எலி வேட்டை
(மூர்த்தியின் வீடு - மூர்த்தி - குடும்பத் தலைவர். 50 வயதைத் தாண்டி சில வருடங்கள். காதோர
நரையை மறைக்க பல வருடங்களாக முயன்று, இன்று தலை முழுக்க
நரைத்து விட்டது. மனைவி அலமேலுவை அலமு என்று அழைப்பார். மகள் ரேணுகா இரண்டாவது.
பெரியவன் ரவி ஏதோ கம்பனியில் ஷிப்ட் வேலை. கிச்சா மச்சினன் - மூர்த்தியின் பூர்வ ஜென்ம பலன். கல்யாணம், பவானி தம்பதியர் அடுத்த வீடு).
Scene I
(பேப்பர் வரும் காலை. மூர்த்தி தூக்கம்
பிடிக்காமல் அதிகாலை எழுந்து "உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி"
ஹம் செய்து கொண்டிருக்கிறார். கவனம் தப்பியிருக்கும் அவர் மீது ஏதோ கனமான
வஸ்துவொன்று பறந்து வந்து விழுகிறது வாசலில் இருந்து.)
மூர்த்தி : (அலறுகிறார்)
ஆஆ..அம்மா. ஐயையோ.
(பதறி திசை தெரியாமல் ஓடி, எதிரே சப்தம் கேட்டு ஓடி வரும் மகன்
மேல் மோதி இருவரும் விழுகிறார்கள்.)
ரவி : என்னப்பா இது.
என்னாச்சு?
மூர்த்தி : (வாசலை நோக்கி கை
காட்டி) எவனோ மேல "குண்டு" போட்டுட்டு போயிட்டாண்டா.
ரவி (பயத்துடன் அருகில்
சென்று பார்த்து) ப்பூ. "குண்டு" இல்லப்பா. "ஹிண்டு".
மூர்த்தி : அடச்சே. ஹிண்டுவா.
பயந்தே போயிட்டேன். (மெதுவாக எழுந்து சோபாவில் அமர்கிறார்).
(மனைவி அலமு வருகை. கையில் காபி).
அலமு : என்னன்னா. கீழ
விழுந்துட்டேளா?
ரவி : எப்படிம்மா
தெரிஞ்சுது?
அலமு : இல்லடா. சைக்கிள்
ட்யூப் வெடிச்ச சவுண்ட் கேட்டுது. இவர்தான இங்க தத்தக்கா புத்தக்கான்னு ஆடிண்டு
கெடந்தார். விழுந்து தொலைச்சிருப்பார்னு ஒரு ஊகம்தான். ஏன்னா, கால் ஒண்ணும் உடையலையோன்னோ?
மூர்த்தி : அது வேற
ஒடையணுமாக்கும்
அலமு : ஒங்க காலை யாரு
கேட்டா? சோபா புத்தம் புதுசு.
அது காலை ஒடைச்சிப்புட்டேளோன்னு கேட்டேன்.
மூர்த்தி : அடிப் பாவி. என்ன ஒரு
பதி பக்தி. .. சரி, சரி,
காப்பிய
வெச்சுண்டு ஏன் தீபாரதனை காட்டறே? கொண்டா இப்படி.
ரவி : ஏம்மா. அப்பாக்கு
காப்பியா கொடுக்கறே? டாக்டர் சொன்னத
மறந்துட்டியா?
மூர்த்தி : அப்படி என்னடா
சொன்னான் டாக்டன்?
ரவி : நீ சும்மா இருப்பா.
(அம்மாவிடம்) அம்மா, அப்பாக்கு காப்பில
சக்கரை கம்மியா போட்டுருக்கியோன்னோ?
மூர்த்தி : இவன் ஒத்தன்.
காப்பியே கம்மியாத்தான் போட்டுருக்கா. இதைப் பாரு. டம்ப்ளருக்குள்ள கயத்தக்
கட்டித்தான் காப்பி இறைக்கணும் போல இருக்கு.
(இதற்குள் ரவி பேப்பரில் ஸ்போர்ட்ஸ் பக்கம் பார்க்கிறான்).
மூர்த்தி : : ஏண்டா, எடுத்தோனயே
ஸ்போர்ட்ஸ் பேஜா? ஹெட் லைன்ஸ் படிக்கற
பழக்கம் எப்பதான் வருமோ அப்பதான் புத்தி வளர போறது.
அலமு : ஆமா. 30 வருஷமா ஹெட்லைன்ஸ் படிச்சு வாழறதே இங்க.
அறிவு ஆழாக்கு சைஸுக்குக் கூட வளரலை.
மூர்த்தி : Shut up. Sports ல நான் ஒன்னும் ஞானசூன்யம் இல்லை. (அலமுவிடம்)
Wesley Hall தெரியுமா ஒனக்கு?
அலமு : ஏன் தெரியாம? கோடியாத்து கோமளா மாமி நாத்தனார் பொண்ணு
கல்யாணம் அங்கதான நடந்தது.
மூர்த்தி : ரெண்டுங்கெட்டான்,ரெண்டுங்கெட்டான். அது Western Hall. ஆளைப் பத்திப் பேசினா ஹாலைப் பத்திப்
பேசறையே. பேக்கு! Hall எவ்வளவு பெரிய bowler தெரியுமா? அவனுக்குத்
தெரியாத Techniqueகே கிடையாது.
அலமு : ரொம்ப, அலட்டப் படாது தெரிஞ்சுக்குங்கோ!! நம்ம
வீட்டு, தோசைக் கல்லுல, ஈஷாம, தோசை
வாக்க வருமா அவனுக்கு?
ரவி : ஐய்யையே. ஓங்க சண்டைல
ஒங்க General
Knowledge எல்லாருக்கும்
தெரிஞ்சு போச்சு. இந்தா, paperஅ நீயே படி.
(மூர்த்தி, பேப்பரை
வாங்கி மடித்து விசிறிக் கொள்ளுகிறார்).
அலமு : அடக் கடவுளே.
இதுக்குத்தான் இவ்வளவு அலம்பலா?
மூர்த்தி : அதுக்கில்லடி அலமு! Hinduவால
விசிறிண்டாத்தாண்டி விசிறண்ட மாதிரி இருக்கு. மத்த பேப்பரால விசிறிண்டா லெட்டர்ஸ்லாம்
கொட்டிப் போயிடும் போல ஒரு feeling இருக்கு.
ரவி : உக்கும். பேப்பரைக்
கொண்டா இப்படி. நானே Headlines படிச்சுச் சொல்றேன். (படித்து ஆச்சரியப்
படுகிறான்). Oh
my God.
மூர்த்தி : என்னடா, Govt கவுந்துடுத்தா?
ரவி : ஏம்பா இப்படி இருக்க?
அலமு : அது பூச நட்சத்திரம், கடக ராசி. இதுகள்லாம் இப்படித்தான்
இருக்கும். நேரடியா ஒரு விஷயம் கூட பேசாதுகள். கொனஷ்டையில்லாம ஒரு பதில் கூட
வராது. 25 வருஷமா அல்லாடின்டுருக்கேனே, எனக்குத் தெரியாதா? Paper விஷயத்த சொல்லு
முதல்ல.
ரவி : : ரங்கனாதன்னு ஒருத்தர். Professor.
மூர்த்தி : : யாரு? ரங்கனாதனா?
ரவி : : அதுக்கு என்ன இப்படி ஒரு அதிர்ச்சி?
மூர்த்தி : : இல்லடா. எனக்கு அவனை ரொம்ப நன்னாத் தெரியும். என்னோடத்தான் எட்டாம் கிளாஸ் வரைக்கும் படிச்சான். ரொம்ம friend எனக்கு. Infact,
அவனுக்கு
scienceசே வராது. நான் தான்
சொல்லிக் கொடுப்பேன்.
இது, ஒனக்கே ரொம்ப ஒவராத் தெரியலை?
மூர்த்தி : : (அசடு வழிந்து) ஹி ஹி.. இல்லடா, ரங்கனாதன்ன ஒடனே, அவன் ஞாபகம் தான் வந்துது. அவன் தான், அந்தக் காலத்துலேயே, புழு பூச்சியெல்லாம் எடுத்துண்டு வந்து
ஆராய்ச்சியெல்லாம் பண்ணுவான். அதனாலே, அவனாத்தான்
இருக்கும்னு ஒரு யூகம்.
ரவி : மண்ணாங்கட்டி! பேத்தறதுக்கும், ஒரு லிமிட் வேண்டாம்? சரி,
சரி, விஷயத்தைக் கேளு! Professor ரங்கனாதன் 15 வருஷமா ஆராய்ச்சி பண்ணி படுபயங்கரமான
ஒரு விஷயத்தக் கண்டுபிடிச்சிருக்கார்.
மூர்த்தி : என்னவாம்? இவ்வளவு காலம்
வாழ்ந்ததே தப்புன்னா?
ரவி : படுத்தாதப்பா.
மனுஷனோட சாவப் பத்திக் கண்டுபிடிச்சுருக்கார்.
மூர்த்தி : ஏண்டா, இதெல்லாம் ஒரு கண்டுபிடிப்பாடா? மனுஷன் பொறந்த ஒடனே தெரியற ஒரே விஷயம், அவன் சாகப்போறாங்கறதுதான.
ரவி : அது அப்படி இல்லப்பா.
மனுஷனோட சாவுக்குக் காரணம் என்னங்கறதக் கண்டு பிடிச்சுருக்கார்.
அலமு : ஏ அப்பா, நெஜம்மாவா?
ரவி : ஆமாம்மா.
நெஜம்மாதான். நம்ம DNAல இருக்கற ஒரு
வைரஸ்தான் இதுக்குக் காரணமாம். இதைக் cure பண்ற சக்தி, எலிப்பால்ல இருக்காம்
மூர்த்தி : என்னது? …….எலிப்பால்-லயா?
ரவி : ஆமாம். எலிப்பால
ரெகுலரா ஆறு மாசம் சாப்பிட்டா மனுஷனுக்கு சாவே வராதாம்.
மூர்த்தி : கேக்கும் போதே
வயத்தப் பொறட்டி வாந்தி பண்ணனும் போல இருக்கு?
அலமு : ஒங்களுக்கு பித்தம்
தலைக்கேறியிருக்கும்.
ரவி : அப்பா, Professor இதை prove பண்ணியிருக்கார்.
மூர்த்தி : எப்படி? எப்படி?
ரவி : அவரோட 85 வயசு அம்மா, படுத்த படுக்கையா இழுத்துண்டு
கெடந்துருக்கா. Pulse லாம் எறங்கிப் போயி, சொந்தக்காராள்லாம் வந்து, கிழவிக்கு மோட்சம் கிடைக்கட்டுமேன்னு, தப்பு தப்பா ஸ்லோகம்லாம் சொல்ல
ஆரம்பிச்சுருக்கா. அப்போ, Professor என்ன பண்ணியிருக்கார், பக்கத்துல இருந்த எலிப்பால 2 ஸ்பூன் எடுத்து கெழவி வாயில
விட்டுருக்கார்.
அலமு : ஏண்டா, ப்ராணன் போறக் கிழவிக்கு வாய்ல கங்கா
ஜலம் ஊத்தாம, எலிப்பாலா ஊத்துவா?
மூர்த்தி : அதானே?
ரவி : அப்படில்ல அது. Prof தன்னோட Research
காக, எலிப்பால சேகரிச்சு
வெச்சிருந்துருக்கார். எப்படியும் கிழவி டிக்கெட்டு வாங்கறவதானன்னு, Research க்கு
உபயோகப்படட்டுமேன்னு, எலிப்பால எடுத்து
ஊத்திப் பாத்துருக்கார். இதுலல்லாம் லாஜிக் பாக்கப்படாது.
அலமு : நீ சொல்றது
நியாயம்தான். அப்றம் என்ன ஆச்சு?
ரவி : என்ன? கிழவிக்கு pulse லாம் மளமளன்னு பிக்கப் ஆகி, நினைவு திரும்பிடுத்து. Infact, பால் overdose
ஆகி
கிழவிக்கு பூர்வ ஜென்ம நினைவெல்லாம் கூட திரும்பிடுத்துன்னா பார்த்துக்கோயேன்.
மூர்த்தி : ஏண்டா, இதெல்லாம் நம்பற மாதிரியாடா இருக்கு?
ரவி : இந்த Newsஅ வெள்ளைக்காரந்தான்
வெளில சொல்லியிருக்கான். அதனால, தாராளமா நம்பலாம்.
அது மட்டுமில்லாம, Prof ரங்கனாதன் பேரை நோபல் prizeக்கு recommend பண்ணியிருக்கான். நம்பளாயிருந்தா
பண்ணியிருக்க மாட்டோம்.
அலமு : அடேங்கப்பா, இவ்வளவு நடந்துருக்கா? அது சரி, எனக்கு
ஒரு சந்தேகம்.
ரவி : கேளு?
அலமு : இந்த எலி வந்து, சின்னதா, தரைல
குடு குடுன்னு ஒடற ஒரு ஜந்து தான, கிட்டத்தட்ட பூச்சி
மாதிரி. அது எப்படிறா பால் குடுக்கும்?
ரவி : அம்மா, எலி வந்து பூச்சியினம் கிடையாது. அது
வந்து, ..... அது வந்து, என்ன சொல்றது, ஆங்,
"Mammal".
அலமு : என்னது, எலிக்கு பூர்வீகம்
"பம்மல்"ங்கறியா?.
மூர்த்தி : இல்ல, "அரகண்ட நல்லூர்"
அலமு : அதென்ன, எங்க ஊரைப்பத்தி அவ்வளவு கிண்டல்?
மூர்த்தி : ச்சே ச்சே, கிண்டலும் இல்ல, சுண்டலும் இல்ல, Fact, நீயே நன்னா
யோசிச்சுப் பாரு, ஒங்கப்பன் மூஞ்சி
அசப்புல எலி மாதிரிதான இருக்கும்.
அலமு : ஒங்கப்பா அப்படியே
சுப்ரதீபம். அழகு அப்படியே சொட்டும். பஞ்சகச்சம் கட்டின பெருச்சாளி மாதிரியே
இருப்பார் ஒங்க அப்பா. எங்கப்பாவ சொல்ல வந்துட்டேளாக்கும்.
ரவி : அடக்கண்றாவியே. ஒங்க
சண்டைல, எங்க பூர்விகம்லாம்
வெளில வருதே? டார்வின் கேட்டான்னா, suicide பண்ணிப்பான்.
அலமு : பின்ன என்னடா, எப்பப் பாத்தாலும் எங்க குடும்பத்த
மட்டமாவே பேசறது வாடிக்கையாப் பேடுத்து. எங்கப்பா status
என்ன, தேஜஸ் என்ன? அப்படியே தகதகன்னு, சிவப்பழம் அவர்.
மூர்த்தி : இப்படியே பழம் பழம்னு
சொல்லிண்டுரு, ஒரு நாளைக்கு
அழுகியேப் பூடப்போறான் ஒங்கப்பன்.
ரவி : Nonsense. அம்மா, எலி
பம்மலும் இல்ல, மம்மலும் இல்ல, (style)ஆக, மாம்மல். அதாவது, குட்டிப் போட்டு பால் கொடுக்கற இனம்.
அலமு : இப்பப்
புரிஞ்சுடுத்து. பால் கொடுக்கறதெல்லாம் மாம்மல். நம்ம பால்கார முனுசாமி கூட
மாம்மல் தான் இல்லியா?
மூர்த்தி : கீஞ்சுது போ.
(வாசலில் ப்ஸ்ஸர்)
ரவி : எட்டிப் பார்த்து விட்டு,
ரவி : ஐயய்யோ.. பக்கத்து வீட்டு கல்யாணம் மாமாவும், பவானி மாமியும் வந்துண்டுருக்கா..
மூர்த்தி : : அடக் கடவுளே.. எல்லாத்தையும் ஒளிச்சு வைங்கோ.. எதையாவது வாங்காமப் போக மாட்டானே.. அலமு, ரண்டு வருஷமா பல்லையும் பாத்ரூமையும் ஒண்ணாத் தேச்சுண்டுருக்கியே அந்த brush-அ பத்ரமா ஒளிச்சு வை.. வாங்கிண்டு
போயிடப் போறா..
அலமு : வயத்தப் பொறட்டற மாதிரி பேசாதீங்கோன்னா..
மூர்த்தி : பொறக்கும் போதே தெரியும் போல இருக்கு.. பேரு வச்சுருக்கா பாரு.. கடன் வாங்கிக் கல்யாணம்
(அதற்குள் கல்யாணம் & co. entry)
வாங்கோ வாங்கோ.. கல்யாணம்.. இப்பத்தான் ஒங்களப் பத்தி ஒசத்தியாப் பேசிண்டுருந்தோம்.. வந்துட்டேள்.. 100 ஆயுசு..
கல்யாணம் : ஏன் ஸ்வாமி கம்மியா சொல்றேள்.. இன்னமே எல்லாருமே சிரஞ்சீவி தானே ஓய்..
மூர்த்தி : : Paper பாத்தாச்சு
போலருக்கு..
கல்யாணம் : ஆச்சு.. பாச்சா வீட்டுக்குப் போனப்ப பாத்தாச்சு..
மூர்த்தி : ஒரு வீடு உடறது இல்ல.. என்ன காலங்கார்த்தால இந்த பக்கம் காத்தடிச்சுருக்கு..
பவானி மாமி : (மாமி) ஒண்ணுமில்ல அலமு.. காலங்காத்தால காப்பி போடலாம்னு ஃபில்டரப் பாத்தா ரொம்ப தண்ணியா எறங்கியிருக்கு..
இவருக்குத் தான் கொட்டக்கூழ் மாதிரி காப்பி சாப்பிடணுமோல்லியோ.. பாத்தா காப்பிப்பொடி நேத்திக்கே தீந்து போச்சு.. இந்த மனுஷனுக்குத்தான் எதுவுமே கை வர மாட்டேங்கறது.. அதான்.. ஒரு ரண்டு spoon காப்பி பொடி இருந்தாக் குடேன்..
இன்னிக்கு வாங்கின உடனே மொதக் காரியமா திருப்பிக் கொடுத்துடறேன்..
மூர்த்தி : எங்க.. நாங்கதான் திருப்பி திருப்பிக் கொடுத்துண்டே இருக்கோம்.. அங்கேருந்து ஒண்ணும் பேர மாட்டேங்கறது..
அலமு : நீங்க சும்மாயிருங்கோ.. மாமி.. நீங்க கேக்கறதப் பார்த்தா பாவமா இருக்கு.. ஆனா என்ன பண்றது.. இங்கயும்
அதே கதைதான்.. கரெக்டா நேத்திக்குத்தான் தீந்து போயிருக்கு.. இன்னிக்குக் கடைசிப் பொடியையும் போட்டு டிகாக்ஷன் எறக்கினேன்..
பவானி மாமி : அப்ப நல்லதாப் போச்சு.. எங்களுக்கும் சேர்த்தே கலந்துடு.. ரொம்ப வேண்டாம்.. அரை அரை டம்ளர் போறும். ரொம்ப தண்ணி
விட்டுறாத.. அப்றம் தலையை வலிக்கும்..
ரவி : : ரொம்ப வக்கணைதான்..
மூர்த்தி : : என்ன கல்யாணம்ஜி.. காலங்காத்தால் News கேள்விப் பட்டீரா?
கல்யாணம் : எலி மாட்டர் தான ஓய்..? பாத்தாச்சு பாத்தாச்சு..
மூர்த்தி : : நாட்டுல எப்ப என்ன நடக்குன்னே சொல்ல முடியறது இல்ல ஓய்.. ஒரு காலத்துல Gold பின்னாடி எல்லாரும் லோ லோன்னு
அலஞ்சுதுகள்.. இப்ப பாருமேன்.. Rate எறங்கிண்டே வருது..
கல்யாணம் : இன்னுமே எல்லாரும் எலி பின்னாடி அலயப் போறதுகள்..
மூர்த்தி : : எங்க.. யாரு யார்
பின்னாடி அலஞ்சாலும், நீர் மாமி
பின்னாடிதான் அலயப் போறீர்...
கல்யாணம் : சும்மா கிண்டல் பண்ணாதீங்கோ மூர்த்தி!
மூர்த்தி : : எனக்கு இந்த எலின்னாலே ரொம்ப அலர்ஜி ஓய்.. ரண்டு நாள் முன்னாடிதான்.. பொறி வச்சு நாலு எலிக்கு மோட்சம் கொடுத்தேன்..
பவானி மாமி : என்னடி இது.. ஒங்க ஆத்துக்காரர் இவ்ளவு அசடா இருக்கார்..
மூர்த்தி : : காலங்காத்தால் நல்ல certificate மாமி எனக்கு..
கல்யாணம்: ஆமாம்யா..
இன்னமே எலியையெல்லாம் சாமர்த்தியமா காபந்து பண்ணிக்கனும்.. ஆமாம்.. கார்த்தால கீழ
விழுந்துட்டீர் போலருக்கு?
மூர்த்தி : : எப்படித் தெரியும்..?
கல்யாணம் : அதான் BBCல சொன்னானே..
அலமு : : BBCவரியும் வந்துடுத்தா.
மூர்த்தி : : சரி சரி.. வந்த விஷயத்த இன்னும் அவுத்து விடலையே..
கல்யாணம் : அது ஒண்ணும் இல்லை.. ஒங்க வீட்டு மாடில Overhead Tank இருக்கோல்லியோ..
மூர்த்தி : : அதெல்லாம் கடனாக் குடுக்க முடியாது..
கல்யாணம் : அது யாருக்கு வேணும்.. அதுக்கு sideல் ஒரு ஏணி சாத்தி
வச்சுருக்கேளே.. அதுதான் வேணும்..
மூர்த்தி : : தோ பாருய்யா.. அதத்தான் நாங்க நாலு நாளாத் தேடிண்டு இருக்கோம்.. எங்க வீட்டுல என்னென்னல்லாம் இருக்குன்னு எங்களுக்குத் தெரிஞ்சுருக்கோ இல்லியோ, ஒங்களுக்குக் கட்டாயம் தெரிஞ்சு
இருக்கு.. நல்ல மோப்ப சக்தி ஸ்வாமி உங்களுக்கு.. ஒரு கால் inch வால் இருந்துதுன்னு வைங்கோ..
போலிஸ்காரா லபக்னு அள்ளிண்டு போயி வேலை போட்டுக் கொடுத்துருப்பா..
பவானி மாமி : அது இருக்கட்டும்.. ஏணியக் கொடுப்பேளா மாட்டேளா..
மூர்த்தி : : தந்தாப் போச்சு.. இப்ப என்ன ஏணிக்கு அவசியம்..?
கல்யாணம் : எங்க வீட்டு Loft-ல ஒரு பூனை நாலஞ்சு குட்டி போட்டு
அட்டகாசம் பண்றது ஓய்.. மொதல்ல அடிச்சு வெரட்டணும்..
மூர்த்தி : ஓஹோ.. எலி மகாத்மியம் ஆரம்பிச்சாச்சுன்னு சொல்லுங்கோ..
---0---