(1)
உலகு
உயரக் கொம்பெடுத்து
ஓரத்தில் நட்டு வைக்க
உயிராய்க் கிளைத்து
உயரே படர்ந்தது.
உச்சாணிக் கிளையேறி
உலகைப் பார்க்க
அது
தினக்கூலி
ஒருவனின்
சாப்பாட்டுக்
கலயமாய்
சுழன்று
கொண்டிருக்கிறது.
(2) ஹாஸ்டல்
பசியெழும்பத்
தானாவே
மணி பார்த்தது
மனது.
கை நிறைந்த
கடிகாரம்
சேட்டுக் கடையில்
வச்சு நாளாச்சு.
வெட்ட வெளியில்
சுற்றும் காற்றைத்
தின்னப் பழகிப்
போச்சு.
உந்திச் சுழலில் இருந்த
காலம்
பசியும், தூக்கமும்
துக்கமும் அற்று
கொடியும் அற்றபின்
தற்போதைய சூழலின்
உருவே பெரிதாகி
உணர்வின்
ஒலி, ஒளி அமைப்புகள்
பழுதாகி
காலமும், நிறமும்
நிழலும், சோம்பலும் அற்ற
திறந்த வெளியில் நான்
பிறந்த பிறப்பற்று
பிற பற்று அற்று
உயிர்த்த வடிகாலின்
உன்னதத்தில்
அமிழக் கிடக்கையில்
அப்பாவின் மணியார்டர்
எப்போ வரும்?
(3) ரசனை
தனிமை கொண்டு
தவமியற்று.
தவமியற்றித்
தனிமை கொள்.
ரசனை கொண்டு
கவியியற்று.
கவியியற்றி
ரசனை கொள்.
(4) எது?
மேலெதைப் பூதங்காக்கும்?
மறைத்து நின்று
மௌனமாய்த் துள்ளும்
வானம்.
நேரெதிர் பூக்கும் பூவை
நிமிஷமாய் ஒளித்துக் கொண்டு
சிரசு மேல் சிறகு வைத்து
சிவிகை ஏறிச்
சிகரம் ஏகி
தொட்டு தொட்டு
சரசம் செய்யும்
சிதிலமாய்த்
திரிந்த மேகம்
நரை திரை மூப்பு
வந்த
இளைஞனின்
தலையைப் போல.
வெண்முகில்
என்பதிங்கு
விளையாட்டுச்
சொப்பு இல்லை.
உண்மையே
சொப்பனம்
என்னும்
மாயையின்
விளையாட்டாகும்.
இதில்,
நிமிஷமே கணங்களாகி
யுகங்களின் விதிகள் மாறி
தினம் தினம் மரணம்
என்னும்
பயணிகள்
தொடர்ந்து போகும்
பாதையில்
நிஜமும் செல்லும்.
தீர்வெனும் விலகல் இல்லா
வாழ்வெனும் மீளாக்காடு,
ஒரு மீறுதல் என்பதில்லா
விதியெனும் சாபக்கேடு.
என்னைச் சுற்றி வேலி
புரியாது பின்னலிட்டு
அம்மா வாசலில் இட்ட
கோலம் போல.
எட்டு புள்ளி
ஆறு வரிசையில்
எங்கே வந்தது
இத்தனை நேர்த்தி?
கழுதை, குதிரை
கரும்புத் தோகை
மாட்டுச் சாணம்
பறித்த பறங்கிப் புஷ்பம்.
எல்லாம் மாயம்,
வெறும் கல்மா உபயம்.
வெள்ளை கண்டு
வேட்கை கொண்டு
நெருங்கி வந்து
விதியின்
வெறுங்காலில்
திரும்பிப் போகும்
எறும்பு.
No comments:
Post a Comment