Saturday, December 24, 2016

தீட்சை

தீட்சை

"யோவ் ஐயரே ! உனக்கு மட்டும் ஸ்பெஷலா சொல்லணுமா?"

அப்பா! இடி போன்ற குரல் . எவ்வளவு கோரோசனை கொடுத்தார்களோ?

கசகச வென்று சப்தம் நெரிகிற இனம் புரியாமல் அலை மோதுகிற கூட்டம். பயம் ஒவ்வொருவர் முகத்திலும் அப்பட்டமாய் எழுதியிருக்கிறது. ஒரே கலவரம். இத்தனை மனிதத் தலைகளை இந்தக்  கிளை முதன்முறையாய் சந்திக்கிறது. கூட்டம் கட்டுக்குள் வரவில்லை. அருகாமையில் இருந்த காவல் நிலையத்தில் தகவல் கொடுத்து காவலர்களை வரவழைத்து இருக்கிறோம். ஒரு வரைமுறைக்குள் கொண்டு வர பெரும்பாடு பட வேண்டியிருக்கிறது. கொஞ்சம் தாட்டியாக இருந்த ஒரு காவல் அதிகாரிதான் குரல் கொடுத்தது.

அப்போது தான் காவல் அதிகாரியால் அழைக்கப்பட்ட மனிதரைக் கவனித்தேன்.  அவர் காவல் அதிகாரியின் அழைப்பைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அவர் பாட்டுக்கு வரிசையின் வெளியில் நின்று கொண்டு யாரிடமோ என்னவோ விசாரித்துக் கொண்டிருந்தார். வீம்புக்காக வரிசையை விட்டு விலகினவராகத் தெரியவில்லை.

"ஐயரே ! நான் அங்கு வரணுமா" என்று மற்றுமொரு இடி பிறந்தது.

இப்போது அந்த மனிதர் அழைப்பைக் கவனித்து விட்டார். தன்னையா என்று செய்கையால் வினவினார். "ஆமாம் உன்னைத்தான்" . அதிகாரி சற்று மரியாதை கொடுத்து இருக்கலாம்.

அந்த மனிதருக்கு 50 வயது இருக்கலாம். என்ன ஒரு முகம்என்ன ஒரு அமைதி?

இந்தக் காலத்தில் கூட குடுமி. ஆங்காங்கே நரையோடிய கூடியவரையில் கருத்த தலைமயிர். ஆனால்முன் வழுக்கை. அதனால் நெற்றி விசாலமாக இருந்தது. முழுக்க விபூதி பூசப்பட்டு இருந்தது. மிக அழகாக நேர்த்தியாக ஒரு பிசிரல் கூட இல்லாமல் அதே சமயம் அதிக கவனம் எடுத்து செப்பனிடப் படாமல் தன்னிச்சையாக மூன்று விரல்களால் கச்சிதமாக அளவெடுத்தது போல் வரையப்பட்டு இருந்தது. நடுவில் ஒரு எட்டணா அளவில் பிசிறில்லாமல் சந்தனப் பொட்டு. அதன் நடுவில் காலணா சைஸில் குங்குமம். முழு கிரகண காலத்து சூரியன் போல் குங்குமம் சந்தனத்தை மறைக்காமல் மறைத்திருந்தது. எல்லாமே கன கச்சிதமாய்.

அந்த மனிதர் அரை மனதுடன் எங்களை நோக்கி வரத் தலைப்பட்டார்.  

ஐந்தடி உயரம் அவரை சற்றே பூசின மாதிரி காட்டியது என்று நினைத்தேன்.

வரும்போது தான் கவனித்தேன். இரண்டு காதுகளிலும் கடுக்கன்கள். நல்ல பெரிய உருவில் பளீரிடும் வெள்ளை கற்கள்! கடுக்கன்கள் ஏதோ ஒரு உலோகத்தாலன்றி தங்கத்தினால் ஆகியிருக்கும் பட்சத்தில் பார்க்கிற யாவரும் வைரக்கடுக்கன்கள் என்று பெருமாள் கோவிலில் கற்பூரம் அனைத்து சத்தியம் செய்வார்கள். கடுக்கன்களின் அழகு அந்த மரியாதைக்குரிய மனிதரின் முகப் பொலிவினால் வீரியம் கூடியதாக உணர்ந்தேன்.

இப்போது மனிதர் அருகில் வந்து விட்டார். என்ன ஒரு முக மலர்ச்சி? கையில் ஒரு பாஸ் புக்கும் அதில் சில நோட்டுக் கற்றைகளும் வைத்திருந்தார்  புத்தகத்தில் பதிவு  செய்ய வந்திருப்பார் போலிருக்கும்.  எங்களை பார்த்து நெடுநாள் பழகினவர் போல ஒரு புன்னகையை வீசினார். உண்மையான புன்னகை. அன்பு ஒரு தென்றலைப் போல எங்களை அணைத்து மீண்டது. அவரது தாயாரைப் பார்த்து வணங்க வேண்டும் போல இருந்தது.

இரு உள்ளங்கைகளுக்குள் பாஸ் புத்தகத்தையும் பணத்தையும் அழுத்திப் பிடித்துக் கொண்டு வணக்கம் என்றார். என்ன ஒரு ஆகிருதிபலகை போல் இருந்தது மார்பு. லேசாக நரைக்கத்துவங்கியிருந்த கை ரோமங்களில் பட்டை பட்டையாய் விபூதி கலந்து ஒரு மரியாதையை ஏற்படுத்தி இருந்தது. பளீரென்ற வெள்ளை உடுப்பு! நன்கு சலவை செய்த அரைக்கை சட்டை. அதற்குப் போட்டியாய் பளீரென்று ஒரு வெள்ளை வேட்டி. சிறிதும்  சுருக்கம் இன்றி அன்றைக்குத்தான் சலவை செய்து பெட்டி போட்டது போல்.

உண்மையில் மனிதரின் அந்த மரியாதைக்குரிய தோற்றத்திற்கு நான் தான் முதலில் வணக்கம் தெரிவித்து இருக்க வேண்டும். அந்த தோற்றத்திற்கு அவர் திதிகளுக்கு சென்று உணவு அருந்துகிறவராகக் தெரியவில்லை! மெருகேறின அந்த முகம் நீண்ட காலம் வேத பாராயணம் செய்கிறவர்களுக்கு இயல்பாகவே அமைகிறது என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.  இவர் பல்வேறு கணங்களையும் புடம் போட்டவராகவே என் கண்களுக்குத் தென்பட்டார்.

"ஐயா என்னையா கூப்பிட்டிங்க? "
பின்னஅய்யிரேன்னு உன்னைத்தானே கூப்பிட்டு இருக்க முடியும். கூட்டத்துலே நீ ஒரு ஆளுதானய்யா அய்யிரு?"

அவர் கூட்டத்தை ஒரு கணம் திரும்பிப் பார்த்து விட்டுஇந்தக் கூட்டத்தில் வேறு யாரேனும் ஐயர் இருக்கிறாரா என்று தெரியாதுங்க! ஆனா நான் ஐயர் இல்லீங்க என்றார்.

"என்னது?"

"ஆமாங்கய்யா! நான் ராம் நகர்லே சலூன் வெச்சு நடத்திட்டு இருக்கிற பார்பருங்க " என்றார் என் பேரு சுப்பிரமணிங்க அய்யா. சுப்பிரமணி சலூன் கடைன்னா ராம்நகர் பூராவுக்கும் அத்துப்படிங்க.

ஆஹா என்றேன் என்னை அறியாமல்.

என்னுடைய இத்தனை வருடங்களில் காஞ்சிப் பெரியவருக்கு அப்புறம் காந்தி பொருந்திய ஒரு மனிதரைப் பார்க்கிறேன். என்னை அறியாமல் என்னுடைய இரு கரங்களும் அவரைப் பார்த்துக் குவிகின்றன. அவருக்கு ஏதேனும் நல்லது செய்தால் தேவலை போலிருந்தது. வங்கிப் பணியாளர் ஒருவரை வரவழைத்து அவருக்கு வேண்டிய உதவிகளை செய்யச் சொன்னேன். கூட்டத்தில் பரவலாக இதற்கு எதிர்ப்பு இருந்த போதும் காவல் துணை இருந்ததால் சமாளிக்க முடிந்தது.

நன்றி கூறிவிட்டு அந்த மனிதர் அகன்றார். கணுக்கால்களைத் தடுக்காத வேட்டி. பழைய மாடல் தோல் செருப்பு. தரையோடு ரகசியம் பேசுவது போல் ஒரு மினுக்கு சப்தம் எழாமல் பதவிசாக நடந்து போகிற அந்த மனிதரை வியப்போடு பார்க்கிறேன். அடுத்தமுறை முடிவெட்டிக் கொள்ள அவரிடம் அவசியம் செல்ல வேண்டும்.

பணத்திற்காக இத்தனை வருடம் நடந்த யுத்தத்தைக் காட்டிலும் பணப் பட்டுவாடாவுக்கு நடக்கும் யுத்தம் பெரிதாக இருக்கிறது. இதில் வங்கி ஊழியர்கள் அவரவர் விருப்பு வெறுப்பின்றி பயிற்சி அளிக்கப்படாத படைவீரர்களாக உபயோகப் பட்டுக் கொண்டிருப்பதை பற்றி பிரஸ்தாபிக்க விரும்பவில்லை. ஆனால்இந்த யுத்தம் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தையும் எங்களது அன்றாட வாழ்க்கை முறையையும் மாற்றி அமைத்தது என்பது நூறு சதவீதம் உண்மை. அனைத்து அலுவல்களை முடக்கித்தான் விட்டன. முடி வெட்டிக் கொள்வது உள்பட.

ஒரு வழியாக அலுவலகம் செல்ல விரும்பாத ஒரு விடுமுறை நாளில் பிடிவாதமாக சலூன் சென்று முடி திருத்தி வருவது  என்று முடிவெடுத்தேன். முதலில் சுப்பிரமணியன் பெயர் ஞாபகத்திற்கு வரவில்லை. வண்டியைத் தள்ளிக் கொண்டு தெருவில் இறங்கியபோதுதான் அவர் முகம் ஞாபகம் வந்தது. ஒருக்கணம் யோசித்தேன். சுடர் விட்டுப் பிரகாசிக்கும் அவரிடம் போய் முடி வெட்டிக் கொள்வதா என்றுஆனால் இன்னொரு முறை அந்த மனிதரை தரிசிக்கலாம் என்ற ஆவல் உந்தியதால் எங்கள் வீட்டு எஜமானரிடம் சுப்பிரமணியைப் பற்றி விசாரித்தேன்.

அவனைப் பற்றி உங்களுக்கும் தெரிஞ்சு போச்சாரொம்பப் பேசுவான். ஆனா நல்லவன் என்றவாறு கடையின் அடையாளம் சொன்னார்.
அருகாமையில் தான் அந்த சலூன் இருந்தது. வண்டியில் செல்ல அவசியம் இருந்திருக்காது. என்றாலும் பழகிவிட்டது. நடை எல்லாம் துர்லபமாகி விட்டது. மருத்துவர்களின் அச்சுறுத்துதல்களை உதாசீனப் படுத்தக் கற்று கொண்டாகி விட்டது.

கடை மிகப் பழையதாக இருந்தது. என்னை பார்த்து வாங்கண்ணே என்றார். அதே முக மலர்ச்சி. பிறவியிலேயே முகம் இவ்வாறு அமைந்து இருக்குமோஎனக்கு முன் ஒருவர் அமர்ந்து இருந்தார். நீல கலரில் கட்டம் போட்ட லுங்கிகை இல்லாத பனியன். இருக்கையில் அமர்ந்து முடி வெட்டிக் கொண்டிருப்பவன் நம்மூர்க் காரன் இல்லை. வேற்று மாநிலத்தவன். அவனிடம் சுப்பிரமணி என்னமோ தமிழில் கேட்க அவன் என்னமோ கடமையாய் இந்தியில்  பதில் சொல்லிக் கொண்டிருந்தான். ஒன்று மட்டும் புரிந்தது. இருவரும் மிக அந்நியோன்யமாய் பேசிக் கொண்டிருந்தார்கள். இருவருக்கும் இடையில் பாஷை  அவசியமில்லாத அன்பும் ஆதுரமும் நிலவியது. அல்லது இருவருக்கும் பொதுவான பாஷையாக ஏழ்மை இருந்திருக்கலாம். அசோகமித்திரனின் 18 -வது அட்சக்கோடு ஞாபகத்துக்கு வந்தது. எவ்வளவோ தூரம் பெற்றோரையும் சொந்தங்களையும் விட்டு விட்டு எவ்வளவோ தூரம் சொல்ப சம்பளத்திற்கு வருகிறவனின் சொந்த ஊரானது எத்தகைய அவலங்களைக் கொண்டிருக்க வேண்டும்?



லுங்கி அணிந்து அடுத்த அழைப்பிற்காக காத்துக் கொண்டிருப்பவனைப் பார்த்தேன். நல்ல உயரமாக இருந்தான். இடுப்புக்கு மேல் கிரிக்கெட்டர் ரோஜர் பின்னியைப் போல உயரமாகவும் குள்ளமான கால்களைக் கொண்டும் இருந்தான். அவ்விருவர் பேசுவதையும் ஒன்றும் புரியா விட்டாலும் வெகு கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

நான் கடையை நோட்டம் விட்டேன். மிகப் பழைய கடை. எங்கு திரும்பினாலும் மகான்கள் படம். ரமணர்சேஷாத்திரி சுவாமிகள்விசிறி சாமியார்பூண்டி மகான்இன்னும் பெயர் தெரியாத சாமியார்கள். நிறைய சித்தர்கள் படங்கள். ஒரு பக்கம் பூராவும் வித விதமாக ஷீரடி சாய்பாபா படம். அதற்கு மட்டும் நெடி மூக்கில் ஏறாத ஒரு ஊதுவத்தி கொளுத்தி அணையும் தருவாயில் இருந்தது. தற்கால சலூன்கள் போல டிவி இல்லை. ஒரு பழைய ட்ரான்ஸிஸ்டர் ரேடியோ ஆனால் தெளிவாக ஏதோ ஒரு நிலையத்தில் இருந்து பக்திப் பாடல்களை இறைத்துக் கொண்டிருந்தது. மருந்துக்குக் கூட ஒரு கடவுள் படத்தைக் காண முடியவில்லை. காஞ்சிப் பெரியவரின் படம் இல்லாதது லேசாக ஒரு வருத்தத்தை ஏற்படுத்தியது.

லுங்கிக்காரன் சுப்பிரமணியிடம் நிறைய பேசினான். வாழ்க்கையின் அவலங்களை நிறையப் பேசினார்கள். முகச் சவரத்தின் போது அவன் பேச முற்படவில்லை. லேசாக விம்மி அடங்குகிற அவனது தொண்டைக் குழி கூரான சவரக்கத்திக்கு ஈடு கொடுத்திருக்காது. சுப்பிரமணி அவனது கவலைகளுக்குத் தனக்குத் தெரிந்த பதில்களைக் கூறிக் கொண்டிருந்தார். அவனது கவலைகளில் பங்கெடுக்கும் முயற்சியாகத் தெரிந்தது எனக்கு. அவரது சில பதில்கள் எனக்கு சிரிப்பைத் தந்தன. அவரது படிக்காத பின்புலத்தை விளக்குவதாக அமைந்தன. ஆனால் அவையெல்லாம் லுங்கிக்காரனுக்குப் போதுமானதாக  இருந்தன.

அவன் போகும் போது உள்ளங்கைக்குள் இறுக்கி வைத்திருந்த ஒரு ஐம்பது ரூபாய்த் தாளைப் பிரிக்காமல் சுப்பிரமணியின் கரங்களுக்குள் திணித்தான். அவன் முகத்தில் ஒரு இறைஞ்சல் இருப்பதாகப் பட்டது. இந்த ஐம்பத்திற்கே அவன் சிரமப்படுவதாகத்  தெரிந்தான். சுப்பிரமணி அவனிடம் இல்லே மாரிநீ அடுத்த தடவை வரும்போது கொடு பரவாயில்லை என்றார்.  அவன் ஒரு பெரிய மனிதத் தோரணையில் ச்சே சே அதெப்படிஏற்கெனவே நூறு ரூபாய் பாக்கி என்றவாறுஅந்த ஐம்பது ரூபாயை சுப்பிரமணியிடமே விட்டு விட்டு ஒரு மிடுக்கோடு வெளியேறினான்.

என் முறை வந்தது. நான் எழுந்து நின்றேன். ஒரு நிமிஷம் என்றவாறு சுப்பிரமணி தரையை உடனே சுத்தம் செய்தார். முடி திருத்தும் போது உபயோகிக்கும் துணியை பத்திரமாக எடுத்து திருத்தப்பட்ட முடிகளை மேலே படாதவாறு ஒரு கூடையில் சேகரித்து கடைக்கு வெளியில் இருந்த ஒரு மரத்தடியில் வைத்து ஒரு பலகை கொண்டு மூடினார். கைகளைத் தட்டி வீட்டுக் கொண்டுஅந்த மரத்தை ஒரு  பரவசத்துடன் நிமிர்ந்து பார்த்தவாறு அதனைத் தடவியும் கொடுத்தார். அது ஒரு temple tree . அழகான பெரிய வெள்ளை மலர்கள். ஒவ்வொரு முறையும் இம்மலர்கள் அகஸ்மாத்தாகக் கிடைக்கும் போது நான் அனிச்சையாக முகர எத்தனிப்பது வழக்கம்அதில் வாசம் கிடையாது என்பது தெரிந்து இருந்தும்.

இம்முறை அதில் இருந்து இரண்டு மலர்கள் விழுந்திருந்தன. அவர் அதை சேகரிக்க முனையும் போது ஒரு சிறுவன் வந்து எடுக்க முற்பட, அவர் விளையாட்டாக அவனைத் துரத்துவது போல கை வீசிபிற்பாடு அவனிடம் பேரம் பேசுவது போல் ஒன்றைக் கொடுத்து விட்டு ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து சாய்பாபாவிற்கு அணிவித்தார். மறக்காமல் என்னை இருக்கையில் அமருமாறு கூறத்தயங்கவில்லை அவர்.

என் மீது போர்த்தப்பட்ட துணியைக் கவனித்தேன். பழைய ஆனால் கிழிசலில்லாத வெள்ளைத் துணி! பழுப்பேறி இருந்தாலும் அழுக்கில்லாமல் துவைக்கப் பட்டு இருந்தது. அதன் வாசனையை முகர மனம் ஆசைப்பட்டது. சிறு வயதில் என்னுடைய பாட்டியின் மடியில் அமரும் காலத்தில் அவரது நார்மடிப் புடவையின் வாசம் ஒரு கவிதையாக மூக்கில் நுழையும்.

அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். மகான்களின் படங்களை பற்றிக் கேட்டேன். எப்பவுமே மலர்ந்து இருக்கின்ற முகம் மேலும் பிரகாசித்தது. அவர் தன்னைப் பற்றி சொல்லவாரம்பித்தார்.

அவருக்கு 61 வயதாகிறது. பரம்பரையாக இதுதான் தொழில். அவரது தாத்தா நிறைய சொத்து வைத்திருந்தாராம். கேள்விதான். ஆனாலும் கள்ளுக்கு ஆசைப்பட்டு விரல் ரேகை அழுந்தலில் எல்லா சொத்துக்களும் காலப் போக்கில் போய் விட்டன. தாத்தாவும் போய் விட்டார். இவரது பெரியப்பா தான் இந்த சலூன் கடையைத் திறந்தவர். 60 வருடங்களாக இருக்கிறது இந்தக் கடை. இவர் 1968 முதல் இதில் வேலை செய்கிறார். பெரியப்பா போனபின் அவரது மகன் வேறு ஒரு நவீன கடை திறந்து வேறு லெவெலில் தொழில் நடத்துகிறார். அது பார்லர் வகையை சார்ந்தது. அதெல்லாம் இவர் கற்றுக் கொள்ளவில்லை.

இவர் அப்பா கடையேதும் வைக்கவில்லை. கடைசி வரை ஏதோ ஒரு சலூனில் வேலை செய்து காலமாகி விட்டார். ஆனால் அவர் ஒரு கொள்கையுடன் வாழ்ந்தார். திருமணத்திற்கு நல்ல உடை அணிந்து செல்லும் போது கூடவழியில் எங்கேனும் மாட்டுச்சாணம் கிடைக்கும் பட்சத்தில் அதை வழித்து எடுத்து வயல் வெளிகளில் எறிந்து விட்டுப் போவது அவர் வழக்கம். மற்றவர் கடிந்து கொள்ளும்போது கூட அவர் பொருட்படுத்தியது இல்லை. தெருவில் போகிற எவரும் மிதித்து விடுகிற பட்சத்தில் அவர் படுகிற அவமானத்தை விட இவர் செய்கிற காரியம் மோசமானது இல்லை. வயலுக்கு உரம் வேறு கிடைக்கிறது.

தான் படிக்க வில்லை. வசதியில்லை. 13 வயதில் வேலைக்கு வந்து விட்டார். 10 வயதுக்கு மேல் அசைவம் உண்பதை நிறுத்தி விட்டார். எங்கேயோ ஒரு பிரசங்கம் பார்க்கப் போய் அதில் லயித்து அசைவம் உண்பதில்லை. குடும்பத்திலேயே யாரும் உண்பதில்லை.

15 வயதில் என்னமோ திருவண்ணாமலையில் ஈடுபாடு வந்து விட்டது. ஒவ்வொரு மாதமும் ஏதோ ஒரு செவ்வாய்க்கு கிழமை விடுமுறையில் திருவண்ணாமலை சென்று கிரிவலம் செல்வது வழக்கம். தன்னனுடைய 50 வது வயதில் ஐந்து முறை வலம் வந்து இருக்கிறார். பச்சைத் தண்ணீர் கூட குடிக்க மாட்டார். கடும் விரதம். இதுவரை திருவண்ணாமலையில் எங்கும் தங்கியது இல்லை. குபேர லிங்கத்தில் வெளியில் இருக்கும் திண்ணையில் ஒரு துண்டு போட்டு உறங்கி விட்டு இரவு ரயில் ஏறி ஊர் வந்து விடுவது வழக்கம்.

ஒருமுறை கிரிவலப் பாதையில் "உதவும் கரங்கள்" பெயர்ப் பலகையை பார்த்து விட்டு சும்மாவாச்சுக்கும் ஒரு உந்துதலில் உள்ளே நுழைந்து பார்க்கநிறைய ஆதரவற்ற குழந்தைகள் பரட்டை தலையுடன் உலாத்துவதைப் பார்த்து அதிர்ந்து அன்று முதல் ஒவ்வொரு மாதமும் குறைந்த பட்சம் 50 குழந்தைகளுக்கு பணம் வாங்கிக் கொள்ளாமல் முடி திருத்துவது என்று 15 வருடங்களாக செய்து கொண்டு இருக்கிறார்.

எனக்கு மயிர்க்கூச்செறிந்தது. முடி திருத்துபவருக்கு இது சாதகமாக இருக்கும்.

நான் அவரிடம்ஒரு மாதத்திற்கு எவ்வளவு சம்பாத்தியம் இருக்கும் என்று கேட்டேன். அவர்முன்னே பின்னே 15000  வரும் என்றார். என்றால், 5000 ரூபாய் அதாவது அவரது மொத்த சொல்ப சம்பாத்தியத்தில் மூன்றில் ஒரு பங்கு தர்மத்திற்கு செலவிடுகிறார். என் எண்ணோட்டங்களை புரிந்து கொண்டவர் போலஎன்கிட்டே வேறே வசதி கிடையாது சார். என்ன பண்ணுவது. அதான் எனக்கு தெரிஞ்ச ஒரே வித்தையை தானம் பண்ணலாம்னு முடிவெடுத்தேன் என்றார்.

இன்னிக்கு கூட நீங்க மொத்தமா சார்ஜ் பண்ணலை போல என்றேன்ஆமாங்கஎன்ன பண்ணுறது. அந்தப் பய பாவம் ஒரிசா லிருந்து வந்து கட்டிட வேலை பார்க்கறான். 10000 கொடுக்கறாங்க. பாதி பணம் அப்பா அம்மாக்கு அனுப்பிட்டு இங்க அநாதை மாதிரி இருக்கறானுங்கோ. என்னை பாத்தா இவனுங்களுக்கு அவுங்க அப்பா ஞாபகம் வந்துடுது. எந்த அப்பனாவது தன்னோட குழந்தைகிட்டே இருந்து சார்ஜ் பண்ணுவானாநானும் பண்றதில்லே.

உங்களுக்கு பசங்க இருக்கறாங்களா என்று கேட்டேன். ஒரே ஒரு பொண்ணு சார். என்னோட வசதிக்கு தமிழ் பள்ளிக்கூடத்திலேதான் படிக்க வச்சேன். நல்ல படிச்சு யார் காலையோ பிடிச்சு செலவில்லாமே பி.காம் படிக்க வெச்சுட்டேன். அதுவா என்னமோ எக்ஸாம் எழுதி கணபதி சில்க்ஸ்லே வேலை வாங்கிருச்சு. 100 வருஷ கம்பெனி. இப்ப என்ன விட 1000 ரூபாய் ஜாஸ்தி சம்பாதிக்குது. போன வருஷம் கல்யாணம் பண்ணிட்டேன். மாப்பிள்ளை ஒரு ஆடிட்டர் ஆபிசில் வேலை பாக்கறாரு. சிக்கனமா இருந்தா சிறப்பா வாழ்க்கை நடத்தலாம்.

சொன்ன நம்ப  மாட்டீங்க . என்  வாழ்க்கையிலே  நான்  மொத்தமே 8 கிராம் தங்கம் தான் வாங்கி இருக்கேன். அதுவும் என் பொண்ணுக்கு கல்யாணத்துக்கு வாங்கினது. இப்ப என் மாப்பிளை ஒரு 20 கிராம் வாங்கி போட்டு இருக்காருன்னு சொல்லி பெருமை பட்டுக்கிச்சு. இதுலே பெருமை என்ன வேண்டி கெடக்குமனுஷனுக்கு போரும்கற அறிவு வேணும். பாதாம் அல்வாவாவே தின்னாலும் ஒருநாள்லே வெளியே போகலேன்னா டாக்டரைப் பார்க்க ஓடணும். இல்லீங்களாகோடிக் கணக்கிலே இருந்தாலும் செத்துத் தானே போகப் போறோம் ஒரு நாள்?



வீடு?

என்னஇங்க இருந்து 22 கிலோமீட்டர். முன்னெல்லாம் சைக்கிள் லே வருவேன். அப்பறம் 10000 சேத்து வெச்சு ஒரு டிவிஎஸ்-50 வாங்கி அதுலே தான் வரேன்.

எனக்கு எல்லாமே கடவுள் கொடுத்துருக்காருங்க. நான் வீடு கட்டுவேன்லாம் நெனைச்சதே இல்லே. பழைய நிலம் ஒண்ணு ரொம்ப வருஷம் தருசா கிடந்தது. ஒரு பாதியை வித்துட்டு வந்த பணத்துலே சின்னதா ரெண்டு பேருக்கு போரும்கற மாதிரி வீடு கடவுள் கட்டி கொடுத்தாரு.

நான் என் பெண் கிட்டே கண்டிச்சு  சொல்லிட்டேன் - நீ எப்ப வேணும்னாலும் நம்ம வீட்டுக்கு வா. நல்ல சாப்பாடு போடுவோம். இருக்கறே ஒத்தை ரூம்புலே நீயும் ஒன் புருஷனும் தங்கிக்கோங்க. நாங்க வெளீயே படுத்துக்குவோம். ஆனா பணம் காசுன்னு எதிர் பார்க்காதே. அது என்கிட்டே இல்லே . சம்பாதிக்கிற ஐடியா வும் இல்லே.  எங்க காலத்துக்கு அப்பறம் வீடு எப்படியும் உனக்குத் தானேனு சொல்லிட்டேன்.

சம்பாஷணையின் நடுவே நாலைந்து பெண்கள்பெரும்பாலும் வேற்று மாநிலத்தவர் வந்து கடையின் ஒரு மூலையில் மாட்டி இருக்கும் கிளிப் ஒன்றில் கொத்தாக மாட்டி இருக்கும் பேப்பர் கொத்து ஒன்றை எடுத்து சுப்பிரமணியிடம் கொடுத்து ஓரிரு ருபாய் நோட்டுக்களைக் கொடுத்தார்கள். சுப்பிரமணி அவர்களிடம் வாங்க மறுத்துரெண்டு நாள் பொறுத்து வருமாறு கூறினார். தான்னுடைய அக்கௌண்டில் ஒரு லட்சம் சேர்ந்து விட்டதால் கொஞ்சம் பணம் பட்டுவாடா பண்ணிய பிற்பாடு வாங்கி கொள்வதாகக் கூறினார்.

பின்என்னைப் பார்த்து புன்னகைத்துஇதுங்கெல்லாம் எதுத்த மாதிரி ஹோட்டல் கட்டறாங்கல்லேஅதுலே கொத்து வேலை செய்யறாங்க. வாரம் 1000 ரூபாய் தருவாங்க. எல்லாம் கை நாட்டு. அதுனாலே என்கிட்டே கொடுத்து என் அக்கௌண்ட்லே போட்டு வரவு செலவு பண்ணுதுங்க. இதோ இந்த பேப்பர் லே தான் கணக்கு வழக்கு பூரா எழுதி வச்சுருக்கேன். என் பொண்டாட்டி கிட்டே கூட சொல்லி வச்சுருக்கேன். எனக்கு ஏதாவது ஆயி போச்சுன்னாபைசா பிசகாம எல்லாத்துக்கும் கொடுத்துடனும்னு.

யாராச்சும் ஜாஸ்தி கேட்டாங்க என்ன பண்ணுவீங்க.

அதான் கணக்கு இருக்குல்லேஅப்படியெல்லாம் திமிரு தண்டித்தனமா யாரும் கேக்க மாட்டாங்க. எல்லாம் ஏழை பாழைங்க. அப்படியே போனாதான் என்னஎனக்குன்னு ஒன்னும் கிடையாது. மிஞ்சிப் போனா என்னஒரு 2000 ரூபாய் இருக்கும் என்னோட காசு. அது போனாத்தான் என்ன?

என்ன மாதிரி மனிதன் இவன்?

நான் ஏதாவது வங்கியில் உதவி செய்யச் சொல்லட்டுமாகடன் உதவி ஏதாவதுசலூன் அபிவிருத்தி பண்ணுவதற்கு?

ஏங்க ? மனுஷனுக்கு முடி அபிவிருத்தி ஆனா தானா சலூனுக்கு அபிவிருத்தி ஆகிட்டு போகுது என்று சிரித்தார். அதெல்லாம் புதுசு புதுசா மெஷின்வாங்கி தொழில் பண்றவங்களுக்கு தான் வேணும். ரெண்டு சீப்புரெண்டு கண்ணாடிஒரு கத்திஒரு கத்திரி இதுக்கு மேல என்னங்க வேணும்கடவுள் கொடுத்த கைலே சக்தி இருக்கற வரைக்கும் தொழில் பண்ணினா போருங்க.

கடையை நவீனமா மாத்தலாம்லே?

அட போங்க சார். கடையே இன்னும் ஒரு மாசம்தான்.

என்னது
?

ஆமாம்ஜனவரி 20 காலி பண்ணியாகணும்.

ஏன்?

ஓனர் பையன் சும்மா இருக்காப்புலே. ஒரு மெக்கானிக் ஷாப் வெச்சு கொடுக்கணும்னு கடை வேணும்னார்.

நீங்க மறுப்பு சொல்லலியா?

மறுப்பு என்ன சொல்லறதுகடை அவங்களது. அவங்களுக்கு தேவைப்படுது. நான் ஒரு ஆறு மாசம் டைம் கேட்டேன். எனக்கு வேறே தொழில் தெரியாது சார்னு கேட்டுக்கிட்டேன். டைம் கொடுத்தாரு. வேறே இடம் அமையலே. முடி வெட்டறது கேவலம்னு நெனைக்கறாங்க. என்ன பண்ணே?

நீங்க இங்க வந்து எவ்வளவு வருஷம் ஆச்சு?

இந்த கார்த்திக்கு 52 வருஷம் ஆச்சு!  நான் வந்தே 48 வருஷம் ஆச்சு.

நீங்க கொடுக்கற வாடகை போதலையோ?

இருக்கலாம். நான் கூட கேட்டேன் . உசத்தி தரட்டுமான்னு. ஓனர் வேணாம்னுட்டார். கடையை திருப்பி கொடுத்தா போரும்னுட்டார்.

நான் யோசித்தேன். கடையின் தற்போதைய வாடகை 10000 வரும். இவரது வருமானமே 15000 என்றால் இவர் என்ன வாடகை தர முடியும்?

நஷ்ட ஈடு கேட்கலாம்லே?

சிரித்தார். என்னத்துக்கு?

ஏங்கஇது அவங்க இடங்க. பெரியவரு போயிட்டாரு. அவர் இருந்தவரைக்கும் நான் என்ன பண்ணினேன்னு பார்த்ததில்லே. இப்ப இடத்தை திருப்பி கேக்கறாங்க. நான் ஆறு மாசம் டைம் கேட்டேன். ஆறு மாசம் போயிடுச்சு. காலி பண்றது தானே நியாயம். மனுஷனுக்கு வாக்கை காப்பாத்தறது தானே முக்கியம்?

ஒங்களுக்கு வருத்தமே இல்லையா?

எனக்கு என்ன வருத்தம்ஒரே ஒரு வருத்தம் தான்.  இதோ இந்த மரம். நாந்தான் விதை போட்டு குழந்தை மாதிரி வளத்தேன். என்னோட நெஞ்சுக்கு உள்ளே இருக்கறே பாபாவுக்கு கூடை கூடையா பூ கொடுத்துட்டு இருந்துது. இதை விட்டுட்டு போகப் போறோம்னு மனசு கஷ்டமா இருக்கு. மெக்கானிக் ஷாப்னா இடத்துக்காக இதை வெட்டிடுவாங்களோன்னு மனசுக்கு தவிப்பா இருக்கு.

மனசு என்னமோ கனத்துப் போய் விட்டது. இந்த மனிதனிடம் இனிமேல் வந்து அளவளாவ முடியாது. என் முதல் அனுபவமே கடைசி அனுபவமாகவும் போகிறது.

இன்னொரு வருத்தம் இருக்கு. இந்த பொம்பளெங்க. இதுங்களுக்கு எப்படியாவது அக்கௌன்ட் திறந்து கணக்கு வழக்கு பார்க்க சொல்லிக் கொடுக்கணும். கத்துக்க மாட்டேங்குதுங்க.

பேச்சை மாற்ற எத்தனித்தேன்.

கடைசியா திருவண்ணாமலை எப்ப போனீங்க.

நாலு வருஷம் ஆச்சுங்க.

எனக்கு தூக்கி வாரிப் போட்டது.

என்னதுநாலு வருசமா?

ஆமாங்க. நான்தான் சொன்னேனுங்கல்லே. பச்சை தண்ணி பல்லுலே படாமேதான் போயிட்டு வருவேன்னு.

ஆமா.

நாலு வருஷம் முன்னாலே கிரிவலம் முடிச்சுட்டு குபேர லிங்கம் வந்து படுத்துட்டேன். அசதியா இருந்துது. அப்ப ஒருத்தரு வந்து என்னைய தட்டி எழுப்பினார். ஒரு ஐயர் சாமி. பக்கத்துலே first  classஆ ஒரு பாபா கோயில் கட்டி இருக்காங்க. அங்கனே இருந்து அவரு ஒரு கிண்ணத்துலே கொஞ்சம் சக்கரைப் பொங்கல் எடுத்துட்டு வந்து என்னை தட்டி எழுப்பறாரு.

என்னங்கண்ணேன்னேன்.

இந்தாங்க பிரசாதம்னு நீட்டினார். இதென்னடா வம்புன்னு யோசித்தேன். அவரு பாபா கொடுத்தாருன்னு நெனச்சுக்குங்க. இன்னக்கி கூட்டம் கூட்டமா வந்து பிரசாதம் வாங்கிட்டு போனாங்க. உங்களை இன்னக்கி காலையிலே கிரிவலம் போனப்ப பார்த்தேன். சரிபசியோட வருவீங்கஉங்களுக்கு ஒரு கரண்டி எடுத்து வைக்கலாம்னு எடுத்து வச்சேன். அப்பறம் பாருங்க,  யாருமே வந்து பிரசாதம் வாங்கிக்கலே.

எனக்கு பொறி தட்டிச்சு. கண்லே நீர் காட்டிச்சு.  ஆஹா. பாபா நம்ம விரதத்தை முடிச்சு வைக்கிறாருன்னு. வாங்கி சாப்பிட்டேன்.  தேவாம்ருதமா இருந்தது. பாபாவே வந்து சாப்பிடுன்னு சொல்லி கொடுத்தா வேற எப்படி இருக்கும்.

சரிஇன்னமே படுக்கக் கூடாதுன்னுஅழுகையைத் தள்ளி வச்சிட்டு உதவும் கரங்கள் போயி 50 , 60 பயலுவளுக்கு முடி வெட்டி தள்ளிட்டு குளிச்சுட்டு கோயிலுக்கு கிளம்பினேன். அப்படியே ராவுக்கு வண்டி ஏறிடலாம்னு. எனக்கு உதவும் கரங்கள்லே கேட்டா ஒரு ரூம் கொடுப்பாங்க. ஆனாஇது வரைக்கும் நான் எங்கியுமே தங்கினது இல்லே. குபேர லிங்கத்துலேயே தான் ஐக்கியம் ஆகி இருக்கேன்.

கோயில்லே நல்ல கூட்டம். முண்டி அடிச்சு போறாங்க. நமக்கு என்னராவுக்கு தானே வண்டின்னு என்னை தாண்டி போறவங்களுக்கு வழி விட்டுட்டு மெதுவா பின்னாடி போறேன்.

க்ரீக்ட்டா நான் படில நுழையும் போது நிறுத்திட்டாங்க. ஒரு மணி நேரம் நிக்கற மாதிரி ஆயிடுச்சு. அதுக்குள்ளேபின்னாடி நின்னவங்க சண்டை போடா ஆரம்பிச்சாங்க. அவங்களே நான் சமாதானப் படுத்தி முன்னாலே வேணா நின்னுங்கான்னு அனுப்பி வெச்சேன்.

நாங்க உள்ளே நுழையும் போது ஏழு மணி இருக்கும். நான் கொஞ்சம் குள்ளம்ங்கறதுனாலே சாமி எனக்கு சரியா தெரியலை. எட்டி எட்டி பார்த்தேன். காவலுக்கு நின்னவுங்க என்னைய திட்டினாங்க. சரிஎப்படியும் சாமிய தாண்டி போகும்போது பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்.

எல்லாரையும் புடிச்சு புடிச்சு தள்ளினாங்க. நான் சாமிக்கிட்டே போகும்போது ஷாக் அடிச்ச மாதிரி ஆயிடுச்சு. எவ்வளவு பெரிய லிங்கம்நான் எவ்வளவு தடவை பார்த்து இருக்கேன்இப்ப என்னடான்னா லிங்கம் சின்னதா ஆட்டுக்கல் குழவி மாதிரி இருக்கு. ஒரே ஒரு விளக்கு வெச்சு இருக்காங்க. லிங்கத்துக்கு நான் டெய்லி கஸ்டமருக்கு போத்தர அழுக்குத் துணி போத்தி இருக்கு. லிங்கத்துக்கு நாலு சைடுலேயும் நம்ம வெள்ளைப்பூ வெச்சுருக்காங்க. தலைலே ஒரு ஒத்தைப்பூ.

எனக்கு பொங்கிப் பொங்கி வருது. கண்ணைக் கசக்கி கசக்கி பாக்கறேன். திரும்ப திரும்ப அதே காட்சி தான் வருது. நான் தப்பு பண்ணிட்டேன்னு சாமி நினைச்சுட்டார் போலெ. பிரசாதம்னுதானே உண்டேன். நாக்கு ருசி க்கு ஆசைப்பட்டு உண்ணலையேஅப்பறம் ஏன்என்னோட அழுக்குத் துணியே போத்திகிட்டுஇப்படி ஒரு காட்சி கிடைக்குது. நான் ஓன்னு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பிச்சுட்டேன். அங்க இருந்தவங்கள்லாம் என்னை உலுக்கி வெரட்டிவிட்டாங்க. அதே ஆத்தரத்துலே ஊரு வந்து சேந்துட்டேன். அப்பறம் திருவண்ணாமலை போகறது இல்லே. இந்த கோயமுத்தூரில் போயி உதவும் கரங்கள்லே பயலுங்களுக்கு முடி வெட்டி உடறேன். இங்க எல்லா பயலுங்களும் என்னை "மொட்டை மாமா", "மொட்டை மாமா"-ன்னு கூப்புடுவானுங்க. ஜுனியர் விகடனிலே கூட 2009 ம் வருஷம் வந்தது.

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. என்ன ஒரு அனுபவம்.

எத்தனைக் கோடி பக்தர்களைக் கண்டு கொண்டே இருக்கிறான் அருணாச்சலன்அது மட்டுமாதனக்கு சமமான இரண்டு கடவுள்களைத் தன் அடியையும் முடியையும் காண விடாமல்  விண்ணளவும் மண்ணளவும் நீண்டு வியாபித்து விளையாட்டுக் காட்டிய சிவனாகிய இவன்ஒரு ஏழை நாவிதனுக்காக ஒரு ஆட்டுக்கல்  குழவி  அளவு சுருங்கிஅவன் உடமையாகிய ஒரு அழுக்குத் துணியைப் போர்த்திக்கொண்டுஅவனது பூவையையும் வைத்துக்கொண்டு காட்சி கொடுப்பானாகில்இது எப்பேர்ப்பட்ட பக்தியாக இருக்க வேண்டும்?

அவன் காட்சி கொடுத்தது கூடத் தெரியாமல் தன்னுடைய தொழிலை அதன் நடுவில் கற்பனைக்கு எட்டாத ஒரு தர்ம சிந்தனையையும் ஒருவன் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கின்றான் ஆகில் அது என்ன வகை தர்மம்?

நான் நடுங்கும் கரங்களால் என்னைப் போர்த்தி இருக்கும் அந்த பழைய துணியைத் தொட்டுப் பார்க்கிறேன். ஒருவேளைஇந்தத் துணியைத்தான் அருணாச்சலன் போர்த்தி இருந்தானோ?

எனக்கு நிஜமாகவே கண்கள் பனித்தன. அந்த உயர்ந்த மனிதனின் கைகளைத் தொட்டு குலுக்கி விட்டு வரவேண்டும் போல் இருந்தது. அவரோடு ஒரு போட்டோ எடுத்துக் கொண்டால் என்ன என்பதை உடனே மாற்றிக் கொண்டேன்.

ஏட்டுப் படிப்பு கற்காது உலக தர்மம் கற்று, பரம்பொருளே இறங்கி வந்து ஞானம் தந்து விட்டு செல்கிற ஒருவன் முன்னால்அரைகுறையாக என்னத்தையோ கற்றுக்கொண்டுஅதையே பிரதானமாக நினைத்துக் கொண்டுஅதன் மூலம் கிடைத்த பதவியையும் பிரதானமாக நினைத்து மமதையில் ஒரு எருமையைப் போல் ஊறிக் கிடக்கிற என்னுடைய பக்குவமின்மையை அந்த மாமனிதர் புரிந்து கொண்டு விடக் கூடாது என்று போட்டோ எடுக்கும் என்னுடைய அரை வேக்காட்டுத் தனமான எண்ணத்தைத் துரிதமாகக் கை விட்டேன்.

ஒற்றை நூறு ரூபாய் நோட்டை அவர் கையில் கொடுத்து விட்டுநான் இன்னொரு முறை வந்து முடி வெட்டிக்கொள்ள இடமில்லாத அந்த சிறிய அறையை நன்றாகப் பார்த்து விட்டு வெளியே வந்தேன்.

என்னப்பா இவ்வளவு நேரம் என்றால் சுஜா. ஒரு மணி நேரம் ரொம்ப too much .

தீட்சை கிடைக்க அது ரொம்ப கம்மி என்றேன்.

தீட்சையாயார்கிட்டே இருந்து என்றாள் ஒரு கேலியுடன்.

ஒரு மகா தபஸ்வியிடம் இருந்து என்றேன்சீரியஸ் ஆக.

தவம் என்பதன் உண்மை அர்த்தம் விளங்கி விட்டது எனக்கு.


சிவமயம்

No comments:

Post a Comment