Saturday, April 15, 2023

கட்டணம்

*கட்டணம்* 

த்ருஷ்ணாப்பள்ளி ரயில்வே ஆஃபீஸே அல்லோல கல்லோலப் படறது. டிவிஷனல் ரயில்வே மானேஜர் யாரோ வடக்கத்தி காங்கிரஸ் மந்திரிக்கு நெவ்யூ. அதுனாலத்தான் அவருக்கு இந்தப் பதவி கிடைச்சதுன்னு யாரும் நெனச்சுக்கப் படாது. நல்ல உழைப்பாளி. கை சுத்தம். தங்கம். கொஞ்சம் முன்கோபி.  நம்மூர் மனுஷங்கள்னா கொஞ்சம், கொஞ்சம் இல்லை, நெறயவே இளக்காரம். நம்ம ஆளுங்களும் கணுக்காலுக்கு மேல, வேகமா நடந்தா தடுக்கற மாதிரி நாலு முழமும் இல்லாம எட்டு முழமும் இல்லாம ஒரு வேஷ்டி. வெத்தலை பாக்கு. அதைவிட அதை வைத்துக் கொள்ளும் கண்றாவியான டப்பா.. இடுப்பு வேட்டி நழுவாமல் தொப்பையை இறுக்கிப் பிடிக்கும் லெதர் பெல்ட். அந்தத் தோலின் ஒரிஜினல்  உரிமையாளரான விலங்கு கூட அத்தனை வருடங்கள் வாழ்ந்திருக்காது.

 பெல்ட்டின் வனப்பைப் பார்த்தால் அது கண்டிப்பாக பிதுரார்ஜித சொத்தாகத்தான் இருக்கணும். அநேகமாக அங்கு வேலை பார்த்த அத்தனை மாமாக்களும் இதே சாமுத்ரிகா லட்சணத்தில் தான் உலாவருவார்கள்.

நல்ல நிறமும், ஆகிருதியும், சரளமான மொழியும், நாகரீகமும் வனப்பை மிஞ்சும் உடுப்பும், வடக்கத்தி அதிகாரிகளை நிச்சயமாக நம்மாட்களோடு வேறுபடுத்தியே காண்பிக்கும். 

இதனாலேயே மதறாசிகள் மீது வடநாட்டு மெத்தப் படித்த அதிகாரிகளுக்கு அலட்சிய மனப்பான்மை ஆதிகாலத்திலேயே ஏற்பட்டு விட்டது.

"அவன் என்ன பெரிய புடுங்கியா? படிச்சுட்டா எல்லாம் புரிஞ்சுடுமா? நான் அந்தக் காலத்திலயே மேத்தமாட்டிக்ஸ்ல சென்ட்டம். செஞ்ஜோசப்புல வெத்தலை பாக்கு வெச்சு வா வான்னு கெஞ்சினாந்தெரியுமோ?"

"நீங்க வெத்தலை பாக்கை மட்டும் எடுத்துண்டு படிப்பை சாய்ஸ்ல விட்டுட்டீங்க"

"படிச்சு என்னடா ஆகப்போறது அம்பி? வேற எங்கேயாவது உத்யோகத்துக்குப் போ போன்னு ஒரேயடியா புடுங்குவாங்க... ஜபல்பூர் போகலாமேன்னு ஆளாளுக்கு வக்கணையா ஒபதேசம் பண்ணுவான்... அங்க போய் இரும்போட இரும்பா துருப்புடிச்சுக் கெடக்கணும்... நமக்கு அடுத்த வாரிசுக்கு சுட்டுப் போட்டாக் கூட தமிழ் வராது.. நம்ம கிட்டயே ரெண்டுங்கெட்டான் தமிழ்லதான் பேசுங்கள்...

 மேலத்தெரு சீமாச்சு சின்ன வயசுலயே வடக்கே பரன்பூர் போயிட்டான். கைநிறைய சம்பளம்னு அவன் பொண்டாட்டி ஒரே பீத்தல்... என்ன ஆச்சு? இங்கே இருக்கற  நடுக்காவேரில எல்லாம் மண்ணைவிட்டு அடிச்சாச்சு... கொட்டிலும் கன்னுமா தகதகன்னு இருக்கும் வீடு... யாருமே கவனிக்கலைன்னா எவ்வளவு நாள் தான் தாங்கும்? ஏதோ கெழவி இருக்கற வரைக்கும் சமையல்கட்டாவது உழாம இருந்துது... இப்ப சப்ஜாடா உழுந்து புல்லு மண்டிக் கடக்கு...

 நாலுவேலிக்கு நாலு மா கம்மி... யார் யாரோ அனுவிச்சுண்டு இருக்கான்... யாருன்னே தெரியல்லடாங்கறான் சீமாச்சு... தெரிஞ்சான்னா திருப்பிக் கேக்கறதுக்கு..
 
இதவிட லச்சணம், ஒழக்கு மாதிரி அவம்புள்ள பத்தாவது படிக்கறானாம், பாலக் குடிச்சுப்புட்டு, தீந்து போச்சுன்னு சொல்லத் தெரியாம, "ஆக வந்துடுத்து" ங்கறான்.

"ஆக வந்துடுத்து ன்னா"

"என்ன கண்றாவியோ? கொழந்தைகளுக்கு ஆத்திச்சூடில்லாம் சொல்லிக்கொடுக்க வேண்டாமோ? சீமாச்சுவுக்கே அதெல்லாம் தெரியுமோ தெரியாதோ" என்று சிரித்தார்.

மறுபடியும் ஞாபகம் வந்தவராக வெற்றிலையின் காம்பை பட்டாசு திரி கிள்ளுவது போலக் கிள்ளி, தொடையில் பத்து தடவை தடவி அழுக்கு ஏற்றிக் கொண்டார்.

"எதுக்கு இந்த டாப்பிக் வந்துதுன்னா? 
.. நாம உண்டு, நம்ம வெத்தலை பாக்கு உண்டு, அகிலாண்டேஸ்வரி உண்டுன்னு அக்கடான்னு இருக்கறதை உட்டுட்டு யாருக்காக நான் ஆலாப் பறக்கணும்.. பசங்க வேணும்னா என்னத்தையாவது படிச்சுட்டு எங்கயாவது பொழப்புக்கு கொழுப்பெடுத்துப் போகட்டுமே... ஆரு கையப் புடிச்சு தடுக்கப் போறா? என்ன விச்சு.. நாஞ்சொல்றது சரிதானே?"

விச்சு தலையை மட்டும் ஆட்டுவார். அவர் வாயைத் திறந்தால் ரயில்வே ஆஃபீஸின் தரை இழைகோலம் போட்டு காவிப்பட்டை அடித்த மாதிரி ஆகிவிடும்.

ஆக, வடக்கத்திய கனவான் மதிக்காததில் யாருக்கும் குடிமுழுகுவதில்லை.

டிவிஷனல் ரயில்வே மேனேஜர்  என்பவர் மத்திய மந்திரி மாதிரி.‌ அந்த கடல்மாதிரி இருக்கும் மிக உயர்ந்த தளம் வேயப்பட்ட அந்த அறையின் வாசல் பெருமாள் கோயில் சொர்க்கவாசல் மாதிரி இருக்கும். 

அந்த அசாதாரண கட்டிடமே ஏதோ சாலர்ஜங் மியூசியம் மாதிரி இருக்கும்.

"வெள்ளக்காரன்  ரஷிச்சுக் கட்டியிருக்கான்...".

ரெண்டு அல்லது மூணாள் உயரத்துக்கு கதவு.. நம்ம ராமசாமி மூச்சைப்பிடிச்சுண்டு ஒரே செகண்டுல இழுத்து சாத்திப்பிடுவன்.. ஆச்சு நாப்பது வருஷமா வேலை பாக்கறான்... ரெக்கார்டுல வயசு நாற்பத்தெட்டுன்னு காட்றது... எட்டு வயசுல யாரு வேலை கொடுத்தாளோ? நமக்கேன் வம்பு? அவன் குசாலா இன்னும் அம்பது வருஷம்தான் உத்யோகம் பாக்கட்டுமே? தெம்பு இருக்கு பாக்கறான். அவன் போயிட்டா மார்வாடி நம்மளக் கூப்புட்டு கதவத் தெறடாம்பான்.. தேவையா நமக்கு?"

விச்சு பேச்சைக் கேட்டுக் கொண்டே தன் வேட்டியின் நுனியை நன்றாக நீவி, நாசுக்காக சுருட்டி, காதுக்குள் விட்டு குறும்பையை நுனிவிரலால் எடுத்து நசுக்கிப் பார்க்கிறது. அதை முகர்ந்து பார்ப்பதை நான் பார்க்காது தவிர்த்து விட்டேன்.

"ஏண்டா விச்சு... என்னமோ ஆயில் கம்பெனி ப்ரச்சனை பண்றானாமே"

"ஆமாம்" என்றார் இழுத்தவாக்கில் விச்சு அலுப்பாக...

அவர் பெரிதும் முயல்கிற புதையல் எதிர்பார்த்த அளவில் பெரிதாகக் காதில் இருந்து கிடைக்க மாட்டேன் என்கிறது. அனுபவ பாத்யதை கொண்டாடி  காதைவிட்டு வரமாட்டேன் என்று அழிச்சாட்டியம் பண்ணுகிறது.

நானும் கேள்விப் பட்டிருந்தேன். கொஞ்சம் சிக்கலான விவகாரம்.

எண்ணெய்க் கம்பெனிகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு சென்று சேர்ப்பதில் ரயில்வேயின் பங்கு மகத்தானது. சம்பவம் நடைபெறும் காலம் ஏறக்குறைய ஐம்பது வருடங்களுக்கு முற்பட்டது. அப்போது ரயில்வே எண்ணெய்ப் போக்குவரத்தில் அநேகமாக மோனோப்பொலி.

எப்படி திருச்சி ரயில்வே தலைவர் ஒரு உபியோ (உடன்பிறப்பல்ல... உத்தரப் பிரதேசி) அதேபோல அந்த ப்ரத்யேக ஆயில் கம்பெனியின் தென்னக நிர்வாகியும் ஒரு உபி.

இவர் ஏதோ ஒரு திரிபாதி.. அவர் ஏதோ திரியாத பாதி. இந்த இருவருமே ஒரே ஊர்க்காரர்கள். இருவருமே ஒரே சமயத்தில் தேர்வு எழுதி ரயில்வே ஆசாமி முதல் அட்டெம்ப்டில் தேறி ரயில்வே உயரதிகாரி ஆகிவிட்டார். ஆயில் கம்பெனி ப்ரகஸ்பதி இரண்டு முறை தோற்று மூன்றாவது முறை எப்படியோ அடித்துப் பிடித்துத் தேறிவிட்டார்.

இது இவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு மனக்கசப்பை ஏற்படுத்தி விட்டது. அது மேலும் வளர்ந்து, சாத்யகி பூரிசிரவசு மாதிரி ஜன்மாந்திரப் பகையாக மாறிவிட்டது.

நம் ரயில்வே திரிபாதிக்குக் கட்டங்கள் நகர்ந்து அர்த்தாஷ்டம சனி ஆரம்பிக்கும் சமயம், அவரது ஒன்று விட்ட விரோதி, ஆயில் கம்பெனியில் தென்னகத்திற்கு மாற்றலாகி வந்தார்.

அவர் கொஞ்சம் சவடால் ஆசாமி. தாம்தூம். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் இன்ஸ்பெக்ஷன். சஸ்பென்ஷன். தொழிலாளர்களின் சஸ்பென்ஷனிலேயே சம்பளம் குறைந்து நிறைய லாபம் ஈட்டத் துவங்கியது கம்பெனி. 

திரிபாதிக்கு அர்த்தாஷ்டம சனியின் தீவிரம் போதாதென்று சந்திராஷ்டமம் வேறு.

ஆயில் கம்பெனி தீவிரவாதி, அலுவலகம் செல்லும் வழியில், ரயில் வாகனங்கள் நிறுத்தும் சைடிங் தாண்டிப் போகணும். அன்று வரிசையாக வேகன்கள் இணைக்கப்பட்டு இன்ஜின் மாட்டும் வேலை நடைபெறுகிறது. திவாரி தன் காரில் இருந்து குதித்தார். திவாரி முன்னிரவில் லேசாகத்  தீர்த்தவாரி. அந்தத் தெம்பும் சேர்ந்து கொள்ள, சைடிங்கில் ஷன்ட்டிங் செய்து கொண்டு இருந்தவர்களிடம் "என்ன விஷயம்" என்று கேட்டார்.

அவர்களில் ஒருவன் அரைகுறை ஆங்கிலத்தில் "வேகன்கள் எண்ணெயைப் பிழிந்து விட்டு இருப்பிடம் திரும்புகின்றன" என்றான்.

திவாரி வாகனத்தில் தாவி ஏறினார். ஏககாலத்தில் ஜாக்கிரதை என்ற குரல்களை அலட்சியம் செய்து, மேலே ஏறியவர் கலத்தின் மூடியை சோடாபாட்டில் மூடியைத் திறப்பது போல பலங்கொண்ட மட்டும் இழுத்துத் திறந்தார்.

 உள்ளே எட்டிப் பார்த்தவரின் கடுகடுவென்ற முகம் அதிசயமாக மலர்ந்தது. அது புதிதாக வெளிச்சம் பரவிய கலத்தின் உட்பாகத்தில் தேங்கியிருந்த எண்ணெயில் பிரதிபலித்தது.

கீழே இறங்கியவர் தன் தொழிலாளர்களைக் கூப்பிட்டு மேலும் சில கலங்களைத் திறந்து பார்க்க சொன்னார்.

 அனைவரும் தங்கள் முகங்கள் பிரதிபலித்ததை புளகாங்கிதமாக ஒப்புக் கொண்டனர். 

மிகவும் கெடுபிடியான தங்கள் மேலதிகாரியை சந்தோஷப்படுத்தக் கூடிய ஒரு சுலபமான சந்தர்ப்பத்தை யார்தான் விட்டுவிடுவார்?

திவாரி அங்கு பெட்டிகளையும் என்ஜின் பொருத்துபவர்களையும் கூப்பிட்டு அவர்கள் கம்பெனியார்களா என்று வினவினார்.

அவர்கள் மறுத்து, தாங்கள் ரயில்வே தொழிலாளர்கள் என்றும், எண்ணெயைப் பிதுக்கும் காரியம் முடிந்து திரும்புவதாகவும் கூறினர்.

திவாரியின் சிவந்த முகம் மிதமிஞ்சிய திருப்தியில் ஒளிர்ந்தது. யாரிடமும்  எதுவும் கூறாமல் தன் அலுவலகம் விரைந்தார்.

அன்றிலிருந்து மிகச்சரியாக ஐந்து நாட்கள் கழித்து திரிபாதி பெயரில் ஒரு ரிஜிஸ்டர்ட் தபால் வந்தது. அவரது டவாலி அதைப் பிரித்து மற்ற தபால்களுடன் சேர்த்து அடுக்கி வைத்து, திரிபாதியின் பார்வைக்கு வைத்தார்.

திரிபாதி அசுவாரஸ்யமாக மற்ற தபால்களைப் பார்த்து வரும்போது அவரது அத்யந்த விரோதி எழுதிய கடிதம் அவரது விசேஷ கவனத்தைப் பெற்றது. ஒருமுறைக்கு இரண்டு முறை அதைப் படித்தார். 

அதன் உள்ளடக்கம் அவரைச் சென்றடைய சிறிது நாழி பிடித்தது.

தன்னையறியாமல் திரிபாதி எழுந்து நின்றார். அவரது கைகள் நடுங்கின. இப்போது திரிபாதி திரிகிள்ளிய பாதியாகி விட்டார். திருச்சியின் புகழ்பெற்ற அந்தக் கட்டிடம் பூகம்பம் வந்தது போல் பலமுறை ஆடி நின்றது.

அந்தக் கடிதத்தின் முக்கியமான ஷரத்து இதுதான்.

ரயில்வேயை நம்பி ஆயில் கம்பெனி அவர்களது ஒரே சொத்தான எண்ணெயை ஏற்றி இறக்க ஒப்பந்தம் இட்டு இருக்கிறது. அதன்படி ரயில்வே குறிப்பிட்ட இடத்தில் இருந்து எண்ணெய் எடுத்து மற்றொரு குறிப்பிட்ட இடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த சேவையில் குறைபாடு இருக்கலாகாது. இந்த சேவையை ரயில்வே இலவசமாக செய்வது இல்லை. அதற்காக வலுவான கட்டணம் வசூலிக்கப்படுகிறார்கள். ஆகவே, சேவையில் குறைபாடு என்பதற்கு, உரிய நஷ்ட ஈட்டினை அவர்கள் செலுத்த வேண்டும்.

கடந்த திங்கட்கிழமை அன்று எண்ணெய் வேகன்களை ஆய்வு செய்தபோது அனைத்து வேகன்களிலும் எண்ணெய் குறிப்பிட்ட அளவிற்கு தேங்கி இருப்பதைப் பார்க்க முடிகிறது. (ஷெ ஆய்வறிக்கை இணைக்கப் பட்டுள்ளது).
அந்த வகையில் ஒரு வேகனுக்கு ஒரு முறைக்கு என்று இத்தனை முறை (தகவல் கீழே) கம்பெனிக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டது.

கம்பெனியின் விதிகளின் படி, தீவிர ஆய்வு செய்து, கணக்கு பார்த்ததில் ஏறக்குறைய ஐம்பது லட்சத்து அறுபத்து ஆறாயிரத்து நானூற்றிப் பதினைந்து ரூபாய், முப்பது காசுகள் நஷ்டமாகி விட்டது. இந்தத் தொகை காலக்கெடு விதிகளுக்கு உட்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த வாகனப் போக்குவரத்தை உத்தேசித்து, தேர்ந்த ஆய்வாளர்களால் துல்லியமாக கணிக்கப் பட்டது என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகையால், சமூகம் மேற்படி தொகையை பைசா பிசகாமல், கம்பெனி அலுவலகத்திற்கு நேரில் ஆஜராகி, ரொக்கமாகவோ, காசோலை மூலமாகவோ செலுத்தும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 
இப்படிக்கு
தங்களிடம் என்றென்றும் அன்பு பாவிக்கும்
அன்பன்
திவாரி.

திரிபாதி முதலில் காட்டுக் கத்தலாக கத்தினாலும், அவரது அணுக்கமான மற்ற அதிகாரிகள், இதைப பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறை கூறி, காமா சோமா என்று ஒரு பதிலை அனுப்பி விட்டுப் பேசாமல் இருந்து விட்டார்கள்.

திவாரி இதை எதிர்பார்த்து இருந்தவர் போல, விஷயத்தைத் தங்கள் போர்டுக்கு எடுத்துச் சென்றார். அவர்களும் ஐம்பது லட்சம் என்றதால்,  தங்கள் சட்ட ஆலோசகர்களிடம் கொடுத்து அலசி, திவாரி யின் கண்டுபிடிப்பு அசாதாரணமானது என்று கண்டு, வியந்து, ட்ரிப்யூனலுக்கு எடுத்து சென்றனர்.

ரயில்வே நிர்வாகம் நடுங்கி விட்டது. திரிபாதியை பலபாதியாகப் பங்குபோட பலர் தயாராகி விட்டனர். ஆயில் கம்பெனியின் எதிர்பார்ப்பில் இப்போது வட்டியும் சேர்ந்து கொண்டது. திரிபாதி வண்டிகளில் ஏறி ஆய்வு செய்தாரா என்று தன்னிலை விளக்கம் அளிக்கக் கோரி அவரிடம் நிர்வாகம் கடுமையாக நடந்து கொண்டது.

விஷயம் கேள்விப்பட்ட மற்ற அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, உறக்கம் துறந்து, வருகிற போகிற ரயில் வண்டிகளின் கூரைகளிலேயே குடியிருக்கத் துவங்கினர்.

இப்போது, திரிபாதி முழு சுரத்தும் குறைந்து, மிடுக்கு குறைந்து, சோபை இழந்து எப்போது பார்த்தாலும் தனக்குத் தானே பேசிக் கொள்ளும் அளவிற்கு ஆகிவிட்டார். 

அவரைப் பதவி இறக்கம் செய்து விடுவார்கள் என்றனர் சிலர். இல்லையில்லை, வேலையை விட்டே அனுப்பி விடுவார்கள் என்றனர் சிலர்.

 சோதனையாக அவரது உறவுக்கார அமைச்சர் நீடித்த நோயிலும் முதுமையிலும் சுடச்சுட இறந்து போயிருந்தார்.

திரிபாதி இதுபற்றி விவாதிக்காத ஆளே இல்லை. ஆளாளுக்கு திரிபாதிக்கு சமாதானம் கூற முயன்றனரேயன்றி, ப்ரச்சனைக்கு யாரிடமும் தீர்வு இல்லை.

ரயில்வே கான்டீனில் அல்லும் பகலும் இதுவே பேச்சாக ஓடியது.

"என்னடா அநியாயம் இது? இத்துனூன்டு கொட்டாங்கச்சில எண்ணெய ஊத்தி பட்டுன்னு கவுத்தாக் கூட, ச்ராங்கா எண்ணை தங்கத்தானே தங்கும்? இதைப் போயி ஒத்தன், அதுவும் இன்னோரு கவர்மென்ட் அத்தாரிட்டி, பெரிசா கண்டுபிடிச்சு, அம்பது லஷ்ஷம் கேக்கறான். அடச்சீ.. வாயமூடுன்னு சொல்லாம, நியாயம்னு எல்லா பயல்களும் ஆமாஞ்சாமி போடறாங்க?"

 ஆனாலும், இந்த விவாதங்கள் ஒரு கட்டத்தில் சுவாரஸ்யம் இழந்து தேய்ந்தும் விட்டது.

இப்படி இருக்கையில் ஒருநாள் திடீரென்று ட்ரிப்யூனலில் திரிபாதிக்குக் கடிதம் வந்தது. அதன்படி அவரது வாதங்களை ஏற்றுக் கொள்வதற்கில்லை என்றும்  கடைசிமுறையாக ஏதேனும் தகவல் இருந்தால் அதை முன்வைக்கலாம் என்றது அது.

திரிபாதியின் பரிதாப நிலையைப் பார்த்து ஒரு வயதான பெர்சோனல் அதிகாரி, அப்துல் ரஹீம் என்பவர், திரிபாதியினால் அவ்வளவாக சிலாகிக்கப் படாதவர், தானே வலிய முன்வந்து ஒரு யோசனையைச் சொன்னார்.

திரிபாதி தற்போது எல்லா வழிகளையும் இழந்தவர் என்பதால் பலகீனமாக அதற்கு ஒப்புக் கொண்டார்.

அதன்படி, வாயிற்காப்பாளர் ராமசாமியை அழைத்து, "பழைய டிக்கெட்டுகள் பரிபாலிக்கும்" டிபார்ட்மெண்ட் சென்று அங்கு உண்ட களைப்பில்  குறைத்தூக்கத்தில் இருக்கும் விஸ்வநாதன் என்பவரை அழைத்து வருமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

விச்சு வழக்கம் போல காது குடையாமல், லாவகமாக ஒரு கொத்து  மைதீன் ஸ்பெஷல் புகையிலையை அதன் வாசனையான மஞ்சள் காகிதத்தில் இருந்து விடுவித்து, உள்ளங்கையில் வைத்து நன்றாக நெருக்கிப் பிசைந்து, டப் டப்பென்று தட்டி, துகள்களை லாவகமாகப் புகையிலை கீழே விழாமல் கவிழ்த்து, சுருட்டி, கைவிரல்களில் எச்சில் படாமல் வலது கன்னத்தில் அதக்கிய தருணம் ராமசாமி அவர் எதிரே தோன்றினான்.

"என்ன ராம்ஷாமி? அன்டைத்துல வந்துருக்க? சொர்க்க வாசலை வெட்டி மல்லாத்தி வச்சுட்டு வந்துட்டியா? புது ஆளு போட்டாச்சா?"

"பெரியவரு உங்கள கூட்டியாரச் சொன்னாங்க"

"யாரு"

"பெரியய்யா"

"DRMம்மா"

"பின்ன? வேற ஆரு பெரியவரு?"

"அது ஷரிடா? ஆரைக் கூட்டுண்டு வரச்சொன்னாங்க"

"உங்களத்தான் ஜாமி"

"ஷூம்மா ஜோக்கடிக்காத? என்னை யாருன்னே தெரியாது அவருக்கு. என் பேரை தப்பில்லாம ஒரேயொரு தடவை சொன்னார்னா நான் மொட்டை அடிச்சுக்கறேன்.. அவர் ஏண்டா என்னைக் கூப்டப் போறார்.. வேற யாரையாவது கூட்டிண்டு வரச்சொன்னதை அறையும் குறையுமாக் கேட்டுண்டு வந்துருப்பே.. என்னைக் கூட்டிண்டு போனா உனக்கு வேலை போய்டப்போறது"

"நீங்க வரலேன்னா உங்களுக்கு வேலை போக வாய்ப்பு இருக்கு" என்றான் ராமசாமி.

"விச்சு... என்னமோ போ... லாட்ரி அடிச்சிருக்கு ஒனக்கு"

"மண்ணாங்கட்டி அடிச்சுருக்கு.. என்ன கேடுகாலத்துக்குன்னு தெரியலையே"

"ஒண்ணும் பயப்படாத.. அம்பாள் பாத்துப்பள்... அம்பாள் பாத்துப்பான்னு இப்படியே போகாத... வாய்ல இருக்கறதை துப்பிவிட்டு போ... முழுங்கி வச்சேன்னா அவர் முன்னாடி பொதேல்னு விழுந்து அவர் ஒனக்கு சிசுரிஷை பண்ற மாதிரி ஆயிடப் போறது"

"எங்க துப்பறது? இப்பதான் போட்டுண்டேன்.. ஒந்தலைலதான் துப்பணும்"

"சட்டைப் பையிலயே துப்பிக்கோ... அதுவே ஏழெட்டு தரம் துப்பின மாதிரி தான் இருக்கு"

ராமசாமி அதற்குள் பொறுமை இழந்து விச்சுவை நெட்டித் தள்ளிக் கொண்டு போனான்.

 போகிற வழியில் விச்சு, ஆபத்துக்குப் பாவமில்லை என்று, பலகணி வழியாக வாயில் ஊறியதை யார் மேலோ உமிழ்ந்து விட்டு, தன் வாழ்நாளில் முதன்முறையாக DRM அறையில் நுழைந்தார்.

விச்சுவின் தோற்றத்தைப் பார்த்ததும் திரிபாதிக்குப் புகையிலை விழுங்காமலே மயக்கம் வந்தது.

"இந்த மனிதரையா நீங்கள் சொன்னீர்கள்" என்று அதிர்ச்சியுடன் ரஹீமிடம் கேட்க, ரஹீம் புன்னகையுடன் "ஆளைப் பார்த்து எடை போட வேண்டாம் சார்" என்றார்.

மேலும்,"விஸ்வநாதன் சாதாரண‌ ஆளில்லை.  இவரோடு கூடப் பிறந்தவர்கள் எட்டுப் பேர். இவரது தந்தையோடு கூடப் பிறந்தவர்கள் ஒன்பது பேர். இவரது தாத்தாவிற்கு உத்தாணிக்குப் பக்கத்தில் பன்னிரண்டு வேலி நிலம். பாகப்பிரிவினை நடந்து ஒரே ஊழல். எவ்வளவு நியாயமாக நடந்தாலும் விஸ்வநாதனுக்கு பதினெட்டு மா நிலம்தான் வரணும். விசுவநாதன் குயுக்தியால் மற்ற எல்லோரையும் ஏமாற்றி, இரண்டேகால் வேலி நிலத்தை அபேஸ் செய்து விட்டார்.

 இதுபோல பல உதாரணம். ஆள் அசடு மாதிரி இருந்தாலும் பலே கில்லாடி"

"அப்படியா? மிஸ்டர் விஷ்வநாத்... நீங்கள் என்ன படித்து இருக்கிறீர்கள்?"

"எஸ்ஸெல்ஸி" என்று விச்சு கூறினவரைத் தொடர்ந்து, 
"ஃபெயில்" என்று முடித்தார் ரஹீம்.

திரிபாதி மிதமிஞ்சிய நம்பிக்கையின்மையில் தலையைப் பலமாக உலுக்கிக் கொண்டார்.

"மிஸ்டர் விஷ்வநாத்... ஆயில் கம்பெனி விஷயம் கேள்விப்பட்டீர்களா"

"எஸ் ஸார்"

"உங்களிடம் சொன்னது யார்"

"யாரும் ப்ரத்யேகமாகச் சொல்லவில்லை சார். கான்டீனில் பலபேரால் விவாதிக்கப்பட்டு இருக்கிறது"

"ப்ஸ்... கான்டீன் வரை விஷயம் சென்று விட்டதா? என்ன ஒரு அவமானம்?"

கான்டீன் மட்டுமல்லாமல் சீரங்கம் வரைகூடச் சென்று,  மாட்டுக்கார வேலனையும் தாண்டி பிய்த்துக் கொண்டு ஓடுகிறது என்று சொல்ல விச்சுவிற்கு நாக்கு துடித்தது. அடக்கிக் கொண்டார்.

திரிபாதி யாரையோ ஏவி, விபரங்கள் அடங்கிய ஃபைலை எடுத்து வரச் சொல்லி, அதை இடதுகையால் விச்சுவிடம் நீட்டினார்.

"என்ன ஆணவம்" என்று நினைத்துக் கொண்டார் ரஹீம். ஒரு மரியாதைக்குக் கூட விச்சுவை அமரச் சொல்லவில்லை.

விச்சு நின்றவாறே அதைப் புரட்டிப் பார்த்தார். ஒரு சிறு முறுவல் ஓடியது அவர் முகத்தில்.

பின்னர், பெரியவரைப் பார்த்து, "இந்த ஃபைலை நான் எடுத்துச் செல்ல அனுமதியுண்டா?"

"வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது. இருக்கைக்கு எடுத்துச் சென்று குறிப்புகள் எடுத்துக் கொண்டு, சில மணி நேரங்களில் திரும்பக் கொடுத்து விடுங்கள். இப்போது நீங்கள் போகலாம்".

விச்சு ஃபைலுடன் இருக்கை திரும்பினார்.

"பரவாயில்லையே... வந்துட்டியே.. வேட்டிய உருவிண்டுதான் அனுப்புவார்னு நெனச்சேன்.. என்ன விஷயம்?"

"அப்பறம் சொல்றேன்.. கொஞ்ச நேரம் தொந்தரவு பண்ணாதே" என்று கூறியவாறு, மேசை ட்ராயரைத் துழாவி, வெள்ளைக் காகிதங்களும், புத்தம்புது கார்பன் பேப்பரும் எடுத்து, நேர்த்தியாக அவைகளைப் பிணைத்து, முப்பத்து ஆறு வருடங்களாக அவருடைய சிநேகிதனாய், ஆசிரியனாய், விரோதியாய், எல்லாமாகவும் இருக்கும் அரதப் பழசான ரெமிங்டன் உருளையில் அந்த காகிதங்களைத் திணித்து, அடிக்க ஆரம்பித்தார்.

அடுத்த ஒருமணி நேரம் விச்சு யாருக்கும் பதிலிருக்கவில்லை.

அதைவிட, விச்சு பெரிய இடம்  சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஈடுபட்டு இருப்பதால் யாரும் அவரை அணுகத் துணியவில்லை.

விச்சுவின் விரல்கள், தேர்ந்த தவில் வித்வான் விரல்கள் போல் டைப்ரைட்டரில் விளையாடின.  

யாரோ சொல்லச் சொல்ல அடிப்பது போல விச்சு சர்வசாதாரணமாக அடித்துக் கொண்டு போனார். அவரது எண்ண ஓட்டங்களை விட அவரது விரல்களின் வேகம் அதிகமானது போல ஒரு மாயத் தோற்றம் நிலவியது. 

அவ்வப்போது சிறு அவகாசம் எடுத்துக் கொண்டு ஃபைலைப் பார்ப்பதும் விரல்களை நெட்டி முறிப்பதும் இருந்தாலும், அவைகள் அவரது எண்ண ஓட்டங்களை ப்ரதிபலிப்பதாகவே தெரிந்தன. விரல்களுக்கு ஓய்வு கொடுக்கும் நோக்கமல்ல அவர் நெட்டி முறித்தது.

இரண்டு பக்கங்கள் மிக நேர்த்தியாக அடித்து முடித்திருந்தார். வெறும் சீனியர் குமாஸ்தா தான் அவர்.‌ இத்தனை வருடங்களில் அவரால் அதைத் தாண்டி ஃபோர் ட்வின்டி ஃபைவ் என்னும் நானூற்றி இருபத்தி ஐந்தை எட்ட முடியவில்லை. முந்நூற்றி முப்பதை எட்டவே சம்பளம் நானூறைத் தொட்டவுடன் தான் முடிந்திருக்கிறது. இருபத்தெட்டு வருடங்களை விழுங்கிய பிறகு என்பது இன்னொரு செய்தி.

விச்சு தான் அடித்தவைகளை ஒருமுறை மேலும் கீழும் படித்துப் பார்த்தார். அவருக்கு திருப்தியாக இருந்தது போலும். சுட்டு விரலால் டப்பென்று முதல் காகிதத்தில் சுண்டினார். மிக அழகாகக் கசங்காமல் ஃபைலுக்குள் வைத்து திரிபாதியை நோக்கி நடையைக் கட்டினார்.

வாசலில் ராமசாமியால் நிறுத்தப் பட்டார்.

"நான் வந்திருக்கேன்னு சொல்லு"

"உள்ளே மீட்டிங்கு நடக்குது"

"பரவாயில்லை.. இது தலைபோற விவகாரம். நான் இங்கயே நிக்கறேன். கதவைச் சும்மாத் திறந்து மூடு... என்னைப் பாத்துட்டுக் கூப்டலைனா நான் திரும்பிப் போயிடறேன்."

ராமசாமி திறந்து மூட அதன் வழியே புகையிலை வழியும் விச்சுவைப் பார்த்து விட்டார்.

 இந்த முறை விச்சு யார் மீதும் புகையிலையை உமிழவில்லை. 

திரிபாதி மணியடித்து ராமசாமியை விளித்து விச்சுவை அனுமதித்தார்.

விச்சு பணிவுடன் உள்ளே சென்றார். ஐந்தாறு உயரதிகாரிகள் கவலை சூழ்ந்த முகங்களுடன் அவரெதிரே ஆலோசனையில் இருந்தனர்.

"மிஸ்டர் விஷ்வநாத்.. குறிப்புகளை எடுத்துக் கொண்டு விட்டீர்கள் அல்லவா?"

"பதிலையே தயாரித்து தங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறேன் சார்"

"என்ன?"

திரிபாதி நம்ப முடியாத ஆச்சர்யத்தில் ஃபைலைப் பிரித்து பதில் கடிதத்தைப் படித்தார்.

அவரது சிவந்த முகம் ரத்த சிவப்பாக மாறியது. கோபத்தில் அவர் கைகள் நடுங்கின. முகம் வியர்த்து உதடுகளைக் கடித்துக் கொண்டார். கடுமையான முகத்துடன் விச்சுவை நிமிர்ந்து பார்த்தார். த்ரேதா யுகமாக இருந்திருந்தால் விச்சு அதில் எரிந்து சாம்பலாகி இருப்பார்.

"இதுதான் நீர் பதில் எழுதின லட்சணமா"

"சார்?"

"என்னய்யா ஆள் நீர்? உமக்கு ஒரு சிபாரிசு வேறு. "

விச்சு திருதிருவென்று விழித்தார். கூடியிருந்த அனைவரும் விச்சுவை அவரது தோற்றத்திற்காகவும் ஏளனமாகப் பார்த்தனர்.

"பணம் கொடுக்க முடியாது என்று வாதங்களை வைக்கச் சொன்னால் இந்த மூளையில்லாத மனிதர் என்ன எழுதியிருக்கிறார் பாருங்கள்?"

அவரே தொடர்ந்து,
"உங்கள் கடிதம் கண்டோம். தாங்கள் ட்ரிபூயனலை அணுகியிருக்க வேண்டாம். தங்கள் வாதம் சரியானதே. உங்கள் எண்ணெய் நஷ்டமானதில் எங்களுக்கு வருத்தம். நீங்கள் கேட்ட தொகையில் சிறு தவறு உள்ளது. சிம்ப்பிள் வட்டி கேட்டு உள்ளீர்கள். சட்ட பிரகாரம் தங்களுக்கு கூட்டு வட்டி கேட்கும் உரிமை உண்டு. அதன் படி நாங்கள் எங்களிடம் விடுபட்டுப் போன தங்களுக்கு மட்டுமே உரிமையான எண்ணெய்க்கான இழப்பீட்டுத் தொகையாக ஐம்பத்திரண்டு லட்சத்து ஆறாயிரத்துப் பன்னிரண்டு ரூபாய் இருபது காசுகள் தருவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்".

எல்லோரும் விச்சுவைப் புழுபோல் பார்க்க, திரிபாதி காகிதங்களை விசிறி எறிகிறார். அவைகள் காற்றில் பறந்து ஆடி ஆடி விழுவதை விச்சு ஓடி ஓடித் தரையில் விழுவதற்குள் பிடிக்கிறார்.

அவைகளை மெதுவாக சேகரித்து, வரிசைப் படுத்தி திரிபாதியிடம் மறுபடி செல்கிறார்.

"கெட்டவுட்... என் முகத்தில் விழிக்காதே.. உன்னை இந்த அலுவலகத்தில் இருந்து தூக்கியாகி விட்டது. நாளைக் காலை அகஸ்தியம்பள்ளி குட்ஸ் பிரிவில் நீ சேரவேண்டும். இல்லையெனில் நீ பதவிநீக்கம் செய்யப் படுவாய்".

விச்சு மறுபடியும் காகிதங்களை அவரிடம் நீட்டுகிறார்.

"உங்கள் கோபம் நியாயமானது சார். அதேபோல் நாம் இழப்பீடு கொடுப்பதும் நியாயமானதே.. ஆனால், இதில் இன்னொரு நியாயமும் இருக்கிறது. அது நீங்கள் வாசிக்காமல் விசிறிய இன்னொரு காகிதத்தில் இருக்கிறது".

திரிபாதி "அப்படியா" என்று கூறி அசுவாரஸ்யமாக அதைப் படிக்கிறார். அவர் கண்கள் அளவிடமுடியாத ஆச்சர்யத்தில் விரிகிறது.

அவரருகில் வந்த ரஹீமிடம் அதை நீட்டுகிறார். இரு கைகளாலும் முகத்தை மூடிப் பெருமூச்சு விடுகிறார்.

"அன்பிலீவபுள்.. மை காட்"

ரஹீம் அதை உரத்துப் படிக்கிறார்.

அதுவும் கடிதம் தான். அதே எண்ணெய் கம்பெனிக்குத்தான். முந்தைய எல்லா கடிதங்கள், தற்போது ஒப்புக் கொண்டு எழுதப்பட்டது உட்பட எல்லாம் குறிப்பில் காட்டப்பட்டு ஆரம்பிக்கப் படுகிறது.

ஐயா,

மேற்படி கடிதங்கள் தங்கள் பார்வைக்கு.

ரயில் போக்குவரத்து அனைவருக்கும் பொதுவானது. உயிர் உள்ளது இல்லாதது எல்லாவற்றின் பாதுகாப்பும் ரயில்வேயின் பொறுப்பு. அதே சமயம், பொருட்களை பத்திரமாக எடுத்துச் செல்லும் பொறுப்பை ரயில்வே ஏற்றுக் கொள்வதில்லை. பயணம் மட்டுமே நாங்கள் ஏற்பது.

உதாரணத்திற்கு, தாங்கள் தங்கள் வயதான தாயாரோடு நெல்லை எக்ஸ்பிரஸ் ஏறி மதுரை செல்கிறீர்கள். மறதியாகத் தாங்கள் மட்டும் மதுரையில் இறங்கி விடுகிறீர்கள். உங்கள் தாயாரை ஞாபகமாக மதுரையில் இறக்கவில்லை என்று அதிகாரிகளிடம் சண்டை இடுவீர்களா என்ன? மாறாக, தாங்கள் தங்கள் தாயார் மதுரையைத் தாண்டி டிக்கெட் இல்லாமல் ப்ரயாணம் செய்ததற்கு அபராதம் கட்டியல்லவோ தாயாரை மீட்டு செல்ல வேண்டும்.

அதேபோல் தங்களுடைய உடமையான  எண்ணெயை முழுதாக இறக்கி வைக்கத் தவறியதில் தங்கள் பங்கும் உள்ளது. ஆனாலும், இந்தத் தவறில் எங்கள் பங்குக்கான இழப்பை நாங்கள் பெரிய மனது செய்து தர முன்வந்திருக்கிறோம். (கடிதத்தின் நகல் இணைக்கப்பட்டுள்ளது).

தங்கள் நிறுவனம் போலவே எங்கள் நிறுவனமும் இந்திய அரசுக்கு சொந்தமானது என்பதைத் தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறோம். எங்கள் சட்டதிட்டங்கள் உபயோகிப்பாளர் அனைவருக்கும் பொது என்பதைத் தாங்கள் அறிந்திருக்கலாம். அறிந்திராவிட்டாலும் காலம் காலமாக இருதரப்பு அதிகாரிகளும் கையெழுத்திடும் ஒப்பந்தங்களில் அவை குழப்பமின்றி தெரியப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

அதன் படி, ரயில்வே துறையின் வாகனங்களும், வேகன்களும் மக்கள் சேவைக்கே என்றாலும் அவைகள் கட்டணத்தின் பேரிலேயே அனுமதிக்கப் படுகின்றன. அதன்படி, தங்களுக்கு மட்டுமே உரிமையுள்ள தங்கள் எண்ணெயை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள   எங்கள் வேகன்களைத்  தொடர்ச்சியாக பயன்படுத்தி உள்ளீர்கள். குறிப்பிட்ட காலங்களுக்குள் டெலிவரி எடுக்கப்படாத பொருட்களுக்கு, ஒப்புக் கொள்ளப்பட்ட ரயில்வே விதிகள் படி, டெமரேஜ் என்னும் கட்டணம் உண்டு. இது கட்டணம் தான். இழப்பீடு இல்லை. அதனால், இதைச் செலுத்தி விட்டே தாங்கள் மேல் கேள்வி கேட்க நீதிமன்றங்களை அணுக முடியும். நாங்கள் தெளிவாக கணக்கிட்டபடி (விரிவான கணக்கு இணைக்கப்பட்டுள்ளது), தாங்கள் எங்கள் நிறுவனத்திற்கு ஆறு கோடியே எண்பத்தி ஐந்து லட்சத்து அறுபத்து ஆறாயிரத்து எண்பத்து மூன்று ரூபாய், எழுபத்து ஐந்து காசுகள் செலுத்த வேண்டி இருக்கிறது. இதில் நாங்கள் செலுத்த வேண்டிய ஐம்பத்தி இரண்டு லட்சத்து, ஆறாயிரத்துப் பன்னிரண்டு ரூபாய், இருபது காசுகள் போக நிலுவைத் தொகையான ஆறு கோடியே முப்பத்து மூன்று லட்சத்து அறுபதாயிரத்து எழுபத்தி ஒன்று ரூபாய் ஐம்பத்தி ஐந்து காசுகளை, ரொக்கமாகவோ அல்லது திரும்பி வராத காசோலை மூலமாகவோ எங்கள் அலுவலகத்திற்கு நேரில் ஆஜராகி செலுத்தி, ரசீது பெற்றுச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மக்கள் பணியே மகேசன் பணி.

அன்புடன்

..ஒப்பம்

படித்து முடித்த உடன் எல்லோரும் கைதட்டுகின்றனர். திரிபாதி தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்து விச்சுவை அணைத்துக் கொள்கிறார்.

அவர் கையொப்பமிட்டு தேவைப்படும் அனைத்து ஸ்தாபனங்களுக்கும் நகல் அனுப்பப் படுகிறது.

எண்ணெய்க் கம்பெனியில் எஸ்ஸெல்ஸி ஃபெயிலான மதறாசி குமாஸ்தாவை வலைவீசித் தேடுவதாகக் கேள்வி.

No comments:

Post a Comment