(Scene 4)
(கல்யாணம் Entry)
மூர்த்தி : என்ன கல்யாணம்? பல்ப் Fuse ஆன மாதிரி இருக்கீர்.. கல்யாணம்னா கலகலப்பா இருக்க வேண்டாமோ? கைல எலிய வேறக் காணோம்..
கல்யாணம் : அந்த வயத்தெரிச்சலை ஏன் ஓய் கேக்கறீர்.. நான் walking போகும்போது எவனோ என் எலியை கிட்னாப் பண்ணிண்டு போயிட்டான்யா.. வந்தா எலியோட வா.. இல்லன்னா.. வீட்டுப்பக்கம் வரப்படாதுன்னு பவானி அடிச்சு வெரட்டிப்புட்டா..
மூர்த்தி : அடப்பாவமே.. ரவி.. இதுலர்ந்து என்ன தெரியறது..
ரவி : என்னப்பா?
மூர்த்தி : ரெண்டு ஜீவன்கள் walking போயிண்டுருந்துருக்குகள்.. எவனோ திருட்டுப்பய வந்து அதுல ஒரு ஜீவன மட்டும் தள்ளிண்டு போயிருக்கான்.. அப்படின்னா என்ன அர்த்தம்.. மவுச விட கல்யாணத்துக்கு மவுசு கம்மின்னுதான அர்த்தம்?
ரவி : ஏன்பா நீ வேற... அடுத்தவா வயத்தெறிச்சல்ல இருக்கறப்போ கிண்டல் பண்ணப்படாது..
மூர்த்தி : Just a logical thinking-டா.. கல்யாணம்ஜி.. ஒண்ணு பண்றேளா?
கல்யாணம் : சொல்லுங்கோ.. இப்ப இருக்கற நெலமையில எந்த கழிசடை என்ன சொன்னாலும் கேட்டுக்கறதுதான்.. ஒங்களன்னு சொல்லலை.. பொதுவா சொன்னேன்..
மூர்த்தி : சொல்லியாச்சு.. இன்னமே என்ன பண்றது? பேசாம எங்க வீட்டு எலியை ஸ்வீகாரம் எடுத்துண்டுருங்கோ..
ரவி : அய்யய்யோ.. என்னப்பா சொல்ற? அம்மாக்குத் தெரிஞ்சுது.. ஒன்னை சிரச்சேதம் பண்ணிடுவா..
(அலமு entry..)
அலமு : எல்லாம் கேட்டுண்டுதான் இருந்தேன்.. துக்கிரித்தனமாப் பேசறது இவருக்கு என்ன புதுசா என்ன? ம்.ம்.. சரி.. போனாப்போறது.. உள்ள போயி சட்டையப் போட்டுண்டு.. மொதக்காரியமா.. கடைக்குப் போயி ரெண்டு எலிப்பொரி வாங்கிண்டு வாங்கோ..
மூர்த்தி : ஆஹா.. ஆஹா.. என்னடி சொல்ற.. ஒன் வாயாலயாடி சொல்ற.. என்ன இப்படி திடுதிடுப்புனு ஞானோதயம் வந்துது.. ரெண்டு என்ன.. நாலு வாங்கிண்டு வந்துடறேன்.. ஊர்லயே எலிய ஒழிச்சுப்புடுவோம்..
அலமு : (முறைத்து) இதையே வேறா யாராவது பேசியிருந்தா.. அடுப்புல தோசத்திருப்பியைப் போட்டு.. நாக்குலயே நாலு தடவை இழுத்துருப்பேன்..
மூர்த்தி : ஏண்டி.. நீ தான சொன்ன?
அலமு : நான் சொன்னது.. எலி புடிக்கற பொறி இல்ல.. எலிக்குப் புடிக்கற பொரி.. அவல் பொரி .. நெல்லுப்பொரி மாதிரி.. இப்ப மார்கெட்ல ஏகப்பட்ட flavours-ல விக்கறது..
கல்யாணம் : ஆமாம் மூர்த்தி.. இதைல்லாம் கொடுத்துத் தான் எலியை போஷாக்கா வளர்க்கணும்.. அப்பத்தான் எலி கணிசமா பால் கறக்கும்.. ஒரு டின் நார்மலா 200 rupees..
மூர்த்தி : அடப்பாவிகளா.. அவ்ளவு தூரம் வந்துடுத்தா..
கல்யாணம் : இல்லயா பின்ன.. நாமதான் நம்ம General Knowledge -ஐ updated-ஆ வச்சுக்கணும்..
(கிச்சா entry)
மூர்த்தி : வாடாப்பா..
கிச்சா : அத்திம்பேர்.. டக்குனு ஒரு 500 ரூபாய் எடுங்கோ..
மூர்த்தி : எதுக்குடா?
கிச்சா : புள்ளையார் சதுர்த்தி வருதோன்னோ.. ஜமாய்க்க வேண்டாம்..?? எலியை ப்ரமாதமா அலங்காரம் பண்ணி.. பிள்ளையாரை அது மேல தூக்கி வச்சு.
மூர்த்தி : அது எலி இல்ல.. அதுக்குப் பேரு மூஞ்சூறு..
கிச்சா : அதுவும் எலிதான்.. யாரை வேணா கேட்டுப் பாருங்கோ..
மூர்த்தி : ஆமா.. எனக்கு ரொம்பத் தெரிஞ்சுண்டு ஆகணும்..
(கிச்சா கல்யாணத்திடம்)
கிச்சா : பாத்தேளா சார்.. நம்ம ஆளுங்க நம்ம ஆளுங்க தான்.. அந்தக் காலத்துலயே எலியைப் பத்தி நன்னாத் தெரிஞ்சு வச்சுருக்கா.. ஓம் அப்படிங்கற ப்ரணவ ஸ்வரூபத்தையே.. எலிதான் தாங்கிப் பிடிச்சுண்டு இருக்குங்கறத சிம்பாலிக்கா காண்பிக்கத்தான்.. பிள்ளையாரத்தூக்கி எலிமேல வச்சுருக்கா..
கல்யாணம் : ஆமாமாம்.. ஆமாமாம்..
மூர்த்தி : இதெல்லாம் யாருடா சொல்றா ஒனக்கு..??????
கிச்சா : நம்ம பிள்ளையார் கோயில்ல.. சாம்பு சாஸ்திரிகள் எலிபுராணம் ஏழு நாள் வாசிக்கறாரோன்னோ.. ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கதை.. நேத்திக்கு இந்தக் கதையை சொன்னார்..
மூர்த்தி : அந்த Levelக்கு வந்தாச்சா.. போற போக்குல.. எலி உம்மாச்சியாவும்.. பிள்ளையார் வாகனமாகவும் ஆனாலும் ஆச்சரியப் படறதுக்கு இல்லை..
கல்யாணம் :பகவான நிந்தனை பண்ணாதீங்கோ மூர்த்தி... ஆகவே ஆகாது..
கிச்சா : அத்திம்பேர் எப்பவுமே அப்படித்தான்.. முந்தா நாள் இதைவிட சூப்பரா ஒரு கதை சொன்னார்..
கல்யாணம் : என்னது..??
கிச்சா : பாற்கடலக் கடைஞ்சு வெண்ணை எடுத்த கதை..
கல்யாணம் : வெண்ணையா..??
கிச்சா : அமிர்தம்.. தப்பா சொல்லிட்டேன்.. கமலாசுரன்னு ஒரு அசுரன் வேதங்களக் கொண்டு கடலுக்கு அடியில வெச்சுடறான்.. அவனைப் பிள்ளையார்தான் ஜெயிச்சு, வேதங்களைக் கொண்டு வர்றார்.. அப்ப அந்த கமலாசுரனை எலியா மாத்தி வாகனமா வெச்சுக்கறார்னு புராணம்.. Actual-லா அந்த வேத சாரம்தான் அமிர்தமா கமலாசுரன் கிட்ட தங்கிடறது..
ஒருதடவை அவன் பிள்ளையார்கிட்டக் கோச்சுண்டு, மறுபடியும் கடலுக்கு அடியில போய் தங்கிடறான்.. அதக் கண்டுபிடிச்ச தேவர்கள் எல்லாம், மத்த அசுரர்ளோடக் கூட்டு சேர்ந்துண்டு கடலை சிலுப்பறா.. அந்தக் கஷ்டம் தாங்காம கமலாசுரனன எலி, அமிர்தத்த பாலா மாத்திண்டு, அதுக்குப் பதிலா கடுமையான விஷத்தக் கக்கறான்.. அதுதான் எலி பாஷாணம்..
ரவி : எது.. நம்ம நாட்டார் கடையிலல்லாம் கிடைக்குமே.. அதுவா?
கிச்சா : ஷ்ஷீ.. நீங்க கேளுங்கோ சார்.. அந்த பாஷாணத்தத் தான் சிவபெருமான் எடுத்து முழுங்கிட்டு, கமலாசுரனையும் மன்னிச்சு, சாப விமோசனம் கொடுக்கறார்.. அதனாலத்தான் அவருக்கு திருவருட்செல்வர்னு பேரு வந்துருக்கு..
ரவி : அது திருவருட்செல்வர் இல்லை.. திரு நீலகண்டர்..
கிச்சா : Correct... ஏதோ ஒரு பழய சினிமாப் பேரு.. இப்ப அதுவா முக்கியம்.. கேளுங்கோ.. அவன் மறுபடியும் எலியா மாறி, பிள்ளையாருக்கே வாகனமா வந்துடறான்.. அவன் ஒருகாலத்துல, வேதங்கள ரக்ஷித்ததுனால, கலிகாலத்துல, அமிர்தத்துக்கு எலிய guardianனா கடவுள் போட்டுருக்கார்..
கல்யாணம் : ரோமாஞ்சனம் பாருங்கோ சார்.. இந்த எலியப் பத்தி எவ்வளவுதான் வாசிச்சாலும், கேட்டாலும், அலுக்கறதே இல்லை, பாத்தேளா..?
கிச்சா : அதுல என்னன்னா.. இந்த எலில இவ்வளவு matter இருக்குன்னு, அந்த நாள்லயே தெரிஞ்சுருக்கு பாருங்கோ.. என்ன இருந்தாலும், அந்த நாள்லயே புஷ்பக விமானம் ஓட்டினவாதான நாம..
மூர்த்தி : (பழிப்புடன்) நாமன்னா யாரு.. நீயும் ஒங்க அப்பனுமா.. நீங்க ஓட்டினதுக்குப் பேரு ரிக்ஷா.. ஊருக்குள்ள அரதலா ஒரு அம்பாஸடர் வந்தாலே, அரை நிஜார் நழுவினாலும் பரவால்லன்னு, அரை மைல் தொரத்திண்டு ஓடின பயல் நீ,, புஷ்பக விமானம் ஓட்டினேளாக்கும்..
கல்யாணம் : ஒங்களுக்கு என்ன வந்துது இதுல.. அனாவசியமா ஏன் கோச்சுக்கறேள்.. அவன் ஏதோ ஸ்வாமி காரியமா சொல்லிண்டுருக்கான்..
கிச்சா : அத்திம்பேருக்கு எதுலயும் நம்பிக்கையே கிடையாது.. சாஸ்திரிகள் கூட சொன்னார்.. பாஷாண்டிகள்லாம் இதை நம்ப மாட்டா.. அதப் பொருட்படுத்தப் படாதுன்னார்..
கல்யாணம் : நன்னாக் கேட்டுக்குங்கோ..
மூர்த்தி : இன்னும் என்னவாவது சொல்லணும்னா சொல்லுடாப்பா...
கிச்சா : நேத்திக்கு சாஸ்திரிகள் முடிக்கும் போது, எல்லாருக்கும்
மந்திர ஜபம் பண்ணி வச்சார்.
கல்யாணம் : மந்திர ஜபம்னா?
கிச்சா : அதான். எலி காயத்ரியை எல்லாருக்கும் உபதேசம் பண்ணி
வச்சார்.
கல்யாணம் : ஆஹா.. கிச்சா... ஞாபகத்துல இருந்தா கொஞ்சம் சொல்லேம்பா.. நான் நோட்
பண்ணிக்கறேன்.
கிச்சா : அதுக்கென்ன? இப்பவே சொல்றேன்...
note பண்ணிக்குங்கோ.. (சொல்கிறான்)
"எலித்வஜாய
தீமஹி.. வாகனஸ்தாய வித்மஹி..
தன்னோ மூஷிகப் பிரசோதயாத்:
கல்யாணம் : இதை எவ்ளவு தடவை ஜபிக்கணும்?
கிச்சா : முடியும்போது எல்லாம் சொல்லிண்டே இருக்கலாம்.. daily 1008 தடவை ஜபிச்சா ரொம்ப நல்லது..
மூர்த்தி : ஜபிச்சா என்ன நல்லது நடக்கும்? எலி பகவான் ப்ரத்யட்சம் ஆவாரா? ஏண்டா... லூசுப் பயலே.. மந்திரம் சொல்லாமலேதான், எங்கப் பார்த்தாலும், எலி, குறுக்கும்
நெடுக்குமா ஓடிண்டு இருக்கு... இதுல மந்திரம், மண்ணாங்கட்டி
வேறயா.. உலகம் ரொம்ப உருப்பட்டுடும்...
கிச்சா : எவ்வளவு பெரிய மகான்கள்லாம் எலிய வச்சு எத்தனை அற்புதங்கள்லாம் செஞ்சுருக்கா தெரியுமா? மாணிக்க வாசகர்னு ஒரு பெரிய்ய மகான்.. சிங்கப்பெருமாள் கோயில்ல, எலிய புலியா மாத்தி miracle பண்ணியிருக்கார்.. ஞானசம்பந்தர்னு ஒத்தர்..
கல்யாணம் : Post Officeல வேலை பார்த்துண்டு இருந்தாரா?
கிச்சா : இவர் அவர் இல்லை.. இவர் ரொம்ப நாள் முன்னாடி.. 4 வயசு குழந்தையா இருந்தப்பவே.. எலிப்பாலக் குடிச்சுப்புட்டு ஏழு கட்டையில கச்சேரி பண்ணியிருக்கார்..
மூர்த்தி : வேண்டாண்டா.. வேண்டாம்.. எல்லாத்துக்கும் ஒரு எல்லை உண்டு.. என்னை ரொம்ப ஏத்தி விட்டுட்டு ஜெயிலுக்கு அனுப்பிடாதீங்கோ.. சொல்லிப்புட்டேன்.. (exit)
(கிச்சா கையிலிருந்து ஒரு CD காண்பிக்கிறான்)
கிச்சா : சார்.. இங்க பார்த்தேளா..?
கல்யாணம் :என்ன CD- ப்பா அது?
கிச்சா : பெருச்சாளி நேசன்னு ஒரு பெரிய singer இருக்காரோன்னோ.. அவர் ஒரு album போட்டுருக்கார்.. Beautiful
tunes. இதைப் போட்டாப் போறும்.. எலி போறும் போறும்னு பால் கறக்கும்..
கல்யாணம் : Original ஆ Duplicate ஆ ?
கிச்சா : ஒரிஜினல் யாரு வாங்குவா? 200 ரூபா சொல்றான்.. பர்மா பஜார்ல 50க்கு கெடைக்கறது..
கல்யாணம் : ம்ம்ம்.. எனக்குத்தான் அந்த குடுப்பினையே இல்லை..
அலமு : (ரொம்ப சௌகரியம்) (ரேணு entry with
Paaru)
என்னடி இது.. பாருக்குட்டியைத் தூக்கிண்டு வந்துருக்க...?
ரேணுகா : எங்க காலேஜ்க்குத் தூக்கிண்டு போறேன்மா..
மூர்த்தி : (திரும்பவும் வந்துகொண்டே) தூக்கிண்டு போ.. திருப்பி எடுத்துண்டு வராதே..
அலமு : வாய்ல வசம்ப வெச்சுத் தேய்க்க.. என்னடி விசேஷம்..
ரேணுகா : : எங்க காலேஜ்ல Beauty Contestமா.. எலிகளுக்கான அழகிப் போட்டி.. எல்லாரும் அவங்கவங்க எலியக் கொண்டு வரச்சொல்லியிருக்கா..
மூர்த்தி : என்ன ஆச்சரியம்.. அந்த நாள்ல சொல்லுவா.. ஊர்ல அழகிப்போட்டி announce பண்ண ஒடனே, ஆந்தையும் குரங்கும் முதல்ல ஊர விட்டு ஓடிப் போச்சுன்னு!..
ரேணுகா : ம்க்கும்..........நம்ம பாருக்குட்டியப் பார்த்தியாம்மா.. make up எப்படி?
அலமு : என்னடி இது.. குஞ்சம்லாம் வெச்சு பின்னியிருக்க.. super..
மூர்த்தி : அப்படியே சவுரி வச்சு கொண்டை போடறதுதானே.. ஒங்கம்மா மாதிரியே இருக்கும்..
(வாயை மூடுமாறு கைகளால் சைகை செய்கிறாள்)
ரேணுகா : கண்ல பார்த்தியாம்மா.. Eyetek இட்டு விட்டேன்....எப்படிக் காட்டறது தெரியுமா.. அப்படியே பேசப்பேச வருதும்மா..
மூர்த்தி : ஆமாண்டி... பேசும்.. பாட்டுப்பாடும்.. keyboard வாசிக்கும்.. computer games வெளையாடும்.. ரெட்லைட் போட்டு Train stop பண்ணும்.. என்னங்கடி விட்டா அளந்துண்டே போறேள்.. வாயில்லா ஜீவன்.. கண்ல என்னத்தையோ அப்பி விட்டு.. கண் குருடாவேப் போயிடுத்து போலருக்கு.. இப்பவே Blue Cross க்குப் போன் பண்ணி ஆத்தாளையும் மகளையும் உள்ள தள்றேனா இல்லயா பாரேன்..
அலமு : சும்மா லப லபன்னு எப்பப் பாத்தாலும் பொலம்பிண்டே இருக்கேளே.. வாய் வலிக்கலை?
ரேணுகா : அடப் போப்பா.. (ரேணு exit)
(Pager-ல் ரவிக்கு Message வருகிறது)
ரவி : Super..
மூர்த்தி : என்னடா?
ரவி : Special newsபா.. எலிப்பால் புகழ் Prof. ராம்னாத்துக்கு Nobel Price announce பண்ணியிருக்காங்களாம்.. என் friend inform பண்ணான்..
அலமு : அப்படியா.. ரொம்ப சந்தோஷம்.. இப்பவே அரிசி ஊறப்போடறேன்... பிள்ளையாருக்கு ரொம்ப நாளா கொழுக்கட்டை due...
கல்யாணம் : கிச்சா.. அந்த TVய On பண்ணுப்பா...... கண்டிப்பா ஏதானும் News சொல்லுவான்..
சற்றுமுன் கிடைத்த செய்தி..
எலிப்பாலுக்கு நோபால் என்ற செய்தி தெரிந்ததே..
அந்த மிகப்பெரிய சந்தோஷத்தைத் தாங்க முடியாத திரு. ராம்னாத் அவர்கள், சற்றுமுன் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்..
(எல்லோரும் கோரஸாக) ஐய்யய்யோ..
மூர்த்தி : என்னங்கடா.. என்னமோ எலிப்பால் குடிச்சா மனுஷனுக்கு சாவே கிடையாதுன்னு சொன்னான் . சொன்னவனே செத்துப் பூட்டான்..
கல்யாணம் : அதான..?? இப்ப என்னங்காணும் செய்யறது?
மூர்த்தி : நீர் ஒண்ணும் செய்ய வேண்டாம்.. அவாளே அடக்கம் பண்ணி காரியம்லாம் பண்ணிடுவா..
அலமு : வாயை மூடுங்கோ.. எல்லாம் உங்களாலத்தான்..
மூர்த்தி : நான் என்னடி பண்ணினேன்..???
அலமு : உங்க கரிநாக்க வச்சுண்டு சும்மா இல்லாம, ஆரம்பத்துலேர்ந்து "அஸ்து" கொட்டிண்டே இருந்தேள்.. இப்ப லோகத்துக்கே கஷ்டம் வந்துடுத்து..
மூர்த்தி : அடிப்பாவி.. இப்படி மனசாட்சியே இல்லாம பேசறியே..
ரவி : ரெண்டு பேரும் சண்டை போடறத.. மைமிங்க்ல போடுங்கோ.. டிவில என்ன சொல்றான்னேக் கேட்க மாட்டேங்கறது..
(டிவி தொடர்கிறது)
ராம்னாத்தின், ப்ரதான சீடர், திரு Lecturer. லட்சுமணன் அவர்கள் பல்லவன் பஸ்ஸில் நந்தனம் சிக்னலில், Foot Boardல் தொங்கிக் கொண்டிருந்த போது, அவரிடம் எடுத்த பேட்டியில், இவ்வாறு நேரும் என்பதைத் தான் முன் கூட்டியே கண்டு பிடித்து விட்டதாகக் கூறினார். Professorன் மறைவுக்கு, எலிப்பாலில் இருக்கும் Hibiscus Hexa
Istanbul என்னும் வைரஸ்தான் காரணம் என்று தாம் கண்டுணர்ந்ததாக் கூறினார். இந்த வகை வைரஸைத் தாக்கி அழிக்கும் சக்தி, பூனையின் எச்சிலில் இருக்கும் Musa மியாவ் மியாவ் என்னும் bacteria ல் இருப்பதைத் தாம்
கடுமையான ஆராய்ச்சிக்குப் பின், கண்டு பிடித்திருப்பதாகக் கூறினார்.
தம்முடைய இந்தக் கண்டுபிடிப்பிற்காக தம்முடைய பெயரை அரசு நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யும் என்று தாம் நம்புவதாகக் கூறினார்.
அதனால், எலிப்பாலை இதுவரைக் குடித்து வந்தவர்கள், மரணத்தினின்று தப்பிக்க.. நாடு தழுவிய அளவில் இனிமேல் பூனைகளை வளர்க்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, பொதுக்கூட்ட மாமேதை, அதிர்வேட்டு அருணாசலம், நாட்டின் தேசிய மிருகமாக பூனையை அறிவிக்கவில்லையென்றால், நாளைக்காலை 9 முதல் 9.30 வரை, தொண்டர்களுடன், காந்திசிலை முன் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக “காந்தியை” எச்சரித்து உள்ளார்.
மூர்த்தி : அட ராமா.. இதுவரைக்கும், எலி பின்னாடி லோ லோன்னு அலஞ்சாச்சு.. இன்னுமே, பூனை பின்னாடி "நாய்" மாதிரி அலையணுமா..?????
(மயங்கி விழுகிறார்)
திரை
No comments:
Post a Comment