Scene 3
(மூர்த்தி வழியில் உட்கார்ந்து இருக்கிறார். மணி 7.30 இருக்கும். மகள் ரேணுகா இன்னும் வரவில்லை என்ற கவலை. அவள் வேகமாக உள்ளே நுழைகிறாள்.)
மூர்த்தி : ஏய்.. ரேணு... நில்லு... வழியில, குத்துக்கல்லாட்டமா உக்கார்ந்துண்டு இருக்கேன்... என்னமோ அனுமார் மைனாக மலையை தாண்டிண்டு போன மாதிரி போறியே?
ரேணுகா : நீ ஏன்பா வழில ஒக்கார்ந்து இருக்க? தள்ளி ஒக்காந்துக்க வேண்டியதுதான?
மூர்த்தி : அறஞ்சேன்னாத் தெரியுமா? மட்டு மரியாதை கிடையாது..எல்லாம் அம்மா குடுக்கற எடம்.
அலமு : அம்மாவுக்கு என்ன புதுசா அர்ச்சனை?
மூர்த்தி : ஒம் பொண்ணு வர்ற டைம் பார்த்தியா? 7.30.. வயசுப் பொண்ணு வர்ற டைமா இது? காலம் கெட்டுக் கெடக்கு.
ரேணுகா : ஐய்ய, நானே நொந்து நூலாயி வந்துருக்கேன்.. எப்படி வந்தேன்னு தெரிஞ்சுக்காம, என்னமோ உனக்குத்தான் வாய் இருக்குன்னு வாள் வாள்னு கத்தற?
அலமு : வாள் வாள்னு கத்தறதுக்கு வாய் மட்டும் இருந்தா போறாதுடி.. வாலும் இருக்கணும்.
மூர்த்தி : Joke? எல்லாரும் ஜோரா ஒரு தடவை கை தட்டி சிரிங்கோ.. சிரிப்பா சிரிச்ச குடும்பம்னு ஊர்ல பேசிப்பா..
ரேணுகா : ஏம்மா.. அப்பாக்கு டிபன் கொடுக்கலையா? கொழந்தை மாதிரி இப்படி அழுகை அழுகையா வருது?
மூர்த்தி : (கையில் எதையோ எடுத்து) போட்டேன்னாத் தெரியுமா?
ரேணுகா : ஏம்பா, இப்படி உப்புப் பொறாத விஷயத்தப் பெரிசு பண்ற? வர்ற வழியில, ஒரு பெரிய Procession.. மரவட்டை மாதிரி பஸ் ஊர்ந்து வரதுக்கு ரொம்ப லேட்டா ஆயிடுத்து. முக்கால் மணி நேரம் வேஸ்ட்... Infact,
processionல participate பண்ணி நடந்து போனவா எல்லாம் சீக்ரமாவே நடந்து போயிட்டா... அதுல கலந்துக்காத பப்ளிக்தான், real-லா processionல participate பண்ணவா மாதிரி, வீடு திரும்ப லேட்டா ஆயிடுத்து...
(ரவி வருகிறான்)
ரவி : என்னடி ரேணு ... என்னமோ procession அப்படின்னு காதுல விழுந்த்து... யாரு procession?
ரேணுகா : என்னமோ அதிர்வேட்டு அருணாசலமாமே..
ரவி : ஆமாம்.. வெத்துவேட்டு வெறும்பயலாச்சே அவன்... அவனுக்கு என்ன கேடாம்?
ரேணுகா : அவன் ஏதோ எலிகள் முன்னேற்றப் பாசறைன்னு ஆரம்பிச்சுருக்கானாம்..
ரவி : அடப் படுபாவி..என்ன வேணுமாம்?
ரேணுகா : எலிய "National
Animal" ஆ declare பண்ணனுமாம்..
மூர்த்தி : (கைகளை நீட்டி) மயிற்கூச்செறியறது எனக்கு.. அப்ப, National Bird யாராம்.. கரப்பான் பூச்சியாமா?
அலமு : இப்பசத்திக்கு, நீங்கதான் எல்லார் மேலேயும் பாய்ஞ்சு பிறாண்டிண்டுருக்கேள்.. ஒங்க பேரை சிபாரிசு பண்ணாலும் பண்ணுவாளா இருக்கும்..
மூர்த்தி : நீ வாய மூடு..
(வாசலில் வினோத சப்தங்கள் எழுகின்றன)
மூர்த்தி : ஐயையோ.. கிச்சா வரான் போல இருக்கே..(ஒளிந்து கொள்ள இடம் தேடுதல்)
ரவி : கிச்சா வரான்னு, எப்படிப்பா கரெக்டா கண்டு பிடிச்ச?
மூர்த்தி : ஆமா, இது பெரிய தங்கமலை ரகசியம்.. Corporation குப்பவண்டி smell வந்தா, அது கிச்சாவாத்தான் இருக்க முடியும்? போறாதததுக்கு, லொட லொடன்னு அவன் சைக்கிள் வேற.. பெல்லத் தவிர பாக்கியெல்லாம் சத்தம் போடும்..
(கிச்சா entry)
கிச்சா : ஹலோ அத்திம்பேர்... குட் மார்னிங்க்... சௌக்யமா?
மூர்த்தி : ஆஹா...
கிச்சா : ஏன் அத்திம்பேர்... இப்படி மூஞ்சியெல்லாம் பேஸ்தடிச்சுருக்கு..?
மூர்த்தி : நீ வந்த சந்தோஷம்.. வேற ஒண்ணும் இல்ல.. ஆமா.. கைல என்னது இவ்வளவு பெரிய ஊசி.. Drug Addict ஆயிட்டயா.. அந்த ஒரு கெட்ட பழக்கம்தான் பாக்கியிருந்தது..
கிச்சா : சும்மாயிருங்கோ அத்திம்பேர்..10 நாளா அக்கா ஒரே புலம்பல்... நம்மாத்து எலி மாத்ரம் பாலே கறக்க மாட்டேங்கறது.. ஏதாவது பண்ணுன்னு.. நச்சரிச்சுண்டுருந்தா.. நானும் ரொம்ப deepஆ think பண்ணினேன்..
மூர்த்தி : ஐயையோ..
கிச்சா : வர்ற வழியில நம்ம பால்காரன் முனுசாமியப் பார்த்தேன்...சட்டுனு ஒரு ஐடியா தோணித்து..அவன் daily இந்த ஊசியப் போட்டாத்தான் அவன் மாடு பாலே கறக்கறதான்.. ஒரு 100 ருபிஸ் வெட்டிட்டு.. இதை வாங்கிண்டு வந்தேன்..
மூர்த்தி : இதுக்குப் பதிலா நீ என்னையே வெட்டி இருக்கலாம்..மூதேவி.. தெரியாமத்தான் கேக்கறேன்..இந்த ஊசியப் போட்டா எலி பாலாடா கறக்கும்..பரலோகம் பூடும்..பரதேசி..பரதேசி..வந்து வாச்சியே எனக்கு..
அலமு : (அலமு) கிச்சாவா.. வா.. வா.. என்னடா காணுமேன்னு யோசிச்சுண்டே இருந்தேன்.. வந்துட்டே.. 100 ஆயுசு.. என்னடா கண்ணா சாப்பிடறே..
மூர்த்தி : அவன் சாப்டாத பண்டம் எது? பறக்கறது, நடக்கறது, ஊர்றது..உருள்றது...இன்னும் மனுஷங்களத்தான் திங்கலன்னு நெனைக்கறேன்..அதுவும் சொல்றதுக்கு இல்ல.. ரண்டு நாள் முன்னாடி TV channelல அகோரிகளைப் பத்திக் காமிச்சான்... காசில பொணம் திங்கறவா.. அதுல ஒரு ஜடாமுடி.. ஒங்கப்பன் ஜாடையாவே இருந்துது..
கிச்சா : அக்கா.. அத்திம்பேர நீ கொஞ்சம் சமத்தா வளத்துருக்கலாம்..எனக்கு பயங்கரமாப் பசிக்கறது.. நான் straightஆ கிச்சனுக்கே போயிடறேன்..
ரவி : சமயக்கட்டுக்கு கிச்சன்னு பேரு வந்ததே கிச்சாவ வச்சுதான்னு நெனைக்கறேன்..
அலமு : நீ சும்மாயிருடா.. அவனே பசில வந்துருக்கான்.. இந்தாத்துக்காக எவ்வளவு உழைக்கறான் குழந்தை..கிச்சா கண்ணா.. Fridgeல Freezerக்குக் கீழ ஒரு சம்படத்துல போண்டா வச்சுருக்கேன் பாரு..ஜாக்ரதையா எடு.. பால், தயிர், மோர்லாம் ஒண்ணாப் பண்ணிடாத.. அப்றம் கீழ் தட்டுல ஈயச்சொம்புல புளிச்ச மோர் வச்சுருக்கேன்.. அத மட்டும் தொடாத... போன ஞாயித்துக்கிழமை கடைஞ்சது.. ஏழூர் நாத்தம் நாறும்.. ஒங்க அத்திம்பேருக்குப் புடிக்குமேன்னு வச்சுருக்கேன்..
ரவி : அப்பா, ஒன் நிலைமை இவ்வளவு மோசமாப் போகவேண்டாம்பா..
(கிச்சா.. re-entry)
கிச்சா : போண்டா சூப்பர்க்கா..(கையில் ஒரு சவுரியைக் காட்டி) அக்கா.. இங்க பார்த்தியா..
அலமு : ஐ.. சவுரி... ரொம்ப நாளாத் தேடிண்டுருந்தேன்.. கிடைச்சுடுத்தா... பார்த்தேளா.. கிச்சா மனசு வச்சான்னா.. தொலஞ்சதெல்லாம் கிடைக்கும்..
மூர்த்தி : எனக்கு என்னவோ இவனாலத்தான் எல்லாம் தொலையறதோன்னு சந்தேகம்.. படவா.. இவனுக்கு.. வாய் மாதிரியே.. கையும் கொஞ்சம் நீளம்தான்..
அலமு : சும்மா இருங்கோ..கிச்சா கை வச்சான்னா சகலமும் துலங்கும்..
ரேணுகா : அம்மா.. வேலக்காரி இன்னிக்கு வரவே இல்ல.. எல்லா பாத்ரமும் போட்டது போட்டது மாதிரியேக் கெடக்குன்னு பொலம்பிண்டுருந்தியே.. பேசாம கிச்சாவ விட்டு துலங்கப் பண்றதுதான..
அலமு : நீ வாய மூடுறி.. அக்கா.. சித்த உள்ள வாயேன்.. Fridgeக்குள்ள இன்னும் என்னல்லாம் இருக்குன்னு காட்டறேன்..
மூர்த்தி : ஆமா.. எங்களுக்கு தெரியாதாக்கும்.. என்ன இருக்கப் போறது? எண்ணத்தூக்கு, சாணிச்சுருணை, வெளக்குமாறு, தண்ணி பாட்டில், பூ, பழம், காய்கறிக்கூடை, எச்ச straw, மங்கையர் மலர், அழுக்கு சீப்பு,
எதெல்லாம் இருக்கப் படாதோ அது எல்லாம் இருக்கும்.. இன்னும் நன்னாத் தேடிப் பாரு... தலை தீபாவளிக்கு எனக்கு மோதிரம் போடறேன்னு சொல்லிப்புட்டு ஊரை விட்டு ஓடிப் போன ஒங்கப்பன் கூட ஓளிஞ்சுண்டு இருப்பான்..
அலமு : உள்ள போயி tension இல்லாம சாப்டுறா கண்ணா.. இவர் இப்படித்தான் என்னத்தையாவது உளறிக்கொட்டிண்டேயிருப்பார்...
(Renu reentry with black
costumes)
மூர்த்தி : என்னடி இது? ஏதாவது condolence
function ஆ?
ரேணுகா : வாய அலம்பு.. என் friend ஓட marriage ..
Friends லாம் wait பண்ணிண்டு இருப்பா..
மூர்த்தி : என்னது, marriage ஆ? எல்லாம் கன்னங்கறேல்னு dress பண்ணிண்டு இருக்க?
ரேணுகா : ஆமாம்பா.. இப்ப எல்லாம் Rat கலர்ஸ்தான் மார்கெட்ல.. உனக்கு இதெல்லாம் சொன்னா புரியாது..நீ ஒரு பழைய பஞ்சாங்கம்..
அலமு : பழைய பாம்பு பஞ்சாங்கம்னு சொல்லு... இல்லன்னா.. அதுக்கும் ஏதானும் சொல்லும்.. எடக்கு ஏகாம்பரம்..
மூர்த்தி : அதுக்காக இப்படி கழுத்துலயும் காதுலயும் கூடவா கருப்பு மாட்டிண்டு.. காலபைரவி மாதிரி யாராவது கல்யாணத்துக்குப் போயி நான் கேள்விப்பட்டதே இல்லை..
அலமு : ஆமாம்.. நானே கேக்கணும்னு இருந்தேன்.. கழுத்துல என்னடி புதுசா .. முத்து மாலை மாதிரி இருக்கு.. கருப்பாவும் இருக்கு.. ஏண்டா கண்ணா.. புதுசா வாங்கின ஹாரத்த போட்டுண்டு போகக் கூடாது... பெருமையா இருக்குமோல்லியோ..
ரேணுகா : ஐயோ அம்மா.. இது அத விட costly-மா.. எங்க காலேஜ்ல ஒரு லேடி வந்து 40% discount-ல sales பண்ணினா.. Just 10000 தான்..
அலமு : பத்தாயிரமா..அவ்ளவு பணம் ஏதுடி ஒங்கிட்ட..
ரேணுகா : ரொம்ப simple.. By Exchange.. என்னோட Old necklace - அ கெழட்டிக் கொடுத்துட்டு, மேல just 500 கொடுத்து வாங்கிண்டேன்.. நான் மட்டுமில்லம்மா.. ரஞ்சனி, கவிதா, பானு, அகல்யா.. எல்லாரும் வாங்கிண்டோம்..
அலமு : என்னது.. நெக்லஸ வித்துட்டியா..ஏண்டி, எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்ல வேண்டாம்..
மூர்த்தி : எல்லாம்.. நீ கொடுக்கற எடம்..
ரேணுகா : அம்மா.. இன்னிக்குத்தான் சம்பவமே நடந்துது..எங்க நீ கண்டுபிடிக்கறியான்னு டெஸ்ட் பண்ணினேன்..
மூர்த்தி : ஏதாவது சால்ஜாப்பு சொல்லு...
அலமு : அப்படி என்னடி விசேஷம் இதுல..(எடுத்துப் பார்த்து).. கன்னங்கறேல்னும் இருக்கு,, வழவழன்னும் இருக்கு.. ஒருவேளை.. கரும்பவழமா இருக்குமோ..
ரேணுகா : பவழமா.. ஸ்டுபிட்.. நன்னா உத்துப் பாரு.. Rat waste மா..
அலமு : அப்டின்னா..
ரேணுகா : (யோசித்து).. How to explain.. ம் ம்.. அதாம்மா.. சின்ன சின்னதா ஆடு எல்லாம் போடுமே.. ம் ம் .. புழுக்கை.. எலிப்புழுக்கை..
மூர்த்தி : What.. எலிப்புழுக்கையா.. My God..
ரேணுகா : அப்பா.. இது சாதாரண எலிப்புழுக்கை இல்லை.. இதுக்குன்னே ஸ்பெஷலா வளக்கறா.. இந்த மாமரத்துலல்லாம் இருக்குமே, பழத்துக்கு தனி, மாவடுக்குத் தனி, ஆவக்காய்க்குத் தனின்னு.. அதுமாதிரி.. எலிலயும் நல்ல ஜாதி எலியாப் பாத்து எடுப்பாங்க..
மூர்த்தி : பேஷ்.. எலியிலயும் ஜாதி வந்துடுத்தா..
ரேணுகா : உஷ்...
மூர்த்தி : என்ன.. உஷ்ஷூ.. என்ன தைரியம் இருந்தா.. 3 பவுன் chain-அ தானம் பண்ணிட்டு, இந்த நாத்தம் புடிச்சத வாங்கிண்டு வந்துருப்ப... அட ஆண்டவனே.. என் நெஞ்சே வெடிச்சுரும் போல இருக்கே..
ரேணுகா : நீ ரொம்ப waste-ப்பா.. எவ்ளவு rare item தெரியுமா இது.. ஒரே size-ல் இவ்ளவையும் collect பண்றதுன்னா.. என்ன சும்மாவா.. இந்த work-க்குத்தான காசே.. (வேறு ஒன்றைக் காட்டி).. பாத்தியாம்மா.. அந்த sales ladyக்கு என்னை ரொம்ப புடிச்சுப் போச்சு.. எனக்கு ஸ்பெஷலா ஒரு Gift ஒண்ணு present பண்ணினா..
அலமு : இது என்னடி..
ரேணுகா : இதுவும் Rat Waste-தான்.. But single
item.. முன்னெல்லாம் Rice-ல் பண்ணுவால்லியோ..
அலமு : Rice-ல் என்னடி பண்ணுவா.. சாதம் பண்ணுவா.. உப்புமா பண்ணுவா.. இட்லி தோச பண்ணுவா..
ரேணுகா : ஐய.. Rice-ல் தாஜ்மகல் மாதிரி.. Sculpture - லாம் பண்ணுவா.. இப்ப rice old
fashion அதுக்குப் பதிலா எலிப்புழுக்கைல பண்றா.. Very Costly.
மூர்த்தி : இதுக்கு யார வித்த... ஒங்க அம்மாவையா..
ரேணுகா : இப்பத்தான சொன்னேன்.. இது கிஃப்ட்னு.. உன்னையெல்லாம் திருத்தவே முடியாது.. எப்ப பாத்தாலும் Tension பண்ணிண்டு.. நான் கெளம்பறேன் (Exit)
(கிச்சா உள்ளேயிருந்து வருகிறான்... வாசலில் இருந்து கல்யாணம் தம்பதிகள் வருகிறார்கள்)
கல்யாணம் :
என்ன.. மூர்த்தி... எங்களப் பார்த்துட்டு... பேந்த பேந்த முழிக்கிறீர்..
மூர்த்தி : இல்ல.. மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடிம்பாளே.. அது இதுதானான்னு யோசிச்சுண்டு இருக்கேன்..
கல்யாணம் : ஆமாம்.. ஏதாவது புதுசா காயலான் கடை பிசினஸ் ஆரம்பிச்சிருக்கீரா என்னா?
மூர்த்தி : புதுசா இருந்தா எப்படி ஸ்வாமி காயலான் கடை ஆகும்..?
கல்யாணம் : சரி, சரி,, கேட்டதுக்கு பதில் சொல்லும்..
மூர்த்தி : ஏன் அப்படிக் கேக்கறீர்..?
கல்யாணம் :
இல்லை.. வாசல்ல.. அரதலா ஒரு சைக்கிள் நெறுத்தி வச்சுருந்துது..அதனாலக் கேட்டேன்..
கிச்சா : வெளையாடாதீங்கோ சார்.. அது என்னோட ஆவி வந்த cycle..
மூர்த்தி : ஆமாம்.. அது இவா பிதுரார்ஜித சொத்து... நீர் வேணா காத்த புடுங்கிப் பாரும்.. இவருக்கு இங்க ஆவி பூடும்..
கல்யாணம் : ஆமாம்.. அது ஒண்ணுதான் கொறச்சல்... சும்மா சொல்லப்படாது கிச்சா... வண்டிய நன்னா maintain பண்ற.. சச்சதுரமா ஒரு Wheel-ல நான் ஜன்மத்துக்கும் பார்த்தது இல்லப்பா..
கிச்சா : Thank you very much..
மூர்த்தி : என்னமோ complimentஆ சொல்றா மாதிரி thank you சொல்ற.. நட்டு.. ஆமா.. அந்த cycle என்பதான வஸ்துவ பந்தோபஸ்தா வச்சுருக்கியோன்னோ..?
கிச்சா : வாசல்ல சும்மாத்தான் சாத்தி வச்சுருக்கேன் அத்திம்பேர்..! கவலைப்படாதீங்கோ.. பூட்டி வச்சுருக்கேன்..
மூர்த்தி : அடப்பாவமே.. பாத்துடா.. எவனாவது.. பூட்டைத் திருடிண்டு போயிடப்போறான்..
கிச்சா : சும்மாயிருங்கோ அத்திம்பேர்.. இதே வேலையாப் போச்சு ஒங்களுக்கு... (Exit)
(அலமுவும் பவானியும் வருகை)
பவானி : என்ன அலமு, ரேணுவுக்கும் வயசாயிண்டேப் போறதே.. வரன் இருந்தா சொல்லட்டுமா..
மூர்த்தி : என்னது.. வரனா? என்ன வெளையாடறேளா.. அவ பச்சைக் குழந்தை..
பவானி : பச்சைக் குழந்தையோ சேப்புக் குழந்தையோ.. எல்லாம் காலா காலத்துல நடந்தாத்தான நல்லது..
மூர்த்தி : அதுக்காக இவ்வளவு சின்ன வயசுலயா..
பவானி : ஏன் சின்ன வயசுங்கறேள்.. இதைவிடச் சின்ன வயசுலயே எனக்குக் கல்யாணம் ஆயிடுத்து... நான் இப்ப நன்னா இல்லயா?
மூர்த்தி : (ஹி ஹி ஹி) நீங்க நன்னா இருக்கேளா இல்லயான்னு நான் எப்படி மாமி சொல்ல முடியும்..? என்னதான் ஒங்காத்து மாமா ரெண்டுங்கெட்டானா இருந்தாலும், கோச்சுக்க மாட்டாரா?
அலமு : ஐய்யய்ய.. இதென்ன புது வழக்கம்.. பொம்மனாட்டியப் பாத்து வழியறது..
பவானி : ஏன்னா.. இங்க நெலமை சரியில்லை.. அப்படியே கெளம்புங்கோ.. (Murthy-டம்) இப்படியே அச்சுபிச்சுன்னு பேசிண்டு இருங்கோ.. எல்லாம் உருப்பட்டுடும்..(Exit)
மூர்த்தி : வந்தவா ரெண்டு பேரும் வெறுங்கை வேங்கடான்னு போறாப்பல இருக்கு.. ஒண்ணும் கடன் கிடன் வாங்கிக்கலையா..
அலமு : வந்ததுக்கு, ஜாதகமாவது வாங்கிண்டு போகலாம்னு இருந்திருப்பா.. வாய வெச்சுண்டு சும்மா இல்லாம அதையும் கெடுத்துப்புட்டேள்..
(கிச்சா Re-entry)
கிச்சா : அத்திம்பேர்.. ஒங்களுக்கு ஒரு Glad News.
மூர்த்தி : என்னப்பா.. என் சோத்துல வெஷம் கலந்துருக்கயா?
கிச்சா : புத்தி போறதே.. இன்னிக்கி மத்யானம் நம்ம ஜோஸ்யர் வந்துருந்தார்..
மூர்த்தி : யாரு நவச்சிவாயமா..
கிச்சா : நாமம் போட்டுண்டு இருந்தார்.. அனேகமா. நாமச்சிவாயமா இருக்கும்..
அலமு : நீயும் ஆரம்பிச்சுட்டயா.. அதான்.. நம்ம மோர்க்குழம்பு கோபாலன் வந்துருந்தார்.
மூர்த்தி : என்னவாம் திடீர் விஜயத்துக்கு..
கிச்சா : எல்லாம் நல்லதுக்குத்தான்.. வந்தவர் நம்ம ரேணு ஜாதகம் பார்த்துட்டு.. அவளுக்கு தோஷம் இருக்குன்னு சொல்லிட்டார்..
மூர்த்தி : இதுதான் நல்ல Newsஆ? ஏதாவது சொல்லப் போறேன்..
கிச்சா : கவலைப்படாதீங்கோ அத்திம்பேர்.. அவர் அதுக்கு ஒரு பலகாரமும் சொன்னார்..
மூர்த்தி : அது பலகாரம் இல்ல.. பரிகாரம்.. திங்கறதுலயா எப்பப் பார்த்தாலும் ஞாபகம்.. என்ன பரிகாரமாம்.. ஒன்னப் பலி கொடுக்கணுமாமா?
கிச்சா : ஐய.. என்னவோ எலிவால் மயிர்ல பண்ணின bracelet ஒண்ணு வந்த்துருக்காம்.. ஒண்ணா வாங்கினா 2000 ஆகுமாம்.. ரெண்டா வாங்கினா 3000 தானாம்.. அதோட ஒரு எலி நகமும் Free யாம்.. நான் ரெண்டு order பண்ணிட்டேன்..
(டப்பு என்று கை சிமிட்டிக் கேட்கிறார்)
கிச்சா : அதெல்லாம் அக்கா அப்பவேக் கொடுத்துட்டா..
(கிச்சாவைக் கிள்ள. அவன் ஓ என்று அலறுகிறான்) என்ன ஏன் அத்திம்பேர் கிள்ளறேள்..
மூர்த்தி : நியாயமா கில்லணும்.. கிள்றதோட விடறேன்..
அலமு : கொழுப்பு..
மூர்த்தி : அதுசரி.. bracelet வாங்கறதுன்னு முடிவு பண்ணிட்டேள்.. எதுக்கு ரெண்டு.. தோஷம் ரேணுவுக்குத்தான?
கிச்சா : இன்னொண்ணு எனக்கு.. எனக்கும் தோஷம் இருக்குன்னு ஜோஸ்யர் சொல்லிட்டாரே..
மூர்த்தி : அதுக்குப் பேரு.. ப்ரும்மஹத்தி தோஷம்.. அதுக்குப் பரிகாரமே கிடையாது.. அடப்பாவிகளா.. கடைசில என்ன வீட்ட விக்க வெச்சுருவேள் போலருக்கே..
(வாசலில் Ambulance போகிறது)
மூர்த்தி : என்னது.. தெருவுல திடும்னு Ambulance போறது..
கிச்சா : மூணாவது வீட்டுல ஒரு கெழம் ரொம்ப நாளா இழுத்துண்டு கெடந்துது.. பூடுத்துன்னு நெனக்கறேன்..
மூர்த்தி : ஏன்.. அவருக்கு எலிப்பால் சாதிக்கலயாக்கும்..
அலமு : உளறாதீங்கோ.. மாமரத்துக்காரா வீட்டு சந்தியாக்கு இன்னிக்கு Due Date.. அதுவாத்தான் இருக்கும்..
மூர்த்தி : அந்த மாமி பேரு பங்கஜம்னா.. Modern- ஆ சந்தியான்னு பேரை மாத்தி வச்சுண்டுட்டாளா?
அலமு : கண்றாவி.. அவாத்து எலி பேருதான் சந்தியா..
மூர்த்தி : Fantastic.. ஆமா.. நம்ம வீட்டு எலி பேரு என்ன..?
அலமு : பர்வதம்.. செல்லமா பாருன்னு கூப்டறோம்..
மூர்த்தி : அடிப்பாவி.. பர்வதம் எங்க பாட்டி பேராச்சே..
அலமு : நீங்கதான அடிக்கடி சொல்லுவேள்.. எங்க பாட்டி நித்ய கர்ப்பிணி.. வதவதன்னு 14 பசங்கன்னு.. ராசியா இருக்கட்டுமேன்னு..நாந்தான் அந்த பேரை வக்கச் சொன்னேன்..
மூர்த்தி : சரியாப் போச்சு..
(பவானி மாமி ஓடி வருகிறாள்)
பவானி : அலமு.. அலமு.. விஷயத்தக் கேட்டியோ..
மூர்த்தி : அதுக்குத்தான மாமி நீங்க வந்துருக்கேள்..
பவானி : ஒங்காத்துக்காரருக்கு.. என் மேல எப்பவுமே நல்ல அபிப்ராயம் கிடையாது..
அலமு : (படபடப்புடன்) அவர் கெடக்கார்.. நீங்க விஷயத்தச் சொல்லுங்கோ மாமி..
பவானி : சந்தியாவுக்கு டெலிவரி ஆயிடுத்துடி..
மூர்த்தி : Very Good.. Normal-லா caesarian-ஆ?
அலமு : நீங்க இதுல தலையிடாம ஆம்பளையா லட்சணமா இருங்கோ.. நீங்க சொல்லுங்கோ மாமி..
பவானி : ஒரே ப்ரசவத்துல ஆறு குட்டி போட்டுருக்குடி.. அதுல பாரு கஷ்டத்தை.. அதுல நாலு குட்டி.. ஆம்பளைக்குட்டி.. ரெண்டே ரெண்டுதான் பொம்பளக்குட்டி.. பங்கஜம் இடிஞ்சு போயிட்டா..
அலமு : அடப்பாவமே.. இதுக்குத்தான்.. பெரியவா பேச்சக் கேக்கணும்கறது.. 4ம் வாரமே சீமந்தம் பண்ணியிருந்தா இந்தக் கஷ்டம் வந்துருக்காது.. அட்லீஸ்ட் ஒரு scanஆவது பண்ணிப் பார்த்திருக்கலாம்.. எல்லாம் ப்ராப்தம் தான்.. என்ன பண்றது.. ரெண்டாவது தங்கித்தேன்னு சந்தோஷப் பட்டுக்க வேண்டியதுதான்.. ஆமா.. அந்த 4 ஆம்பளக்குட்டிகள என்ன பண்ணினா?
பவானி : அதையேன் கேக்கற.. எல்லாம் ஓண்ணோட ஒண்ணு வெளையாடறதுகள்.. குஞ்சு குஞ்சா எலிப்பிஞ்சு.. என்ன பண்றது.. நாலையும் தூக்கி அந்த மாட்டுக்கெல்லாம் சூடு போடுவானே செவந்நாதன்.. அவன் கிட்டக் கொடுத்துட்டா..
அலமு : அவன் என்ன பண்ணுவானோ..
மூர்த்தி : குழம்பு வெச்சு தோசைக்கு தொட்டுப்பான்..
பவானி : ச்சீ சீ.. அன்னத் திரேஷம்..
மூர்த்தி : நீங்கதான மாமி எலிப்பிஞ்சுன்னேள்.. கால், வால் - லாம் நன்னா ஆஞ்சுப்புட்டு , சாம்பார் வச்சா சின்ன வெங்காயம் சாம்பார் மாதிரியே இருக்கும்..
பவானி : கண்றாவி கண்றாவி.. வெங்காய சாம்பாரே இன்னுமே ஜன்மத்துக்கும் சாப்டமுடியாதபடி பண்ணிட்டேள். கருமம். .
(அலமுவிடம்) நீ கேளு...செவநாதன்.. எல்லாத்தயும்.. மேல்துண்டுல புடிச்சுண்டு போயிட்டான்.. என்னடா பண்ணுவன்னு கேட்டேன்.. தோட்டத்துக்கு எடுத்துண்டு போயி கள்ளிப்பால் கொடுத்துக் கொன்னுடுவானாம்.. பாவம்..
மூர்த்தி : கலிகாலத்துல இன்னும் என்னல்லாம் நடக்கப் போறதோ? பகவானே..
--0--
No comments:
Post a Comment