல்லை என்பதைக் கண்டு பிடித்தாள்.

 

"என்னடா பசங்களா நீங்க? தொப்பத்துக்கு நடுவுல சுவாமி வைக்க வேண்டாமா?"

 

"ஷ்ஷ்" என்று கையை உதறினான் குமுட்டி.

 

என்ன சுவாமியை வைப்பது என்று வாக்குவாதம் நடந்தது. பிள்ளையார், முருகன் என்று ஆளாளுக்கு பேசி, ஊரின் ஆஸ்தான கடவுளான க்ருஷ்ணனை வைக்கலாம் என்று முடிவானது. படம் வைக்கலாம் என்று முடிவாகி, பின்னர் நவராத்திரியாக இருப்பதால் பொம்மையாக வைத்து விடலாம் என்று தீர்மானம் ஆனது.

 

துரதிர்ஷ்டவசமாக குமுட்டி வீட்டு கொலுவில் க்ருஷ்ணன் பொம்மை இல்லை. தன்னை எங்கியாவது கொண்டு வரச் சொல்லி விடப் போகிறார்களே என்று ரங்கா,  கணேசனைக் காட்டி இவங்க வீட்ல ஃபர்ஸ்ட் க்ளாஸ் ஆலிலை க்ருஷ்ணன் பொம்மை இருக்கிறது என்று மாட்டி விட்டான்.

 

கணேசன் மறுபடியும் நைச்சிய வலையில் விழுந்தான்.

 

லேசாக உற்சாகம் பிறந்த மாதிரி இருந்தது. ஆனாலும், லேசான மனவருத்தத்துடனேயே வீட்டுக்கு வந்தான்.

 

"என்னடா அதுக்குள்ள வந்துட்டே" என்றாள் பெரியக்கா. அவளுக்கு அடுத்த தெருவில் தான் ஜாகை. நவராத்திரிக்காக அம்மாவுக்கு ஒத்தாசையாக இருக்கட்டுமே என்று மதியமே வந்துவிட்டாள்.

 

"மறுபடியும் போகணும்" என்று தங்கள் கொலுவை, பின்னங்கையை ஸ்டைல் ஆகக் கட்டிக்கொண்டு, காலை நொடித்து நொடித்து, புதிதாகப் பார்ப்பது போல் நோட்டம் விட்டான்.

 

பெரியக்கா பெண்கள் இரண்டும், கொலுவின் பூங்காவில் மாக்கல் சொப்புகளை எடுத்து, அதில் இருந்த ஒரு இட்டலித் தட்டில் சாக்பீஸை அரைத்து மாவாக்கி, குழிகளில் நிரப்பி, இட்டலி வார்த்துக் கொண்டு இருந்தன. வேறொரு சமயமாக இருந்தால் கணேசன் அதட்டி விரட்டி இருப்பான். ஆனால், இப்போது அதைவிட முக்கியமான வேலை இருக்கிறது.

 

ஆலிலைவாசனைக் கண்டு பிடித்து விட்டான். சோதனையாக அந்த பொம்மை மேலிருந்து இரண்டாம் தட்டில் நட்ட நடுவில் இருந்தது. பொம்மைகளைத் திரும்பவும் எடுத்து வைக்கும்போதுதான் அதை எடுக்க முடியும்.

 

ஆனாலும், அவர்களிடம் வேறொரு புது கிருஷ்ணன் பொம்மை உண்டு.

 

நவராத்திரி இரண்டாம் நாளில் தான் அம்மா அதை ஆசையாக வாங்கினாள். எப்போதும் மாம்பழ வியாபாரம் பண்ணும் வாசாம்பா அதிசயமாக அந்த முறை கொலு பொம்மைகளை கூடையில் கொணர்ந்து வியாபாரம் செய்தாள். தாட்சண்யத்திற்காக வாங்கும் போது, இந்த பொம்மை அழகாக இருந்ததால் அம்மா பேரம்பேசி இரண்டு ரூபாய் குறைத்து பத்து ரூபாய்க்கு வாங்கினாள். ஆனாலும் விலை அதிகம் தான்.

 

"போயிட்டு போறாபோ.. ஏழை.. சாப்ட்டு போகட்டுமே"

 

அந்த பொம்மை கைக்கெட்டும் தூரத்தில் இருந்தது.

 

கணேசன் சந்தேகத்திற்கிடமாக கொலுவை நோட்டம் இடுகிறான் என்று தெரிந்தாலும், அக்காவை அம்மா கூப்பிட்ட அந்தத் தருணம் போதுமாக இருந்தது.

 

ஆனாலும் அக்கா பார்த்து விட்டதை உணர்ந்து தலை தெறிக்க வாசல் பக்கம் விரைந்தான்.

 

"அம்மா.. உன் பிள்ளை கொலுவிலேருந்து என்னத்தையோ லவட்டிண்டு ஓடறது" என்று கத்தினாள் அக்கா.

 

அம்மா உடனே, புடிடீ அவனை என்பதற்குள் கணேசன் குமுட்டி வீட்டில் இருந்தான்.

 

அதற்குள் நல்ல நேரம் வந்து விட்டது.

 

கிரமப்படி புல்லாங்குழல் வாசிக்கும் அழகான கிருஷ்ணனை தெப்பத்தில் கிட்டத்தட்ட ப்ரதிஷ்டை செய்து, அலாக்காக குமுட்டியும் உருளியும் தூக்கி, முக்கால் தொட்டி நிரம்பி அலையடிக்கும் தண்ணீரில் கால்வைக்காமல் குறட்டில் அமர்ந்தவாறு கனஜாக்ரதையாக இறக்கி விட்டார்கள்.

 

கூடியிருந்த பத்து பேர்  ஏதோ சொல்ல வேண்டுமே என்று "அரோகரா" என்று கோஷமிட, தெப்பம் வெள்ளோட்டம் விட ஆரம்பித்தது. 

 

ஆடி ஆடி நடுவில் நின்று கொண்டு இருந்த தெப்பம், தங்கள் வீட்டுப் புல்லாங்குழல் கிருஷ்ணனால் புதுப்பொலிவுடன் விளங்கிய ஒரு தோற்றம் கணேசனுக்கு  நேரிட்டது. கூடியிருந்தவர்களின் கரகோஷத்தில், தெப்பத்தின் ப்ருஷ்ட பாகத்தில் கேட்ட சப்தம் அமுங்கி விட்டிருக்க வேண்டும்.   

 

ஒரேயொரு நிமிடம் தான். தெப்பம் நிலை குலைந்து, கரகோஷம் ஆஹா வென்று உருமாறுமுன், ப்ளக்கென்ற சப்தமுடன் தண்ணீரில் குடை சாய்ந்து மூழ்கி விட்டது. 

 

நாணா, ரங்கா, உருளி எல்லாம் தலையில் கைவைத்துக் கொள்ள, குமுட்டி வீட்டில் எல்லோரும் "த்சொ..த்சொ" என்று உச்சு கொட்டினர். 

 

தண்ணீரில் மூழ்கிய தெப்பத்தை மீட்க யாரும் முனையவில்லை. மீட்பதற்கு அதில் ஏதுமில்லை என்று விட்டிருக்கலாம்.

 

தண்ணீரில் மூழ்கிய தெப்பம் நிலை தடுமாறி பக்கவாட்டில் சாய்ந்து, அதன் மிதவை பாகம் மேலே தெரியும் போதுதான், தன் க்ருஷ்ணரும் நீரில் மூழ்கி விட்டார் என்று கணேசனுக்கு உறைத்தது.

 

அதிர்ச்சியில் கணேசனுக்கு  மயக்கமே வந்து விட்டது. அம்மா கொன்றே விடுவாள்.

 

தங்கள் பொம்மை தெப்பத்தை விட்டு விலகி தனியாகக் கிடக்க, கணேசன் அதில் கவனம் செலுத்தாமல், தெப்பத்தின் மிதவையை கவனித்தான்.

 

தூக்கி வாரிப் போட்டது.

 

பவுடர் டப்பாவின் துளைகள் அடைக்கப்படவில்லை.

 

கணேசன் குமாரிடம் "என்னடா இது? என்னமோ பண்ணினேன்னு சொன்னே.. ஓட்டையை அடைக்கலேன்னா மூழ்காம என்ன பண்ணும்"

 

குமுட்டி கணேசனிடம்  குனிந்து, "போடா லூசு.. நீ ஒரு சைடு தான் பாத்தே.. இன்னொரு சைடையும் பாரு"

 

கணேசன் தெப்பத்தை தன் பக்கம் இழுத்து, பவுடர் டப்பாக்களை உருட்டிப் பார்த்தான்.  டப்பாவின் இரண்டு பக்கங்களிலும் துளையிடப் பட்டிருந்தன.

 

"என்ன கண்றாவிடா  இது?"

 

"ஆமாம்.. ஓட்டை இருக்கற  பக்கம் தண்ணி வந்ததுனாலத்தான நாம டெஸ்ட் பண்ணும்போது மூழ்கினது"

 

"அதுனால?"

 

"இன்னொரு சைடிலயும் ஓட்டை போட்டுட்டா, ஒருபக்கம் தண்ணி வந்தா, இன்னொரு பக்கம் வழியா வெளில போயிடும்ல, நம்ம வீட்டுக் குழாய்லல்லாம்  போற மாதிரி"

 

இதைக் கேட்டுக் கொண்டு இருந்த, சித்தப்பா, "எந்த ப்ரகஸ்பதிடா இந்த மாதிரி யோஜனை சொன்னது"

 

குமுட்டி ஒரு கணம் கூடத் தாமதிக்காமல் கணேசனைக் கைகாட்டி விட்டான்.

 

கணேசனுக்கு திடீரென்று தன் மீது விழுந்து விட்ட அபவாதத்தில்  நாக்கு உலர்ந்து விட்டது.  தான் இல்லை என்று சொல்ல முடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டு விட்டது.

 

அவர் அவனை நக்கலாகப் பார்த்து, "ஏண்டா.. உங்களுக்கு யோஜனை கேக்க வேற‌ ஆளே கிடைக்கலயா? கருமம்!"

 

போகும் வழியில் காலை இடறிய வேறொரு டப்பாவை எட்டி உதைக்கத் தவறவில்லை.

 

கணேசன் மிதமிஞ்சிய அவமான உணர்வில், குமுட்டியைப் பிடிவாதமாகப் பார்க்காமல் தவிர்த்தான். அவன் நண்பர்களோடு இவனைப் பார்த்து சிரிக்கிறானோ என்னவோகுனிந்து தெப்பக் குளத்தைப் பார்த்தான்.

 

அவர்கள் வீட்டுக் கிருஷ்ணர் உல்லாசமாக நீரில் அமிழ்ந்து புல்லாங்குழல் வாசித்துக் கொண்டு இருந்தார்.

 

முக்காலத்தையும் உருவாக்கி மகிழும் அந்தக் கபட வேடதாரியின் இதழ்க்கடையில் இருந்து, அவன் நிஜமாகவே ஊதுகிறாற்போல, க்ளக் க்ளக் என்று நீர்க்குமிழிகள் நீரின் மேல் பரப்பை அடைந்தன. அது எதிர் கால நிகழ்வுகளையும் குமிழிகளோடு குமிழ்களாக தெரிவித்து இருந்தால் தான்  எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?

 

பல யுகங்களின் சிருஷ்டி கர்த்தாவான அவன், ஒரு சிறு வாத்ஸல்யத்தில் அடுத்த இருபத்து ஐந்து ஆண்டுகளின் முடிவில் நடக்கப் போவதை சொல்லியிருந்தால் தான் என்ன?

 

கணேசனும் குமுட்டியும் கொஞ்சம் அனுசரணையாக இருந்திருப்பார்கள்.

 

ஏதோவொரு புரிபடாத சந்தர்ப்பத்தில் அவன் கணேசனைப் பார்த்து விகண்டையாகக் கண்சிமிட்டியதாகப் பட்டது.

 

அந்தத் தொடர்ச்சியான நினைவுக்குமிழிகளில் கணேசன் பால்யத்தைக் கடந்து, இருபத்து ஒன்பதாவது வயதில், தந்தையில்லாத ஒரு வைணவப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறான். கணேசன் குடும்பத்தில் கடும் எதிர்ப்பு. கடைசி வரை சரியாகவில்லை.

 

அடுத்த மூன்று வருடங்களில் அவனுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. ஒண்ணாவது பிள்ளையா பொறக்கப்படாதோ என்ற தொடரும் அங்கலாய்ப்பில் குழந்தைகளுக்கு இரண்டு வயது ஆகப் போகிறது.

 

ஹாலின் மூலையில் இருக்கும் ப்ளாஸ்டிக் நாற்காலியின் கீழே இரண்டும் சிறு கிண்ணங்களில் ஹார்லிக்ஸ் கொண்டு வந்து ஒன்று கொட்டி விட, இன்னொன்று தன்னுடையதை பங்கு பிரிக்க ஒப்புக் கொள்ளாத அலமலப்பில் இரண்டுமே ஏனென்று புரியாமல் வீறிட்டு அலறுகின்றன.

 

ஏனென்று புரிந்து கொண்டு அழுபவர்களும் ஓரிருவர் அங்கு இருக்கின்றனர்.

 

கணேசன் மனைவி பேயறைந்தது போல் தரையில் அமர்ந்து நாற்காலியில் தலை வைத்து மூச்சடைத்து இருக்கிறாள்.

 

அவள் அம்மா வைதேகி அவள் தலையைக் கோதிக்கொடுக்க, கணேசன் இரண்டு கைககளைக் குறுக்காகக் கோர்த்தபடி நடுஹாலில் படுத்து உறங்குகிறான்.

 

எப்போதும் போல இதோ பத்து நிமிடங்களில் எழுந்து விடுபவன் போலத்தான் இருக்கிறான். அதற்கு அவகாசம் கொடுக்காமல் புரியாத பாஷையில் யாரோ அவனுக்கு வழிகாட்ட, விசித்திரமான, வயிற்றை என்னவோ செய்கிற சப்தங்கள் எழும்ப, நாலைந்து பேர் சுளுவாக அவனைத் தூக்கி வந்து ஊர்தியில் படுக்க  வைக்கிறார்கள்.

 

வைதேகி மாமி கொஞ்ச தூரம் ஊர்தி பின்னால் ஓடி வருகிறாள். ஊரே கூடி நிசப்தமாக வேடிக்கை பார்க்க, அவள் கொஞ்சமும் கூச்சம் இல்லாமல், இரண்டு கைகளையும் உயரத் தூக்கி,

 

"உப்புலியப்பா.. உப்புலியப்பா.. ஒன்னை மலை போல நம்பினேனே.. என் கொழந்தைய ஏமாத்திட்டியே" என்று கூப்பாடு போடுகிறாள்.

 

அவனை ஒன்றும் சொல்ல வேண்டாம் என்கிறாற் போல் ஊர்தியின் குலுங்கலில் கணேசன் தலை ஆடி, பின் நழுவுகிறது.

 

கூட அமர்ந்து இருப்பவன், அதை மறுபடியும் சரி பண்ணும் போது, "என்னமோ தெரியலை.. கடைசில தலை மட்டும் கனத்துப் போயிடறது" என்கிறான்.

 

கணேசனும் முடிந்தால் நமுட்டாகச் சிரித்து இருப்பான்.  

 

முடியவில்லை.

 

அவனுக்குத் தலையில் கனம் ஏறித்தான் இருந்தது.

 

 

 

-சுபம்-

 

No comments:

Post a Comment