நான் போனதும்,"வாங்க.. நல்லா இருக்கீங்களா" என்றார். ஹெட் ஆஃபீஸில் இருந்து ஆள் பிடிச்சு பூனா வாங்கிட்டீங்க.. பரவாயில்லை.. மராட்டி தெரியுமா" என்றார்.
"தெரியும் சார்" என்றேன்.
"அட.. எப்படி சார்"
நான் சுப்புவைக் காட்டி, "இவன் மராட்டி சார்.. இவனைத் தெரியும்னு சொன்னேன்" என்பதைக் கேட்டு இடிஇடி என்று சிரிப்பார் என்று நினைத்து, அவர் தலையில் அடித்துக் கொண்டவுடன் ஏமாற்றமாகி விட்டது.
சுப்பு என்காலை ஆழமாக நசுக்கி, "அடக்கி வாசி" என்றான்.
நான் ஏதோ கெத்தாக சுப்புவை மராட்டி என்று சொல்லி விட்டேனே தவிர, அவன் மராட்டியாக இருக்க வாய்ப்பில்லை என்று பலமுறை நிரூபித்து இருக்கிறான்.
ஒருமுறை லக்ஷ்மி ரோட்டில் ஒரு ஜவுளிக்கடையில் பூனா காட்டன் புடவையை முந்நூற்றைம்பது ரூபாய்க்கு பேரம் பேசியதில் அது வெளிப்பட்டு விட்டது. அதன் அகவிலை முந்நூற்றி இருபத்தைந்து என்று கொட்டை எழுத்தில் மராட்டியில் போட்டிருந்தது. இந்த சம்பாஷணையில் அந்த அழகான சேல்ஸ் கேர்ள், களுக்கென்று பற்கள் தெரிய, நிஜமாகவே வெள்ளரிக்காய் பிளந்தது போல சிரித்தது.
சுப்பு தன் அறியாமையை சுலபமாக புறந்தள்ளி என்னிடம், "அந்தப் பொண்ணு மூஞ்சியப் பாத்தியா" என்று கேட்டான்.
"இல்லை.. நான் புடவை வாங்கறதுலத்தான் சீரியஸா" இருந்தேன்.
"புளுகாத.." என்றான். "அப்பப்ப.. உன் வாயைப் பாத்தேனே.. திறந்தே இருந்தது" என்றான்.
"அடப்போடா"
"அவ புடவை யாருக்குன்னு கேட்டா பாத்தியா"
"ஆமாம்.. நான் எங்கம்மாவுக்குன்னு சொன்னேன்.."
"நானும் அம்மாவுக்குன்னுதான் மராட்டியில் சொன்னேன்.."
"ரொம்ப நீளமா பேசினியே"
"ஆமாம்.. உனக்கு வேணுமானு கேட்டேன்"
"அடப்படுபாவி"
"அவ வெக்கத்தை பாக்கணுமே.."
"அடப் பாவமே.. நான் தான் தெரியாம உளறிட்டேனா"
"ஆமாண்டா நாயே.. உனக்குக் கல்யாணம் ஆயிடுத்துன்னு சொன்னதோட நிறுத்திக்க வேண்டியதுதானடா.. எனக்கும் ஆயிடுத்துன்னு மெனக்கெட்டு அந்தப் பொண்ணு கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் என்ன?"
"ஒரு பாதுகாப்புக்குத் தான்"
"யாருக்கு?"
"அந்தப் பொண்ணுக்குத் தான்"
அவன் கோபத்திலும் புன்னகைத்தான்.
"அங்கதான் நீ ஒரு தப்பு பண்ணிட்டே"
"என்ன"
"நீ சொன்னவுடனே அவ முகம் அப்படியே மாறிப்போச்சு.. கண்ணுல தண்ணியே வந்துட்டது"
நான் அவனை வெறிக்கப் பார்த்தேன். இவனை திருத்தவாவது தேவதூதன் மறுபடியும் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
குணசேகரன் அப்புறம் என்னுடன் சுமுகமான நல்ல நட்பைத் தொடர்ந்தார்.
நான் பூனாவிற்கு செல்லும் போது குடும்பத்தை அழைத்துச் செல்லவில்லை. ஒரு உறவினர் வீட்டில் தற்காலிகமாகத் தங்கி, வீடு பார்த்துக் கொண்டிருந்தேன். நான் போன சமயம் பார்த்து, ஒட்டுமொத்த நானாபேத் கிளையுமே விருப்ப ஓய்வில் சென்று விட, பதினேழு பேர் இருந்த இடத்தில் ஆறே பேர். அதிலும் இருவர் எக்ஸ்டென்ஷன் கிளைகளுக்கு செல்ல வேண்டியதாகி விட்டது. காலை எட்டரை மணிக்குச் சென்றால் இரவு பதினொன்று பன்னிரண்டு மணியாகிவிடும். சிலநாட்கள் கிளையிலேயே தங்கிவிடுவதும் நடந்ததுண்டு.
இதில் வாடகைக்கு வீடு எங்கிருந்து பிடிப்பது. சாயங்காலங்களில் டீ குடிப்பது போல் எங்கள் தலைவரை டபாய்த்துவிட்டு, புரோக்கர் காண்பிக்கும் அநேக வீடுகளை நானும் குணசேகரும் போய்ப் பார்த்தோம்.
ஒவ்வொரு முறையும் குணசேகர் ஏதாவது சொல்வார்.
ஒருவீட்டைப் பார்த்து விட்டு "பூத்பங்களா" என்றால், இன்னொன்றைப் பார்த்துவிட்டு, "யோவ்.. இத்த மட்டும் நீ ஃபிக்ஸ் பண்ணிட்டு பொண்டாட்டிய இட்டாந்து உடு.. அரைமணில டைவர்ஸ் ஆயிடும்" என்பார்.
நாட்கள் கழிந்து விட்டன. எங்களுக்குக் கிடைக்கும் சொல்ப வாடகைப் பணத்தில் வீடு தேடுவது இயலாது என்றே தோன்றியது. அடுத்த நாள் நான் சென்னைக்குக் கிளம்ப வேண்டும். படாதபாடு பட்டு எட்டு நாட்கள் லீவு வாங்கியிருந்தேன்.
அப்போது எதேச்சையாக நான் படும் பாட்டைக் கண்ட ஒரு வாடிக்கையாளர் காட்டியதுதான் வீர்பாரத்.
அதை வீடு என்று சொல்ல முடியாது. மூன்று பெட்ரூம் அபார்ட்மெண்ட் என்றாலும், அதை அவர்கள், பெரிய அளவில், புத்தக வியாபாரம் செய்பவர்கள், விற்காத நாட்பட்ட புத்தகங்களை எறிந்து போடும் குடோனாகத்தான் வைத்திருந்தார்கள். நான் ஒப்புக் கொண்டவுடன், நான்கைந்து ஆட்களை விட்டு, ஆங்காங்கே சிதறிக் கிடந்த புத்தகங்களை, அள்ளி, அந்த வீட்டின் ப்ரம்மாண்டமான ஹாலில் திணித்து பூட்டி விட்டார்கள்.
ஹாலை எப்படி பூட்ட முடியும் என்று கேட்டால் அது அப்படித்தான். என் கற்பனையைக் கடந்த சாத்தியம் அது. நாங்கள் ஹால் பூட்டப்பட்ட வித்தியாசமான அந்த வீட்டில் தான் வசித்தோம். இத்தனைக்கும், வாடகை என் சக்திக்கு மிகவும் மீறியது.
இதற்கப்புறம், மாற்றல் கிடைக்காமல் அல்லல்பட்ட என் மனைவி, அவள் கோபம், வீட்டின் கேவலமான நிலை கண்டு வெகுண்ட என் பெற்றோர் என்று மெதுவாக மெதுவாக என்மீது வன்முறை வெடித்தது. அதை வேறொரு புத்தகமாக எழுதலாம்.
இந்த சந்தர்ப்பத்தில் என்னுடைய சென்னை நண்பர் ஒருவர், ஆந்திரா வங்கியில் அதிகாரி, பூனாவில் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்து அவரைப் போய்ப் பார்த்தேன். அவர் மிகவும் சந்தோஷப்பட்டு, என் வீட்டிற்கு வந்தவர், என்னையும் மனைவியையும் அவர் வீட்டிற்கு அழைத்தார்.
நான் என் மணிக்கட்டு அளவே இருந்த ஸ்கூட்டியில் மனைவியையும் மகளையும் இருத்தி அவர்கள் வீட்டிற்கு சென்றோம்.
அவர்கள் அபார்ட்மெண்ட் பூனாவின் புகழ்பெற்ற NIBMக்கு வெகு அருகில் இருந்தது. அதன் சுற்றுச் சூழலின் அழகு சொல்லி மாளாது. என் மனைவியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. இந்த மாதிரி இடங்களையெல்லாம் பார்க்காமல், அரதப் பழசாக, ஒரு குதிரை லாயத்தில் அவர்களை அடைத்து வைத்த கொடுமையை அவள் மன்னிப்பதாக இல்லை. வேறு வழியில்லாமல் கோண்ட்வா, சாளுங்கி விஹார், மார்க்கெட் யார்ட், லுல்லா நகர் (பிரபல தமிழ் நடிகை L விஜயலட்சுமி இந்தப் பகுதியை சார்ந்தவர்), ஃபாத்திமா நகர் என்று அலசி கடைசியில் ஃபாத்திமா நகருக்கும் சாளுங்கி விகாருக்கும் இடைப்பட்ட வானோரியில் கட்டிமுடிக்கப்பட்டு, விற்காமல் இருந்த ஒரு அபார்ட்மெண்ட் கிடைத்தது. அதைக்கொண்டு காட்டியவன், நாங்கள் வீடு வாடகைக்குத் தேடுகிறோம் என்று அறியாமல், வாங்கப் போகிறோம் என்று தவறுதலாக நினைத்திருந்தான்.
அப்போது தான் எங்களுக்கும் அந்த எண்ணம் உதித்தது. நான் மாதவாடகையாக செலுத்திக் கொண்டு இருக்கும் பணத்தை விட வெறும் ஆயிரம் ரூபாய் அதிகம் செலுத்தினால், என் வீட்டுக் கடனின் தவணைக்கு ஆகும் போல இருந்ததில், மிகத் துரிதமாக செயல்பட்டு அந்த வீட்டை வாங்கி, அடுத்த பத்து நாட்களில் குடிபுகுந்தோம்.
(முதல் பாகம் முற்றும்)
(2)
வானோரி வீட்டில் எங்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. எங்கள் தளத்தில் ஆறு அபார்ட்மெண்ட்டுகள். அதில், எங்களது இடதுகைப் பக்கத்தில் இருந்து நான்காவது. வலது கைப் பக்கத்தில் இருந்து மூன்றாவது. அதில் இரண்டாவது வீடு, ராம்ஜி உடையது. தமிழ்க்க்க்க்க்காரரரரர். முதல் வீடு மலையாளம். சுப்பு போன்றவர்கள் எதிர்பார்க்கும் மலையாள சங்கதிகள் இல்லாத வயதான தம்பதியர் வசித்த வீடு.
நாங்கள் நான்காவது மாடி. ஐந்தாவது மாடியில் ஒரு தமிழ்க் குடும்பமும், ஆறாவது மாடியில் இன்னொரு தமிழ்/பாலக்காட்டுக் குடும்பமும். நாங்கள் D block. C ல் ஒரு தமிழ்க் குடும்பமும், Aல் இன்னொரு தமிழ்க் குடும்பமும் இருந்தன. மொத்தத்தில் ஆறு குடும்பங்கள், நூற்றி நான்கு அபார்ட்மெண்ட்களில். பெரும்பாலும் பஞ்சாப், மீரட் ஆசாமிகளும், மலையாளிகளும், ஓரிரு கன்னடக் குடும்பங்களும். ஆச்சரியமாக மராட்டியர்கள் குறைவு.
சொசைட்டி ஃபார்மேஷன் என்பது பணக்கார வீட்டுக் கல்யாணம் போல ஆகவேண்டியது, பில்டரின் சாதுரியத்தினால் காதும் காதும் வைத்தது போல் நடந்து விட்டது. அதற்கான காரணமாக மூன்றாவது மாடி ப்ரிட்டோவை ராம்ஜியும், ராம்ஜியை எங்கள் பக்கத்து வீட்டு மங்களாவும் குறை கூறினர். ப்ரிட்டோ யாரையும் குறை கூறவில்லை. அவர் கோவாவில் பிறந்த ஆங்கிலோ இந்தியர். நடை உடைகளில், மிக அழகான ஆங்கிலத்தில், ஆங்கிலேயனாகவே நடந்து கொண்டவர். அவர் ராம்ஜிக்கு அவசியமில்லாமல் முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை. ஆனால், ராம்ஜி அதை ஊகித்தவராக தாமாகவே களத்தில் இறங்கி கலவரத்திற்கு காரணகர்த்தாவானார்.
கடுமையான வாக்குவாதங்கள், வாதப்ரதிவாதங்கள்.. கைகலப்பு ஆகவில்லை. தனிமையில் ஆகியிருக்கலாம். வெளியில் தெரியவில்லை. சிவப்பு நிற ப்ளாஸ்டிக் நாற்காலிகள், டெரஸ் கார்டன் என்று பில்டர் பொதுவான ப்ரதேசத்தைக் கபளீகரம் செய்து பார்க்கிங் அமைத்து, காசு பார்த்து, அதன் கூரையில் நாலைந்து பட்டன் ரோஸ், வாடாமல்லி பயிரிட்டு, திப்பிதிப்பியாக மணல்பரப்பி, புல்நட்டு, மூன்றாவது நாளே காய்ந்து போய் விட்டது.
ஈரானி என்கிற குத்துச்சண்டை வீரனைப்போல் புஜங்களும், அவைகளில் குழந்தைகள் பயப்படுவது போல் சீன ட்ராகன் உருவங்களைப் பச்சை குத்திக் கொண்டு அலைகிறவன், உண்மையில் கன்டோன்மென்ட்டில் ஐஸ்கிரீம் கடை வைத்திருந்தான். பார்ஸி. ஈரானியும் அவன் சகாக்கள் இரண்டு பேரும் நிறைய எகிறினார்கள். ஆனாலும், ப்ரிட்டோ அவர்களை M G ரோடு அழைத்துப்போய் மாட்டு வறுவலும் உறிஞ்ச திராவகமும் வாங்கிக் கொடுத்து சரிக்கட்டி விட்டதாக ராம்ஜி புகாரினார்.
அந்த முக்கியமான நிகழ்வுக்கு ராம்ஜியும் போனார் என்று மங்களாவின் கஜின், B blockல் இருக்கும் இன்னொரு மங்களா ரகசியமாக என்னிடம் கூறினார். ராம்ஜியை தமிழன் என்ற வகையில் நான் அறிவேன் என்பது அவருக்கும் தெரியும். மாட்டு வறுவலுக்குப் பதிலாக ராம்ஜி கூடுதல் பணம் கேட்டது அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
நூற்று சொச்சம் பேரும் கலந்து கொள்ளவில்லை. ஐம்பது பேர் வந்திருந்தால் அதிகம். இத்தனை சண்டையிலும் ஒருத்தர் கர்மசிரத்தையாகப் பெயர் எழுதிய நோட்டுப் புத்தகம் கொணர்ந்து அச்சுபிசகாமல் கையெழுத்து வாங்கி சென்றார்.
வந்திருந்த ஐம்பதில் கிட்டத்தட்ட பத்து பேர் வீட்டு உரிமையாளர்கள் இல்லை என்பது ஒரு வயசான தாத்தா சும்மா இல்லாமல் எடக்கு மடக்காகக் கேள்வி கேட்டு மாட்டிக் கொண்டு, அது வேறு ஒரு திக்கில் களேபரம். முடிவாக ஒன்றும் ஆகவில்லை.
ராம்ஜி மட்டும் எங்கள் வீட்டில் சுவாதீனமாக நுழைந்து, என்னை என் மனைவி முன், நான் வாயைத் திறக்காமல் தொடைநடுங்கியாக நின்று கொண்டு இருந்ததை நக்கலாக சொல்லிவிட்டுப் போனார்.
அவர் போனதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு, நான் மெதுவாக இவர் பெரிய புடுங்கி மாதிரி பேசி ஆளாளுக்குத் திட்டினாங்க என்று கூறி முடிப்பதற்குள் திரும்பி வந்து, நான் சொன்னதை கேட்காத மாதிரி நடித்ததை நான் கண்டுபிடித்து விட்டேன்.
அடுத்த அரைமணி எங்களை டிவி கூட பார்க்க விடாமல், ஒரு காப்பியையும் வாங்கி, நொட்டை சொல்லிக் கொண்டே, மடக்கு மடக்கு என்று குடித்துவிட்டு, அடுத்த கூட்டத்திற்குள் என்னை வீரசிவாஜி ஆக்குவதாக சபதம் செய்து விட்டுப் போனார்.
நாங்கள் பெருமூச்சு விட்டு முடிப்பதற்குள் மங்களா உள்ளே நுழைந்து அரைமணி. காப்பி. மடக்கு மடக்கு. சாராம்சம் ப்ருட்டோ திருடன். ராம்ஜி கொள்ளைக்காரன்.
கூடிய விரைவில் நாங்கள் வெகுவாகக் களைத்து விட்டோம். நாங்கள் ப்ரத்யேகமாக சென்னையில் இருந்து தருவித்த காப்பிப்பொடி அதற்குள் தீர்ந்து விட்டது வேறு கவலையைத் தந்தது.
நல்ல வேளையாக ஓரிரு பெரிய மனிதர்கள் கூடி, தேர்தல் வைத்து விடலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.
தன் அழகான பேச்சு வன்மையால் ப்ருட்டோ ஜெயித்து விட்டார். ஈரானி இம்முறை அவருக்குத் தோள் கொடுத்தான்.
ராம்ஜி தன்னை "தொல்லை தரும் மதராசி" என்று மெட்ராஸ் காரங்களே கவிழ்த்து விட்டதாக நெடுநாள் புலம்பிக் கொண்டு இருந்தார். அவர் என்னைத்தான் சந்தேகப் படுகிறாரோ என்று கூட எண்ணினேன். இந்த புலம்பலை அவர் மற்ற நான்கு வீடுகளில் நிகழ்த்துவதில்லை. ஒவ்வொரு புலம்பலும் நீண்டு, சுஜா காப்பி டம்ளரை நீட்டியதும் அடங்கி விடும். ஒரு பரிசோதனை முயற்சியாக, அவர் ஒருநாள், புலம்புவதற்காக எங்கள் வீட்டிற்குள் வந்தவுடனேயே காப்பியைக் கொடுத்தவுடன், அவர் அதை அவசரமாக வாங்கிக் குடித்து விட்டு புலம்பாமலேயே சென்று விட்டார்.
ஒருமுறை நான் மங்களாவிடம், அவர் ஏன் தேர்தலில் நின்று ப்ரிட்டோவை ஜெயிக்கக் கூடாது என்று உசுப்பி விட்டேன். நீ எனக்கு துணையாக நிற்கிறாயா என்றதும் நான் உணர்ச்சி உந்துதலில் "உம்" என்றுதான் சொல்லியிருப்பேன். என் "உம்" சுஜாவின் "ஊம்" என்ற கர்ஜனைக்குப் பின் தங்கி, நான் மங்களாவிடம் இறைஞ்சுதலாக அவருக்கே என் வாக்கை செலுத்துவதான வாக்குறுதியில் முடிந்தது. அந்த வருடப் போட்டியில் நல்லெண்ண அடிப்படையில் மங்களா ஜெயித்து விட்டார்.
அடுத்த இரண்டாவது வருடத்துத் தேர்தலில் ப்ரிட்டோ ஈரானியனுடன் மறுபடியும் கூட்டு சேர்ந்து நான்கு ஓட்டுக்களில் கெலித்து விட்டார். ஆனால், அவர்களால் தொடரமுடியவில்லை. ஒரு ஊழல் குற்றச்சாட்டு பூதாகாரமாகி, ப்ருட்டோ பதவியிழந்து, மங்களா மறுபடியும் வெற்றி பெற்றார்.
அடுத்த தேர்தல் வந்து விட்டது. மங்களா நன்றாகவே வேலை செய்தார். வெற்றிக்கான சகல நற்சகுனங்களும் தோன்றின. அந்த சமயம் மங்களாவின் தாயார் மரணமடைந்துவிட அவரால் தேர்தல் வேலைகளைக் கவனிக்க முடியவில்லை.
மீரட்டில் இருக்கும் அவரது பிதுரார்ஜித சொத்தில் அவருக்கும் அவரது B block கஜினுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு விட்டது. கிட்டத்தட்ட ஒரே சொத்துக்கு எட்டு சகோதரர்கள் பங்கு கேட்டு அடித்துக் கொண்டனர்.
இந்த சமயத்தில், கஜின் மங்களா தன் B block வீட்டை ராம்ஜியின் அலுவலக நண்பருக்கு விற்றுவிட்டு மீரட் போய்விட்டார். ராம்ஜிக்கு நல்ல கமிஷன் கிடைத்ததில் அவர் உற்சாகமானார். மேலும் ஒன்றிரண்டு வீடுகளை முடித்துக் கொடுத்து நல்ல சில்லறை புழக்கம்.
அடிக்கடி மீரட் போய்வரும் மங்களாவிடம் ராம்ஜி அனுசரணையாக இழையவாரம்பித்தார். அவர் வெளியூரில் பிஸியாக இருக்கும் போது, தேர்தல் வேலைகளைத் தான் முன்னின்று நடத்துவதாகக் கூறினார். அது மட்டுமல்லாது தொடர்ந்து மூன்று தேர்தல்களில் தோல்விகண்ட அனுபவம் அவரிடத்தில் இருந்தது. ஆனால் அதை வெளியில் சொல்லாமல் அவருக்கு எந்நாளும் ஓட்டளிக்கத் தயாராக இருக்கும், தற்போது எட்டாக உயர்ந்திருக்கும் தமிழ்க்குடும்பங்களின் ஓட்டு வேறு கிடைக்கும் என்று ஆசை காட்டினார். இம்முறை ப்ரிட்டோவுடன் மறுபடியும் கூட்டு சேர்ந்துள்ள ஈரானிக்கு நான்கு ஓட்டுக்கள் மட்டுமே உள்ளன என்பதையும், ப்ரிட்டோவின் மீதான ஊழல் பின்புலம் தமக்கு சாதகமாகிவிடும் என்ற அவரது கணக்கு கணக்கிற்கு நன்றாகத்தான் இருந்தது.
மங்களாவின் தற்போதைய இக்கட்டான சூழ்நிலை அவரை ராம்ஜியின் தூபத்திற்கு இணங்க வைத்தது. துரதிர்ஷ்டவசமாக, ராம்ஜி மீதான வெறுப்பு பூதாகாரமாகி, எழுபது பேர் ப்ரிட்டோவிற்கு ஓட்டளித்து விட்டனர்.
மங்களா மனமொடிந்து விட்டார். தனியாக நின்றிருந்தால் நல்லெண்ண ஓட்டுக்களால் ஜெயித்திருக்கலாம் என்று காலங்கடந்து அவருக்குத் தோன்றியது.
மீரட்டிலும் அவருக்குப் பின்னடைவு தான். அதனால், தன்னுடைய வீட்டை விலைகூறவாரம்பித்தார். அதே சமயம், ஈரானிக்கும் கொரானாவினால் வியாபாரம் நொடித்து விட்டது. தில்லிக்குப் போய்விடலாம் என்று முடிவெடுத்து விட்டார். அவரது இரண்டு வீடுகளையும் சகாயவிலைக்கு விற்றுவிட்டுக் கடன்களை அடைத்துவிட்டு, புலம் பெயர்ந்து விட்டார்.
மங்களாவின் வீடு விற்கவில்லை. ராம்ஜி விற்க விடவில்லை.
இதே சமயத்தில் நானும் என்வீட்டை, (சென்னையில்) தெரிந்த ஒருவர் மூலம், அவரது உறவினருக்கு விற்று விட்டேன். அவர் ஒருமுறை என்னிடம் பேசும் போது, இன்னமும் வீட்டிற்குக் குடி போகவில்லை என்றும், interiors வேலை நடப்பதாகவும், ராம்ஜி மாமா, கடுமையான ஒத்தாசை நல்குவதாகவும் கூறினார். ஆஹா.. என்று நினைத்துக் கொண்டேன்.
மங்களா பற்றிக் கேட்டபோது, மங்களா வீடும் தகைந்து விட்டது என்றும், ராம்ஜி மாமா ஹடப்சரில் இருந்து ஒரு தமிழ்க்காரரைப் பிரயத்தினப்பட்டுக் கூட்டிவந்து முடித்து விட்டார் என்று கூறினார்.
"அப்படிப்போடு" என்று மனதில் நினைத்ததை உரக்கக் கூறிவிட்டேன் போலிருக்கிறது.
"என்ன அங்கிள் அப்படி சொல்லிட்டீங்க.. ராம்ஜி மாமாதான் இப்ப சொசைட்டில பாப்புலர்.. ப்ரிட்டோ ஒண்ணுமே பண்றதுல்ல..
அவருக்கும் ஸ்ட்ரோக் மாதிரி வந்துடுத்து..
போறாததுக்கு, அவர் பையன் க்ளாஸ்மேட்ஸ்லாம் வந்து சொசைட்டில பொண்ணுங்களையெல்லாம் ரொம்ப டீஸ் பண்றாங்க...
இவரும் யார்யாருக்கோ அன்யூஸ்ட் பார்க்கிங்லாம் ஓனர்ஸ்க்கே தெரியாம டெம்பரரியா அலாட் பண்ணினார்னு ஒரே அலிகேஷன்.. அநேகமாக மறுபடியும் அவரை இம்பீச் பண்ணிடுவாங்க போல..
திஸ் டைம் மங்களா வேற இல்லை.. அதுனால, ராம்ஜி மாமா தான் டெஃப்னட்டா செகரட்டரியாகப் போறார்.. நமக்கும் அதான அங்கிள் வேணும்" என்றார்.
எனக்கு சிரிப்பாக வந்தது. கல்லெடுத்து மாங்காய் அடித்துப் பார்த்திருக்கிறேன். கொத்து கொத்தாய்க் காய்த்துத் தொங்கும் கிளையை கல்லால் அடித்து ஒடித்துப் பார்த்தது இல்லை என்று நினைத்துக் கொண்டேன்.
தோல்வி என்பது தோல்வியும் அல்ல. வெற்றி என்பது வெற்றியும் அல்ல என்பது புரிந்தது.
(முற்றும்)
No comments:
Post a Comment